பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/கட்டடத் தொழிலும் கலையும்

கட்டடத் தொழிலும் கலையும்


தோற்றுவாய்

"கட்டடக் கலை கலைகளுக்கு எல்லாம் தாய்போன்றது என்பது இன்றும் உண்மையாகவே விளங்குகிறது. இது இடத்தையும் வடிவையும் இணைத்துப் பண்பாட்டின் தெளிவான புற வெளியீடாக அமைகிறது. இக்கலை சமூகத்தின் ஈடுபாட்டோடு கூடிய அக்கறையின்றி வளரவோ உயர்வு பெறவோ இயலாது என்று அறிஞர் கண்விண்டே கூறும் கூற்றை அமெரிக்க கட்டடக் கலை நிபுணர்களான ஜான் புச்சர்ட்டும் ஆல்பர்ட் புஷ்பிரவுனும் கூட உறுதிப்படுத்துகிறார்கள்.1

"கட்டடக் கலை ஒரு சமூகக் கலையாகும். எந்தக் கலையாயினும் சமூக நோக்கம் கொண்டுதான் இருக்க வேண்டும் என வாதிடப்பட்டாலும் கட்டடக் கலையைப் பொறுத்து அது தெளிவாகவே உள்ளது. கட்டடக் கலை, அக்கலைஞனுக்கு, வரையறைகளைக் கொடுக்கிறது. அத்தகைய வரையறைகளைச் சிற்பியோ ஓவியனோ கூடப் பெறுவதில்லை."2

புற அமைப்பு (Exterior) அக அமைப்பு (Interior) என கட்டடக் கலைக்கு இரு பிரிவுகள் உள்ளன. எல்லா கட்டடங்களுக்கும் இவை பொருந்தும். இரண்டு பிரிவி லுமே அழகு செய்ய வழிகள் இருந்தன. மூன்று கூறுபாடுகள் தவிர்க்க இயலாதவை என்பதையும் மேலே கூறிய அமெரிக்கக் கட்டடக் கலை நிபுணர்களே குறிப்பிடுகின்றனர்.

"கட்டடக் கலைக்கு மூன்று கூறுபாடுகள் தேவைப்படுகின்றன. ஒரு கட்டடம் எதற்காகக் கட்டப்படுகிறதோ அதற்கான சமூகத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். பயன்படு பொருள்கள் கட்டமைப்பு ஆகியன உறுதியாகவும் பொருத்தமாகவும் நீடித்து நிற்பவை யாயும் இருக்க வேண்டும். அதன்பின் கலையாகவும் இருக்கவேண்டும்”.3

இக் கருத்துக்களை அடிப்படையாக வைத்துக் காண்கையில் பழந்தமிழர் கட்டடக்கலையின் சீரும், சிறப்பும், பொருத்தமும் நன்குவிளங்குகின்றன. பழந்தமிழர் கட்டடங்கள் அவற்றுக்கான சமூகத் தேவைகளை நிறைவு செய்தன. உறுதியாகவும், நீடித்து நிற்பவையாகவும், பொருத்தமாகவும் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலே அவை கலையாகவும் இருந்தன என்பதை மறப்பதற்கில்லை.

கிரேக்க, உரோமானியக் கட்டடக் கலைகளின் கூட்டு வளர்ச்சியின் விளைவாகவே அதன் பின் மேற்கு ஐரோப்பாவில் கோதிக்கட்டடக் கலை உருவாயிற்று. பழைய கட்டடக் கலையில் (Classical Architecture) இது இன்றியமையாதது.

