பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/தொடங்கியகதிப்போக்கில்…

3

தொடங்கிய

கதிப்போக்கில்...


இதுவரை பார்த்தவை அன்றைக்கு நிலவிய அரசியல் சூழலை முன்வைத்து இடஒதுக்கீடு கோரிக்கையில் பண்டிதரின் முயற்சிகளையும், அதன் தொடக்க கால வரையறுப்புகளையும் பார்த்தோம். இந்த முயற்சிகளுக்குப் பிறகு 1892 முதல் 1907 வரை நமக்கு போதுமான தரவுகள் கிடைக்கவில்லை. மேலும் பிரிட்டிஷ் அரசு 1892ல் ஏற்படுத்திய அரசு பிரதிநிதித்துவ சீர்திருத்தத்திற்குப் பிறகு 1909ல்தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தை கொண்டு வந்தது. எனவே இந்த சூழலில் பண்டிதரின் கோரிக்கைகள், முயற்சிகள் எப்படி இருந்தது. அதன் விளைவுகள் எப்படி இருந்தன என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் 1905 முதல் 1909 வரையில் நடந்த அரசியல் மாற்றங்கள் இந்திய துணை கண்டத்தின் தலையெழுத்தையே நிர்ணயித்தன என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் பண்டிதரின் முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் அக்கால சமூக அரசியல் சூழலைப் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே, வரலாற்றுப் பக்கங்களை கொஞ்சம் பின்னோக்கி புரட்டிப் பார்ப்போம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்த வைஸ்ராய். கர்சன் பிரபு (1899 - 1905) 1905 ஆம் ஆண்டு, நிலப்பரப்பில் பெரியதாகவும், 78 கோடி மக்கள் தொகையோடு நிர்வகிப்பதற்கு சிரமம் தரக்கூடியதாக இருந்த வங்காளத்தை இரண்டு மாகாணமாகப் பிரித்தார். இது வங்காளிகளிடையே பிளவை உண்டு பண்ணுவதாக வங்காளிகளின் படித்த நடுத்தர, உயர் வகுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதில் சட்டம் படித்த மற்றும் உயர்சாதி வர்க்கத்தினர் வெற்றி பெற்றார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வரலாற்றில் வங்கப் பிரிவினை என்று இது அழைக்கப்படுகிறது. பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தை கர்சன் பிரபு ஏற்றுக் கொள்ளவில்லை, அவர் நிர்வாக வசதிக்கான காரணங்களை தேவையின்றி இந்த நடுத்தர வர்க்கப் போராட்டக்காரர்கள் அரசியல் படுத்துவதாக கருதி மீண்டும் வங்கத்தை இணைக்க மறுத்ததோடு, அதில் உறுதியாகவும் இருந்தார். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அரசுக்கும் கர்சனுக்கும் நடந்த பரிமாற்றங்களில், கர்சன் தன் எதிர்ப்பை உறுதியாக காட்டும் நோக்கில் தன்னுடைய வைஸ்ராய் பதவியை ராஜினாமா செய்து விட்டார். எனவே பிரிட்டிஷ் அரசு அவ ருக்கு பதிலாக மிண்டோ பிரபுவை (1905-1910) புதிய வைஸ்ராயாக இந்தி யாவுக்கு அனுப்பியது.

1905 நவம்பரில், மிண்டோ இந்திய துணைக்கண்டத்திற்கு வந்த போது நிலைமை கொந்தளிப்பாகவே இருந்தது. அந்தவேளையில் காங்கிரஸ் முஸ்லீம்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துமிருந்தது. காங்கிரசில் உயர்சாதியினர் ஆதிக்கம் எங்கும் பரவியிருந்தது. முக்கியமான ஒரு காரணமாய் இருந்தது. அதுவுமின்றி காங்கிரஸ் இரண்டு குழுக்களாக பிரியும் கட்டத்திலும் இருந்தது. வழக்கம் போல தனது ராஜ விசுவாசத்தை காட்டுவதற்கு நடைமுறைவாதிகளாக தங்களைக் கருதிக் கொண்டே கோகலே உள்ளிட்ட குழுவினரும், இவர்களின் மீது தீராப் பகையோடு அதிகாரத்தை அடைய வேண்டிய ஆசையோடு மோதிய திலக் உள்ளிட்ட குழுவினராக இரு போக்குகள் உருவாகி இருந்தது. இந்த நடைமுறை வாதிகள் அல்லது மிதவாதிகள் மற்றும் எதிர்ப்பாளர்கள் அல்லது தீவிர வாதிகள் என்பதற்கு எப்படி பொருள் கொள்வது? இதை முழுக்க தேசிய உணர்வு சார்ந்ததாகவே நமது வரலாற்றாளர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மிதவாதிகளுக்கும் - அமிதவாதிகளுக்கும் உள்ள பொருள் விளக்கம் முற்றிலும் வேறானது. இதனைப் புரிந்து கொண்டால் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பண்டிதரின் நிலைப்பாடுகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாய் இருக்கும்.

