பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/முப்பெரு நகரங்கள்
இயல் எட்டு
முப்பெரு நகரங்கள்
காவிரிப் பூம்பட்டினம் சோழர் தலைநகரம் என்ற முறையிலும், மதுரை பாண்டியர் தலைநகரம் என்ற முறையிலும் இதுகாறும் ஆராயப்பட்டன. இனி, பல்லவர் தலைநகரமாக இருந்த காஞ்சியும், முந்திய சோழர் தலைநகராயிருந்த உறையூரும், சேரர் தலைநகராயிருந்துள்ள வஞ்சியும், இந்த இயலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மதுரை நகரமைப்பைக் கூறும் பரிபாடல் இறுதியில் 'கோழியும் வஞ்சியும் போல்’ என உறையூரையும் வஞ்சி யையும் சுட்டுகிறது.1
மேற்குறித்த கோநகரங்களில் இன்றும் பெருநகரங்களாக இலங்குபவை மதுரையும், காஞ்சியுமே. உறையூர் திருச்சியருகே ஒரு சுற்றுப்புறச் சிற்றூராக மட்டுமே விளங்குகிறது. எது வஞ்சி என்பது பற்றிக் கருத்து வேறுபாடு நிலவுகிறது.2
நூற்குறிப்புகளிலும், சான்றுகளைக் கொண்டுமே ஆராய முடிந்த இந்நகரங்களைக் காஞ்சி, உறையூர், வஞ்சி என இங்கு முறை வகுத்துக் கொள்ள 'இதுவே' காரணம்.
காஞ்சி நகரமைப்பு
தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கண நூலில் உருவக அணியின் பிரிவு ஒன்றிற்கு மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கும் பாட்டு ஒன்றில் காஞ்சிநகரம் தோகை விரித்தாடும் மயிலுடைய தோற்றத்திற்கு ஒப்பிடப் பட்டுள்ளது.3
நகரமைப்பில் தாமரை வடிவ நகரமைப்பிற்கு (பத்மம்) மதுரை உதாரணமாயமைந்தது போல மயில் வடிவ (மயூர் பாணி) நகரமைப்பிற்குக் காஞ்சி உதாரணமாக விளங்கி இருக்க வேண்டும். பாரவி என்ற வடமொழிக் கவிஞர் “ஆண்களில் அழகர் திருமால்,பெண்களில் அழகி அரம்பை, நகரங்களில் அழகியது காஞ்சி எனச் சிறப்பித்துக் கூறி -யிருக்கிறார்.
மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்
ஒலியும் பெருமையும் ஒக்கும்-மலிதேரான்
கச்சி படுவ கடல் படா கச்சி
கடல் படுவ எல்லாம் படும்.4
என்னும் தண்டியலங்கார மேற்கோள் பாட்டும் காஞ்சி நகரின் பல்வேறு வளங்களைக் கடலினும் மேலானதாகக் கூறுகிறது.
"காஞ்சி நகரின் இருபாலமைந்திருந்த ஏரிகள் இரண்டும் இருபுறத் தோகைகளாகவும், கோட்டை மதில் வயிறாகவும், பீலி கடிகையாகவும், நீர்வண்ணன் அத்தியூரை வாயாகவும் உடைய காஞ்சி அழகிய மயில் போன்ற தோற்றமுடையது” என்பது தண்டியலங்கார உருவக மேற்கோள் பாட்டு ஆகும். இதில் கடிகை என்பது காஞ்சியில் இருந்த கல்லூரியைக் குறிக்கும்.5
மணிமேகலை காஞ்சியை அடைந்தது பற்றிக் கூறும் போது தேவர்கோனின் 'காவல் நகரமே பூமிக்கு வந்தது போல' எனச் சாத்தனார் கூறுகிறார்.6 மணிமேகலை சென்று தொழும் சேதியும் கூறப்படுகிறது.7 மதில், பொழில் கூறப்படுகிறது.
