பல்லவர் வரலாறு/12. இராசசிம்மன் - (கி.பி. 685-705)

12. இராசசிம்மன்
(கி.பி. 666 - 705)

போர்கள்: முன்னுரை

இராசசிம்மன் காலத்தில் (கி.பி.685-705) எந்தப் போரும் நடத்திதில்லை என்றே வரலாற்று ஆசிரியர் அனைவரும் கொண்டனர். ஆயின், இவனுடைய கல்வெட்டுகளை ஊன்றிப் படிப்பின், அங்ஙனமே இவன் காலத்துச் சாளுக்கிய அரசனான விநயாதித்தன் (கி.பி.680-696) தொடர்பான பட்டயங்களை ஊன்றி ஆராயின் - இக்காலத்திற் பல்லவர் - சாளுக்கியர் போர் நடந்தது என்பதை உறுதியாக நம்பலாம்.

சாளுக்கியர் பட்டயங்கள்

(1) சோரப் பட்டயம் : ‘சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்.[1]

(2) வக்கலேப் பட்டயம்: விநயாதித்தன் திரையரச பல்லவனது முழுப்படையையும் கைப்பற்றினான்; கவேர அரசர் (சோழர்?) பாரசீக (பாண்டியர்?), சிம்மளர் முதுலியோரிடம் கப்பம் வாங்கினான் (?)[2]

இவற்றை நன்கு ஆராய்ந்தால் விநயாதித்தன், தன் தந்தை கட்டளை (விருப்பப)ப்படி, தெற்கே இருந்த பல்லவ, சோழ, பாண்டிய, சேரநாடுகளை அடக்கிக் களப்பிரர், ஹெய்ஹயர், மாளவர் என்பவர் வன்மையைக் குறைத்து, எங்கும் அமைதியுண்டாகப் படையெடுத்தான் என்பது புலனாகிறது.[3]

பல்லவர் கல்வெட்டுகள்

இராசசிம்மன் கல்வெட்டுகளில் இவன், சிறந்த மற்போர் வீரன், யானை நூல் அறிவில் வத்சராசனையும் பகதத்தனையும் ஒத்தவன்; போரில் விசயனுக்கும் இராமனுக்கும் ஒப்பானவன் உடல் வலியாலும் புகழாலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன்; நாடு பிடிப்பதில் பேரவாவுடையவன்; போரில் மிகக் கொடியவன்; தன் பகைவரை அழிப்பவன்; இவனது செல்வாக்கு உயர்கின்றது: அஞ்சத்தக்க பேராண்மை உடையவன்; அடக்கத்தினாலே வெல்லத்தக்கவன், போரிற் சிங்கம் போன்றவன்; வில்லையே துணையாகக் கொண்டவன்; பகைவர்க்குஇடியேறு போன்றவன்; கொடிய பேரரசுகளை ஒழிப்பவன்; போர்வீரரை அழிப்பவன்; போரில் மனவுறுதி உடையவன்; போரில் செல்வத்தை வெல்லுபவன் (பகைவருடைய பொருளைப்போரில் கைப்பற்றுபவன்); வீரத்தில் மகேந்திரனை ஒத்தவன் திடீரென இடிக்கும் இடிபோன்றவன் பல இடங்களை வென்றவன் போரில் களைப்படையாதவன்; செருக்கரை அடக்குபவன்...”[4] என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளன. இவனது வீரம், போர்த்திறம் பற்றி மேலும் பல கூறப்பட்டுள்ளன.

போரே செய்யாத ஒருவனைப்பற்றி இத்துணைத் தொடர்கள் வர இடமில்லை அன்றோ? இத் தொடர்களை நோக்க, இவன் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களில் ஈடுபட்டுத் தன் வீரத்தையும் பொறுமையையும் காட்டி வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதுதானே போதரும். ஆகவே, இராசசிம்ம பல்லவன். யாருடன் போரிட்டான் என்பதைக் கவனிப்போம்.

போரிட்டவன் விநாயதித்தனே

முதலாம் விக்கிரமாதித்தன் கி.பி.674-5இல் பரமேச்சுரவர்மனால் பெருவளநல்லூரில் முற்றிலும் முறியடிக்கப்பட்டான். அவன்தன் காலத்தில் மறுமுறை பல்லவனைத் தாக்கவில்லை. அவன் தான் நடத்திய போரில் தன் மகனை உடன் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆதலின் அவன் தன் இறுதிக் காலத்தில், தனக்குப் பின் பட்டம் பெற இருந்த தன் செல்வ மைந்தனை, தான் பெற்ற பெருந் தோல்விக்குப் பல்லவரைப் பழிவாங்குமாறு கட்டளை யிட்டிருக்கலாம். சிறந்த வீரர் பிறந்த மரபில் வந்த விநயாதித்தன், தந்தை கட்டளையை நிறைவேற்றச் சமயம் பார்த்திருந்தான்; தன் தந்தையைப் படுதோல்வி உறச்செய்த பரமேச்சுவரன் இறக்குந்தனையும் பொறுத்திருந்தான். என்னை? பரமேச்சுரன் காலத்தில் சாளுக்கியரது இரண்டாம் போர் இன்மையின் என்க. பரமேச்சுரன் இறந்து, இராசசிம்மன் கி.பி.690 இல் அரசன் ஆனதும், தன் தந்தை கட்டளைப்படி விநயாதித்தன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான் என்று கோடலே பொருத்தமாகும்.

இது தனிப்பட்ட போர்

விக்கிரமாதித்தன் முதலில் தன் மகனைப் படையுடன் அனுப்பினான். அவனுக்குப்பின் தானும் ஒரு படையுடன் வந்தான். காஞ்சியை முற்றுகையிட்டு வென்றான் என்று இருவர் செயல்களும், கி.பி. 674 இல் நடந்ததாகக் கோடலே நன்று. ஏனெனின், இராசசிம்மன் காலத்தில் சாளுக்கிய பல்லவர் போர்நடந்ததாகத் தெரியவில்லை ஆதலால் என்க என்று குறித்தனர் ஓர் ஆசிரியர்.[5] இருவர் செயல்களும் ஒரே காலத்தில் நடந்திருக்குமாயின், அவை சாளுக்கியர் பட்டயங்களில் விளக்கமாக இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்ஙனம் பெறாமை நன்கு ஆராயத்தக்கது. மேலும், தோற்ற அரசன் தன் மைந்தற்குக் கட்டளையிட்டுத் தம் மரபின் சிரவிழிற்கு ஈடுசெய்யத் தூண்டினான் எனக்கோடலே பொருத்தமானது. மேலும் தன் தந்தையும் பெருவீரனுமான இரண்டாம் புலிகேசியைப் பல இடங்களில் தோற்கடித்த பல்லவர் படையை எதிர்க்க, போர் அனுபவமே இல்லாத தன் மகனை விக்கிரமாதித்தன் முதல் முதல் அனுப்பினான் என்பதே பொருந்துவதாக இல்லை. அவனே பெரும்படைதிரட்டிக் கொண்டு தக்கவாறு வந்தான் என்றெண்ணுதலே நேர்மையானது. இங்ஙனம் தந்தை வந்த பிறகு, தந்தையின் கட்டளைப்படி பல்லவர் முதலியோரை அடக்கி அமைதியை நிலைநாட்ட விநயாதித்தன் வந்தான் என்னல், அவனை முதலில் அனுப்பினான் என்று கூறியதைவிட பொருத்த மற்றதாகும். தன் தந்தையான புலிகேசி பல்லவரால் அவமானம் அடைந்து இறந்தான் நாடு பாழாயிற்று: தானும் முயன்று இறுதியில் அவமதிப்பே பெற்றான். இந்த மனப்புண்ணினால் மடிந்த விக்கிரமாதித்தன் வீர உணர்ச்சித்தும்பப் ‘பல்லவரைப் பழிக்குப்பழிவாங்குவது உனது கடமை எனக் கட்டளையிட்டு இறந்தான் எனக் கொள்வதே பல்லாற்றானும் சிறப்புடையதாகும். இதனாற்றான், விநயாதித்தன், ‘தந் தந்தை கட்டளைப்படி’ பல்லவன் மீது படையெடுத்தான்.

