பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/பூம்புகார் நகர்
இயல் ஆறு
பூம்புகார் நகர்
நகரமைப்புக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது பூம்புகார் நகரம். இந்நகரின் பொற்காலம் முடிந்து இது கடல் கொள்ளப்பட்டு விட்டது என்றாலும் வரலாற்றிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் இதன் அமைப்பையும், பெருமையையும் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை முதலிய நூல்களில் இதன் சிறப்பு நன்கு தெரிகிறது.
கி. பி. முதல் நூற்றாண்டில் மேற்கு நாடுகளிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்களாலேயே காவிரிப்பூம்பட்டின நகரம் பெயர் சுட்டிப் புகழப்பட்டிருக்கிறது.
யவன ஆசிரியராகிய தாலமி என்பவர் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ள வரலாற்றுக் குறிப்பில் 1 இது உள்ளது.
அந்நாளைய மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதிய 'பெரிப்ளுஸ்' என்னும் நூலிலும் 2 காவிரிப்பூம் பட்டினம் புகழப்பட்டுள்ளது.
'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந நகரை ஆட்சி புரிந்த கரிகால் வளவன் என்னும் பேரரசன் காலத்தில் முழுப் பெருமையோடு வீறு பெற்றுவிளங்கிய இந்நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்கு
சிறப்பாக விளங்கியதாக நாம் கூறலாம்’ 3 என்கிறார் வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார்.
இவற்றிற்கெல்லாம் காரணம் இந்நகரின் அமைப்பே ஆகும்.
‘முட்டாச் சிறப்பிற் பட்டினம் 4 என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பூம்புகாரைப் புகழ்கிறார்.
கடல் வாணிகச் சிறப்பால் அன்றைய பூம்புகார் ஒரு பன்னாட்டு நகரமாகவும் (International city), விளங்கியுள்ளதை அறிகிறோம். இந்நகருக்குப் பல பெருமைகள் இருந்துள்ளன.
இந் நகரத்துக்குச் செல்லும் பிரதான சாலை சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் பட்டினப் பெருவழி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. 5
அமைப்பும் உட்புரிவும்
காவிரிப்பூம்பட்டினப் பெருநகர் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன:6
- 1. மருவூர்ப்பாக்கம்
- 2. பட்டினப்பாக்கம்
- 3. நாளங்காடி
இந்த மூன்று பிரிவுகளும் அடுத்தடுதது அமைந்திருந்த விதம் நகரமைப்பின் பண்பட்ட நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அலையக் கூடியது ஆகும். மருவூர்ப்பாக்கம் புகார் நகரின் கடற்கரை ஓரமாக அமைந்திருந்த பகுதி. அகநகராக உட்புறம் அமைந்திருந்த பகுதியே பட்டினப்பாக்கம்.
இந்த இரண்டு பாக்கங்களுக்கும் இடையில் இருந்த இடம் நகரத்தின் வணிகப் பகுதியாக (Commercial area) அமைந்திருந்தது. அதற்கு நாளங்காடி என்று பெயர். அல்லங்காடி என மற்றொரு பகுதியும் இருந்திருக்கிறது. இது சோலை சூழ்ந்த பகுதியாம்.
காவிரிப்பூம்பட்டினத்தின் முழுப் பகுதியும் இம்முன்று பெரிய பிரிவுகளுக்குள் அடங்கி விடும்.
மருவூர்ப்பாக்கம்
இனி மருவூர்ப்பாக்கத்தில் அடங்கிய பகுதிகள் என்னென்ன என்று கவனிக்கவேண்டும். இவ்விவரங்கள் இளங்கோ அடிகள் வாக்காகவே இந்திர விழவூரெடுத்த காதையில்7 வருகின்றன.
அலைநீராடை மலைமுலை யாகத்
தாரப் பேரியாற்று மாரிக் கூந்தற்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதையிருட் படாஅம் போக நீக்கி
உதைய மால்வரை உச்சித் தோன்றி
உலகு விளங்கவிரொளி மலர்கதிர் பரப்பி
வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கட் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்8
நிலா முற்றங்களும், மிகவும் சிறப்புடைய பலவகை அலங்காரங்களால் அழகு செய்யப்பட்ட அறைகளும், மானின் கண் போன்ற அமைப்பை உடைய காற்றுப் புகும்வழிகளாகிய சாளரங்களும்,கொண்ட மாளிகைகள் நகரின் மருவூர்ப்பாக்கத்தில் நிறைய இருந்தன. காவிரி கடலொடு கலக்கும் இடங்களில் கரையோரமாக யவனர் மாளிகைகள் இருந்தன. அந்த மாளிகைகள் கண்ணைக் கவரும் எழில் வண்ணம் கொண்டவையாக விளங்கின. குன்றாத வளமிகு வாழ்க்கையினராக யவனர் வாழ்ந்தனர். கடல் வாணிபம் மூலம் பொருள் சேர்க்கத் துணிந்த வேறு பிற நாட்டு வாணிகர்களும் கடற்கரை ஓரமாகவே வாழ்ந்தனர். பட்டினப்பாலையும் இதனை விவரித்துக் கூறுகிறது.9
வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்
துரசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் மைந்தின விலைஞரோடு
ஒசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்10
எனச் சிலம்பும் வருணிக்கிறது. வண்ணம், சுண்ணம் சந்தனம், நறும்புகைக்குரிய மணப்பொருள்களும் நறுமலர் முதலியவும் விற்போர் விலை கூறித் திரியும் பெருந்தெருக்களும், பட்டு நூலாலும், நுண்ணிய மயிராலும், பருத்தி நூலாலும், அழகிய ஆடைகளை நெய்ய வல்ல பட்டுச் சாலியர் முதலியோர் இருக்கும் இடங்களும் பவளமும், ஏனைய மணிகளும், பொன்னும் ஆகிய இவற்றைப் பொன் அணிகலன்களுடன் வைத்து ஒப்பு நோக்கி மதிப்பிட வல்லார் வாழும் வளம் மலிந்த வீதிகளும், நெல் வரகு முதலிய தானியங்களை நிறையக் குவித்து வைத்துள்ள கூலக் கடைத் தெருவும், பிட்டு அப்பம் முதலிய சிற்றுண்டிகளைச் செய்து விற்போர், கள், மீன், உப்பு, நிணம்
முதலியவற்றை விற்போர், இலையமுதிடுவோர், பஞ்ச வாசம் (தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கப்பூரஞ் சாதியோடைந்து)11 விற்போர் முதலியவர்களும், வெண் கலத் தொழில் செய்யும் கன்னார், மரங்கொல் தச்சர், செம்பினாற் கலங்கள் செய்வோர், இரும்பினால் தொழில்கள் புரியும் கொல்லன் ஓவியர், சிற்பாசிரியர், பொற்கொல்லர், மணிகளிழைப்போர் தையல் வினைஞர், நெட்டி, துணி முதலியற்றைக் கொண்டு பறவை: பூங்கொத்து முதலிய உருவங்களைச் செய்வோர். குழல் முதலிய துளைக் கருவியாலும், யாழ் முதலிய நரம்புக் கருவியாலும், பண்ணும் திறமும் ஆகிய இசையினை வளர்க்கும் குழலர், பாணர் முதலியோர் ஆகிய பல்வகைத் தொழிலாளர்கள் வாழ்தற்குரிய இடங்களும் அமைந்திருந்தன. 12
நாளங்காடி
இனி நாளங்காடிப் பகுதியின் அமைப்பைக் காணலாம். கிழக்கே கடற்கரையை ஒட்டி அமைந்த மருவூர்ப் பாக்கமும் அடுத்து நாளங்காடியும் மேற்குப் பக்கமாகப் பட்டினப்பாக்கமுமாக இருந்த அமைப்பு காவிரிப்பூம் பட்டினத்திற்கு உரியது.
