பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி/சொற்பொழி—௩— (16-2-1965)

சொற்பொழி—௩— (16-2-1965)

முன்னுரை

தமிழ் மொழியில் உரைநடையின் தோற்ற வளர்ச்சி பற்றியும் சென்ற நூற்றாண்டில் அதுவளர இருந்த நாட்டுச் சூழ்நிலை, பிற அமைப்புகள், சாதனங்கள் பற்றியும் முதலில் கண்டோம், அடுத்துப் பொது மக்களிடம் பெரு வழக்காக உள்ளகதை, நாவல், அரசாங்க வெளியீடுகள் முதலியவற்றுள் தமிழ் உரைநடை சென்ற நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றுள்ளமை அறிந்தோம். இனிச் சமயம், இலக்கியம், இலக்கிய உரைகள், உரை விளக்கங்கள் தத்துவம், இலக்கணம், கடிதம் முதலியவற்றைப் பற்றி ஆய்ந்து அவற்றின் வழியே சென்ற நூற்றாண்டின் உரை நடை வளர்ந்ததைக் காணல் ஏற்புடைத்து எனக் கருதுகின்றேன். அவற்றுள் முதலாவதாகச் சமய இலக்கிய வளர்ச்சியில் உரைநடையின் பங்கினைக் காணலாம்.

சமயங்கள்

தமிழ் நாட்டில் மிகப் பழங்காலந்தொட்டே பல்வேறு சமயங்கள் வாழ்ந்து வருகின்றன. சங்க இலக்கிய அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழ்நாட்டுப் பழம் பெருஞ் சமயங்களாகச் சைவம், வைணவம் என்ற இரண்டு மட்டுமே காட்டப்பெறுகின்றன. அவற்றுள் மழுவாள் நெடியோனாகிய சிவனைத் தலைவனாகக் கொண்டே பிற தெய்வங்கள் பேசப் பெறுகின்றன. பின் இவற்றின் கிளைகளாகச் சில சமயங்கள் தோன்றின என்றாலும் அவை அனைத்தும் இவற்றினுள்ளே அடங்கிவிட்டன. தொல்காப்பியர் காலத்தை ஒட்டி-அவருக்குச் சற்று முன்போ பின்போ என ஐயுறும்படி–வடநாட்டில் தோன்றிவளர்ந்த ‘வைதிகம்’ என்னும் வேத அடிப்படையில் தோன்றிய சமயம் நாட்டில் இடம் பெறலாயிற்று. பின் அதுவே சைவம், வைணவம் ஆகிய இரண்டனையும் உள்ளடக்கிக் கொண்டதோ என்னுமாறு நாட்டில் ஆதிக்கம் செலுத்திற்று. அதை அடுத்துப் பெளத்தமும் சமணமும் தமிழ் நாட்டுக்குவடக்கிலிருந்து வரலாயின. அவை தாமும் இந் நாட்டுத்தனிப்பெருஞ்சமயங்கள் என்னுமாறு ஒன்றன்பின் ஒன்றாகக் கி. பி. மூன்றாம், நூற்றாண்டு தொடங்கி ஏழாம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தின. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவமும், வைணமும், வைதிக சமயமும் தலைதூக்க, அவை இரண்டும் நிலைகுலைந்தன. பெளத்தம் ஓரளவு நாட்டிலே அடியோடு இல்லை என்னுமாறு அழிந்தது; எனினும் சமணம் இலைமறைகாயென நாட்டில் ஆங்காங்கு உயிர் வாழ்ந்து வந்துள்ளது; இன்றும் வாழ்கின்றது அதன் வழித் தோன்றிய இலக்கிய இலக்கணங்களும் வாழ்கின்றன.

பின் இசுலாமிய மதமும் கிறித்தவமும் கடல்வழியே தமிழ் நாட்டில் புகுந்தன. மிகப் பழங்காலத்திலேயே மத்தியதரைக் கடல் நாடுகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு வாணிபத்தின் பொருட்டு வந்தவர் வழி இவ்விரு சமயங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகமானவை எனினும், அவை நாட்டு மக்களொடு-அவர் தம் வாழ்வொடு-பொருந்திக் கலக்கவில்லை. பின் ஆணை வழி முகலாயரும் மேலை நாட்டினரும் தமிழ் நாட்டில் ஓங்கிய நாட்களில் தாம் அவை மக்கள் சமயங்களாக இடம் பெற்றன.

இவையே யன்றி இந்து சமயக் கிளைகளாகிய வேதாந்த மதம் முதலிய சிற்சிலவும் நாட்டில் தோன்றி வளர்ந்தன, எனவே, தமிழ் நாட்டிலே சென்ற நூற்றாண்டில் சைவம். வைணவம், வைதிகம், வேதாந்தம், கிறித்தவம், இசுலாம், சமணம் ஆகிய மதங்கள் வாழ்ந்து வந்தன. (இவற்றுள் சமணம் அவ்வளவு அதிகமாக இல்லை.) எனவே இச்சமயங்களைப்பற்றிய இலக்கியங்கள் நாட்டில் அதிகமாக வளர்ந்து வந்தன என்பதும் சொல்லாமலே அமையும். சென்ற நூற்றாண்டு வரையில் தத்தம் கருத்தைச் செவி வழியாகப் பரப்பி வந்தவருக்கு, ‘அச்சுயந்திர சாதனம்’ கிடைத்தமையின் அதன் வழியாக, தத்தம் சமய உண்மைகளைத் தாங்கியனவாக நூலாகவும் இதழாகவும் பலப்பல வெளியிட வாய்ப்பு உண்டாயிற்று, அவர் தம் சமயம் பரப்பும் ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் பழிக்கவும் தூற்றவும் தத்தம் கொள்கைகளை உயர்த்திப் பேசவும்.பிறர் கொள்கைகளைத் தாழ்த்தித் தூற்றவும் பின்வாங்கவில்லை. இந்தக் கொடும் அடிப்படையில் உண்டான நூல்களும் பல. ‘தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை’ என்ற சமய உணர்வைப் பரப்பிய தமிழ் நாட்டில் இத்தகைய மாறுபாட்டுக் கொள்கை எப்படித்தான் புகுந்ததோ என நினைத்துப் பார்க்கவும் கூடவில்லை. வேதாந்த சித்தாந்த வேற்றுமை, சைவ வைணவ வேறுபாடு, கிறித்தவ இசுலாமிய வேறுபாடு எனப் பலவகையில் சமய வேறுபாட்டுக் கொள்கைகளை விளக்கவும் கண்டிக்கவும் தக்கதான வகையில் சென்ற நூற்றாண்டில் பல நூல்கள் எழுந்தன. இவர்களுக்கிடையில் இராமலிங்கர் முதலியவர் தோன்றிச் சமரச சமய நெறி’ யைப் பரப்பவும் பாடுபட்டனர். அக்கொள்கைகள் பற்றிய நூல்களில் பெரும்பாலன தமிழ் உரைநடையிலேயே உள்ளன. புதிதாக வந்த கிறித்தவ சமயத்தார் தம் சமய உண்மைகளை விளக்கப் பலப்பல வகையில் புதுப்புது நூல்களை வெளியிட்டனர். அச்சமயத்து இருவேறு கொள்கை யாளர்களும்–புரோட்டஸ்டண்டு, கத்தோலிக்கக் கொள்கையாளர் இருவரும்-அவரவர் கொள்கைப்படி பல்வேறு நூல்களை எழுதியதோடு மட்டுமன்றி, விவிலிய நூலைப் பலவகைகளில் மொழிபெயர்த்தும் இயேசு வரலாற்றைப் பலவகைகளில் எழுதியும் தத்தம் கொள்கைகளைப் பரப்ப முயன்றனர். அவர்தம் கொள்கை வேறுபாடுகளைப்பற்றி எழுந்த நூல்களும் சில இருந்தன எனக் காண்கிறோம். மேலை நாட்டிலிருந்து இங்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்களும் அவர்களுக்கு உடன் துணையாக வந்த பலரும், ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆணை செலுத்திய பல கிறித்தவ அறிஞரும் ஒருங்கு சேர்ந்து அச்சமயத்தில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளனர்.அவருள் சிலர் தமிழ்மொழி பற்றியும் தமிழ் நாட்டுப் பழஞ்சமயங்கள் பற்றியும்கூட ஆராய்ந்து சிற்சில நூல்களை வெளியிட்டுள்ளனர்.

சைவம்

சைவ சமயம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயம் எனக் கண்டோம். அச்சமயத்தே மிகப் பழங்காலந் தொட்டே பல்வேறு சமய இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தோத்திரங்களாகவும், சாத்திரங்களாகவும், தர்க்க நூல்களாகவும் பல எழுதப் பெற்றுள்ளன. அவற்றுள் மிகச் சிலவே பதினெட்டாம் நூற்றாண்டு முடிவுவரை அச்சிடப் பெற்றன. பெரும்பாலான சென்ற நூற்றாண்டில் அச்சிடப் பெற்றனவே. மேலும் அதுவரை இருந்த சமய நூல்களுள் பெரும்பாலான பாட்டில் அமைய, சென்ற நூற்றண்டில் அத்தகைய பாடல்களுக்கு உரைநடைகளும் உரை விளக்கங்களும் எழுதப் பெற்றதோடு, அவற்றின் அடிப்படையில் புதுப்புது உரைநடை நூல்களும் வெளிவந்துள்ளன. ஆறுமுக நாவலர், சோமசுந்தர நாயகர், சபாபதி முதலியார் முதலிய பெரும் புலவர்கள் சென்ற நூற்றாண்டில் சைவ சமய வளர்ச்சி பற்றியும் இதை எதிர்ப்பாரைச் சாடியும் பல நூல்கள் எழுதியுள்ளனர். வடலூர் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார் பல்லாயிரக் கணக்கான பாடல்களோடு நல்ல உரைநடை நூல்களும் எழுதியுள்ளார். அன்பர் பலருக்கு அவர் எழுதிய கடிதங்களும் உரைநடைக்குச் சான்று தருகின்றன. சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றண்டின் தொடக்கத்திலும் நூல்கள் இயற்றிய பாம்பன் குமரகுரு தாச சுவாமிகளின் சைவசமயம் பற்றிய விளக்க நூல்கள் எழுதியதோடு, வைணவ சமய நெறி பற்றிய மறுப்பு நூல்களும் எழுதியுள்ளார்கள், (அவை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளி வந்துள்ளன.) இவையேயன்றி, மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய பெரும் புலவர்கள் தமிழ் நாட்டில் 'தலபுராணம்’ எனப்பெறும் புது வகையான இலக்கியங்களை எழுதிக் குவித்தனர். அவை பெரும்பாலும் பாடல்களால் ஆனமையின், பொதுமக்கள் அவற்றை எளிதில் உணர்ந்து கொள்ளும் பொருட்டுச் சிலர் அத்தல புராணங்களுக்கு வசனங்களும் எழுதினர். பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் முதலிய சென்ற நூற்றாண்டிற்குமுன் தோன்றிய பல பாடல் இலக்கியங்களுக்கு, சென்ற நூற்றாண்டில் அவற்றைப் பொதுமக்கள் எளிதில் உணர்ந்து கொள்ளுமாறு, ஆறுமுக நாவலர் முதலிய அறிஞர்களால் நல்ல தெளிந்த இலக்கிய உரைநடை நூல்களும் விளக்கங்களும் எழுதப்பெற்றன. இவ்வாறு பல வகையில் சென்ற நூற்றாண்டில் சைவசமயம் பற்றிய உரைநடை நூல்கள் எண்ணற்று வளர்ச்சியுற்றன. நாம் நேற்றுக் கண்ட 'மெக்கன்சி' சேர்க்கையிலும் இத்தல புராணம் பற்றிய சிறு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். இத்தல புராணங்களை முதலில் பாட்டிலே பாடினர்கள் என்றாலும், கல்லா மாக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு எளிய உரைநடையில் பிறகு எழுதினர்கள். அவற்றுள் கர்னல் ‘மெக்கன்சி’க்கு நேரில் சொல்லிய நடை, நாம் நேற்றுக் கண்ட உரைநடையைப் போன்று கொச்சை நடையாகவே உள்ளது.

திருப்புலிவன மகாத்தியம்

1816 ௵ ஆகஸ்டு ௴ 9 ௳யில் செங்கற்பட்டு ஜில்லாவில் சேர்ந்த புலிவன்னாடு காலூர் கோட்டம் திருப்புலி வனம் தேவஸ்தானம் மடவளாகம் ஸ்ரீஅகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாகிய வியாக்கிர புலியூர் பரகோவில் முதலான பூர்வீகர் பேர்பெற்ற நாமா அனாதியா யிருக்கிற வியாக்கிர புலியிஸ்வரர் கிறுவிது யுகத்தில் ஆதியில் வில்வவனம் விஸ்தாரமாயிருந்த படியினாலே வில்வதை ஈஸ்பரர் என்று புருண சித்தமாய் பேர் உண்டாச்சுது. திரையோதா யுகத்திலே
அகஸ்தியர் பூசைபண்ணபடியாலே அகஸ்தியிஸ்பரர் சிவக்கொழுந்தர், துவாபலியுகத்தில் சந்திரன் பூசை பண்ணினபடியினாலே சோமனாதயிஸ்பரர் என்னும் பேர் உண்டாச்சுது.கலியுகத்தில் வியாக்கிரம் பூசை பண்ணினபடியினாலே திருப்புலியிஸ்பரர் என்று பேர் உண்டாச்சுது. அந்த வியாக்கிரம் பூசைபண்ணது என்னமென்றால் யிந்த ஸ்தளம் அனாதியாய் வெகுயுகங்கள் கண்ட ஸ்தல மானபடியினாலே சுவாமியார் யிருந்ததாகவும் அநேக ஆரணியமாயிருந்ததாகவும் அனேக வியாக்கிரமம் முதலான மிருகங்கள் நிறஞ்சிருக்கையில் அதிலே ஒரு வியாக்கிரம் பூர்வ சென்ம புண்ணிய பலத்துனாலேயும் இந்த சுவாமி யாருடைய சன்னதி விசேஷத்தினாலேயும் அந்த புலிக்கி ஞானம் வந்து பூருவ சென்மத்திலே னாம் வெகு பாவம் பண்ணி யித்த சென்மம் வந்தது இனிமேயாகிலும் நல்ல சென்மம் வரவேணுமென்று சுவாமியாரே தியானம் பண்ணயிடத்திலே அப்பேர் அனாதியாயிருக்கிற...

இவ்வாறே வைணவ சமயத்தும் சில புராணங்கள் கொச்சை நடையில் எழுதப் பெற்றுள்ளன. பாகவதம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், பார்க்கவ புராணம், பாரதம் முதலிய பல எளிய கொச்சை நடையில் எழுதப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பெற்றனவேயாம். இவற்றின் தன்மைகளையும் கண்டு செல்லலாம்.

(1) பாகவத வசனம்: துன்முகி-மார்கழி, 17 (1836)

முடிவு: பிராம்மணர்கள் படிச்சால் பிரம ஞானியாவார்கள் க்ஷத்திரியரிகள் படிச்சால் சாம்பிராச்சிய பதமடைவார்கள் வைசியர்கள் படிச்சால் சகல ஐசுவரியவான்களாவார்கள் சூத்திரர்கள் படிச்சால் சுபத்தை அடைவார்கள். இது வேதாந்த

சாரம். இது வேதத்துக்குச் சமானம்-ஐந்தாவது வேதம் இது. இது விஷ்ணு சுப (வ) ரூபம். இந்தப் பாகவதம் பதினெட்டுப் புராணங்களுக்குள்ளேயும் மெத்தப் பெரியது.

(2) பாரதவசனம்: ப்ரபவ-சித்திரை, 27 (1807) முடிவு: இப்படிக்கொத்த மகிமையையுடைய சிவனைச் சேவிச்ச பேருக்கு நினைத்த காரியம் ஈடேருமலிருக்குமோவென்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொல்லக் கேட்டு, தர்மராஜா மனசிலேதானே அந்தத் தேவருக்கு நமஸ்காரம் பண்ணினார்.

(3) விஷ்ணு புராண வசனம்;

ஸ்வஸ்திஸ்ரீ விசையாற்புதைய சாலிவாகன சகாப்தம் 1726 கலியுக காத்த 4904 பிரபவாதி சகாப்தம் 57. இதில் சொல்லாநின்ற அத்தாட்சி ஸ்ரீ கார்த்தின ௴ ௮ ௳ பஞ்சமி புனர்பூசம் புதவாரம் இப்படிக்கொத்த சுபதினத்தில் ஸ்ரீவிஷ்ணு புராண வசனம் எழுதி முடிந்தது முற்றும்.

முடிவு: ஸ்ரீமந் நாராயணனுடைய ரூபமும் இந்தப்படி வெகு விதங்களாகப் பிரகிருதபுருஷன் ஆத்மகமாக இருக்கும். இது, ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் ஆருமங்கிசத்தில் எட்டா மத்தியாயம் புராண மகிமை முற்றும்.

(4) பாத்ம புராணம், யுவ-தை 1 (1815)

(புதுச்சேரி நாராயணதாசன் குமாரன் வரதப்பதாசன் பாத்மோத்தர புராணம் எழுதி நிறைந்தது)

முடிவு: சவுனகாதி மகரிஷிகளே: இந்தப்பிரகாரம் வசிஷ்ட மகரிஷியினாலே சொல்லப்பட்ட வனாய் ராஜச்ரேஷ்டனாக தீலீப மாகராசனானவன்

அந்த ஆசாரியனாகிய வசிஷ்ட மகரிஷியைச் சாஷ்டாங்கமாகச் சேவித்து யதா சாஸ்திரமாகப் பூசித்து அவராலே உபதேசிக்கப்பட்ட திருமந்திரத்தை உடையவனாய்......... ஸ்ரீவைகுண்டத்தை யடைஞ்சு சமஸ்தகல்யாண குணங்களை யுடைத்தான பரமமான ஆனந்தத்தை யடைந்தான்.

—ஸ்ரீபாத்மோத்தரம் சம்பூர்ணம்.

(5) பார்க்கவ புராணம் பிலவ-தை, 20 (1841)

சோமவாரம் பஞ்சமி அத்த நட்சத்திரத்தில் எழுதி நிறைவேறியது,

முடிவு: இந்த விநாயகருடைய சரித்திரங்களைத் திரிமூர்த்திகளாலும் அளவிடக்கூடாது. சந்திரனைத் தரித்தவராயும் தும்பிக்கை யொடும் கூடிய சுந்தர விநாயகருடைய பாதார விந்தங்களுக்குச் சரணம் சரணம் அவருடைய இரண்டு பக்கங்களிலும் எழுந்தருளியிருக்கிற சித்திபுத்திகளுடைய பாதாம் புயங்களுக்குச் சரணம் சரணம்...சகல லோகங்களும் இகபர பாக்கியங்களும் வாழி வாழி.

இத்தகைய புராணங்கள் எத்தனையோ சென்ற நூற்றாண்டில் உரைநடையில் எழுதப்பெற்றன. அவை அனைத்தும் அச்சில் வந்தன என்று சொல்வதற்கில்லை. மேலும் இத்தகைய கொச்சை மொழியில் அமைந்தன எங்கோ நாட்டுப்புறங்களில் செவிவழியாகவும் ஓலைச்சுவடி வழியாகவும் வாழ்ந்து வந்தமை தவிர்த்து, சிறந்த புலவர்கள் பல புராணங்களுக்கு-செய்யுள் வடிவில் எழுதப்பெற்ற புராணங்களுக்கு - உரைஎழுதினர். திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் முதலிய இன்றும் வழக்கத்தில் உள்ள சைவசமய நூல்களுக்குத் தெளிந்த உரைநடை நூல்களும் எழுதப் பெற்றன. இவற்றுள் ஆறுமுக நாவலர் அவர்கள் பெரிய புராணத்திற்கு எழுதியுள்ள 'சூசனம். எனும் விளக்கம் சிறந்த நடையில் அமைந்துள்ளது ‘உபோற்காதம்’ என்ற தலைப்பில் அவர் தொடங்கிய தொடக்கத்தின் முதற்பகுதியை இங்கே காணலாம்.