அதே போல் பழந்தமிழர் கட்டடக் கலைகளின் தொடக்க விளைவான கோயில், கோட்டை, கொத்தள அமைப்புக்களே பின்னாளில் மாபெரும் கோயில்களுக்கான அழகியற் கட்டடக் கலையை உருவாக்கிற்று என்று கூறுதல் பொருந்தும், பாதுகாப்புக்கான கோட்டை, கொத்தளம், மதில், அகழி ஆகியவற்றைக் கட்டி அமைப் பதில் தமிழர்கள் தந்நிகரற்று விளங்கியுள்ளனர். பாதுகாப்புத் தொடர்பான கட்டடக் கலைச் சொற்களையே அகராதியாகத் தொகுத்துப் பார்க்கமுடியும். அவ்வளவிற்கு அவை செம்மையாகவும், சிறப்பாகவும் கட்டப்பட்டுள்ளன. பொறியியல் நுணுக்கங்களோடு உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டடக் கலையைப் பழந்தமிழர் இலக்கியங்களுடன் சார்த்தி ஆராயும்போது மூவகைப் பிரிவுகள் தெரிகின்றன. தனியார் வீட்டுக் கட்டடக் கலை (Domestic Architecture) கோயில் அல்லது அரண்மனைக்கட்டடக் கலை (Temples and Royal Buildings) கட்டடக் கலை (Defence Architecture or Military Engineering) என்பனவே அவை. தனியார் கட்டடக் கலை பற்றி அறிய முடிந்ததைவிட இரண்டாவது வகையான கோயில்கள், அரண்மனைகள் பற்றியே அறியச் சான்றுகள் மிகுதி யாகக் கிடைக்கின்றன. கோயில் என்ற சொல்லே அரசனிருக்கை, இறைவனிருக்கை, இரண்டிற்கும் பொதுவாக வழங்கி வந்திருக்கிறது. பாதுகாப்புக்குரிய இடம் என்ற பொருளும் கிடைக்க ஏற்ற அரண் என்ற முதற்சொல்லுடனேயே அரசன் அல்லது ஆட்சியாளரின் உறைவிடம் குறிப்பிடப்படுகிறது. எனினும், கோட்டை, கொத்தளங்கள், பல்வேறு மதில்கள், அவற்றில் அமைக்கப்பட்ட படை நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே மூன்றாவது கட்டடக் கலைப் பிரிவாகப் பாதுகாப்புக் கட்டடக்கலை என ஒரு பிரிவு மேற்கொள்ளப்பட்டது. படையாளர் பொறியியல் என்ற ஒரு பிரிவே பின்னாளில் ஏற்பட்டிருப்பதைக் கருத்திற் கொண்டு பார்த்தால் பாதுகாப்புக் கட்டடக் கலையின் இன்றியமையாமையை ஒரளவு விளங்கிக் கொள்ள முடியும். கட்டடங்கள் கட்டப்படுவதையும், மனை அமைப்பதையும் பற்றிய விவரங்கள் சங்க நூலாகிய பத்துப்பாட்டில் நெடுநல்வாடை தொடங்கிப் பின்னாளில் மனையடி சாத்திரம் வரை விரிவான செய்திகளைக் காணமுடிகிறது. தனியார் வீட்டுக் கட்டடக் கலை (Domestic Architecture) பற்றிய பல்வேறு செய்திகள் மனையடி சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இன்றும் தமிழ் மக்களிடையே மனையடி சாத்திரம் நம்பிக்கைக்குரிய ஒரு நூலாக விளங்கி வருகிறது. வீட்டுக்குரிய மனையைத் தேர்ந்தெடுப்பது முதல் கட்டுவது வரை மனையடி நூலின் இலக்கணங்களை மீறாமல் பார்த்துக் கொள்ளும் பண்பைக் காண்கிறோம். இவற்றில் சில வரையறைகளாகவே ஏற்பட் டவை. வேறு சில நீடித்த நம்பிக்கைகளாகவும் நன்னிமித்தங்களாகவும் கருதப்பட்டுப் பின்புமக்களால் ஏற்கப் பட்டவை. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பாகுபடுத்திப் பார்ப்பது கூட இயலாத அளவு இரண்டறக் கலந்து விட்டவை என்பதைக் கற்கும் போதே விளங்கிக் கொள்ள முடியும்.