இரண்டு பாக்கங்களுக்கும் நடுவிலே அமைந்த இந் நாளங்காடி நிலப்பரப்பு மரங்களடர்ந்த சோலையாக விளங்கியது.
இங்கிலாந்தில் இலண்டன் நகரின் நடுப்பகுதியாக உள்ள ஹைட்பார்க் (Hyde Park) போல இந்நாளங்காடி அமைந்திருந்ததனால்தான் வரலாற்றறிஞர் சதாசிவ பண் டாரத்தார் 19ஆம் நூற்றாண்டு இலண்டன் நகரமைப்பை யும் இதையும் ஒப்பிட்டார் என்று தோன்றுகிறது. 13
நாளங்காடிச் சோலை பட்டினப்பாக்கத்திலுள்ளவர் களும், மருவூர்ப் பாக்கத்திலுள்ளவர்களும் தத்தமக்கு
வேண்டிய உணவு முதலிய துகர்பொருள்களைப் பகற். காலத்தே பெற்றுக் செல்லும் கடைவீதியாக அமைந்த தாலேயே நாளங்காடி எனப் பெயர் பெற்றது.14 நாளங் காடிப் பகுதியின் கலகலப்பான நிலைமையையும் இளங்கோ அடிகள் பின்வரும் உவமை மூலமாக விளக்குகிறார்.
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபாற் பகுதியின் இடைநிலமாகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஒதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கின்ற நிலைஇய நாளங்காடியில்15
மருவூர்ப்பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடை நிலமாகிய நாளங்காடி இருபெரு வேந்தர் முனையிடம் போல விளங்குகிறது. முனையிடம் ஆரவாரத்திற்கு உவமை. போர் குறித்து வந்துவிட்ட பாசறை இருப்புக்கு நடுப்பட்ட நிலமென்பார் அடியார்க்கு நல்லார். 16 அல்லங் காடியும் உண்டாதலின் இதனை நாளங்காடி என்றார்17 என அடியார்க்கு நல்லார் உரையிற் கூறுதலால் அல்லங்காடி என ஒரு பகுதியும் இருந்தது.
பட்டினப்பாக்கம்
நாளங்காடிப் பகுதிக்கு மேற்கே பட்டினப்பாக்கம் மன்னவன் அரண்மனை அமைந்திருந்த இடமாகும்.
அரசவீதிகள், தேரோடும் தெருக்கள் கடைத் தெருக்கள். தன வணிகர்களின் மாடமாளிகைகள் உள்ள பெருந்தெருக்கள், அந்தணர்கள் வாழும் மனைகள் விளங் குகிற தெருக்கள், உழவர், மருத்துவர், காலக் கணிதர், சோதிடம் முதலியோர் தத்தம் தொழிலுக்கு ஏற்றபடி வாழும் தெருக்கள் எல்லாம் பட்டினப்பாக்கத்தில் இருந்தன. 18 முத்துக் கோப்பவர்களும், மணிமாசு நீக்குவோரும், வளையை அறுத்து அணிகள் செய்வோரும் இருக்கும் தெருக்கள் அரசன் முன்னிலையில் நின்று வணங்கும் சூதர், இருந்து வணங்கும் மாகதர், அரசர் புகழ் பாடும் வைதாளிகர், நாழிகை கூறும் நாழிகைக் கணக்கர், சாந்திக் கூத்தர் மதங்கள், களத்தாடும் கூத்தியர் கணிகையர் பரிசங்கொள்ளும் விலைமாதர் குற்றேவல் செய்யும் ஏவல் மகளிர், தோற்கருவி, துளைக் கருவி, உருக்குக் கருவி முதலியவற்றை வாசிப்போர், போர்ப்படைக்கும், திரு விழாக்களுக்கும் பறை கொட்டுவோர், நகை வேழம்பர் முதலியோர் தத்தம் பிரிவின் நிலை தெரியும்படி வாழுமிடங்கள் குதிரைப்பாகர், யானைப்பாகர், தேர்ப்பாகர், கடுங்கண் மறவர் ஆகிய இவர்கள் அரண்மனைப் புறத்தைச் சுற்றியுள்ள இடங்கள் ஆகிய இவை அனைத்தையும் உட்கொண்டு பெருஞ்சிறப்புடன் விளங்கியது பட்டினப்பாக்கம்9. சிற்சில சாதியாளர்கட்கும் தொழிலாளர்கட்கும் தனித்தனித் தெருக்கள் அமைந்திருந்தன என்பது புலனாகிறது.