பல்லவர்-சாளுக்கியர் போர்

விநயாதித்தன் கங்கபாடியைத் தாக்கினான். அப்பொழுது கங்கபாடியை ஆண்டவன் முதலாம் சிவமாறன் (கி.பி. 679-726) என்பவன்.[6] விநயாதித்தன் கங்கபாடியைத் தனதாக்கிக் கொண்டு. சிவமாறனைத்தனக்கு அடங்கி இருக்குமாறு செய்தான். அங்கிருந்து நேரே பல்லவ நாட்டைத் தாக்கினனோ. அல்லது முதலில் வடக்கிலிருந்து தாக்கினனோ தெரியவில்லை. போர் எங்கு எப்பொழுது நடந்தது என்பதும் தெரியவில்லை. விநயாதித்தன் ‘தந்தை கட்டளைப்படி’ படையெடுத்திருத்தல் வேண்டும்; இராசசிம்மன் அவன் கல்வெட்டுகள் கூறுமாறு போரில் அஞ்சாது பொறுமையுடன்நின்று போரிட்டு, இறுதியில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும், வேறு சான்றுகள் இன்மையால், இந்த அளவே இப்பொழுது கூறுதல் கூடும். ஆயினும், ஒன்று மட்டும் வற்புறுத்திக் கூறலாம். அஃதாவது இப் போர்மிகவும் கடுமையாக நடந்திருத்தல் வேண்டும் என்பது. என்னை? இராசசிம்மன் கல்வெட்டுகள் அவனைப் போரில் மனவுறுதி உடையவன்; போரில் களைப்படையாதவன் எனப் பலபடக் கூறலானும் (போருக்குப் பின்) கடுமையான பஞ்சம் - இவன் காஞ்சிநகரத்தையே துறக்கும் படியான கொடிய வற்கடம் - மூன்று ஆண்டுகள் இருந்தமையாலும் என்க. வற்கடம் இவனது ஆட்சித்துவக்கத்திலேயே வந்துவிட்டதால், இப் போரும் இவன் பட்டம்பெற்ற ஆண்டிலேயே நடந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

போரின் பயன்

இப் போரினால் சாளுக்கியனுக்கும் நன்மை இல்லை. என்னை? விநயாதித்தன் எந்த நன்மையும்பெற்றதாகச்சாளுக்கியர் பட்டயங்கள் குறிக்காமையின் என்க. பல்லவனும் பெற்ற நன்மை ஒன்றுமில்லை. இவனுக்குமுன் இருந்த அரசர்கள் ஆற்றிய ஒயாப் போர்களால் துன்புற்ற பல்லவநாடு, இவனது ஆட்சியின் தொடக்கத்திலும் துன்புற நேர்ந்தது. பல துளி பெருவெள்ளமாதல் போல எல்லாப் போர்களின் விளைவும் திரண்டு கொடிய வற்கடமாக மாறியது.

பல்லவர் - கங்கர் போர்

மேற்சொன்ன போருக்கு முன்னோ பின்னோ இராசசிம்மன் கங்கநாட்டின்மீது படையெடுத்தான். இப் படையெடுப்பு பூவிக்கிரம கங்கன் (கி.பி. 650-670) பல்லவர்க்கு இழைத்த இன்னலுக்கேற்ற பரிசாகும் என்று கூறப்படுகிறது. முதலாம் சிவமாறன் பல்லவனை வென்றதாகக் கங்கர் பட்டயம் கூறுகின்றது.[7] உண்மை உணரக்கூட வில்லை.

இங்ஙனம் வடக்கிலும் மேற்கிலும் பகைவர் இருந்து இடர் விளைத்துவந்தமையாற் போலும், இராசசிம்மன் கல்வெட்டுகள் எல்லாம் இராசசிம்மன் போர்ச் சிறப்பையும் வீரத்தையும் நாட்டைப் பகைவரிடமிருந்து காத்தமையையும் தன் பெருமை குன்றாது பேரரசனாகவே இருந்து வந்ததையும் பலபடப் பாராட்டிக் கூறலாயின.[8]

கொடிய பஞ்சம்

இப் பேரரசன் காலத்திற்குமுன் பல்லவர்க்கும் சாளுக்கியர்க்கும் ஓயாத போர்கள் நடைபெற்றன அல்லவா?

மகேந்திரன்-புலிகேசிப்போர், நரசிம்மவர்மன்-புலிகேசிப்போர் - விக்கிரமாதித்தன் போர் ஆகியவற்றால் பல்லவநாடு என்னபாடு பட்டிருக்கும் போதாக்குறைக்கு இவன் காலத்தில் பல்லவர் சாளுக்கியர் போர், பல்லவர்-கங்கர் போர் நடந்தன. இவற்றால் பல்லவர் மூலபண்டராம் வற்றியது; பொருள்நிலை முட்டுப்பாடு எய்தியது. அதன் பயனாக நாட்டில் பெரிய வற்கடம் தோன்றியது. அது தோன்றியகாலம் இராசசிம்மன் காலமாகும். ‘அரசனே காஞ்சியைத் துறக்க வேண்டியவன் ஆயினான். அவன் அவைப் புலவரான தண்டி எனப்பாரும் கற்றோர் பிறரும் நாடெங்கும் அலைந்து திரிந்தனர். குடிகள் பெருந்துன்பம் உழன்றனர் சாலைகள் சீர்கெட்டுக் கிடந்தன; குடும்பங்கள் நிலைகெட்டன. அரசியல் நிலை தடுமாறிற்று,’ என்று தண்டி தாம் எழுதியுள்ள ‘அவந்தி சுந்தரி கதா’ என்னும் நூலிற் கூறியுள்ளார்.

இக்கொடிய பஞ்சம் கி.பி. 686 முதல் 689 வரை (3 வருடகாலம்) இருந்ததாகச் சீன நூல் ஒன்று கூறுகிறது. இந்தக்காலம் இராசசிம்மன் காலமே ஆகும் அன்றோ? அப்பொழுது வச்சிரபோதி என்னும் பெளத்தப் பெரியார் ஒருவர் காஞ்சிக்கு வந்தனர். அவரை இரண்டாம் நரசிம்மவர்மன் (இராசசிம்மன்) வற்கடம் தீர இறைவனை வேண்டுமாறு வேண்டியதாக முற்சொன்ன சீனநூல் கூறுகிறது. அப் பெரியார் வேண்ட மழை வந்ததென்று அந்நூல் கூறுகிறது.[9] (இராசசிம்மன்) வற்கடம் தீர்ந்த பிறகு காஞ்சியில் இருந்த ‘கடிகையைச் செவ்வைப் படுத்தினான்’ என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறலைக் கொண்டும் பஞ்சக் கொடுமையை நன்குணரலாம்.

