பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/முன்னீடு

முன்னீடு




இந்திய துணைகண்ட வரலாற்றில் புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைச் சம்பவங்கள் ஒரு சிறு நூலாய் உங்கள் கைகளில் இப்போது வரலாற்று நேர்மையுள்ளவர்ளுக்கு நானமும் ஆச்சர்யமும், மோசடி பேர்வழிகளுக்கு கோபமும் வெறுப்பும் கிளப்பக் கூடிய அந்த கடந்தகால பக்கங்கள் நிகழ்கால கவனத்தை கோரி நிற்கின்றன. பண்டிதர் - தமிழனின் முகமாக, அடையாளமாக மட்டுமின்றி துணை கண்டத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் முன்னோடியாக செயல்பட்டவரை, வாழ்ந்தவரை ஏதோ அகழ்வாராய்ச்சி செய்து மீட்டுருவாக்கம் செய்யும் அவலநிலையை இந்த சமூகம் வரித்துக் கொண்டதென்றால் இந்த சாதி இந்து சமூகத்தின் யோக்கியதையை மெச்சுவதற்கு என்ன இருக்கிறது.

இந்த சாதி இந்து சமூகம் முற்போக்காய் இருந்தாலும், சனாதனமாய் இருந்தாலும் தலித் மக்கள் வரலாற்று விசயத்தில் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்திய துணைகண்ட வரலாற்றில் விகிதாச்சார உரிமை என்றும் இடஒதுக்கீடு கொள்கை என்றும் சமூகநீதி என்றும் அழைக்கப்படுவதின் அத்தனைப் பரிமாணங்களின் அடிப்படை யையும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வகுத்து இந்த சமூகத்திற்கு பண்டிதர் அளித்தார் எனில் அதை கொடை என சொல்லாமல் எப்படி சொல்வது.

ஆனால் அப்படி ஒரு வரலாற்றுக் கட்டமே நடக்கவில்லை என்பதுபோல இந்திய இடஒதுக்கீடு வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஒரு மாற்று மருந்தாக பண்டிதரின் கொடை இருக்கும்.

1890க்கும் - 1914க்கு இடைபட்ட காலத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களுடேயும், பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தங்களின் பின்னணியோடும், எல்லாவற்றிற்கும் அன்றைய சாதி இந்து சமூகம் கொடுத்த கடும் சமூக, சாதிய, அரசியல் நெருக்கடிகளின் தாக்கத்தாலும், சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினாலும் பண்டிதரின் சமூகநீதி அடிப்படைகள் உருவாயின. பண்டிதரின் சமூகநீதி தலித்துக்கோ அல்லது தலித்தல்லாதாருக்குமான சமூக நீதியல்ல. அது சகல இன மக்களுக்குமான சமூக நீதி. அதனால்தான் அவர் தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தையாக உயர்ந்து நிற்கிறார்.

அதனால், பண்டிதரின் சிந்தகைள் அவருக்கு தானே உதித்த சுய சிந்தனைகள் என்று சொல்லவில்லை. தனியறையில் அடைபட்டு வாழ்பவனுக்கு நான்கு சுவர்களைப் பற்றின சுயசிந்தனை மட்டும் தான் இருக்கும். அவனது சுயசிந்தனை உலகு தழுவியதாக என்றைக்கும் இருக்காது என்பது போலவே, மக்களிடம் பணிபுரிபவனின் உலகு தழுவியதாக மக்கள் பிரச்சினைகளால் தாக்கம் பெற்று உருவான சுயசிந்தனைகளாக இருக்கும். ஆனால் நம் நாட்டில் சுயம்புகளாக முன்னிறுத்திக் கொள்வதில் அப்படியொரு ஆனந்தம் சாதி ஆனந்தம்

பிரெஞ்சு தத்துவஞானி டேன்

'நாகரீகத்தின் பரிணாமத்தில் ஒரு புதிய அடிவைப்பு ஒரு புதிய கலைவடிவத்தை தோற்றுவிக்கும்போது சமுதாய சிந்தனையை அரைகுறையாக வெளியிடுகின்ற பலப்பல ஆற்றல்கள் அதைமுழுமையாக வெளியிடுகின்ற ஓரிரு மகா மேதைகளைச் சூழ்ந்து தோன்றுகின்றன.'

