பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/கட்டடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும்

இயல் ஒன்று


கட்டடக் கலையின்
தோற்றமும் வளர்ச்சியும்

ஆதியில் நாடோடியாகத் திரிந்துகொண்டிருந்த மனிதன், கலப்பையைக் கண்டறிந்தான். அதன் துணையால் நிலத்தை உழுது பண்படுத்தித் தானியங்களை விளைத்து, தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உணவுப் பொருளை உற்பத்தி செய்துகொள்ள அறிந்து கொண்டான். இதுவே மனிதன் நாடோடி வாழ்க்கையை விடுத்துக் குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழ்வதற்கு மூல காரணமாய் அமைந்தது; அவனது வாழக்கையில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. விலங்கு நிலையினின்றும் படிப்படியாக மாறி, நாகரிகமடைந்து தான் பெற்றுள்ள ஆறாவது அறிவு மலரப் பெற்று, மனிதன் மனிதனாக வாழத் தலைப்பட்டான். பின்னர்தான், தன் குடும்பத்தோடு பாதுகாப்பாக வாழ்வதற்குப் புகலிடம் அமைத்துக் கொள்ள முற்பட்டான். களிமண்ணால் சுவர் எழுப்பி மரக்கழிகளையும் கொம்புகளையும் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டிக் காய்ந்த தழைகளையும், சருகுகளையும், ஓலைகளையும் கொண்டு கூரை வேய்ந்து குடிசை யமைத்து, முட்செடிகளையும் கிளைகளையுங் கொண்டு வேலி கட்டிப் பத்திரமான புகலிடத்தைப் படைத்துக் கொண்டான். பின்னர் நெருப்பின் பயனையறிந்தான். கரைந்து நெகிழ்ந்துவிடும் களிமண், நெருப்பினால் உறுதி பெற்றுக் கடினமாகிவிடுவதையுணர்ந்தான். தனக்கு வேண்டிய சட்டிகள்,பானைகள் போன்ற பாத்திரங்களைப் படைத்துக்கொண்டான். செங்கற்கள் உற்பத்தி செய்யவும் அறிந்தான். படிப்படியாகக் களிமண், ஒலைக்குடிசைகள் கல்வீடுகளாய் மாறின. பின்னர் அடுக்கு மாடிவீடுகளும் மாளிகைகளும் தோன்றின.

கட்டடம், வீடு, அரண்மனை, மாடமாளிகைகள் கோயில்கள் எல்லாமே இப்படிப் படிப்படியாக ஏற்படத் தொடங்கியவைதான்.

முதற் கலை

அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அழகுக் கலை களில் கட்டடக் கலையையே முதலாவதாக வைத்து எண்ணுகிறார். அதற்குக் காரணமும் கூறுகிறார்.

மனிதன் மிகப் பழைய காலத்திலே காட்டு மிராண்டியாக வாழ்ந்தான். இருக்க வீடும், உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக்கொள்ளத் தெரியாமல் அக்காலத்திலே மனிதன் விலங்குபோல அலைந்து திரிந்தான். பிறகு அவன் மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக நாகரிகம் அடைந்தான். வசிக்க வீடும் உடுக்க உடையும், உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரிந்துகொண்டான்.

வீடு கட்டி வசதி செய்துகொண்டு வாழத் தொடங்கிய மனிதன் தன்னைப்போல் பிறர் பலருடனும் சேர்ந்து கொண்டு வாழவும் தொடங்கினான். ஒரு வீடு ஏற்பட்ட இடத்தில் பல வீடுகள் ஏற்படத் தொடங்கின. நிலையான வாழ்க்கை ஏற்பட்டது. ஒரு மனிதன் அடையும் நன்மைத் தீமைகள் உடன் வசிக்கும் பிற வீடுகளைச் சேர்ந்த மற்றவர்களால் அறியப்பட்டன. ஒருவர் பெறும் இன்ப துன்பங்களில் பிறரும் பங்கு கொண்டனர். மக்கள் சேர்ந்து வாழ முற்பட்டனர். இவ்வாறு ஊர்கள் அமைந்தன.

புகலிடம் அமைத்துக்கொள்வதில், அனுபவத்தின் பயனாகப் பல முன்னேற்றங்களும் திருத்தங்களும் உண்டாயின. கண்டவாறு வீடு கட்டும் நிலையை விடுத்து மக்கள் சில வரன்முறைகளை மேற்கொண்டனர். அவற்றில் சில பின்வருவன :

1. வீடு கட்ட நிலம் தேர்ந்தெடுத்தல். 2. வீடு கட்டக் காலநேரம் பார்த்தல், 3. நிலைக்கால், வாசற் கால் வைக்க நல்ல வேளை காணல், 4. குடிபுகும் நேரம் தேர்ந்தெடுத்தல், 3. மனைகோடலின்போது நிமித்தம் சகுணம் பார்த்தல்.