பாலகங்காதர் திலக் எந்த அளவிற்கு தீவிரமானவர் ? காங்கிரஸ் தொடங்கிய காலத்திலிருந்து அது பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தும் போது, கூட்டத்தின் பின் இணைப்பாக சமூக கூட்டமும் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் சமூகப் பிரச்சினைகள், நலிந்த மக்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 1892ல் நடந்த கூட்டத்தில் இந்த சமூகக் கூட்டங்கள் நடக்க கூடாது என்று பார்ப்பனிய அடிப்படைவாதி பாலகங்காதர் திலக் கடுமையான எதிர்ப்பை காட்டி னார், அவரது குழுவினரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத காங்கிரஸ் தனது கொள்கைக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த சமூக மாநாடு நடத்தும் வழக்கத்தையே கைவிட்டு விட்டது. எனவே திலக் போன்ற நபர்கள் கோரும் அதிகாரம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை, தான் நடத்திய கேசரி பத்திரிக்கையில் தீண்டத் தகாதவர்களின் செய்தி வந்தால்கூட இதழ் தீட்டாகிவிடும் என்பதில் கவன மாக இருந்தவர்தான் திலக்.

ஆனால், மிதவாதிகள் என்பவர்கள் இன்னும் நுட்பமானவர்கள் பிரிட்டிஷ் அரசிடம் எவ்வளவு சலுகைகளைப் பெற முடியுமே அவ்வள வையும் நாசுக்காகப் பெறுவது தான் அவர்களது கொள்கை, சொல்லப் போனால் காங்கிரசின் பிரதானக் கொள்கையே அதுதான். அதனால்தான் அதன் கொள்கை "பிச்சைக்காரன் கொள்கை" (Mendicant polices) என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்படி பிச்சையெடுத்து பதவிகளில் அமர்ந்த பார்ப்பன - உயர்சாதி வர்க்கத்தின் மீது திலக் குழுவிற்கு கோப மில்லை, அவர்களை ஒழிக்க அது முனைந்ததுமில்லை.

