பரமார்த்த குருவின் கதை

பரமார்த்த குருவின் கதை ஏழாவது : குதிரையிலிருந்து விழுந்த கதை.
எழுதியவர்: வீரமாமுனிவர்
வீரமாமுனிவர் (1660-1747)காலமான 18 ஆம் நூற்றாண்டில், உரைநடையாக்கம் என்பது அரிதாகவே பின்பற்றப் பட்டது. அனைத்து தமிழ் வெளிப்பாடுகளும், பெரும்பாலும் கவிதை நடையிலேயே இருந்தது. பாமரரும், பிறரும் தமிழைக் கற்க, இவரது ஆக்கங்கள் இருந்தன என்பதற்கு, இக்கதையே சான்றாகும். வீரமாமுனிவர் எழுதிய நூல்களில் எல்லாம் பேர்போன இந்நூல் உலக மொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டுள்ளது. முனிவரே முதல்முதலாக அதை இலத்தீனில் மொழிபெயர்த்ததோடு மாணவர் நலம் கோரி, ஒரே பக்கத்தில் ஒரு பகுதி தமிழாகவும் மற்றொரு பகுதி அதற்குரிய இலத்தீனாகவும் வெளியிட்டார். முனிவர் கைப்பட எழுதிய பிரதி இன்றும் உள்ளது. 1728ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட இந்நூலின் கரு மேனாட்டுக் கதைகளிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். (காண்க: இராசமணிக்கம், வீரமாமுனிவர்: தொண்டும் புலமையும், சென்னை 1998, பக். 264-268). "பரமார்த்த குருவின் கதை"

"சொன்ன வெச்சரிக்கையோடு நெடுநாளிருந்த பின்பு சீர்மை வழிபோனாற் சீஷர்கள் கையிற் பணம் பறியுமொழிய மடத்திலது வரவறியாதென்றதைப் பற்றி யூருக்கூர் சுற்றித் திரியப் புறப்பட்டார்கள்.

ஒரு நாளவர்கள் மடத்துக்குத் திரும்பிவருகையிலசைந் தசைந்து குதிரைமேல் வரும்போது கீழே தொங்கின வொரு மரக் கொப்புப்படவே யவர் தலைப்பாகை பிறகே விழுந்ததாம். அதனைச் சீஷர்களெடுத்தார்களென்றெண்ணி சும்மா வனேகந்தூர மவர் சென்ற பின்பு தலைப்பா கெங்கே தாருங்கோளென்று கேட்டார்.

அதங்கே விழுந்த விடத்திற் கிடக்குமென் றவர்கள் சொல்ல வவர் கோபித்து விழுந்ததெல்லா மெடுக்கத் தேவை யில்லையோ நான் சொல்ல வேணுமோ வென்றார். அப்படியே யுடனே மடைய னோடிப்போய் விழுந்தபா கெடுத்துக் கொண்டு வருகையிலன்றிராத்திரி மழை சொரிந்து பெய்ததினாலே பசும்புற் காட்டிலே மேய்ந்திருந்த குதிரைகழித்துவிட்ட லேத்தியைத் தலைப்பாகி லேந்திக் குருவின் கையில் வைத்தான்.அப்போதவர் சீச்சீயென்று வெகுவாய்ச் சினந்தார்.

அதுக்கெல்லாருங் கூடி யிதைதையோ விழுந்த சகலமு மெடுக்கச் சொல்லி முன் கற்பித்தல்லவோ கற்பித்தபடி செய்தினா லிப்போ நீர் கோபங் காட்டுவனே னென்றார்களகுருவோ வென்றா லப்படியன்றே எடுக்கத் தகுவது மெடுக்கத்தகாதது முண்டு வினாவறிநது நடக்க வேணு மென்றார். அதுக் கவர்களம்மாத்திரத்துமக்கு நாங்கள் மனுஷரல்ல வென். றெடுக்க வேண்டியதை மாத்திரம் வேறுபட வெழுதச் சொன்னார்க ளவரெழுதி னார்.

அப்புறம் போகையில் வழுக்கு நிலத்திலீரமாகக் கொள்ளத் தளர்ந்த நடையாய்ப் போகிற நொண்டிக்காற் தவறி விழுந்ததாம். அத்தண்டையிலிருந்த குழியிற் குருவுந் தலை கீழுங் கால் மேலுமாக விழுந்து கோவெண்றலறி யென்னை யெடுக்கவோடி வாருங்கோளென்று கூப்பிட்டார்.

சீஷரு மோடிவந்து முன்னெழுதித் தந்த வோலையை யெடுத்தொருவன் வாசிக்க விழுந்த தலைப்பா கெடுக்கவும் விழுந்த சோமன் வேஷ்டி யெடுக்கவுமவிழுந்த சட்டையுள்ளுடை யெடுக்கவும் மென்றவன் வாசித்தபடி ஒன்றொன்றா யெல்லாத்தையும் மெடுத்து வைக்கக் குருக்கள் நிருவாணமாக யங்கே கிடந்தார்.

அவரிப்படிக்கிடந்து தம்மையு மெடுக்கச் சொல்லி யெததனை கெஞ்சினாலும் மெத்தனை சினந்தாலும் மிதுவும் ஏற்கெனவே யோயிலைலெழுதாததினாலே மாட்டோமென்று சாதித்தனர்.

ஐயா வும்மையுமெடுக்க வெழுதின தெங்கே காட்டும் எழுதினபடியே செய்வோமே யொழிய வெழுதாதை யொருக்காலுஞ் செய்ய சம்மதியோ மென் றார்கள். அவருமிவர்கள் சாதனை கண்டு தப்பும் வழி வேறொன்றுங் காணாம லோயும் மெழுத்தாணியும் வாங்கிக் கிடந்த விடத்தில் நானும் விழுந்தா லெடுக்கக்கடவீர்க ளென்றெழுதினார்.

எழுதினதைக் கண்டு சீஷர்களு மொருமிக்கப்போ யவரையெடுத்தார்கள். விழுந்த குழியிற் சேறிருந்தபடியினா லவருடம் பெல்லாஞ் சகதியாயழுக்குப்பட்டதென்று சமீபத் திலிருந்த தண்ணீரிலே குளிப்பாட்டினார்கள்.

பின்பு பழைய படி யுடுப்பெல்லா முடுத்தவரைக் குதிரையிலேற்றி மடத்துக்கு கொண்டுபோய் விட்டார்கள்.