ஐவகை மன்றங்கள்
மன்றம் என்ற சொல் ஊர் நடுவே பலரும் கூடும் பொது இடம் எனப் பொருள்.20 பட்டினப்பாக்கப் பகுதியில் காவிரிப்பூம்பட்டின நகரத்தின் ஐம்பெரும் மன்றங்களும் அமைந்திருந்தன. இம்மன்றங்கள் நகரின் பொது மக்கள் கூடுமிடங்களாக அமைந்திருந்தன என்று தெரிகிறது. அவையாவன :
- வெள்ளிடை மன்றம்
- இலஞ்சி மன்றம்
- பூத சதுக்கம்
- நெடுங்கல் நின்ற மன்றம்
- பாவை மன்றம் 21
வெள்ளிடை மன்றம்
பல பொருள்கள் திணிக்கப்பட்ட மூட்டைகள் இருந்தன. அவற்றின் மேல் அவற்றுக்கு உரியவர் தம் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
அந்தந்த மூட்டைக்கு உரியவர் தத்தமது மூட்டைகளை அடையாளம் பார்த்து எடுத்துச் செல்வர்.
எவனாவது, கள்வனைப் போல், பிறர்க்குரிய மூட்டையைக் கவர்வானேயாகில், அவன் அதனை எங்குமே கொண்டு செல்ல முடியாது. கண்டுபிடிக்கப்பட்டுச் செய்த தவற்றுக்கு உரிய முறையில் அவன் தண்டிக்கப்படுவான். வெள்ளிடை மன்றத்தில் எந்தப் பொருளும் திருடு போக முடியாது.
வெள்ளிடை மன்றம் என்ற பெயரை நினைத்த மாத்திரத்தில் கள்வர் நடுங்குவர். பொருளைக் களவு செய்வோரிடமிருந்து பாதுகாக்கக் கூடியதும், மீறிக் களவு செய்வோரைக் கடுமையாகத் தண்டித்து அவமானப்படுத்துவதுமான இடம் வெள்ளிடை மன்றமாக இருந்தது.22
இலஞ்சி மன்றம்
ஒரு பொய்கையாகும். கூன், குருடு, ஊமை, செவிடு, தொழு நோயர் ஆகியோர் அப்பொய்கையில் மூழ்கி வலம் வந்தால் குறைகள் நீங்கி நலமடைவர் என்று கூறப்பட்டுள்ளது.23
நெடுங்கல் நின்ற மன்றம்
இந்த மண்டபத்தில் ஒளி வீசும் நெடிய கல் நடப்பட்டிருந்தது. வஞ்சக எண்ணம் கொண்டவர்களால் மருந்து வைக்கப்பட்டுப் பித்தம் கொண்டவர்கள், நஞ்சுண்டு, அல்லது நஞ்சூட்டப்பட்டுத் துன்புறுபவர்கள், பாம்புக் கடிபட்டோர், பேய் பிடித்துத் துன்பப்படுவோர் ஆகிய இவர்கள் எல்லாம் இந்த ஒளி பொருந்திய நெடிய கல்லை. வலமாகச் சுற்றி வந்து தொழுதால் நோய் நீங்கி நலம் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.24
பூத சதுக்கம்
இங்கு பூதம் ஒன்று உண்டு.25 அது பொய்யான தவ வேடங் கொண்டு அவ்வேடத்திற்கு ஏற்ப நடவாமல், பிறரை ஏமாற்றும் போலித் துறவிகள், கணவரை வஞ்சித்து ஏமாற்றி ஒழுகும் பெண்கள், மன்னனுக்குக் கேடு நினைக்கும் நன்றியற்ற அமைச்சர், பிறர் மனை விழைந்தோர், பொய் சாட்சி கூறுவோர், புறம் பேசுவோர் ஆகிய இவர்களை இப்பூதம் தண்டிக்கும் என்று கூறப்படுகிறது.26
பாவை மன்றம்
ஆளும் அரசன் செங்கோல் முறை தவறிச் சென்றாலும், அறங்கூறும் அவையத்தார் நடுவுநிலை தவறினாலும், அதனை நாவாற் கூறாமல் கண்ணாற் கூறும் பாவையை உடையது பாவை மன்றமாயிருந்தது.27
மன்றங்களின் பயன்
புகார் நகர அமைப்பில் இம்மன்றங்களின் பயன் குறிப்பிடத்தக்கது. நகரில் கள்வர் பற்றிய பயம், போலித் துறவு, பெண்கள் கொண்டவரை வஞ்சித்தல், பிறர் மனை நயத்தல், அரசத் துரோகக் குற்றம், பொய்ச் சாட்சி சொல்லுதல், புறங்கூறுதல் ஆகிய தீச்செயல்கள் இல்லாதிருந்தமைக்கும். நகரின் ஒழுக்க மேம்பாட்டுக்கும் தக்க சான்றுகளாக இம்மன்றங்கள் இருந்தன.28
மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி’ என்ற பெயரில் குடியிருப்புகளுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.29
பூம்புகார் நகரிலும் இவ்வமைப்பு இருந்திருப்பதைக் காண முடிகிறது.
நாளங்காடிச் சோலை, காவிரி நீர்ப் பெருக்கு இவை தவிரவும் நீர்நிலைகள், வனங்கள், சோலைகள் ஆகியனவும் பூம்புகாரில் இருந்துள்ளன.
வனங்கள்
காவிரிப்பூம்பட்டின நகரத்தில் இருந்த சில பெரிய வனங்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார் இளங்கோ அடிகள். மணிமேகலையிலும் இவை பற்றி வருகின்றன30. அவையாவன:
- மலர் வனம் (இலவந்திகைச் சோலை)
- உய்யான வனம்
- சம்பாதி வனம்
- கவேர வனம்
- உவ வனம்31
தானே தண்ணீரை நிரப்பிக் கொள்ளவும், அத்தண்ணீரை வெளியேற்றவும் வல்ல இயந்திர அமைப்புடைய, நீர் வாவியைக் கொண்ட மலர் வனம் ஒன்று பூம்புகாரில் இருந்தது. அம்மலர் வனம் அரசர்க்கும், அமைச்சர்க்கும் உரியதாயிருந்தது. இதற்கே இலவந்திகைச் சோலை என்றும் பெயர் வழங்கியது.32 வேனிற் காலத்தில் அரசன் தன் பரிவாரங்களுடன் தங்கியிருத்தற்கு ஏற்ற வண்ணம் குளிர்ந்த நிழலும், நீர்நிலையும் கொண்டு சுற்றிலும் மதிலாற் சூழப் பெற்றுள்ள காவற் சோலையாயிருந்தது இது. உய்யானவனம் என்பது தெய்வ வழிபாட்டுக்குரிய நறுமலர்களைத் தந்த நந்தவனமாயிருந்தது. கவேர வனம் என்பது காவிரியின் தந்தையாகிய கவேரன் தவம் புரிந்த இடமாகும்.
