பரிசு/முன்னுரை

முன்னுரை:–


மலிவுப்பதிப்பு வரிசைகள்! நாட்டிலே
இன்று எங்கும் எல்லா பதிப்பகங்களிலும்
எந்தெந்த நூல்களை வெளியிடலாமென்ற
எண்ணத்தை எழுப்பிவிட்டு, பதிப்பாசிரியர்களின்
மூளையை சாணைக்கல்லில் தீட்ட
விட்டிருக்கும் ஒரு போர்முரசாக விளங்கி
வருகிறது. இந்த நிலைமை நீடித்தால்—
முடிவு என்னவென்பதை யாரும் எளிதில்
கணிக்க இயலாது. பெயர் பெற்ற ஒருசில
எழுத்தாளர்கள் செத்தாலும் செத்தார்கள்
இப்படி பெரும் பெரும் கதைகளாகவும்
கவிதைகளாகவும் எழுதிவைத்து விட்டு
செத்திருக்கக்கூடாது. அப்படி செத்தவர்களும்
தாங்கள் எழுதியவைகளை தமிழ்
நாட்டு பதிப்பாசிரியர்கள் கண்களுக்குத்
தெரியும்படி வைத்துவிட்டு நிச்சயம் அவர்கள்
செத்திருக்கக்கூடாது. நாட்டிலே
மடமை மறையக்கூடாது–முட்டாள்கள்
என்றும் நிறைந்திருந்தால் தான் மெருகு

குலையாத மேனியர்கள் சுகமாக வாழ

முடியும் என்று திட்டம்போட்டு
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
வியாசர் விருந்தை மக்கள் மத்தியிலே
மலிவுப்பதிப்பு என்ற கண்கட்டி வித்தையை
கட்டவிழ்த்து விட்டுப் பார்த்தார்–
கோயங்கா மூலமாக. சக்கரவர்த்தித்
திருமகன் வந்தான் மக்களை மாடுகளாக
மாற்ற! அவ்வளவு தான்! புராணங்கள்
கிளம்பின புற்றீசல் போல !

தித்திப்பான பதார்த்தத்தை நோக்கியும்
எறும்புகள் சாரை சாரையாகச்
செல்லுகின்றன. அதே எறும்புகள்
இறந்து போன பூச்சிகள் போன்ற
துர்நாற்றமானவைகளைத் தேடியும் சாரை
சாரையாகச் செல்லத்தான் செய்கின்றன.
இதுவரை மக்கள் கூட்டம் துர்நாற்றமானவைகளைத்
தேடிச்சென்று அதை விரும்பி
ஏற்றுக்கொண்டவர்களும் சிலர் உண்டு.
கண்டவுடன் சீ இது எதற்கென்று உதறி
எறிந்துவிட்டு வந்தவர்களும் பலர் உண்டு.
சிலரைப்பற்றி நமக்கு அக்கறையில்லை.
அவர்கள் இன்றில்லாவிடினும் என்றாவது
ஒரு நாள் பலரைப் பார்த்து திருந்திவிடு
வார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நாட்டிலுள்ள அந்தப்பலர் வெகுநாட்களாக
எதிர்பார்த்திருந்தார்கள்–எதிர்களாக

பார்த்திருந்தது மட்டுமல்ல–எல்லோரும்

ஏகோபித்த குரலில் 'தென்னகத்துக்கோ'
திராவிடத்து முடிசூடாமன்னன், வான
வீதியிலே பவனிவரும் பால்நிலவு
போன்று, திராவிடத்திலே பவனிவரும்
தேன் நிலவாம் மக்கள் தலைவர் அறிஞர்
அண்ணா
அவர்களின் ஏடு ஒன்று ஏன்
மலிவு பதிப்பாக வெளியிடவில்லை–அதற்கு
எவரும் முன்வராத காரணமென்ன என்று
மக்கள் எண்ணத்திலே கேள்வி எழுந்தன!
வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல–
வார்த்தை உருவிலே வந்த அந்த கேள்வி
அம்புகள் எம்மை நோக்கியும் பாய்ந்து
வந்தன! "அவாள் ஏடுகளுக்கு சவால்"
என்று அடிக்கடி கூறுவாரே நமது
விடுதலை படைவரிசையின் முதல் படை
வரிசை தளபதி கலைஞர் கருணாநிதி
அவர்கள் ! முரசொலி பொங்கல் மலருக்கு
ஒரு வேடிக்கைச் சொல்லாக உபயோகிப்பார் !
அதையே தான் நாங்களும் இங்கு
குறிப்பிட விரும்புகிறோம். பரதன் என்ற
பெயரிலே 1940ம் ஆண்டு அறிஞர்
அண்ணா குடியரசு வார இதழ்களிலே
தொடர்வாக எழுதிவந்த "சிங்களச்
சீமாட்டி"
இங்கு பரிசு என்ற தலைப்பின்
கீழ் திகழ்கிறாள். அடுத்து– அழியாத
காதல் ஓவியமாக நாட்டிற்கு பயன்பெற

குடியரசு இதழ்களில் "பரதன்" என்ற

புனைப்பெயருடன் எழுதிவந்த கபோதிபுரக்காதல், "காதல்"
என்ற தலைப்புடன் திகழ்கிறது.
அடுத்து அறிஞர் அண்ணா
அவர்கள் காஞ்சி மகாநாட்டிலே
மக்களுக்கு அளித்த அற்புத கருத்துக்
களடங்கிய சொ ல் லா ர ம் இங்கு
"எண்ணம்" என்ற தலைப்பின் கீழ்
வருகிறது. "ஜோதி"–மேலும் இந்நூலுக்கு
முத்தாய்ப்பு வைக்கிறது! இதோ
உங்கள் கரங்களில் "பரிசு" இதை வெளியிட
அனுமதிதந்த குடியரசு பதிப்பகத்தாருக்கு
எங்கள் இதயங்கனிந்த நன்றியறிதலை
தெரிவித்துக்கொள்கிறோம்.
உடன் ஒத்துழைப்புத்தந்த நண்பர்களுக்கும்
எங்கள் அன்பு வணக்கங்கள். இனி
உட்செல்லுங்கள் "பரிசு" காண.

                     வணக்கம்.

                                      பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பரிசு/முன்னுரை&oldid=1644141" இலிருந்து மீள்விக்கப்பட்டது