காஞ்சி நகரில் அரசன் ஒரு தெய்வத்தின் ஆணைப்படி தான் அமைத்த பீடிகையையும், சோலையையும் மணிமேக லைக்குக் காட்டுகிறான்.8 பெரும்பாணாற்றுப்படையில் காஞ்சியின் நகரப் பகுதியாகிய திருவெஃகா கூறப்படுகிறது.9 'வெயில் நுழைதலறியாத குயில் நுழையும் சோலை’ எனக் காஞ்சி நகரச் சோலை கூறப்படுகிறது.10 தேர்கள் தடம் பதித்து ஓடிய காஞ்சிநகர வீதிகள் கூறப்படுகின்றன.11 செங்கலாற் செய்த உயரமான புறப்படை வீடு12, மிளை சூழ் படப்பை13, பலர் தொழும் விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் எனப்படுகிறது. "பொற்றிருமாட கூடப் புராதனக் கவின்” எனக் காஞ்சி நகரின் அழகைக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.14 தீர்த்தம், தலம், மூர்த்தி என்ற வகையில் காஞ்சியின் சிறப்பை இப்புராணம் கூறும்.
காஞ்சியில் கடிகையும், ஓவிய, சிற்ப கலைக்கூடங்களும், பாகூரில் வடமொழிக் கல்லூரியும், பிரம்மபுரிகளும் நிரம்பி இருந்ததைப் பல்லவர் வரலாறு கூறும்.15
காஞ்சிநகர் பல்கலை, பல்சமய, பல்மொழி நகராக அன்று விளங்கியுள்ளது.
உறையூர்
காவிரிப்பூம்பட்டினத்துக்கு முந்திய சோழர் கோநகரமாக இருந்து உறையூர், திரிசிரபுரத்தின் மேற்கேயும், திருவரங்கத்தின் தெற்கேயும் காவிரியின் தென்கரையில் திரிசிரபுரத்தின் ஒரு பகுதியாக இன்று அடங்கிவிட்டது.
முதுகூத்தனாரின் அகநானூற்றுப் பாட்டில் கூடச் சோழர் தலைநகராகவே உறையூர் கூறப்படுகிறது.16
கரிகாலன் இந் நகரிலிருந்து ஆட்சி செய்யத் தொடங்கிய பின்பே, பூம்புகார் பெயர்ந்தான் என்கிறார் பண்டாரத்தார். துறைமுகம் உள்ள இடமாக வேண்டும் என்ற கருத்திலே உறையூரிலிருந்து புகாருக்கு மாறினான் என்றும் கூறுகிறார்.17 உறையூர் பற்றிய குறிப்புகள் நூல்களில் அங்கங்கே கிடைப்பது தவிர, நகரமைப்பையும் பிற விவரங்களையும் அறியக் கிடைக்கவில்லை. உறையூரின் ஒரு பகுதி ஏணிச் சேரி என அழைக்கப்பட்டிருத்தல் தெரிகிறது. பல புறப் பாடல்களில், உறையூர் சோழர் தலைநகராகவே கூறப்பட்டுள்ளது. புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இந்நகரை மதில் வளைத்த நிகழ்ச்சி வருதலால், மதிலுடன் கூடிய அரண் உள்ள நகராயிருந்துள்ளது. ஒரு கோழி யானையை எதிர்த்த வீர மண் என உறையூரைப் பற்றிய வரலாறு ஒன்று கூறப்படுகிறது.17 (அ)சிலம்பில் அருகன் கோயில், உறையூரில் இருந்தது கூறப்படுகிறது. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி பற்றிய புறப்பாடல்கள் மதில் முற்றுகை யாவும் உறையூருடன் தொடர்புடையவை எனினும், நகரமைப்பை அறிய அப்பாடல்களில் விரிவான செய்திகள் இல்லை. சிலம்பிலும் 'உறையூருக்குக் கோழி என்ற பெயர் வந்த வரலாறு' உறையூர் மதிற்புறத்துள்ள காவற்காடு என்பன போன்ற குறிப்புகள் தாம் வருகின்றன.