சம்பாதி வனம் என்பது சூரியகிரணத்தாற் சிறகு இழந்த கழுகரசனாகிய சம்பாதி தவம் புரிந்த வனம் ஆகும்.33
உவ வனம் என்பது புத்த தேவரது பாத பீடிகையைத் தன்பாற் கொண்ட பளிங்கு மண்டபத்தை அகத்தே கொண்டு, பலவகை நறுமலர்களைத் தரும் மரங்களுடன் திகழந்த சோலைவனமாகும்.34
உவ வனத்திற்குள் பளிங்கு மண்டபமொன்று இருந்ததென்றும் அது தன்னகத்துள் இருப்பவர் ஒசையை வெளிப்படுத்தாது, உருவை மட்டும் வெளிக்காட்டும் இயல்பினது என்றும் கூறப்பட்டுள்ளது.35
அப்பளிங்கு மண்டபத்தில் மாணிக்கச்சோதி பரந்த பதும பீடம் ஒன்றும் இருந்திருக்கிறது.36
ஏரிகள், துறைகள்
காவிரி கடலோடு கலக்கும் இடமாகிய சங்கமுகத் துறையில் அமைந்திருந்த நெய்தலங்கானல் என்ற சோலையில் காமவேள் கோட்டம் இருந்தது.37 அந்தக் காமவேள் கோட்டத்துடன் இணைந்தனவாகச் சோமகுண்டம். சூரியகுண்டம் என்னும் பெயருடைய இரண்டு தீர்த்தங்கள் இருந்தன.38
இவை இரண்டும் தீர்த்தங்கள் என்றே சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லாரும்39 பட்டினப்பாலை உரையாசிரியராகிய நச்சினார்க்கினியரும் கூறியுள்ளனர்.40 ஆயினும் இவை இரண்டும் ஏரிகள் என்ற கருத்துப்படி 'இருகாமத்து இணை ஏரி' என்று கூறும் வழக்கும் இருந்தது41 என்று தெரிகிறது. அறிஞர் சாமி சிதம்பரனார் தமது பட்டினப்பாலை ஆராய்ச்சியில் காவிரிப் பூம்பட்டினம் பற்றிக் கூறுவதாவது :
“அங்கே பல பொய்கைகள்-அதாவது மலர் பூத்த தடாகங்கள் இருக்கின்றன. அத்தடாகங்களின் உயர்ந்த கரைகள், மாசு மறுவற்ற வானத்தில் சந்திரனுடன் மகம் என்னும் நட்சத்திரம் சேர்ந்து விளங்குவது போல் காணப்படுகின்றன. அந்தப் பொய்கைகளிலே பலவித வாசனை பொருந்திய பல நிற மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. இதனால் அந்தப் பொய்கைகளும், பலவித நிறங்களிலே காட்சியளிக்கின்றன”.42
கோயில்கள்
காவிரிப் பூம்பட்டின நகரின் அமைப்பில் பல்வேறு கோயில்கள் இருந்திருக்கின்றன. அவை கோட்டங்கள் என்று வழங்கப்படுகின்றன. அவை:
சிவன் கோட்டம், திருமால் கோட்டம், பலராமன் கோட்டம், இந்திரன் கோட்டம், முருகன் கோட்டம், சூரியன் கோட்டம், சந்திரன் கோட்டம், புத்தர் கோட்டம், அருக தேவன் கோட்டம்.
இதனைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு கூறும்.
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்
வச்சிரக் கோட்டம், புறம்பணையான்வாழ் கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்43
இந்திர விகாரம் ஏழு
காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திரனால் நிருமிக்க்ப் பெற்ற புத்த விகாரங்கள் ஏழு இருந்தன.
இந்திர விகாரம் ஏழுடன் போகி44
இந்திர விகாரம் ஏழுடன் புக்கு45
இந்திர விகாரம் எனஎழில் பெற்று46
இந்திர விகார மேழும் ஏத்துதலின்47
புத்த சைத்தியத்து இந்திரன் நிருமித்தனவாகிய ஏழரங்கு என்று48 இதற்கு அடியார்க்கு நல்லார் விளக்கம் எழுதினார். ‘புத்த சைத்தியம் என்பது பெளத்த வித்தியாசாலை அல்லது புத்தனாலயமுமாம்' என்றார்49 உ. வே. சாமிநாதையர்.
மணிவண்ணன் கோட்டம்
இதுவும் புகாரில் அமைந்திருந்த கோட்டங்களுள் ஒன்று. திருமாலின் கோயில் என்பதைப் பெயரில் இருந்தே அறிய முடிகிறது. மணிவண்ணன் கோட்டத்தைப்பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் வருகிறது. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வெளியேறுகையில் கோவலனும் கண்ணகியும் இக்கோயிலை வலஞ்செய்து புறப்பட்டமை கூறப்படுகிறது.
கணி கிளர் அரவின் அறிதுயில மர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து50
இப்பகுதியை விளக்கி, 'அரவணையின் மீதே அறிவோடு துயில் கொள்ளும் மணிவண்ணன் என்னும் திருநாமத்தையுடைய திருமால் கோயிலை வலஞ் செய்து’51 என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.