அநாதி மலமுத்த பதியாகிய பரசிவன் தனக்கு ஒர் பிரயோசனமுங் குறியாது அநாதிமன் பெத்தராகிய ஆன்மாக்களுக்கு மல நீக்கமும் சிவத்துவ விளக்கமும் சித்திக்கும் பொருட்டு, பெருங்கருணையினாலே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்சகிருத்தியம் பண்ணுவர். அவற்றுள் படைத்தலாவது, சென்மமுடைய பிராணிகளின் சமூகமாயும், போகோப யோகிகளாகிய பரிகாரங்களோடு இயைந்ததாயும், இருக்கின்ற சகத்தை அந்தந்த நானாவித யோனிகளில்

உற்பவிப்பித்தல். காத்தலாவது, தனதிச்சையாற் றடுக்கப்பட்ட சர்வலோகத்தையும், தத்தம் விடயத்தில் நியோகித்து நிறுத்துதல். அழித்தாலாவது, சகத்தைச் சகத்தியோனியில் ஒடுக்கல். மறைத்தலாவது. தத்தம் வாஞ்சனைக்குத்தக்க, போகத்தின் வழுவாதிருக்கச் செய்தல். அருளலாவது, தீக்ஷா கிருத்தியமாகிய அனுக்கிரகம்.

இதில் வடமொழிக்கலப்பு மிக்கு இருக்கிறது. எனினும் மேலே கண்ட கொச்சை நடைக்கும்.இதன் பீடு நடைக்கும் உள்ள வேறுபாடு நன்கு தெரிகின்றதல்லவா? காமம் பற்றி:

திருநீலகண்டர்

ஆறுமுக நாவலர்:-காமம்

—பெரியபுராணம்

பிறவிப் பிணி தீர்ந்து உய்தற்குத் தடையாய் உள்ள காமமானது, எத்துணைப் பெரியோர்களாலும், நீக்குதற்கரிது. அது நினைப்பினும், காணினும் கேட்பினும், தள்ளினும், விஷமானது தலைக் கொண்டாற்போல அத்தகைய நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது.

அது கல்வி யறிவு ஒழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்தில் தலைப்படினும். அவ்வுள்ளமானது தான் செல்லத்தகும் இடம் இது எனவும் செல்லத்தகாத இடம் இது எனவும், ஆராயவிடாது. அது மேலிடும்பொழுது குணமும் குலமும் ஒழுக்கமும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. அக்காமே கொலை, களவு, கள்ளுண்டல் முதலிய பாபங்களுக்கெல்லாம் காரணமாய் உள்ளது. ஆதலால் அக்காமமே ஆன்மாக்களை நரகங்களிலே எண்ணிறந்த காலம் வீழ்த்தி வருத்தும் பெருங் கொடுமையுடையது. (பிரமாணம் பல)...ஆதலால் காமம் மனசிலே சிறிதாயினும் எழவொட்டாமல் அடக்கவேண்டும்.

ஆறுமுக நாவலால் சமயம் பற்றியும் மொழிபற்றியும் பலநூல்கள் எழுதியுள்ளார். அவை பயில்வோர் தகுதிக்கு ஏற்ற நடையில் செல்லுகின்றன. அவர் பிள்ளைகளுக்கு என எழுதிய பால பாடத்திலிருந்து ஒரு பகுதியைக் கண்டு மேலே செல்லலாம்.

களவு: களாவது பிறருடைமையாயிருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினால் வரும் பொருள் வளர்வது போலத் தோன்றி, தாம் போம்போது பாவத்தையும் பழியையும் நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொருளையும் தருமத்தையும் உடன் கொண்டு போய்விடும். களவு செய்பவர், அப்பொழுது ‘யாவராயினும் காண்பரோ அடிப்பரோ கைகால்களைக் குறைப்பரோ’ என்றும், பின்பும், 'இராசா அறிந்து தண்டிப்பானோ’ என்றும் பயந்து பயந்து மனந்திடுக்குறுதலின், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையினலே களவு அப்போது இனிது போலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும்.

இவ்வாறு ஆறுமுக நாவலர் பல்வேறு துறைகளிலும் உரைநடையை வளர்த்துள்ளார். அவர்தம் இலக்கண்ம், தர்க்கம் முதலியன பற்றிய உரைநடையைப் பின்பு காணலாம்.

சென்ற நூற்றண்டில் வாழ்ந்த சமயத் தலைவருள் சிறந்தவராகப் போற்றப் படுகின்றவர் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் ஆவர். அவர் உரைதடை சிறந்ததென்பதைச் சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்தவர்களே கூறியுள்ளனர். ஒருவர் (கிறித்தவர்) கூறியதை முந்திய பேச்சில் கண்டோம். அவர் சாதி, சமய வேறுபாடுகளை நீக்க வேண்டும் என்ற அடிப்படை நெறியில் சமரசசன்மார்க்கங் கண்டவர். அவர் எழுதியவை பெரும்பாலும் பாடல்களே அவை ஆறு திருமுறைகளாக வகுக்கப்பெற்றன. அவையன்றிப் பல கட்டுரைகள் உரைநடையிலும் எழுதியுள்ளார். அவர் பல அன்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியங்களேயாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. அவர்தம் உரைநடைப் பகுதியில் ஒழிவிலொடுக்கப் பகுதி சிறந்தாகும். அதில் ஒரு பகுதியைக் காணலாம்.

வள்ளல்–என்னும் பெயர்:

ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியாகாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண வபீடேகச் சிறப்புப் பெயரென் க. அல்லதூஉம். பின்னர் ஞானாசிரிய நிலைக்கண் தமதருண் ஞான நோக்கானியைந்த கண்ணுடைய வென்னாங் காரண விசேடண மேற்கொண்டு நின்ற இவ்வள்ள லென்னும்-பெயர் ஈண்டவ் விசேடணமிசை யெச்சநிலையி னிற்ப நின்றதெனிலும் அமையுமென்க,

இஃது, வினை, பண்பு முதலியவடுத்த தொகை நிலைச் சொற்றாெடராகாது, தொகா நிலையாய்த் தனைத்தொடர்பயனிலையண்மைப்பொருளுணர்ச்சி யிடையிட்டு நிற்கத் தான் செயயுண் முதற்கண்

தனித்திருந்தமையின் ஆற்றலின்றாலோவெனின், அற்றன்று-கொடைமடங்குறித்த குணங்காரணமாக வந்த இவ்வள்ளலென்னும் பெயர் தன்னுறுப்புகளுட் கொடை, குணம், புகழழகு, வளமென்னு நால்வகை குறித்த பல்பொருட் பகுதியாய வண்மையென்னு முதலுறுப்பான் ஆசிரியர்க் குளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலிற் பொருளாற்றல் உண்டென்க. அல்லது உம், இப்பெயர் உயர் பொருட்கிடனாய், உடனிலைக் கூட்டாய் ஒரு நெறியசைந்தாய், ஓரினந் தழுவிப் பல்வகைக் குறிப்பிற் படர்ந்து முற்றியைபு வண்ணப் பெருஞ் சொல்லாக நிற்றலிற் சொல்லாற்றலும் உண்டென்க. ஆயின் இவ்வாசிரியர் பெயர் இச்செய்யுளின் இடைகடைகளின் ஒன்றினிறுத்தாது முதலடி முதற்சீரெதுகைத் தொடைக் கணிறுத்ததிற் குறித்த தியாதோவெனின் :-ஒன்றிரண்டெனக் கொண்டுறு மறையாகம நன்றிரு முடிபினடுநிலை நாடா அய்ம்புலம் பெறு தத்துவ நியதியிற் போந்து, உண்மலந்தெழுமறிஞர் வாழ்த்திப் பரவும் ஆசிரியர் சன்மார்க்க முதலிய மார்க்க நான்கனுட் டலைமையிற்லைமையாய வுத்தம சன்மார்க்கத்தின ரென்பது குறித்த தென்க. இங்ஙனம் உத்தம சன்மார்க்கத்தினரென்பதை யாசிரியர் கூறிய “இதுவென்ற தெல்லாம் பொய் யென்றன்” என்னுந் திருவெண்பாவாற் காண்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும்.

(திருவருட்பா, முதல் ஐந்து திருமுறைகள்-சன்மார்க்க சங்க வெளியீடு-பக். 125, 126.)

வள்ளலார்:—

சத்தியச் சிறு விண்ணப்பம்

எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைக ளெல்லாவற்றையும் நீக்கி,

இத்தேகத்தை நித்திய தேகமாக்கி, எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப்பெற்று வாழ்தல் எதனாற் பெறுதல் கூடிமென்று அறியத் தொடங்கிய தருணத்து, வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன். பின்னர், திருவருள் சுதந்திரம் நமக்கு எந்த வழியாற் கிடைக்குமென்று அறியத் தொடங்கிய தருணத்து, 'எனது’, ‘யான்’ என்னும் தேக சுதந்திரம், போக சுதந்திரம், ஜீவ சுதந்திரம் என்ற மூவகைச் சுதந்திரங்களும் நீக்கியவிடத்தே கிடைக்குமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி யறிந்தேன். ஆகலில், எனது சுதந்திரமாகக் கொண்டிருந்த தேக சுதந்திரத்தையும், போக சுதந்திரத்தையும், ஜீவ சுதந்திரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வசுதந்திரமாகக் கொடுத்துவிட்டேன்.

அடிகளார் பலருக்குக் கடிதங்கள் எழுதினமை அறிந்தோம். அப்படியே அடிகளாருக்குப் பலரும் கடிதம் எழுதியுள்ளனர். அவர்தம் நடைகளுள்ளும் ஓரிரண்டு காணல் ஏற்புடைத்து ஆதலால் அடிகளார் தொடர்புடைய இரு கடிதங்களின் படிகளைக் கீழே தருகிறேன்.

திருமுகம்

சுவாமிகளுக்கு வந்தனம்

பக்—91

தங்கட்குத் தற்காலம் நேரிட்டிருக்கிற ஆபத்தைக் குறித்து அஞ்சவேண்டாம், அஞ்சவேண்டாம். இந்த ஆபத்தால் தேக ஆணி நேரிடாது. கால பேதத்தால் நேரிடினும் நான் தங்களை எவ்விதத்தாலாயினும் திருவருள் வல்லபத்தைக் கொண்டு திரும்பவும் பார்ப்பேன்:

பேசிக்களிப்பேன். இது சத்தியம். இந்த வார்த்தை யென் வார்த்தையன்று. திருச்சிற்றம்பல முடையார் செல்வப் பிள்ளை வார்த்தை. தேகத்திற்கு ஆனி வருவதாகக் கண்டாலும் அஞ்ச வேண்டாம். வந்தால் வரட்டும். திரும்பவும் உடனே மிகுந்த விரைவில் என்னைப் பார்த்து பேசிக் களிப்பீர்கள். திருவருளாணை யிது. சற்றுங் கலங்க வேண்டாம். திருச்சிற்றம்பலம்.

”இது புதுச்சேரி சுவாமிகள் சமாதி திருக்கோயில் புகுமுன்னர் சந்நிதானத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டற்குப் பதில் திருமுகக் குறிப்பு”. (அடிகளாருடையது.)

பக்—120

ஐயாவிற்கு அன்பர் கடிதம்,

கடிதம்-6.

அன்புந் தயையு முடைய அய்யா அவர்கட் கனத்தானந்த வந்தன முற்றெழுதிக் கொண்ட தியாதெனின்,

அவிடத்திய சுபயோக க்ஷேமாதி சுபத்தை அடிக்கடி கேழ்க்க ஆவலுள்ளவகை யிருக்கிறேன். நீங்களனுப்பிய கடிதமும் ரூபாயும் வந்து சேர்ந்து அதிலுள்ள மிச்ச ரூ. ௫௯-யும் அனுப்பித்திருக்கிறேன். யென்னாலாக வேண்டியவைகளுக்குக் குத்தரவாக பலவாறு பிரார்த்திக்கின்றனன்.

ஸ்ரீ. வேலு முதலியாருக்கும் ௱-ஸ்ரீ. நாயின ரெட்டியாருக்குந் தங்கள் கடிதத்தைக் காண்பித்தேன். ௱-ஸ்ரீ வேலு முதலியார் நாளைய தினம் காலமே பிராயாணப்பட்டுப் போரார்கள். நானும் ரெட்டியாரும் திண்டிவனம் வரையில் போய் வழி விட்டுவிட்டு வருகிருேம். யெனக்கு வேண்டிய

புத்திமதிகள் அடிக்கடி தெரிவித்தனுக்கிரகிக்கும்படி தங்களுபய சரணார விந்தங்களை அஷ்டாங்க பஞ்சாங்க யோகாங்கமாய் பிரார்த்திக்கின்றனன்.

இப்படிக்கு,

பிரபவ ௵

தொண்டன்,

ஆடி ௩ ௳

கி. துரைசாமி.

(புதுவை ஸ்ரீ துரைசாமி அவர்கள் எழுதியது)

இவை கூடலூரில் மகாகனம் பொருந்திய அய்யா அவர்கள் சமுகத்துக்குக் கொடுப்பது (திருவருட்பா-பாலகிருஷ்ணப்பிள்ளையவர்கள் பதிப்பு.)

சென்ற நூற்றாண்டின் ஆறுமுக நாவலரிடமும் வேறு சிலரிடமும் தமிழ் கற்ற யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் என்பார் சென்ற நூற்றாண்டின் இறுதியிலே (1899) ‘திராவிடப் பிரகாசிகை’ என்ற இதழை வெளியிட்டுள்ளனர். அவர் முன்னர் வாழ்ந்து, தமிழ் உரைநடையை வளம்படுத்திய சிவஞான முனிவருடைய நூல்களைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பின் முன் 'வரலாறு’ என்ற தலைப்பில் அவர் தம் விளக்கம் உள்ளது. அவர் உரைநடைக்கும் அது சான்றாகலாமன்றாே?

இனி, இவ்வகச் சமய முதலிய வனைத்திற்கும் மேலாய் விளக்கமுற்று, அவையெல்லாந் தன்கண் ஏகதேசமாய் அடங்கக்கொண்டு நிற்பது சித்தாந்த சைவம். அது வேதாகம மிரண்டாலுந் தலையான சன்மார்க்கமென்றெடுத்துப் புகழப்படுஞ் சுத்தாத் துவித சித்தாந்த சமயம். இனித் தமிழின் கண் அப்பொருள் போதிக்கும் உண்மை நூல்கள், தமிழ் வேதமாகிய திருமுறைகளும், திருக்குறளும், சிவஞான போதம், சிவஞான சித்தி, சிவப் பிரகாச முதலிய சித்தாந்த சாத்திரங்களுமாகும்.

இனி, ஞானப்பிரகாச முனிவர், தமக்கபிமதமான சிவசமய வாதந் தமிழின்கட் கூறல் வேண்டினாராயின் வடமொழிக்கட் பிரமாண தீபிகை, சித்தாந்த சிகாமணி முதலிய கிரந்தங்களால், அது கூறிவைத்தாற் போலத், தமிழின்கண் புது நூல்களால் கூறிவைத்துப் போதலே, அவர் தமக்கு முறையாம்; இனி அவ்வாறு செய்யாது, நால்வகைச் சமயங்களுக்கும் மேன்முறையாய்ப் பிரசித்தியுற்று விளங்கும் சித்தாந்த சைவ நூலாகிய சிவஞான சித்தியை, அலைத்திடர்ப்படுத்து அங்ஙனந் தம் மதப் பிரசாரஞ் செய்தது அவர்க்குச் சால்பாகாமையறிக,
—திராவிடப் பிரகாசிகை இதழ்.

இச் சபாபதி நாவலர் சித்தாந்த மரபு கண்டன கண்டனம், வைரக்குப்பாயம், சிவசமய வாத உரை மறுப்பு முதலிய சமயக் கண்டன நூல்களைச் சிதம்பரத்திலிருந்து வெளியிட்டுள்ளார்.

தர்க்கம்

சென்ற நூற்றாண்டில் சைவத் தூண்களாக நின்ற அறிஞர் பலர். அவருள் பலராலும் சிறந்தவராகப் போற்றப்பெற்றவர் 'வைதீக சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று சிறப்புப் பெயர் பெற்ற சூளை சோமசுந்தர நாயகர் அவர்கள். அவரும் அவர் மாணவர் எனத் தம்மைப் பெருமையோடு கூறிக்கொள்பவருள் சிலரும் தமிழ் உரை நடையில் சைவ சமயம் பற்றி நல்ல நூல்கள் எழுதியுள்ளனர். சைவ சமயத்தை மறுப்பாருக்குப் பதிலாக தர்க்க முறையிலும் பல உரைகள் அவர்களால் எழுதப் பெற்றன. பிற மதங்களைக் குறை கூறும் வகையிலும் மற்றும் பல நூல்களும் வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் சமயக் கண்டனங்களும் மறுப்பு நூல்கள் பலவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒருவரை ஒருவர் வன்மையாகவும் தாக்குகின்றனர். வைரக்குப்பாயம், குதர்க்கவிபஞ்சனி, கண்டனம், கண்டன கண்டனம் என்ற வகையில் பல உள்ளன. முதலாவதாகத் தர்க்கம் அல்லது அளவையைப் பற்றிய குறிப்பினைக் காண்போம்.

சித்தியார்

அளவை

தருக்கம் (Logic)

அளவை என்பது அளந்தறியப்படுவது: அஃது எவ்வாறாம்? எனின், உலகத்து பதார்த்தங்களை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறு போல, பதி முதலிய பொருள்களைப் பக்குவான் மாக்கட்கு அளந்து அறிவிக்கையின் பொருட்டு அளவைப் பிரமாணங்களை முதற்கண் கூறியது என அறிக.

ஒரு விளக்கம்

இதனால் சொல்லியது தோற்பாவையையும், மரப் பாவையையும், தேரினையையும் இவையிற்றை இயக்குகின்றவன் வேருய் நின்று இயக்குகின்ற முறைமை போலவும், பல கோலங்களைச் சமைத்து அந்தந்தக் கோலம் தானாய் நின்று ஆடுகிற கூத்தாடி முறைமை போலவும், பந்திக்கப்பட்ட காயத்தை ஆன்மா நின்று ஆட்டுகிற தனமையும் என்னும் முறைமையும் அறிவித்தது.
சிவஞான் சித்தி-இலக்-சூத்-4
அதி-2, பக்-685.

சோமசுந்தர நாயகருடைய மாணவர் பலர். அவருள் ஒருவராகச் சிறந்தவர் மறைமலை அடிகளார். அவர் அக்காலத்தில் ‘நாகப்பட்டினம் வேதாசலம்பிள்ளை’ என வழங்கப்பெற்றர். அவர் “துகளறு போதம்“ என்னும் சித்தாந்த நூலுக்கு உரை செய்துள்ளனர். அதன் முகவுரையையும் (1898) அவரைப் போன்றே மற்றாெரு மாணவராகிய பச்சையப்ப நாயகர் அவர்களது ‘பரதத்துவப் பிரகாசிகை’ யின் முன்னுரையையும் காணலாம்.

சித்தாந்த ஞான போதம்: துகளறு போதம்- மூலமும்-உரையும்

மூலம் அருளிச் செய்தவர் சீகாழிச் சிற்றம்பல நாடிகள். இதற்கு வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களது மாணவரும், சென்னைக் கிறிஸ்டியன் காலீஜ் தமிழ்ப் பண்டிதரும் ஆகிய நாகப்பட்டினம் வேதாசலம் பிள்ளையவர்களால் புத்துரை செய்யப்பட்டு, மதராஸ் ரிப்பன் பிரஸில் வெளியீடப் பட்டது. 1898.

