பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/கட்டடக் கலைஞரும் கட்டடங்களும்

இயல் நான்கு

கட்டடக் கலைஞரும் கட்டடங்களும்

பழந்தமிழர் நாளில் கட்டடங்களையும் கோயில்களையும் அரண்மனைகளையும் அமைத்த சிற்பிகளின் தனித் தனிப் பெயர்கள் தெரியவில்லை என்றாலும் சில சாசனங்கள் கல்வெட்டுக்கள் மூலம் சிற்பத் தொழிலின் தனிப் பெயர்கள் சில தெரிகின்றன.

அவையும் கோயில்களைக் கட்டிய சிற்பிகளின் பெயர்களே தவிர வீடுகள், அரண்மனைகளைக் கட்டிய சிற்பிகளின் பெயரை அதிகம் அறிய வாய்ப்பில்லை. அவை எங்கும் இடம் பெறவும் இல்லை.

சில சிற்பிகள் பெயர்

மாமல்லபுரத்துத் தேர்க் கோயில்களையும் பாறைக் கோயில்களையும் உருவாக்கிய சிற்பாசாரியர்களின் பெயர்கள் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி என்னும் சிற்றுாருக்கு அருகில் நொண்டி வீரப்பன் குதிரைத் தொட்டி என்னும் ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளன.1 இப் பெயர்கள் யாவும் மாமல்லபுரத்துச் சிற்பங்களை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள் என்றே கருதப்படுகின்றன. அவையாவன :

1. கேவாத பெருந்தச்சன், 2. குணமல்லன், 3. பய்ய மிழிப்பான், 4. சாதமுக்கியன், 5. கல்யாணி, 6. திருவொற்றியூர் அபாஜர், 7. கொல்லன் ஸேமகன்2

கி. பி. 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே வாழ்ந்த தண்டி என்னும் வடமொழி நூலாசிரியர் தாம் இயற்றிய அவந்தி சுந்தரிகதா என்னும் நூலில் புகழ்பெற்ற லலிதா லயர் என்னும் சிற்பியைப் பற்றிக் கூறுகிறார். அத்துடன் மட்டும் இல்லாமல் ‘சூத்ரக சரிதம், என்னும் கதையை லலிதாலயரே தமிழில் எழுதினார் என்ற தகவலும் தண்டியாசிரியரால் கூறப்படுகிறது. 3

இரண்டாவது விக்கிரமாதித்யன் (783-745) காஞ்சிபுரத்தை வென்ற பிறகு அந்நகரிலிருந்து குண்டன் என்னும் பெயரையுடைய சிற்பி ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பட்டதக்கல்’ என்னும் ஊரில் ஒரு கோயிலைக் கட்டினான் என்பது தெரிகிறது. அந்தக் கோயில். இப்போது விருயாட்ச ஈசுவரர் கோயில் என வழங்கப்படு கிறது. திரிபுவனாசார்யர் அநிவாரிதாசாரியார் என்ற சிறப்புப் பெயர்களை இவ்வரசன் இந்தச் சிற்பிக்கு அளித்திருக்கிறான்.4

முதலாவது குலோத்துங்க சோழன் காலத்தில் புரிசையில், திருப்படக்காருடைய மகாதேவர் கோயில் கட்டப்பட்டது. இதனைக் கட்டிய சிற்பாசாரியின் பெயர். ‘சந்திர சேகரன் ரவி’ என்னும் சோழேந்திர சிம்ம. ஆசாரி என வழங்கப்படுகிறது. 5

இராசேந்திர சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட திருவோற்றியூர் மூலக் கோயில் இன்ன சிற்பியால் புதுப் பிக்கப்பட்டது என்பது தெரிய வாய்ப்புச் சுவர் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. வீர சோழ தச்சன் என்பதே அப்பெயர்.6

சிதம்பரம் கோயிலின் வடக்குக் கோபுரத்தைக் கட்டிய சிற்பியரின் உருவங்களும், பெயர்களும் வடக்குக் கோபுரத்து உள்சுவரில் எழுதப்பட்டுள்ளன. .