அச்செய்திகளே நூல்களாக உருப்பெற்றன. மக்கள் தமக்கு மேற்பட்ட அற்புத ஆற்றல்படைத்த சக்தியொன்று உண்டெனக் கண்டனர். அதனைப் பல்வேறு பெயரிட்டு அழைத்தனர். துயரமும் கையறவும் வருங்காலை வேண்டிவும், முறையிடவும் கோயில்களைக் கட்டிக்கொண்டனர். தங்கள் வாழிடங்களை விடச் சிறப்பாகவும் மதிப்புக்குரிய முறையிலும் வழிபடும் இடங்களைக் கட்டினார்கள்.

மயமதம், சிற்பநூல், மனையடி சாத்திரம் இவை அனைத்தும் இவ்வாறே தோன்றியிருக்கக் கூடும்.

வழிபடுபவர்களில் முன்னவராகிய கடவுளுக்கும், அதற்கடுத்த நிலைக்கு வரும் அரசருக்கும் சிறப்பான இடங்களில் சிறப்பான முறையில் வாழிடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முறையே கோயில்

களும்,அரண்மனைகளும், மிகப் பெரியவையாகவும் சிறப்பானவையாகவும் அமைய இதுதான் காரணம்.

கிரேக்கர், உரோமானியர் ஆகியோர்களின் கட்டடக் கலை இன்று ஐரோப்பாவில் சிறப்பாகக் கருதப்படுவது போலவே திராவிடக் கட்டடக் கலையின் பழமையும் நயமும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் முந்தியவை என வரலாறு கூறுகிறது.

கட்டடக் கலையின் பழைமை

உலகின் மிகப் பழைமையான இனங்களுள் முதல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது திராவிட இனம் - தமிழினம் என்ற கருத்துப் பல அறிஞர்களுக்கும் உடன்பாடானது. அம்முறையில், கட்டடக் கலையில் மிகப் பழைமையானதும், விந்திய சாத்பூர மலைகளுக்குத் தென் பகுதியாக உள்ளதுமான தக்கணம் - தமிழ் நாட்டை உள்ளிட்ட திராவிட நாடேயாம்.

பண்டைத் தமிழ் மக்களின் கைவண்ணத்தால் எழுந்து வானைத் தொட்டு முத்தமிட்டு உயர்ந்து நிற்கும் கோபுரங்களும், மாடங்களும், மாளிகைகளும், பழந்தமிழர்களின் கட்டடக் கலை வண்ணத்தின் அற்புதத் திறமைக்குத்தக்க சான்று பகர்கின்றன.3

மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளின் அகழ்வாராய்ச்சியில் கண்ட சிந்துவெளி நாகரிகக் கலையே திராவிடக் கட்டடக் கலைதான் என்று மேலை நாட்டறிஞர்களும் ஒருவாறு உடன்படுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்பகுதிகளில் காணப்படும் கட்டட அமைப்புகளும், நகர அமைப்பு முறைகளும், அறிவியலில், உச்ச நிலையடைந்துள்ளதாகக் கருதப்படும் இன்று, அனைத்து வசதிகளுடனும் திட்டமிட்டுக் கட்டப்படும் கட்டடங்களையும், நகர் அமைப்பு முறைகளையும் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வுண்மை மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் கட்டடக் கலையில் தலைசிறந்து விளங்கினர் என்பதற்குத் தக்க சான்றாகின்றது.4

புதிய கற்காலம்

கி. மு. ஐயாயிரம் முதல் எண்ணூறு வரை உள்ள காலத்தைப் புதிய கற்காலம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.5

புதிய கற்காலத்தில் மனிதர் ஓரிடத்திலேயே தங்கி நிலைத்து வாழக் கற்றிருந்தனர். மனிதர்களின் வாழ்0விலே குறிப்பிடத்தக்க வளர்ச்சியும், முன்னேற்றமும் நிலவின என்ற உண்மை புலனாகிறது.

பதியெழு வறியாப் பழங்குடி
பழவிறல் மூதூர்6

என்றெல்லாம் இவ்வாறு ஓரிடத்தில் தங்கி வாழ்தல் புகழப்படுவதைக் காணலாம்.

சிற்றூர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கோட்பாட்டில் வாழத் தொடங்கின. அப்படி இணைந்த ஊர்களே ஒரு நாடாயிற்று. அந்நாட்டினர் தங்களுள் ஒருவனைத் தலைவனாக்கிக் கொண்டனர். நாளடைவில் அவனே மன்னன் ஆனான். ஒரு நாடு அண்டை அயல்நாடுகளுடன் தன்னிடம் அதிகம் இருப்பதைக் கொடுத்து அவர்களிடம் அதிகமாக இருப்பதைப் பெறும் பண்டமாற்று முறை தொடங்கியது.7

இப்பண்டமாற்று முறையிலும் வேறு உறவுகளிலும் நாளடைவில் சில தகராறுகளும், பிணக்குகளும் எல்லைச் சிக்கல்களும் மூள்வது இயல்பாயிற்று. மெல்ல மெல்ல அவை போராக மூண்டன.