சிவபத்தன்

இராசசிம்மன் பஞ்சத்திற்குப் பிறகு, தென் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் கயிலாசநாதர் கோவிலைக் காஞ்சியிற்கட்டினான்; பிறகு காஞ்சியில் ஐராவதேச்சுரர் கோவிலையும் கட்டினான்; மகாமல்லபுரத்தில் கடற்கரை ஒரமாக உள்ள கோவிலை அமைத்தான் பனமலைக்கோவிலையும் அமைத்தான்; ஒவ்வொரு கோவிலிலும் தன் விருதுப் பெயர்களை வெட்டு வித்தான். கைலாசநாதர் கோவிலில் மட்டும் ஏறத்தாழ 250 விருதுப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் ‘ரிஷப லாஞ்சனன், ஸ்ரீசங்கர பக்தன், ஸ்ரீ ஆகமப் பிரியன்,[10] சிவசூடாமணி’[11] என்பன போன்றவை இவனது சைவ சமயப் பற்றைக் குன்றின் மீதிட்ட விளக்குப் போல ஒளிரச் செய்கின்றன. இராசசிம்மன் சைவ சித்தாந்தத்தில் பேரறிவுடையவன் என்னும் கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[12] இவன் விருதுகளில் ஸ்ரீவாத்ய வித்யாதரன் என்பது ஒன்று. இதனால், இவன், ‘இசைக் கருவிகள் இசைப்பதில் விஞ்சையனை (வித்யாதரனை) ஒத்தனவன்’ (பெரிய இசைப் புலவன்) என்பதும் நன்கு புலனாகிறது.

“இவன், பரமேசுவரன் உறுப்புகள் யாவும் ஒன்றுகூடிமனிதனாகப் பிறந்தாற் போன்றவன், உடல் வலியிலும் பெரும் புகழிலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன். இந்த கூடித்திரிய சூடாமணி தோவர்க்கும் பிராமணர்க்கும் செல்வம் தந்தவன்; தன் கீழ் உள்ள நிலமகளை நான்மறையாளர் நுகருமாறு செய்தவன்”[13] என்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. மற்றொன்று, ‘பரம மகேசுவரனும் மகேந்திரனை ஒத்தவனுமான இராசசிம்மன் பிராமணர் கல்லூரியைத் திரும்பவும் அமைத்தான் கயிலாயத்தை ஒத்த கயிலாசநாதர் கோவில் என்னும் சந்திரசேகரர் கோவிலைக்கட்டினான்.” என்று கூறுகின்றது. பிறிதொரு கல்வெட்டில் பின்வரும் செய்தி வெட்டப்பட்டுள்ளது. “சிவபெருமானுக்குக்குகன் பிறந்தாற்போலப் பல்லவப் பேரரசனான உக்கிரண்டனுக்குச் சுப்பிரமணியன் போன்ற ‘அத்யந்தகாமன்’ என்னும் பல்லவ அரசன் பிறந்தான். இவன் சைவ நெறியில்[14] நடந்து மலத்தை எல்லாம் ஒழித்தவன்; இந்தக் காலத்தில் தேவரைக் கண்டவன் துஷ்யந்தன் முதலானோர் வான் ஒலி கேட்டதில் வியப்பில்லை. நற்குணம் பறந்தோடிப் போன இக்காலத்தில் அவ் வான் ஒலியை ஸ்ரீபரன் (இராசசிம்மன்) கேட்டது வியப்பே. இவன், ‘கலி’ என்னும் மகரம் குடிகளை விழுங்கியபோது அவர்களைக் காத்தவன். இவன் பரந்து கிடக்கும் இச் சிவன் மந்திரத்தை (கோவிலை)க் கட்டினான். இஃது இவன் புகழைப் போலவும் நகையைப் போலவும் இருக்கின்றது. பாம்பரசனை அணியாகக் கொண்டவனும் தேவ அசுர கணங்கள் போற்றுபவனும் ஆகிய சங்கரன், இந்த இராசசிம்ம, பல்லவேச்சுரத்தில் நெடுங்காலம் குடிகொண்டு இருக்கட்டும். இடபத்தை அடையாளமாக உள்ளவன் இந்தக் கோவிலில் காட்சி கொடுப்பானாக. ரணசயனும், ஸ்ரீபரனும், சித்ரகார்முகனும், சிவ சூடாமணியுமாகிய பேரரசன் நெடுங்காலம் உலகத்தைக் காப்பானாக. இவன் சைவசித்தாந்தப்படி நடப்பவன்; மகாதேவனுக்கு அடியவன்.”[15]

ரணசயன்

இவனுக்கு இப்பெயர் எப்படி வந்தது? இவன் சிற்றரசனாக இருந்தபொழுது நடந்த விக்கிரமாதித்தன் படையெடுப்புப் போரில், தந்தைக்கு உதவியாக இருந்து சில இடங்களில் நடந்த போரில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அந்த உரிமை கொண்டே ரணரசிகனான விக்கிரமாதித்தனை வெற்றி கொண்டதால், தன்னை ‘ரண சயன்’ என்று கூறிக்கொண்டான் போலும்? இங்ஙனமே, நெல்வேலிப் போரில் தன் தந்தையான நெடுமாறனுக்குத் துணையாகச் சென்ற கோச்சடையன் (சடிலவர்மன்), தான் விக்கிரமாதித்தனை வெற்றிகொண்ட சிறப்பு நோக்கித் தன்னை ‘ரணதீரன்’ என்று கூறிக்கொண்டிருக்கலாம். இங்ஙனம் பொருள் கொள்ளின் வரலாற்று முறையில் இடர்ப்பாடின்மை அறிக.

வான் ஒலி கேட்ட வரலாறு

சென்னைக்கும் திருவள்ளூருக்கும்[16] இடையில் உள்ள ‘தின்னூர்’ என்பது இராசசிம்மன் காலத்தில் திருநின்றவூர் எனப்பெயர் பெற்று இருந்தது. அப்பதியில் நான்மறையாளர் மிக்கிருந்தனர். அவருட் பூசலார் என்பவர் ஒருவர். அவர் சிறந்த சிவபக்தி மிகுந்தவர்; தமது பத்தி மேலிட்டால் சிவன் கோவில் ஒன்றைக் கட்ட முற்பட்டார். பொருளுக்குப் பல இடங்களில் அலைந்தார். முன்சொன்ன (கி.பி. 686-689) பஞ்சக் கொடுமையால் பணம் கொடுப்பார் இல்லை. ஆயினும், அவர் அவா மிகுதியினால் இன்னின்னவாறு கோவில் அமைக்கவேண்டும் என்பதை மனத்தில் எண்ணினார்; இறுதியில் தம் உள்ள நினைவில் உருத்தெரியாத கோவிலை அமைத்தார்; சிவனாரை அக்கோவிலில் எழுந்தருளப் பண்ண ஒரு நாளைக் குறித்தார். அந்த நாளே கயிலாசநாதர் கோவிலைக் கட்டி முடித்த இராசசிம்மன் கும்பாபிடேகம் செய்ய எண்ணிய நன்னாள் ஆகும். அதற்கு முன்னாள் இரவில் இறைவன் அரசன் கனவில் தோன்றி, தாம் பூசலார் கட்டிய கோவிலில் அடுத்த நாள் எழுந்தருளப் போவதால், வேறு நாள் குறித்துக்கொள்ளும்படி கூறினார். அது கேட்டு வியந்த அரசன் திருநின்றவூர் சென்று பூசலாரைக்கண்டு, அவர்கட்டிய கோவிலைக் காட்டும்படி வேண்டினான். பூசலார் திடுக்கிட்டுத் தம் வரலாற்றை விளங்க உரைத்தார். அரசன் பெருவியப்பெய்தி அகக் கோவில் கட்டிய அன்பர்க்கு வணக்கம் செலுத்தி மீண்டான். இதுவே பெரிய புராணம் கூறும் பூசலார் புராணச் செய்தி ஆகும். இதில் ‘சிவனார் கனவிற் சென்று கூறினார்’ என்பது, கல்வெட்டில், ‘அரசன் வான் ஒலி கேட்டான்’ என்று கூறப்படுகிறது.[17]