அப்பெயர்கள் வருமாறு:

  1. . விருத்தகிரியில் கேசவப் பெருமாள்
  2. . அவர் மகன் விசுவமுத்து -
  3. . திருப்பிறைக் கோடை ஆசாரி திருமருங்கன்
  4. . அவர் தம்பி காரணாச்சாரி 7

கோயில் கட்டடக் கலைஞர் ஸ்தபதி என்ற தனிப் பெயராலும், வீடு முதலிய கட்டடக் கலைஞர் கொத்தனார் என்ற பெயராலும் குறிக்கப்படும் வழக்கம் பின்னாளில் வந்தது.

ஸ்தபதிகள் ஆகமப் பயிற்சி, வடமொழி அறிவு, சிற்ப நூலறிவு அதிகமுள்ளவர்களாக உயர் மட்டத்தில் இருந்தனர்.

உருக்குதல், வார்த்தல், பஞ்சலோகக் கலவைஜடிபந்தன மருந்து செய்தல் (சிலையைப் பீடத்தோடு இணைக்கும் அரக்குப் போன்றதொரு மருந்து) முதலிய சிறப்பம்சங்கள் ஸ்தபதிகளுக்குத் தெரிந்திருந்தன. 8

காரை, செங்கல், பூச்சு, கட்டல் நெற்றி எடுத்தல் (மேல் விதானப் பூச்சு) ஆகிய வேலைகளில் கொத்தர் அல்லது கொத்தனார்கள் தேர்ந்திருந்தனர்.9

‘சிற்ப சாஸ்திர’ நூல் மரபுப்படி எல்லாரையும் “சிற்பிகள் எனக் குறித்த பழைய மரபு மாறி வெறும் கட்டட வேலை மட்டும் செய்வோர் கட்டட வேலைக்காரர் அல்லது கொத்தனார் என்ற பிற்கால வேறுபாடுகள் வந்தன. இந்த வேறுபாடு வந்த பின்னும் கோயில் கட்டட வேலைகளில் ஸ்தபதி கொத்தனார் இருவருக்குமே பணிகள் இருந்தன.

சுவரைக் கொத்தனார் எடுத்தார். திருவுண்ணாழிகை, பீடம் அமைத்தல், பீடத்தில் மூர்த்தத்தை நிறுவுவது போன்றவற்றை ஸ்தபதி செய்தார். 10 அஸ்தபதி என்ற சொல்லுக்கு ஸ்தாபிப்பவர்-நிலை நிறுத்துபவர் என்பது பொருள்.

‘கோயில் கட்டும் கலையில் உலகிலேயே மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் தயிழர்கள் என்றும் இந்தியா விலேயே நிகரற்ற பெருமை வாய்ந்த கோயில் தஞ்சைப் பெரிய கோயில் என்றும் ஆங்கிலக் கலைக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலில் காணப்படுவதுகாய்தல் உவத்தல் இன்றி வெளியிடப் பெற்றிருக்கும் கருத்தே ஆகும்” என்று. காலஞ்சென்ற அறிஞர் பி. ஸ்ரீ. கூறுவார். 11

‘அரசர்களின் அரண்மனையைத்தான் கோயில் என்ற சொல் ஆதியில் குறித்திருக்க வேண்டும். பிறகு இது தெய்வ வழிபாட்டுக்குரிய இடங்களைச் சிறப்பாகக் குறிக்கலாயிற்று. சிற்ப நூல் வல்லுநர் கோயில்களையும், மண்டபங்களையும் மாட மாளிகைகளையும் உயர்ந்த மாடங்களில் அடுக்கு வீடுகளையும் நிலாமுற்றங்களையும், தங்கள் கலைத் திறன் தோன்ற அமைத்தனர் என்று நெடுநல்வாடை தெரிவிக்கிறது. சிறந்த அறிஞர்களான ஒவியமணிகள் மதுரையில் இருந்ததாக மதுரைக்காஞ்சி’ கூறுகிறது. 13

