பல்லவப் பேரரசர்/மஹேந்திர வர்மன்

3. மஹேந்திரவர்மன்
(கி.பி. 600 - 630)

சிம்மவிஷ்ணு

இவன் இடைக்காலப் பல்லவருள் இறுதி அரசன், மூன்றாம் சிம்மவர்மன் மகன். இவனுக்குப் பீமவர்மன் என்ற தம்பி இருந்தான். அவன் ஆந்திரப் பகுதியை இவனுக்கு அடங்கி ஆண்டுவந்தனன் போலும்! “சிம்மவிஷ்ணு ‘பல்லவகுலம்’ என்ற உலகினைத் தாங்கும். குலமலை போன்றவன்” என்று இவன் மகனான மஹேந்திரவர்மன் கூறியுள்ளான். இதனால் இவனது பெருவீரம் ஒருவாறு உணரலாம். மேலும் மஹேந்திரவர்மன் தன் தந்தையைப் பற்றிக் கூறுகையில், “அவன் அனுபவிக்கத்தக்க பொருள்கள் எல்லா வற்றையும் உடையவன் (போகபாக்கியங்களில் குறைவில்லாதவன்); பல நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப் போன்றவன் செல்வத்தில் குபேரனை நிகர்த்தவன். அவன் அரசர்க்கு அரசன்” என்று குறித்துள்ளான். இவனுடைய போர்ச் செயல்கள்

“சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவன் காவிரிபாயப்பெற்ற செழிப்புள்ள சோழநாட்டைச் சோழரிடமிருந்து கைப்பாற்றினான்” என்று பல்லவர் பட்டயம் ஒன்று பகர்கின்றது. மற்றொரு பட்டயம், “...பிறகு இவ்வுலகில் சிங்கம் போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் பெயர் பெற்றவன். அவ்வீரன் களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றி கொண்டான்” என்று கூறுகிறது. அவந்தி சுந்தரி கதாசாரம் என்ற வடமொழி நூல், “பல்லவர் மரபில் சிம்ம விஷ்ணு என்பவன் தோன்றினான். அவன் காஞ்சியிலிருந்து இறுதிப்பகைமையை அறவே நீக்கினான். அவன், தன் வீரத்தாலும் ஆண்மையாலும் பகை அரசர்களுடைய பொருள்களைத் தனக்கு உரிமையாகக் கொண்டான்” என்று கூறுகின்றது.

இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஆராயின், சிம்மவிஷ்ணு களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர்களுடன் போரிட்டான்; அவர்களை வென்றான்; காஞ்சியைக் கைப்பற்றினான்; பல்லவ நாட்டைத் தெற்கே விரிவாக்கினான் என்பன அறியலாம். இவன் மகனான மஹேந்திரவர்மன் ஆட்சி தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களிலும் புதுக்கோட்டைச் சீமையிலும் பரவி இருந்தது. ஆனால், அப்பகுதிகளை மஹேந்திரன் தன் காலத்திற் கைப்பற்றினான் என்று கூறமுடியாது. ஆதலால், அப்பகுதிகள் சிம்மவிஷ்ணு காலத்திலேயே பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டனவாதல் வேண்டும். அவ்வாறு அப்பகுதிகள் வரை இவன் கைப்பற்றியதாற்றான். சிம்மவிஷ்ணு மழ ருடனும் பாண்டியருடனும் போரிட வேண்டியவன் ஆயினன்.