முகவுரை

துகளறுபோத மெனப் பெயரிய இவ்வரிய சித்தாந்த நூலை ஆக்கியோர் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் என்று பெரியோர் கூறுகின்றனர். மெய்கண்ட நூல்களின் கருத்தையே யிந்நூல் விரிக்க வந்ததென்பது பாயிரத்தா லறியக் கிடக்கின்றது. சிவஞானபோத முதலிய வுண்மை நூல்களில் அரிதினுணர்தற் பாலனவாய்க் கிடந்த அருங் கருத்துக்கள் இந்நூலில் வெள்ளிடைமலை போலத் தெளிவுற விளக்கப்பட்டிருக்கின்றன. அஃதன்றியும், சைவ சித்தாந்த நூல்களை யுளங்கொளப் பயிலுவதற்குத் தொடங்குமுன் இந்நூலிற் பயிற்சி சிறிதிருக்குமேல் அது மிகவும் பயன்படும். சைவ சித்தாந்தத்தில் இன்றியமையாதனவா யறிந்து கோடற்குரிய பொருள்களெல்லா மிதிற் செறிந் திருக்கின்றன. தத்துவங்களி னியல்பெல்லாந் தெளிவாகவும் விரிவாகவும் உரைக்கப்பட்டிருத்த லல்லாமலும், முத்திக்கணிகழும் பல்வேறு நிலைகளையு மவற்றையெல்லாங் கழித்து முடிவினெய்தும் நிலையையும் ஏனை நூல்களிற் போற்சுருங்க

வுரைக்காது விரிவுறத் தெளிவிக்கும் பெற்றிய தெனின், இந்நூற் பெருமை யளவிட்டுரைக்கும் வரம்பினதாமோ?

பரதத்வப் பிரகாசிகை

இஃது வைதிக சைவசித்தாந்த சண்ட மாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களது அடியவர்களது அடியவர் திருக்கூட்டத்தவருள் ஒருவராகிய சி. பச்சையப்ப நாயகரவர்களால் வெளியிடப்பட்டது.

முகவுரை: நிகழும் ஜய ௵ ஆனி ம௴ 15௳யில் நாமக்கார ரெட்டியாரொருவர் சிறிய பிரகடநமொன்று வெளியிட்டனர். அதில் கிளியனூரில் ஏகாங்கி யென்பவரைக் கொண்டு ௸ ௴ 26௳யில் ஒரு பிரசங்கஞ் செய்விப்பதாகவும், அந்தப் பிரசங்கத்தில் ‘நாராயணனே ஜகத்காரண வஸ்து வென்றும், சிவனுக்கு எவ்வழியாலும் பரத்துவமில்லை யென்றும், அச்சிவன் சீவகோடியிலொருவ ரென்றும், தபசிகளிற் சிறந்தவரென்றும்' அவ்வே காங்கியைக் கொண்டு தாபிக்கம் போவதாகவுந் தெரிவித்தனர். அவ்வளவேயன்றி ௸ தேதியில் அவ்வாறு செய்விக்க அவருக்குத் தெய்வந் துணை செய்யாமற் போயிற்று. ஏனெனின், அவர் கிளியனூரில் சிவநிந்தை செய்விக்தத் துணிந்த பயன் அவ்வூரில் தீப்பிடித்ததென்க, அவரெண்ணிய வெண்ணத்துக்கே தீங்கு விளைந்ததாயின், அத்தீய வெண்ணம் முற்றுப்பெற்றிருந்தால் பின்னர் நடக்கும் ஸம்பவத்திற்குக் கேட்கவேண்டுமா? ஊரார் செய்த புண்ணிய பலத்தால் ஏகாங்கினது அஸ்ப்யமொன்றும் அங்கு நடவாமற் போயிற்று நிற்க.

இந்த ரெட்டியார் தேடிக் கொண்ட ஏகாங்கி யென்பார் வீண் புரளி செய்து பதுங்குவதே

நிலைமையாகவுடையவர். சைவர்களை ஏகாங்கி வென்றாெரென்று ரெட்டியாரும், அவ்வேகாங்கி சைவர் முன்னிற்கவுந் திறமற்றவரென்று யாமும் பேசுவதிற் பயனில்லை, எதிரியினது சித்தாந்தத்தைப் பத்திரிகை வாயிலாக நிறுத்துவதே அழகாம் .....

சூளை சோமசுந்தரநாயகர் அவர்கள் எழுதிய சமயதர்க்க நூல்கள் பல. அவற்றுள் ஒருசிலவற்றை ஈண்டே குறித்தல் நலமாகும். 1. சுக்லாம் பரதர சுலோக விசாரம். 2. சிவ தத்வ சிந்தாமணி, 3. சிவபாரம்யப் பிரதரிசிநி, 4. சமரச ஞானதீபம், 5. ஆபாச ஞான நிரோதம், 6. ஸ்ரீசேக்கிழார் திருவாக்குண்மை 7. ஆர்சார்யப் பிரபாவம், 8. சித்தாந்த சேகரம், 9. சிவாதித்ய ரத்னாவளி, 10. பிரஹ்மதத்வ நிரூபணம், 11. சித்தாந்த ரத்நாகரம்—பிரம்ம வித்யா விகற்ப நிரசநம் முதலிய பல நூல்களை அவர் இயற்றியுள்ளார். அவருடைய சித்தாந்த ரத்நாகரம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியைக் காண்போம் (1881).

சித்தாந்தம் முடிவு எனும் பொருள்படும். எனவே தனக்குமேல் ஒரு கொள்கையற்றது. இம் முடிபு பெறப்பட்ட முடிபேமுடிபெனவும்,அதுவே சித்தாந்தம் எனவும் பெறப்பட்டது. ஆகவே இது ஆகம முடிபு எனப்படும்.வேதம்.சிவபெருமானால் சொல்லப்பட்டது.வேதமே சிவாகமம். சிவம் சகல கேவலங்களிற் றோயாத நின்மலப் பொருள். அச்சிவத்துக்கு வேறாகியஆன்மா அதனை அநுபவித்தற்குரியது. சிவனைப்போல் ஆன்மாவும் பிரகாசனமாய் விளங்குவதால் சிவன் அருளைத் தர ஆன்மா அதனைப் பெறவும் இடம் பெறாது. ஆன்மா மலத்தாற் பந்திக்கப்பட்டு அதுவாயொழிதலால் சிவத்தினருளைப் பெற்று இயங்கும் தன்மை வாய்ந்தது. ஆன்மாவைச் சித்தசித்து எனச் சிவாகமம் கூறும்; சதசத்து என்றும் கூறும்.

இவ்வாறே காஞ்சிபுரம் சபாபதி முதலியார் முதலிய பலர் சைவ சமய நெறி பற்றி விளச்கமான நூல்களை உரை நடையில் எழுதியுள்ளனர். அவை அனைத்தையும் ஈண்டுக் குறித்தால் அளவிலாது பெருகுமாதலின் இந்த அளவோடு இதை நிறுத்தி, இவர்களே பிறசமயத்தாரோடு மாறுபட்டும் பிற நெறியாளர் சைவத்தைப் பழித்த முறைகளை மறுத்தும், தர்க்க நெறியிலும் எழுதிய நூல்களுள் சில கண்டு அமையலாம்.

சோமசுந்தர நாயகர் பற்றியும் அவர்தம் புலமை பற்றியும் அவருடைய மாணவரும் நமக்கெல்லாம் அறிமுகமானவருமான மறைமலையடிகள் 1900 இல் எழுதிய சோம சுந்தரக் காஞ்சியாக்கத்தின் முன்னுரையால் நாட்டில் இருந்த சமயமாறுபட்டு நிலையும் தர்க்க முறையும் நன்கு புலனாகும்.

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்;

முதற்பதிப்பின் முகவுரை;

எமக்குச் சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்த நூற் பொருள் செவியறிவுறுத்தி இத்தென்னாடு முழுவதூஉம் அச்சித்தாந்த சைவப் பொருண்மரபெல்லாம் வகுத்தெடுத்துக்கொண்டு உபந்நியாசங்களாலும் நூற்களாலும் பலகாற் பலரு முய்யுமாறு விளங்கக் காட்டி ஓர் அரியேறு போல் யாண்டும் நிகரற்றுலாவிய எங்குரவர் ”சைவசித்தாந்த சண்டமாருதம்” ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயக வள்ளல் சிவசாயுச்சியமுற்ற ஞான்று அப்பெருந்தகையார் பிரிவாற்றாது எம்மிடை நிகழ்ந்த கையறவு தெரித்து யாமியற்றிய 'சோமசுந்தரக் காஞ்சி'யின்மேல்ஒருசில போலிப்புலவன்மார் வழுவளைந்த போலி மறுப்பொன்று வெளியிட்டனராக, மற்றதனைக் கண்ட எம்மாளுக்கர் ஒருவர் அப்புலவர்க்குப் பொய்யறிவு களைந்து பொருளியன்மெய்யறிவுகொளுத்தன் வேண்டியும்

அப்பொருளறிவின் மாட்சி தெரித்தல் வேண்டியும் தர்க்க நூலியைபும் பிரமாண நுட்பங்களு மிடை யிடையே கொளுவியொரு கோவைப் படுத்துத் தமதுமேற்கோளினிதுவிளங்கவெழுதிய அரியதோ ரெதிர் மறுப்பினை 'நாகை நீலலோசனி பிரபஞ்ச’ மித்திரன்’, ‘தமிழ்ப் பிரதிநிதி, முதலிய பிரபல சஞ்சிகைகளிற் பிரசுரித்தனர். அவ்வெதிர் மறுப்பு நியாய நெறிதழிஇ யுரங் கொண்டுலாவுதலினதனைக் கண்ட அப்புலவர்மார் அவ்வெதிர் மறுப்பான் மேல்மறுப் பொன்றெழுதினரெனவும் அம்மறுப்புப் பிரமாணப் பொருள் காட்டி நிறுவலாற்றாது பிறிது மொழிதல்’ என்னுந் தோல் வித்தானத் தோடியைந்து இகழுரை நிரம்ப நிகழ்த்தி மறுபட்ட தெனவும் எம் நண்பர் பலரோ டியாமொருங்கிருந்த வழி நம்மெதிரில் “தமிழ்ப் பிரதிநிதிப் பத்திராதிபர் கூறினராயினும் அப்போலி மறுப்புரை தானும் இதுகாறும் புறம் போந்திலாமையின், அவர் வெருட்டுரையை ஒரு பொருட்படுத்துவா மல்லே மென்றாெழிக.

இத்தகைய வாதங்களும் தர்க்க நெறிகளும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உண்டாகி வளர்ந்துள்ளமைகாண்கின்றாேம். 'சித்தாந்த மரபு கண்டன கண்டனம்’ என்ற நூலில் சிவஞான முனிவர், சித்தாந்த மரபினைப் பழிப்பாரைக் கண்டித்துள்ளார்.

‘வினையாவது அனாதியிலே ஆணவமலத்திலே ஆன்மாவுக்குக் கன்மத்திலுளதாம் விருப்பமென்றார் என்றீர். அவ்வாறிண்டு யாருமில்லை. ஒவரோ குழறுபடையாக எழுதிவைத்த தொன்றனைக் கைப்பற்றிக் குற்றங்கூறப் புகுந்தீர். ‘பொய்யர்குப் பொய்யாய பொய்யினன்’ என்றதுபோல நும் அறிவின் குழறுபடைக்கேற்பவே அதுவும் குழறுபடையாய் நுமக்கு வந்து வாய்த்தது.

அன்றேல் நீர் கூறுவது மவ்வாறே பொருள்படுமா லெனின், மய்க்கவறிவுடையார்க்கு அவ்வாறு பொருள்படும். யாம் வேறெனக் கொண்டவதனை, ‘மூன்று குற்ற மூன்று குண மூன்று மல மூன்றவத்தை-யேன்று நின்று செய்யும் இருவினை” ஆகலின், அவ்வினையினியல் பறிதற்கு நீர் யார்? 'இருவினை பாசமும் மலக்க லார்த்தபின்’ என்றற்றொடக்கத்துச் சுருதிகளைக் கேட்க மறந்தீர் போலும் (பக். 40)

என்று அவர் நாகரிகமாக எதிர்ப்பாரை மறுத்துள்ளமை காண்கின்றாேம். சோமசுந்தர நாயகர் மாணவருள் பலர் மாற்றாரை வேகமாகச் சாடுவதும் அதற்குப் பதிலாக மாற்றார் கீழான நிலையில் மாறுபாட்டுரை வழங்குவதும் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும். இத்தகைய தர்க்கங்கள் பல உள்ளன. ஒன்று மட்டும் காண்போம்.

மெய்கண்ட சிவதூஷண நிக்ரஹம் (1900)

சைவ நிந்தையே தவமெனக்கொண்டுவாழும் ஒரு மாயா வாதியார் சிலரைக் கும்பு கூட்டிக் கொண்டு, சைவ சமயிகள் பிரசங்கஞ் செய்யு மிடங்கடோறும் அவர்கனை யனுப்பிச் சிலகாலமாய்க் கல்லல் விளைத்து வருகின்றனர், அக்கூட்டத்தார் சைவப்பிரசங்கிகளோடு சாஸ்திரவாதம் புரிய வல்லுநரல்லர். பிரசங்கியார் ஒன்றை யெடுத்துச் சொல்லுவதன் முன்னரே மூலைக்கு மூலை கிளம்பி நின்று, பெருங்கூச்சலிட்டு பிரசங்கவொலி கேட்கவொட்டாமல், ஆரவாரிப்பதே அவர் தொழில். இதனால், மாயாவாதம் சைவத்தை செயித்துவிட்டதென்பது அவர் துணிபு. இம்மட்டிலொழியாமல் அவர் வரும்போது தஸ்திழமூட்டை கொண்டு வருவர். அவை சிவநிந்தை பொதிந்த காயிதக் குப்பையாம்.

குதர்க்க வாத விபஞ்சனி (1876):

ஏ சூளை நாயகன் அடிமையே! நின்னாசிரியர் சீவகருணையே தமது கொள்கையெனற் கியைந்து உத்தம வாதமென்னுஞ் சுவடியை யெழுதின ரென்று நீ கூறி யழுதனை. ஐயோ கொடுமையே! நின்னாசிரியர் புலாலை விரும்பி யுண்ணு மசைவ ரென்பது அவருடைய ஸ்வபந்துஜநப் பிரசித்தியாயின் அதனை நீயேனோ மாற்றத் தலைப்பட்டனை? இது நின்னிடத்து மஹாபாரதமேயாம். 'பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி, யாங்கில்லை யூன்தின் பவர்க்கு' என்றருளின பொரியோனருமைத் திருவாக்கை யுத்துணரப் பெறாத மருட்போத சீலரைச் சிவகருணையுடையவரென்று நீ வியந்து கூறுமாற்றால் தீயவற்றை நல்லனவாகக் கொண்டொழுகும் புல்லறிவாளரிற் றலைமகனாக நிச்சயிக்கப்பட்டவ னாயினை, அகங்காரத் திமிர்ப் புடையணாகிய உனதாற்றலும், உன்னைத் தூண்டி வெளியே விடுத்து மறைந்து கிடப்பராகிய உன தாசிரியராற்றலும் வெட்டவெளியாகுங் காலம் சமீபித்தது போலும்.

இதே முறையில் இராமலிங்க அடிகளாருடைய ‘அருட்பா'வினுக்கு யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையினுடைய 'மருட்பா’ வாதம் பற்றிய உரைநடை வெளியீடுகளும் கட்டுரைகளும் சில இருந்தன எனத் தெரிகிறது. இவ்வாறு ஒரே சமயத்தும், இந்து சமயமெனும் கூட்டுச் சமயத்தில் உள்ள பல கொள்கைகள் பற்றிய வாதப்பிரதி வாதங்களும் நிகழ்வது ஒருபுறமிருக்க, நாட்டில் புதிதாக வந்த கிறித்துவச் சமய மறுப்பான வாதங்களும் சில எழுந்தன. அவற்றுள் ஒன்றை மட்டும் கண்டு அமைவோம்.

கிறிஸ்துமத கண்டனம்—ஸ்ரீசிவசங்கர பண்டிதர்—1882

கடவுள் முதற் காரணர். அவர் படைத்த ஆதி மனுஷரை விவேகமில்லாதவராக ஏன் படைத்தார்?

விவேகம் உடையவராயின் விலக்கியது செய்தலே தீமை-செய்யாமையே நன்மை என்று பகுத்தறியாமல் விலக்கிய கனியைப் புசித்தது என்னை? அக்கனியைப் புசித்தபின் உண்டாகிய நன்மை தீமைகளின் ஞானம் முன் இல்லாதது என்ன? தந்தை சொல் மீறும் அவன் குழந்தையின் பாபம் தந்தையைச் சாருமாப் போலவே ஆதிமனுஷரின் பாபம் ஆண்டவரைச் சாருமே! கனியை உண்டால் நன்மை தீமைகளின் ஞானம் உண்டாதல் கூடுவதாக, அதை விலக்கியது வஞ்சகமாமே! கிருத்துநாதர் பல அற்புதங்கள் செய்ததால் தேவன் எனக் கருதினால், மோசே, யோசுவா, எலிசா, எலியா முதலானவர்களும் தேவனாகக் கருதப்பட வேண்டும். பொய்க் கிருத்துவர்களும், பொய்த் தீர்க்கதரிசிகளும் எழும்பித் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தாமும் மயங்கத்தக்க மகா பெரிய அற்புதத்தையும் செய்வார் என்று சொல்லப்பட்டதால் அற்புதஞ் செய்தலினல் தேவன் என்று சாதித்தல் கூடாது. கணவனாற் சேரப்படாத மரியாள் என்ற கன்னிக்குப் பிறந்ததால் தேவன் எனினும், அந்தப் பெண் யோசேப்புவுக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட பின்பே கர்ப்பந் தரித்தாளாதலின் அவனாலாயினும், பிறராலாயினும் சேரபட்டே கருப்பந் தரித்தாள் என்று சொல்ல வேண்டும். எனவே இயேசு தேவன் அல்ல. தேவத்தன்மை பொருந்தியவனுமல்ல.

இவ்வாறு சைவ சமயத்தின் சிறப்புப் பற்றியும் பிற சமயங்கள் பற்றியும் இவர்களேயன்றிக் காஞ்சி சபாபதி முதலியார், காசி விஸ்வநாத முதலியார், முதலியவரும் பெயர் தர விரும்பாத சிலரும், சில துறவிகளும் பல்வேறு உரைநடை நூல்கள் இயற்றியுள்ளனர். அவை அனைத்தும் பெரும்பாலும் தெளிந்த நடையுடையனவாகவே அமைகின்றன. இந்த அளவோடு சைவ சமய உரைநடை நூல்களையும் தர்க்க வாதங்களையும் நிறுத்தி மேலே செல்லலாம்.

வைணவம்

வைணவ சமயத்திலும் சென்ற நூற்றாண்டில் பல உரைநடை நூல்கள் எழுதப் பெற்றன. பெருங் காவியங்களுக்கும் 'வசனங்கள்' எழுதப் பெற்றமையை முன்னரே கண்டோம். பல காவியங்களுக்கு உரைகளும் எழுதப் பெற்றன. சில வைணவ விரதங்களுக்கு விளக்கங்களும் தரப்பெற்றன.

