பல்லவர் வரலாறு/2. பல்லவரைப் பற்றிய சான்றுகள்

2. பல்லவரைப் பற்றிய சான்றுகள்

இலக்கியச் சான்றுகள்

சங்க நூல்களில் பல்லவர் என்பரைப் பற்றிய குறிப்பே காணல் இயலாது. ஆனால், சங்க நூல்களின் காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூல்களில் பல்லவர் குறிக்கப் பட்டுள்ளனர்; காஞ்சிமாநகரம் பல்லவர் ஆட்சியில் சிறந்த கோநகரமாக விளக்கம்பெற்றிருந்தது என்பது குறிக்கப்பெற்றுள்ளது. அப்பிற்பட்ட நூல்களைக் காலமுறைப்படி ஈண்டுமுறைப்படுத்திக் கூறுவோம்.

(1) லோக விபாகம்: இது திகம்பர சமண நூலாகும். இதில் (1) பாணராட்டிரத்தில் உள்ள ‘பாடலி’[1] என்னும் சிற்றுரில் சர்வநந்தி என்பவர் லோகவிபாகம் என்னும் நூலைத் திருத்தியமைத்தார்; (2) அங்ஙனம் இந்நூல் ஒழுங்காகச் செய்யப்பெற்ற காலம் காஞ்சி அரசன் சிம்மவர்மன் பட்டம் பெற்ற இருபத்திரண்டாம் ஆண்டாகும். அஃதாவது, சாக ஆண்டு 380; கிறித்துவ ஆண்டு கி.பி.458. எனவே, சிம்மவர்மன் என்ற பல்லவன் பட்டம் பெற்றயாண்டு 458-22 கி.பி.436 ஆகும்.[2]

(2) அவந்தி சுந்தரிகதை: இதுவும் வடமொழிநூல். முகவுரையில் பாரவி என்னும் வடமொழிப் புலவர் விஷ்ணு வர்த்தனன், துர்விநீதன், சிம்ம விஷ்ணு பல்லவன் எனக் கண்டு பரிசு பெற்றமை கூறப்பட்டுள்ளது. பாரவி பார்த்த மூவேந்தரும் ஏறக்குறைய ஒரே காலத்தவர் என்பதில் ஐயமில்லை துர்வந்தன் கி.பி.604 இல் அரசன் ஆனவன். கி.பி. 614இல் அரசன் ஆனான். ஆதலின், அவனது பல்லவன் காலமும் அதுவேயாகும்.[3]

(3) மத்தவிலாசப் பிரகசனம்: இஃது அப்பர் காலத்வானாகிய மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனால் வரையப்பெற்ற சிறிய நாடகம். இதனில், அக்காலத்திய புத்தர், கபாலிகர், சமணர் முதலிய பல சமய மக்கள் பழக்க வழக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவன்காலம் கி.பி. 615-630[4] என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.

(4) சைவத் திருமுறைகள்:- அப்பர் பாடியருளிய 4,5,6 ஆம் திருமுறைகளில் பல்லவர் சமணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சம்பந்தர் பாடிய பதிகங்களில் சமணரைப் பற்றிய குறிப்புகள், பாண்டியரைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இவ்விருவரும் கி.பி.7ஆம் நூற்றாண்டினர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. இவர்கட்குப் பிற்பட்ட கி.பி.9ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த சுந்தரர் பாடிய தேவாரத்தில்,

“....மண்ணுலகம் காவல் பூண்ட -
உரிமையால் பல்லவற்கு திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையாற் புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமான்”[5]

என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. இக் குறிப்பால், பல்லவர் பேரரசர் என்பதும். அவரது ஆட்சிக்குள் சிற்றரசர் பலர் இருந்தனர் என்பதும், அவர்கள் திறை கொடுக்க மறுத்தனர் என்பதும் நன்கு புலனாகின்றன அல்லவா?