பழம் பெரும் தமிழர் நகரங்கள் பல. அவற்றுள்ளும் பூம்புகார், மதுரை ஆகிய நகரங்களின் அமைப்பைப் பற்றிச் செய்திகள் கிடைக்கிற அளவு வஞ்சிமாநகரத்தைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. பல்லவர் கோநகராக இருந்த காஞ்சி நகரின் அமைப்பைப் பற்றித் தெரியும் விவரங்கள் கூட அதனினும் முந்திய வரலாற்றுச் சிறப்பை உடைய வஞ்சி மாநகர் பற்றித் தெரியவில்லை. ‘வஞ்சிமாநகர்’ எது என்பது பற்றியே ஆராய்ச்சியாளர்கள் நடுவே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

சேர நாட்டிலேயே உள்ள கடற்கரை நகரமாகிய திருவஞ்சைக்களமா அல்லது கருவூர் ஆனிலை எனப்படும் கருவூரா என்பது பற்றி நீண்ட நாள் ஆராய்ச்சி வேறுபாடுகள் இருப்பதால் நகரமைப்பைப் பற்றி மட்டுமே இவ்வாய்வில் கருத்துச் செலுத்தப்படுகிறது. எந்த நகர் என்ற வினாவிற்குச் சிலம்பு முதலிய நூல்களில் கூறிய வஞ்சி என்று கொண்டு இவ்வாய்வு மேற்செல்லும். அரசனுடைய அரண்மனையைச் சுற்றியே கோட்டையும் மதிலும் அகழி யும் பெரும்பாலும் அமைக்கப்பட்டன என்பதை அறிய முடிகிறது. பாதுகாப்புக் கருதி அரசனின் உறைவிடம் அகநகர் என்றும் உட்கோட்டைப் பகுதி என்றும் குறிப் பிடப்பட்டது. மதில்களின் கீழே ஆழமான அகழிகளும் வெட்டப்பட்டு நீர் நிரப்பப் பட்டிருந்தன. அவற்றில் முதலைகள் வளர்க்கப்பட்டு வந்தன. அரண்மனையை மையமாக வைத்துக் கோநகரைப் பார்க்கும்போது கட்டடக்கலை நகரமைப்புடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. அகநகர் புறநகர் என்ற ஏற்பாட்டின்படி கட்டடக்கலை வளர்ந்திருக்கிறது என்ற குறிப்பு இங்கே இன்றியமையாததாகும்.

பூம்புகார், மதுரை போன்ற திட்டமிடப்பட்ட நகரங்களில் (Planned Cities—Walled Cities) இந்த ஏற்பாடு இருந்ததை நூற்சான்றுகளால் நன்கு அறிய முடிகிறது. தமிழர் புறப்பொருள் இலக்கணம், திணைகள், துறைகள் ஆகியவற்றிலேயே பாதுகாப்புக் கட்டடக் கலைக்கு முதன்மை தந்திருப்பதற்கான குறிப்புக்கள் நிறையக் காணக் கிடைக்கின்றன. சில திணை, துறைகளே அவ்வாறு அமைந்துள்ளன.

கட்டடக்கலை பற்றிய விவரங்கள், சொற்றொடர்கள் தமிழ் நூல்களில் ஆங்காங்கே பயின்று வருகின்றன. பழமொழியில் கூடக் கட்டடம் கட்டுவதன் சிறப்பு வீட்டைக் கட்டிப் பார்-திருமணத்தைச் செய்து பார்’ என வழங்குகிறது.

கட்டடத்திற்கு இன்று பெரிதும் பயன்படும் பல நவீனப் பண்டங்கள் அன்று இல்லை எனினும் பழந்தமிழர் இவற்றுக்கு இணையான பல பண்டங்களைக் கண்டு பிடித்திருந்தனர். தமிழர் கட்டடங்களுக்குப் பயன்படுத்தியவை எனப் பின்வருவனவற்றை அறிஞர் மு.இராகவ ஐயங்கார் குறிப்பிடுகிறார்.