அழகான அரண்மனையை ஒவத்து அன்ன உருகெழு நெடுநகர்‘13 என்கிறது பதிற்றுப்பத்து. ஒவியம் போல்: அழகையுடைய அரண்மனை என்பது இதன் பொருள். “எழுதி வைத்த சித்திரமே போன்ற அழகிய வீடு’ என்று இப்போது கூடப் பேச்சு வழக்கில் புகழ்ந்து சொல்லுவது உண்டு. இதே போன்றதோர் உவமை புறநானூற்றிலும் காணப்படுகிறது.14 சித்திரத் தொழில் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு மனையை அல்லது வீட்டை ஓவியம் போல் இருக்கிறது என்று சங்க நூல்கள் கூறுவதிலிருந்து அக் காலத்துத் தமிழர்களின் ஓவியக் கலை உணர்வையும் நன்கு உய்த்துணரலாம்’, இன்றைய கட்டடக் கலையில் ஓவியமும் ஒரு வகையில் உள்ளடங்குகிறது. வெளி

வேலைப்பாடு (Exterior Decoration) உள்ளணி (Interior Decoration) என்ற கட்டடக் கலையின் இரு பிரிவுகளில் ஒவியம் உள்ளனியில் அடங்கி விடுகிறது.

அரங்குகள் அமைப்பு

மேடை அரங்கமைத்தல், உள்ளணி செய்தல் போன்ற கட்டடக் கலையின் நுண்ணிய பிரிவுகளிலும் பழந்தமிழர் சிறந்து விளங்கி இருந்ததற்கு நூற் சான்றுகள் கிடைக்கின்றன. திரைச்சீலை, அரங்க நிர்மாணம் பற்றிய விவரங்கள் பலவும் தெரிய வருகின்றன.

இவை பற்றிச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் பல செய்திகளைக் காணமுடிகிறது.

பழந்தமிழர் அமைப்பில் இவ்வாறு நாட்டியம், நாடகம், கூத்து முதலியன நிகழும் கட்டட ஏற்பாடு இருபிரிவுகளை உடையதாயிருந்தது.

கலைஞர் நின்று நிகழ்த்தும் இடம் அரங்கு எனவும், சுவைப்போர் இருந்து காணுமிடம் அவை எனவும் அவை யரங்கு எனவும் கூறப்பட்டன. 15

அரங்கு அமைக்கும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் ‘மனையடி சாஸ்திரம் பின்னாளில் கூறும் அதே நிலைகள் சிலம்பிலும் வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்க மளக்கும்
கோலள விருபத்து நால்விரலாக
ஏழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத் துறுப்பின தாகி
உத்தரப் பலகையோடரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கு 4

என்று சிலப்பதிகாரம் அரங்கு கட்டப்பட்ட விதத்தை விவரிக்கிறது. இதில் எண்ணிய நூலோர், என்ற தொடருக்கு அடியார்க்கு நல்லார் விளக்கம் எழுதும் போது, - -

“எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கு செய்தற்கு நிலக் குற்றங்கள் நீங்கின இடத்திலே நிலம் வகுத்துக் கொண் டென்க17 என்றார்.

மேலும் எண்ணப்பட்ட மண்ணக நிலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் விளக்கமும் அவரது உரையி லேயே கிடைக்கிறது.

 தந்திரத் தரங்கிங் கியற்றுங்காலை
அறனழித் தியற்றா வழக்குடைத் தாகி
நிறைகுழிப் பூழி குழிநிறை வாற்றி
நாற்றமும் சுவையும் மதுரமுமாய்க் கனம்
தோற்றிய திண்மைச் சுவட துடைத்தாய்
என்பு உமி கூர்ங்கல் களிஉவர் ஈளை
துன்ப நீறு துகள் இவை இன்றி
ஊரகத் தாகி யுளைமான் பூண்ட
தேரகத்தோடுந் தெருவுமுக நோக்கிக்
கோடல் வேண்டும் ஆடரங்கதுவே. 18

என்று ஒரு மேற்கோளும் வருகிறது. ஏறக்குறைய மனை நூல் பாடல் போலவே ஒரு பாடலை உரையாசிரியம் காட்டுகிறார். -