ஆசிரியர்கள், வைணவ நூல்களில் அதிக வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைக் காண முடிகின்றது. ஆசார்ய ஹிருதயம்: (ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள்

நாயனார்-1870)

ஊராரென்றும், நாட்டாரென்றும், உலகத்தாரென்றும் சொல்லப்படுகின்றவர்கள் கேவலரும் இகபரலோ கைஸ்வர்ய காமருமான ஸ்வதந்த்ரரும் ஸங்கோச ரூபமான கைவல்ய மோக்ஷத்திற் கும்ப்ரக்ருதி ஸ்ம்பந்த நிவர்த்தியானால் தங்கு மூர்ஸ் மானமே. கீதையில் ஸித்த தர்மத்தினுடைய விதி இப்பிரபந்தத்தில் விதியும் அநுஷ்டாநமும், பாட்டுக்களுக்கும் கிரியைகளும் தஸ்கத்துக்குத் தாத்பர்யமும் போல நூறு பாட்டுக்களுக்கும் பரோப தேஸ் பரமான திருவாய்மொழி ப்ரதாநம்.

வார்த்தாமாலை: (நாத முனிகள் 1882)

ஒருவனுக்கு அறியவேண்டுவது, ஸ்வரூப புருஷார்த்தோபாயங்கள். சித்துக்கு மூன்று ஸ்வபாவம் ஈஸ்வரனுக்கு மூன்று ஸ்வபாவம். அசித்துக்கு மூன்று ஸ்வபாவம். உற்பத்தியையும், உடைமையையும், உடைமைக்கு உண்டான ஊற்றத்தையும் உடைமைக்கு

உற்பத்தியான உடையவனுடைய உயர் நிலையையும், உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான உறவையும் சொல்கிறது திருமந்திரம். கர்மத்தையும் கர்மத்தில் களையறுப்பையும், கண்ணனையும் கண்ணன் கருத்தையும், கதியையும் பற்றும் படியையும், பரனையும் பற்றும வனையும், பாபத்தையும் பாபத்தில் பற்றுகையையுஞ் சொல்லுகிறது. சரமபரலோகம். கர்மம் கைங்கர்யமாயிருக்கும். ஜ்ஞாநம் ஸ்வரூபமாயிருக்கும். பக்தி போகமாயிருக்கும். ப்ராப்யம் தாரகமாயிருக்கும். உக்தி காலக்ஷேபமா யிருக்கும். நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம். நம் பக்கம் பேற்றுக்கு (நம:) என்னாதவர்களையும் வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்ப தொரு ஒளதார்ய விஷேமுண்டு. நாரங்களுக்கு நைரந்தர்யும் வேஷம். (நாராயணனே நமக்கே பறை தருவான்)

அனுஷ்டான விதியும் திருவாரதனக் கிரமமும்; (அரங்கசாமி முதலியார் 1888)

காலக்ஷேபம் செய்தல்:-ஸ்ரீபகவத் விஷயாதி அஷ்டாத சரஹச்ய முதலிய வியாக்யான கிரந்த காலக்ஷேபங்களைக் காலோசிதமாய்ச் செய்து தண்டஞ் சமர்ப்பித்து, தீர்த்த வடியைச் சேர்ந்த தீர்த்தம் ஸ்வீகரித்துக்கொண்டு, திருமண் பெட்டியைச் சேர்த்து எழுந்தருளச் செய்யவேண்டியது.

விஷ்ணு ஆலய தரிசன விதி: (மதுரை ரங்கையரவர்கள் 1890):

முன்னுரை :-இவ்வுலகத்திலும் மற்றெவ்வுலகத்திலு முள்ள சகலான்மகோடிகளு மெளிதில் இகபர சாதன சித்தி பெற வெண்ணி உபயவேத, இதிஹாச, புராண, பஞ்சராத்திராதி ஆகம சாஸ்திரங்களாலும் பூர்வாசாரியர்கள் செய்தருளிய கிரந்தங்களிலும், பல பரக்கச் சொல்லிய

திவ்யதேச சேவக் கிரமங்களையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து என்னால் இந்நூலில் அச்சிட்டுப் பிரசித்தி செய்யலாயிற்று. இந்நூலில் சொல்லியபடி கூடிய வரை சிரத்தையொடு நடப்பவர்கள் ஒரு குறையுமின்றி நிரதிசயானந்தத்தைப் பெறுகிறர்கள்.

இவ்வாறு பல வகைகளில் வைணவ சம்பந்தமான உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறே பாரதம், இராமாயணம் முதலிய வடமொழி இலக்கியங்களை உரைநடையில் பலர் எழுதி வெளியிட்டுள்ளார்கள். பெரிய எழுத்தில் தடித்த அளவில் சாதாரணக் கிராம மக்கள் படித்தறியும் வகையில் அவை அமைந்துள்ளன. கிராமங்களில் ஓய்வு நாட்களில் திண்ணைகளில்-இராப்பொழுதில் ஒருவர் இத்தகைய உரைநடையை வாசிக்கப் பலர் கேட்கிற வழக்கம் நமக்குப் புதியதன்றே. இந்த வாசிப்பிற்கு வேண்டிய நூல்களில் பல சென்ற நூற்றாண்டில் எழுதப் பெற்றவையே. இதற்கு ஒரு சான்று காணலாம்.

ஸ்ரீ திராவிட மஹாபாரத வசனம்: இரண்டாவது வாலம்

(2) (Vols.)

இஃது வாக்கிய ரூபமாக அச்சிட்டுத் தரும்படி நிலைபெற்ற-சைவ - வைஷ்ணவ - ஸ்மார்த்த சமயப் பிரபுக்கள் கேட்டுக்கொண்டபடி ஸ்ரீ வேத வியாசர் செய்த கீர்வாண பாரதத்தை-தமிழில் நல்லாப் பிள்ளை செய்த பாடலை உரையிட்டபடி த. சண்முகக் கவிராஜரால் முன் பதிப்பித்த பிரதிக்கிணங்க, திருவொற்றியூர் பரசுராம முதலியார் குமாரர் கன்னியப்ப முதலியார் அண்டு பிரதர்ஸ் அவர்களால் தமது பரப்பிரம முத்திராக்ஷரசாலையில் பதிப்பிக்கபட்டது. (II Editian–1886)

நூலுள் ஓர் எடுத்துக்காட்டு: இத் தன்மையாகப் பக்தர்களைக் காக்கும் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியையும் ஸ்ரீவேத வியாசரையும் பணிந்து,

பொன்னிறைச் சடைமுடி புனைந்த வைசம்பாயனர் இது வரையிலுஞ் சொல்லி வந்த பஞ்சம வேதமென்னும் பரிசுத்த அமுதத்தைக் கற்புடைமையின் மனைமாட்சியினுயர்ந்த பொற்புடை யவயுஷ்டா தேவிக்குப் புருடசிலாக்கியனை ஜெனமே ஜெய மகாராஜன், காதெனும் வாய்மொழியா யருந்தி-அற்புதமடைந்து—மற்புயம் வளர்ந்து மகிழ்ந்து, விற்பனவிவேக மேலோனான வைசம்பாயனரை நோக்கி, சுவாமி, அப்பால் பாண்டவருக்கு நேரிட்ட பான்மையைப் பகர வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்க, வேதபாராயணராகிய வைசம் பாயனர் விளம்பத் தொடங்கினார்.

இவ்வாறே இராமாயணத்துக்கும் சில உரைநடைத் தொகுதிகள் வந்துள்ளன. இவ்வாறு வைணவ சமயமும் சென்ற நூற்றண்டில் உரைநடையை வளர்த்தது எனலாம்.

சமணம்

சென்ற நூற்றாண்டில் சமண சமயம் பற்றி உரைநடை இலக்கியம் அதிகமாக இல்லை. பெளத்த சமயம் பற்றியும் சில நூல்களே வெளிவந்துள்ளன. முன்னரே உள்ள பாடல்களுக்கு விளக்கமேயென அமைந்துள்ளனவன்றி வேறு பெரும் உரைநடை நூல்கள் எழுதப்பெறவில்லை. அவ்வாறு வந்துள்ள இரண்டொன்றும் மணிப்பிரவாள நடையோ என்னுமாறு அமைந்த நிலையையே காண முடிகின்றது.

ஜீவலம்போதனை என்ற நூலுக்குச் சென்ற நூற்றாண்டில் (1899) அச்சான ஒர் உரையை இங்கே காணலாம். பாட்டு எளிய தமிழ் நடையில் உள்ளது.

பாட்டு;

ஒர்ந்துயிரே கேளுங்க ணிற்ப நிலையாத
வார்ந்தறிவு காண்பனவே யார்ந்தநிலை-சேர்ந்த
வினையிஞ லாமுடலு மேவுமனை மக்கள்
கினையுங்கா னில்லாவா னேர்ந்து (336).

இதன் உரை:—கேளாய் ஜீவனே? நித்தியமும் அநித்தியமும் என்பன யாவையோவெனில் அனந்தக்கியானகி அஷ்ட குணங்கள் நின் கண்ணே பெறலாய் நின்றன. போய் நாட வேண்டாமவையே நித்யமாகுமன்றி நீ கொண்டு நின்ற சரீராதி புத்திரமித்திர களத்திர தனத்ரன்னிய முதலாய வஸ்துக்களெல்லா மனித்திய மாக மஃதெவ்வகையெனில்.

எனக்கூறி மேலுள்ள பாட்டைக் காட்டுவர்.

இவ்வாறு பாட்டிலும் உரை அதிக விளக்கம் தேவையான வகையில் உள்ளது.

இசுலாம்

சென்ற நூற்றாண்டில் இசுலாம் பற்றிய நூல்கள் பலவும் தமிழில் வெளிவந்துள்ளன. இச்சமயம் பற்றி அரசாங்கப் பதிப்பு வரையறைக்குட்பட்ட வகையில் முப்பத்தேழு ஆண்டுகளில் சுமார் 150 நூல்கள் அச்சிடப்பெற்றுள்ளன. அவைகளுள் பெரும்பாலான செய்யுளாகவே உள்ளன. சென்ற நூற்றாண்டில் அச்சுச் சாதனத்தைப் பயன்படுத்திய வகையில் அச்சமயத்தினரும் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். வேற்று மொழிகளிலிருந்து பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து இங்குள்ளார் தம் சமயத்தை அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டனர். தோத்திரப் பாடல்களாகவும் பல நூல்கள் வெளிவந்தன. பிற சமயங்களைக் குறைகூறும் வகையில் அமைந்த நூல்களும் சில. தமிழிலே எழுதப்பெற்றனவாயினும் பல அராபிய பர்சியச் சொற்கள் அவ்வாறே எடுத்தாளப் பெறுகின்றமையின், அச் சமய உண்மைகளை ஓதி உணர்ந்தாற் கல்லது மற்றவர்களுக்கு எளிதில் புலனாகாவாறு பல நூல்கள் அமைந்துள்ளன. ஒருசிலவற்றின் முன்னுரைகளையும் அச்சிட்ட வரலாறுகளையும் காணலாம்.

1. திரியேகத்துவ நிவாரணம்: (இந்நூல் முகையத்தீன் ஷரீப்பு சாயபு அவர்களாலும் ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரியவர்களாலும் செய்யப்பட்டது.) 1876 சூன் 28 ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

Bangalore—Printed at the Union Press,
Cavaley Road, No. 220, 15—6—1875.

ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரி அவர்களுடைய உத்தரவு அன்னியில் ஒருவரும் அச்சடிக்கக் கூடாது. அச்சடித்தால் சட்டப் பிரகாரம் நடத்தப்படுவார்கள். (The Copyright is preserved)

இப்புஸ்தகம் தேவைபுள்ளவர்கள் திருநெல்வேலி ஜில்லா கசுப்பா சாலியா தெரு ௧௦௩ நிம்பர் வீட்டிலிருக்கும் மகா-௱-௱-ஸ்ரீ முஹம்மது மதார் சாயபு அவர்கள் குமாரர் ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரி அவர்களிடமிருந்து வர வழைத்துக் கொள்ளலாம்.

இந்நூல் மஹமது சமய உயர்வையும் இயேசு அனாதி அல்ல என்பதையும் இயேசு அல்லாவின் குமாரன் என்பார் கூற்றுத் தவறு என்றும் விளக்குவது.

காரணம்: அல்லாஹுத்தாலா ஏகமாயும், முகம்மத் ரசுலுல்லாவவர்கள் அல்லாஹாத்தாலாவின் தீர்க்கதரிசி யென்கிற நபியாயுமிருப்பதைப் பற்றி அரபி—பார்சி-ஹிந்துஸ்தானி பாஷைகளில் அநேக கிதாபுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பாஷைகளை யறியாதவர்கள் அச்சங்கதிகளைத் தெரிந்து கொள்ளக் கூடாதவர்களாயிருக் கிறபடியால் அதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதற்காகவும், உல்லியம் றாபட்டுசன் எக் மான் துரையுடைய கலாசத்துல் குதுப்புக்கு ஜவா

பாகவும் இத்தேசங்களில் வழங்கப்பட்ட தமிழ்ப் பாஷையில் எழுதும்படி முகமதியர்கள் கேட்டுக் கொண்டபடியால் (சுருக்கமாய் எழுதி) 1874-இல் (நாங்கள் இருவரும்) 7 அதிகாரங்களில் எழுதி ஹிந்துஸ்தானியில் ரத்தேதஸ்லீஸ் என்றும் தமிழில் திரியேகத்துவ நிவாரணம் என்றும்பெயரிட்டோம். பொறாமையும் ஆங்கார முதலான துர்குணங்களையும் நிவர்த்தி செய்து நீதியுள்ள பார்வையினால் படித்துப் பார்க்கிறவர்களுக்கு அவைகள் ஞாயமானவைகளென்று வெளியாகும்.

இயேசு எங்கும் வியாபகரல்ல-இயேசு குமாரன் என்பது பொய்-விக்கிரக ஆராதனை பாவம்-உபதேசிகளை இயேசு நிந்தித்தது—முதலியனவற்றை விளக்கி, பெரும் பகுதியில்'நபியவர்கள்' தன்மையைக் காட்டுவது. (மொத்தம் 236 பக்கம்)

2. முகியீத்தினாண்டவர்கள் மெளலிதில் ஓர் பைத்தும் றசூல் நாயகம் பேரில் கசீதாவும் அடங்கியிருக்கின்றன. (பாட்டு)

முன்னுரை: அச்சிட்ட வரலாறு.

எல்லா வுலகங்களையு முயிர்களையும் படைத் திரட்சித் தரசாட்சி செய்யும் வல்ல காரணனை அல்லாகுத் ஆலாவுடைய திருத்தூதர்களான இலட்சத் தருபத்து நான்காயிர நபிகளென்றுந் தீர்க்கதரிசியருட் சிறந்த தலைமையரான முந்நூற் பதின்மூன்று முறுசல்க ளென்றும் தீர்க்கதரிசியர் கட்கு நாயக சமேதராகவும்-சகல படைப்பினங் கட்கு முற்பட்டவராவும்-மோட்ச காருண்யராகவும்-தீட்சானுகூல சுவந்தரீகராகவும்-மாட்சிமை தங்கிய ஆட்சிகொண்டு, காட்சிதரவந்த காரண கடவுள், ஹபீ புறப்பில் ஆலமீன், செய்துல்க கெளனைன், செய்யிதுல், முனுசலீன், தாஜுல்ல

பியா, முகம்மது, முஸ்தபா, றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்-இயற்கையுஞ் செயற்கையுமாகிய காரண சரிதங்க ளனேகங் கணக்கிடக்கூடாதவைகள் அறபுப் பாஷையிலுண்டா யிருக்கின்றன.

—அவற்றின் மொழிபெயர்ப்பு இது.

3. மகமதிய லா சுருக்கம்

இஃது சதர் கோர்ட்டு பிளிடராகிய வ. சடகோபாசாரியரால் இங்கிலீஷில் செய்யப்பட்டு மேற்படி கோர்ட்டு பிளிடராகிய பி. எல். வ. இராசகோபாலாசாரியரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நான்காம் பதிப்பு 1869

புஷ்பரதச் செட்டியாரவர்களது கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது...

இதை தேச பாஷையிலும் செய்தல் வெகு பிரயோஜனமாயிருக்குமென்று யோசித்து நான் அந்த கிரந்தத்தைத் தமிழில் செய்தேன். இதில் தாயா விஷயம் வெகு கடினமானதாகையால், அதை இதில் சொல்லியதைக் காட்டிலும் தெளிவாய்ச் சொல்லுவது அசாத்தியமென்பது இதைப் படித்துத் தேர்ந்தவருக்கு நன்றாய்த் தெரியும்...

தாயம்—தான விஷயம். விக்கிரயாதி வியவ காரங்கள் - லெளாகீக சம்பந்தங்கள்.

4. நசீஹத்துல் இசுலாம் ஹனபிய்யா (தொழுகை முதலியன பற்றி)

காயற்பட்டணம். கண்ணகுவது மருதுாமுகம் மதுப் புலவர் கிசுறத்த (ஹிஜிரா திவாசலிங்) கி. பி. 1880)

முகவுரை: எல்லா வுவகங்களையு முயிர்களையும் படைத் திரணங்கொடுத் தரசாட்சி செய்யுஞ் சருவ வல்லமையுள்ள கடவுளான அல்லாவுக்கும் அல்லாவுடைய றதுலுக்கும், வேதத்திற்கும் முடிபு நாளைக்கும், ஈமான் கொண்டிசுலாத்தினெறிமுறை நடாத்து மூமீன் முசீலிமான, அஷறாபுள்ள எமதன்புற்ற வுடன்பிறப்பாளர்கள் யாவருக்குந் தெரிவிப்ப தியாதெனில்...

5. முகமது மார்க்க மகுத்துவ சிங்காரம்:

ஓ! சிநேகிதர்களே லாபத்துடன் முதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் இந்த சாறா அம்மாளுக்கு அடைபட்டிருந்த கற்பந் துறக்கப்பட்டு ஈசாக்கு நபி பிறந்தார். அதேதெனில் ஹாஜிறா அம்மாளுடைய பாத விசேஷத்தினால் பிறந்ததாய் விளங்குகிறது.

கிபாயத்துல் இசுலாம். ஹிஜறத்து திவாசலிங் ௲௳௱௪௰௩ (கி. பி. 1880)

ஈமாநுண்மை—இசுலா நன்மை என்னும் ஹக் சீகத்துல் இஸ்லாம்.

6. சதுஞானிகள் சரித்திரம்: 1877 பிப்ரவரி-அப் துர் காதர் சாயபு இயற்றியது.

கதையின் துவக்க வரலாறு:

அல்லாசுபகானுத்த ஆலாவினுடைய கிருபையிலுைம் முகமதுநபி சல்லல்லாகு அலைகிலே வசல்ல மவர்களின் பருக்கத்தினாலையும் இந்த சாதுர்விஷ் என்னும் இஸ்லாவைச் சொல்ல ஆரம்பிக்கிறேன். இதை அறிவுந் தெளிவுமுள்ள ஆசை யுடையோர்கள் இன்புற்று விருப்பத்தோடு காதுக் குளிரவுங் கல்பு மகிழவுங் கேட்டிடுங்கள்.

7. சையித்துன் கிஸ்ஸா 1882 (பாடல் நூல்)

அல்கமதுலில்லாஹிறப்பில் ஆலமீன் வானம் பூமி அரசகுரு சுவர்க்கம் நரக மலைகடல் மா முதலிய பறவைகளும் நாற்காலிகளும் மலக்குகள் மனிதர்கள் ஜீன்கள் படையுண்ட படைப்புக்கள் யாவற்றும் புகழும் புகழ்ச்சிகளெல்லாம் அல்லா குத்த ஆலாஒருவனுக்கே லாயக்காயிருக்கின்றன.

8. ஜவாஹிருல் அதிஸ்—அப்துல் காதிர் சாயபு

1875 ஜனவரி 2-ஆம் பதிப்பு.