காவிரிப்பூம்பட்டின நகரமைப்பில் மேற்குறித்த கோயில்கள் இடம் பெற்றிருந்தமை புலனாகிறது. 'புறம் பணையான் கோயில் என்கிற ஐயனார் கோயில் நகரின் புறத்தே அமைந்திருந்தது என்பார் பண்டாரத்தார்.52 உலக அறவி
காவிரிப் பூம்பட்டினத்தின்கண் அமைந்திருந்த ஐவகை வனங்களுள் ஒன்றாகிய உவ வனம் என்னும் மலர்ப் பூங்காவின்53 மேற்றிசையில் அமைந்த சிறிய வாயில் வழியே சென்றால் - உவ வனத்திற்கும், ந்கரின் இடுகாடாகிய சக்கரவாளக் கோட்டத்திற்கும் நடுவே, உலக அறவி என்னும் பொது அம்பலம் இருந்தது.54
அந்த உலக அறவியில், காவிரிப் பூம்பட்டினத்தின் நகரத் தெய்வமாகிய சம்பாபதி கோயிலும், அங்குள்ள பொது அம்பலத்தின் தூண் ஒன்றில், கந்திற்பாவை என்ற தெய்வத்தின் உருவமும் இருந்தன என்பதைச் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறியுள்ளார்.55 உலக அறவிக்குள் நுழையும் வாயில் பலரும் ஒரு சேரப் புகுமளவு பெரிதாகவும் அகலமாகவும் அமைந்திருந்ததாகச் சாத்தனார் கூறுகிறார்.56
சக்கரவாளக் கோட்டம்
காவிரிப்பூம்பட்டினம் தோன்றிய காலத்திலேயே, அதனுடன் தோன்றியதாகக் கூறப்படும் இடுகாடு, சக்கரவாளக் கோட்டம் எனப்பட்டது. ஊர் மக்கள், அதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றே கூறுவர் எனவும் மணிமேகலை உரைக்கிறது.57
அக்கோட்டம் நான்கு பக்கத்திலும் பெரிய மதில்களாற் சூழப்பட்டிருந்தது. அதன் உள்ளே காளி கோட்டமும், வேறு பல்வகை மன்றங்களும், தவத்தவர், அரசர், கற்புடை மகளிர் முதலியோர்க்கு எழுப்பப்பட்ட கோட்டங்களும் இருந்தன.58
புகார் நகரில் சக்கரவாளக் கோட்டம் அமைந்திருந்தது பற்றி மணிமேகலை விரிவாகக் கூறுகிறது. இந்தச்
சக்கரவாளக் கோட்டம் சிற்ப நூல், கட்டடக்கலை, நகரமைப்பு ஆகியவற்றின் தலைவனாகிய மயனால் நிருமிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.60
எவ்வெச் சாதியினர் எவ்வெவ்விடங்களில் புதைக்கப் பட்டனர் என்பதை விளக்கப் பல தனித்தனிக் கோட்டங்கள் அந்தச் சக்கரவாளத்தில் இருந்தன. இடுகாட்டுத் தெய்வங்கள் உறையத் தக்க பல தூண்கள் இருந்தன. துறவிகளை வழிபடுவோர் ஓசை, பிணங்களை அடக்கம் செய்ய வருவோர் எழுப்பும் அவலக் குரல்கள், நரிகளின் ஓலம், கோட்டான்களின் அலறல் இவையனைத்தும் அங்கு இரவும் பகலும் கேட்டுக் கொண்டே இருக்கும். பேய்கள் வாழும் வாகை மன்றம், பறவைகள் தங்கும் வெள்ளில் மன்றம், காபாலிகர்கள் வாழும் வன்னி மன்றம், விரதங்களால் இளைத்த மேனியையுடையோர் இறந்த பின் அவர் தலை ஓடுகளை மாலையாகக் கட்டுவோர் வாழும் இரத்தி மன்றம், பிணங்களைத் தின்போர் வாழும் வெள்ளிடை மன்றம் என்னும் ஐவகை மன்றங்கள் சக்கரவாளக் கோட்டத்தில் இருந்தன.61
நகரின் பரப்பளவு
புகார் என்ற சொல்லுக்குக் கடல் முகத்துவாரத்தில் அமைந்த நகரம் என்று பொருள்.62 காவிரிப்பூம்பட்டினம் சோழநாட்டை, அன்னையாக அமைந்து புரந்த காவிரி கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் இருந்த நிலப்பகுதியில் அமைந்திருந்தமையால் புகார் என்றும், காவிரிப் பூம்பட்டினம் எனவும் இந்நகர் பெயர் பெற்றிருந்தது.63
"சங்க காலத்தில் சோழநாட்டின் உள்நாடாகிய புகார் நாடு என்ற நாட்டுப் பகுதிக்குத் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம்".64
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு காவதம் (சுமார் முப்பது மைல் பரப்பளவு) பரப்புடைய
பெரு நகரமாக விளங்கியது என்று சிலப்பதிகாரக் காப்பியம் கூறுகிறது.65
சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் பூத சதுக்கத்துப் பூதம் பற்றிக் கூறும்போது,
- தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர்
- அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோ
- கமைச்சர் பிறர்மனை நயப்போர்
- பொய்க்கரி யாளர் புறங் கூற்றாளரென் கைக்கொள் பாசத்துக்
- கைப்படு வோரெனக் காத நான்கும் கடுங்குர லெழுப்பிப்
- பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்66
என்று கூறப்படுகிறது. இதில் ‘காத நான்கும்’ என்பதற்கு அரும்பதவுரையாசிரியர் ‘ஊர் சூழ்ந்த நாற்காத வட்டகையும்'67 என்று பொருள் கூறியுள்ளார். அடியார்க்கு நல்லார் 'காத் நான்குமென முற்றும்மை கொடுத்தலானே ஊர் நாற்காத வட்டகை என்பதுணர்க' 68 என்று விளக்கியுள்ளார். இவற்றால் பூம்புகார் நகரின் பரப்பளவு நாற்காத தூரம் என்பது தெரிகிறது. இப்பொழுது காவிரிப்பூம் பட்டினத்தைச் சுற்றிலுமுள்ள க்ருவேந்த நாதபுரம், கடாரம் கொண்டான் என வழங்கும் ஊர்கள் பழைய காவிரிப்பூம்பட்டினத்தின் மேற்கு எல்லையாகவும், திருக் கடவூர் தெற்கு எல்லையாகவும், கலிக்காமூர் (அன்னப் பன் பேட்டை) வடக்கு எல்லையாகவும், கடல் கிழக்கு எல்லையாகவும் அமைய இந்நான்கு பேரெல்லைக்கு உட்பட்ட சிற்றுர்கள் அனைத்தையும் தன் அங்கமாகப் பெற்றிருந்தது பழைய காவிரிப்பூம்பட்டினம் என்கிறார் சதாசிவ பட்டாரத்தார்.69
