பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இந்து முஸ்லீம் ஒற்றுமை எனும்…

5

இந்து - முஸ்லீம்

ஒற்றுமை எனும்...

மிண்டோ - மார்லி சீர்த்திருத்த நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போது பிரிட்டிஷ் சக்ரவர்த்தி ஏழாவது எட்வர்ட் அவர்கள் இந்திய மன்னர்களுக்கும், பிரிட்டிஷ் இந்திய குடிகளுக்கும் வைஸ்ராய் மூலம் கடிதம் அனுப்பினார். கடிதத்தின் செய்திகள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டதில், அக்கடிதத்தின் எட்டாவது, ஒன்பதாவது வசனங்கள் 1: 114) தாழ்த்தப்பட்டோரிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது.

பண்டிதர் சாதிபேதமற்ற திராவிட மகாஜனசபை மூலம் கோரிக்கை அனுப்பியதின் விளைவுகள் அவை என்று விளக்கினார். அம்மனுவை அளித்ததினால் இரண்டு நன்மைகள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப் பட்டிருந்தது.

1. உத்யோக பீட சாதிபேத இடுக்கங்கள் மெல்ல நீங்கும்.

2.இவ்வெழிய குலத்தோருக்காகும் மைனர் நியமனம் ஆறு பேரிருக்கும் ( 1 ; 14) (Members will appointed to the Assembly)

என்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக (ஆக்கியாபித்து) பண்டிதர் அறிவித்தார். (இதன்படி அரசு கொள்கையளவில் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் இதே அளவுப் பிரதிநிதித்துவம் தான் 1916-21 சீர்திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டது.)

எனினும் அனைத்து சமூகங்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டபோதும், அருண்டேல் கமிட்டியின் பரிந்துரைகளில் தாக்கம் பெற்று மார்லி பிரபு தன்னுடைய முதற்கட்ட ஆலோசனையை முன் வைத்தார். வைஸ்ராய் மிண்டோவிற்கு 1908ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளிட்ட கடிதத்தில் அவரின் ஆலோசனைகள் இருந்தன அதில்.

ஒரு மாகாணத்தின் மக்கள் தொகை 2 கோடி எனில் அதில் இந்துக்கள் மற்றும் முகமதியர்கள் முறையே 15 மற்றும் 0.5 கோடி என இருப்பின், தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகக்கொள்ளப்படுகிறது. இதில் இந்துக்களும் முகமதியர்களும் 3 : 1 என்ற விகிதத்தில் இருப்பதால் 9 இந்துக்களும் 3 முகமதியர்களும் தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.

இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடைய மாகாணத்தை 3 தேர்தல் பகுதிகளாக, அதில் இந்துக்கள் 3 பேர் முகமதியர் 1 நபர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேர்தல் தொகுதி (Electoral college) அமைக்கப்பட்டு உத்தேசமாக 100 உறுப்பினர்கள் எனக் கொள்வோம். இதன்படி 75 இந்துக்களும் 25 முகமதியர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும் இதில் வாக்களிக்கும் வாக்காளர்கள்

அ) நிலச்சுவான்தாரர்கள், குறிப்பிட்டத்தொகையை அரசுக்கு நிலவரியாக செலுத்த வேண்டும்

ஆ) கிராம அல்லது துணை நிலை அமைப்புகள் (Rural or Sub divisional board)

இ)மாவட்ட சமை உறுப்பினர்கள் (District Board members)

ஈ) முனிசிபல் கார்ப்ரேஷன் ஆகியோராவர்.