எனவே புகார் புகழ் பெறு முன்பு நன்கு விளங்கிய பழஞ் சோழர் கோநகர் என்ற கருத்துடன் உறையூரைப் பற்றி இங்கு நிறுத்திக் கொள்ள நேரிடுகிறது. அகநானூற்றிலும், புறநானூற்றிலும் சில செய்திகள் வருகின்றன.18
வஞ்சி
சேரர் தலைநகராகிய வஞ்சி, ஆன்பொருநை என்னும் ஆற்றங்கரையில் அமைந்திருந்தது.19 அவ்வஞ்சி மாநகருக்குக் கருவூர் என்றும் ஒரு பெயர் உண்டு.
வஞ்சி மாநகரம் கோட்டை கொத்தளங்களோடு கூடிய அக நகரையும், கோட்டைக்கு வெளியே புறநகரையும் கொண்டிருந்தது.20 வஞ்சி முற்றம் என ஒரு பெயர் கூறப்படுகிறது. புறநகரில் இயந்திர வாவிகளும் மலர்வனங்களும் இருந்திருக்கின்றன. தேவர் கோட்டங்களும், சைவ வைணவக் கோயில்களும், பெளத்த விகாரமும் சமணப் பள்ளிகளும், பொழில்களும், பொய்கைகளும், மிகுந்திருந்தன. அவ்விடங்களில் எல்லாம் முனிவர்களும், சான்றோர்களும் நிரம்பியிருந்தனர்.21
குணவாயிற் கோட்டம்
புறநகரில் கிழக்குக் கோட்டை வாயிற்பக்கத்தில் சமண முனிவர்கள் தங்கி வசித்த கோட்டம் ஒன்று இருந்தது. அதற்குக் குணவாயிற் கோட்டம் என்று பெயர். சேரன் செங்குட்டுவனின் தம்பியும், சிலப்பதிகார ஆசிரியருமான இளங்கோவடிகள் இக்கோட்டத்தில்தான் வாழ்ந்திருந்தார்.22
வேளாவிக்கோ மாளிகை
புறநகரின் மற்றொரு புறத்தே வேளாவிக்கோ மாளிகை என்னும் மாளிகை இருந்தது. இது வேள் ஆவிக்கோ என்னும் வள்ளலுக்கு உரியது. சேர அரசர்கள் இம்மாளிகையில் அடிக்கடி சென்று தங்குவது உண்டென்று தெரிகிறது.23
சமயக் கணக்கர்
புறநகரில் சமயக் கணக்கரும், மதவாதிகளும் தங்கியிருந்தமை தெரிகிறது. அளவை வாதி, சைவ வாதி, பிரம வாதி, வைணவ வாதி, வேத வாதி, ஆசீவக வாதி, நிகண்ட வாதி.சாங்கிய வாதி, வைசேடிக வாதி, பூத வாதி முதலியவர்கள் இருந்தமை தெரிகிறது.24 அவர்கள் வாதத் திறன் மிக்கார் எனவும் தெரிகிறது. -
அரண்மனை
சேர மன்னனது அரண்மனை செல்வ வளமுடையதாகவும் மலைபடு பொருள்கள் மலிந்ததாகவும் விளங்கியது. அருவிகளும், செய்குன்றுகளும், மலைகளும், மகிழ்வூட்டும் நறுமணச் சோலைகளும், நீர்நிறை பொய்கைகளும் கோநகரில் அரண்மனையைச் சூழ இருந்தன.25
அரண்மனை மதில் வாயில் மிக உயர்ந்து காணப்பட்டது.26 அரண்மனை எல்லைக்குள் பல மாடமாளிகைகள் இருந்தன. அரச மகளிர் வாழும் அந்தப்புரங்கள் இருந்தன. பேரரசன் ஒருவனுக்குரிய பலவகைக் கட்டடங்களும், அரசனது கொலு மண்டபமும், நாடக அரங்கமும், கோவிலும், பிறவும் அரண்மனையில் சிறப்புற்று விளங்கின.27
இயற்கை வளம்