மக்கள் தொகை
அன்றைய காவிரிப்பூம்பட்டினத்தின் மக்கள் தொகை பற்றி அறிய நேரிடையான சான்றுகள் இல்லை எனினும்
சிலப்பதிகாரப் பிரதியான ஏடு ஒன்றில் மனையறம் படுத்த காதையின் தொடக்கத்தில்,
- உரைசால் சிறப்பின் அரசு விழைத்திருவின்70
என்ற அடிக்கு முன்னர்,
- திருவின் செல்வியொடு பெருநில மடந்தையை
- ஒருதனி யாண்ட செருவடு திண்டோள்
- கரிகாற் பெரும்பெயர்த் திருமா வளவனைப்
- பாலை பாடிய பரிசிலன் றெடத்து
- மாலைத் தாகிய வளங்கெழு செல்வத்து
- அறைந் திரட்டியும் ஆயிரங் குடிகளும்
- வீறுசால் ஞாலத்து வியலணி யாகி
- உயர்ந்தோ ருலகிற் பயந்தரு தானமும்
- இல்லது மிரப்பு நல்லோர் குழுவும்
- தெய்வத் தானமும் திருந்திய பூமியும்
- ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும்
- விண்ணவர் உலகின் நண்ணிடு நகரமொடு
- எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த
எனவரும் அடிகள் காணப்படுதலைச் சிலப்பதிகாரப் பதிப்பாசிரியராகிய உ.வே.சா. ஐயரவர்கள் அடிக்குறிப்பில் தந்துள்ளார்கள். 71 மேற்படி அடிக்குறிப்புக் கருத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் அறுபதினாயிரம் குடும்பங்களைக் கொண்டிருந்திருக்க வேண்டுமென்றும் - அறுபதினாயிரம் குடும்பங்கள் என்பது ஏறக்குறைய முந்நூறு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கலா மென்றும் கருதுகிறார் சதாசிவ பண்டாரத்தார். 72 இது 1969ம் ஆண்டின் சென்னைப் பெருநகர மக்கள் தொகைக்கு இணையானது என்றும் அவரே கூறுகிறார். 73
துறைமுகம்
கிழக்குக் கடற்கரையில் மிகப் பெரிய துறைமுக நகரமாகவும் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியுள்ளது. கடல் வழியே வரும் மரக்கலங்கள் கரையளவும் உள்ளே வந்து பண்டங்களை ஏற்றிச் செல்லவும் இறக்கவும் வாய்ப்புள்ள இயற்கைத் துறைமுகமாக விளங்கியிருக்கிறது. நகரமைப்பில் இது ஒரு சிறப்பாகும்.
- ... ... ... கூம்பொடு
- மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
- புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்
- இடைப்புலப் பெருவழிச் சொரியும்
- கடல்பல் தாரத்த நாடுகிழ வோயோ74
என்னும் புறநானூற்றுப் பாடற்பகுதியிலிருந்து பல நாட்டுப் பண்டங்களை நிறைய ஏற்றிக்கொண்டு இத்துறைமுகத்தை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் பாய் மரங்களைக்கூடத் தாழ்த்தாமல் இந்நகரத்தின் கரையை அணுகிச் சரக்குகளை எளிதில் இறக்கின செய்தி தெரிய வருகிறது. நகரமைப்பின் இத்துறைமுக வசதி கடல் வாணிபத்திற்குப் பெரிதும் துணையாய் அமைந்திருந்தமை புலப்படுகிறது.
இரவில் திசையறியாது செல்லும் மொழி வேறுபட்ட தேயத்தாருடைய மரக்கலங்களை உரிய திசையில் வழிகாட்டி அழைக்கும் கலங்கரை விளக்கம் இந்நகரில் இருந்திருக்கிறது.75
நலம் கொழிக்கும் நகரமைப்பு
பூம்புகார் நகரமைப்பைப் பற்றி அறிஞர் சாமி சிதம்பரனார் கூறுகிறார்: பட்டினப்பாலை தோன்றிய காலத்தில் அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே காவிரிப்பூம்பட்டினம் மிகப்பெரிய நகரமாக இருந்தது. கடற்கரையோரத்தில் பாக்கங்கள் என்ற பெயரு நா. பார்த்தசாரதி
டன் பல தெருக்கள் இருந்தன. செம்படவர் வாழும் சேரிகள் இருந்தன. ஏழைகளுக்குச் சோறிடும் பல அன்ன சாலைகள் இருந்தன.
கடைத் தெரு, பண்டக சாலைத் தெரு என்று தனித்தனியே இருந்தன. அந்த நகரத்தின் இடையிடையே பல தோட்டங்கள் இருந்தன. பூஞ்சோலைகள் இருந்தன. பல பெரிய குளங்கள் இருந்தன. ஏரிகள் இருந்தன. உயர்ந்த மாடமாளிகைகள் நிறைந்திருந்தன. இவற்றைப் பட்டினப்பாலை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.
நகரத்தில் ஆங்காங்கே பல வெட்டவெளிகள் (மைதானங்கள்) இருக்க வேண்டும். தோட்டங்களும், இளமரக்காவும் நிறைந்திருக்க வேண்டும். நகரங்களின் இடையிடையே நீரோடைகளோ ஏரிகளோ இருக்க வேண்டும். இத்தகைய நகரங்களைத்தான் நலங்கொழிக்கும் நகரமென்று கருதுகின்றனர். இத்தகைய நகரங்களிலேதான் நல்ல காற்றும் வெளிச்சமும் குடி கொண்டிருக்கும்.