மிண்டோ இந்தியாவிற்கு வந்தபோது இந்த குழுக்களிடையே இருந்த பிரிவினைகளை, வங்கப்பிரிவினையால் உண்டான கொந்தளிப்பு களையெல்லாம் கவனத்தில் கொண்டு தன்னுடைய பணிகளைத் தொடங் கினார். அவர் காங்கிரசை ஒரு சக்தியுள்ள அமைப்பாக கண்டு கொண்டு அதன் ஆதரவு அரசினை நடத்த தேவை என்றும், அதே போல முஸ்லீம் களின் ஆதரவும் தேவை என்பதையும் வலியுறுத்தினார். இங்கிலாந்தில் இந்தியாவுக்கான செயலராய் இருந்த ஜான் மார்லி பிரபுவுக்கு இது குறித்து கடிதங்களை எழுதினார். ஏற்கெனவே வைஸ்ராயாக இருந்த கர்சன்பிரபு காங்கிரசுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, எனவே முக்கியத்துவம் கொடுத்த மிண்டோ பிரபுவை இந்தியர்களின் நண்பராக காங்கிரஸ் கண்டு கொண்டது. காங்கிரஸ் அப்படி கண்டு கொண்டாலும் காங்கிரஸ்க்குள் நடந்த மோதல்களை ஆர்வத்துடன் மிண்டோ கவனித்து வந்ததுடன் அதில் மிதவாதிகள் வெற்றி பெற வேண்டுமெனவும் அவர் விரும்பினார். இதை மார்லிக்கு எழுதிய கடிதத்திலும் தெரியப்படுத்தினார். எனவே மிண்டோவின் நடவடிக்கைகள் தெளிவாகப் புலப்பட்டுவிட்டது. அவர் மிதவாதிகள் வெல்ல வேண்டும் என்று விரும்புவதன் மூலம் அந்த குழுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அதை வலுவுள்ளதாக மாற்ற விரும்பினார். அதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழும் புதிய சக்திகளை பலவீனப் படுத்த முடியும் என்று கணக்குப்போட்டார். ஏனெனில் அவரது பிரதான நோக்கம் பிரிட்டிஷ் அரசை நிலைநிறுத்துவதுதானே. இவரது கருத்துக்கு இசைவது போலவே லண்டனிலிருந்து இந்திய செயலர் மிண்டோ பிரபு மிதவாதிகள் மீது அன்பு கொண்டிருந்தார். ஆனால் இருவருமே "இந்தியர் கள் நாட்டை சுதந்திரமாக ஆளக்கூடிய அளவிற்கு தகுதியுடையவர்கள் அல்ல என்றும், அவர்களில் விடுதலைக் கனவு காணும் ஒரு பிரிவினரின் எண்ணம் அடையக்கூடிய தூரத்திலிருந்து வெகு தொலைவிலிருக்கிறது" என்றும் கருதினார்கள், அதை வெளிப்படையாகவும் சொல்லவும் செய்தார்கள்.

காங்கிரஸ் சண்டையும், அரசின் பரிவும் இப்படிப்பட்ட போக்காய் இருந்த நேரத்தில் முஸ்லீம்களின் நடவடிக்கை எப்படி இருந்தது?

1885ல் பம்பாயில் கூடிய காங்கிரசில் மொத்தம் 72 பேரில் 2 பேர் மட்டுமே முஸ்லீம்கள், தொடர்ந்து முஸ்லீம்களின் எண்ணிக்கை மந்த மாகவே வளர்ந்தது. அதிகப்பட்சமாக 1899ல் பம்பாயில் கூடிய காங்கி ரசில் மொத்தம் 789 பேரில் 313 பேர் முஸ்லீம் பிரதிநிதிகள், ஆனால் இந்த எண்ணிக்கை கிடுகிடுவென வீழ்ந்தது. 1904ல் பம்பாய் காங்கிரசில் மொத்தம் 1,010 பேரில் முஸ்லீம்கள் 35 பேர். 1905ல் பெனாரஸ் காங்கிரசில் 756 பேரில் முஸ்லிம்கள் 20 பேர் 1906ல் கூடிய கல்கத்தா காங்கிரசில் 1663 பேரில் 45 பேர் மட்டுமே முஸ்லீம்கள், இதற்கு பிறகு முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் ஏறவே இல்லை.

நிலைமை தெளிவாகிவிட்டது. முஸ்லீம்கள் காங்கிரசை நம்பவில்லை. காங்கிரசுக்குள் நடந்த போட்டிகளினால் அவர்கள் ஒதுக்கப் பட்டனர். எனவே தங்கள் அரசியல் நலனைக் காத்துக் கொள்ள முஸ்லிம்கள் முனைந்தார்கள். 1906ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் நாள் வைஸ்ராய் மிண்டோ பிரபுவை சந்தித்த முஸ்லீம் பிரதிநிதிகள் தங்கள் நிலையை தெளிவு படுத்தினார்கள்.

"இந்த ஆண்டில் தொடங்கப்படும் முஸ்லீம் லீக்கை இந்திய வரலாற் றில் மாபெரும் முக்கியத்துவமுள்ளதாகவும், வரலாற்றுப் பூர்வமாக இந்திய மக்கள் தொகையில் முக்கியமான பாத்திரம் வகிக்கும் முஸ்லிம்தனியொரு வகையினமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.” (2006 : 187)

முஸ்லீம்கள் தங்களை தனியொரு வகையாக அங்கீகரிக்க கோருவதின் பின்னணியை புரிந்து கொண்டே மிண்டோ அதன் மீது கரிசனம் காட்டத் தொடங்கினார். அதை விரும்பினார்.