முதலாவது பாபு

தொழுகையைத் தொழ சோம்பேறியாயிருப்பதும் தொழுகையைத் தொழாமல் விட்டுவிடுவதின் அசாபின் பயானும் இன்னம் ஒலுவுச் செய்வதும் தொழுகையை விடாமல் தொழுவதின் சபா பின் பசீலத்தின் பேரில் - அல்லா குத்த ஆலா குற்றானில் திருவுளமாயிருக்கின்றன்.}}

இவைகளேயன்றிக் காதிரசன மரைக்காயர் எழுதிய *கிருத்து மததீபிகை', முகமதுலெப்பை மரைக்காயர் எழுதிய ‘தத்துவ பரகண்டனம்’, ‘சிதடர் பரமறுப்பு’, செய்யிது அப்துல் வகாப் எழுதிய ‘தர்க்குல் ஜன்னா' முதலிய உரை நடை நூல்களும் உரைகளும் வந்துள்ளன. எனவே இசலாமும் சென்ற நூற்றாண்டில் தமிழ் உரையால் தான் வளர்ந்து, தமிழ் உரைநடையையும் வளர்த்தது என்பது கண் கூடு.

கிறித்துவம்

சமயத்துறையில் கிறித்துவ சமயம் பற்றிய ஆய்வுடன் இப்பகுதியை முடித்துக் கொள்ளலாம். கிறித்துவ சமய நூல்களே சென்ற நூற்றாண்டில் அதிகமாக வெளிாயயின தம் சமயம் பரப்புதற்கெனப் பல்வேறு வகைப் பட்ட நூல்களைப் பல அறிஞர்கள் எழுதி வெளியிட்டனர். யாழ்ப்பாணம், நாகைப்பட்டினம், புதுவை, தரங்கம்பாடி, வேப்பேரி முதலிய பல இடங்களில் தம் சமய நெறிச்கெனவே பல அச்சகங்களை நிறுவி, அவற்றின் வழி எண்ணற்ற நூல்களை வெளியிட்டனர் கிறித்தவ சமயத்தவர். தமிழ் நாட்டில் பெரும்பான்மையாகப் பரவியுள்ள கத்தோலிகர், புரோட்டஸ்டண்டு சமயத்தினர் ஆகிய இருவருமே இத்துறையில் பெரிதும் கருத்திருத்தித் தத்தம் கொள்கைகள் வளரப் பாடுபட்டனர். ஜான் மர்டாக் வெளியீட்டின்படி புரோட்டஸ்டாண்டு பிரிவினரே அதிக நூல்கள் வெளியிட்டுள்ளனர். சில நூல்களில் ஒருவர் கருத்தை மற்றவர் தூற்றியும் உள்ளனர். கொள்கை யடிப்படையில் சமயநெறி பற்றிய ஆய்வு எத்தகையது ஆயினும், அவர் தம் முயற்சியால் தமிழ் உரைநடையில் பல வகையான நூல்கள் வெளிவந்தன எனக் காண்பதே நமது நோக்கமாகும். புதிதாகத் தம் சமய நெறியைப் பரப்ப விரும்பிய கிறித்தவ மக்கள் ஒல்லும் வகையான் செல்லும் வாயெல்லாம் தம் சமய உண்மைகளை விளக்கம் பெறச் செய்தனர். திருக்கோயில்களில் ‘ஐயர்’ ‘குரு’ என்பார் ஆற்ற வேண்டிய நியதி தொடங்கிச் சாதாரண மனிதன் பின்பற்ற வேண்டிய அன்றாட வழிபாட்டு முறை வரையில் உள்ள பல்வேறு நிலைகளுக்கெனப் பலப்பல நூல்கள் இயற்றினர். இந்தியக் கிறித்தவரும் மேலை நாட்டிலிருந்து வந்தவருமாகப் பலர் தமிழ் உரைநடையில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதி வெளியிட்டனர். எளிய கல்லா மக்களையும் தம் பக்கம் ஈர்க்க நினைத்தமையால் அவருள் பலர் மிக எளிய நடையில் - சிலர் கொச்சை நடையில்கூட-தம் நூல்களை எழுதினர், ஒரு சில நூல்கள் வேற்று மொழிகளிலிருந்தும் நம் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. அவற்றுள் மிகச் சிலவே இன்று நம்மிடையுள்ளன. எனினும் கிறித்துச் சபையின் நூல் நிலையங்கள் பல இவற்றைப் போற்றிக் காக்கின்றன.

ஞானப் பொக்கிஷம் என்னும் ஒரு நூல் 1878 இல் வெளியாயிற்று, துறவிகளுக்குரிய சிறந்க நெறியை அது கற்பிக்கிறது. அதில் காலையில் எழுந்திருக்கும்போது அவர் தம் உள்ளம் அமைய வேண்டிய வகை விளக்கப்பெற்றுள்ளது. விடியற்காலையில் கோயிலின் மணி ஒலி எழுமல்லவா? அதைத் தொடர்ந்து அவர்தம் செயலும் தொடங்குகிறது,

மணிச் சத்தம் கேட்டவுடனே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதர் உங்களைக் கூப்பிடுகிறார் என்று நினைத்து, தாமதியாமற் படுக்கையின்மேல் உட்கார்ந்து சிலுவை அடையாளத்தை வரைந்து அவனவன் தனது வஸ்திரத்தைப் பரிசுத்த கன்னியா ஸ்திரியின் கையிலே நின்று பெற் றுக்கொள்கிறது போல் உடுத்திக் கொள்ளுகிறது. இதற்குள்ளாகத் தியானிக்க வேண்டியதுகளின் பேரிற்குரிய சில நினைவுகனே நினைத்துக் கொள்ளுகிறது.

இதன் பின் தியான விடத்தில் முழங்காலிலிருந்து சிலுவை அடையாளத்தை வரைந்து நெற்றி தரைமட்டும் வணக்கத்துடன் குனிந்து, பரிசுத்த திருத்துவத்துக்கு ஆராதனையாகச் சொல்லுகிற தாவது–பிறகு செபம்.

இவ்வாறு அவர்தம் உரைநடை செல்லுகிறது. நேற்றைய பேச்சில் கண்ட எளிய (கொச்சை) வகையில் இந்த நடை அமைகின்றது. இந்த நடையிலேயே பல நூல்கள் உள்ளன. எனினும் இவை சமய அடிப்படையில் அமைகின்ற காரணத்தால் ஈண்டு எடுத்துக்காட்ட நினைத்தேன். அவர்கள் செபம் செய்யும் வகைக்கு ஒரு மேற்கோள் காணல் ஏற்புடைத்தாகும்.

பரமண்டலங்களிலே யிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக, உம்முடைய ராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுகிறது போலப் பூமியிலேயுஞ் செய்யபபடுவதாக அன்றன்றுள்ள எங்களப்பம் எங்களுக்கு இன்று தாரும். எங்கள் கடன்காரர்களுக்கு நாங்கள் பொறுக்குமாறு போல எங்கள் கடன்களை

யெங்களுக்குப் பொறும். எங்களைச் சோதனையிலே பிரவேசிப்பியாதேயும். திண்னையிலே நின்று எங்களை யிரட்சித்துக் கொள்ளும்—அமேன் சேசு.

இது ஞானோபதேசச் சுருக்கம் என்னும் நூலிலிருந்து எடுக்கப் பெற்றது. இந்நூல் பற்றிய குறிப்பு வருமாறு:— "இஃது பூர்வ முதல் வேதவிற்பன்னர்களால் தமிழில் மொழி பெயர்த்த வண்ணம் வழங்குகின்ற அநேகம் பிரதிகளுக்கிணங்கச் சரவை பார்த்துச் சுத்தப் பிரதியாக வேப்பேரியின் (தூய)அர்ச்சிய சிஷ்டபேலேந்திரர் பேரால் பிரதிட்டையா யிருக்கிற தேவாலயத்தில் எழுந்தருளியிருந்த அர்ச் ஜந்துசாயப் பிராஞ்சிஸ்டு சபைக் குருவாக ‘மிக்கயேல்' (மைக்கேல்) என்னும் மாதவ முனிவரால் செய்து இரக்ஷணிய௲௮௱௭௰௨ (1872) புதுவை சென்ம விராக்கினி மாதா கோயிலைச் சேர்ந்த அச்சுக்கூடத்தில் ௩வது பதிப்பிக்கப்பட்டது'—இந்தக் குறிப்பினால் பலர் விவிலிய நூலை 1872க்கு முன் தமிழில் மொழி பெயர்த்தார்களெனக் காண்கின்றாேம். இந்த ஆண்டில் இந்நூலும் மூன்றாவது பதிப்பாக வந்துள்ளமையின், இதற்குமுன் இரண்டு பதிப்புக்கள் வெளிவந்து செலவாகிவிட்டன எனவும் காணப் பெறுகின்றது. இது 'சுத்தப் பிரதியா’ வெளியிடப் பெற்றது எனக் காணுகின்றமையின் இதற்கு முன்னிருந்தவை இன்னும் பலவகையில் பிழைபட்டும் குறைபட்டும் இருந்தன எனவும் எண்ண வேண்டியுள்ளது.

சென்ற நூற்றாண்டில் ஒரு பக்கம் நல்ல உரைநடையைக் காணுகின்ற நமக்கு இவர்தம் நூல்கள் ஏன் உயர்ந்த உரைநடையில் இலலை என எண்ணத் தோன்றுகின்றது. மேலை நாட்டிலிருந்து வந்த அறிஞர்கள் தாமே வருந்தி இந்நாட்டு மொழியாகிய தமிழைக் கற்று, தாம் புலமை எய்தியவராக எண்ணினமையின் இவற்றைத் தாமே மொழிபெயர்க்க நினைத்து இடர்பட்டிருக்கலாம். அன்றித் தமிழில் சிறந்த அறிவும் எழுத்தாற்றலும் பெற்ற அறிஞர்கள் சைவம் வைணவம் முதலிய இந்நாட்டுத் தொன்மைச் சமயங்களைச் சார்ந்திருந்தமையின் அவர்கள் உதவி கேட்டாற் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயத்தால் அவர்களைச் சாராதிருந்திருக்கலாம். எனினும் சிறந்த சைவத் தூணாகிய ஆறுமுக நாவலர் முதலியோர் விவிலிய நூலினை மொழி பெயர்த்தார் எனக் காண்கிறோமே. எனவே, கல்லா மக்களோடு பழக நினைத்த மேலை நாட்டு அறிஞர்களும், தமிழ் நாட்டில் அச்சமயம் தழுவிய முன்னோடிகளும், அக்கல்லா மக்களுக்கு எளிதில் உணர்த்தவே இந்த வகை உரைநடையினைக் கையாண்டார்களோ என நினைக்க வேண்டியுள்ளது. எப்படியாயினும் ஒரு சில நூல்களைத் தவிர்த்து, பெரும்பாலாகச் சென்ற நூற்றாண்டில் வந்த இச் சமய நூல்களின் உரைநடை மிக எளிமையாகவும் கொச்சையாகவுமே உள்ளது. சில மேலை நாட்டு அறிஞர்கள் நல்ல நடையில் எழுதி யிருப்பினும் தேம்பாவணி முதலிய இலக்கியங்களும் 'போப் ஐயர் இலக்கணம் முதலிய இலக்கணங்களும் எழுதப்பெற்றிருந்த போதிலும் பல உரைநடை நூல்கள் எளிமையாக உள்ளமை கண்கூடு. இந்த நூற்றாண்டில் இந்த நிலை மாறிக்கொண்டி வருவதையும் காண்கின்றாேம்,

நன் மரண ஆயத்தம் என்ற நூலைப் பற்றி ‘இப்புத்தகத்தை அவஸ்தைப்பட்ட சேசு கிறிஸ்து நாதருடைய திரு இதயத்துக்கும் வியாகுல வாளாலூடுருவப்பட்ட தேவ மாதாவினுடைய மாசிலாத் திரு இதயத்துக்கும் பாத காணிககையாக ஒப்புக் கொடுக்கிற செபம்’ என்று விளக்கம் தரப் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, இந்நூல் 1860இல் எழுதப்பெற்றுள்ளது. இதில் ஒரு தொடர் காண்போம்.

இதனைச் சுவீகசரிக்கு மன்புள்ள சகோதரரே! உங்க ளாத்துமங் கரையேற்றுவதற்காக இச்சிறு புத்தகத்தை வருந்திச் செய்த நமக்கு நல்மரணங்

கட்டளையிட்டுத் தமது திவ்ய தரிசனை யளிக்கும் பொருட்டுச் சர்வ கிருபையுடைத்தான சர்வேசுரனை யனுதினம் பிரார்த்தித்துக் கொள்வீராக.

என்பது ஒரு குறிப்பு.

இத்தகைய நூல்களில்,வடமொழி ஆதிக்கம் இட்ம்பெறவும் ஒரு காரணம் இருக்கலாம். இந்நாட்டில் உள்ள சமய நூல்களில், பிற இலக்கியங்களில் இல்லா வகையில் அதிகமாக வடமொழிச் சொற்களும் தொடர்களும் எடுத்தாண்டிருப்பதைக் கண்ட இச்சமயத்தவரும் தம் சமய இலக்கியங்களும் இந்த வகையில் அமைந்தால்தான் சிறப்புறும் என எண்ணி இருக்கலாமன்றோ! தம் புறத்தோற்றத்தைமாற்றித் தமிழ் நாட்டுக் கோயில்களில் பணியாற்றும் 'ஐயர்’ போன்றே தோற்றமளித்து, ‘ஐயர்’ என்ற பெயரையும் துட்டிக்கொண்டார்கள் எனக் காணும்போது, அந்த அடிப்படையிலேயே அதிக வடமொழிச் சொற்களை எடுத்தாண்டார்கள் என்றுசொல்வதில் தவறில்லைஎன எண்ணுகிறேன். எளியவர்கள் புரிந்துகொள்வதற்கென இலக்கண வழுவும் தெரிந்தே மேற்கொண்டுள்ளார்கள் என்பதை ஒரு நூலின் பாயிரத்திலேயே அதைப் ‘பிரசுரப் படுத்தியவர்' குறிக்கின்றார்.

இப் புத்தகத்தை யாவரு மெளிதில் வாசித்துணர வேண்டி, இலக்கண விதிப்படி எழுத்துக்களும் சொற்களு மிகுந்த புணர்ச்சி விகாரங்களின்றிச் செந்தமிழுடன் கொடுந்தமிழ் மொழிகளுஞ் சில வாக்கியங்களிலொருமையிற் பன்மையும் பன்மையிலொருமையும் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.

எனத் தம் நூலாகிய சிலுவைப் பாதையின் ஞான முயற்சி பற்றித் தம் நடைக்குத் தாமே விளக்கம் தருகிறார் ஞானப் பிரகாச சுவாமிகளென்னு மாசிரியர். இந் நூல் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் செய்யப்பட்டு 1849தில் அச்சிடப் பெற்றுள்ளது. இதிலுள்ள “செபம்“ வடமொழிச் சேர்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

சர்வ வல்லவரு நித்தியருமாகிய சர்வேஸ்வரா! என் பாவங்களா லெனக் குண்டான வசுத்தத் தனமும் வருகிறதாயிருக்கிற நித்திய ஆக்கினையும் பச்சாதாபத்தால் நிவாரணமாயிற் றென்று நம்புகிறேன் சுவாமி. (பக்.363)

இது நூலின் நடை. மேலே பாயிரத்தில் கண்ட குறிப்பு நூல் வெளியிடுங் காலத்தில் எழுதிய ஒன்றாகும். எனவே சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழில் கிறிஸ்தவ சமயம் பற்றி எழுந்த நூல்கள் பல வடமொழிச் சொற்களை அதிகம் எடுத்தாண்டமைக்கும் இலக்கண எல்லையை இகந்த மைக்கும் மிகக் கொச்சை மொழியிலே எழுதியமைக்கும் உரிய காரணத்தை இப்பாயிரத்தால் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். -

கிறிஸ்தவ சமயம் பற்றி இவ்வாறு எழுதப்பெற்ற நூல்கள் எண்ணற்றவை. இலண்டன் நகரக் காட்சிச் சாலை நூல்நிலையப் பட்டியலிலும், சென்னை அரசாங்கப் புத்தக விவர வெளியீட்டிலும் இத்துறையில் பல நூல்கள் வெளி வந்துள்ளமையைக் காணமுடிகின்றது. அவற்றையெல்லாம் ஈண்டு விளக்கிக்கொண்டிருத்தல் தேவையில்லை.

கிறித்து நெறியின் வேறுபாட்டுக் கொள்கைகள் பற்றி முன்னரே கண்டோம். அக் கொள்கையுடையார் ஒருவர் மற்றவறைப் பழிக்கும் வகையில் சில நூல்கள் சென்ற நூற்றாண்டில் வெளிவந்துள்ளன, அவற்றுள் ஒன்று இராஜரிஷி ஞானப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பெற்ற, வேதப் புரட்டலை நீக்கும் சஞ்சீவியாகிய மெய்ஞ்ஞான திருச்சபையின் விளக்கம் என்பதாகும். இந்நூல் 1841 இல் வெளியானது. அதுபற்றி அவரே,

உரோமன் கத்தோலிக்குத் திருச்சபை யென்பது பரம கர்த்தராகிய இயேசுகிருஸ்துநாதர் ஸ்தாபித்த சத்தியத்தின் துணாகவும் ஸ்திவாரமாகவுமிருக்கின்ற தென்றும் புரோடெஸ்டாண்டு மதங்கள்

மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அபத்த மார்க்கங்களாயிருக்கின்றன வென்றுங் காண்பிக்கப்படுகின்ற திஷடாந்தங்தள்,

எனக் குறிக்கின்றர். மேலும் அவர்.

புரொடெஸ்டாண்டு மார்க்கங்களை மறுககிறதற்கு இந்தப் பிரபந்தம் செய்யப்பட்டமையால் இதிலுள்ள பொருள்களு மத்தாட்சிகளும் அந்த மதஸ்தர்களுக்கு முதலாய் மெத்ததெளிவாய் இருக்கத்தக்கதாக அவர்களுக்குள்ளே வழங்குகின்ற வேதாகமங்களின் பெயர்களும் அப்போஸ்தலருடைய நாமங்களும் இதிலே பிரயோகிக்கப் பட்டன. ஆகிலும் தெளிவுக்காக மாத்திரம் நானப்படிச் செய்ததேயொழிய புரொடஸ்டாண்டார் செய்த மொழி பெயர்ப்புகளை அங்கீகரிக்கிற துக்கல்ல.

என விளக்கம் தருகின்றார். இவ்வாறு நூல் முழுதும் பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந் நூல் அளவில் பெரியதாய் 466 பக்கங்கள் கொண்டுள்ளது. இதில் மாற்றாரை மறுக்கும் நிலையிலும் குறை கூறும் வகையிலும் உள்ள நிலை உயர்ந்த தன்று. இவ்வாறு ஒரே இயேசு சமயத்தே மாறுபாட்டுக் கொள்கையுடையார் தம்மைப் பழித்துக் கொள்ளும் நிலை எப்படி உண்டாயிற்றென்பது விளங்கவில்லை. மேற்கு ஆசியா நாடுகளின் தொன்மை வரலாறு விடை தரலாம்.

இக்காலத்தில் 'விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்' என்ற இரு சொற்களும் அதிகமாக நாட்டில்பேதப்பெறுகின்றன. விஞ்ஞான்ம் இருந்தால் மெஞ்ஞானமாகிய தெய்வநெறிவேன்டா மென்பாரும், விஞ்ஞானமே மெஞ்ஞானத்தின் அடிப்படை என்பாரும் உளர். பரந்த அண்டகோள ஆய்வினைச் செய்து அந்த எல்லையில் நம் வாழ்வின் சிறுமையையும் எளிமையினையும் விளக்கி, அதன்வழி எல்லையற்ற இறையுணர்வை ஊட்டுவன சமய நெறிகள். இந்த அடிப்படையில் கிறித்தவ சமயத்தில் எழுதப்பெற்ற ஒருநூலே 'அண்டபிண்ட வியாக்கியானம்' என்பது. இது, 1874இல் சென்னை இந்தியன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந் நூல் பத்தொன்பதாம் நூற்றண்டுக்கு முன்பே உரோம நாட்டிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பெற்றுத் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்ற தெனினும், இதன் முன்னுரை வெளியான காலத்தில் எழுதப்பெற்றதே (1874). எனவே அந்த முன்னுரையில் ஒரு பகுதியைக் காணலாம்.