இன்று புதிய நகரங்களை அமைப்போர் அல்லது நகரங்களைச் சீர்திருத்துவோர் நகரின் பல இடங்களிலும் விளையாட்டு வெளிகளும், இளமரக்காக்களும் (பார்க்) அமைக்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காவிரிப் பூம்பட்டினம், சுகாதாரம் நிலவுவதற்கான எல்லா அமைப் புக்களையும் கொண்டிருந்ததென்ற உண்மையைப் பட்டினப்பாலையால் நாம் அறியலாம்.76
பெரிய மாடங்களின் ஒளி விளக்குகளைக்கண்டபடியே கடலுள் புறப்படும் மீனவர் கதிரவன் எழுச்சியை நோக்குவர் என்கிறார் உருத்திரங்கண்ணனார்.77
பண்டசாலைகள்
துறைமுக நகரங்களுக்கும் பண்டசாலைக்கும். (Godown) நெருங்கிய தொடர்பு உண்டு. துறைமுகத்தை
ஒட்டிப் பல வீதிகள் பண்டசாலைகளாகவும், கிடங்கு களாகவும் அமையும்.
''காவிரிப்பூம்பட்டின நகரமைப்பிலும் பண்ட சாலைகள் முதன்மை பெற்றிருந்தன. 78
பண்டசாலைகளைக் காப்பவர்களின் சிறப்பைப் பற்றிக் கூடிய பின் பண்டங்கள் எவ்வாறு குவிந்து கிடக்கின்றன என்பதையும் கூறுகிறார் உருத்திரங்கண்ணனார்.
அந்நிய நாடுகளில் இருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாக வந்து பூம்புகாரில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்நிய நாடுகளில் கொண்டுபோய் இறக்குவதற்காகவும் பல பண்டங்கள் புகாரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வெளியே அனுப்புவதற்காகக் குவிந்து கிடக்கும் பண்டங்களின் மீது சோழப் பேரரசின் சின்னமாகிய புலி இலச்சினை பொறிக்கப்பட்டுக் கிடக்கின்றன. 79
முத்திரை இடப்பட்ட பண்டங்கள்தாம் வெளியேற முடியும். முத்திரை இடப்படாத பண்டங்கள் ஏற்றுமதியாக வெளியேற முடியா. ஏற்றுமதி இறக்குமதிக்குக் கட்டுக் காவல்களும் சுங்கமும் இருந்தன.
இவ்வாறு நகரமைப்பில் துறைமுகப்பகுதியை ஒட்டிப் பல்வேறு பண்டசாலைகள் இருந்தமை தெரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம் ஒரு பெரிய வாணிக நகரமாக விளங்கியதென் பதும் 80 அதற்கேற்ற முறையிலே அக்கோ நகரம் அமைக்கப்பட்டிருந்தது என்பதும் நூற்சான்றுகளிலிருந்து தெரியவருகின்றன.
“கடைத் தெருவுக்கு ஆவணம் என்று ஒரு பெயர். அங்காடி என்பது மற்றொருபெயர். பண்டசாலை என்பது பண்டங்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம். இதை
இக்காலத்தினர் கிடங்கு என்பர். ஆவணம் அல்லது அங்காடி என்பது பண்டங்களை வைத்து வாணிகம் செய்யும் இடம். 81
"காவிரிப்பூம்பட்டினத்தில் இவை சிறப்புறஅமைக்கப்பட்டு எப்போதும் விழாக்கோலம் கண்டு காட்சியளித்தன" 82 என்கிறார் பட்டினப்பாலை ஆசிரியர்.
"நகரின் பெரிய கட்டடங்களுக்கு நெருக்கமாக அமைக்கப்பட்ட நீண்டபடிகள் இருந்தன. சுற்றுத் திண்ணைகள் பல இருந்தன. அந்தப் படிக்கட்டுகளின் வழியாகத்தான் அத்திண்ணைகளின்மேல் ஏற முடியும் முதல் கட்டு, இரண்டாங்கட்டு, மூன்றாங்கட்டு என்று சொல்லும்படி பல சுற்றுக் கட்டுகள் அமைந்திருந்தன.
சிறிதும் பெரிதுமான பல வாயில்கள் இருந்தன. பெரிய கதவின் நடுவே சிறிதாக இருந்த மற்றொரு கதவு திட்டி வாயில் (திருஷ்டி வாயில்) எனப்பட்டது. உள்ளே போகின்ற பல இடைவெளிகளும் இருந்தன. அந்த மாளிகைகள் மேகங்கள் படியக் கூடியவாறு ஓங்கி உயர்ந்திருந்தன. 82
அந்நாள்களில் கொடிகட்டிப் பறக்கவிடும் வழக்கம் கோயில்களிலும் திருவிழாக் காலங்களிலும் மட்டும் அல்லாமல் கடைவீதிகளிலும் இருந்திருக்கிறது. 83
பூம்புகார் நகரில் அறிஞர்கள் கூடி விவாதிக்கும் இடங்களில் கூடக் கொடி கட்டிப் பறக்கவிட்டிருக்கிறார்கள். 'இன்ன வணிகந்தான் இங்கு நடக்கிறது’ என்பதை அங்கே பறக்கும் கொடி மூலமே அறியும் வகையில் பூம்புகார் நகரில் கொடிகள் பறந்தன. கொடிகளின் அடையாளத்தைக் கொண்டே இது இன்ன இன்ன நாட்டுக் கப்பல்-இன்ன இன்னாருடைய கப்பல் என்று அறிந்து வந்தனர் மக்கள். 84
நகரின் வீதிகள் செல்வ வளம் மிக்கவையாயிருந்தன.
அங்கே குதிரைகள் பல கட்டப்பட்டிருந்தன. விரைவாக நிமிர்ந்து ஓடக்கூடியவையான அக்குதிரைகள் கடல்வழியாக வந்தவை. தரைமார்க்கமாக வண்டிகளிலே ஏற்றிக்கொண்டு வந்து குவித்த மிளகு மூட்டைகள் ஒரு புறம் நிரம்பிக்கிடந்தன. பல திறப்பட்ட இரத்தினங்களும், பொன் கட்டிகளும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன அவை இமயமலை போன்ற வடநாட்டு மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை,
குடகுமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்தனக் கட்டைகளும், அகிற்கட்டைகளும் குவிக்கப்பட்டிருந்தன.
பாண்டி நாட்டுத் தென்கடலிலே மூழ்கி எடுத்த சிறந்த முத்துக் குவியல்கள் காணப்பட்டன. கீழைக்கடலில் பிறந்த பவளங்களும் காணப்பட்டன.
கங்கை நதி பாயும் பகுதிகளிலிருந்து வந்த விளைபொருள்களும், காவிரி பாயும் பகுதியிலிருந்து கொணரப்பட்ட விளைபொருள்களும் குவிந்துகிடந்தன.