(5) நாலாயிரப் பிரபந்தம் :-திருமங்கை ஆழ்வார் கும்பகோணத்தை அடுத்த நந்திபுரம் (நாதன்கோவில் - இன்றைய பெயர்) என்னும் வைணவப் பதியைப்பற்றிச் சில குறிப்புகள் பாடியுள்ளார். அது கோட்டை மதில்களை உடையது. காவல் மிகுந்தது. நந்திவர்ம பல்லவ மல்லன் பெயரால் நடத்தப் பெற்ற போர்களில் ‘நென்மலி’ என்னும் இடத்துப்போர் ஒன்றாகும். அதனைத்திருமங்கை ஆழ்வார்,

“நென்மலியில் வெருவச் செருவேல் வலக்கைப்
பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்”

என்று பாடியுள்ளார்; வயிரமேகன் என்னும் இராட்டிர கூட அரசன் (கி.பி.725-758) காஞ்சியில் பல்லவ மல்லவனோடு இருந்தான் என்று வேறொரு பாட்டில் பாடியுள்ளார்.[6] பல்லவர் சாளுக்கியரோடு செய்த போரில் பயன்படுத்திய போர்க் கருவிகள், இசைக்கருவிகள் முதலியவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டள்ளார். எனவே, இவர் நந்திவர்ம பல்லவ மல்லன் (கி.பி. 710-775) காலத்தவர். இவர் பாடல்களும் பல்லவர் வரலாற்றுக்கு உதவி செய்வன ஆகும்.

(6) நந்திக்கலம்பகம்:- இந்நூல் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) காலத்தது; இவனைப் பற்றியது; இவன் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பிறவற்றையும் விளக்கமாகக் குறிப்பது. இவ்வரசன் ‘பல்லவர் கோன்’, மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன், எனப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளான். இவன்தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் என்று செ. 104, 107 கூறுகின்றன.

(7) பாரதவெண்பா:- இந்நூலின் சிறிதளவே இன்று கிடைத்துள்ளது. அதுவே ‘உத்தியோக பருவம்’ என்பது. அதன் முதற் பகுதியில் மூன்றாம் நந்திவர்மன் ‘தெள்ளாறு’ என்னும் இடத்தில் பகைவர்களை முறியடித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

(8) பெரிய புராணம்:- இந்நூல் கி.பி.12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் என்னும் பெரும் புலவராற் பாடப்பட்ட தாயினும், இதன்கண் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாயன்மார் காலம் பல்லவர் காலமே ஆகும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கச் சோழனது உயர் அலுவலாளர் ஆதலால், பல்லவர் பரம்பரை, ஆட்சிமுறை முதலிய விவரங்களை நன்கு அறிந்திருத்தல் கூடும்; மேலும் அவர் பல்லவர் நிலைபெற்று ஆண்ட தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்; பல்லவ புரத்தை (பல்லாவரம்) அடுத்த குன்றத்தூரிற் பிறந்து வளர்ந்தவர்; பல்லவர் கோவில் பணிகளையும், கல்வெட்டுச் செய்திகளையும் செவிமரபுச் செய்திகளையும் நன்கு அறிந்தவர். இவ்வசதிகளைப் பெற்ற அப்பெரியார் பாடியுள்ள பெரிய புராணத்தில் பல்லவர் காலத்திய தமிழகம் ஓவியமாக விளக்கப்பட்டுள்ளதை நூலறிவும் நுண்ணறிவும் உடையார் நன்கறிவர். நாயன்மார் அறுபான் மூவருள் காடவர் கோன் கழற்சிங்கர் ஒருவர்; இவர் “கூடலர்முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”, அரசாண்டவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவரைத் ‘தொல்லைப்பல்லவர்’ என்றுங் கூறுகிறது. இதனால், சேக்கிழார் பல்லவருடைய பரம்பரைகளை (முன்னைப் பின்னை நடைபெற்ற பல்லவர் பரம்பரைகளை) நன்கறிந்தவர் என்பது தேற்றமன்றோ? சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர் வரலாற்றையும் பாடியுள்ளார். இந்த நாயனாரும் பல்லவ மன்னர்:

“மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்ய”

ஆண்ட பேரரசர்; சைவப்பதிகளை வணங்கி வெண்பாக்கள் பாடிப் பேறு பெற்றவர்.