இந்நூலில் பஞ்ச பூத அமைப்புத் தொடங்கி, நிலம், கடல், பிற உயிரினங்கள் அனைத்தையம் விளக்கிக்காட்டி-அவற்றின் மாற்ற அமைப்புக்கள் அவற்றால் உண்டாகும் மாறுபாடுகள் அனைத்தை யும் காட்டிக்கடைசியில் இத்துணைப் பெரு அண்ட அமைப்பு:ஐம்பூத அமைப்பு, உயிரமைப்பு இவற். றின் மாற்றங்கள் ஆகியவற்றின் மூலமாய்க் கட வுள் உணர்வைக்காட்டி விளக்குதலே.

மேலும்,

அண்டமென் கிற பெரிய லோகமும் பிண்டமென்கிற சின்ன லோகமும் பரஞ்சோதியாகிய பராபர வஸ்துவினுடைய வொப்பல்லாத ஞானத்தையும் கரைகாணாத கிருபாகடாஷத்தையும் மனோ வாக்குக்கெட்டாத மேலான வல்லமையையும் அளவறுக்கப்படாத விமரிசையையும் கணக்கற்ற உபகார நன்மைகளையும் திவ்ய கீர்த்திப் பிரதாப சோபனங்களையும் சாங்கோபாங்கமான பிரகாரமாகப் பிரத்தியக்ஷமாய்க் காண்பிக்கிறதனாலே யாவரும் பராபர வஸ்துவை அறியும்படிக்கிச் சம்பூர்ண தாற்பரியமாயிருக்கிற நாம் கடவுளுக்குத் தோத்திரமாக அண்ட பிண்ட வியாக்கியானம் பண்ணத்தக்கதாக வபேக்ஷையா யிருக்கிருேம்.

என்பது நூலாசிரியர் குறிப்பாக அமைகின்றது.

இவ்வாறு பலவகைகளில் சமய உண்மைகளை விளக்குவதோடு விவிைடை வகையிலும் தம் சமய உண்மைகளைப் பலர் விளக்கியுள்ளனர். எளிய நடையில் தம் சமயம் பற்றிய கேள்விகளை எழுப்பி, அவைகளுக்குத் தாமே விடை யிறுக்கு முகத்தான் தம் சமய நெறியைப் பாமரமக்களுக்குப் பரப்பிய சமயத் தலைவர்கள் பலர். அவர்தம் நூல்களும் பல. அவற்றுள் இரண்டனை மட்டும் இங்கே காணலாம். ஒன்று தமிழுக்கே ‘ஒப்பிலக்கணத்தால்’ அரணமைத்த கால்டுவெல் ஐயர் எழுதியது (1887). மற்றென்று ஞானப்பிரகாசர் எழுதியது (1884).

சுருக்கமான வினா விடைகள் -கால்டுவெல்

(பாளையம் கோட்டை) 1887.

வினா:பரிசுத்த ஆவியானவர் என்னசெய்கிறார்?

விடை: தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய இருதயத்தைப் பரிசுத்தம் செய்கிறார்.

வினா; ஏன் அவர் அதைப் பரிசுத்தம் செய்ய வேண்டும்?

விடை: அது அசுத்தமாயிருப்பதானாலே அதைப் பரிசுத்தம் செய்ய வேண்டும்.

வினா: எவைகளில் அவை அசுத்தமாயிருக்கிறது?

விடை: பாவ இச்சைகள், பாவ யோசனைகள், பாவ குண நடவடிக்கை இவைகளினால் அசுத்தமாயிருக்கிறது.

நற்கருணை மாலைசிறு வினாவிடை (பாளையங்கோட்டை) ஒய். ஞானப்ரகாசர் 1884

40வது வினா-இராப் போசனம் பந்தியில் சேர்வதால் பிரயோசனம் என்ன?

விடை: இந்தப் பந்தியிற் சேர்ந்து இதன் மூலமாய்க்கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து

அதை தியானிப்பதினால் நமக்குள்ளிருக்கும் பாவத்தின் பெலன் குறைகிறது. உலகத்தைப் பற்றிய வெறுப்புண்டாகிறது. துர் ஆசைகள் இன்பங்கள் அழிகிறது. பரலோக வாஞ்சை மேலிடுகிறது.

உரைநடை நூல்களே யன்றிச் சிறந்த செய்யுள் நூல்களும் சென்ற நூற்றாண்டில் வெளி வந்தன. கிருஷ்ணப் பிள்ளை அவர்கள் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் அவற்றுள் சிறந்ததாகப் போற்றப்படுவதாகும். வீரமா முனிவரால் எழுதப்பெற்றுச் சென்ற நூற்றாண்டில் (1849இல்) வெளியான தேம்பாவணியும் சிறந்த இலக்கியமாகும். இரண்டும் பாடல்களேயாயினும் அவற்றின் விளக்கங்கள், முன்னுரை ஆகியன உரைநடையில் தாமே உள்ளன. தேம்பாவணிக்கு வெளியீட்டாளர்களே (பிரசித்தப்படுத்தியவர்) முன்னுரை எழுதியுள்ளனர். எனவே இந்நூல்களின் முன்னுரைகளும் ஈண்டு எண்ணத் தக்கனவே.

இரட்சணிய யாத்ரிகம்: முன்னுரை: எய்ச். ஏ. திருஷ்ணப்பிள்ளை, முதற் பதிப்பு: 1—5—1894,

திருவருட் பலத்தால் என் உத்தியோக விஷயத்திற் செலவிட்ட நேரம்போக மீந்த நேரங்களிலும் விசேஷமாய் வியாதிக்கப்பட்டிருந்த இராக் காலங்களிலும் உழைத்து இந்த நூலைச் செய்து முடிக்க அருகனானேன். ஆரம்பந்தொடங்கி உத்தேசம் ஆயிரஞ் செய்யுள் முடியுமட்டாக (பின்னே யெனக்கு ஜீவன் கிடைத்த போதிலும்) இந்த நூலைப் பூரணமாய்ப் பாடி முடிப்பேனென்ற நம்பிக்கை கிஞ்சித்து மில்லாதிருந்தது. ஆனபோதிலும், அப்போதப்போது பாடி முடிந்தவற்றில் பாளையங்கோட்டையில் மாஸந்தோறும் பிரசுமாகிற 'நற்போதகம்' என்னும் பத்திரிகையில், கொஞ்சம் கொஞ்சம் அச்சிடு வித்து வந்ததினால், அம்மட்டில் வித்வான்களான சில சிநேகிதர் வாசித்துப் பார்த்துத் தமிழ் நாட்டில் இது பிரயோஜனப்படக்கூடியது. 'இளக்கரியாது

பாடி முடிக்க வேண்டும்’ என்று பலவாறாய் வற்புறுத்திச் சொல்லிவந்ததினுலும் எனக்குள் ஆதி தொடுத்துள்ள பிரிதி வரவரக்கதித்து வந்ததினாலும் காலம் குறுகாது நீடித்ததனாலும், சும்மா வீண் காலம் போக்குவதில் இஷ்டமில்லாதிருந்ததிலுைம் இது வைதீக காலக்ஷேபமாக வாய்த்ததினாலும், மனசில் ஊக்கமுண்டாகித் தொடர்ச்சியாய்விடாப்பிடியாய் முழுபலத்தோடு முயற்சித்து வந்தேனெனினும் ஆண்டாண்டு நேர்ந்த பல விக்கினங்கள் இடையூறுகளால் தடுக்க லுற்று இடைக்கிடை சிறிது காலம் ஒரு செய்யுளாவது எழுதவும் வாய்க்காமல் கழிந்து போனதுமுண்டு. ஆயினும், தேவானுக்கிரகம் முற்றுப்பெறச் செய்தது. கடவுளுக்கே ஸ்தோத்திரம், தேம்பாவணி; இக்காப்பியத்தைப் பிரசித்தப் படுத்தியவரால் எழுதப் பெற்ற முகவுரை:

முதல் வெளியீடு 1849.
(மூன்றாம் பதிப்பு 21—11—1928.)
தேனினுமினிய வித் தேம்பாவணியைக் குறித்து நெடுங்காலங் கற்றாேர் முதன் மற்றநேகரிடத்துப் பற்றிய வாசை யிப்போது தேவனருள நுக்கிரகத்தா னிறைவேற வதினிமித்த மத்தியந்த களிகூறுகின்றாேம். அதேதெனி லிம்மூன்றாம் காண்டத்தோ டஃது முற்று மச்சிற் பதிப்பித்தி யாவர்க்கு மின்ப நன்மையாம்படிவெளிப்படுகின்றது. ஆதலான் முகிலிடத்து மறைந்த செழுஞ்சுட ருல கிருட்போக்கி விளக்கினு மதினின் றுதித்துத் தன்னொளி முகங் காட்டுளி யெத்திக்கினுந் தெண்கதிர் வீசி மிகப் பிரகாசிப்பது போல நூற்றிருபது வருடமளவுங் கையெழுத்துப் பிரதிகளை யித்தேசத் தெத்திசையினும் பரப்பி யவற்றின் மறை முகிலின்

மறைந்த விவ்வுத்தம காப்பியமெங்கணு மிகுகீர்த்திப் பேர்பெற்றுச் சுகிர்தவொளி பரப்பி விளங்கியிருப்ப வீரமா முனிவரது கையெழுத்துப் பிரதிக் கொப்ப வச்சடித்த பிரதியாய் வெளியிட்ட பின் பதிக, தெளிந்த பிரகாசக் கதிர் வீசி மேன்மேலும் பிரபலியமாமென்று நம்பிக் கொள்ளுகிறோம்.

இவ்வாறு பல வகைகளில் கிறித்தவ சமயத்தார் தமிழ் உரைநடையில் பல்வேறுவகை நூல்களை எழுதித் தம் சமயத்தை வளர்த்துக்கொண்டதோடு, தமிழ் உரைநடை வளரவும் பெரிதும் பாடுபட்டனர்.

இலக்கண இலக்கிய உரைகள்

சமயச் சார்பான உரைநடை நூல்களைத் தவிர்த்துப் பொதுவான வகையில் நல்ல உரைநடை நூல்களும் வெளி வந்தன. சில பழம்பெரும் இலக்கியங்களுக்கு உரைகள் பல சென்ற நூற்றாண்டில் வெளிவந்தன. மேலும், இலக்கணம், மொழிபற்றிய நூல்களும் தமிழில், உரை நடையில், எழுதப் பெற்றன. எனவே இவையும் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்தனவாக அமைகின்றன. சிறந்த நாடகமாகிய மனோமணியத்தைப் பாவால் இயற்றிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றாெகை விளக்கத்தை எழுதி வெளியிட்டுள்ளனர் (1888). இந்நூலின் வழி ஆசிரியர் நூல்களை அவர் காலநிலைக் கேற்பப் பிரிக்கும் வகைகளை விளக்குகிறார். அவர் வாக்கின் வழியே காண்போம்.

முகவுரை: தற்கால நிலைமைக் கேற்ப சாஸ்திரங்களை எத்தனை வகுப்பாய் வகுக்கலாமென்பதும் அவற்றின் முக்கிய முறைமையும் விஷயமும் என்ன வென்பதும் ஆம் வகை எடுத்து விளக்குவதே கீழ்வரும் நூற்றாெகை விளக்கப் பொதுவியலின் தலைமையான உத்தேசம். இது திருவிதாங்கோட்டுக் கவர்மென்றாருடைய நூதன பிரசங்க

ஏற்பாட்டின் படி ஓர் உபந்நியாசமாக எழுதப்பட்டு, திருவனந்தபுரம் சர்வகலாசாலையில் வாசிக்கப்பட்டது. வேறு பல வேலைகளிடையில் அவசரமாய் எழுதப்பட்டமையால், சொற்குற்றம், முறை வழு, இவை இப்பொது வியலில் இல்லாதனவாகா! ஆயினும் ஆன்றாேர் அவற்றை ஒழித்து இச்சிறு நூலைப் பொதுவாக அங்கீகரிப்பாராயின், இதில் குறிக்கப்படும் சில தலைமையான சாஸ்திரங்களின் முக்கிய முடிபுகளை இவ்வாறே விளக்கி இந்நூற்றாெகை விளக்கத்தின் ஒவ்வோரியலாக இயற்ற வேண்டுமென்னுங் கருத்துடன் இது வெளியிடப்படுகிறது.

திருவனந்தபுரம்,

பி. சுந்தரம்பிள்ளை.

௧௦௬௩௵ மேடரவி (May 1888)

தொன்னூல் விளக்கம் முகவுரை-இரண்டாம் பதிப்பு 1891 ஆகஸ்டு

செந்தமிழ்க்குரிய ஐத்திலக்கணத்தை சுருக்க மாகவும், தெளிவாகவும் தெரிவிக்கும் சிறந்த நூல் வேறின்மையின் இதனை மானாக்கருக்குப் பிரயோஜனமாக இரண்டாந்தரம் அச்சிற் பதிப்பிக்க வேண்டுமென்று நான் விரும்பி இராயப்பேட்டை உவெஸ்லியன் மிசியோன் காலேஜூ தமிழ்ப் பண்டிதரும் என் நண்பருமாகிய ம-௱-௱-ஸ்ரீநீநிவாச ராகவாச்சாரியார் அவர்களை இதைப் பார்வையிடும்படி, கேட்டுக்கொள்ள அவர் இதைப் பழைய பிரதியுடன் ஒப்பிட்டுப் பரிசோதித்துத் தர, அதை நான் முதற்பதிப்பைப் போலன்றிச் சூத்திரமும் உரையும் நன்கு விளங்குமாறு குத்திரத்தைச் செய்யுள் போலப் பெரிய எழுத்திலும் வசன ரூபமாயிருக்கும் உரையைச் சிறிய எழுத்திலும் பதிப்பித்து, அதிகாரம், இயல். ஒத்து முதலியவற்றிற்குத் தக்கவாறு இங்கிலீஷ் பெயரும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

மேற்கூறிய எனது நண்பர் எனக்குச் செய்த இப்பேருதவிக்கு நான் மிக நன்றியுடையவன யிருக்கிறேன்.

இங்ஙனம்
ஜி. மெக்கன் ஜி. காபன்.

இதன் முதல் பதிப்பு

1838இல் புதுவையில் (களத்தூர் வேதகிரி முதலியாரால் பார்வையிடப் பெற்று) வெளியிடப்பெற்றது.

தமிழ்த்தொண்டு செய்தவருள் யாழ்ப்பாணம் திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும் சிறந்தவராக வைத்துப் போற்றக்கூடியவராவர். சென்ற நூற்றாண்டில் அவர் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவர் சிறந்த சைவர். அவரின் சமயப்பற்றும் மொழிப்பற்றும் அவரது உரை நடையும் "இலக்கண விளக்கம்’ பதிப்பு முன்னுரையால் (1855) நன்கு தெளிவாகும்,

பரசமய நூலை வாசித்தபோது அதிலோதிய பொருளை மெய்யென மயங்கி மகிழ்ந்த அநபாய சோழனை இடித்துரைத்துக் கண்டித்த அருண் மொழித் தேவனைப் போலாகாது சுவாமிகள் ஈண்டுச் சொற்சுவை பொருட்சுவைகளின் மேற் தம்மாணாக்கர் மனஞ் செலுத்தாவிடத்தன்றாே பரிதாபமடைந்தனர்? பின்னர் அபிஷேகத்தார் மரபிலுதித்துச் சுத்த சித்தாந்த சைவ சமயியாய்ச் சைவ சமயாசாரியராய் எழுந்தருளிய இந்நூலாசிரியர் இயற்றிய நூலும் உரையும் சிறப்புடையனவாகவும் பஞ்சலட்சணமும் பொருந்திக் கற்போர்க்கு மிக்க பயன்தருவனவாகவும் இருக்க; அதனை விரோதித்துப் பாற்கடலிலுள்ள மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை இச்சித்தல்போல, இரண்டிலக்கணமாத்திரமுடைத்தாய்ச் சமணாசிரியராற் செய்யப்பட்டுள்ள நன்னூலைச்

சிறப்பிக்க முயன்றது திருவாவடுதுறையாதீனத்தார்க்குத் தகுந்த செய்கையன்றென்பது சைவ சமயாபிமான முடையோர் அனைவராலும் ஒப்புக் கொள்ளற் பாலதேயாம்,

இந்தப் பகுதியால் அவருடைய சைவப்பற்று மிக்குத் தெளிவானதோடு, வேற்றுச் சமயத்தாரிடம் கொண்ட காழ்ப்பும் நன்கு தெரிகிறது. இலக்கணவிளக்கம், நன்னூல் இரண்டையும் உணர்ந்தவர் இவர் கூறுவனவற்றைச் சரியென்று கொள்வார்களோ? காலமே அவர் கூற்றை மறுத்து நன்னூலை வாழவைத்து மற்றதைப் பின்தள் விட்டதே. எனினும் சிறந்த ஆசியராகிய இவர் சமயப் பற்றே பற்றாகக்கொண்டு பிறவற்றைக் காண மறுக்கின்றார். இவர் வேறு பல நூல்களையும் பதிப்பித்தார் எனக் காண்கின்றாேம். இவர் போன்றே சென்ற நூற்றாண்டில் திருத்தணிகை வீரசைவர் விசாகப்பெருமாளையர், மகா வித்வான் மயிலை சண்முகம்பிள்ளை, களத்தூர் வேதகிரி முதலியார் முதலிய அறிஞர்கள் சில நூல்களை வெளியிட்டுள்ளனர். டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் பல நூல்களை வெளியிட்டமை நாடறியும். அவர் சிந்தாமணிக் களித்த முன்னுரையில் ஒரு பகுதியைக் காணலாம்.

சீவக சிந்தாமணி: முதற்பதிப்பின் முகவுரை.

இச் சீவக ப்ந்தாமணியை உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியா ருரையுடன் பல பிரதி ரூபங்களைக்கொண்டு நன்றாகப் பரிசோதித்து எழுதுவோரால் நேர்ந்த வழுக்களை மாற்றி, பலருக்கும் பயன்படும் வண்ணம் அச்சிடுவிக்க முயலும்படி சில வருடத்திற்குமுன், சேலம், ம-௱-௱-ஸ்ரீ இராமசாமி முதலியாரவர்கள் பலமுறை வற்புறுத்திக் கூறி எனக்குத் தம்பாலிருந்த கையெழுத்துப் பிரதியையுங் கொடுத்தார்கள்.

யான் அவ்வாறு செய்தற்கு அநருகனாயினும், உலோகோபகாரிகளாகிய அவர்கள் சொல்லை மறுத்தற் கஞ்சியும். கல்விமான்களுக்குக் கருவூலம்

போலும் இந்நூல் உரையுடனே நின்று நிலவுதல் குறித்தும் ஒருவாறு அவ்வண்ணஞ் செய்யலாமென்று துணிந்து முயன்று வருகையில் இத்தமிழ் நாட்டிலுள்ள கல்வியறி வொழுக்கங்களான் ஆன்ற விவேகிகள் பலர் இம்முயற்சி இனிது பயன்படும் வண்ணம் தம்பாலுள்ள பழைய கையெழுத்துப் பிரதிகளை அன்போடு கொடுத்தார்கள். அவையனைத்தையும் வைக்கொண்டு ஒப்பு நோக்கி வந்தேன். ஒன்றுக்கும் பற்றாத சிறியேனை இம்முயற்சியிற்புகுத்தி நடாத்தி நிறைவேற்றி யருளிய எம்பெருமானது திருவருளையும் குருவருளையும் எக்காலத்துஞ் சிந்தித்து வந்திருக்கிறேன்,

கும்பகோணம்

இங்ஙனம்,

அக்டோபர் 1887

வே. சாமிநாதையன்.