தனியார் வீட்டுக்குத் தெருக் குத்தல் (தெருவை முக நோக்கி இருப்பது) ஆகாது எனக் கூறும் அதே சாஸ்திரம்’ அரங்குக்குத் தெருமுக நோக்கி இருத்தல் வேண்டும் என்று இலக்கணம் கூறியிருப்பது சிந்தனைக்குரியது. இதே பகுதிக்கு அரும்பதவுரையில் “எண்ணப்பட்ட நாடக நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கு செய்யத் துவர் வரி வளை பொருத்தல் முதலிய நிலக் குற்றங்கள் நீங்கின இடத்திலே நலந்தெரிந்து இவ்விடம் என்று வகுத்துக் கொண்டு” 20 என்றார்.

அடியார்க்கு நல்லாரோ அரங்கமைத்தலை மேலும் விவரிக்கும்போது, “தந்திர வழி அரங்கு இவ்வுலகத்துச் செய்யுமிடத்துத் தெய்வத் தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கூபமும், குளனும் காவும் முதலாகவுடையன நீங்கி அழியாத இயல்பினையுடைத்தாய் நிறுக்கப்பட்ட குழிப் பூழி குழிக் கொத்துக் கல்லப்பட்ட மண் நாற்றமும் மதுர நாறி இரதமும் மதுரமாகித் தானும் திண்ணிதாய் என்பும், உமியும், பரலும் சேர்ந்த நிலம், களித்தரை, உவர்த்தரை, ஈளைத்தரை, பொல்லாச் சாம்பல் தரை, பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து ஊரின் நடுவணதாகித் தேரோடும் வீதிகளெதிர் முகமாக்கிக் கொள்ளல் வேண்டும் என்க"21 என்று விவரிக்கிறார்.

இவ்விடத்தில் சாமிநாதையர் ஒர் அடிக்குறிப்புப் பாடல் தருகிறார்.

ஆடலும் பாடலும் கொட்டும் பாணியும் நாடிய
அரங்கு சமைக்கும் காலைத் தேவர் குழாமுஞ் செபித்த
பள்ளியும் புள்ளின் சேக்கையும் புற்றும் நீங்கிப்
போர்க்களி யானைப் புரைசாராது மாவின் பந்தியொடு
மயங்கல் செய்யாது செருப்புகு மிடமும் சேரியும் நீங்கி
நுண்மை யுணர்ந்த திண்மைத்தாகி மதுரச்சுவை மிகூஉ
மதுர நாறித் தீராமாட்சி நிலத்தொடு பொருந்திய
இத்திறத்தாகு மரங்கினுக் கிடமே22

என்று வரும் அப்பாடல். அரங்கமைக்க நிலங்கோடல் பற்றி விளக்குகிறார் அடியார்க்கு நல்லார். -

நிலந்தான்,

1. வன் பால், 2. மென் பால், 3. இடைப் பால் என மூவகைப்படும். அவற்றுள்,

வன் பாலாவது குழியின் மண் மிகுவது
மென் பாலாவது குழியின் மண் குறைவது
இடைப் பாலாவது குழியின் மண் ஒப்பு

ஈண்டு இவை பெரும்பான்மையாற் கொள்ளப்படும்.23

அரங்கிற்கு நிலங்கோடல் பற்றி அன்றும் மனை நூல் முறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை இப்பகுதி உறுதி செய்கிறது.

பின்னர் அரங்கு அமைக்கும் முறையும், உள்ளலங்காரமும் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

பொதியில் மலை முதலிய புண்ணிய நெடுவரையின் பக்கங்களில் நெடிதாகி உயர வளர்ந்த மூங்கிலிற் கண்ணொடு கண்ணிடை ஒரு சானாக வளர்ந்தது கொண்டு நூல்களிற் சொல்லியபடியே அரங்கம் செய்ய அளக்குங்கோல் - உத்தமன் கைப்பெருவிரல் இருபத்து நாலு கொண்டது ஒரு முழமாகக்கோல் நறுக்கி அக்கோலால் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் குறட்டுயரமுமாய்க் கொண்டு -தூணத்துக்கு மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கினிடத்து அகலத்துக்கு இட்ட உத்தரப் பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்குகோலாக உயரங்கொண்டு இத்தன்மையவாய் அளவுக்குப்பொருந்த வகுத்த வாயிலிரண்டினை உடையதாகச் செய்த அரங்கு என்றவாறு. 24

வாயிலிரண்டாவது புகச் சமைத்த வாயிலும் புறப்படச் சமைத்த வாயிலும் எனக் கொள்க.25 என்று கூறப்பட்டுள்ளது.