அப்பர் காலத்தில் வாழ்ந்த குணபரன் (கி.பி.615-630) (குணதரன் - முதலாம் மகேந்திரவர்மன்) அப்பர்க்கு இழைத்த இன்னல்களும், அவன் சமணத்தைவிட்டுச் சைவனாக மாறினதும் பெரிய புராணத்துட் காணலாம். அவன் மகனான நரசிம்மவர்மன் (கி.பி.630-668) சேனைத் தலைவரான பரஞ்சசோதியார் (சிறுத்தொண்டர்) சாளுக்கியர் மீது படையெடுத்து வாதாபி வென்றதும், அவர் சம்பந்தர் நண்பரானதும் பெரிய புராணத்தில் காணலாம்.

பூசலார் நாயனார் காலத்துக் காடவர்கோனான இராசசிம்மன் (கி.பி.880-710) எடுத்த கற்றளி (கைலாசநாதர் கோவில்) சிவபெருமான் அரசன் கனவிற் சென்று கூறினமை முதலிய செய்திகளைச் சேக்கிழார் பூசலால் புராணத்தில் விளக்கியுள்ளார். இறைவன் கனவிற் சென்று கூறியதாகக் கூறும் பெரியபுராணச் செய்தியே இராசசிம்மன் அசரீரி கேட்டதாகக் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே, சேக்கிழார் பெருமான் கல்வெட்டுகளையும் கருத்திற்கொண்டே புராணம் பாடியுள்ளார் என்பது இங்கு அறியத்தக்கதாகும்.

பல்லவர் காலத்தில் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை நாட்டினரான நரசிங்கமுனை அரையர், மெய்ப்பொருள் நாயனார் (திருக்கோவலூர் அரசர்) முதலியவர் வரலாறுகளும்: சோழநாடு பல்லவர்க்கு உட்பட்டுச் சோழர் தலைமறைத்து முடியிழந்த குறுநில மன்னராகி வாழ்ந்தமையும், அத்தாழ் நிலையிலும் அவர்க்குப்படை வீரரும் படைத்தலைவர் பலரும் இருந்தமையும், பாண்டியர் சிறிதுசிறிதாகக்களப்பிரரையும்பின்னர்ப் பல்லவரையும் வென்று பேரரசை நிலைநிறுத்தின விவரங்களும், பல்லவர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த நல்லனவும் தீயனவும் இன்னபிறவும், பெரிய புராணத்தில் மிகத் தெளிவாக அறியலாம். இந்த விவரங்கள் ஆங்காங்கு இந்நூலில் விளக்கம் பெறும்.

இதுகாறும் கூறப்பெற்ற வடமொழி - தென்மொழி நூல்களை நன்கு படிப்பவர், சங்ககாலத்திற்குப் பிறகு, வேங்கடத்திற்குத் தெற்கே பல்லவர் என்னும் புதிய மரபினர் ஏறக்குறைய 500 ஆண்டுகள் நிலைபெற்றுத் தமிழகத்தை ஆண்டிருந்தனர் என்பதை ஒருவாறு அறியலாம்.

ஊர்களின் பெயர்கள்

சங்க நூற்களில் காணப்பெறாத ஊர்ப் பெயர்கள் பிற்காலத்தில் காணப்படுகின்றன. அவற்றுள், பல்லாவரம் (பல்லவபுரம்), பல்லவ நத்தம், நந்திபுரம், பரமேசுவர மங்கலம், கேந்திர மங்கலம், மகேந்திரவாடி, மாமல்லபுரம், குமாரமார்த்தாண்ட புரம் என்பன சில. இவற்றால் பல்லவர் அரசர் என்பதும், நந்தி பரமேசுவரன், மகேந்திரன், மகாமல்லன், குமார மார்த்தாண்டன் என்பன பல்லவ அரசர் பெயர்கள் என்பதுவும் அறியக் கிடக்கின்றன.

குகைக்கோவில்களும் கற்கோவில்களும்

சங்க நூல்களில் கற்கோவில்களோ, குகைக்கோவில்களோ குறிக்கப்பெற்றில, ஆனால் பெரிய புராணத்தில் கற்றளிகள் (கற்கோவில்கள்) குறிக்கப்பட்டுள்ளன. அவை பல்லவரலால் கட்டப்பட்டன என்பதும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலறிவுடன், நாமும் மாமல்லபுரம், காஞ்சிபுரம், பல்லவபுரம், மகேந்திரவாடி, தாளவானூர், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, சிங்கவரம், கீழ்மாவிலங்கை, திருக்கழுக்குன்றம், மாமண்டூர், வல்லம், மண்டப்பட்டு, மேலைச்சேரி, சித்தனவாசல் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்களையும் கற்கோவில்களையும் காண்கின்றோம்; ‘பெரியபுராணம் முதலிய நூல்களில் காணப்படும் பல்லவர் அமைத்தவை இவை,’ என்பதை ஒருவாறு உணர்கின்றோம்.

