பல்லவர் வரலாறு/4. களப்பிரர் யாவர்?

4. களப்பிரர் யாவர்?

களப்பிரர்

சென்ற பகுதியில் பல்லவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர் களவர் என்பவர் என்பது குறிப்பிடப்பட்டதன்றோ? இப் பெயர் கன்னடத்தில் களபரு என்று மாறும்; வடமொழியில் களப்ரா என்று மாறுதல் பெறும். இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர்; அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வென்றவராகப் பாண்டியர்-பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றன. தமிழகத்துக்கு வெளியே வேற்றரசர் பட்டயங்களில் இவர்கள் குறிப்பிடப்படாமையின், இவர்கள் தென்னிந்தியாவினரே என்பது தேற்றம். வேள்விக்குடி - சின்னமனூர்ப் பட்டயங்களில் கடுங்கோனுக்கு முன்னும் சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்குப் பின்னும் பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர் என்பது காணப்படுகிறது. பெரிய புராணத்தில் மூர்த்திநாயனார் காலத்தில் மதுரையில் வடுகக் கருநாடக வேந்தன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான் என்பது காணப்படுகிறது. எனவே, வேள்விக்குடிப் பட்டயம் குறிப்பிடும் கலியரசனே பெரிய புராணம் கூறும் வடுகக் கருநாடக வேந்தனாக இருத்தல் வேண்டும்; அஃதாவது அவன் களப்பிர அரசனாக இருத்தல் வேண்டும் என்பது. கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. 250 எனக் கொள்ளினும், கடுங்கோன் களப்பிரரை விரட்டிப்பாண்டியர் அரசை நிலைநாட்டிய காலம் கி.பி 575[1] எனக் கொள்ளினும், களப்பிரர் பாண்டியநாட்டைஏறக்குறைய 300 ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்பதை உறுதியாக உரைக்கலாம். எனவே, இக் களப்பிரர் ஏறக்குறைய கி.பி. 250 இல் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர் என்னலாம்.[2]

களப்பிரர் இடையீடு (கி.பி 200–300)



புகாரைத் தலைநகரமாகக் கொண்டு அச்சுத விக்ரந்தன் என்னும் களப்பிர அரசன் ஆண்டு வந்தான் என்பதைப் புத்தத்தர் குறிப்பிடுதல் கொண்டு உணரலாம்.[3] அவர் பாலி மொழியில் ‘அபிதம்மாவதாரம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அவர் தமது நூலில் மேற்சொன்ன செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர். அப்பொரியார் காலம் புத்த கோஷரது காலமான கி. பி. 350 ஆகும்.[4] ‘அச்சுதக் களப்பாளன்’[5] என்னும் பெயர் கொண்ட வேந்தன் ஒருவன் முடியுடை மூவேந்தரையும் வென்று சிறைப்படுத்தினான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. கி.பி.11ஆம் நூற்றாண்டினதான யாப்பருங்காலக்காரிகையில் ஒரு பாடல் அவன் சிறப்பைக் கூறுகிறது. அஃது,

“அடுதிறல் ஒருவ/நிற் பரவுதும்: ‘எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டொழில் மார்பில்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப்போர்வேல் அச்சுதன்
தொன்றுமுதிர்கடலுலகம் முழுதுடன்
ஒன்றுபு திகிரி உருட்டுவோன்’ எனவே”

என்பது.

இது விளக்கத்தனார் என்னும் பண்டைப் பாவலர் பாடியதாகும். யாப்பருங்கல விருத்தியில் மற்றொரு செய்யுள் காணப்படுகிறது. அது,

“பொருகுடை வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப்பாளர்க்(கு) ஈந்து மனமகிழ்ந்து
அருள்புரி பெரும்புகழ் அச்சுதக் கோவே/
நந்தி மாமலைச் சிலம்பு
நந்தி நிற் பரவுதல் நாவலர்க்கரிதே”

இச் செய்யுட்கள் பழையன என்பது இவற்றின் நடை கொண்டு கூறலாம். மேலும் முதற்பாட்டின் ஈற்றடி “ஒரு தனி யாழி உருட்டுவோன்” எனவே என வரும் சிலப்பதிகார அடியை ஒற்றிவருதல் இதனை நன்கு வலியுறுத்தும். எனவே, தமிழ் நூல்களில் கூறப்படும்.அச்சுதன் புத்ததத்தர்க்கறிய அச்சுதனே என்பது தெளிவாதல் காண்க. அறுபான் மும்மை நாயன்மாருள் ஒருவராகிய கூற்றுவ நாயனார் களப்பிரரே ஆவர். இவரைப்பற்றி நம்பியாண்டார் நம்பி,