மலைபடு பொருள்களின் வளத்தால் இயற்கைச் செல்வங்களைக் குன்றக் குறவர் அரசனுக்குப் பரிசளித்து மகிழ்வது வழக்கமாயிருந்தது.28
துறைமுகம்
தொண்டி, முசிறி இரண்டும், சேரர் தம் துறைமுக நகரங்களாக இருந்துள்ளன. மேலைநாட்டைச் சேர்ந்த பிளைநி முதலியோர் திண்டிஸ் (தொண்டி) முசிரிஸ் (முசிறி) என்றும் இவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். புகாரைப் போலன்றி இவை சிறிய துறைமுக நகரங்களாகவே இருந்தன.29
கோட்டையும் அகழியும்
வஞ்சி மாநகரின் கோட்டையும், அகழியும் மதுரை நகரமைப்பில் வந்தது போல் அமைந்திருந்தன என்று கூறுவதற்கு ஏற்றபடி ஒரே வகையில் இருந்தன. சேரர் சின்னமாகிய விற்கொடி பறந்தது என்ற ஒன்றே வேறுபாடு. மலைநாடாகையால் மதிற் சுவர்கள் உயர்ந்திருந்தன. கோட்டை மதிலுக்கும் மக்கள் வாழ் பகுதிக்கும் இடையே பசுமையான காவற்காடு இருந்தது.30 வீரர்கள் தத்தம் போர்க்கருவிகளுடன் அக்காவற் காட்டில் தங்கியிருந்தனர். பாதுகாப்பு அமைப்புச் சிறப்பாயிருந்தது. அகழி சூழ் வஞ்சி மாநகரம் வானவில் சூழ்ந்தது போல் அழகாயிருந்தது. வெள்ளிமலை நடுவே பிளந்தது போல உயரமான நிலைகளில் சுண்ணாம்புப் பூச்சு நிலவொளி போலிருந்தது.
பலவகைத் தெருக்கள்
காவற்காட்டை அடுத்திருந்த தெருக்களில் கோட்டை வாயிலைக் காத்து வந்த காவலர்கள் வாழ்ந்து வந்தனர். மதில்கள் அகன்றும் நீண்டும் இருந்தன. -
அத்தெருக்களை அடுத்து, மீன் விற்போர், உப்பு விற்போர், கள் விற்போர், இறைச்சி விற்போர், அப்பம் விற்போர், பிட்டு விற்போர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் இருந்தன. பலவகைத் தானியங்கள் விற்போர் தெருக்கள் புறநகரின் ஒரு பகுதியிலிருந்தன. இவை தவிர மேலும் பல்வகைத் தெருக்கள் வஞ்சி மூதூரை அழகு செய்தன.31
வஞ்சி மாநகர் உள்ளே அமைந்திருந்த மறுகுகள், இடங்கள், தொழில்கள், தொழிலாளர்கள் பற்றி விவரித்துள்ளார். சாத்தனார். ஏறக்குறைய மதுரை, புகார் போலவே இந்நகர் வருணனை வருகிறது.32
வேறுபாடு
கோநகரமைப்பு என்கிற முறையில் புகார் மதுரையோடு அதிகம் வேறுபாடுற்றதாகத் தோன்றாவிடினும், மலைநாட்டுக்குரிய மதிலுயரம் போன்ற சில சூழ்நிலைத் தேவைக்குரிய அமைப்புகள் வஞ்சியில் வேறுபட்டிருக்கக் கூடும்.
வஞ்சி எது ?
சேரர் தலைநகராகிய வஞ்சி எது என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. பேராசிரியர் மு. இராகவய்யங்கார் திருச்சிக்கு அருகேயுள்ள கருவூரே வஞ்சி என்கிறார்.
