பல்லவர் வரலாறு/14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775)

14. இரண்டாம் நந்திவர்மன்
(கி.பி. 710-775)

வரலாற்று மூலங்கள்

இவனது ஆட்சிக் காலத்தின் 65ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. அதனால், இவன் ஆட்சிக் காலம் ஏறக்குறையை 65 ஆண்டுகள் என அறிஞர் கொண்டுள்ளனர். இவ்வளவு நீண்டகாலம் ஆண்ட வேறு பல்லவ அரசன் இல்லை. இவன் 12 வயதில் பட்டம் பெற்றது. ஆட்சிக் காலம் நீண்டமைக்கொரு காரணமாகும். இவன் கால வரலாற்றை அறியத்துணைபுரிவன: (1) பல்லவர் பட்டயங்கள், (2) பாண்டியர் பட்டயங்கள், (3) சாளுக்கியர் பட்டயங்கள், (4) வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள - சிற்பங்களும் கல்வெட்டுகளும், (5) கங்கர் கல்வெட்டுகள், (6) இராட்டிர கூடர் பட்டயங்கள், (7) திருமங்கையாழ்வார் பாடல்கள் ஆகும். பல்லவர் பட்யங்களுள் இவன் காலத்தன ஐந்து. அவை (1) இவனது 21ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த உதயேந்திரப் பட்டயம். (2) இவனது 22ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த காசக்குடிப் பட்டயம். இவனது 58ம் ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்ததண்டன்தோட்டப்பட்டயம், (4) இவனது 61ஆம் ஆட்சி ஆண்டில் வந்துள்ள கொற்றங்குடிப் பட்டயம், (5) இவனது 65ஆம் ஆட்சி ஆண்டில் வந்துள்ள மகாபலிபுரத்துக் கல்வெட்டு என்பன. சாளுக்கியச் சான்றுகள் ஆவன:-(1) கைலாசநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் விக்கிரமாதித்தனது கல்வெட்டு, (2) இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட வக்கலேரிப் பட்டயம், (3) இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட கேந்தூர்ப் பட்டயம் என்பன. பாண்டியர் பட்டயங்கள்:(1) வேள்விக்குபடி பட்டயம், (2) சின்னமனூர்ப் பட்டயம் என்பன. இங்ஙனமே கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆய்ந்து இப் பல்லவப் பேரரசர்கள் வரலாறு காண்போம்.

பல்லவர்-பாண்டியர் போர்

போருக்குக் காரணம்

(1) பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர் நடந்ததற் கெல்லாம் சிறந்த காரணம் கொங்குநாட்டு உரிமையாகும். கொங்குநாடு ஒருகாலத்திற் பாண்டியரிடமும் பிறிதொருகாலத்திற் பல்லவரிடமும் கைமாறிவந்தன. நந்திவர்மன்கொங்குநாட்டைப் பிடிக்க முயன்றான். அதற்காகப் பாண்டிய அரசன் போரிட வேண்டியவன் ஆனான். (2) அடுத்த காரணம் சித்திரமாயன் (பரமேசுவரன் மகன்) பாண்டியனைச் சரணமடைந்திருந்தது. இவ்விரண்டு காரணங்களாலும், பாண்டியர் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) நந்திவர்மனைத் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்.[1]

போர்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ‘நாதன் கோவில்’ என்னும் இடம் பழைய காலத்தில் பகைவர் தென்புறக் கோட்டையாக இருந்தது. அதற்கு நந்திபுரம் என்பது பெயர். அங்குப் பெருமாள் கோவில் உண்டு. அதனைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். அந் நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருந்த சமயம் பார்த்துப் பாண்டியன் தன் துணைவரான சிற்றரசர் பலருடனும், பெருஞ் சேனையுடனும் சென்று நந்திபுரத்தை முற்றுகை இட்டான். பாவம்! பாண்டியன் படையெடுப்பை எதிர்பாராத நந்திவர்மன் கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டான்.

நல்ல காலம்! வழிவழியாகப் பல்லவர்க்குப் படைத்தொண்டு செய்துவந்த ‘பூசான்’ மரபில் பிறந்த உதய சந்திரன் என்னும் படைத்தலைவன், பெருஞ்சேனையுடன் நந்திபுரத்திற்கு விரைந்தான். அவன் ‘வில்வலம்’ என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவன். அவன் விரைந்து சென்று, அல்லிமலர் இதழ் போல் ஒளிர்ந்த தன் வாளால் சித்திரமாயனையும் பிறரையும் கொன்றான்;