கல்லு முலோகமும் செங்கலு மரமும்
மண்ணுஞ் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சர்க்கரையு மெழுகு மென்றிவை
பத்தே சிற்பத் தொழிற் குறுப்பாவன 4

சுடுமண், மச்சு, மாடம், முற்றம், முன்றில், காலதர், சாளரம் போன்ற கட்டடக் கலைச் சொற்கள் இலக்கியங் களில் நிரம்பப் பயின்று வருகின்றன. பன்னூறு ஆண்டு களாகச் சிற்ப சாத்திரம் எனப்படும் மனையடி சாத்திரத் தில் கட்டடம் கட்டுவது பற்றிய மரபுகள் சொல்லப்படு கின்றன. -

அந்த மரபுகள் வெறும் நூல் வழக்காக மட்டுமே கடைப்பிடிக்கப்படுவதில்லை. அவற்றின்படிதான் கட்டடம் கட்டப்படவேண்டும் என்பதில் மக்களுக்கு நம்பிக்கை மிகுந்து காணப்படுகிறது. கட்டடத்திற்கான மனையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து ஒவ்வொரு நுணுக்கமான செய்தியையும் மனையடி சாத்திரம் கூறிவிடுகிறது. ஒரு கலையில் இத்தகைய நம்பிக்கைகள் அழுத்தமாகப் பதிய வேண்டுமாயின் அதன் பழமையும் பெருமையும் உறுதி செய்யப்படுகின்றன. கட்டடக் கலையின் தேவ தச்சனாக விசுவ கர்மாவும், அசுரர் மானிடர்க்கான தச்சனாக மயனும் குறிக்கப்படுகிறார்கள். வடமொழியில் கட்டடக் கலை ஒரு மதமாகவும் சாத்திரமாகவும் போற்றப்படுகிறது. அது வாஸ்து சாஸ்திரம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வாஸ்து’ என்ற பெயர் கட்டடக் கலையின் வழிபடு தெய்வத்தைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். ‘அதி தேவதை’ என்ற பெயரே இங்கு அக்கலையின் வழிபடு தெய்வமெனத் தமிழாக்கம் செய்யப்பட்டுத் தரப்படுகிறது. தமிழ் முறை சார்ந்த மனையடி நூலிலும் இக்கருத்துக் கூறப்படுகிறது. அறுபத்து நான்கு கலைகளுள் இரு வகைக் கலைப் பெயர்கள் கட்டடம் சார்புடையனவாய் வருகின்றன. நகரமைப்பைப் பற்றிய செய்திகள் சிலப் பதிகாரம் ஒன்றிலேயே மிகுதியாக உள்ளது. ஏனைய நூல்களில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. சோழர்

தலைநகராகிய பூம்புகாரில் தொடங்கிப் பாண்டியர் கோநகராகிய மதுரையில் திருப்பம் பெற்றுச் சேரர் கோநகராகிய வஞ்சியில் முடிவு பெறுவதனால் சிலம்பிலேயே மூன்று நகரங்கள் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன.

ஆனால், காவிரிப்பூம்பட்டினம் பற்றியும், கூடல் மாநகர் என்று சிறப்பித்துக் கூறப்படும் மதுரை நகரம் பற்றியுமே சிலம்பில் மிகுதியான தகவல்களை அறிய முடிகிறது. வஞ்சி பற்றிக் குறைவாகவே அறிய முடிகிறது.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடலில் மதுரை நகரமைப்புக்கு வரைபடம் (Blue Print) போலவே ஒரு பாட்டு வருகிறது. அப்பாட்டு மதுரை நகரமைப்பைத் தாமரைப் பூவுடன் ஒப்பிட்டு அழகுற விளக்கி விவரிக்கிறது.

தண்டியலங்காரத்துள் வரும் தனிமேற்கோள் செய்யுள் காஞ்சி நகரின் அமைப்புத் தோகை விரித்தாடும் மயில் போல் அழகியது 5 எனக் கூறுகிறது. பல நூல்களும் காப்பியங்களும் பொதுவிற் கூறும் சிறப்பான முறை ஒன்றும் காணப்படுகிறது. தத்தம் கோநகரங்களை வருணிக்குங்கால் அது நிலமகள் நெற்றியில் திலகம்போல் அமைந்துள்ளதாய்க் கூறுகிற வழக்கை நிறையக் கான முடிகிறது. சில நகரங்களின் அமைப்பு, தோற்றம், வரலாறு ஆகியவற்றுடன் புராணக் கதைகள் தொடர்பு பட்டு வருகின்றன. ஆராய்ச்சிக்கு அவற்றிலிருந்து பயன் தரும் சில குறிப்புக்கள் கிடைக்கக் கூடும்.