இதில் இவர்கள் மூலமாகவே 75 இந்துக்களும் 25 முகமதியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவேளை 25க்கும் கீழான முகமதியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மீதமுள்ளவர்கள் நியமனத்தின் மூலம் நிரப்பப்படுவார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 75, 25 இந்து மற்றும் முசல்மான்கள் 3 இந்து மற்றும் 1 முகமதியரை உறுப்பினர்களாக தெரிவு செய்வார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் 1 வாக்கு வீதமும், அதில் அவர்கள் ஒரே ஒருவரை மட்டும் தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும். இதன் மூலமாக ஒவ்வொரு பிரிவினரும் மக்கள் தொகை அடிப்படையில் தேவையான பிரதிநிதித்துவம் அளிப்பது உறுதி செய்டப்படுகிறது". (2005;181)

மார்லியின் இந்த திட்டம் வெளிப்படுத்தும் சங்கதி ஐரோப்பிய பாணியிலான புரிதலைச் சார்ந்தது. ஏனெனில் மதரீதியான இனப் பிரச்சினையே ஐரோப்பியரின் பல நூற்றாண்டு பிரச்சினையாக இருந்தது எனவே மார்லியின் திட்டம் இந்து முஸ்லீம் பிரதிநிதித்துவம் என்பதாக வெளிப்பட்டது ஒன்றும் ஆச்சரியமல்ல எனினும் அவரது திட்டத்தில் உள்ள அரசியல் முக்கியத்துவம் என்னவெனில் தேர்தல் முறையானது கூட்டுவாக்காளர் முறை (loint electorate) படிதான். எனவே முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்துக்களின் தயவு தேவைப்பட்டது. இந்த சந்தேகம் மார்லிக்கே இருந்ததால் முஸ்லீம்களுக்கு நியமன முறையையும் சேர்த்தே பரிந்துரை செய்தார்.

எனவே, மார்லியின் கருத்துக்கள் வெளியானவுடன் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் களைகட்டிவிட்டன. மார்லியின் ஆலோசனைகளை முழு வதுமாக மிண்டோவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்றாலும், அதைப் பற்றின கருத்துப் பரிமற்றங்கள் நடந்தன. தன்னுடைய இந்த புது முயற்சியானது உள்ளூர் சுய அரசுக்கான திசையை நோக்கிய தாக்கமுள்ள முன்முயற்சியாக இருக்கும் என ஆலோசனை சொன்னார் மார்லி. இப்படி வாதப் - பிரதிவாதங்கள் நடந்த போதுதான் 17.12.1908 அன்று லண்டனி லுள்ள பிரபுக்கள் அவையில் அதை மசோதாவாக முன்வைத்தார். அவை யில் முன்வைத்தவுடன் பலத்த எதிர்ப்பு எழுந்தது. சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் ஏற்பாடு உச்சகட்ட அரசியல் வெப்பத்தை கிளப்பி விட்டது. பிரிட்டிஷ் அரசு, இந்திய வைஸ்ராய் மற்றும் முகமதியர் களுக்கு மார்லியின் திட்டம் ஒரு புதினத்தை போலவும், குழப்பமான தாகவும் தோன்றியது. 1906ல் முஸ்லிம்கள் கேட்டது போல தனிப் பிரதி நிதித்துவம் கொடுக்கப் படுவதைவிட மார்லியின் திட்டம் தேவையற்ற சிக்கலை உருவாக்குவதாகவும் கருதப்பட்டது. மேலும் மார்லி முன் வைத்த தேர்தல்முறையானது நடைமுறை சாத்தியமற்றது என்று வைஸ்ராய் மிண்டோ கருதினார்.

மார்லியினை கண்டித்தும் அவரது நிலைபாடு குறித்தும் விமர்ச்சித்து பலவாறாக பத்திரிக்கைகள் எழுதின. சாதி இந்து பத்திரிக்கைகளின் நிலைபாட்டையும், அது தொடர்புடையவர்களின் விமர்சனத்தையும் பண்டிதர் கண்டித்தார். 30.12.1908 தமிழன் இதழில்

"சொந்த மக்களிடையே சீர்திருத்தம் பற்றி பேச முடியாதவர்கள், ஆட்சியாளர்கள் செய்யும் சீர்திருத்தத்தை பற்றி பேசுவது வீணானது" என பதிலடி தந்தார்.