டாக்டர் எஸ். கிருஷ்ணசுவாமி அய்யங்கார், டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆகியோர் சேரநாட்டில் இன்றைய எரணாகுளத்திற்கு வடக்கே தள்ளியும் பொன் னாணியிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள சேற்றுவாய் என்னும் துறைமுகம் வரை பரவியும் உள்ள பகுதிகளில் ஒரு கருவூர் உள்ளது. அக்கருவூரே சேரர் தலைநகராகிய கருவூர் வஞ்சி என்கின்றனர். அந்தக் கருவூரின் அருகே திருக்கணாம திலகம் என்னும் இடம் ஒன்று இன்று உள்ளது. அவ்விடமே சிலம்பில் குறிப்பிடப்படும் குன வாயில் கோட்டமாக இருக்கக் கூடும் என்று டாக்டர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் கருதுவதால் அந்த இடத் தைக் கிழக்கு மதில் வாயிலாகக் கொண்டு சேரர் கோநகரம் இருந்த இடம் உய்த்துணரப்படுகிறது.
பெரியாறு கடலில் கலக்கும் சங்கம முகமாகிய அழிக்கோடுதான் முசிறியாயிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இந்த இடத்திலிருந்து வடமேற்கில் இரண்டு கல் தொலைவிலுள்ள ‘சேரமான் பிரம்பா’ என்னும் இடமும் திருவஞ்சைக் குளமும் உள்ளது. இன்னும் சிறிது தொலைவில் கொடுங்களுர்க் கோயில் என்னும் இடமுள்ளது. அக்கோயிலிலிருந்து சிறிது தொலைவில் கருவூர்வடக்கு-கருவூர் தெற்கு என இரு பகுதிகள் உள்ளன. வஞ்சி என்ற பெயரும் கருவூர்ப்பட்டினம் என்ற பெயரும் கூட இதே இடத்திற்கு வழங்குகின்றன.
இப்பகுதியே வஞ்சி மாநகரம் இருந்த இடமாயிருத்தல் வேண்டும் என்பர். சேரன் செங்குட்டுவன் நீலகிரி வழியே இமயமலைக்குக் கல் எடுக்கச் சென்ற வழியும் இதனுடன் பொருந்தி வருகிறது. எனவே பேரியாற்றடை கரையிலுள்ள இதுவே பழங்கால வஞ்சியாயிருக்க வேண் டும் என ஆய்வாளர் முடிவு செய்கின்றனர்.34 மணிமேகலை வஞ்சி மாநகரத்திற்குச் சென்றது பற்றி மணிமேகலைக் காப்பியத்தில் வருகிறது.
- தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
- பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
- நற்றவ முனிவரும் கற்றடங்கினரும்
- நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்
- எங்கணும் விளங்கிய் எயிற்புற இருக்கையில் 35
என்று வஞ்சி மாநகரின் மதிலுக்கு வெளியே இருந்த புறஞ்சேரிப் பகுதி விவரிக்கப்பட்டுள்ளது. வேதிகை எனப்படும் திண்ணைகளும், அமரும் மேடைகளும், வஞ்சி மாநகரத்தின் சிறப்பாக அமைந்திருந்திருப்பது தெரிகிறது.
பூவா வஞ்சி
பூக்களில் வஞ்சிப்பூ என ஒன்று உண்டாகையினால் சேரர் கோநகரமாகிய வஞ்சியை அப்பொருளிலிருந்து விலக்கிக் கூறப் பூவா வஞ்சி36 என்று கூறும் வழக்கம் இருந்தது. வஞ்சி மாநகரைப் பொன்னகர்37என்கிறார் சாத்தனார். பொற்கொடியின் (கொடி-வஞ்சி) பெயரையுடைய பொன்னகர் என அவர் கூறுவதிலிருந்து அக் கோ நகரின் பொலிவை உணர முடிகிறது.