இந்த காலகட்டத்தில் தலித் மக்களியக்கம் எப்படி இருந்தது. உண்மையில் களப்பிரர் காலத்து வரலாற்று சுவடுகளில் அழிக்கப்பட்டது போலத்தான், இந்திய சமூக அரசியல் கொந்தளிப்பில் தாழ்த்தப்பட்டோரின் அரசியல் மூழ்கடிக்கப்பட்டது. வரலாற்றில் மறைக்கப்பட்டது. எனி னும் நம்பிக்கை அளிக்கக் கூடிய அளவில் சான்றுகள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. இக்கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் இயங்கிய தலித் அமைப்புகள் சாதிபேதமற்ற திராவிடர் மகாசபை, ஆதி திராவிட மகாஜன சபை, பறையர் மகாஜன சபை, தென்னிந்திய சாக்கிய சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள். இதில் முதல் மூன்று அமைப்புகளே அரசியல் நீரோட்டத்தில் இணைந்திருந்தன. இதில் ஆதி திராவிட மகா ஜன சபை அதன் பழைய தலைவர்களின் வழி நடத்துதலில் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன என்றாலும் அதைப்பற்றின தகவல்கள் அதிகம் இல்லை, பறையர் மகாஜன சபை அதன் வசீகரமிக்க தலைவரின்றி மந்தமாக இயங்கியது. இச்சபையின் நிறுவனர் ரெட்டை மலை சீனிவாசன் 1900ல் ஏற்பட்ட ஒரு மனக்கசப்பினாலும், இங்கிலாந்து சென்று தம் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்ற நோக்கத்தினாலும் கப்பல் பயணம் மேற்கொண்டவர் பயண இடையில் ஏற்பட்ட உடல் நல கோளாறினால் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார். எனவே, இக் கொந்தளிப்பான காலத்தில் ரெட்டைமலை சீனிவாசன் இங்கில்லை. எனினும் பறையர் மகாஜன சபை அரசிடம் கோரிக்கை விடுக்கும் அளவிலான இயக்கமாக இயங்கி வந்தது.

இதே காலத்தில்தான் பண்டிதர் முன்பே 1891ல் தொடங்கிய சாதி பேதமற்ற திராவிட மகாஜனசபையும் இயங்கி வந்தது. இச்சபை அரசியல் பிரச்சினைகளை கவனித்துக் கொண்டதென்றால், தென்னிந்திய சாக்கிய சங்கம் பண்பாட்டு தளங்களில் பணியாற்றியது. இந்த இரண்டு அமைப்பு களுக்கும் நிறுவனர், தலைவர் பண்டிதர். இந்த இரண்டு அமைப்புகளிலும் பண்டிதரைப் பின்பற்றிய தலித் மக்கள் இருந்தார்கள். இந்த அமைப்பும் தேவையான கோரிக்கைகளை அரசிடமும் - பிற அமைப்புகளிடமும் வைத்துக் கொண்டிருப்பதை 1891 முதல் காண்கிறோம். திராவிட மகாஜன சபையின் பிரநிதியாக - ஆல்காட் அவர்களை சந்தித்த பண்டிதர் பின்பு பெளத்தராகி தென்னிந்திய சாக்கிய சங்கத்தை தொடங்கினார்.

இப்படி வீச்சான பணிகள் நடந்து கொண்டிருந்தாலும், மிண்டே பிரபு இங்கு வந்த தொடக்க காலத்தில் இருந்த கொந்தளிப்புகளில் இவ்வமைப்புகளைப் பற்றின செய்திகளை இந்திய சாதி வரலாறு முற்றிலும் புறக்கணித்தது மட்டுமின்றி மறைத்தே விட்டது. இந்த மோசமான இருள் சூழ்ந்த பின்னணியில் 1907ம் ஆண்டு ஜூன் மாதம் - பண்டிதர் ஒரு பைசா தமிழன் இதழைத் தொடங்கினார், பிறகு பண்டிதர் இட ஒதுக்கீட்டு கோட்பாடுகளை தம் துல்லியபடுத்தல்களை எப்படி மேற்கொண்டார், நிலை நிறுத்தினார்....