கோவில்கள்

இராசசிம்மன் கட்டிய கயிலாசநாதர் கோவிலைப்பற்றி இப்பகுதியின் இறுதியில் விளக்கமாகக் கூறுவோம். இங்கு இவன் கட்டிய பிற கோவில்களைப் பற்றிக் கவனிப்போம்: மாமல்லபுரத்தில் இப்பொழுதுள்ள கடலோரத்துக்கோவில் இவன் கட்டியதே யாகும். அங்கு இராசராசசோழன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், “கரையோரம் மூன்று கோவில்கள் இருக்கின்றன. அவை முறையே “கூடித்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரம், இராசசிம்ம பல்லவேச்சுரம், பள்ளிகொண்டருளிய தேவர் கோவில் என்பன” என்பது காணப்படுகிறது. முதல் இரண்டும் கடலுள் ஆழ்ந்து கெட்டன போலும் இவற்றைக்குறிக்க இரண்டு, பலிபீடங்களும் ஒரு கற் கொடிமரமும் இன்றும் இருக்கின்றன. கடலை நோக்கியபடி சிவலிங்கம் ஒன்று இருக்கின்றது. அது கூடித்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரத்தில் இருந்ததாம். இரண்டாம் கோவிலும் சிவன் கோவிலாம். இப்பொழுது பலி பீடந்தான் இருக்கிறது. அதைச்சுற்றிலும் இராசசிம்மன் விருதுகள் காணப்படுகின்றன.[18] மூன்றாம் கோவிலே இப்பொழுது இருப்பது. அதுவே திருமங்கையாழ்வாரது பாடல் பெற்ற சலசயனம் ஆகும். சலசயனப் பெருமாள் என்பதற்கு நீர் அருகில் பள்ளிகொண்டுள்ள பெருமான் என்பதுபொருள் ஆகும். இங்ஙனமே தரையில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் தல சயனம் எனப்படும். இக்கோவிலையும் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.[19] இக்கோயில் பிற்காலத்தில் விசயநகர மன்னரால் புதுப்பிக்கப்பட்டது.

இராசசிம்மன் காலத்துப் புலவரான தண்டி என்பார், கடற்கரைக் கோவிலைப் பற்றிக் கூறியிருத்தல் படிக்கத்தக்கது - அது, “மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவிலிற் பள்ளி கொண்டுள்ள திருமால் படிம (மூர்த்த)த்தின் மணிக்கட்டு ஒன்று பின்னமுற்றது. அதைச் செப்பனிட்டவன் ஒரு சிற்பி. நாண் அவன் விருப்பப்படி அங்குச் சென்று பார்த்தேன். அப் பெருமான் திருவடிகளைக் கடல் அலைகள் மோதி அலம்பிக் கொண்டிருந்த காட்சி அழகியது. திடீரென அலைகளால் திருவடியண்டைத் தள்ளப்பட்ட செந்தாமரை மலர் ஒன்று கண் இமைப்பதற்குள் விஞ்சையை (வித்யாதர) உருப்பெற்றுப் பெருமானை வணங்கி விண்புக்க காட்சியை நான் நேரே கண்டு களித்தேன்”[20] என்பது.

இத் திருமால் கோவிலுக்கு முன்புறமாகச் சிவன்கோவில் ஒன்று இராசசிம்மனால் கட்டப்பட்டது. அதனால் திருமால் பாதங்களில் அலை மோதிய நிலை பிற்காலத்தில் மாறிவிட்டது. அப் பெருமான் படிமத்தின் மணிக்கட்டைச் சிற்பி செப்பனிட்டான் என்று தண்டி கூறுதலாலும், அப் படிமம் பல்லவரால் பிரதிட்டை செய்யப்பட்டது என்று தண்டி கூறாமையாலும், அப் பெருமான் படிமம் மிகப் பழைமையானதே என்று கொள்ளத் தடையில்லை.[21]

கடற்கரையில் இப்பொழுதுள்ள கோவில் ஆறு அடுக்குக் கும்ப (விமான) த்தை உடையது; உள்ளறை ஒன்றையே கொண்டது. அவ்வுள்ளறையைச் சுற்றித் திருச்சுற்று இருக்கிறது. அதில் ஒன்பது சிறிய கோவில்கள் இருக்கின்றன.

கடற்கரை ஓரமாக ஒரு கல் தொலைவில் உள்ள முகுந்த நாயனார் கோவிலும் இராசசிம்மன் கட்டியதே ஆகும். இஃது அருச்சுனன் தேரைப்போலச் சிறியதாக அமைக்கப்பட்டது. இதன் தூண்கள் உருண்டு எவ்வித வேலைப்பாடும் இன்றி இருக்கின்றன. தென் இந்தியக் கோவில்களில் இங்ஙனம் காணப்படல் இதுவே முதன் முறையாகும், வராக மண்டபக்குன்றின் மீதுள்ள ஒலக்கண்ணேசுவரர் கோவிலும் இராசசிம்மன் காலத்ததேயாகும். மாமல்லபுரத்திற்கு வடக்கே மூன்று கல் தொலைவில் சாளுவன் குப்பத்தில் உள்ள (1) புலிகக்குகை[22] (2) அதிரண சண்டன மண்டபம் என்பன இக்காலத்தனவே ஆகும். மாமல்லபுரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்த காலத்தில் இக் குப்பம் அதனைச் சேர்ந்த பகுதியாக இருந்திருத்தல் வேண்டும். புலிக்குகையில் ஒன்பது புலிகள் (சிங்கங்கள்?). வாயைத் திறந்தவண்ணம் குகையின் முகப்பில் செதுக்கப்பட்டுள்ளன. இதில் எந்தத்தெய்வத்தின் சிலை (துர்க்கை?) வைக்கப்பட்டதென்பது தெரியவில்லை. இதன் தோற்றம் விநோதமாக இருக்கின்றது. இரண்டாம் மண்டபம் சிவனுக்கு அமைந்த குகைக்கோயில் ஆகும். அது பேரளவில் மகேந்திரன் காலத்து அமைப்பைக் கொண்டதாகும். இவை இரண்டும் அண்மையில் இருப்பதால், ஒரே அரசன் காலத்தனவாகக் கொண்டனர் அறிஞர். புலிக் குகையில் கல்வெட்டு இல்லை. மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அதிரண சண்டன் என்னும் அரசன் பெயரைக் குறிக்கின்றன. இப்பெயர் இராசசிம்மன் கொண்டதாதலால். இக் கல்வெட்டுகள் அவன் காலத்தனவே எனக் கொள்ளல் பொருத்தமாகும்.[23]

விழுப்புரத்திற்கு 16 கல் தொலைவில் உள்ள பனமலையில் இராசசிம்மன் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதுதவிரக் காஞ்சிபுரத்தில் முன்னர்க் கூறப்பட்ட ஐராவதேச்சுரர்கோவில் இவனாற் கட்டப்பட்டதே ஆகும். இவன் மனைவியான ரங்கபதாகை என்பவள் கயிலாசநாதர் கோவிலுக்கு முன்பு வலப்பக்கமாக உள்ள ஆறுசிறிய கோவில்களில் மூன்றாவதைக் கட்டியுள்ளார்.