இக்காலத்தில்தான் உரிமை, உடைமை உணர்ச்சிகள் தோன்றின. உரிமை, உடைமைகள்தாம், தமது, தங்களது என்ற எண்ணத்தை உண்டாக்கின. படை, பாதுகாப்பு, கோட்டை, கொத்தளங்களைக் கட்டும் நிலை வந்தது. பாதுகாப்புக்கான கட்டடக் கலை வளர வாய்ப்புகள் ஏற்பட்டன.

சங்க காலம்

கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையுள்ள காலத்தைச் சங்க காலம் என்று கூறுவர் தமிழறிஞர்.8 இதில் முன் பின்னாக எண்ணும் பலவகைக் கருத்துக்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. 'சங்ககாலம்' என்பது 'இந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை' என்று வரையறுத்து அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிடுவதற்கு ஏற்ற மறுக்க முடியாத அடிப்படைச் சான்றுகள் எவையும் கிடைத்தில என்பதனால் இலக்கியங்களில் கிடைக்கும் ஒரு சில சான்றுகளையும் அநுமானங்களையும் கொண்டு முடிவு செய்யப்பட்டுப் பல்வேறு கருத்துக்கள் சங்ககாலம் பற்றித் தமிழறிஞர்களால் கூறப்படுகின்றன. இங்கும் அப்படிக் கொள்வதே தக்கது.

இச்சங்க காலத்தில் தமிழர் வாழ்வியல் சிறந்திருந்தது. முடியாட்சி முறையில் அரசர்கள் வளம் சுரக்கும்படி நாட்டை ஆண்டனர். பாசனம் செய்து பருவம் தெரிந்து பயிரிட்டு வளம் பெருகினர் வேளாளர். பல்வேறு வகைக் கருவிகள்-ஆடை அணிகள் உருவாயின.

பிற நாட்டுடன் வாணிபத் தொடர்பும் கப்பல் போக்கு வரவும் ஏற்பட்டன. இலக்கியங்களும் பிறவகை நூல்களும் வளர்ந்தன. புலவர்கள் பெருகினர். கோயில்கள் பெருகின. முத்தமிழும் வளர்ந்தன. மன்னர் அரண்மனைகளும், மக்கள் வீடுகளும் நகர்கள் அமைப்பும், நானிலப் பகுப்பும் உண்டாயின. போர்களை எதிர்கொள்ள வலுவான அரண்மனைக் கோட்டைகளும் அகழிகளும் கட்டப்பட்டன. பல சிறப்புக்களும் பெருகி வளர்ந்த காலமாக இது இருந்தது. தமிழரின் பொற்காலம் என இதனைக் கூறலாம்.9

கட்டடக் கலையின் தோற்றம் புதிய கற்காலத்தில் என்றால் அதன் வளர்ச்சியும், எழுச்சியும் இக்காலத்திலே தான் என்று கூற வேண்டும். குடிமக்கள் வீடுகள் மட்டு மின்றி மாடமாளிகைகளும்,கூட கோபுரங்களும் கோட்டை கொத்தளங்களும், அகன்ற பெரிய அரச மாளிகைகளும், கூத்தரங்கங்களும் கட்டப்பட்டன.

கோயில்கள்

எண்ணற்ற பெருங்கோயில்களைத் தமிழர்கள் கட்டினார்கள். வைணவ ஆழ்வார்களால் பாடப்பட்ட நூற்றெட்டுத் திருப்பதிக் கோயில்களும், சிவத்தலங்கள் இருநூற்று எழுபத்தைந்தும்10 இருந்தன.

கொடிக்கூடம், மரநிழல், காவணம், குடில், மண்தளி, சுடுமண் தளி, மரப்பலகைகளால் சமைத்த அம்பலம், குடைவரை, ஒற்றைக் கற்றளி, கருங்கற்கோயில் என்று கோயில்கள் படிப்படியாக வளர்ந்தோங்கின.11

மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியத்தில் புணரியல் விதி வகுக்கும் நூற்பாவால் 'கோயில்' என்னும் சொல்லுக்குப் புண்ர்ச்சி விதி கூறப்பட்டுள்ளது.

இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்.12

தமிழகக் கோயில்கள் பழம் பெரும் நாகரிகத்தையும், பண்பாட்டையும் விளக்கும் சிறப்பை உடையவை.