அறச்செல்வி மணிமேகலை வஞ்சி மாநகரின் உட்பகுதியில் புகுந்து பல தெருக்களையும் வீதிகளையும் கடந்தாள் எனச் சாத்தனார் விவரிக்கிறார். உயரமான இடத்திலிருந்து வீழும் அருவிகள் தாழ்கின்ற செய்குன்றங்களையும், மிக்க ஆர்வத்தைப் பெருகச் செய்யும் நறுமண மலர்ச் சோலைகளும் தேவர்கள் தங்களுக்குரிய விண்ணுலகத்தையும் மறந்து வந்து தங்குவதற்கு விரும்பும் நல்ல நீர் வளமுள்ள இடங்களும், சாலைகளும் பிறவும் இருந்துள்ளன38. வஞ்சியில் பெளத்தப் பள்ளி இருந்தது39 என்றும் தெரிகிறது. உறையூர் போலவே வ்ஞ்சி மாநகரமும் இன்று சுவடற்றதாகி விட்டதனால் இவ்வளவே அதன் நகரமைப்பை அறிய இயலுகிறது.
இம்மூன்றும் கோநகரங்கள் என்ற பெயரில் வகைப்படுவதால் ஒரோவழி இங்குத் தொகுத்துரைக்கப்பட்டன. நகரமைப்புப் பற்றிக் காஞ்சி தவிர்ந்த மற்ற இரு நகரங்களையும் நன்கு விவரிக்கப் போதுமான நூற்சான்றுகள் கிடைக்கவில்லை. காஞ்சி பற்றிய நகரமைப்பிலும், புகார் மதுரையோடு ஒத்தவை நீக்கி வேறுபடுவன மட்டும் இங்குச் சுட்டிக் காட்டப்பட்டன.
காஞ்சி நகர் மயில் போல் அமைந்திருந்தது என்னும் உருவகத்துக்கு எடுத்துக்காட்டான வரைபடம் ஒன்று இவ்வாய்வில் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இனி, இந்நகரங்களில் சமுதாயங்கள் அமைந்த முறை பற்றி அடுத்த இயலில் காணலாம். -
குறிப்புகள் :
1. பரிபாடல் திரட்டு 7.
2. ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள்,ப. 8.
3. தண்டியலங்கார மேற்கோள் 37 உருவகம்.
4.தண்டியலங்கார உயர்ச்சி வேற்றுமை மேற்கோள், நூற்பா 48.
5. மா. ராசமாணிக்கம், பல்லவர் வரலாறு, ப.254
6. ഥணிமேகலை 28:165-166.
7. ഥணிமேகலை 28:175.
8. ഥணிமேகலை 28:192-205.
9. பெரும்பாணாற்றுப்படை 393.
10. | பெரும்பாணாற்றுப்படை | 375 |
11. | "" | 397 |
12. | "" | 397-405 |
13. | "" | 401 |
14. | காஞ்சிபுராணம் | 2:83 |
15. | மா.ராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு | ப.253-79 |
16. | அகநானூறு | 137 |
17. | டி.வி.எஸ்.பண்டாரத்தார்,காவிரிப்பூம்பட்டினம் | ப.3 |
அ. | சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை அடியார் உரை | ப.31 |
{சிலப்பதிகாரம் 10:241-248 அடியார் உரை | ப.298 | |
18. | புறநானூறு 60,67,69,78,127,170,202,212,220,264,321,325,331,352,395 அகநானூறு 137 | |
19. | புறநானூறு | 11:5 |
20. | ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள் | ப.2 |
21. | """ | ப.4 |
22. | சிலப்பதிகாரம் பதிகம் | |
23. | ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள் | ப.3 |
24. | மணிமேகலை | 27:1-275 |
25. | பதிற்றுப்பத்து | 6:1 |
26. | மணிமேகலை | 28:23-28 |
27. | "" | 28:63-68 |
28. | மணிமேகலை | 28: 29-61 |
29. | ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள் | ப. 2 |
30. | மணிமேகலை | 28:26-27 |
31. | 28:31-50 | |
32. | 28:55-61 | |
33. | ம.ரா. இளங்கோவன், தமிழர் தலைநகரங்கள் | ப. 8-9 |
34. | ப. 8-9 | |
35. | மணிமேகலை | 26:72-76 |
36. | 26:78 | |
37. | 26:91 | |
38. | 28: 63-68 | |
39. | 28:69-72. |