சிம்மவிஷ்ணு காலத்தில் சோழநாட்டின் வடபகுதி யையும் தொண்டை நாட்டின் தென் பகுதியையும் களப்பிரர் ஆண்டுவந்தனர். உறையூர்வரை இருந்த சோணாட்டுப் பகுதியைச் சோழர் ஆண்டனர். திருச் சிராப்பள்ளி சேலம் ஜில்லாக்களிலுள்ள கொல்லிமலைப் பகுதியை மழவர் ஆண்டுவந்தனர். இவர்கள் நாடுகள் பல்லவர் கைப்படுமாயின், தனது நாட்டிற்கும் ஆபத்து உண்டாகலாம். என்று கருதியே பாண்டியன் சிம்மவிஷ்ணுவைத் தாக்கினன். எனினும், சிம்மவிஷ்ணு வெற்றிபெற்றான். பல்லவநாடு புதுக்கோட்டைச் சீமைவரை பரவிவிட்டது. புதுக் கோட்டைச் சீமையை ஆண்டுவந்த கொடும்பாளுர்ச் சிற்றரசர்கள் பல்லவர்க்கு அடங்கியவர் ஆயினர்.

சதுர்வேதி மங்கலங்கள்

சிம்மவிஷ்ணு தன் பெயரால், நான்கு வேதங்களிலும் வல்ல. மறையவர்க்குச் சிற்றுார்கள் பலவற்றைத் தானமாக அளித்தான். அவை சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்க்லங்கள் எனப்பெயர் பெற்றன. இப்பெயர், திருவொற்றியூரை அடுத்த மணலி என்னும் சிற்றுார்க்கு இருந்ததாகத் தெரிகிறது. வட ஆர்க்காடு ஜில்லாவில் சீயமங்கலம் என்று வழங்கும். கிராமம், பழைய காலத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்று பெயர் பெற்றிருந்தது. கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் இம்மாதிரிப் பெயர் பெற்றிருந்தது.

வைணவன்

‘சிம்மவிஷ்ணு’ என்ற பெயரைக்கொண்டே இவன் வைணவன் என்பதை எளிதில் உணரலாம். “பக்தி ஆராதித விஷ்ணு சிம்மவிஷ்ணு” என்று பல்லவர் பட்டயம் இவனைக் குறிக்கிறது. இதனால் இவன் பரம பாகவதன் என்பதை அறியலாம். மஹாமல்லபுரத்தில் உள்ள ஆதிவராகர் கோவில் இவன் கட்டியதாகும் என்று பலர் கருதுகின்றனர்.

ஆதிவாகர் கோவில்

இது மஹாமல்லபுரத்தில் இருக்கின்றது. இக் கோவிலில் ஆசனம் ஒன்றில் அமர்ந்தவண்ணம் ஒர் உருவச்சிலை காண்கின்றது. அதன் மேல் ‘ஸ்ரீ சிம்மவிஷ்ணு போதாதிராஜன்’ என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அவ்வுருவத்தின் தலைமீது உயர்ந்த கிரீடம் காணப்படுகிறது. மார்பிலும் கழுத்திலும் பலவகை மாலைகள் காண்கின்றன. அவ்வுருவத்தின் இரு புறங்களிலும் இரண்டு பெண்மணிகளைக் குறிக்கும் உருவச் சிலைகள் இருக்கின்றன. அவற்றின் தலைகள்மீது முடிகள் காணப்படுகின்றன. அவை சிம்மவிஷ்ணுவின் மனைவியரைக் குறிப்பனவாகும். அவ்வுருவங்கட்கு நேர் எதிர்ப்புறச் சுவரில் ‘ஸ்ரீமஹேந்திர போதாதிராஜன்’ என்பது எழுதப்பட்டுள்ளது. அதன் அடியில், முடி அணிந்த மஹேந்திரன் நிற்கின்ற நிலையில் ஓர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவ்வுருவம் பல அணிகளை அணிந்துள்ளது. அதன் வலக்கை, கோவிலின் உட்புறத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இடக்கை, முதல் அரசியின் வலக்கையைப் பிடித்தபடி உள்ளது. மஹேந்திரன் மனைவியர் இருவர் உருவங்களும் நின்றகோலத்தில் காணப்படுகின்றன.