பாண்டியருடைய படையை நிம்பவனம், சூதவனம், சங்கர கிராமம், மண்ணைக்குறிச்சி, சூரவழுந்துர்முதலிய இடங்களில் வென்றான்.[2] பாண்டியர் பட்டயங்கள், ‘நெடுவயல், குறுமடை மன்னிக்குறிச்சி, பூவலூர், கொடும்பாளுர், பெரியலூர் என்னும் இடங்களில் பாண்டியன் வெற்றிபெற்றான். குழும்பூரில் நடந்த போரில் பாண்டியன் பல்லவனுடைய கரிகளையும் பரிகளையும் கைக்கொண்டான்’[3] என்று கூறிகின்றன. இவற்றுள் மன்னிக்குறிச்சி என்பது அறந்தாங்கித் தாலுக்காவில் உள்ள மணக்குடி ஆகலாம்; நிம்பவனம்-வேப்பங்காடு, சூதவனம்-கோவிலூர் (தேவாரகாலத்துத் திருவுசாத்தானம்) சங்கரகிராமம் - சங்கரனார் குடிக்காடு ஆகலாம். இவை யாவும் தஞ்சைக் கோட்டத்திலேயே பெரும்பாலும் இருப்பவை; சில புதுக்கோட்டைச் சீமையில் இருப்பவை.

இந்த இடங்களில் இருதிறத்தாரும் வெற்றி பெற்றதாகக் கூறல் எங்ஙனம் பொருந்தும் எனின், பொருந்தும் என்றே கூறலாம். பாண்டியன் சில இடங்களில் வெற்றி பெற்றான்; இறுதியில் உதயசந்திரன் சில இடங்களில் வெற்றி பெற்றான் எனக் கோடலே நேரிது, உதயசந்திரன் வருவதற்குமுன் சில இடங்களில் போர் நடந்திருக்கும்; முற்றுகைக்குப் பின் பல இடங்களில் சேனை சிதறிப் போர் செய்திருத்தல் இயல்பே. ஆங்காங்கு நடந்த போர்களில் ஆயினும், இறுதியில் பல்லவன் வெற்றிபெற்றான் என்பதில் ஐயமில்லை.[4]

உதய சந்திரன்

இரண்டாம் நந்திவர்மன் பரிவேள்வி செய்ய விழைந்து, குதிரையை வடக்கே அனுப்பினான். அதுவேங்கி நாடு சென்றது. அதனை ஆண்ட விஷ்ணுராசன் என்னும் கீழைச் சாளுக்கியன்

பல்லவன் பெருமையை ஒப்புக் கொண்டான். ஆயின், அவனுக்குக் கீழ்ப்பட்ட பிருதிவி-வியாக்கிரன் என்பவன் அக் குதிரையைக் கட்டிவிட்டான். உடனே உதயசந்திரன் அங்குச் சென்று, அச் சிற்றரசனைப் போரில் முறியடித்து நாட்டைவிட்டுத் துரத்தி மீண்டான். தோற்றவனுடைய விலை உயர்ந்த அணிகலன்களைப் பல்லவனுக்குப் பரிசளித்தான்.[5] இச்சந்தர்ப்பத்திற்றான். உதயணன் என்ற சபர அரசனை உதயசந்திரன் ‘நென்மலி’ (நெமிலி) என்ற இடத்தில் போரிட்டு வென்றான். [6]இங்ஙனம் பல்லவ மல்லனது நீண்ட ஆட்சிக்கும் பெற்ற வெற்றிகட்கும் உதயசந்திரன் சிறந்த காரணமானவன் என்பதில் ஐயமில்லை.

பல்லவர்-சாளுக்கியர் போர்கள்
1

போருக்குக் காரணங்கள்

(1) இரண்டாம் புலிகேசி காலமுதல் பட்டத்திற்கு வந்த சாளுக்கியர் அனைவரும் பல்லவர்க்கு ஆற்றார் ஆயினமை ஒரு காரணமாகும். (2) இரண்டாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 733-746) சிறந்த போர்வீரன். அவன் தன் நாட்டை முதலிற் கொங்குநாடு-கங்கநாடுவரை விரிவாக்கினான். பல்லவ மல்லன் கொங்குநாட்டு உரிமையைப் பாண்டியனை வென்று கைக்கொள்ள முயன்றான். தனது குடிப் பகைவனான பல்லவன் தன் பேரரசின் தென்பகுதி எல்லைவரை செல்வாக்குப் பெறுதல் தனக்குக் கேடு

பயக்கும் என்பதை விக்கிரமாதித்தன் உணர்ந்தான். இவ்விரு காரணங்களாலும் அவன் பல்லவநாட்டின்மீது படையெடுத்தான்.[7]