மாபெரும் பூம்புகார் தவிர உறையூரும் சோழர் கோநகரமாயிருந்துள்ளது எனினும் உறையூரின் சார்பு - சுற்றுச்சூழல் பற்றி அறிய முடிந்த அளவு நகரின் அமைப்புப் பற்றிய உள் விவரங்களை நிரம்ப அறியச் சான்றுகள் குறைவாகவே உள்ளன.

மதுரை தவிரப் பட்டத்துக்கு வருமுன் பாண்டிய இளவரசர்கள் வசித்த நகரம் கொற்கை எனக் கூறப்பம் டாலும் - அழிந்து பட்ட கடற்கரை நகரம் - முத்துக் குளித்தலில் புகழ் பெற்றிருந்தது என்பன போன்ற சில குறிப்புக்களைத் தவிரக் கொற்கை நகரமைப்புப் பற்றியும் அதிகமாக அறிய முடியவில்லை.

இலக்கியப் புகழ் பெற்ற திருவாரூர், தில்லை, திருவரங்கம் முதலிய நகரங்களைப் பற்றியும் நகரமைப்பு என்ற முறையில் குறைவான ஆராய்ச்சிக் குறிப்புக்களே கிடைக்கின்றன.

இக்காரணங்களால் புகார், கூடல் இரு நகரங்களை முழுமையாக ஆராய்ந்தால் கிடைக்கும் செய்திகளைக் கொண்டே நகரமைப்புத் திறனில் தமிழர் பெற்றிருந்த சிறப்பை முழுமையாக விளக்கிவிட இயலும். பழந்தமிழ் நகரங்கள் எல்லா நலன்களும் வளங்களும் நிறைந்தவையாயிருந்தன என்பதற்கு அதன் பரியாயமான சொல் ஒன்றே விளக்கமாயமையும். “வசதி” என்றொரு சொல் இன்றும் நல நிறைவுகளைத் தொகுத்துரைக்கும் தனியொரு பதமாக வழங்கி வருவது கண்கூடு. வசதி என்ற சொல்லுக்கே-நல்லிடம், ஊர், வீடு என்று பொருள்கள் உள்ளமை சூடாமணி நிகண்டில் காணலாம்.7

“வசதி நல்லிடமூர் வீடாம் வரனயன் பரமன் காந்தன்”

என்னும் விளக்கம் கூறுகிறது. இச்சொற் பொருளிலிருந்து பழந்தமிழர் ஊரமைப்பும், கட்டடக் கலையும் எத்துணை நலமாகவும், சீராகவும் இருந்தன . என்பதை உணர முடிகிறது. நகரும், வீடும் வசதி'யா விருந்ததனையே உணர முடிகிறது.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா என்னும் கலைக் களஞ்சிய நூலில் கட்டடக் கலை என்ற பகுதியில் கட்டடங்களின் பயன் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.” 8

1. வீடுகள் (Domestic)
2. சமயச்சார்பான கட்டடங்கள் (Religiosu)
3. அரசாங்கக் கட்டடங்கள் (Governmental)
4. கேளிக்கைக் கட்டடங்கள் (Recreational)
5. நலவுரிமைக்கும் கல்விக்குமான கட்டடங்கள்(Welfare)
6. வர்த்தகக் கட்டடங்கள் (Educational)
7. தொழிலகக் கட்டடங்கள் (Industrial)

கட்டடத்திற்குத் திட்டமிடுதல் பற்றிக் கூறும்போது,

1. சூழ்நிலை கருதித் திட்டமிடல் 2. பயன்பாடு கருதித் திட்டமிடல் 3.பொருளாதாரத் திட்டமிடல் என மூவகையாகப் பகுக்கப்படுகிறது.