இலங்கைத் தீவிலே உண்டான உணவுப்பொருள்கள் ஏராளமாக வந்து குவிந்திருந்தன. காழகத் தீவு என்று பெயர் பெற்றிருந்த பர்மாவிலிருந்து பல பொருட்கள் வந்து,நிரம்பியிருந்தன.
இவ்வாறு செல்வம் மல்கி விளங்கின காவிரிப்பூம்பட்டினத்து வீதிகள் என்கிறார் பட்டினப்பாலை ஆசிரியர்.85
இங்கு கூறிய சான்றுகளால் காவிரிப்பூம்பட்டினம் கடற்கரைத் துறைமுக நகரமாகவும் அறிஞர், செல்வர் நிறைந்த நகரமாகவும் விளங்கிய சிறப்பை அறிகிறோம். மதுரை மாநகர்
இனிக் கடற்கரை நகரமல்லாதது, ஆனாலும் பேரறிஞரும், பெரும்புலவரும் இருந்து தமிழாராய்ந்த சங்கத் தமிழ் மதுரையைப் பற்றிக் காணலாம். காவிரிப் பூம்பட்டினம் போலவே மதுரை நகரமைப்பும் திட்டமிடப்பட்ட அழகுடையதாக விளங்கியதைச் சான்றுகளால் அறி கிறோம்.
குறிப்புகள் :
1. | Annual report on South Indian Epigraphy for 1918-19 part II, para 2 |
2. | Foreign Notices of South India, p.59 |
3. | டி. வி. பண்டாரத்தார். காவிரிப்பூம்பட்டினம், ப.2 |
4. | பட்டினப்பாலை 218 |
5. | டி. வி. பண்டாரத்தார், காவிரிப்பூம்பட்டினம். ப.42 |
6. | சிலம்பு 1: 5: 39-62 |
7. | சிலப்பதிகாரம், 5: 1-89 |
8. | சிலப்பதிகாரம் 1-12 |
9. | பட்டினப்பாலை 28-50 |
10. | சிலம்பு 5: 13.27 |
11. | சிலம்பு அடியார் உரை, ப.154 |
12. | சிலப்பதிகாரம், 5: 28-39 |
13. | டி. வி. பண்டாரத்தார், காவிரிப்பூம்பட்டினம், ப.2 |
14. | சிலப்பதிகாரம் 5:68 |
15. | ""59:63 |
16. | சிலப்பதிகாரம் அடியார் உரை ப.158 |
17. | சிலப்பதிகாரம் அடியார் உரை ப. | 11. |
18. | 5: 40-45 | |
19. | 5: 46-58 | |
20. | மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப. | 347 |
21. | சிலப்பதிகாரம் ப. | 5: 111-140. |
22. | சிலப்பதிகாரம் | 5: 111-117. |
23. | 5: 118-121. | |
24. | 5: 122-127. | |
25. | 5: 134. | |
26. | 5: 128-134. | |
27. | 5: 135-188. | |
28. | ம.ரா. இளங்கோவன், தமிழகத்தின் தலை நகரங்கள், ப. | 138 |
29. | வை. கணபதி, கட்டுரை ஊரமைப்புக் கலை’, இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கையேடு, ப. | 228, |
30. | மணிமேகலை | 3: 44-62. |
31. | 3: 160.169. | |
32. | சிலம்பு | 10: 30-31, |
33. | மணிமேகலை | 3: 54. |
34. | 3: 61-62. | |
35. | 3: 63-64. | |
36. | 3: 65-66. | |
37. | பட்டினப்பாலை | 35-38. |
38. | சிலப்பதிகாரம் | 9: 59-60. |
39. | சிலம்பு-அடியார் உரை, | ப. 250. |
40. | பத்துப்பாட்டு, நச்சர், | ப.895. |
41. | பட்டினப்பாலை | 39. |
- சாமி சிதம்பரனார், பட்டினப்பாலை ஆராய்ச்சி ப.26
- சிலப்பதிகாரம் 9:9-13
- ""10:13-14.
- ""27:92
- மணிமேகலை, 28:70
- ""26; 55
- சிலம்பு அடியார், ப.268
- சிலம்பு, உ.வே.சா. அடிக்குறிப்பு, ப.268
- சிலப்பதிகாரம் 10:9-10
- சிலம்பு, அடியார் உரை, ப.268
- டி.வி.எஸ்.பண்டாரத்தார்-காவிரிப்பூம்பட்டினம் ப.29
- மணிமேகலை 3:61-62
- ""7:92-93
- ""21:7
- ""7:92-93
- சிலம்பு, 9: 20
- மணிமேகலை 6:30-31
- ""6:50-55
- ""6:201-202
- ""6:56-96
- ம.ரா. இளங்கோவன், தமிழகத்தின் தலை நகரங்கள், ப.51
- டி. வி. எஸ். பண்டாரத்தார், காவிரிப்பூம். பட்டினம், ப.16
- """ப.16
- சிலப்பதிகாரம் 5: 133
- சிலப்பதிகாரம் 5:128-134
- சிலம்பு, அரும்பதவுரை, ப.144
- சிலம்பு, அடியார், ப.164
- டி வி.எஸ்.பண்டாரத்தார், காவிரிப்பூம்பட்டினம் ப.16
- சிலப்பதிகாரம் 2:1
- சிலப்பதிகாரம் 2:1 அடியார் உரை, ப.46
- டி.வி.எஸ்.பண்டாரத்தார், காவிரிப்பூம்பட்டினம் ப.17
- """ப.18
- புறநானூறு 30
- சிலப்பதிகாரம் 6:141
- சாமி சிதம்பரனார், பட்டினப்பாலை ஆராய்ச்சி, ப.19-20
- பட்டினப்பாலை 111-112
- சாமி சிதம்பரனார், பட்டினப்பாலை ஆராய்ச்சி, ப.58
- பட்டினப்பாலை 125-141
- சாமி சிதம்பரனார், பட்டினப்பாலை ஆராய்ச்சி, ப.561
- சாமி சிதம்பரனார், பட்டினப்பாலை ஆராய்ச்சி, ப.65
- பட்டினப்பாலை 158
- ""160-183
- ""175
- ""183–194