எனவே, இதுகாறும் கூறியவற்றால், (1) சங்காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பல்லவர் என்னும் மரபினர் பேரரசர்களாக இருந்தனர் என்பதும், (2)அவர்கள் பல குகைக்கோவில்களையும் கற்கோவில்களையும் அமைத்தனர் என்பதும், (3) சில ஊர்கட்குத் தங்கள் பெயர்களை இட்டு வழங்கினர் என்பதும், (4)அவருள் பலர் சைவாக இருந்தனர் என்பதும் ஒருவாறு உணர்தல் கூடுமே அன்றி, அப்பல்லவர் வரலாறுகளை அறிதல் கூடவில்லை.

பட்டயங்களும் கல்வெட்டுகளும்

பழைய அரசர்கள் கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் தானங்கள் தந்த விவரங்களைச் செப்புப்பட்டயங்களில் எழுதி வந்தனர். அவற்றில் ‘இன்ன அரசன் பட்டமேற்ற இன்ன ஆண்டில்’ என்பது சிறப்பாகக்குறிக்கப்பெற்றது. அத்துடன், சில பட்டயங்களில் அவ்வேந்தன் முன்னோர் பெயர்களும் அவர்தம் விருதுப்பெயர்களும் அவர்கள் செய்த போர்களும் அறச்செயல்களும் குறிக்கப்படலும் உண்டு. இத்தகைய பட்டயங்கள் அரசர் மரபுக்கேற்றபடியும் நாட்டு முறைமைக்கு ஏற்றபடியும் பலமொழிகளில் எழுதப்பெறும். பல்லவர் தமிழகத்திற்கே புதியவர் ஆதலின், அவர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் முதலில் பிராக்ருத மொழியிலும், வடமொழியிலுமே வரையப் பெற்றன. பிற்காலப் பல்லவரே தமிழ் மொழியில் வரையத்தலைப்பட்டனர். இங்ஙனம் மூன்று மொழிகளில் அமைந்த பட்டயங்கள் சில கிடைத்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஆண்ட பல்லவர் கற்களில் பல செய்திகளைப் பொறித்துள்ளனர். அவற்றை அவர்கள் அமைத்துள்ள குகைக் கோயில்களிலும் கற்கோவில்களிலும் கண்டு மகிழலாம். பல்லவர்கள் அமைத்த பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் போல அவர்கள் காலத்துப் பிறநாட்டு மன்னர்தம் பட்டயங்களைக் கொண்டும், ஓரளவு பல்லவர் வரலாற்றை அறியலாம். அம்முறையில் கதம்பர், இரட்டர், சாளுக்கியர், நாகர், கங்கர், பாண்டியர், முத்தரையர் முதலிய அரச மரபினர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் உதவி புரிகின்றன. இவை அமையம் வாய்ப்புழி ஆங்காங்குக் குறிக்கப்பெறும்.

பிற நாட்டார் குறிப்புகள்

(1) இயூன் - சங் என்னும் சீன வழிப்போக்கினர் (யாத்திகர்) ஹர்ஷனையும் இரண்டாம் புலிகேசியையும் பார்த்துவிட்டு இறுதியில் காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்குச் சில மாதங்கள் தங்கியிருந்தார்; காஞ்சியைப் பற்றியும் தமிழ் மக்களைப் பற்றியும் காஞ்சியில் இருந்த சமயங்கள், கோவில்கள் இவற்றைப் பற்றியும் தமது வழிப்போக்கு (பிராயணம்) நூலில் குறித்துள்ளார். அவர் காஞ்சியில் இருந்தகாலம் ஏறக்குறைய கி.பி.640 ஆகும்.

(2) ஏறக்குறைய அதேகாலத்தில் இலங்கையை நோக்கிப் பல்லவர் படையெடுப்பு நடந்தது என்பதை இலங்கை வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகின்றது. ஆதலின், இக் குறிப்பிட்ட இரண்டு நூல்களும் பல்லவர் வரலாற்றை அறிய உதவி புரிவனவே ஆகும்.