உட்புகும் வாயிலும் (Entry) வெளிப்படும் வாயிலும் (Exit) தனித்தனியே அமைப்பது இந்த நூற்றாண்டின் அரங்க உத்தி (Theatre Technic) என்று கருதுகிறோம். ஆனால் சிலப்பதிகாரக் காலத்து அரங்கமைப்பிலேயே அந்நிலை இருப்பதைக் காண முடிகிறது. இந்நுணுக்கம் தமிழர் கட்டடக் கலை நயத்திற்கு ஓர்அடையாளமாகவே விளங்குகிறது.

இவ்வாறு அமைத்த அரங்கிலே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகை வருணத்தார்க்குமுரிய பூதங்களை எழுதி யாவரும் வணங்க மேனிலத்தில் வைப்பர்.

இதே கருத்து சீவக சிந்தாமணியிலும் கூறப்படுகிறது.25

சிலம்பு அழற்படுகாதையிலும் இப்பூதங்கள் பற்றிய பிற விவரங்கள் வருகின்றன.

அரங்கி னுயரமு மகலமு நீளமும் பொருந்த நாடி
உரைக்குங் காலைப் பெருந்தண் மால்வரைச் சிறுகழை
கண்ணில், கண்ணிடை யொருசாண் வளர்ந்தது கொண்டே
இருபத்து நால்விரற் கோலளவு அதனால் எழுகோலலெத்
தெண்கோ னீளத் தொருகோல் உயரத் துறுப்பினதாகி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகைவைத்த
இடைநிலை நாற்கோலாகப் பூதரை
எழுதி மேனிலை வைத்து நந்தி என்னுந் தெய்வமு
மமைத்துத் தூணிழற் புறப்பட மாண்விளக் கெடுத்து
...கோவும் யானையுங் குரங்கும் பிச்சனும்
பாவையும் பாங்குடைப்புருடா மிருகமும் யானையு மெழுதி

இந்நிலம் விளங்கப் பாவையர்க் கியற்றுவ தாங்கெனப் படுமே27

என்று சுத்தானந்தப் பிரகாச மேற்கோளும் காட்டப் படுகிறது.

அரங்கின்கண் விளக்கு ஒளியில் ஏனையவற்றின் நிழல் பட்டு விடாதபடி கவனம் எடுத்துக்கொண்டது.28 மற்றொரு கட்டட நிர்மாண நுணுக்கமாகும். தூண்களின் நிழல் அரங்கில் பட்டு விடாதபடி அரங்கமைத்தனர் என்கிறார் இளங்கோவடிகள்.

"தூண்களின் நிழல் நாயகப் பத்தியின் கண்ணும், அவையின் கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி’ என்கிறார் அரும்பதவுரையாசிரியர்.29

அடுத்துத் திரைச்சிலை பற்றியும், அரங்கை அணி செய்தல் பற்றியும் கூறுகிறார்.

திரைச்சீலை எழினி எனப்படுகிறது. “வடமொழியில் வழங்கும் 'யவனிகா' (திரைச்சீலை) என்பது யவனரிடமிருந்து வந்தது என்ற பொருளுடையது என்பதை மறுத்துத் தமிழின் ‘எழினி'யே, வடமொழியில் அம்மொழி உச்சரிப்பில் ‘ழ’ இல்லாத காரணத்தால் ‘யவனிதா’ ஆயிற்று எனக் கூறுவார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.30 சித்திரங்கள் தீட்டப்பட்ட நாடக அரங்கத்திரைச்சீலைகள்,