பட்டயங்கள்

இப் போரைப் பற்றிப் பல்லவர் பட்டயம் ஒன்றேனும் கூறுகின்றிலது. இதற்குக் காரணம் இம் முறை வெற்றி பெற்றவர் சாளுக்கியர் ஆதலே ஆகும். இரண்டாம் கீர்த்தி வர்மன் (கி.பி. 746-757) வெளியிட்ட (முன் சொன்ன) வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களே இப் போர் நிகழ்ச்சிகளை நமக்கு அறிவிக்கின்றன. சாளுக்கியர் மரபில் வந்த அரசரது பெருமையைக்குலைத்த பல்லவர் மரபைப் பழி வாங்க இரண்டாம் விக்கிரமாதித்தன் துணிந்தான்; உடனே பெரும் படையுடன் காஞ்சியை நோக்கி விரைந்தான்; போரில் பல்லவமல்லனைத் தோற்கடித்தான்; பல்லவன் ஓடிவிட்டான். எங்கே? ஒருகோட்டைக்குள் ஓடிவிட்டான். இதனால், காஞ்சி சாளுக்கியன் வசப்பட்டது. சாளுக்கியன். பல்லவனுடைய கடுமுகவாத்தியம், சமுத்திர கோஷம், கத்வாங்கக் கொடி, போர் யானைகள், சிறந்த விலையுயர்ந்த மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றினான். பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சி நகரத்தை அழிக்காமல் உள்நுழைந்தான். இதே சமயத்தில் அவன் மகனான கீர்த்திவர்மன் தந்தை இசைவுபெற்று ஓடிய பல்லவனைத் துரத்திச் சென்று, பல இடங்களில் முறியடித்தான். இதற்கிடையில் விக்கிரமாதித்தன் கயிலாசநாதர் கோவில் செல்வத்தைப் பார்வையிட்டு வியந்து, அதனை (தான் எடுத்துக்கொள்ளாமல் அக் கோவிலுக்கேவிட்டுவிட்டான்.) இதனைக்கயிலாசநாதர்கோவிலில் உள்ள அவனது (பழையகன்னடத்தில் எழுதப்பட்ட) கல்வெட்டே கூறுகின்றது.[8] அவன் ஏழைகட்கும் மறையவர்க்கும் பொன்னை வழங்கினான்.[9]

காஞ்சியைக் கைப்பற்றிய சாளுக்கியன், ‘எப்பொழுது அதனைவிட்டுச் சென்றான்? ஏன் சென்றான்?’ என்பன நல்ல கேள்விகள் அல்லவா? அவற்றுக்கு விடை காணல் வேண்டும். நந்திவர்மன் சாளுக்கியவனை விரட்டினான் என்பது உண்மையாயின், பல்லவர் பட்டயம் அதனைச் சிறப்பாகக் கூறியிருக்கும். அங்ஙனம் கூறாமையின், நந்திவர்மன் விக்கிரமாதித்தனை விரட்டவில்லை என்பது தெரிகிறது. இருவருக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது எனக் கொள்ளின், இருவருமே பட்டயங்களில் இதனைக் கூறியிருப்பர். அங்ஙனம் கூறவில்லை. எனவே, சாளுக்கியன் தனக்கு உட்பட்டு இருக்கத்தக்க பல்லவ மரபின்ன ஒருவனைத்தேடி முடிசூட்ட முனைந்திருக்கலாம்; சித்திரமாயன் இறந்தான் ஆதலின், வேறு ஆள் அகப்படவில்லை. அவனே பல்லவநாட்டைப் பிடித்துச் சேய்மையிலிருந்து ஆள்வதும் இயலாததன்றோ? பதுமை போல ஒருவனை அரியணையில் ஏற்றிவிட்டு அவன் வாதாபி சென்றிருந்தால், மறு நிமிடமே பெருவீரனான பல்லவமல்லன் அவனைக் கொன்றிருப்பான். நெடுந் தொலைவில் உள்ள அவன், தொண்டை நாட்டைப் பிடித்து அடக்கி ஆள்வது என்பது எளிதானதன்று. இவை அனைத்தையும் நன்கு எண்ணிப் பார்த்தே அப் பேரறிஞன், காஞ்சியைக் கைப்பற்றிப் பல்லவனை முறியடித்தலிலே மகிழ்ச்சி அடைந்தான்; காஞ்சி நகரத்தாரை மகிழ்வித்தான்; கோவில்கட்கு மதிப்பளித்தான்; உலகம் உள்ளளவும் தன் பெருந்தன்மையை நிலைபெறச் செய்தான். இச் செயல்களில் மகிழ்ச்சியுற்ற அவன், தன் நாடு மீண்டான் எனக் கோடலே பொருத்தமான முடியாகும்.[10]

உண்மை என்ன?