திருவரங்கம், தில்லை, மதுரை, இராமேச்சுவரம் போன்ற ஊர்களில் உள்ள பெரிய கோயில்களின் மாட்சி கோயிற் கட்டடக்கலையின் பெருமைக்கு எடுத்துக்காட்டுக்களாக விளங்கக் கூடியவை. அரண்மனைகள்

சங்க காலத்து அரசர் அரண்மனைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்லும் எவையும் இன்று முழுமையாகக் கிடைக்காவிடினும், பூம்புகார், மதுரை ஆகிய நகரங்களில் இருந்த, அரசர் இருக்கைகளைப் பற்றிய வருணனைகள் நமக்குத் தெரிவிக்கும் கருத்துகளிலிருந்து மாபெரும் அரச மாளிகைகளைத் தமிழர்கள் சிறப்புறக் கட்டியிருக்கிறார்கள் என்ற உண்மை தெளிவாக விளங்குகிறது. இன்றைய திருமலை நாயக்கர் மகால், சரசுவதி மகால் (தஞ்சை), செஞ்சிக்கோட்டை ஆகிய அரசிருக்கைக் கட்டடங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. நெடுநல்வாடையில் அரசர் அரண்மனை அமைத்த முறை பற்றிய விவரங்கள் பல குறிப்பிடப்படுகின்றன.

கோட்டைகள்

கிராமங்களைச் சுற்றியும், நகரங்களைச் சுற்றியும் பெரிய மதிற்சுவர்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்த நம்முடைய முன்னோர் பாதுகாப்பிற்காகப் பலவகை அரண்களையும் அமைத்திருக்கின்றனர்.

துர்க்கங்கள்

அவை கோட்டைகள் எனப்பட்டன. கோட்டைகள் ‘துர்க்கம்’13 என்றும் அழைக்கப்பட்டன.

மலைக்கோட்டை-கிரி துர்க்கம்

(உ-ம்) சங்ககிரி துர்க்கம்-சேலத்தருகே ஓரூர் மலையை அரணாகக் கொண்ட கோட்டை கிரி துர்க்கம் என அழைக்கப்பட்டது.

வனக் கோட்டை-வன துர்க்கம்

நதியினாலும் கடலினாலும் சூழ்ந்த கோட்டை ஜல துர்க்கம் என அழைக்கப்பட்டது. சேற்றினாலும் மண்ணா லும் கட்டப்பட்ட சுவருடைய கோட்டையைப் பங்க துர்க்கம் என்றும் இயற்கையாகவே அமைந்த அரணு டைய கோட்டையைத் தெய்வத் துர்க்கம் என்றும் ஒரே பொட்டலாக அமைந்த கோட்டையை ரிண துர்க்கம்’ என்றும் நூல்களில் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த வகையான ரிண்துர்க்கத்தில் மரமும், நீரும் இல்லாத வறண்ட சூழ்நிலையே பிறர் அண்ட முடியாத அரணாகவும், பாதுகாப்பாகவும் அமைந்து விடுகிறது.

சில இடங்களில் மலைகளும் காடுகளும் சேர்ந்தே பாதுகாப்பாய் அடுத்தடுத்து அமைகிற கோட்டைக்கு ‘மிச்ரதுர்க்கம்’ என்று பெயர்.

தமிழ்நாட்டு மரபுவழிப்பட்ட சிற்ப நூல்களில் எல்லாம் கோட்டைகளை அமைக்கும் முறைகளும் விரிவான விளக்கங்களும் பாதுகாப்பிற்குரிய இரகசியப் பாதைகளும் இரகசிய அறைகளும் அமைக்கும் முறைகளும், படைகள் தங்கும் இடங்களும் தேவையான வசதிகளை எங்கெங்கு எவ்வெவ்வாறு அமைப்பது என்ற விவரங்களும் விளக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளன.

வீடுகள் (Domestic Buildings)

தனிமனிதர் விடுகள் பற்றி இலக்கியங்களிலிருந்து அறிய முடிந்தவற்றையும் மனையடி சாத்திரம் முதலிய நூல்களில் இருந்து அறிய முடிந்தவற்றையும் தவிர அதிமாக எதுவும் அறிய இயலவில்லை.