ஆராய்ச்சியாளர் உழைப்பு

கி.பி. 19ஆம் நூற்றாண்டில் நமது நாட்டில் மேனாட்டு ஆராய்ச்சியாளர் பலர் இருந்தனர். அவருள் சிறந்தவரான சர் வால்டர் எலியட் என்பவரே முதல் முதல் பல்லவரைப் பற்றி எழுதினர். அவர் ‘மகாபலிபுரத்தில் உள்ள குகைக் கோவில்களை அமைத்தவர் பல்லவரே’, என்பதைக் கண்டுபிடித்தார். அதே நேரத்தில் டாக்டர் பர்னெல் என்பவர் அங்கு இருந்த கல்வெட்டுகளை முயன்று படித்துணர்ந்து, ‘அவை பல்லவர் தம் கல்வெட்டுகளே’ என்பதை மெய்ப்பித்தார். பின்னர் ஜேம்ஸ்பெர்கூசன் என்பவர் மகாபலிபுரத்தைப் பார்வையிட்டு, ‘அங்குள்ள வேலைப்பாடுகள் கி.பி. 6,7 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை’ என்று முடிவு கட்டினார். பிறகு, சென்ற நூற்றாண்டின் இறுதியிற்றான் பல்லவரைப் பற்றிய மேற்சொன்ன செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வெளிப்போந்தன. அவற்றைக்கண்ட ஆராய்ச்சியாளர் திகைப்பும் வியப்பும் கொண்டனர்; பல ஆண்டுகள் அவற்றை ஆய்ந்து வெளியிட்டனர்; இம் முயற்சியில் முதல் இடம் பெற்றவர் டாக்டர் ப்ளீட் (Dr. Fleet) என்பவரே. இவரது முயற்சிக்குப் பின்னர்ப் பல கல்வெட்டுகளும் மகாபலிபுரம் ஒழிந்த பிற (பல்லவர் கோயில்கள் கொண்ட) இடங்களும் ஆராய்ந்து அறியப்பட்டன. பட்டயங்களும் கல்வெட்டுகளும் பேரறிஞர் பலரால்[7] பார்வையிடப்பெற்று விளக்கக் குறிப்புகளுடன் அச்சேறி வெளிப்போந்தன. இவற்றின் பின் கிடைத்த புதிய பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆண்டுதோறும் ஆராய்ச்சியாளர் வெளியிடும் தென் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் வெளியாகி உள்ளன. இவையன்றி, இன்னும் எண்ணத் தொலையாத பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் இருத்தல் கூடும். அவை நாளடைவில் வெளிவரும். அவை வரவரப் பல்லவர் வரலாறு மேலும் விளக்கம் பெறும் என்பதில் ஐயமில்லை.

நூலாசிரியர் பலர்

டாக்டர் ப்ளீட் துரை[8]க்குப்பின்னர் வெங்கையா என்பவர் 1907இல் பல்லவர் வரலாற்றை ஓரளவு தமிழ் நூல் உணர்ச்சியுடன் திறம்பட ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.[9] 1917இல் பிரெஞ்சுப் பேரறிஞரான துப்ராய் துறைமகனார் ‘பல்லவர்’ என்னும் பெயர்கொண்ட ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். இவர், அதுகாறும் எவரும கண்டறியாத பல புதிய கல்வெட்டுகளையும் பல்லவர் சின்னங்களையும் கண்டு ஆராய்ந்து அரும்பாடு பட்டனர். இவர் ‘பல்லவர் சின்னங்கள்’, ‘பல்லவர் ஓவியம்’ என்னும் பெயர்கொண்ட வெளியீடுகளையும், ‘டெக்கானது பண்டை வரலாறு’ என்றும் ஆராய்ச்சி மிக்க நூலினையும், ‘தென் இந்தியப் படிமக்கலை’[10] என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். இப்பெரியார் சிறப்பாகப் பல்லவர் வரலாற்றிற்குப் பெருந்துணை புரிந்தவர். இங்ஙனம் பல்லவர் வரலாற்றை வரைய முனைத்தவர் பலர் உளர். அவருள் நமது சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்த டாக்டர் கிருட்டினசாமி ஐயங்கார் சிறந்தவர். இவர் 1923இல் ‘இந்திய வரலாற்று வெளியீடு’ என்னும் வெளியீட்டில் ‘பல்லவர் தோற்றமும் முற்பட்ட வரலாறும்’ என்னும் தலைப்பில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வரைந்துள்ளார்.’ கோபிநாத ராவ், கே.வி. சுப்பிரமணிய ஐயர், அரங்கசாமி சரசுவதி முதலியோர்[11][12][13] வரைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் சில. பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார் தமிழில் ‘பல்லவர் சரித்திரம்’ வெளியிட்டுளார். 1928 இல் சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த திரு. ஆர். கோபாலன் என்பவர் பண்பட்ட ஆராய்ச்சி முறையில் பல்லவர் வரலாற்றை விளக்கமாக எழுதியுள்ளார். அவருக்குப் பின் பிரெஞ்சுப் பேரறிஞராகவுள்ள ஹீராஸ் பாதிரியார் பல்லவரைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றை வரைந்துள்ளார்.[14]