"ஆங்கிலேயர்களே இத்தேசத்திலிருந்து இராட்சிய பாரஞ் செய்வார்களாயின் சகல குடிகளும் சுகம் பெற வாழலாம் என்பார் பல வகுப்பார். இவற்றுள் ஒருவர் வாக்கு செல்லுமா, பலர் வாக்கு செல்லுமா என்பதை பகுத்தறிய வேண்டியதே பதமன்றி ஒருவெரண்ணத்தில் மற்றவரைக் கிணங்கச் செய்தல் இழிவேயாகும்"(1:93) என்று எழுதினார். மார்லியின் யோசனைகள் மீதான வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும், முஸ்லீம்களும், தலித்துகளும் நம்பிக்கையோடி ருந்தனர். ஆனால் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது உறுதியாகி விட்டதுபோல் தெரிந்தது.

1908 ஆண்டு தேசிய காங்கிரஸ் மார்லியின் திட்டங்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தாலும், திலக் தலைமையிலான குழுவினர் இதை கடுமையாக எதிர்த்தனர். இந்த எதிர்ப்பிற்கு ஆதரவாகவே பார்ப்பன - பனியா இதழ்கள் எழுதிக் கொண்டிருந்தன. எனினும் நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முஸ்லிம் மற்றும் லீக் கடுமையாக முயற்சி செய்தனர்.

ஜனவரியில், முஸ்லீம் பிரதிநிதிகள் நேரடியாக மார்லியை லண்டனில் சந்தித்து தங்களுக்கு கூட்டு வாக்காளர் முறை வேண்டாமென்றும் தனி வாக்காளர் முறை மட்டுமே தேவையென்று வலியுறுத்தினர்.

முஸ்லீம் லீக் - காங்கிரஸ் இரண்டும் தத்தமது கோரிக்கைகளில் உறுதியாக இருந்து அதை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை முடுக்கிக் கொண்டு வந்த அதே நேரத்தில் அவை தலித் மக்களைப் பற்றியோ பிற ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியோ வழக்கம் போல எந்த கவலையும் படவில்லை, அந்த இரு இயக்கங்களின் நடுத்தர வர்க்கத்து தலைவர்கள் எல்லா வழிகளையும் கையாண்டார்கள், காங்கிரஸ் மாநாடு கூட்டி தமது ஆதரவை தெரிவித்ததென்றால், பதிலுக்கு முஸ்லீம்களும் அரசை ஆதரித்தார்கள். அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் பத்வாவை (புனிதப்போர்) அறிவித்தார்கள்.

ஹக்கிம் ரஸி-உத்-தின் மற்றும் மெளல்வி அப்துல் ஹக் (டெல்லி) ஆகியோர் பிரிட்டிஷ் அரசை ஆதரித்து பத்வாவை தயாரித்து அனைத்து மெளல்விகளுக்கும் அனுப்ப ஏறக்குறைய எல்லா மெளல்விக்களும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த பத்வாவில்.

- அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்டித்தும், இஸ்லாமியர்கள் அந்த போராட்டங்களிலிருந்து விலகியும் இருக்கிறார்கள்.

இஸ்லாம் இந்த போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, கிறித்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் உள்ள ஒட்டுறவை கோருகிறது.

உலமாவாகிய நாங்கள், நம்முடைய மதத்தின் கோட்பாடுகளைபோலக் கருதி இந்த அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் அரசுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருப் போம் என எங்கள் முத்திரையை இட்டு கையொப்பம் இடுகிறோம்” (P. Sing - 27)

இந்த பத்வாவின் அறிக்கை பஞ்சாப் அரசு மூலம் வைஸ்ராய் மிண்டோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே இந்து காங்கிரஸ் - முஸ்லீம் லீக் ஆகியோரின் கோரிக்கைகளை அரசும் மார்லியும் கவனமுடன் பரிசீலித்தனர்.