புறப்பொருள் வெண்பாமாலை உ.வே.சா. 1895 முன்னுரை
பறநானூறு " 1894 "
பத்துபாட்டு " 1899 "
சிலப்பதிகாரம் " 1892 "
மணிமேகலை " 1898 "
சூளாமணி சி.வை.தா. 1889 "
வசண சூளாமணி (மாணாக்கருக்கு) " 1898 "
சிலப்பதிகாரம்-
(புகார்க் காண்டம்-வேணிற்காதை முடிய) 1772 "
தி. ஈ. சீனுவாசாச்சாரியார்.

முதலியனவும் எண்ணத்தக்கன.

உ. வே. சா. (ஐங்குறுநூறு முன்னுரை)

கையெழுத்துப் பிரதிகளைத் தேடுதல், எழுதுவித்தல், ஒப்புநோக்குதல் முதலியவைகள் முடிவில் இன்பத்தை விளைப்பவையாயினும் எதுவும் தக்க பொருளுதவியின்றி நடைபெருத

இக்காலத்தில், அவைகளே அப்பொழுது அப்பொழுது பல வகையான துன்பத்தை விளைவிக்கின்றன. ‘அருளி . இல்லாகி யாங்கு' என்பது பொய்யா மொழியன்றாே! ஒரு பழைய நூலைப் பதிப்பித்தற்குரிய உழைப்பிலும் பொருட் செலவிலும் காலச் செலவிலும் அதனை ஆராய்தற் குரிய உழைப்பும் பொருட் செலவும் காலச் செலவும் மிக அதிகம் என்பதைப் பழகியவர்கள் நன்கு அறிவார்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய கண்மணி போன்ற முதல் மாணாக்கரும் பாடஞ் சொல்லுதல், செய்யுள் செய்தல், நூலாராய்தல் முதலியவற்றில் அவர்களைப் போன்றவரும் முன்பு கும்பகோணம் கவர்ன்மென்ட் காலேஜ் தமிழ்ப் பண்டிதராயி இருந்தவரும் வேறு கவலையின்றி நூலாராய்ச்சியையே செய்து கொண்டு காலங்கழிக்கும்படி வற்புறுத்திக் கூறி அவ்வாறே யான் நடத்தற்குக் கரும்பு தின்னக் கூலி கொடுத்தாற் போலத் தம்முடைய அரிய வேலையை அன்புடன் எளிதில் எனக்குக் கிடைக்கச் செய்தவரும், ‘இரந்து புன் மாக்கள் தமை என்றும் துதியா வரந்தரு என் முன்னின்ற வள்ள'லுமாகிய திரிசிரபுாம் வித்துவான் ஸ்ரீ தியாகராச செட்டியார் அவர்களுடைய அன்புடைமை எழுமையும் மறக்கற் பாலதன்று. அவர்கள் செய்த மேற்கூறிய அரிய உதவி இல்லையேல் எனக்கும் பழைய தமிழ் நூலாரய்ச்சிக்கும் இக் காலத்தில் யாதோரியையு மின்றென்பது திண்ணம். ஆதலால், இனியதும் அரியதுமான இந் நூற் பதிப்பை அவர்களிடத்திலுள்ள நன்றி யறிவிற்கு அறிகுறியாக அவர்கள் பெயருக்கு உரியதாக்குகின்றேன்.

ஐங்குறுநூறு-பழைய உரை (1903)

இதுபோன்று சென்ற நூற்றாண்டின் இறுதியில் மகா மகோபாத்தியாய-டாக்டர் - உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் சிந்தாமணி முதலிய சில நல்ல இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவரனைவரும் தத்தம் வெளியீட்டு நூல்களுக்கு முன்னுரை, குறிப்புரை, விளக்கம் முதலிய எழுதிய காரணத்தால் சென்ற நூற்றாண்டின் உரைநடைக்கு ஆக்கம் தந்தவராகின்றனர்.

ஆறுமுக நாவலர் சைவ இலக்கிய நூல்களும் உரைகளும் பாட நூல்களும் மட்டுமன்றி மாணவருக்கு எளிதில் விளங்கத்தக்க இலக்கண நூல்களும் உரைநடையில் எழுதி உதவினர்.

எழுத்தியல் இலக்கண நூலாவது உயர்ந்தோர் வழக்கத்தையும் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்கும் கருவியாகும் நூலாம்.

அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழி யதிகாரம் என மூன்றதிகாரங்களால் வகுக்கப்படும்.

என்று காட்டி, உடனுக்குடன் 'பரிக்ஷை வினாக்கள்’ என்ற பகுதியையும் அமைத்து அதில் அவ்வப் பகுதிகுரிய வினாக்களையும் தந்து கொண்டே செல்கின்றர்.

௧. இலக்கண நூலாவது யாது? ௨. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?

என்பன நாம் மேலே கண்ட பகுதிக்குரிய வினாக்கள். இவ்வாறு இலக்கண இலக்கியங்கள் பற்றி எளிய முறையில் அமைத்து எழுதியுள்ள அறிஞர் இன்னும் சிலர். விசாகப் பெருமாள் ஐயர்தம் நன்னூல் உரையும் இவ்வாறே சிறந்த எளிய நடையில் பொருள்விளக்கம் உடையது; இத்துறையில் இன்னும் பல உள்ளன,

1883இல் இலண்டன் நகரில் அச்சாகிய நூல் ஒன்றில் {A hand book of ordinary dialect of the Tamil Language in three parts) தமிழ்ப்பாடல் பற்றிய விளக்கங்களும் சொல் வளங்களும், பல பழமொழி விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூலுள் உள்ள ஒரு பாடல் விளக்கம் காண்போம். ஒளவையின் பாடலின் விளக்கம் அது.

‘நன்றி ஒருவருக்கு': நல்ல குணத்தை உடையவராகிய ஒருவருக்கு(ச்) செய்த உபகாரமானது கருங்கல்லின் மேல் எழுத(ப்)பட்ட எழுத்து(ப்) போல நெடுங்காலம் விளங்கும்; ஒழிந்த அன்பில்லாத ஒருவருக்கு(ச்) செய்த உபகாரம், நீர்மேல் எழுத(ப்)பட்ட எழுத்து(ப்) போலச் செய்த அப் பொழுதுதானே அழியும். ஆதலால் எந்த(க்) காலத்திலும் நல்லோருக்கே உபகாரம் செய்தல் வேண்டும்.

பல பாடல்களுக்கு விளக்கங்களை இவ்வாறு மேனட்டவரும் நம்மவரும் செய்துள்ளனர். ‘கம்பராமாயண அருங்கவி விளக்கம்’ என்ற பாட்டின் உரைவிளக்க நூல் ஒன்று கவித்தலம் துரைசாமி மூப்பனரால் 1888 இல் எழுதி வெளியிடப் பெற்றுள்ளது. தாமோதரம் பிள்ளை உள்ளிட்ட பலர் இதற்கு முகவுரை தந்துள்ளனர். இந்நூலில் பல பாடல் விளக்கங்களும், தெளிந்த உரை நலமும் காணப் பெறுகின்றன.

‘திராவிட சப்த தத்துவம்’ என்ற மொழியியல் பற்றிய இலக்கண நூல் ஒன்றும் சென்ற நூற்றாண்டில் வெளிவந்துள்ளது (1899). இந்நூல் சென்னப்பட்டணம் சர்வகலா சாலை சமஸ்கிருத புரொபஸர்-மிட்டாதார்-எம்.ஏ.சேஷகிரி சாஸ்திரியாரால் இயற்றப்பெற்றது. முன்னுரை ஆங்கிலத்தில் உள்ளது. ஓரிரு பகுதிகள் காணலாம்.

வினையின் உறுப்புக்கள் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, எதிர்மறையுருபு என ஐந்து. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை இவை உடன்பாட்டு வினையில் வரும். எதிர்மறை வினையில் எதிர்மறையுருபும் வரும்.

தமிழில் சொரூபத்தில் செயப்பாட்டுவினை கிடையாது. பொருளால் அடியுண்டான், அடிக்கப் பட்டான் என்பனவற்றைப் போல்வன வரும். அவை பகுபத வுறுப்பாய் இரு சொல் அடங்கிய தொடர்வினைகளே யன்றித் தனிவினைக ளல்ல.

இவற்றில் உள்ள அடிப்படை மாறுபாடுகளும் சில விளங்குகின்றன. இவ்வாறே வேறு பல துறைகளிலும் உரைநடையில் நூல்கள் வந்துள்ளன.

மேலை நாட்டவர் தொண்டு

கடைசி எல்லைக்குச் செல்லுமுன் சென்ற நூற்றாண்டில் நம்மொடு இருந்து தமிழ் உரைநடையை வளம்படுத்திய மேலை நாட்டு அறிஞரைப் பற்றி எண்ணக் கடமைப் பட்டுள்ளோம். இவருள் மிக முக்கியமாக எண்ணத்தக்கதர்கள் டாக்டர் போப் அவர்களும் கால்டுவெல் அவர்களுமாவர். டாக்டர் போப் அவர்கள் குறள், நாலடியார் முதலிய சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததோடன்றி, திருவாசகம் முதலிய தெய்வநெறி நூல்களை மொழி பெயர்த்துத் தந்ததுமன்றி, பல இலக்கண நூல்களை எழுதி ஆங்கில நாட்டவரும்-ஏன்?-நம் நாட்டு இளைஞரும் நன்கு உணரத்தக்க வகையில் வெளியிட்டுள்ளார். அவர் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்திய திருக்குறள் நூலில் திருவள்ளுவர் சரித்திரம் உரைநடையில் எழுதப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதி இதுவாகும்.

அச்சங்கத்தார் உக்கிரப்பெருவழுதியென்னும் பாண்டியன் முதலானவர்களும் அத்யந்தம் ஆனந்தமடைந்து வெகு பூஜிதம் பண்ணி இந் நூலை அகஸ்தியரும் ஒப்புக்கொள்ளில் நல்லதென்ன விடை பெற்றுப் பொதியமலைக்குப் போய் அகஸ்தியர் முதலானவர்களைக் கண்டு தாஞ்செய்த நூலைக் காண்பிக்க அவர்கள் அடைந்த சந்தோஷத்தையும் புகழ்ந்த பாடலையும் அனந்தனாலுஞ் சொல்ல முடியாது,

அவ்விடத்தில் கொங்கண சித்தர் வழிபட அவருக்கனுக்கிரகஞ் செய்து நாயனர் அவர்களிடத்தில் உத்தரவுபெற்றுத் தாம் முன்பு போம் போது வழியினேர்படாத ஸ்தலங்களையெல்லாஞ் தரிசனம் பண்ணிக்கொண்டு திருமயிலைக்குச் சமீபமாக வருவதை அப்பதியாரும் ஏலேலசிங்கரும் கேளவிப்பட்டு எதிர்கொண்டுபோய் அழைத்து வந்தார்கள். அவரும் வந்து தமதில்லறத்தில் வாசுகிமாதினொடு மிருந்தார்.

இக் கதைகளெல்லாம் படித்துக் குறளை உணர்ந்தே பின் சிந்தித்து, அவர்தம் அழகிய மொழிபெயர்ப்பினைச் செய்தார். அவரது இலக்கண நூல் நடைக்கு ஓர் எடுத் துக்காட்டு (1857).

எழுத்துப்புணரியல்: விகாரம் என்பதென்ன? மொழியோடு மொழி, வேற்றுமை வழியிலாவது, அவ்வழியிலாவது, பொருந்தும்பொழுது நிலை மொழியின் ஈற்றெழுத்தாகிலும் வருமொழியின் முதலெழுத்தாகிலும் அவ்விரண்டெழுத்துக்களுமாகிலுந் திரிவதும் கெடுவதும் வேறே எழுத்துத் தோன்றுவதுமே விகாரம் எனப்படும்.

விகாரம் ஒன்றும் பலவும் வரப்புணர்வது விகாரப் புணர்ச்சியாம். விகாரம் இன்றிப் புணர்வது இயல்புப் புணர்ச்சியாம்.

சென்ற தலைமுறையில் வாழ்ந்தவர்களுக்குத் தங்கள் தமிழ்க் கல்வியைத் தொடங்கும்பொழுது இலக்கணத்தை அறிமுகம் செய்து வைத்தது போப் ஐயர் தமிழ் இலக்கணமேயாம், இவ்வாறு இலக்கணத்தைத் தெளிவுடன் எழுதிய போப் ஐயர் அவர்கள் நாட்டு வரலாறு எழுதுவதிலும் வல்லவர் என்பதற்கும் ஒரு சான்று காணலாம்.

(இங்கிலாந்து தேச சரித்திரம், 1858)
ஆதிகாலத்தில் பிரித்தன் என்னுந்தீவு இருந்த நிலைமையை விசாரிக்கும்பொழுது, அத்தீவு இப்பொழுது இருக்கிற நிலைமைக்கும், அப்பொழுது இருந்த நிலைமைக்கும் அதிக வித்தியாசம் உண்டென்று தெரியவருகிறது, எப்படியெனில், அக் காலத்தில் அத் தேசமானது பலவிதமான கிராதர் அலைந்து திரிந்த காடே அல்லாமல் வேறல்ல. அந்தச் சாதியார் யாரெனில் பிரித்தனுக்கு அயல் சீமையாகிய காள் (GAUL) என்னும் பிரஞ்சு தேசத்திலிருந்த காளியர் அல்லது கெல்தியருக்கும் (CELTS) பூர்விக பிரித்தானியருக்கும் பாஷையும் ஆசாரங்களும் ஒன்றாயிருந்தமையால்’ இவர்கள் அவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று நினைப்பதற்கு இடமுண்டு.

இவ்வாறு, குறளை உலகறியச் செய்த போப் என்னும் ஆங்கிலநாட்டு அறிஞர் தமிழ் உரைநடையிலும் சிறந்த நூல்களை நமக்குத் தந்துள்ளார். இவர் போன்றே தமிழ் மொழியின் ஏற்றத்தை உலகுக்கு உணர்த்திய மற்றெரு புலவர் ‘கால்டுவெல்' ஆவர். அவர்தம் 'பரத கண்ட புராதனம்’ என்று தொகுப்பிலிருந்து (1893) உரைநடைக்கு ஒரு சான்று காணலாம்.

பாரதத்திலுள்ள சகல கதைகளையும் யூரோப் சாஸ்திரிகள் பரிசோதித்து ஒத்துப்பார்த்து ஒன்றாேடொன்று இசைவாயிருக்கிறவைகளைக் காட்டி யிருக்கிறார்கள். இதனடியில் சொல்லியிருக்கிற பாண்டவர் கதையடக்கத்திற்கு யூரோப் சாஸ்திரிகள் செய்த ஆராய்ச்சியே ஆதாரம். இந்துக்கள் எழுதியிருக்கிற நூல்களைப் பார்த்தால் பஞ்சபாண்டவர் சரித்திரம் இவ்வளவு துலக்கமாய் விளங்காது. பூர்வீகமானவைகளையும் நூதனமானவைகளையும் பிரித்தெடுத்து சுருகலானவைகளைத் தெளிவிக்கிறதற்கு இத்தேச வித்வான்களுக்கு நன்றாய்த் தெரியாது. (பக். 48)

இவ்வாறு பலவகையில் கால்டுவெல் தம் உரைநடையைத் தீட்டிக் காட்டுவதோடு, இந்நாட்டுப் புலவர்களுக்கு உரைநடையில் பொருளைத் தெளிவாக விளக்கும் திறன் இல்லை என்ற குற்றச்சாட்டையும் சூட்டுகிறார். இஃது ஆராய்தற்குரியது. இதன் கருத்து நல்ல உரைநடை நம்மவருக்கு எழுத முடியவில்லை என்பதாகலாம் என்பர். அதுவும் பொருந்தாது. நிற்க, இரேனியஸ் என்பார் 1853இல் எழுதிய உரைநடைக்கு ஒரு சான்று காண்போம்.

மெழுகானது முத்திரையைப் பெறுதலன்றி, அதைப்பற்றிக்கொள்ளுந் தன்மையுமுள்ளதா யிராவிட்டால், முத்திரைக்குத் தகுதியாயிருக்க மாட்டாது. அதுபோல ஆத்மா அறிவும் யோசனை யுமுடையதாயிருக்கவேண்டும். அறிவானது ஒன்றைத் பெறுதற்கான கருவி. யோசனையானது அதைப் பற்றிக் கொள்ளுதற்கான கருவி. யோசனையாகிய கருவியின்றி அறிவாகிய கருவி மாத்திர முடையதானல் ஆத்மா மெழுகைப் போலல்ல, சலத்தைப் போலிருக்கும். எப்படியெனில் சலத்தில் எதையாகிலுஞ் சீக்கிரமாய்ப் பதிக்கலாம். பதித்தவுடனே அது தோன்றாமற்போகும்.

பவர் பாதிரியாரும் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவியவர் என்பதை நாடறியும்; எனவே அவர் வாக்கிலும் ஒன்று காணலாம்.

உலகம்: இந்த உலகம் அநாதியாய் நிலை பெற்றிருக்கிறதென்றும் ஒரு காலத்தில் அழியாத நிலைமையை உடையதென்றும், கடவுள் முதலிய யாவராலும் உண்டாக்கப்பட்டதல்லவென்றும், நிச்சமாய்ச் சொல்லுகிறர்கள். இதுவுமல்லாமல் இந்த உலகம் கீழுலக மென்றும் நடுவுலக மென்றும் மேலுலகமென்றும், மூன்றாயிருக்கிறதென்றுஞ் சொல்லுகிறார்கள். மேலும் இந்த உலகத்தினுள் அடியில் அதோகதியென்று பேருடைய

ஒரு உலகமுண்டென்றும் அதற்குமேல் ஏழு நரக லோகமுண்டென்றும் அதற்குமேல் பவண லோக முண்டென்றும் அதற்குமேல் சோதி லோகமுண் டென்றும் வியந்திரலோகமும் வித்தியாதரலோக முமாகிய இந்த இரண்டு உலகங்களும் இந்த மண்ணுலகத்திலேயே உண்டென்றும், மேலே பதினாலு வகைப்பட்ட தேவலோகமுண்டென்றும் அதன் மேல் அகமிந்திரலோக முண்டென்றும், அதன்மேல் இந்த உலகங்கங்களுக்கெல்லாம் கர்த்தாவாகிய அதிை சித்த பரமேஷ்டி எனப்பட்ட பராபர வஸ்து இருக்கப்பட்ட மோக்ஷ உலகமுண்டென்றும் சொல்லுகிறார்கள்.

என்று சிந்தாமணி நாமகள் இலம்பக உரைவிளக்தில் (பக் XII &XIII) (1868) குறிக்கின்றார். இவரே அன்றிப் பெர்சிவல் பாதிரியார் முதலிய வேறு சிலரும் பழமொழிகள் பற்றியும் தமிழ் மொழி முதலியனபற்றியும் தமிழ் ஆங்கிலம் எனும் இருமொழிகளிலும் எழுதியுள்ளார்கள்.

இவர்களை விடுத்துச் சுகாத்தியர் (Scott) என்னும் மற்றாெருவரைப் பற்றி எண்ணும்போது அவர் செய்த தமிழ் எழுத்து மாற்றம் நமக்கு வியப்பை அளிக்கும் என்பது உறுதி. ஐ, ஒள என்ற ஈரெழுத்துக்களைப்பற்றி அவர் கூறியவற்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன் (1889),

வடமொழி எழுத்தாகிய ஐ, ஒள எனப்படுமெழுத்துக்கள் தமிழ்ற் காரணமின்றிச் சேர்ந்துள வாதலாலும் அவற்றுள் ஒள இந்நூலுளெவ்விடத்தும் வரப் பெறாமையாலும் ஐ க்கு வடமொழிக்குரிய வரிவடிவயொழித்துத் தமிழ் முறப்மய்க் கிணங்க அகரயகர வரிவடிவாகவும் ககர வோசயய்த் தழுவி முப்புள்ளி வடிவினதாய் வழங்கி ஆய்த எழுத்துத் தமிழோசய்க்கு வேண்டு வதின்மயா லதற்குரித்தான ககர வடிவாகவும் வரய்தலாயின.