பழந்தமிழர் 'கட்டடக் கலை' என்றாலே பெரும்பாலும் கோயில்களின் கட்டடக் கலையைத்தான் குறிக்கிறது எனலாம். அடுத்து அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகளைப் பற்றியோ, செல்வந்தர்கள் வாழ்ந்த மாடமாளிகைகள் பற்றியோ ஓரளவே அறிய முடிகிறது. பொதுமக்கள் வாழ்ந்த வீடுகளைப் பற்றி அதிகம் கூறவே முடியவில்லை. ஏனெனில் அவற்றைப் பற்றி இலக்கியங்கள் கூறும் செய்திகள் அல்லாது நேரிடைச் சான்றுகள் ஏதும் கிட்டாததனாலேயாகும்.14

இலக்கியங்களில் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. நகர அமைப்புப் பற்றியும் பேசப்படுகிறது. யவனப் போர் வீரன் ஒருவன் யானை மீது கொடியைப் பிடித்தபடி அமர்ந்து உள்ளே செல்லுமளவு மிக உயர்ந்த அரண்மனை வாயில்கள் விளங்கியுள்ளன. பெரிய மாளிகைகள் இருந்துள்ளன. ஐவகை நிலங்களுக்கு ஏற்ப (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) மக்கள் சிறுசிறு வீடுகள் கட்டி வாழ்ந்துள்ளனர் என்றாலும் அவை பற்றிய நேரிடைச் சான்றுகள் அதிகமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் நடைபெற்ற அகழ்வாய்வில் புத்த விகாரம் ஒன்றும், பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் முகத்துவாரக்கட்டடம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் மக்கள் வாழ்ந்த கட்டடப் பகுதி (Secular Buildings) எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொற்கையில் நிகழ்ந்த அகழ்வாய்விலும் உறையூரில் மேற்கொண்ட அகழ்வாய்விலும் கி. பி. 11-12 நூற்றாண்டைச் சேர்ந்த சில கட்டடப்பகுதிகள் கிடைத்தன. அவை அக்காலத்திய கட்டடக்கலை பற்றித் தெளிவாக எதையும் தெரிவிப்பனவாக அமையவில்லை. அண்மையில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு பகுதியை அகழ்வாய்வு செய்தபோது, நகரின் பகுதியான உள்கோட்டையில் முதலாம் இராசேந்திர சோழன் எடுப்பித்து வாழ்ந்த அரண்மனைப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; முழுப் பகுதியும் கண்டுபிடித்து வெளிப்படுத்தப் பெற்றால் பல உண்மைகள் தெரியவரும்.

எனவே பொதுமக்கள் கட்டடக் கலை எவ்வாறு இருந்தது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் மட்டுமே. ஒரளவு கிடைக்கிறது.15

நீர்பாசனக் கட்டடக் கலை

நீர்ப்பாசனத்துக்கான அணைக்கட்டுக்களைத் தமிழர்கள் கட்டிய முறைக்கும் நேரிடைச் சான்றுகள் கிடைக்கின்றன.

நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே16

என்று புறநானூற்றில் குடபுலவியனார் என்ற புலவர் தண்ணீரைத் தேக்கி வைத்து அணை கட்டுவதுபற்றிக் குறிப்பிடுகிறார். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய பாட்டு இது.

பண்டை மன்னர்கள் தமிழகம் முழுவதும் அமைத்த ஏரிகள், அவற்றின் அடிப்படையில் அமைந்த பாசன அமைப்புக்கள் யாவும் இன்றும் நாம் எண்ணி வியக்கத்தக்கன. இவை அனைத்திற்கும் சிகரம் போன்று அமைந்தது திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள கல்லணை ஆகும்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கரிகாலனால் கட்டப்பட்டு, இன்றும் பயன்பட்டு வரும் ஓர் அரிய கட்டமைப்பு (Construction) இக்கல்லணை. இவ்வணை மணல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டடம். நீர்த்தேக்கங்கள் அமைப் பதில் மணல் தளத்தை அடிப்படையாகக்கொண்டு கட்டடங்கள் எழுப்புவது ஒரு தனிக்கலையாகும். சற்றுக் கடினமான கலையும்கூட.17

அணைக்கட்டு எழுப்பிய பின்னும்கூட அதன் அடியில் இருக்கும் மணல் தளத்தின் வழியாகத் தண்ணீர் துருவிச் செல்வது தொடர்ந்து இருந்துவரும்.

இப்படிப்பட்ட கட்டமைப்புக்களை கசியும் அடித்தளத்தில் அமைந்த கட்டிட்டங்கள் (Structures on pervious Foundations) என்று கூறுவார்கள். அணையின் மேல் வழிந்து செல்லும் நீர் அதன் கீழே கசிந்து செல்லும் நீர் இரண்டாலும் பாதிக்கப்படாத வகையில் இதுபோன்ற அணைகள் அமைய வேண்டும். இன்றைய வளர்ச்சி நிலையில் கூட அவை சிக்கல் நிறைந்தவை.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கல்லணை போன்ற ஒரு சாதனத்தை எழுப்பிய சமுதாயத்தில் 'சில அடிப்படைப் பொறியியல் முறைகள்' இருந்திருக்க வேண்டும். அவற்றை அறிவதற்கான ஏடுகள் தமிழில் இல்லை அல்லது இதுவரை கிடைக்கவில்லை.18