ஆனால் தாழ்த்தப்பட்டோர்களைப் பொறுத்தவரையில் இவ்வளவு வீச்சாக தம்முடைய எதிர்வினைகளை காட்டும் நிலையிலில்லை. ஏனெனில் காங்கிரஸ் மற்றும் லீக் கை வழி நடத்தியவர்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் ஆகியோர். அதனால் அவர்களது குரல் எளிதில் அம்பலமேறியது. ஆனால் தலித்துகளைப் பொறுத்தவரையில் இப்பயொரு வளமான பொருளாதாரப் பின்னணி இல்லை. எனவே எல்லாவற்றிற்கும் அவர்கள் தம்மையே சார்ந்திருக்க வேண்டும். எனினும் அவர்களும் கடுமையாகவே உழைத்திருந்தார்கள், அது மட்டுமின்றி அரசர் ஏழாவது எட்வர்ட் எழுதிய கடிதம் அவர்களுக்கு பெரிய நம்பிக்கையளித்தது. அரசரின் கடிதத்தின் மீதான நம்பிக்கையை பண்டிதர் வெளிப்படுத்தி யிருந்தார்.

சூழல் நெருக்கடியாக இருந்ததை தலித்துகள் உணர்ந்தனர். மார்லியின் முடிவு 17.12.1908 அன்று பிரபுக்கள் அவையில் வைத்த அறிக்கையிலேயே அநேகமாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான் இப்படியான ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்.

எனவே இதில் தலித்துகள் தனித்து விடப்பட்டனர். பண்டிதர் முனைப்பு காட்டி மார்லியின் திட்டம் குறித்து தமது கருத்தை முன் வைத்தார். அக்கருத்து இந்திய சூழலுக்குப் புதிது மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்கால கருத்தாகவும் அது நிலைத்து விட்டது. மார்லியின் கருத்துப்படி இந்துகளுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமே பிரதிநிதித்துவம் உண்டு, இதை சாதி இந்துக்கள் எதிர்கொண்ட விதமோ விபரீதமாயிருந்தது. அவர்கள் இஸ்லாமியர்கள் இந்தியர்கள் அல்ல என்று மறுப்பு கூறி, இந்தியர்களுக்கும் இசுலாமியருக்கும் மனஸ்தாபம் உண்டாகுமென எழுதினார்கள்: இந்த கருத்தை மறுத்தும், தன் திட்டத்தை முன்வைத்தும் 1909ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் தமிழன் இதழில் பண்டிதர் எழுதினார்.

"அதாவது இந்தியர்களென்றும், மகமதியர்கள் என்றும் பிரிவினையாக கூறுவதால் பேதமுண்டாயதேயன்றி அவர்களையும் இந்தியர்கள் என்றே கூறுவோமாயின் பேதந் தோன்றவாம்.

ஏனெனில் இத்தேசத்தில் வந்து குடியேறிய வேஷ பிராமணர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும்போது இத்தேசத்தை சிற்சில இடங்களில் அரசாண்ட மகமதியர்களை ஏன் இந்தியரென சொல்லக்கூடாது. எனவே அவர்களும் ஒர் வகையாய் இந்தியர்களே, மகமதியர்களை இந்தியர்கள் என்று கூற கூடாது என்றால் வைணவர், சைவர், வேதாந்திகள் என்னும் மூவருக்கும் இந்தியரென்னும் பெயர் பொருந்தாது. பெளத்த மார்க்கத்தார் ஒருவருக்கே இந்திய ரென்னும் பெயர் பொருந்தும்.

ஐந்திரியங்களை வென்ற புத்த பிரான் இந்திரன் என அழைக்கப்பட்டதையொட்டி, அவரை பின்பற்றியவர்கள் இந்தியர் என்றும், அவர்கள் வாழும் தேசம் இந்திய தேசமென்றும் அழைக்கப்பட்டது. இந்த இந்தியர் எனும் பெயரை சகல மதத்தவரும் ஏற்றுக்கொள்ளும்போது மகமதியர் ஏன் இந்தியர் என சொல்லக் கூடாது

- என்று தன்னுடைய எடுப்பான வல்லிய மறுப்பினை கூறிய பண்டிதர் தன்னுடைய விகிதாச்சார திட்டத்தை தொடர்ந்து முன் வைத்தார். அது எப்படிப்பட்ட திட்டம்...