நந்திவர்மன் சேர சோழ பாண்டியருடன் கடுமையான போரில் ஈடுபட்டிருந்த காலத்திற்றான் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றினான்;[11] அங்கும் பெயரளவில் இருந்த பல்லவப்

படையை வென்று, அமைதியாகக் காஞ்சிக்குள் நுழைந்தான், சிறிது காலம் கடிகையார், கோவிலார் மனமகிழப் பரிசுகள் தந்து தங்கி இருந்தான். இந்த அளவே சாளுக்கியர் பட்டயங்கள் கூறுகின்றன.

நந்திபுரக்கோட்டை முற்றுகை தீர்ந்ததும், உதயசந்திரன் தமிழரசரைக் குழும்பூர், நெடுவயல் முதலிய பல ஊர்களில் போரிட்டுத் துரத்திச் சென்றான். அப்பொழுது நந்திவர்மன் எங்கு இருந்தான்? என்ன செய்தான்? என்பன இது காறும் விளக்கப்பெறவில்லை. இரண்டாம் விக்கிரமாதித்தன் கி.பி. 723இல் பட்டம் பெற்றவன்: நந்திவர்மன் கி.பி.717இல் பட்டம் பெற்றவன். அவன் பட்டம் பெற்ற போது வயது பன்னிரண்டு ஆதலின், கி.பி 733இல் ஏறத்தாழ 28 வயதுடையவனாக இருந்தான் ஆவன். இப் படையெடுப்பின்போது ஏறத்தாழ 30 வயதெனக் கொண்டாலும் அவன் வீர வயதுடன் விளங்கினான் என்பதில் ஐயமில்லை அவன் தனது 61ஆம் ஆட்சி ஆண்டில் (தனது 72ஆம் வயதில்) வெளியிட்ட கொற்றங்குடி பட்டயத்தில் தான் சிறுவனாக இருந்தபொழுதே சேர. சோழ, பாண்டிய, களப்பிர, வல்லபரை வென்றனன் என்பது பொன்போலக் காணப்படுகிறது.[12] உதயசந்திரன் தென்னாட்டுப் போர் முடிந்தபிறகு வடநாடு சென்று கோதாவரி அருகில் சபர அரசனையும் பிருதுவி-வியாக்கிரன் என்பவனையும் வென்றான் என்று உதயேந்திரப் பட்டயம் கூறுகிறது. அஃது அரசனது 21ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 738இல்) பொறிக்கப்பட்டது. 738இல் வடநாடு செல்லத்தக்கவன்மை பல்லவர் படைத்தலைவர்க்கு எப்படி வந்தது? அங்கு அவன் சாளுக்கியனை வென்றதாகவும் இல்லை.

போர் நடந்த காலம்

இவற்றை எல்லாம் நடுவுநிலையாய் ஆராயின், பல்லவர் பாண்டியர் சாளுக்கியர் போர் விக்கிரமாதித்தன் பட்டம் பெற்ற கி.பி. 733க்கும் உதயேந்திரப் பட்டயம் வெளிவந்த கி.பி. 738க்கும் இடையில் நடந்திருத்தல் வேண்டும் என்பது விளங்கும். இக்காலத்தில் (தனது 28-33 வயதுக்குள்) நடந்த போர்களையே நந்திவர்மன் கொற்றங்குடிப் பட்டயத்திற் குறிப்பிட்டான். இப் போர் கி.பி. 733ஐ அடுத்து நடந்த தென்றே வக்கலேரிப் பட்டயமும் குறிக்கிறது. ஆதலின், இப் போர் நடந்த காலம் ஏறத்தாழக் கி.பி. 733-735 என்னலாம்.

போர் நடந்ததா?

இரண்டாம் விக்கிரமாதித்தன் மகனான இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட வக்கலேரி, கேந்தூர்ப்பட்டயங்கள், விக்கிரமாதித்தன் நந்திவர்மனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான்; தானங்கள் செய்தான் ஒன்றையும் கைக்கொள்ளவில்லை என்றே குறிக்கின்றன. நந்திவர்மன் பட்டயம் ‘அவன் வல்லபனை வென்றான்’ எனக் கூறுகிறது.

இவற்றை நன்கு ஆய்தல் வேண்டும். எதிர்ப்பவர் இன்றிக் காஞ்சியைக் கைப்பற்றிய - அல்லது சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலப் பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றிய சாளுக்கியன் தானாகப் போனபிறகு பல்லவமல்லன் காஞ்சிக்கு வந்தான் என்பது பல்லவனது வீரத்தை அவமதித்துக் கூறும் கூற்றாகும். வந்து நாட்டைப் பிடித்தவன் அதனை நுகராது போய்விட்டான் என்பதும் பொருத்தமற்ற கூற்றாகும்.