இது தவிர மேற்கே ஆப்ரிக்கக் கண்டம் தொடங்கிக் கிழக்கே பிலிப்பைன்ஸ் தீவு வரை தமிழர்கள் சென்று நீர்ப் பாசனக் கட்டட வேலைகள் செய்ததாக ஃபிளெமிங் என்ற அறிஞர் கூறுவதாக டாக்டர் வா.செ.குழந்தைசாமி. தெரிவித்துள்ளார்.19

தமிழர் கட்டிடக் கலையின் தனிச் சிறப்பு

கிரேக்க உரோமானியக் கட்டடக்கலையின் இணைந்த சிறப்பாக ஐரோப்பாவில் (Gothic) கூம்பு வடிவ விமானம் கூறப்படுவது போல் தமிழகப் பழங்காலக் கட்டடக் கலையின் சிறப்பாகக் (Classical Architecture of Tamils) கோபுரத்தைக் கூறலாம். ஆங்கில அகராதிகளிலும் கலைக்களஞ்சியங்களிலும்கூட இப்படியொரு விளக்கம் 'கோபுரம்' (Gopura) என்பதற்குத் தரப்பட்டுள்ளது.20

இருபதாம் நூற்றாண்டு சேம்பர் அகராதியிலும் இதே பொருள் கூறப்பட்டிருக்கிறது. (In southern india a Pyramidal tower over the gateway of a temple).21

நன்னூற் பாயிரத்திலும்கூட 'மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்'22 என இக்கோபுர அமைப்பு நகருக்கே நுழைவாயிலாகக் கூறப்பட்டிருத்தலைக் காணலாம். நூலுக்குப் பாயிரம் கோபுரம் போன்றது எனச் சொல்லுவதற்கான இப்பகுதி நன்னூலில் உவமையாக ஆளப்பட்டுள்ளது.

பேரறிஞர் பி.ஶ்ரீ. கட்டடக் கலை பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

'அரசர்களின் அரண்மனையைத்தான் கோயில் என்ற சொல் ஆதியில் குறித்திருக்க வேண்டும். பிறகு இது தெய்வ வழிபாட்டுக்குரிய இடங்களைச் சிறப்பாகக் குறிக்கலாயிற்று. சிற்ப நூல் வல்லுநர் கோயில்களையும் மண்டபங்களையும், மாட மாளிகைகளையும், உயர்ந்த மாடங்களில் அடுக்கு வீடுகளையும் நிலா முற்றங்களையும் தங்கள் கலைத்திறன் தோன்ற அமைத்தனர் என்று நெடுநல்வாடை முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன.

அழகான அரண்மனையை 'ஓவத்து அன்ன உருகெழு நெடுநகர்' - அதாவது 'ஓவியம்போல் அழகினையுடைய அரண்மனை’ என்கிறது பதிற்றுப்பத்து. 'ஓவியம் போல் அழகினையுடைய வீடு’ - என்று பொருள்படப் புறநானூறு பேசுகிறது.”23

இத்தகைய சிறப்புடைய தமிழர் கட்டடக் கலையில் எல்லாவற்றுக்கும் அடிப்படையான நம்பிக்கைகள்-பழக்க வழக்கங்கள், பின்பற்றிய மரபுகள் பற்றி முதலில் காணலாம். கட்டடத்திற்கு மனையைத் தேர்வது தொடங்கி மரத்தைத் தேர்வது, கிணறு வெட்டுவது வரை எல்லாவற்றுக்கும் சிற்ப நூல் மரபுகள்24 உள்ளன. கிணறு வெட்டுவதற்கே ஒரு நூல் உள்ளது. தமிழில் கூவ நூல் என்றும் வடமொழியில் 'கூப சாத்திரம்' என்றும் கூறப்படுவது அந்நூல். நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் போலத் தோன்றினாலும் கட்டடக் கலை மரபினை மனை நூலில் இருந்து அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

கட்டடக் கலை தொடர்பாகப் பரங்கிப்பேட்டை எஸ்.ஏ. குமாரசாமி ஆச்சாரியார் பதிப்பித்த 'சில்பரத்னா கரம்' தொகுத்துக் கூறும் சிற்ப சாத்திர நூல்கள் வருமாறு:25

1. விசுவகன்மீயம், 2. விசுவம், 3. விசுவசாரம், 4. பிரபோதம், 5. விருத்தம், 6. மயமதம், 1. துவஷ்ட தந்திரம், 8. மனுசாரம், 9. நளம், 10. மானவீதி, 11. மானகல்பம், 12. ஞானசாரம், 18. பெருஸ்ருஷ்டம், 14. சுருஷ்டம், 15. மானபோதம், 16. விசுவபோதாயனம், 17. அதிசாரம், 18. விசாலட்சம் 19. விசுவ காசியபம், 20. வாஸ்துபோதம், 21. மகாதந்திரம், 22. வாஸ்து வித்யாபதி, 23. பராசரேயகம், 24. காலயூபம், 20. சைத்யம், 26. சித்ரம், 27 ஆவர்யம், 28. சதாட்சர சம்ஹிதா, 29. பானுமதம், 30. இந்திர மதம், 31 லோகஞானம், 32. செளரம்.