கோவில் இலக்கணம்

இராசசிம்மன் கட்டிய கோவில்கள் தொலைவில் இருந்து நோக்கின், தருமராசர் தேரைப்போலவே தோன்றும் வரவரச் சிறுத்து உயரும் தட்டுகளைக் கொண்டவை. உள் அறை வேறு, கோபுரம் வேறு என்று இராது. நான்கு பக்கங்களிலும் உள்ள-புரைகளில் சிவலிங்கம் இருக்கும். கோவிலுக்குள் எழுந்தருளுவித்த லிங்கங்கள் எட்டு அல்லது பதினாறு பட்டைகள் தீர்ந்தவை; சில பக்கங்களில் காடி வெட்டியவை. சிவலிங்கத்திற்குப் பின் சுவர்மீது சோமாஸ்கந்தர் சிலை இருக்கும்.திருவாசிகள் ஒற்றைவளைவு கொண்டவை. இவை அனைத்தையும் விடச் சிறந்த அடையாளம் ஒன்றுண்டு. அஃதாவது, தூண்களுக்கு அடியில் பின் கால்கள்மீது எழுந்து நிற்கும் சிங்கங்கள் வெட்டப்பட்டு இருப்பதே ஆகும். சில சிங்கங்கள் சுண்ணாம்பினால் அமைக்கப்பட்டிருக்கும்.


கயிலாசநாதர் கோவில்[24]

கோவில் இடமும் அமைப்பும்

இராசசிம்மன் கட்டிய உலகம் போற்றும் கயிலாச நாதர் கோவில் நகரத்தனி மேற்றிசையில் கழனிகளுக்கு இடையில் இருக்கிறது. இதற்குப் பின்புறம் சிறிது தொலைவில் இன்றைய கச்சி நகரின் மேற்கு எல்லை முடிவு பெறுகிறது. ஆயின் இது கட்டப்பட்ட காலத்தில், இந்தக் கோவில், நகரத் தெருக்களுக்கு இடையிற்றான் இருந்தது என்பது பல கல்வெட்டுகளால் தெரிகின்றது. இக் கோவிலுக்குப் புறமதில் திருமடைவளாகம் முதலியன இருந்தன. ஏராளமான நிலங்கள் இருந்தன. கோவிலைச் சுற்றிலும் மாடவீதிகள் இருந்தன.[25] இராசசிம்மன், மாடெல்லாம் சிவனுக்காகப் பெருஞ்

செல்வம் வகுத்தல் செய்தான்’ என்று சேக்கிழார் பெருமான் கூறியது முற்றும் உண்மையே ஆகும்.

இதற்கு எதிரில் ஓர்அழகிய குளமும் நந்தியும் இருக்கின்றன. அவை இரண்டும் இன்றுள்ள கோவில் வாயிலுக்கு ஏறத்தாழ 100 அடித்தொலைவில் உள்ளன. நந்தி பெரியது; கல்லால் ஆயது. அஃது உள்ள மேடை மீது இராசசிம்மனுக்குரிய சிங்கத் தூண்கள் குறைந்து நின்ற வண்ணம் இருக்கின்றன. இவற்றை நோக்க, நந்திக்கு மேல் கற்கூரை இருந்திருத்தல் வேண்டும்என்பது புலனாகிறது. இன்றுள்ள வாசலுக்கு எதிரில் கோவிற் கிணறு ஒன்றும் இருக்கின்றது. கோவிலுக்குப் பின்புறத்திலும் ஒரு கிணறு உள்ளது. இவை இரண்டும் பண்டைக் கிணறுகளே. மேலும் வாயிலை அடுத்து. இன்றுள்ள மதிற் சுவருக்கு வெளியே வலப்பக்கம் இரண்டும் இடப்பக்கம் ஆறுமாக எட்டுச் சிறிய கற்கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் லிங்கங்கள் இருக்கின்றன. இவற்றையும் முன் சொன்னவற்றையும் நோக்க, கோவிலின் வெளிச்சுற்று ஒன்று இருந்திருத்தல் வேண்டும் என்பதும், கோவில் மிகப்பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு புலனாகும்.

இன்றுள்ள கோவிற் பகுதிகள்

கோவில் வாயில் சிறியது. கோவில் நீள் சதுரமாக இருக்கிறது. வாயிலைத் தாண்டியவுடன் எதிரேதனித்துள்ள சிறியகோவில் ஒன்று இருக்கிறது. அதற்கு இருபுறங்களிலும் உட்செல்ல வழிகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக உட்செல்லின், நீள நாற்கோண (சதுர)க்கோவில் இருக்கின்றது. அதனைச்சுற்றிலும் ஏறத்தாழ ஆறடி அகலுமுள்ள திருச்சுற்று அமைந்துள்ளது. திருச்சுற்றில் உள்ள உட்புறச் சுவர்கள் பல சிறு கோவில்களாகவே காட்சியளிக்கின்றன. இறையிடம், முன்மண்டபம் ஆகிய இரண்டும் சுவர்களை உடையவை. முன்மண்டபத்தைச் சேர்ந்த முற்பகுதி பொதுமுறையான (சாதாரண) மண்டபமாகவே இருக்கிறது. இறையிடத்து உட்சுவர்களிலும் புறச்சுவர்களிலும் சிற்பங்கள் பலவாக இருக்கின்றன. இறையிடத்தைச் சுற்றியுள்ள வெளிச்சுவரில் சிறு கோவில்கள் பல காணப்படுகின்றன. இறையிடத்துக்கு மேல் கண்ணைக் கவரும் அழகிய கும்பம் இராசசிம்மன் நினைவையும் பல்லவர்காலக் கட்டடக் கலையையும் உணர்த்தி நிற்கின்றது.

முன்கோயில்

வாயிலுக்கு எதிரே உள்ள சிறிய கற்கோவில் பல படிக்கட்டுகளை உடையது.உயர்ந்த இடத்தில் பெரிய லிங்கம் நான்கரை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அது பதினாறு பட்டைகளைக் கொண்ட லிங்கம். லிங்கம் உள்ள இடத்திற்குப் பின்னுள்ள சுவரில் அம்மையப்பர் அரியணையில் அமைந்துள்ள கோலம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. உள்ளறையை அடுத்த வெளி மண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களில் சிவபெருமானைக் குறிக்கும் பெரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று சடையை விரித்த சிவனார் உருவம்; மற்றொன்று சிவனார் எட்டுக் கைகளுடன் ‘லதாவ்ரிசிக’ நடனம் செய்தலைக் குறிப்பது அஃதாவது, இடக்கால் முன்புறம் மடித்து ஊன்றி, வலக்கால் பின்புறம் மடித்துத்துக்கி, இடக்கைகளில் ஒன்றுதலை முடிக்குமேல் தூக்கியவண்ணம் நடிக்கும்பொழுது இடக்கைகள் இரண்டு பந்தை எறிந்து பிடித்தல். இது விந்தையான நடனவகை ஆகும். இந்த நடனவகையையே இக் கோவில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. இவ் விந்தையான நடனவகையே இராசசிம்மனைக் களிப்பித்தது போலும் இக் கோவிலின் புறச்சுவரில் அழகிய லிங்கங்கள், யாழ் (வீனை) வாசிக்கும் விஞ்சையர்கள், தக்கிணாமூர்த்தி, எட்டுக் கைகளை உடைய அகோர வீரபத்திரர் முதலியவரின் பல உருவங்கள் பொலிகின்றன. லிங்கத்திற்குப் பின்னுள்ள புறச்சுவரில் அழகிய அம்மை அப்பர் அரியணைமீது அமர்ந்துள்ள கோலம் சால அழகியது; இருவருக்கும் இரண்டு குடைகள் கவிக்கப்பட்டுள்ள இச் சுவருக்கு மேலுள்ள கும்பத்தில் சிவனாரது யானைக்கை நடனம் நேர்த்தியாக ஒவியஞ் செய்யப்பட்டுள்ளது. கும்பத்தின் ஏனைய பக்கங்களிலும் பிறநடன வகைகள் காட்டப்பட்டுள்ளன.