கல்கத்தாப் பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளராகவுள்ள தினேஷ் சந்திர சர்க்கார் ‘சாதவாகனர்க்குப் பின் வந்த அரசர்’ என்னும் அரிய நூல் ஒன்றில் பல்லவரைப் பற்றி இயன்ற அளவு ஆய்ந்துள்ளார்.[15] டாக்டர் மீனாட்சி அம்மையார் பல இடங்கட்கும் நேரே சென்று ஆராய்ந்து, ‘பல்லவர் கால ஆட்சியும் வாழ்க்கையும்’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை 1938இல் வெளியிட்டுளார். இவ்வம்மையார் பட்டுள்ள பாடுகூறுந்தரத்ததன்று. இவரது நூல் பல்லவர் வரலாற்று நூல்களில் சிறப்பிடம் பெறத்தக்கது.

இவற்றுடன் ஆராய்ச்சி நின்றுவிடவில்லை. ஆராய்ச்சி முடிவுற்றது. எந்த நேரத்திலும் எந்தப் பழைய இடத்தும் புதிய பொருள் கிடைத்தல் கூடும்; புதிய பட்டயமோ, கல்வெட்டோ, வேறு புதை பொருளோ அகப்படல் கூடும். இந்த முறையில் ஆராய்ச்சியாளர் கண்ணும் கருத்துமாக இருந்து, கிடைக்கும் புதியவற்றைத் தம் ஆண்டறிக்கைகளில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இவை அனைத்தையும் ஆராய்ந்து இயன்றவரை ஒருவாறு பல்லவர் வரலாறு கூறலே நமது நோக்கமாகும்.


  1. பாடலிக-பாடலிகபுரம், திருப்பாதிரிப்புலியூர்.
  2. Dr. S.K. Aiyangar’s “Some Contributions of South India to Indian Culture’ pp. 193-194.
  3. Dr. M. Venkataramanayya’s article on “Durvinita and Simha Vishnu’ in J.O.R.
  4. Ibid
  5. சுந்தரர் தேவாரம், ப.90, செய்.
  6. பெரிய திருமொழி. வி.10:2, 9, 8: 3.9
  7. Dr. Fleet Hutzsch, Venkayya, Keilhorn, Krishna Sastry and others. They can be found in the Indian Antiquary, Soultes Indian Inscriptions and the Epigraphia Indica.
  8. Vide his “Dynastiesofthe Kanarese Districts'in the Bombay Gazetteer
  9. Archaeological Annual Survey Report for 1906-7, pp. 217-243.
  10. “South India Iconography'
  11. Dr. Venkataramanayy’s articles on “The Date of Pallava Malla, “Durvinita and Vikramaditya I, “The place of Virakurcha in the Pallava Genealogy,” “Mahendravarman I & Pulikesin II etc.
  12. Mr. M.S. Sarma’s papers on “Nirupatunga’, The Chronology of the Later Pallavas’ etc
  13. T.N. Ramachandra’s paper on “The last days of Nirupatunga’ etc.
  14. Studies in Pallava History, (1934)
  15. D. Sircar’s “Successors of the “Satavahanas’ (1939)