என்று சரியாகவே சொன்னார். இப்படி உருவானவர் தான் பண்டிதரும் அவரது இடஒதுக்கீடு கொள்கைகளும் அதற்காக இந்த சாதி இந்து சமூகத்திற்கு நன்றி சொல்ல முடியாது. ஏனெனில் அது இன்னும் நாகரீக சமுதாயத்திற்குள் நுழையவில்லை, அப்படி நாகரிக சமூகத்திற்கு நூல் தலைகாட்ட வேண்டுமானால் அவர்களது விடுதலைக்கு தலித் முன்னோடிகள் உழைத்திருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்திக் கொள்ளவேண்டும் அந்த பணிக்கு இந்நூல் பயன்படுமென நம்புகிறேன்

அதின்றி. இந்நூலை மறுக்க எத்தனிப்பவர்களுக்கு டேன் அவர்களின் வாசகங்களையும், இந்நூலின் ஆதாரங்களையும் நினைவுறுத்த விரும்புகிறேன்.

இனி இந்நூல் எழுத காரணமானவர்களுக்கு நன்றி சொல்ல விழைகிறேன் முதலில் இந்த சமூக சூழல் இடஒதுக்கீடு குறித்து அண்மைகாலமாக பரப்பப்பட்டு வரும் மோசடியான சாதி இந்து பிரச்சாரங்கள், பொய்கள், இந்த நெருக்கடிகள்தான் முதற்காரணம். எனவே இதை குறித்து உழைப்பவர் ஆயுதம் மாத இதழில் பண்டிதர் பற்றின சிறப்பிதழுக்கு அதன் ஆசிரியர் தா.ம. பிரகாஷ் கட்டுரை கேட்டபோது பிரப்வரி 2007ல் கட்டுரை எழுதி அனுப்பினேன். அது மே மாதம் வெளியானது கட்டுரையை படித்த பல நண்பர்கள் அதை ஒரு சிறு நூலாக வெளியிடும் ஆர்வத்தை வெளியிட்டார்கள் அதனால் அச்சிறு கட்டுரையை விரிவாக்கி இப்போது நூலாக உங்கள் கையில் எனவே சூழலுக்கும், பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றிகள், மேலும் சாக்ய ஜெ. மோகன். பாரிச்செழியன், நூலை வெளியிட முயற்சி எடுத்துக்கொண்ட கண்ணியப்பன சிவப்பிரகாசம், இராஜாங்கம் பிரவீன், ராஜவேல், மெய்ப்பு திருத்துவதில் உதவி புரிந்த சந்திரசேகர் ஆகியோருக்கும் நூலையும் அட்டையையும் வடிவமைத்த ஒவியர் யாக்கன். ஒளியச் செய்து அச்சிட்ட முல்லை அச்சகத்தாருக்கும் இந்நூலை வெளியிட்ட சங்கம் - அதன் பதிப்பக பொறுப்பாளர் புருஷோத்தமன் நண்பர்கள் குடியரசு, அமைதியரசு ஆகியோருக்கும், நூலை வெளியிட முழு உதவியையும் செய்த அகில இந்திய காப்பீட்டுக் கழக எஸ்/எடி ஊழியர் சங்கத்திற்கும், எனக்கு எழுதும் சூழலை உருவாக்கித் தரும் என் குடும்பத்தாருக்கும் நன்றிகள் பல.

17.06.2007

கௌதம சன்னா

பெருந்தலைவர்

g_sannahsiyahoo.com

எம்.சி. ராஜா பிறந்தநாள்