சுற்றுச் சுவர்கள்

முற்கோவிலுக்கு இடப்புறமுள்ள சுற்றுச் சுவரில் பதினொருவர் ஒருபொதுப் பீடத்தில் அமர்ந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள சிற்பம் பல்லவ அரசரைக் குறிப்பதா என்பது விளங்கவில்லை. அதற்கு நேர் எதிரில் வலப்புறச் சுவரில் இங்ஙனமே பன்னிருவர் உருவங்கள் தோன்றுகின்றன. இவை அன்றி நந்தி, அம்மையப்பர் கோலம், முதலியவற்றைக் குறிக்கும் சிற்பங்கள் பலவாகும்.

இறை இடம்

கயிலாசநாதரைக் குறிக்கும் பெரிய லிங்கம் பதினாறு பட்டைகளை உடையது; எட்டடி உயரம் உள்ளது. இதன் பின்சுவரில் சோமாஸ்கந்தப் படிமம் இருக்கின்றது. இறை யிடத்தைச் சுற்றிவரும் திருச்சுற்று ஏறத்தாழ இரண்டடி அகலம் உடையது. இடப்பக்கம் உள்ள புழையில் படுத்து நுழைந்து ஊர்ந்து வலப்பக்கம் தரையை ஒட்டினாற் போல் உள்ள சிறிய வழியே வெளிவருதல் வேண்டும். இறையிடத்தை அடுத்துள்ள வலப்பக்க அறையில் பழுதற்ற மிக்க அழகொழுகும் நடனச் சிற்பம் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. வேறு அம்மை அப்பர் சிற்பங்கள் உள. இடப்புற அறையிலும் நடனச் சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றுட் சில பழுது பட்டிருக்கின்றன. இந்த இரண்டு அறைகளும் பூட்டப்பட்டுள்ளன.

முன்மண்டபம்

இறையிடத்திற்கு எதிரில் உள்ள ഥങ്ങപ് அழகர்னது. தூண்கள் வேலைப்பாடு கொண்டவை; பிற்காலச் சோழரின் தூண்கட்கு மூலமாக அமைந்தவை மண்டபத் தரையிலும் கூரைமீதும் கல்வெட்டுகள் இருக்கின்றன.இம்மண்டபப் பகுதியைச் சேர்ந்ததே வெளி மண்டபம் ஆகும். அவ்விடத்தில் பதினாறு தூண்கள் இருக்கின்றன. அவற்றில் பல கெட்டு விட்டன; கல்வெட்டுள்ள தூண்கள் ஐந்து அவற்றில் பழுதுற்றிருப்பவை மூன்று.

உள்ளறை மண்டபப் புறச்சுவர்

இறையிடத்துச் சுற்றிலும் சுவரில் சிறு கோவில் அமைப்பு பல இடங்களில் உள்ளது. ஒருபுறம் சிவனார் நடனம் அல்லது அமர்ந்த கோலம் அல்லது வேறொரு கோலம் காணப்படுகிறது. அதன் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பிரமன் - நாமகள், திருமால் - திருமகள் இவர்கள் சிவனாரை வணங்குதல் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. ஊர்த்துவத் தாண்டவத்தைக் குறிக்கும் சிற்பங்கள் சில உள. நந்தி நடனம், கணங்களின் நடனம், விஞ்சையர் யாழ் வாசித்தல் முதலியன காணலாம்.[26] மண்டபச் சுவரில் நீண்ட வடிகாதுடைய ஆண் உருவம் தலைமீது முடிதாங்கிஉள்ளது. அதற்கு இருபுறத்தும் இரண்டு பெண் உருவங்கள் உள்ளன. கீழே ஓர் ஆண் உருவம் (மகன்?) இருக்கிறது. இச் சிற்பம் இராசசிம்மன் குடும்பத்தைக் குறிப்பதா என்பது விளங்கவில்லை. இதனை அடுத்துப் பதினாறு கைகளையுடைய காளி சிங்கத்தின்மீதுள்ள கோலம் அழகாகச் செய்யப்பட்டுள்ளது.

சிறு கோவில்கள் 58

திருச்சுற்றுப் பாதையை அடுத்த கோவில் மதிற் சுவர் உட்பக்க முழுவதும் சிறு கோவில்கள் 58 உள்ளன. இரண்டு கோவில்கட்கு இடையில் சுவரில் அம்மனைக்குறிக்கும் பல திறப்பட்ட சிற்பங்களே பலவாகக் காண்கின்றன. சில அம்மை அப்பரைக் குறிப்பன. அம்மன் இடக்கையில் கிளியேந்தி அமர்ந்துள்ள நிலை கீழே இரண்டு யானைகளின் தோற்றம்-தோழிப்பெண் தோற்றம் இவைகண்ணைக் கவர்வனவாக உள்ளன. சிறு கோவில்கள் எனப்படும் மாடங்களில் பாற்கடல் கடைந்த வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு, மார்க்கண்டனுக்காக யமனை உதைத்தவரலாறு, பரமன் - பார்த்திபன் போர், இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சி, நால்வர்க்கும் அறம் உரைத்த காட்சி, திருமால் சிவனை வழிபட்டு ஆழிபெற்ற

வரலாறு, இராவணன் வழிபட்ட ஆன்ம லிங்கத்தை அனுமார் வழிபட்டுக் கவர்ந்து செல்லல் முதலிய வரலாறுகளைக் குறிக்கும் சிற்பங்கள் அழகாக அமைந்துள்ளன. அம்மை அப்பர் திருமணம், பிரமன் நாமகள் திருமணம், திருமால் - திருமகள் திருமணம் இவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. பராசக்தியின் எழுவகை உருவங்கள் ஓரிடத்தில் காட்டப்பட்டுள்ளன. இவ்விடத்திற்கு எதிர்புறச் சுவரில் உருத்திரர் பதினொருவர் உருவங்கள் இருக்கின்றன. அம்மை யாழ் வாசிப்பது சில சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளது. சிவனார் சடை முடி மிகத் தெளிவாகப் பல சிற்பங்களில் விளக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் எல்லாவற்றிலும் பின் வருபவை பலவாகக் காணப்படுகின்றன. அவை (1) யாழ் வாசித்தல், (2) கையை முடிக்குமேல் உயர்த்திவைத்துச் சிவனார் நடித்தல் (3) பிள்ளையார், (4) கற்றைவார் சடை என்பன.