இதுவரை பதிப்பிக்கப்படாத மனுசாரம் என்னும் கையெழுத்துப் பிரதியில் பின்வரும் 28 நூல்களைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.

1. ஈசாநம், 2. விசுவகன்மீயம், 8. விருத்தம், 4. மயமதம், 5. பார்க்கவம், 6. வாஸ்து வித்யா, 7. பராசரீயம், 8. சித்ரகாசியபம், 9. மார்க்கண்டம், 10. மானசாரம், 11. பிரயோக மஞ்சரி, 12. கோபாலம், 13. பெருஹிதம், 14. நாரதீயம், 15. இந்திரமதம், 16. பானுமதம், 17. பெளதமாதம், 18. நாராயணியம், 19. கெளதமம், 20. காஸ்யபம், 21. மனுசாரம், 22. குலாலம், 23. சித்ரம், 24. சித்ரயாமளம், 25. வாசிஷ்டம், 26. சித்ரபாகுல்யம், 27. மனோகல்பம், 28. தேசிகம். . -

இந்த 32ம் 28ம் ஆன சிற்ப நூல்கள் 'முக்கியம்' என்று கூறப்பட்டன. (Principal Shastras).27 இவை போலன்றித் துணை நூல்கள் உபசில்ப சாஸ்திரம்28 எனப்பட்டன. (Subsidiary shastras). தென்னிந்தியப் பிரிவு (Southern school of Architecture) ஏறக்குறைய 52 சிற்ப நூல்களைக் கொண்டிருந்தது என்கிறார் கணபதி ஸ்தபதி.29 .

ஆனால் இன்று அவற்றுள் ஒன்பதே முழுமையாக உள்ளன என்றும்30 அவரே கூறுகிறார்.

1. மயமதம், 2. விசுவகன்மீயம், 3. மானசாரம்,4. மனுசாரம், 5. இந்திரமதம், 6. வாஸ்துவித்யா, 7. தாஸ்யபம் 8. சித்ர காஸ்யபம், 9. நாராயணீயம்

இந்த ஒன்பது நூல்களே இன்று தமிழகச் சிற்பிகளால் கற்கவும், நடைமுறையிற் கொள்ளவும் படுகின்றன.31

இவை தவிர சிற்ப உபநிஷதங்கள் என ஓர் ஆறும் நடைமுறையில் உள்ளன.32 அவையாவன :

1. ஶ்ரீகுமாரரின் சில்பரத்னம், 2. சில்பரத்னாகரம், 3. மனுஷ்யாலய சந்திரிகா, 4. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, 5. பிராமீயம், 6. சரஸ்வதியம் - பெருப்பாலும் இவை கோயில் ஆகமங்களோடு தொடர்புபடுத்திக் கற்கப்பட்டன. .

பொதுவில் கட்டடச் சிற்பக்கலையை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்கிறார் கணபதி ஸ்தபதி.33 1. மதச் சார்பற்ற மக்கள் கட்டடக் கலை, 2. சமய அல்லது கோயில் கட்டடக் கலை, 3. இராணுவக் கட்டடக் கலை, 4. சிற்பமும் ஓவியமும்34

பழஞ்சுவடிகளில் இருந்து திரட்டப்பட்ட 1,400 பாடல்களைக் கொண்ட சிற்ப சாஸ்திரம் மயமதத்தை அடிப்படையாகக் கொண்டு மணிப்பிரவாளத் தமிழில் வந்தது. அதுவே பின்னாளில் பல்வேறு பெயர்களோடு தமிழில் சிற்ப சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், மனைநூல் என்றெல்லாம் வழங்கலாயிற்று.

பெரும்பாலும் வீடு கட்டுதலைப் பற்றிய விவரங்களைக் கூறுவது.35 இந்த வழக்கங்கள் திராவிடப் பகுதி முழுவதும் (தமிழகம், கன்னடம், கேரளம், ஆந்திரம்) நடைமுறையில் உள்ளன.36 தமிழ் மனையடி சாத்திரத்தில் உள்ள தமிழ்ச் சொற்றொடர்களே வடமொழியிலும் பயிலுவதாகக் கணபதி ஸ்தபதி கூறுகிறார். 37

