பறவை தந்த பரிசு-2/புற்கள் அடித்த தம்பட்டம்
ஒரு பெரிய பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவின் நடுவில் அழகான புல்வெளி ஒன்று அமைந்திருந்தது.
அந்தப் புல்வெளி பார்ப்பதற்கு மிக அழகாக அமைந்திருந்தது. பச்சைப்பசேல் என்று பட்டுக்கம்பளம் விரித்தது போல், கதிரவன் ஒளிபட்டு கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது.
அந்தப் புல்வெளியில் வளர்ந்திருந்த புற்களுக்குத் தற்பெருமை மிகுதியாயிருந்தது. அந்தப் புற்கள் நெருங்கியிருந்து தலைநிமிர்ந்து நிற்கின்ற தோற்றமே அவற்றின் தற்பெருமையை விளக்குவதாயிருந்தது.
தங்கள் அழகைப் பற்றிய தற்பெருமையோடு அவை வாழ்ந்து கொண்டிருந்தன. தங்கள் பெருமையை நினைத்து அவை கலகல வென்று சிரித்துக் கொண்டன.
ஒருநாள் அந்தப் புற்கள் கலகலவென்று தங்களுக்குள் பேசிக் கொண்டன.
"இந்த உலகத்தில் நம்மைப்போல் அழகானவர்கள் யார் இருக்கிறார்கள்?" என்று கேட்டது ஒரு புல்.
"மரப்பச்சை கூடத் தூரத்து அழகுதான். நாம் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அழகு; தூரத்திலிருந்து பார்த்தாலும் அழகு!" என்றது இன்னொரு புல்.
"பூக்களுக்கு ஒருநாள் தான் அழகு இருக்கும்; மறுநாள் வாடிப் போகும். நம் அழகு, ஒவ்வொரு நாளும் மிகுந்து கொண்டிருக்க வல்லது?" என்றது மற்றொரு புல்.
"பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் நாம் இருப்பதாகக் கவிஞர்கள் பாடுகிறார்கள். ஆனால், வானங்கூட நீலக் கம்பளம் விரித்தாற்போல் இருக்கிறது இல்லையா?" என்று பூங்காவின் ஒரத்தில் இருந்த புல் ஒன்று கேட்டது.
"அசடே வானத்து நீல நிறம் மங்கலானது. அத்துடன் மேகக் கூட்டம் இடையிலே புகுந்து விட்டால் அது திட்டுத்திட்டாய்ப் படை வந்தது போல் இருக்கும். நம் அழகு பளிச்சிடும் அழகு!" என்று விளக்கம் தந்தது ஒரு நீண்ட புல்.
இவ்வாறு அவை பேசிக் கொண்டிருந்ததை வானம் கேட்டுக்கொண்டிருந்தது.
இந்தப் புற்கள், தம்மை மறந்து தம்பட்ட மடித்துக் கொண்டிருக்கின்றனவே!" என்று வியப்படைந்தது வானம். என்றாலும் சினங் கொள்ளவில்லை. பெருந்தன்மையோடு மன்னித்து மறந்து விட்டது.
ஆனால் மேகத்திற்கு வந்தது கோபம். "நான் திட்டுத்திட்டாய்ப் படை போல் இருக்கிறேனா? நான் இல்லாவிட்டால் என்ன ஆகிறதென்று பார்க்கலாம்" என்று அது சினங் கொண்டது.
ஆம் மேகத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
'சில ஆண்டுகள் நான் வேறோர் ஊருக்குப் போய் விடுகிறேன். அப்போது இந்தப் புற்கள் என்ன ஆகின்றன பார்க்கலாம்? என்று கூறிக்கொண்டே அது புறப்பட்டு விட்டது.
மேகம் போன பிறகு கூடப் புற்கள் வானத்தின் களங்கமற்ற அழகை ஒப்புக்கொள்ளவில்லை. 'பொலிவு மிக்க எங்களுக்கு யார் இணை!' என்று அவை தற்பெருமை பேசிக் கொண்டன.
நாட்கள் ஓடின. மாதங்கள் கடந்தன. ஆண்டுகளும் மாறி மாறி வந்தன. அயலூருக்குச் சென்ற மேகங்கள் திரும்ப வரவில்லை.
ஒருநாள் அயலூரில் இருந்த மேகங்களைப் பார்த்துக் காற்று பேசியது.
"காற்றண்ணா, ஊர் சுற்றி வரும் காற்றண்ணா உலகில் என்ன விந்தைகள் கண்டாய்?" என்று மேகம் ஒன்று கேட்டது.
அதற்குக் காற்று பதில் கூறியது.
"மேகத்தம்பி, உங்கள் தாத்தா கொண்டகோபத்தால் பட்டுப் பட்டிப்பச்சைப் பூங்கா வாடிக் கிடக்கிறது. அங்கிருந்த புற்களெல்லாம் வாடி வதங்கி மண்ணோடு மண்ணாய்ச் சாய்ந்து கிடக்கின்றன. பார்க்கப் பொறுக்கவில்லை" என்று கூறியது காற்று.
"எங்கள் தாத்தா படைபடையாகக் காட்சியளித் தாராமே? நாங்கள் வந்தால் கூட அப்படித் தானே தெரியும் அந்தப் புல்லழகிகளுக்கு" என்று கேட்டது மேகம்.
"ஆத்திரப்படாதே மேகத்தம்பி. இப்போது புல்லழகிகள் மிகச் சோர்ந்து போயிருக்கிறார்கள்.
உங்களுடைய உதவியில்லாமல் அவர்கள் நொந்து போயிருக்கிறார்கள். வெந்த புண்ணில் வேல் குத்துவது போல், துன்பமுற்றவர்களைப் பகைத்துக் கொள்வது பண்பாகாது. எவரும் நம்மை வாழ்த்தும்படி நடந்து கொள்வது தான் சிறப்பாகும்" என்று காற்று மேகத்திற்குக் கூறியது.
"காற்றண்ணா, உங்களுக்காக நாங்கள் அங்கு வர ஒப்புக் கொள்கிறோம். வாருங்கள் போவோம்" என்று மேகம் கூறியது, காற்று எழுந்து வீசியது. மேகக் கூட்டங்கள் நகர்ந்தன. பூங்காவில் அன்று நல்ல மழை!
மழை பெய்து தரை குளிர்ந்தும் புற்கள் மீண்டும்தலைதுாக்கின. இப்பொழுது தலை நிமிர்ந்து நின்ற அந்தப் புற்களின் தோற்றத்திலே தற்பெருமையில்லாத ஒர் அழகு நிறைந்து விளங்கியது.
இந்தக் கற்பனைக்குக் காரணமான குறள்:
விசும்பின் துளிவிழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
-திருக்குறள்