எல்லாச் சுவர்களிலும் சிங்கத்தூண்கள் இருக்கின்றன. சிங்கங்கள் மீது வீரர்கள் அமர்ந்துள்ளனர். கோவிலின் புறச்சுவர்ப் பக்கத்தும் இக் காட்சியைக் காணலாம். சிங்கங்கள் பின் கால்கள் மீது நிற்பன. சிற்பங்கள் இற்றைக்குச் சற்றேறக் குறைய 1250 ஆண்டுகட்கு முன் செய்யப்பட்டனவாக இருந்தும், இன்றும் அவை தம்மைப் பார்ப்பவரைப் புன்முறுவலோடு வரவேற்பன போல இருக்கின்றன நிலை உள்ளத்தை இன்புறுத்துகிறது. சிறப் அழகில் ஈடுபட்டகண்கள், இக்காட்சி இன்பத்தை நன்கு நுகரலாம். இங்குள்ள வாயிற்காவலர் அனைவரும் இரண்டு கைகளை உடையவரே ஆவர்.

கும்பம்

இக் கும்பம் இராசசிம்மன் கட்டிய மாமல்லபுரத்துக் கரையோரக் கோவில் கும்பத்தை ஒத்தது. ஆனால், அளவிற் பெரியது. இதன் வளர்ச்சியே இராசராச சோழன் தஞ்சையிற் கட்டிய பெரிய கோவில் கும்பம். இந்தக்கும்பத்தில் சிங்கத்தலைகளே காணப்படுகின்றன.

கல்வெட்டுகள்

கைலாசநாதர் கோவில் நிறையக் கல்வெட்டுகள் இருகின்றன.[27] அவை கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட பல்லவர், சோழர் கல்வெட்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் கோவில் கட்டிய இராசசிம்மன் கல்வெட்டுகளும், அவன் மகனான மூன்றாம் மகேந்திரன், அவன் மனைவி ரங்கபதாகை முதலியோர் கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவரைவென்று தொண்டைநாட்டைஆண்டமுதற் பராந்தகன், இராசராசன். இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் இவர் தம் கல்வெட்டுகள் பலவாகக் காண்கின்றன. சோழர் காலத்தில் இக் கோவில், மாடவீதிகள், வெளிச்சுற்று, மடவளாகம், மாடவீதி, மடங்கள் முதலியவற்றையும் அளவிடற்கரிய செல்வத்தையும் பெற்றிருந்தது என்பது இக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இரண்டாம் நந்திவர்மன் காலத்திற் காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தனது கன்னடக்கல்வெட்டும் இருக்கின்றது.அதனில், இராசசிம்மன் கட்டிய கோவிலில் உள் பெருஞ் செல்வத்தைக் கண்டு வியந்த வல்லபன்.அதனைக் கவராது, அப் பெருமானுக்கே விட்டு விட்டான். என்பது குறிக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையைச் சாளுக்கியருடைய வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களும் பகர்கின்றன.[28]

சிறப்பு

‘கயிலாசநாதர் கோயில் திருக்கயிலையின் அளவைக் கொண்டே கட்டப்பட்டதாகும்’ என்று விபுலானந்த அடிகள் போன்றார் கூறுகின்றனர். கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு இதற்கு மறைமுகமாகச் சான்று பகர்கின்றது. இராசசிம்மன் தன்னை ‘வாத்ய வித்யாதரன்’ என்பதற்கேற்ப இக் கோவிலில் யாழ் வாசிக்கும் உருவங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இவன் இசை, நடனம், சிற்பம், ஓவியம் இவற்றிற் பேரறிவு படைத்த பெருவேந்தன் என்பதற்குக் கயிலாசநாதர்கோவில் ஒன்றே போதிய சான்றாக அமைந்துள்ளது. இக் கோவில் ஏறத்தாழ வைகுந்தப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்திருத்தல் வியத்தற்குரியது. இங்குள்ள கணக்கற்ற சிற்பங்கள் சுவர்களில் இருத்தல் போலவே அக் கோவிற் சுவர்களிலும் இருத்தல் இங்கு நினைக்கத்தகும். சுருங்கக் கூறின் கயிலாசநாதர் கோவில் பல்லவரது சிற்பக்கலையை உலகத்திற்கு அறிவிக்க எழுந்த சிற்பக்கலைக்கூடம் என்னலாம்.

வடமொழிப் புலவன்

இராசசிம்மன் பேரவையில் தண்டி என்னும் வடமொழிப் புலவர் இருந்தமை முன்னரே கூறப்பட்டதன்றோ? பல்லவர் வடமொழி வாணரை நன்கு போற்றியவர் ஆவர். சிம்மவிஷ்ணு பாரவியைப் போற்றினான்; பாரவியிடம் மகேந்திரவர்மன் படித்துச் சிறந்த வடமொழிப் புலவன் ஆயினான் (?) அவருடைய பெரிய பெயரர் தண்டி என்பதால், பாரவிக்குப் பின் அவர் மகனும், பெயரனும் முறையே பல்லவர் அவைப்புலவராகவும் வடமொழி ஆசிரியராகவும் இருந்திருக்கலாம். தண்டி எழுதிய ‘காவ்யா தர்ஸம்’ என்னம் அணி இலக்கணத்தில் ‘இராசவர்மன்’ என்னும் சைவ அரசனைக் குறிப்பிட்டுள்ளார்: காஞ்சியைப் பற்றியும் பல்லவரைப் பற்றியும் ஆங்காங்குக் குறித்துள்ளார்.[29] இவற்றறோடு அவர் செய்த அவந்தி சுந்தரி கதா என்னும் நூலில் பல்லவன் காலத்து வறுமையை விளக்கியுள்ளார். இவை அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து

நோக்கின், அவரால் குறிக்கப்பெற்ற ‘இராசவர்மன்’ இராசசிம்மனே என்பதும், அவர் பல்லவனது அவைப்புலவர் என்பதும் பிறவும் நன்குணரலாம். ‘காவ்யாதர்ஸ்த்தின் ஐந்தாம் பகுதி, காஞ்சியில் உள்ள அரச மாணவனுக்குக் கற்பிக்கவே செய்யப்பட்டது’ என்னும் செவிவழிச் செய்தியையும், ‘அப் பகுதியை நன்கு ஆராயின், தண்டியிடம் படித்த அரசமாணவன் இராசசிம்மனே என்பது தெளிவாகிறது’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கூறுதலையும், இவற்றுடன் கைலாசநாதர்கோவில் கல்வெட்டுகளில் சிலேடைப் பொருள் கொண்ட கல்வெட்டு ஒன்று இராசசிம்மனைப் பற்றியது என்பதையும் நோக்க - இராசசிம்மன் சிறந்த வடமொழிப் புலவன் என்பதை நன்குணரலாம். அத்துடன், இவன் நாகரிகக் கலைகளான இசை நடனம், ஓவியம், சிற்பம் இவற்றிலும் வல்லவனாக இருந்தான் என்பதும் நன்கு புலனாகிறது.