"ஒதம் தழுவிய ஞாலமெல்லா மொரு கோலில்வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே"

என்று கூறுதல்காண்க. ‘இவர் பல அரசர்களைவென்றவர் முடிபுனைய விரும்பித் தில்லைவாழ் அந்தணரை வேண்டினர். அவர்கள், இவர் சோழர் அன்மையின் மறுத்துவிட்டனர். அதனால் இவர் இறைவனை வேண்ட, சிவபெருமான் தமது திருவடியை முடியாகச் சூட்டி அருளினார் என்பதைப் பெரியபுராணம் விளக்கமாகக் கூறுகிறது.[6] இவரும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பதில் ஐயம் இல்லை மற்றொரு நாயனாரான இடங்கழி நாயனார் என்பவரும் இம் மரபினரே. இருவரும் கொடும்பாளுரை ஆண்ட குறுநில மன்னராவர்.[7]

களப்பிரர்-பல்லவர் போர்கள்

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முனைகையில், அவர்களால் தாக்குண்ட இக் களப்பிரர் அருவா வடதலை நாட்டை விட்டுத் தொண்டை மண்டலத்திற்குள் நுழைந்தனர். இவர்கள் நுழைவால் சோழர் சிற்றரசு தொண்டை மண்டலத்தில் வீழ்ச்சியுற்றது. பல்லவர் தொண்டை நாட்டையும் கைப்பற்ற முனைந்த பொழுது, அவரிடம் போரிட்டுத் தோற்ற களப்பிரர் காஞ்சியை விட்டுப் பாலாற்றுக்குத் தெற்கே சென்று விட்டனர். அதனாற்றான் பப்பதேவன் காலத்தில் பாலாறு பல்லவர் நாட்டின் தென் எல்லையாக இருந்திருந்தால் வேண்டும். பிறகு சிவஸ்கந்தவர்மன் இக் களப்பிரரோடு போரிட்டுத் தென் பெண்ணையாறு வரை பல்லவ நாட்டை விரிவாக்கி இருத்தல் வேண்டும்.[8]

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இடைக்காலப் பல்லவருள் ஒருவனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் (களப்பிரர்)[9] சேனையை நடுங்க வைத்தான் என்று ஒரு பட்டயம் கூறலால், தொண்டை-சோழநாடுகளில் இருந்த களப்பிரர்க்கும் பல்லவர்க்கும் போர் நடந்த செய்தி அறியலாம்.

இக் களப்பிரர் அடிக்கடி பல்லவரோடு போரிட்டு வந்திருக்க வேண்டும் இவர்களைக் காஞ்சியினின்றும் துரத்தித் தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்ற இடைக்காலப் பல்லவரும் இடருற்றவராதல் வேண்டும்.[10]

கி.பி. 6ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் பல்லவப் பேரரசனாக இருந்த சிம்ம விஷ்ணு கி.பி. 575-615) களப்பிரரை முறியடித்த பெருவீரன் என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறுகின்றது. சிம்மவிஷ்ணுவின் பெயரனான முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-660) இக் களப்பிரரோடு போரிட்டான். கி.பி.7ஆம் நூற்றாண்டின் கடையிலும் எட்டாம் நூற்றாண்டின் இடையிலும் சாளுக்கியர் இக் களப்பிரரைக் கண்டுள்ளனர். வடக்கே பல்லவராலும் தெற்கே பாண்டியராலும் அடிக்கடி தாக்குதல் பெற்று வலிகுன்றிய இக் களப்பிரர், கி.பி.7,8 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சைக்கு அருகிலும் கொடும்பாளுரிலும் முத்தரையர் என்னும் பெயருடன் சிற்றரசர்கள் ஆகிப் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் அடங்கி வாழ்ந்து வந்தனர்.[11]

சோணாட்டில் களப்பிரர்

தஞ்சைக்கடுத்த செந்தலை (சந்திரலேகா) என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக இருந்திருத்தல் வேண்டும். அங்குள்ள கோவில் மண்டபத் தூண்களில் இருக்கும் கல்வெட்டு களில் முத்தரையர் பரம்பரையைக் காணலாம்:

பெரும் பிடுகு முத்தரையன் I

அல்லது
குவாவன் மாறன்
|
இளங்கோவதி அரையன்
அல்லது
மாறன் பரமேசுவரன்
|
பெரும் பிடுகு முத்தரையன் II
அல்லது