நடந்த முறை

ஆதலின், பல்லவன் நந்திபுரத்திலிருந்து வந்து விக்கிரமாதித்தனைப் போரிட்டுத் துரத்தியிருத்தல் வேண்டும். விக்கிரமாதித்தனுக்குப் பின் புதிய படையுடன் வந்த அவன் மகனான கீர்த்திவர்மன், களைப்புற்ற பல்லவனைத் துரத்திக் காஞ்சிக்குள் நுழைந்திருக்கலாம்; பல்லவன் ஒரு கோட்டைக்குள் ஒளிந்திருக்கலாம்; இந்நிலையில் உதய சந்திரன் துணைக்குப் போந்து, கீர்த்திவர்மனையும் விக்கிரமாதித்தனையும் துரத்திச்சென்று பல்லவ நாட்டுக்கப்பால் விட்டிருத்தல் வேண்டும்; விட்டு, முன்

சொன்னவாறு வேங்கிப் பகுதியில் இருந்த அரசரை வென்று மீண்டனனாதல் வேண்டும்.

முடிவு

இங்ஙனம் கொள்ளின், (1) பல்லவன் பாண்டியரோடு போர் செய்தபொழுது விக்கிரமாதித்தன் காஞ்சியை எளிதிற் பற்றி அங்கு இன்பமாகக் காலம் கழித்தான்; (2) உதய சந்திரன் தமிழரசரைத் துரத்திக்கொண்டு தெற்கே போன பொழுது, பல்லவன் தன்னிடம் இருந்த படையுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்துத் துரத்தினான்: (3) அவ்வமயம் விக்கிரமன் மகனான இளவரசன் கீர்த்திவர்மன் பெரும் படையுடன் வந்து பல்லவனைக் காஞ்சியினின்றும் விரட்டிப் பல பொருள்களைக் கைப்பற்றினான். (4) அந் நெருக்கடியான நிலையில் உதயசந்திரன் போந்து கீர்த்திவர்மனைத் துரத்திச் சென்று பல்லவ நாட்டிற்கப்பால் விட்டனன்: (5) உதயசந்திரன் அப்படியே வடக்கே சென்று வேங்கிப் பகுதியில் வெற்றி கண்டு மீண்டனன் என்னும் செய்திகளை முறைப்படி உணரலாம். இதற்கு உதயேந்திரன் கொற்றங்குடி, வக்கலேரிப் பட்டயக் குறிப்புகள் அனைத்தும் செவ்வையாகப் பொருந்தி வருதலையும் காணலாம். அறிஞர் நன்கு ஆராய்வாராக.

படையெடுப்பின் பயன்

விக்கிரமாதித்தன் சிறந்த கலையுணர்வு உடையவன்; அவன் கயிலாசநாதர் கோவிலைக் கண்டு வியந்தான்; அதன் கும்ப அமைப்பை உளங்கொண்டான். காஞ்சியிலிருந்து சிற்பிகளைக் கொண்டு சென்றான் போலும் தன் நாட்டில் கயிலாசநாதர் கோவில் கும்பம் போன்ற கும்பங்களைக் கொண்ட கோவில்களைப் பல்லவர் முறையில் அமைத்தான். அவனுக்குப்பின் அந்நாட்டிற் கட்டப்பட்ட கோவில்களிலும் இப் பல்லவர் முறையைக் கண்டு களிக்கலாம்.[13]

2

இரண்டாம் கீர்த்திவர்மன் கி.பி. 748இல் சாளுக்கிய அரசனானான். அவன் பட்டயத்தில், அவன் இளவரசனாக இருந்தபொழுது நடந்த போரே குறிக்கப்பட்டுள்ளது. அவனது ஆட்சியில் கி.பி.757இல் பல்லவர் - சாளுக்கியர் போர் பலமாக நடந்தது. இம்முறை நந்திவர்மன் கங்கரையும் பாண்டியரையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான். இப்போர் வெம்பை என்ற இடத்தில் முற்றுப்பெற்றது. கீர்த்திவர்மன் போரில் இறந்தான்; அவனுடன் சாளுக்கியப் பேரரசு ஒழிந்துவிட்டது.[14]

[15]இரட்டர் - பல்லவர் நட்பு

இரண்டாம் கீர்த்திவர்மன் ஆட்சியில் இரட்ட மரபினன் ஒருவன் சிற்றரசனாக இருந்தான். அவன் பெயர் தந்திதுர்க்கன் என்பது.அவன் நந்திவர்ம பல்லவன் அன்பைப் பெற்றுச் சாளுக்கிய நாட்டைக் கைப்பற்றினான்; அவன் கி.பி.725முதல் 758வரை இருந்த இரட்ட மரபின் முதல் மன்னன் ஆவன்.