நாடக அறிஞன்

வடமொழியில் ‘பாஷர்’ என்பவர் பல நாடகங்களை விரிவாக வரைந்துள்ளார். பிறகு அவை நடிப்பதற்கேற்ற முறையிற் சுருக்கி வரையப்பட்டன. அவற்றின் இறுதியில், ‘பல்லவன் அவையில் நடித்துகாட்ட இங்ஙனம் தாயாரிக்கப் பெற்றவை’ என்பது கண்டுள்ளது. இப் பல்லவன் இராசசிம்மனாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் கூறுதல் உண்மையாயின், இராசசிம்மன் நாடகக் கலையிலும் பண்பட்ட அறிவுடையவன் என்பது புலனாகும்.

இரண்டாம் பரமேசுவரவர்மன்
(கி.பி. 705–710)

இவன் இராசசிம்மன் மகன். இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, வீரட்டானேச்சுரர் கோவிலில் காணப்படுகிறது. அதற்குப் பிற்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைக்காமையால், இவன் சிறிது காலமே அரசாண்டான் என்று கொள்ளவேண்டும். காசக்குடிப் பட்டயம் இவன் கலியை வென்றான்; அமைதியான வாழ்க்கையை நடத்தினான்; பிரகஸ்பதி விதித்த வழியில் குடிகளை நடத்தினான்; உலகத்தைக் காத்தான்[30] என்று கூறுகிறது. வேலூர் பாளையப் பட்டயம், இவன் கலியை வென்றவன் மது கூறிய விதிகளின்படி நாட்டை ஆண்டவன் என்று கூறுகிறது.[31] இவன் காஞ்சியில் உள்ள பரமேச்சுர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலைக் கட்டியவன் என்று அறிஞர் அறைகின்றனர்.[32] திருவதிகையில் உள்ள சிவன் கோவிலையும் கற்களால் அமைத்தவன் இவனே என்றும் கருதுகின்றனர்.[33]


  1. Int.Ant, Vol.XIX. pp.151-152
  2. Ep.Ind. Vol. IX.p.200.
  3. Ind Ant. Vol. VI pp.87-88.
  4. SII vo Nos 24.25, etc.
  5. Heras’s “Studies in Pallavas History’ pp.48–50.
  6. M.V.K.Rao’s “Gangas of Talakad,’ p.49.
  7. MVK Rao’s “Gangas of Talaked,’ pp49-50.
  8. இதுகாறும் கூறியவற்றை ஆராய்ச்சி அறிஞர் நன்கு ஆராய்ந்து முடிவு காண்பாராக.
  9. Dr.C.Minakshi’s “Administration and SocialLife underthe Pallavas’ pp.114-118.
  10. இவனுக்கு முற்பட்ட அப்பர் காலத்திலே ஆகமங்கள் எனப்படும் தந்திர நூல்கள் இருந்தன என்பது அப்பர் பதிகத்தால் அறியக்கிடக்கிறது. 'தக்கன்தந்திரம்' ஆகமநூல் அறியாது மந்திரநூற்படி(வேதவிதிப்படி) வேள்வி செய்து சிவபிரானை அவமதித்ததால் அழிந்தான், என்று அப்பர் கூறல் காணத்தக்கது.
    “இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
    மந்திரம் மறைய தோதி வானவர்வணங்கி வாழ்த்தத்
    தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
    சந்திரற் கருள்செய்தாரும் சாய்க்காடு மேவி னாரே”
  11. இவனும் தன் தந்தையைப்போலவே கண்மணியால் செய்யப்பட்ட லிங்கத்தை மகுடமாகத் தாங்கி இருந்தான் போலும்!
  12. I.S.I.S. Vol.I pp.14-18.
  13. தந்திரம் & Tantra (Agama)
  14. Ibid.p.12
  15. SII vol I p. 20.
  16. இதன் சரியான பெயர் திரு.எவ்வுள்.
  17. இந்த நுட்பமான செய்தி கி.பி. 12 ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் பெருமானுக்கு எங்கனம் தெரிந்தது? அவர் கயிலாசநாதர் கோவில் கல்வெட்டைப் படித்தே இந் நுட்பமான செய்தியை எழுதியிருத்தல் வேண்டும் என்னல் மிகையாகாது. அவர் அரசரிடம் உயர் அலுவலாளராக இருந்தவர் ஆதலின் கல்வெட்டில் நிரம்பிய புலமையுடைராய் இருந்திருத்தல் வேண்டும். இங்ஙனமே அவர், கல்வெட்டுகளிற் காணப்படும் பல குறிப்புகளைத் தம் நூலுட் பல இடங்களிற் குறித்துச் சொல்லலைக் காணலாம்.
  18. R .Gopalan’s “Pallavas of Kanchi,” p.110 and Eq-Report No.961 of 1913, pp.88-89.
  19. ‘சலசயனம், தலசயனம்’ என்பவற்றின் பொருள் தெரியாமல் ஈராஸ் பாதிரியார், ‘மல்லைத்தலசயனம் என்பது மகாபலிபுரத்தின் பழைய பெயர்’ என்று தமது ஆராய்ச்சி மிக்க நூலில் (பக். 70) தவறாக எழுதிவிட்டனர். இதனை மறுத்துத் தமிழ்நாட்டிற் சிறந்த கல்வெட்டறிஞராகவுள்ள திரு. இ.௵.இராமச்சந்திஞ் செட்டியார், ஆ.அ.ஆ.ஃ., அவர்கள் விளக்கமாக எழுதியுள்ளார் & Q.J.M.S. Vol.27.Nos. land 2.
  20. A.Rangaswami Saraswathi’s article on “The Age of Baravi and Dandin” in Q.J.M.S.Vol.XIII, pp.674-679.
  21. M.Raghava “Iyengar’s “Alvargal Kala nilai.’ p. 143.
  22. இவை சிங்கங்களே ‘சிங்கக் குகை’ என்பதே பொருத்தமுடையது - “Indian Architecture’ by A.V.T.Iyer. Vol.II-B, p.192.
  23. Rev. Heras’s “Studies in Pallava History,’ pp.97-99.
  24. நான் இக்கோவிலை (10-1-43) விளக்கமாகக் காண உதவி புரிந்த பெரியார் இக் கோவில் கண்காணிப்பாளராகவுள்ள காஞ்சிபுரம் சி.குமரகாளத்தி முதலியார் ஆவர்.
  25. S.I.I.Vol. Nos.-86-88: 140 - 150.
  26. இவை பற்றிய விளக்கத்தை, ‘இசையும் நடனமும்’ என்ற தலைப்பிற் காண்க.
  27. Vides II. Vol.INos, 24-30, 82-88, 144-150.
  28. Ep. Ind. Vol.V p.200. Vol.IX p.200
  29. இம் முறையைப் பின்பற்றியே இராசசிம்மன் சிறப்புகள் வரும் இடங்களில் எல்லாம் இந்நூலைத் தமிழ்ப்படுத்திய புலவர்தம் காலத்தரசனான அனபாய சோழன் சிறப்பைக் குறிக்கும் பாடல்களைத் தாமே கட்டி மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பது அறியத்தகும். சான்றாக ஒன்று காண்க:

    ‘என்னேய் சிலமடவார் எய்தற் கெளியவோ
    பொன்னே அநபாயன்பொன்னெடுந்தோள்! - முன்னே
    தனவேயென்றாளும் சயமடந்தை தோளாம்
    புளவேய் மிடைந்த பொருப்பு.’

  30. S.I.I. Vol.II p.357.
  31. S.II. Vol. II p.510.
  32. R. Gopinatha Rao’s “History of Sri. Vaishnavas’ p.17.
  33. C.S. Srinivasachari’s “History and Institutions of the Pallavas’ p.15.