1. ஒருமுக எழினி, 2. பொருமுக எழினி, 3. கரந்துவரல் எழினி

என மூன்று வகையாக வழங்கப்பட்டன.31 இனி அவற்றைப் பற்றிய விவரமான செய்திகள் வருமாறு:

(அ) இடத் தூணின் நிலையிடத்துத் தொங்கவிடப் படுவது ஒருமுக எழினி.
(ஆ) வலத் தூணின் நிலையிடத்துத் தொங்கவிடப் படுவது பொருமுக எழினி.
(இ) வலத் தூணின் மேற்பகுதியில் காந்துவரல் எழினி. 32

இனி அடியார்க்கு நல்லார் திரைச்சீலை அமைப்பைஉரிய மேற்கோள்களுடன் நிறுவுகிறார்.

“இடத் தூண் நிலையிடத்தே உருவுதிரையாக இருப்பது ஒருமுக எழினி. இருவலத் தூண் நிலையிடத்தேயும் உருவுதிரையாக இருப்பது பொருமுக எழினி.

மேற்கட்டுந் திரையாகக் காந்துவரல் எழினியைச் செயற்பாட்டுடனே வகுத்தல் வேண்டும் 33

மேற்கட்டுத் திரையாய் நிற்பது ஆகாயசாரிகளாய்த். தோன்றுவார்க்கெனக் கொள்க. என்னை?

முன்னிய எழினிதான் மூன்று வகைப்படும்” என்றார் மதிவாணனார். 34

“அரிதரங்கிற் செய்தெழினி மூன்றமைத்துச் சித்திரத்தாற் பூதரையும் எய்த எழுதி இயற்று” என்றார் பரதசேனாபதியார். 35

மேற்கட்டியாகிய விதானத்தின் பல்வேறுசித்திரங்கள் எழுதப் படுகிற மரபும் இருந்தது. 36 உள்ளலங்காரமாக . "நல்லவாகிய முத்துமாலைகளாற் சல்லியும் தூக்குமாகத் தொங்கவிடச் செய்து அழகினால் புதுமைத்தாகச் சமைத்த அரங்கினகத்து" 37 என்று இவ்வாறு அரங்க நிருமாணம் பற்றி வருகிறது. நெடுநல்வாடையிலும் இச்செய்தி குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம்.

அரங்கின் 'உத்தரப் பலகை' 38 பற்றி மணிமேகலையிலும் கூறப்படுகிறது. 39

எழினி மூவகைப்படும் என்ற கருத்து சீவகசிந்தாமணியில்,

எழினி தானே மூன்றென மொழிப
அவைதாம் ஒருமுக எழினியும் பொருமுக
எழினியும் கரந்துவர லெழினியுமென
மூவகையே 40

என்று கூறப்படுகிறது. “பொருமுகப் பளிங்கி னெழினி”41 என்று மணிமேகலையிலும் எழினி பற்றி வருகிறது. சிலப்பதிகாரத்தின் இப்பகுதியிலிருந்து அரங்க நிருமானம் என்னும் மற்றொரு வகையான கட்டடக் கலையிலும் அவ்வரங்கின் உள்ளலங்கார வேலைப்பாடுகள் போன்ற வற்றிலும் பழந்தமிழர் தேர்ச்சி பெற்றிருந்ததையும் திறமை காட்டியிருப்பதையும் அறிய முடிகிறது. அரங்க நிருமாணக் கலையில் கட்டடத்துக்கான பொருள்களைத் தவிர உள்ளலங்காரமும் நிழற்படாமை மேடையில் நுழைய வெளியே தனித்தனி வாயில்கள் என்ற நுணுக்கங்களையும் கடைப்பிடித்திருக்கின்றனர். அரங்கிற்கு நிலம் வகுத்துக்கொள்ளுதல் பற்றிப் பரத சேனாபதியம் என்னும் பழைய நூலே இலக்கணம் கூறியிருப்பதாக42 அடியார்க்கு நல்லார் எழுதுகிறார்.