தந்தி துர்க்கன் என்பவன் வைரமேகன் என்னும் மறுபெயர் உடையவன்.[16] அவன் காஞ்சியை வென்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது.[17] அந்த வைரமேகனையும் பல்லவ மல்லனையும் காஞ்சியில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.[18] எனவே, இருவரும் சமாதான நிலையில் காஞ்சியில் இருந்தனர் என்பது கொள்ளவேண்டுவதாக உள்ளது. ‘நந்திவர்மன் மனைவி ரேவா, அவள் மகன் தந்திவர்மன்’ என்று வேலூர் பாளையப்பட்டயம் பகர்கின்றது. இவற்றை நன்கு ஆராய்ந்த அறிஞர், ‘இரட்ட அரசனான வைரமேகன் காஞ்சியைக் கைப்பற்றியதும் பல்லவ மல்லன் அவனிடம் பெண் பெற்று மணந்திருத்தல் வேண்டும். அவளுக்குப் பிறந்த மகனுக்குத் ‘தந்திவர்மன்’ என்னும் பாட்டன் பெயரை இட்டிருத்தல் வேண்டும் என்று முடிபு கொண்டனர்.[19]

முதலாம் கிருஷ்ணன்

இவன் தந்தி துர்க்கனின் சிற்றப்பன். தந்தி துர்க்கன் கி.பி. 725 முதல் 758 வரை ஆண்டு இறந்தான். அவற்குப் பிள்ளை இன்மையின், முதலாம் கிருஷ்ணன் தனது முதுமைப் பருவத்தில் கி.பி. 758 முதல் 772 வரை அரசனாக இருந்தான் இவன் ‘கன்னர தேவன்’ என்ற பெயரையும் கொண்டிருந்தான். இவன் தனது ‘தலகோன்’ பட்டயத்தில், தன்னைக் ‘காஞ்சிக் குணாலங்கிருதன்.....’ என்று குறித்துள்ளான். இதனால், இவன் காஞ்சி அரசனை வென்றவனாக இருக்கலாம் என்று அல்டேகர் கருதுகிறார்.[20]

பல்லவர்-கங்கர் போர்

இரண்டாம்நந்திவர்மன் காலமெல்லாம்போர்களிலேயே கழிந்தது என்னலாம். அவன் ‘உக்ரோத்யம் என்னும் வைரம் பதித்த கழுத்தணியைக்கங்க அரசனிடமிருந்து கைப்பற்றினான் என்று ஒரு பட்டயம் பகர்கின்றது.[21] பல்லவனுடன் போரிட்ட கங்க அரசன் ஸ்ரீ புருஷன் என்பவன். அவன் கி.பி. 7.26 முதல் 776 வரை ஆண்டான்.[22] இப் போர் பல்லவனது 58ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிட்ட தண்டன் தோட்டப் பட்டயத்தில் காணப்படலால், பல்லவ மல்லனது முதுமைப் பருவத்தில் இது நடந்ததாகல் வேண்டும் எனக் கோடல் தவறாகாது.

இப் பேரைப்பற்றிக் கங்கர் கல்வெட்டுகள் கீழ்வருமாறு கூறுகின்றன; “ஸ்ரீ புருஷன் மகன் பல்லவனை ‘விளர்த்தி’ என்ற இடத்தில் வென்றான். ஸ்ரீ புருஷன் ‘காடுவெட்டி’ என்பானைக் கொன்று அவனது பட்டத்தைத் தான் பெற்றுப் ‘பெருமான் அடி’ எனப்பட்டான்; ‘பீமகோபன்’ என்றும் பெயர் கொண்டான். இவன் செய்த போரில் வெற்றி மகள், இவன் வாளால் துணிக்கப்பட்ட யானைகளின் குருதியில் நீராடினான்.[23]