பலகை (பலகா) உளி (உளிகா) குமுதம் (குமுதகா) கம்பு (கம்பா) யாளி (யாள) குடம் (கட) கலயம் (கலச) தாழி (தாடி) அம்பலம் (அம்பல) பொதிகை (பொதிகா) தரங்கு (தரங்கா) பத்தி (பக்தி) பட்டிகை (பட்டிகா)

சிற்பிகளிடையேயும் கட்டடக் கலைஞர்களிடையேயும் பயிலும் பல சொற்கள் தமிழகராதிகளில் கூடக் காணப் படாமல் வாய்மொழியாகவே வழங்குவதாகவும் கணபதி ஸ்தபதி கூறுகிறார்.38

அலுங்கு உள்நாட்டியம் கோணாவிட்டம்

படங்கு உட்கூடு கட்டாயம்

அணிவெட்டிக்கால் சிலம்புக்குமுதகம் நிலைக்கால்

அடங்கல் பட்டைக்குமுதகம் பிள்ளைக்கால்

ஆளாங்கு நிலங்காணி பலமுனை

அலர்படி மானாங்காணி பத்திரிப்பு

அலையம் கொடிப்பெண் மதலை

நாணுதல் கொடிவளை புறநாட்டு

நேரிசை கால்புறவாய் அகநாட்டு

மகர இசை கொடுங்கை விரல்

மாற்றானிசை சுரிப்பு முழக்கோல்

இடைக்கட்டு குறிமானம் மேழி உத்திரம்

மேழிப் போதிகை

இந்தத் தொடர்கள் (Technical terms) இன்றிச் சிற்ப உலகில் பழக இயலாது என்கிறார் கணபதி ஸ்தபதி. 39

பல ஏடுகளில் இருந்து திரட்டிய 1,400 தமிழ்ப் பாடல்களில் சில குறைந்தும் கூடியும் சிற்ப நூல் 40 என்றும், சிற்ப சாத்திரம் என்றும் நாட்டு வழக்கில் மனையடி சாஸ்திரம் என்றும் கிராமப்புறங்களில் வாய்மொழிப் பாடலாகவும் (Oral tradition) கூட வழங்குகின்றன.

ஏழைகள் முதல் பெருஞ்செல்வர் வரை (அரசர்கள் மாளிகை அமைக்கவும் சேர்த்து) வரையறை கூறும் அந்த நூலையும் அதன் விவரங்களையும் அடுத்த இயலில் காணலாம்.

பின்வரும் இயல்களில் கூற வேண்டிய கருத்துக்களுக்கும் ஆய்வு முடிவில் நிறுவப்பட வேண்டிய உண்மைகளுக்கும் இந்த மனைநூல் விவரங்கள் அடிப்படையாக அமையக் கூடும்.

குறிப்புகள்

1. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 4.

2. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 1. 3. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர், க.த.திரு நாவுக்கரசு கட்டுரை, ப. 247 ,

4.ஐ. மகாதேவன் கட்டுரை, இந்து நாளிதழ் 23-4-1979.

5. சா. கணேசன், இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கையேடு, ப. 118. - * *

6.சிலப்பதிகாரம் 1:15.

7. சா. கணேசன், இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கையேடு, ப. 118.

8. சா. கணேசன், இரண்டாம் உல்கத் தமிழ் மாநாட்டுக் கையேடு, ப. 119, - -

9. சா. கணேசன், இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கையேடு, ப. 119.

10. ந. ரா. முருகவேள், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 109.

11. ந. ரா. முருகவேள், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 110.

12. தொல். எழுத்து. 294.

13. வை. கணபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கையேடு, ப. 230.

14. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, ஐந்தா வது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 366.

15. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, ஐந்தா

16. புறநானூறு 18:28:29, 17. டாக்டர் வா. செ. குழந்தைசாமி, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்,ப.131.

18. டாக்டர் வா. செ. குழந்தைசாமி,ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 131.

19. டாக்டர் வா.செ. குழந்தைசாமி,ஐந்தாம் உல்கத் தமிழ் மாநாட்டு மலர், ப. 131.

20. Gopura-Gateway to temple in Hindu Archite -cture, Encyclo, Readers Digest, p. 1044.

21. Chambers twentieth Century Dictionary, p. 456.

22. நன்னூல் பாயிரம் 55.

23. பி. ஸ்ரீ., தமிழரும் கலை உணர்வும், ப. 9.

24. மனையடி சாஸ்திரம் என்னும் சிற்ப நூல், பக். 3.42.

25. வி. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கையேடு, ப. 245.

26. வை. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 246.

27. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 246.

28. கணபதி ஸ்தபதி. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 246.

29. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 246.

30. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 246.

31. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 246.

32. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 246.

33. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 248.

34. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 248.

35. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 248.

36. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 248.

37. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 249.

38. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 249.

39. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 248.

40. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 248.

41. கணபதி ஸ்தபதி, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு மலர், ப. 249.