நிலங்கோடல் முதல் சந்திரன் குரு அங்காரகன் என்னும் வெண்ணீர்மை பொனீர்மை செந்நீர்மை என்னும் புகழ்மையைத் தமக்குரிமையாகப் பெற்ற முத்து மாலைகளாற் சரியும் தூக்கும் தாமமுமாக நாற்றுவது வரை அரங்கமைப்புக் கூறப்படுவதில் இடையே வேறுசில நுணுக்கமான செய்திகளும் அடைமொழியாலே அறியப் படக்கிடக்கின்றன. 43

இனி ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய44 என்ற அடியுள் ஏற்ற என்ற அடைமொழியாற் கிடைக்கும் பொருள்களாய் அடியார்க்கு நல்லார் பின்வருமாறு கூறு வதைக் காணலாம். -

‘ஏற்ற’ என்றதனால் கரந்து போக்கிடனும், கண்ணுளர் குடிஞைப் பள்ளியும் அரங்முகம் அதிதெனர்,

மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும், இவற் றினைச் சூழ்ந்த புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டி யும் முதலாயின கொள்க. 45

இதனுள் கண்ணுளர் குடிஞைப்பள்ளி என்பது கலைஞர் புனைவறையாக இருத்தல் வேண்டும் என்று உய்த்துணர முடிகிறது.

கரந்து போக்கிடன் என்பது அப்பள்ளியிடத்துக்கும் அப்பள்ளியிலிருந்தும் அவையினர் காணாதபடி போகவும்: வரவும் அமைந்த வழியாயிருத்தல் வேண்டும். அல்லது கருவியிசை ஓர் அமரஇக்கால அரங்கில் கட்டப்படும் பள்ள, மான அமர்வறை போன்ற ஒன்றாக இருத்தலும் கூடும். என்று கருதலாம். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா என்னும் கலைக்களஞ்சிய நூல் கட்டடங்களின் பயனை வகைப்படுத்தும்போது கேளிக்கைகளுக்கான மனமகிழ் கட்டடங்கள் (Recreational Architecture) என்று ஒரு வகையைக் கூறுகிறது. 46

கட்டடங்களை அலங்கரிப்பதைப் (Ornamental): பற்றியும் கூறுகிறது. சிலப்பதிகார அரங்கேற்றுகாதையில் வருகிற அரங்க நிருமாணப் பகுதி மனமகிழ்ச்சிக்கான கட்டடக் கலைப்பகுதிக்கும் அதன் உள்ளலங்காரத் திறனுக்கும் (Applied Ornamental) பொருத்தமான எடுத்துக்காட்டாக அமையக்கூடியது.

(அ) மரபு, (ஆ) கலை நுணுக்கம், (இ) பொருத்தம் ஆகிய மூன்றினாலும் இச்சிறப்பு அரங்கேற்று காதைப் பகுதியிலிருந்து அறியும் அரங்க நிருமாணக் கலையில் இசைந்து சிறக்கின்றன. நிலங்கோடலில் பழைய மரபும், எழினி, தனித்தனி வாயில்கள், தூண்களில் நிழல் படாத மேடை, அவை ஆகியவற்றில் கலை துணுக்கமும் காணக் கிடக்கின்றன. - . . கண்ணுளர் குடிஞை, கரந்து போக்கிடம் முதலியவை பொருத்தமாக அமைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறு தொடக்கத்தில் மனிதன் தனக்கு இன்றியமையாத் தேவையாய் இருந்த உறையுள் அமைத்தல் முதல் கோயில், அரண்மனை, கோட்டை, கொத்தளம், அரங்கு, கட்டட உள்ளலங்காரம் என இக்கலையின்கண் வளர்ந்த பின் அடுத்த வளர்ச்சியாய் அமைந்தது நகரமைப்பு.