பட்டயக் குறிப்புகள்

முதலாம் பரமேச்சுரவர்மன். இராசசிம்மன் இவர் தம் கல்வெட்டுகளிற் போலவே பல்லவ மல்லனது காசக்குடிப் பட்டயத்திலும் சிலேடைப் பொருள் கொண்ட அடிகள் பல வருகின்றன.அவற்றிலிருந்துநாம் சிறப்பாக அறியத்தக்கது-பல்லவர் ஆகமங்கள் படித்தவர் என்பதே ஆகும். பிற்காலப் புலவர் பலர் நாட்டு வர்ணனையில் கூறும் சிறப்புகள் எல்லாம் காசக்குடிப் பட்டயத்தில் காணலாம். உதயேந்திரப் பட்டயத்தால் நாம் அறியத்தக்க புதிய செய்தி ஒன்றுண்டு.அஃதாவது பல்லவ மல்லன்தான் மறையவர்க்கு நிலம் கொடுத்தபோது இரண்டு நீர்யந்திரங்கள் அளித்தான் என்பது. தொண்டை மண்டலம் ஆற்றுப் பாய்ச்சல் குறைந்த நாடாதலின். இயந்திரங்களை நிறுத்தி நீரை இறைத்துப் பயிர்வேலை செய்யப்பட்டது என்பது இதனால் தெரிகிறது. மேலும், காசக்குடிப் பட்டயத்தால் நாம் அறியத்தக்கது மற்றொன்று உண்டு. அஃதாவது பட்டயம் முதலில் வடமொழியில் எழுதப்பட்டது; அம் மொழி மக்களுக்குத் தெரியாது ஆதலின், தமிழில் எழுதப்பட்டது என்பதே. இதனால் பல்லவர் காலத்தில் மக்கள் எல்லோரும் அறிந்திருந்த மொழி தமிழ் ஒன்றே என்பது தேற்றமன்றோ? தண்டன் தோட்டப் பட்டயத்தில், பாரதம் படித்துச் சிற்றுாரார்க்குப் பொருள் விளக்கினவனுக்கு நிலம் விடப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இதற்குமுன் இங்ஙனம் பரமேச்சுரவர்மன் செய்தான் என்பதைப் படித்தோம் அல்லவா? இங்கு இதனைப் பல்லவமல்லன் செய்ததாக அறிகிறோம். இப் பாரதக் கதை சொல்வோர் பல்லவரால் வழிவழி ஆதரிக்கப்பெற்றனர் என்று கோடலில் தவறில்லை. இவற்றால் நம்

நாட்டில் பாரதக்கதையைக் கூறும் பழக்கம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் (அப்பர், சம்பந்தர் காலத்திலே) உண்டானது என்பதை அறியலாம். அவன் ‘கலியை ஒழித்தவன் (கலிபல மர்த்தனன்)’ என்று உதயேந்திரப்பட்டயம் கூறியுள்ளதாலும் இவன் ஆட்சியில் போர்களே நிரம்பி இருந்தன ஆதலாலும் நாட்டில் வறுமை தோன்றியிருத்தல் இயல்பே. அதனை இவன் அரும்பாடுபட்டு ஒழித்தான் எனக் கொள்ளலாம்.

சமயப் பணி

இரண்டாம் நந்திவர்மனான பல்லவ மல்லன் சிறந்த வைணவன். இவனைக் காசக்குடிப் பட்டயம் ‘அரி சரணபரன்’ என்றும், தண்டன் தோட்டப் பட்டயம் ‘முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் அவன் தலை வணங்கவில்லை’ என்றும் கூறுகின்றன. இக் குறிப்புகளோடு, திருமங்கையாழ்வார் பாடியருளிய நந்திபுர விண்ணகரப் பதிகத்தையும் பரமேச்சுர விண்ணகரப் (வைகுந்தப் பெருமாள் கோவில்) பதிகத்தையும் கொற்றங்குடிப் பட்டயத்தில் பெருமாள் வணக்கமாகவுள்ள முதல் இரண்டு பாக்களையும் ஒப்புநோக்கின், பல்லவ மல்லன் சிறந்த வைணவன் என்பது நன்கு விளங்கும். இவனே வைகுந்தப் பெருமாள் கோவிலை நலமுற அமைத்தவன்; அதற்கு வேண்டும் நலங்கள் பலவாகச் செய்தான். இவன் ஆட்சியிற் பல கோவில்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவற்றுள் (1) கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோவிலும், (2) திருவதிகை வீரட்டானேச்சுரர் கோவிலும், (3) புதுக்கோட்டையில் உள்ள குன்றாண்டார் கோவிலும் சிறந்தன. இவன் பல்வேறு கோவில்கட்குத் தானங்கள் பல செய்துள்ளான். காஞ்சியில் உள்ள முத்தீச்சுரர் கோவில் இவன் காலத்தில் பெருஞ் சிறப்புற்றது.

இவன் காலத்தில் ஆர்க்காடு நகர்க்கு அருகிலுள்ள பஞ்ச பாண்டவர் மலையில் ஒரு குகை சமணர்க்காக அமைக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டில், நந்தி போத்தரையர்க்கு ஐம்பதாம் யாண்டு நாகநந்தி குரவர் வழிபடப் பொன் இயக்கியார்க்குப் படிமம் எடுக்கப்பட்டடது’ என்பது காணப்படுகின்றது. இதனால் இப் பேரரசன் காலத்தில் பல்லவ நாட்டில் சமணர் சிலரும் இருந்தமை தெளிவாம். புத்தரும் அக்காலத்தில் இருந்தனர் என்பதைத் திருமங்கை ஆழ்வார் பதிகங்கள் வலியுறுத்துகின்றன.[24]