‘சிம்மவிஷ்ணு தன் நினைவு இருத்தற்காகத் தன் சிலையையும் தேவியர் சிலைகளையும் ஆதிவராகர் கோவிலில் அமைத்திருக்கலாம். அவனது ஆட்சிக் காலத்தில் இளவரசனாக இருந்த மஹேந்திரவர்மன் தந்தையுடன் அக்கோவிலுக்குச் சென்றிருக்கலாம். அந்நிலைமையை உணர்த்தவே அவனுடைய சிலையும் அவன் தேவியர் சிலைகளும் அங்கு அமைக்கப்பட்டன. என்பது அறிஞர் கருத்து.

வடமொழிப் புலவர் தாமோதரர்

சிம்மவிஷ்ணு சிறந்த வடமொழிப் புலவன் ஆவன். அவன் காலத்தில் கங்க நர்ட்டைத் துர்விநீதன் என்பவன் ஆண்டுவந்தான். அதே சமயத்தில் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கை நாட்டைக் கீழைச் சாளுக்கிய முதல் அரசனான விஷ்ணுவர்த்தனன் என்பவன் அரசாண்டுவந்தான். அவன் வேங்கை நாட்டை ஆளத்தொடங்கிய காலம் ஏறத்தாழ கி.பி.614 ஆகும். அந்த விஷ்ணுவர்த்தனன் அவையில் சிறந்த புலவராகவும் அவனது நண்பராகவும் இருந்தவர் தாமோதரர் என்ற வடமொழிப் புலவர் ஆவர். அவரது மறு பெயர் பாரவி என்பது. அவர், கங்க அரசனான துர்விநீதன் சிறந்த வடமொழிப் புலவன் என்பதைக் கேள்வியுற்று அவனிடம் சென்றார். துர்விநீதன் அவரை வரவேற்று அவரைத் தன் நண்பராகக் கொண்டு மகிழ்ந்தான்.

சிம்மவிஷ்ணு அவைக்களம்

ஒருநாள் வடமொழியாளன் ஒருவன் சிம்மவிஷ்ணு அவைக்களத்திற்கு வந்து நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய பெருமாள் துதி ஒன்றைப் பாடினான். அப்பாடல் சொற்சுவை-பொருட்சுவைப் பொலிவுடன் விளங்கியது. அதனை அநுபவித்து மகிழ்ந்த சிம்மவிஷ்ணு, “இதனைப் பாடிய புலவர் யாவர்?” எனக் கேட்டான். உடனே அந்த வடமொழியாளன், “ஐயனே, வடக்கே ஆரியநாட்டு அனந்தபுரத்தில் கெளசிக மரபில் நாராயணசாமி என்று ஒருவர் இருந்தார். அவருக்குத் தாமோதரர் என்ற புத்திரர் பிறந்தார். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப் பெயர் பெற்றார். அவர் கீழைச்சாளுக்கிய நாட்டு அரசனான விஷ்ணுவர்த்தனனுக்கு நண்பரானார்; ஒருநாள் அவனுடன் காடு சென்றார். அரசன் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியைத் தின்றான்; தன்னுடன் வந்த புலவரையும் தூண்டித் தின்னச் செய்தான். புலவர் அப்பாபத்தைப் போக்கப் பல இடங்கட்கு யாத்திரை சென்றார்; இறுதியில் துர்விநீதன் அவையை அடைந்து அங்கு இருந்து வருகின்றார். அவர் பாடிய பாடலையே நான் தங்கள்முன் பாடினேன்” என்றான்.

காஞ்சியில் பாரவி

சிம்மவிஷ்ணு பாரவியைத்தன் அவையில் வைத்திருக்க விரும்பினான்; அதனால் துர்விநிதனுக்குப் பார்வியைத் தன்னிடம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தான். பாரவியும் காஞ்சியை அடைந்தார்; பல்லவன் அவையை அலங்கரித்தார்: அர்ச்சுனன் தவம் செய்த பொழுது சிவபிரான் வேடவடிவிற் சென்று அவனுடன் பொய்யாகப் போரிட்டு அவனுக்குக் காட்சியளித்த வரலாற்றை ஒரு நூலாக வடமொழியிற் பாடினார். அதன் பெயர் ‘கிராதார்ச்சுனீயம்’ என்பது.