என்று கூறித் திருக்குறள் முழுவதையும் தம் மனம் போல் மாற்றி விளக்க உரையும் தந்துள்ளார். நல்லவேளை இது நாட்டில் உலவாது நின்றது.

கடிதங்கள்

இவ்வாறு மேலைநாட்டு அறிஞர்பலர் தமிழ்நாட்டிற்குப் பலவகையில் பணிபுரிய வந்து அவர் தம்பணிகளோடு அன்னைத் தமிழுக்கு ஆக்கப்பணி ஆற்றியவகையில் பல உரைநடை நூல்கள் எழுதி, இன்றும் நம்மொடு கலந்து உறவாடும் வகையில் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் வணக்கம் செலுத்தி, இறுதியாக அஞ்சல் துறை வளர்ந்த-சென்ற நூற்றாண்டில் கடிதத்தின் வழி வளர்ந்த தமிழ் உரை நடைபற்றிக் கண்டு அமையலாம் எனக் கருதுகிறேன். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சில அறிஞர் தம் கடிதங்களை அப்படியே ஈண்டுக் கண்டு அமையலாம். இராமலிங்க அடிகளார் கடிதங்கள் முன்னரே கண்டுள்ளோம். கடிதங்களும் இலக்கியமாகப் போற்றக் கூடியனவே; மேலை நாடுகளில் கடித இலக்கியங்கள் சிறந்தனவாக உள்ளன. நம் நாட்டில் அந்த நிலை இல்லை. எனினும் சென்ற நூற்றண்டில் சில அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் தமிழ் உரை நடை வளர்ச்சிக்குச் சான்று பகர்கின்றமையின் அவைகளுள் ஒரு சிலவற்றை ஈண்டுக்காட்டல் அமைவுடைத்து என எண்ணுகின்றேன்.

பல நூல்களைப் பாரறியச்செய்த பெருமை டாக்டர் உ. வே. சாமிநாத ஐயருடையது. அவர்தம் ஆசிரியர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். அவர் தம் நண்பர்களுக்குப்பல கடிதங்கள் எழுதியுள்ளார்; அவருக்கு நண்பர்களும் எழுதியுள்ளனர். அவற்றுள் சில காண்போம். மகாவித்துவான் அவர்களால், 'திருச்சிராப்பள்ளி வரகனேரியிலிருக்கும் கிராம முன்சீப் மகாா-௱௱-ஸ்ரீ பிள்ளையவர்கள் சவரிமுத்துப்பிள்ளையவர்களுக்குக் கொடுக்கப்படுவதாக' எழுதப்பெற்ற கடிதம்.

இவ்விடம் க்ஷேமம்;அவ்விட க்ஷேமம் வரைந்தனுப்பவேண்டும். தாங்கள் குறிப்பிட்ட திருவிளையாடற் செய்யுள் 'அன்பினில் வியப்போ வீசன் அருளினில் வியப்போவன்பர்க் கின்புருவானவீச னன்பருக் கெளிதே தைய' என்றது சரியே, எளிதேது ஐய என்பதில் ஏது வென்பது வினா “ஈசன்பர்க்கு அருளைப்பெறுதல் எளிது, அஃது அரியதன்று’, ‘அன்பு செய்தல் அரிது; அஃது எளியதன்று என்பது பொருள். இஃது உடனே தோன்றியது. இப்போதிதைத் தெரிவித்தேன்.

சதாசிவத்திற்குச் சவுக்கியமானதை எனக்குத் தெரிவிக்கவில்லை. அதுபற்றிகவலையில்லானென்று என்னை நினைத்தான்போலும். ம-௱-௱-ஸ்ரீ குமாரசாமிப் பிள்ளை, முருகப்ள்ளை, சதாசிவப்பிள்ளை இவர்களைக் குரு பூஜைக்கு அவசியம் வரவேண்டுமென்று ஒரு மனுஷ்யனைக் கொண்டு தெரிவிக்கவும்.

ம-௱-௱-ஸ்ரீ பிள்ளையவர்களிடத்தில் கந்தசாமியைத் தாங்களழைத்துக்கொண்டு சென்றதும் அவனோடு வந்த வொரு செய்யுளைத் தாங்கள் பிரசங்கித்த விபரமும் தெரிய விரும்புகிறேன்,

இவ்விடம் மகாசந்நிதானந் தங்களைப் பார்க்கும் அவா நிரம்ப வுடையது. குருபூசை முன்னிலையில் எல்லாரும் வரும்போதாவது தாங்கள் ஒரு தினம் இவ்விடம் வந்து போனற் சிறப்பாக இருக்கு மென்று நினைக்கிறேன். அப்பால் தங்களிட்டம்.

பவ, கார்த்திகை

இங்ஙனம்,

(1875)

தி. மீனாட்சி சுந்தரம்.


இவ்வாறே பிள்ளை அவர்களுக்கு அவர் நண்பராகிய சேஷையங்கார், சாமிநாத தேசிகர் ஆகியோர் எழுதிய கடிதங்களும் உடன் தரப்பெறுகின்றன.

சிவமயம்-அன்புள்ள அம்மானவருக்கு விண்ணப்பம். இவ்விடத்தில் யாவரும் க்ஷேமம். அவ்விடத்திய க்ஷேமம் அறிவிக்கச்சொல்லவேண்டும். மணியார்டர் செய்தனுப்பிய கடிதத்திற்கும் பதில் வரவில்லையென்று மனவருத்தத்தோடுபின் எழுதிய கடிதத்திற்கும் பதில் வரவில்லை, இந்தக் கடிதம் கண்டவுடன் மணியார்டர் வந்துசேர்ந்த செய்திக்குப் பதிலெழுதச்சொல்லவேண்டும், மணியார்டர் கெடு தப்பிப்போகுமுன் பணம் வாங்கிவிட வேண்டும், கடிதம் வந்து சேருமென்ற நம்பிக்கையினால் இதை நட்டுப்பயிடாக[1] அனுப்பினேன்.

சுக்கில, ஆடி-27

இங்ஙனம்.

1870-திருவனந்தபுரம்

சி. சாமிநாத தேசிகர்.


ஸ்ரீமத் சகல குண சம்பன்ன சுகண்டித லக்ஷ்மி அலங்கிருதஆசீருதஜனரக்ஷக மஹாமேருசமமான தீரர்களாகிய கனம் பொருந்திய மகா ராஜமான்ய ராஜஸ்ரீ பிள்ளையவர்கள் திவ்ய சமுகத்திற்கு ஆசி ருதன் திருமங்கலக்குடி சேவைடியங்கார் அநேக ஆசீர்வாதம்.

இவ்விடம் தஞ்சையில் தங்கள் பெருங்கருணையால் க்ஷேமமாயிருக்கிறேன். தங்கள் க்ஷேமசுபாதி சயங்கட்கெழுதி யனுப்பும்படி உத்தரவு செய்யப் பிரார்த்திக்கிறேன். தாங்களன்புடன் வரைந்தனுப்பிய நாளது மாதம் 22 உள்ள கடிதம் கிடைத்தது. கோயிலுக்கு இதற்குமாயலைந்து கொண்டிருந்ததால் பங்கி யனுப்பத் தவக்கப்பட்டது. அதை மன்னிக்கவேண்டும். இவ்விடம் வேந்திருக்கைக் கலைமகள்விளக்க இவ்விடத்திலிருந்து எழுதுவித்த ஸ்ரீ அம்பர் க்ஷேத்திர புராணக் கிரந்த புத்தகம் க-க்கு ஏடு ௪0 ௸ புத்தகத்தை இத்துடன் பங்கி

மார்க்கமாய்த் தங்களிடத்திற்கு அனுப்பியிருக்கிறேன். வந்து சேர்ந்ததற்குப் பதில் கடிதமனுப்பப் பிரார்த்திக்கிறேன்.
இங்ஙனம் தங்களாருசிதம்

சுக்கில மார்கழி -௭. தஞ்சை.

தி. சேவுையங்கார்.

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் தியாகராசச் செட்டியார் அவர்களைப் புகைப் படம் எடுக்க விரும்பினார். ஆயினும் செட்டியார் அவர்கள் மெலிந்து உடல் நலிவுற்றிழிந்தமையால் தமக்கு விருப்பமில்லை என்பதைப் பின்வரும் கடிதத்தில் விளக்கியுள்ளார்.

...என்னுருவத்தை போட்டகிராப் எடுக்கும்படி தாங்கள் உத்தரவு செய்தீர்களாம். யான் குரூபம் அடைந்த காலத்தில் எடுக்க எனக்குச் சம்மதம் இல்லை. அன்றியும் நல்ல உடை உடுத்துக்கொண்டு ஒருநாழிகை அசையாதிருக்கச் சற்றும் பலமில்லை. படுத்துக்கொண்டே யிருக்கிறேன். நேத்திரம் இரண்டு நிமிடம் சேர்ந்தாற்போலவிழித் திருக்கக்கூடவில்லை. இந்த ஸ்திதியில் உருவம் எடுப்பது சற்றும் தகுதியன்று. தாங்கள் இவ்விடமிருந்துபோன நாள் முதல் நாளது பரியந்தம் போகும் வயிற்றுப் போக்குச் சற்றும் நிற்கவில்லை. அன்னம் செல்லவில்லை. காரமும் சேரவில்லை.

தேகம் விளர்ப்புடன் மிக மெலிந்து விட்டது. ஆதலால் நான் செவ்வையாயிருக்கும்போது காலேஜ் ஸ்தம்பத்தில் உருவம் ஒன்று செய்யப் பட்டிருக்கிறது. தெற்குத் தாழ்வாரத்தில் கீழ் புறத்தில் இருக்கிறது. கோபாலராயரவர்களுடைய உருவம் குதிரையில் இருந்ததுபோல ஒரு பக்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல மொச்சியன் அகப்பட்டால் அந்த உருவத்தைக் காண்பித்துக் கூடிய வரையில் ஒரு படம் எழுதி எடுத்துக் கொண்டால் அதை வைத்துக்கொண்டு போட்ட

கிராப் வேண்டியபடி எடுத்துக்கொள்ளலாம் ...... படம் எழுதும் மொச்சியன் என்னைப்பார்த்திருப்பவனாகியிருந்தால் உத்தமந்தான்-1887 சீவக சிந்தாமணி வெளியீடு.

இவ்வாறே கிறித்தவ சமயம் பற்றிய கடிதங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்றினை இங்கே தருகிறேன்.

புதுவை அப்போதஸ்தொலிக்கு விக்காரியாராகிய சவேரியார் அருளப்பர் மரியநாத லவுனேன் என்னும் நாமதேயங் கொண்டிருக்கும் பிலாவியோபொலி மேற்றிராணியாரவர்கள் தமது ஞானதிகாரத்துக்குட்பட்ட சகல கிறிஸ்துவர களுக்கும் எழுதியருளிய நிரூபம் (புதுவை ௲௮௱௰௫௵).
(நீண்ட கடிதம்)

கடித முடிவு

நீங்கள் இந்தப் பிரகாசத்தில் நடந்து சத்திய வேத நெறியிற் சென்று புண்ணியத்திற் சிறந்தவர்களாய்ச் சீவித்து சிவாந்தத்தில் நித்திய பிரகாச பாக்கிய பேரின்பத்தை அடையும்படி விரும்பி உங்களுக்குப் பக்ஷம் நிறைந்த மனதுடன் ஆசீர்வாதங் கொடுக்கிறோம்.

இப்படிக்குப் புதுவையில் ௲௮௱௭௰௫௵ ஸ்ரீ தேவ மாதாவின் திருமணத் திருநாளாகிய சனவரி௴ ௨௩௨ நம்முடைய கையெழுத்தும் முத்திரையையும் போட்டு நம்முடைய செக்கிறேத்தராகிய சம்பிரதியும் இதனடியிற் கையெழுத்து வைத்துத் தந்தது.
மகா சங்கைக்குரிய கனம்
பொருந்திய ஆண்டவர் உத்தாரத்தின்படியே

சென்னைக் கல்விச் சங்கத்துப் புத்தகப் பரிபாலராகிய கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை அவர்கள் ‘நீதிசார வாக்கியம்’ என்ற நூலினைத் தொகுத்தார். அதைக் கண்டு முன்னுரை தருமாறு தொல்காப்பியம் வரத முதலியாரைக் கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதிய கடிதம் ஈண்டுத் தரப்படுகிறது. இஃது அந்த நூலிலேயே இடம் பெற்றுள்ளது. நூல் 1844 இல் தொகுக்கப் பெற்றது. 'வித்துவான்களின் அபிமதம்’ என்ற தலைப்பில் அந்நூலைப் பாராட்டிய பலர் தம் முன்னுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இக்கடிதமும் ஒன்று.

மஹாராஜஸ்ரீ தொல்காப்பியம் வரத முதலியாரெழுதிய கடிதம்:—காலேஜ் புத்தக பரிபாலகராகிய ம-ா-ஸ்ரீ பிள்ளையவர்கள் கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளையவர்கட்கு.

விஞ்ஞாபனம்-இந்த நீதிசாரமென்னுஞ் சிறந்த வசன புத்தகம் எனது அபிமதம் பெறவேண்டுமென்கின்ற கோரிக்கையா லென்னித்திட கனுப்பப்பட்டபடி அதை முழுதும் வாசித்துப் பார்க்கும்மிடத்திற் சொன்னயம் பொருணய மிகவும் நன்றாமைந்திருப்பதுவுமின்றித் தர்மங்களை யெல்லாஞ் சேகரித்து விளங்கவெழுதி யிருக்கின்றபடியால் இஃது சிறுவர்கட்கு மாத்திரமேயல்ல, பெரும்பான்மையானவர்க்கும் பிரயோஜனமாக விருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை யென்று தோன்றுகிறது. மேலும் இதிலடங்கிய வசனங்களெல்லாம் கம்பீரமாயிருக்கின்றமையால் வாசிப்பதற்கு மிகுந்த களிப்பைத் தருகின்றது. இப்புத்தகத்தில் தர்ம நீதிகளெல்லாம் வசன வடிவு கொண்டு வெளிப்பட்டமையால், அவைகள் பாவினங்களைப் பார்க்கிலும் சிறந்து விளங்குகின்றன. ஏனெனில், பாக்களிலிருக்கும் தர்மா சாரத்தையுணர்வது சாதாரணர்க்குக் கடினமாக விருக்கின்றமையினலேதான். ஆதலால் நம்முடைய தேசத்தி னெடுங்காலமாய்க் குடிகொண்டிருக்கும் அழுக்காறு முதலிய துற்குணங்களைப்

புத்தகத்தால் இனி தூரவிலகிப் போகுமென்று சொல்வதற் கனுமானப்பட வேண்டியதில்லை.

இவ்வித நன்மைகளைத் தருவதற்காதாரமாக விப்புதகத்தைத் தாங்கள் வருந்திச் செய்த நன் முயற்சியைக் குறித்து யாவர்தானன்றி கூறாதவர்களா யிருப்பார்கள். இவர்களில் நான் முதற் புருடனாக விருக்கிறேன்.}}

சென்னப்பட்டனம்

இங்ஙனம்

சோபகிருது, மார்கழி

வேலூர் வரத முதலியார்

முடிவு

இவ்வாறு கடிதங்களும் தமிழ்உரைநடையை வளர்க்க உதவி செய்தன. இவ்வகையில் தமிழ் உரைநடை சென்ற நூற்றாண்டில் யாண்டும் நீக்கமற நிறைந்து நின்றது. எனவே இந்த மூன்று சொற்பொழிவுகளிலும் உரைநடையின் இயல்பினையும், தமிழ் உரைநடை தோன்றி வளர்ந்த வகையினையும், சென்ற நூற்றாண்டின் தமிழ் நாட்டின் சூழ் நிலையையும் அதன் வழி நாட்டில் உண்டான மாறுதல்களையும் அவற்றின் வழி, கலை, இலக்கியம் வளர்ச்சி பெற்ற வகையினையும், அவற்றுள் தமிழ் உரைநடை எவ்வெவ்வாறு வளர்ச்சி பெற்றதென்பதையும் பாமர இலக்கியமாய், பண்டிதர் இலக்கியமாய், நாநவில் இலக்கியமாய், நாடறிந்த இலக்கியமாய், சமய, தத்துவ, அறிவியல் துறைகளில் இடம் பெற்ற இலக்கியமாய், சென்ற நூற்றாண்டில் அவ்வுரை நடை வளர்ச்சிபெற்ற பலவகைகளையும் ஓரளவு கண்டோம். அவ்வாறாய உரைநடை இலக்கியங்களுள் ஒருசில போகப் பலவற்றை இன்றளவும் காணும்பேறு பெற்றுள்ளோம். இனி அவை மங்காது காக்கப்பெறும் என்பதற்கும், இத்துறையில் புத்தம் புதிய நெறியில் உரைநடை இலக்கியங்கள் வளரும் என்பதற்கும் எதிர் நிற்கும் பல நல்வாய்ப்புக்களை எண்ணும்போது உளமகிழ்ச்சியுறுகின்றது.

இந்தத் தலைப்பை நான் முதலில் எடுத்துக்கொண்ட போது, இத்துணை விரிந்த அளவில் இதன் எல்லை பெருகும் என எண்ணவில்லை. ஆயினும் ஆராய ஆராய எல்லை விரிந்தது-பரந்தது-மிகப்பெருகிற்று. ‘அறிதோறறியாமை கண்ட' வகையில், இப்போது நான் ஆய்ந்து கூறிய அனைத்தும் ஒரு சிறு துளியே என உணர்கின்றேன். அறிய வேண்டியது கடல்-எல்லையற்றது. நான் கூறியன சில; விட்டன பல.

சென்ற நூற்றாண்டின் இலக்கிய ஆய்வு-அதிலும் உரைநடை ஆய்வு மிகப்பெரிது என உணர்கின்றேன். அதன் எல்லையில் ஒரு மூலையில் நின்று, ஆழ்கடற்கரையில் நின்று அதன் எல்லை கண்டு விட்டவனைப்போன்ற உணர்வினைத் தான் நான் பெற முடிகின்றது. இத்துறையில் விரிந்து ஆய்வு தேவை. பல்கலைக்கழகத்தே ஆாாய்ச்சிப் பட்டம் பெறும் மாணவர் இத்துறையில் ஒவ்வொரு பகுதியை எடுத்து ஆராயத் தொடங்கின் ஆயிரக்கணக்கானவருக்கு இஃது இடம் தரும் என்பது என் கருத்து. இது நாட்டுக்குப் பயன்படக் கூடியதுமாகும்.

ஆழ்கடல் பகுதியில் ஒரு துளி காட்டினேன். இதற்குத் துணை நின்று உதவிய அறிஞர் பலர்-நூலகங்கள் பல-சுவடிகள் பல. சொல்வழி உதவியவர் பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். இச்சொற்பொழிவு வரிசையினை அமைத்துத் தமிழை வளர்க்க முயற்சி செய்த “கல்கி' நிறுவனத்தார் தொண்டு சிறந்தது. அவர்களுக்கும் என் நன்றி. இவ்வாண்டு இப்பொழிவினை எனக்களித்த பல்கலைக்கழக் ஆட்சியாளர், துணைவேந்தர், பேராசிரியர் ஆகியோருக்கும் மூன்று நாளும் வந்து கேட்டுச் சிறப்புச் செய்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து அமைகின்றேன்.

வணக்கம்

  1. Not Paid ஆக (தபால் தலை ஒட்டாமல்)