பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/நிறைவுரை

நிறைவுரை

மனித நாகரிகத்தில் கட்டடக் கலையும், நகரமைப்பும் முறையான பரிணாம வளர்ச்சிகளாம். இவற்றில் ஒரு சமுதாயம் திறமை பெற்று உயர்வது என்பது பிற நலன்களுக்கும் பிற மேம்பாடுகளுக்கும் சான்றிதழ் பெறுவது போலாகும்.

உலகின் பழம்பெரும் இனங்களுள் தமிழினம் முதன்மையானது. தமிழினத்தின் தொன்மைக்குச் சிறந்த சான்று சிந்துவெளி நாகரிகமாகும்.

வரலாற்றுப் பெருமை

பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் சிந்துவெளியில் பெரும் சிறப்புமிக்க நாகரிகத்தோடு வாழ்ந்த மக்கள் இன்றைய தமிழர்களின் மூதாதையர்களே என்பதை மேனாட்டறிஞர்களும் இந்திய அறிஞர்களும் சான்றுகள் தந்து நிறுவியுள்ளனர்.

சிந்துவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நகர்ப் பகுதிகள், கட்டடப் பகுதிகள், வாய்க்கால், தொட்டி போன்றவை அங்கு வாழ்ந்த மக்களது பண்பட்ட வாழ்க்கைக்குச் சான்றுகளாக அமைபவை. அத்தகு மக்களின் வழிவந்த தமிழர்கள் கட்டடம் கட்டுவதிலும், நகரமைப்பதிலும் சிறப்புப் பெற்றிருத்தல் வேண்டும் என்னும் அவாவே இவ்வாய்விற்குத் துண்டுதல்.

அந்த அவாவின் விளைவாகவே சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய நூல்களிலும் பிறவற்றிலும் கட்டடக் கலைக்கும், நகரமைப்புக்கும் எடுத்துக்காட்டாக அமையும் பலவற்றைத் தொகுக்க ஊக்கப்படுத்தியது.

மனை மரபுகள்

பல்வேறு பெயர்களில் தென்னாட்டில் நிலவும் மனையடி நூல்கள் ஆய்வுக்குப் பெரிதும் உதவியாய் அமைந்ததோடு, அவற்றிற்கு இணையான செய்திகள் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களில் பொதிந்திருப்பதை அறியவும் பயன்பட்டன. அக்கருத்துகள் பழைய இலக்கியங்களில் வேரூன்றி இருப்பது புரிந்தது.

அரண்மனை, கோயிற் கட்டடக்கலை மதில், கோட்டை முதலிய பாதுகாப்புக் கட்டடக் கலை, என்று, தமிழ் மூவேந்தர் நகரங்களில் இவை ஒரு சீராக வளர்ந்து, திறன் பெற்றிருப்பதை அடுத்தடுத்து முதல் மூன்று இயல்களில் காண முடிந்தது.

தற்காலப் பொறியியலின் புது விளைவுகள் என்று கருதப்படும் அணை கட்டுவரை, ஏரிகளை அமைப்பது, பூமிக்கடியில் பாதைகள், சாலைகளை அமைப்பது போன்றவற்றில் கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் திறன் பெற்றிருந்தமையை அறிந்து வியப்படைய முடிகிறது.

தில்லை, மதுரை, திருவரங்கம், இராமேச்சுரம் கோயில்களின் வரைபட அமைப்புகள் ஒரு பெரிய நகரமைப்புக்கு ஈடாக உள்ளன. அவற்றின் சிற்ப-கட்டட -ஒவிய நயங்கள் உலகளாவிய பெருமைக்குரியவையாக உள்ளன.

வடிவ அழகுகள்

தாமரைப்பூ வடிவம், மயில் வடிவம், சுவத்திக வடிவங்களில் நகர்களை அமைப்பது என்பது இன்றைய பொறியியலிலும் நினைத்துப் பார்க்க அரிய செய்திகள். அவற்றைப் பழந்தமிழர் செய்திருக்கின்றனர். செஞ்சிக் கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் மகால், தஞ்சை சரசுவதி மகால் போன்ற கட்டடங்களின் மழமழப்பான சுவர்கள், தூண்கள். விட்டங்கள், மாடங்கள், உரோமாபுரியிலும், ஏதென்சிலும் (கிரேக்க நாட்டுத் தலைநகரம்) உள்ளவை போன்ற பார் புகழும் கட்டடங்களை நினைவூட்டுவதை அறிஞர் உணர்வர்.

உலகப் புகழ் ஒப்புநோக்கு

ஏதென்சு அருகிலுள்ள அக்ரோபோலிசு மாளிகைச் சிதைவின் தூண்களை ஒத்த அழகிய தூண்களை மதுை மகாலில் காண முடிகிறது.

மாட வீதி, தேரோடும் வீதி, சிறு தெருக்கள், மறுகு, கவலை, சந்தி, சதுக்கம் எனத் தெருவமைப்பிலேயே நகரங்களைப் பயனுற அமைத்துள்ளனர் தமிழர்.

பின் மூன்று இயல்களில் புகார், மதுரை, வஞ்சி, காஞ்சி, உறையூர் போன்ற தமிழர் கோநகரங்களைப் பற்றியும் அவை அமைந்த சிறப்புப் பற்றியும் நூற்சான்றுகளுடன் காண முடிந்திருக்கிறது. கிடைக்கும் சான்றுகள் வியக்கச் செய்கின்றன.

மனைநூல் மரபு, சான்றுகளிலிருந்து உய்த்துணர்ந்து வரைய முயன்ற சில விளக்கப் படங்களையும் இவ்வாய்வின் பின்னிணைப்பில் தர முடிந்திருக்கிறது. தமிழகச் சிற்பக் கலை வளர்ந்து, சிற்பிகள் பெருக வேண்டும். இன்று சிற்பிகள் அருகி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

எதிர்காலத்தில்

கட்டடக் கலையையும், கோநகரங்களையும் மட்டுமே ஆய்ந்த இவ்வாய்வைத் தொடர்ந்து வருங்கால ஆய்வாளர் தமிழக ஊர்கள், சிற்றூர்கள், சிற்றூர் மக்கள் பயன்படுத் திய கலப்பை, உழவுக் கருவிகள், சிறு கோயில்கள், திருக் குளங்கள், தேர் கட்டுதல், சிலை வார்ப்படம், சிலை செதுக்கல், கோபுரங்களின் பல வகை, விமானங்களின் பல வகை, கோயில்களின் தூண் வகைகள், பல்வேறு வகை மண்டபங்கள், கோயில்களில் பயன்படும் பாத்திரங்கள், வாகனங்கள், அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள், தோரணங்கள் பற்றி எல்லாம் ஆராய வேண்டும். ஒவ்வோர் ஆய்வும் தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும்.

தமிழகப் பழங்கோட்டைகளை ஒப்பிட்டு ஆராய வேண்டும். ஊர்களோடும், நகர்களோடும் அவற்றருகே உள்ள மலை, பாயும் ஆறு, நிலப்பரப்பு என்பனவற்றை ஒப்பிட்டு ஆராயக்கூடும். எதிர்கால ஆய்வாளர்கள் இவ்வகையில் தொடர்ந்து முயல்வார்களாக.


♫♫