கற்கட்டடம்,மரக்கட்டடம், இரும்புக்கட்டடம், உருக்குக் கட்டடம், சிமெண்டுக் கலவைக் கட்டடம் எனக் கட்டட வகைகள் பகுத்துரைக்கப்படுகின்றன. இங்கே நம் நாட்டுக் கட்டடக்கலையில் சிமெண்டு வருவதற்கு முந்திய காலத்துக்கு ஏற்பக் காரை, சுதை, (திவாகரம்) சுண்ணாம்பு என நாம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பின்னாளில் சுண்ணாம்பின் இடத்தைச் சிமெண்டு பிடித்துக் கொண்டது. கட்டடக் கலையின் தத்துவம் பற்றியும் ‘என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா என்னும் கலைக் களஞ்சிய நூல் பின்வருமாறு கூறுகிறது. 9

“கட்டடக் கலைக் கோட்பாடு உண்மையில் ‘ரேஷியோ சினேஷியோ’ என்னும் இலத்தீன் மொழித் தொடரின் ஏற்கப்பட்ட இணக்கமான மொழிபெயர்ப்பாக விர்ட் ரூவியஸ் என்னும் புகழ் பெற்ற உரோமானியக் கட்டடக் கலை நிபுணரால் கி.பி.முதல் நூற்றாண்டிலேயே ஏற்கப்பட்டிருந்தது”. கட்டடத் தொழிலுக்கும், கட்டடக் கலைக்கும் வேறுபாடு கூறுகிற பிறரும் நுணுகிய கலைத் தரத்துக்கு உயரமுடிந்த கட்டடமே கட்டடக்கலையாகிறது என்றே கூறுவர். தொழிலில் பணி நிறைவு மட்டுமே உண்டு. கலையில் நுண்ணிய அழகும், வேலைபாடுகளும் கூட உண்டு. தமிழர் கட்டடக் கலையிலும் இந்தக் கலையியல் கூறுபாடு நன்கு கவனித்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவில் ரேஷியோ, சினேஷியோ’ என்னும் இலத்தீன் மொழித் தொடர் போல இந்தியக் கட்டடக் கலை, நாகரிகம் தேவதச்சனாகிய விசுவன்மா, பிறர்க்குத் தச்சனாகிய மயன் இருவரும் ஏற்படுத்தியதத்துவங்களால் நிறைந்துள்ளது. இந்திய மன்னர்களில் ஒருவனாயிருந்த நளன் கட்டடக்கலை வல்லுநனாகவும் விளங்கியுள்ளான்.” அழகுக்கு அழகு செய்து முடிந்த பயன் தேடுவதே கட்டடக்கலை. அழகைத் தேடுகையில் பல அழகற்ற பிரச்சினைகள் சரியாகத் தீர்ந்துகூடப் போகலாம் என்கிறார் ரோகர் ஸ்க்ருடன். கட்டடக் கலையின் அழகியல் பற்றிய தமது நூலில் அவர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.11

இப்படிப் படிப்படியாய் அழகைத் தேடி வளர்ந்த பழ மரபும் வரலாறுமுள்ள கட்டடக்கலை தோன்றிமேலெழுந்த விதங்களை இனி ஒருவாறு காணலாம்.


குறிப்புகள்:

1. John Buchard and Albert Bush Brown, Excerpt from the Architecture of America, pp. 1-4.

2. “Architecture is a social Art. It may be argued must serve some social purpose but the demands upon architecture are clear. They impose limita.

-tions on the architect which are not inevitably imposed on the painter or sculptor”.

3. Architecture then requires three things A building must serve social needs far which it is built.The materials and the structure must be firm and suitably durable. And then there is art. Excerpt from the American Architecture pp. 5 : 18-22

4. மு. இராகவய்யங்கார் (திவாகரம்). ஆராய்ச்சித் தொகுதி, ப. 146.

5. Prof. Sukia, Vaasthu Sastra, Part I, p. 2.

6. தண்டியலங்காரம் 37ம் நூற்பா மேற்கோள் பாட்டு.

7. சூடாமணி நிகண்டு ‘ச'கர எதுகை 13வது பாடல் 4-ம் வரி.

8. Encyclopaedia Britannica pp. 1088-1115.

9. “The term theory of Architecture was originally simply the accepted translation of the Latin term ‘Ratio Cinatio’ as used by Virtruvious, a Roman Architectural Engineer or the first century A.D.

—Theory of Architecture, Encyclopaedia Britannica, p. 1088.

10. கம்பராமாயணம் 6811.

11. Beauty is a consequential thing, a product of solving problems correctly.

—Roger Scruton, The Aesthetics of Architecture, Part I, p. 25.