பழந்தமிழர்கள் நகரமைப்பையும் அழகுறச் செய்தனர். திராவிடக் கட்டடக்கலை நாகரிகம் என்று அறிஞர் கண்டு பிடித்துள்ள சிந்துவெளி அகழ்வாய்வுச் சிதைவுகளில் உள்ள மொகஞ்சோதாரோ கோட்டை ஒன்று முப்பத்து மூன்று சதுர அடி முற்றத்தையும் அதனைச் சுற்றி அறைகளையும் உடையதாயுள்ளது. 230 அடி நீளமும் 78 அடி அகலமும் உள்ளதாயிருந்தது. அந்தக் கட்டடம் ‘ என்கிறார் அறிஞர் எஸ். இராமகிருஷ்ணன். 90 அடி கொண்ட மற்றோர் அவைக்கூடமாகும். மற்றொன்று தானியக் களஞ்சியமாகும். 48

நாகரிகத்தின் மலர்ச்சிக் காலமே, பழந்தமிழரிடமிருந்தே தொடங்குகிறது என்கிறார் ஆய்வாளர் க. தி. திருநாவுக்கரசு.

‘மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் கொண்ட நாடு நகரங்களை அமைத்து அவற்றைக் காக்க நல்ல தொரு அரசினை அமைத்து வாழ்வாங்கு வாழத் தொடங்கினான்’49 ‘ என்கிறார்.

கட்டடக் கலையின் உள்ளது சிறத்தலாய் ஊரமைப்பு நகரமைப்புக் கலை வளர்ந்தது. நகரமைப்புக் கலையிலும் தமிழர் தம் தனித் திறனைக் காட்டிப் பண்பாட்டு முத்திரையைப் பதிக்கலாயினர். பூம்புகார், மதுரை, உறையூர், காஞ்சி, வஞ்சி போன்ற நகரங்கள் பழந்தமிழர் நகரமைப்புத் திறனுக்குச் சான்றுகளாக இலங்கின. குறிப்புகள்:

1. S.l.1. Vol. XII No.23A
2. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ப.42
3. """ ப.43
4. """ ப.43
5. Epi. Rep. 1911, p.72
6. S.I.I., Vol.IV p.185
7. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ப.43
8. சுவாமிநாத ஸ்தபதி, கோயிற்சிற்பங்கள் ப.16
9. டாக்டர் நாகசாமி, இரண்டாம் உலகத் தமிழ். மாநாட்டுக் கையேடு ப.155
10. சுவாமிநாத ஸ்தபதி, கோயிற்சிற்பங்கள் ப.19
11. பி.ஸ்ரீ. தமிழரும் கலையுணர்வும் ப.4
12. மதுரைக் காஞ்சி 518
13. பதிற்றுப்பத்து 88:28
14. புறநானூறு 251.12
15. பி.ஸ்ரீ. தமிழரும் கலையுணர்வும் ப.117
16. சிலம்பு 1:2:95-106
17. சிலம்பு,அடியார்க்கு நல்லாருரை ப.113
18. """ ப.113
19. மு. முத்தையா, மனையடி சாஸ்திரம் ப.52
20. சிலம்பு அரும்பதவுரை ப.69
21. சிலம்பு,அடியார்க்கு நல்லாருரை ப.113
22. """ ப.113
23. """ ப.113
24. சிலம்பு அரும்பதவுரை ப.70
25. சீவக சிந்தாமணி, நச்சினார்க்கினியர் மேற்கோள் 672
26. சிலம்பு, சாமிநாதையர் மேற்கோள் ப.115
27. சிலம்பு, அடியார் ப.115
28. சிலம்பு 1:3:108
29. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ப.177-179
30. """ ப.177-179
31. """ ப.178
32. சிலம்பு அரும்பதவுரை 71
33. சிலம்பு, அடியார் 115
34. """ 115
35. """ 115
36. சிலம்பு 3:!11
37. சிலம்பு, நெடுநல். 125 3:111-113
38. சிலம்பு 3:103
39. மணிமேகலை 18:103
40. சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் மேற்கோள் 675
41. மணிமேகலை 5:3
42. சிலம்பு,அடியார்க்கு நல்லார் உரை 8:95-96
43. """ ப.111-113
44. சிலம்பு 3:105
45. சிலம்பு அடியார் உரை ப.115
46. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா, தொகுதி 1 ப.1089
47. எஸ். இராமகிருஷ்ணன், இந்தியப் பண்பாடும் தமிழரும் ப.45
48. """ ப.45
49. க. த. திரு நாவுக்காக, வரலாறும் வாழ்வும் ப.20

♫♫