சுவரன் மாறன்

இந்த மூன்றாம் அரசன், ‘ஸ்ரீமாறன், ஸ்ரீகள்வர் காவலன், ஸ்ரீசத்ரு, கேசரி, ஸ்ரீகளப்ர காவலன்’ எனப் பலவாறு வழங்கப் பட்டான்.[12] இம் மரபினர் பாண்டியரை வென்றவுடன் மாறன் என்று பெயரிட்டுக் கொண்டனர்; ‘முத்து அரையர்’ - முத்துக்கள் கிடைக்கும் பகுதிக்கு (பாண்டிய நாட்டுக்கு) அரசர் என்று தம்மை அழைத்துக் கொண்டனர். இன்றேல், சேர, சோழ, பாண்டியரை வென்றனராகலின் முத்தரையர் (மு+தரையர்) எனப் பெயர் கொண்டனர் எனினும் பொருந்தும்.[13]

பாண்டி நாட்டில் களப்பிரர்

பாண்டி நாட்டில் முத்தரையர் அரசு செலுத்திய பொழுது தான் கி.பி. 470 இல் சமண சங்கம் மதுரையிற் கூட்டப் பட்டது. ‘திகம்பர தரிசனம்’ என்னும் சமண நூல் இதனைக் குறிக்கிறது. நாலடியாரும் பழமொழியும் அப்பொழுது பாடப் பட்டவையாக இருக்கலாம். நாலடியாரில் முத்தரையர் புகழப்பட்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தி உரையால், தமிழ் முத்தரையர் கோவை ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. இம் முத்தரையர் (களப்பிரர்) சமணத்தை ஊட்டி வளர்த்தனர் என்பது நாலடியார் போன்ற (செ. 200, 243, 296) நூல்களால் நன்குணரலாம்.[14]

கி.பி. 8 ஆம் நூற்றாண்டினரான திருமங்கை யாழ்வார் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட சிற்றரசர். அவர் கள்ளர் மரபினர் என்று திவ்யசூரி சரிதம் செப்புகிறது. கள்ளர் சரப மரபினர் என்று வடமொழியில் கூறப்படுவர்.[15] இன்றும் திருச்சிக் கோட்டத்தில் முத்தரையர் சமீந்தார்களாக இருக்கின்றனர். தெலுங்க நாட்டில் முத்துராசாக்கள் என்னும் சமீந்தார் இருக்கின்றனர். மதுரைக் கோட்டத்தில் உள்ள மேலுரில் முத்தரையர் ‘அம்பலகாரர்’ எனப்படுவர். இவர்கள் எல்லோரும் இக்காலத்துக் கள்ளர் வகுப்பினர் ஆவர் என்பர் ஆராய்ச்சியாளர்.[16]

பல்லவராலும் பாண்டியராலும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுவரை களப்பிரர் வலிகுன்றிச் சிற்றராசராக இருந்தனர். தஞ்சையையாண்ட களப்பிரர் பல்லவர்க்கு அடங்கியவர்: கொடும்பாளுரை ஆண்ட களப்பிரர் பாண்டியார்க்கு அடங்கியவர். கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் சோழப் பேரரசை நிலைநாட்டிய விசயாலய சோழன் தஞ்சையைக் களப்பிர அரசனிடமிருந்தே மீட்டான்.[17]


  1. T.V.S Pandaranar’s “Pandyas,’ pp; 103.
  2. C.V.N. Iyer’s Saivism. In S. India, pp.411-412.
  3. K.A.N. Sastry’s Cholas, Vol I p. 121.
  4. K.C.Law’s Life and Works of Buddagosha,’ p.43.
  5. கம்மர்-கம்மாளர், அந்தணாளர் என்ப்து போலக் களப்பர் என்பது களப்பாளர் என வருதல் இயல்பு.
  6. கூற்றுவ நாயனார் புரணாம்.
  7. K.A.N.Sastry’s Cholas, Vol.I. p.150 foot-note.
  8. R.Gopalan’s “Pallavas of Kanchi’, pp.36-37
  9. சோழர் இக் காலத்தில் தனித்துப் படையெடுத்தனர் எனல் பொருந்தாது. என்னை? கொண்டை நாடும் சோணாட்டின் வடபகுதியும் களப்பிரர்கையில் இருந்தது என்பதைப் புத்ததத்தர் கூற்றால் உய்த்துணரலாம். அங்ஙனம் இருப்ப, களப்பிரரும் சோழரும் சேர்ந்து பல்லவரை எதிர்த்தனர் எனக்கோடலே பொருத்தமாகும்.
  10. D.S.K. Aiyaaga’s Int, to the “Pallavas to Kanchi’ 22.
  11. Ibid p.23.
  12. R.Gopinatha Rao’s article in “Sen Tamil’ Vol.6
  13. M.S.R.Iyengar’s “Studies in S.I. Jainism,’ pp.53–55,
  14. Ibid.
  15. M.R.Aiyangar’s Alwargal Kalanilai,’ pp. 118-119
  16. “Studies in S.I.Jainism'pp.56,57 - 75
  17. K.A.N. Sastry’s “Pandyan Kingdom’ p.84-85