கல்வி நிலை

பல்லவ மல்லனிடம் கொடை பெற்ற மறையவர் அனைவரும் சிறந்த கலை விற்பன்னராவர்; நான்கு வேதங்கள். ஆறு அங்கங்கள் முதலியவற்றில் துறை போனவர் செய்யுள், கூத்து, இதிகாசம், கதைகள் இவற்றில் வல்லவர்; எல்லாவகைச் சடங்குகளிலும் தேர்ச்சியுற்றவர் நல்ல ஒழுக்கம் உடையவர். இவரை, ‘இருள் அகற்றும் ஒளி அனையர்’ என்று காசக்குடிப் பட்டயம் முதலியன கூறுகின்றன. ‘பல்லவ மல்லனே சிறந்த கல்விமான் படைக்கலப் புலவன்: இசை விருப்பன்: செய்யுட்கள் செய்வதில் வால்மீகி போன்றவன்; வில்வித்தையில் இராமன். அரசியலில் பிரகஸ்பதி’ எனப் பலபடப் பட்டயங்கள் பகர்கின்றன.

பல்லவப் பேரரசு

இரண்டாம் நந்திவர்மன், தன் காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் பல போர்கள் செய்தனன் ஆயினும், தன் பெருநாட்டில் ஒரு சிறு பகுதியையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவனது தமிழ் மண்டலம் வட வேங்கடம் முதல் புதுக்கோட்டைவரை பரவி இருந்தது. இவனது பேரரசு முன்னிலும் மிக்க வன்மை பெற்று விளங்கியது. நாட்டில் கல்வி நிலை, சமய நிலை முதலியன நன்றாய்ப் பரவின என்னல் மிகையாகாது.

இவன் காலத்து அரசர்

இவன் காலத்துக் கங்க அரசன் சீபுருடன் (கி.பி. 726-788), சாளுக்கியமன்னர் இரண்டாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 733-746), இரண்டாம் கீர்த்திவர்மன் (கி.பி. 746-757) ஆவர். இவருடன் சாளுக்கியப் பேரரசு ஒழிந்துவிட்டது. இச் சாளுக்கியரை வென்ற இராட்டிர கூடருள் தந்தி துர்க்கன் (கி.பி. 725-758), முதலாம் கிருட்டினன் (கி.பி. 758-772). இரண்டாம் கோவிந்தன் (கி.பி. 772-730) என்போர் இவன் காலத்தவராவர். பாண்டியருள் முதலாம் இராசசிம்மன் என்ற பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765), நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790) என்பவர் இக்காலத்தவராவர்.


  1. Ep. Ind Vol. DK p.205, M.V.K. Rao’s “Ganges of Talakad’ p.58.
  2. S.I.I. Vol. II No.14. இச்சங்கிரகிராமம் நெடுமாறன் காலத்துச்சங்கிரமங்கை போலும்!
  3. A.K.N. Sastry’s “Pandian Kingdom’, p.57.
  4. பெரிய திருமொழி - பரமேசுவர விண்ணகரப் பதிகம்.
  5. S.II. Vol. II p.372.
  6. இப் போரில் தொடர்புகொண்ட உதயனன் வடநாட்டான். அவனை வெல்லப் பல்லவன் முனைந்தது தந்திதுர்க்கன் தூண்டுதலால் ஆகும். இருவரும் சிறந்த நண்பர். தந்திதுர்க்கனுக்குப் பல்லவன் போரில் உதவிசெய்தான் எனக் கொள்வதே பொருத்தமாகும் & Wide Altekar’s “Rashtrakutas and their Times’ p.37.
  7. M.V.K. Rao’s “Ganga’s of Talakad, p.53.
  8. Ep, Indica, Vol III, p.360.
  9. Ep. Indica, Vol. IX, pp.205, 206.
  10. Rev. Heras’s “Studies in Pallava History'p.59.
  11. M.V.R. Rao’s “Gangas of Talakad’, p.53.
  12. Ep. Ind Vol.XVIII, pp. 115-120.
  13. Heras’s studies in Pallava History p.60
  14. Ep. Ind Vol.IX p.24; Q.J.M.S. Vol.XIII, pp. 581-88, MVK Rao’s “Gangas of Talakad’.
  15. இரட்டர்-இரட்டிரகூடர்
  16. E.I. Vol.IV p334.
  17. E.I. Vol.IX, p24
  18. பெரிய திருமொழி, 9, “மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடிமாலை வயிரமேகன்”
  19. R. Gopalan’s “Pallavas of Kanchi,’ p.127
  20. Vide his “Rashtrakutas and their Times,’ p.45.
  21. S.I.I.VII pp.519-20.
  22. Vide MVK Rao’s “Gangas ofTalakad’ p.54.
  23. Ibid, p.55.
  24. பெரிய திருமொழி - 2,6,5:2,1,7; 7,9,2; 9,7,9; 7,45 முதலியன.