மஹேந்திரவர்மன்

சிம்மவிஷ்ணு மகனானமஹேந்திரவர்மன் இளமைப் பருவத்தில் காஞ்சியில் இருந்த சிறந்த வடமொழிப் புலவர்களிடம் கல்வி கற்றான்; பாரவி காஞ்சிக்கு வந்த பிறகு அவரிடமும் சில நூல்களைப் படித்திருக்கலாம். இவன் வடமொழியில் நல்ல புலமை பெற்றிருந்தான்; தமிழிலும் ஒரளவு பயிற்சி பெற்றிருந்தான் என்று கூறலாம். இவன் தந்தையுடன் இருந்து பெருநாட்டின் அரசியலைக் கவனித்து வந்ததால், இளவரசனாக இருந்த பொழுதே அரசியல் அறிவு சிறக்கப் பெற்றிருந்தான். இவனது தந்தை ஏறத்தாழ கி.பி. 615 வரை அரசனாக இருந்தான் என்பதால், இவனது ஆட்சி ஏறக்குறைய கி.பி. 615இல் தொடங்கி 635இல் முடிவுற்றிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். இவன் பட்டம் பெறும்பொழுது ஏறத்தாழ முப்பத்தைந்து அல்லது நாற்பது வயதுடையவனாக இருந்தான் என்று சொல்லலாம்.

பட்டப் பெயர்கள்

இவனுடைய விருதுப் பெயர்கள் பலவாகும். அவை தமிழிலும் தெலுங்கிலும் வடமொழியிலும் இருந்தன. அவற்றுள் சில குணபரன், விசித்திரசித்தன்,[1] சேத்தகாரி,[2] அவனிபாஜனன், லளிதாங்குரன், புருஷோத்தமன், சத்தியசந்தன், நரேந்திரன், போத்த்ரையன், சத்ருமல்லன், பகாப்பிடுகு,[3] நயபரன், விக்கிரமன், கலகப்பிரியன், மத்தவிலாசன், அநித்யராகன்,[4] சங்கீர்ண ஜாதி,[5] நரவாஹனன், உதாரசித்தன், பிரகிருதிப்பிரியன், அலுப்தகாமன் என்பனவாகும்.

பேரரசு

இவனுக்குத் தெலுங்கில் பல விருதுப்பெயர்கள் இருத்தலும், குண்டுர் ஜில்லாவில் இவனது கல்வெட்டு காணப்படுதலையும் நோக்க, இவனது பேரரசு வடக்கே கிருஷ்ணையாறுவரை பரவி இருந்தது என்பதறியலாம். நாரத்தாமலை, குடுமியான் மலை, திருமெய்யம் முதலிய புதுக்கோட்டையைச் சார்ந்த மலைகளில் இவனுடைய கல்வெட்டுகள் இருத்தலால், தெற்கே புதுக்கோட்டைச் சீமை முடிய இவனது ஆட்சி சென்றிருந்தது என்பது தெரிகிறது. எனவே, பல்லவப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே புதுக்கோட்டைச் சீமை முடிய இருந்தது என்னலாம்.

குடும்பம்

இவனுக்கு மனைவியர் இருவர் என்பது மஹாபலிபுரத்து ஆதிவராகர் கோவில் உருவச்சிலைகள் கொண்டு கூறலாம். இவன் செல்வமைந்தன் நரசிம்மவர்மன் என்பவன்.


  1. சிற்பஓவியக் கலைஞன்.
  2. கோவில்கள் அமைப்பவன்.
  3. பகைவர் மீது இடிபோலப் பாய்பவன்.
  4. நடன - இசைக்கலைகளில் அறிஞன்.
  5. ‘சங்கீர்ணம்’ என்னும் தாளவகையைப் புதியதாகக் கண்டுபிடித்தவன்.