பழைய கணக்கு/மாமா கொடுத்த கோட்டு
சின்ன வயதில் எனக்குப் பூணூல் போட்ட போது என்னுடைய மாமா (அம்மாவின் சகோதரர்) நிஜாரும் கோட்டும் தைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அந்தக் காலத்தில் கோட்டு, நிஜார் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்! எனக்குச் சந்தோஷம் தலைகால் புரியவில்லை. என்னிடம் ஷர்ட்டோ பனியனே இல்லை, ஷர்ட் போட்டுக் கொண்டு அதற்கு மேல்தான் கோட் அணிய வேண்டும் என்பது மாமாவுக்குத் தெரியவில்லை. ‘சட்டை இல்லேயே’ என்று நான் சொன்னபோது, “பரவாயில்லை; அப்படியே கோட்டைப் போட்டுக்கோடா” என்று சொல்லி விட்டார் அவர். எனவே ஷர்ட் இல்லாத குறை தெரியாமல் இருக்க ஒரு வெள்ளைத் துணியை எடுத்து பாரதியார் மாதிரி உடம்பை மறைத்து அதற்கு மேல் கோட்டைப் போட்டுக் கொண்டேன். அப்போது பாரதி பாடல்களை நான் படித்ததில்லை. நம் தேசம் அடிமைப்பட்டிருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனாலும் பாரதியாரிடத்தில் எனக்கு பக்தி பூர்வமான ஒரு வெறியை உண்டாக்கி வைத்திருந்தார் எங்கள் கிராமப் பள்ளிக்கூட வாத்தியார் மணி ஐயர். அப்புறம் போகப் போகத் தான் பாரதியார் பற்றிய பெருமைகளை அறிந்து கொண்டேன். ஒரு நாள் பாரதியார் மாதிரியே உடை அணிந்து, அவர் மாதிரியே தலைப்பாகையும் கட்டிக் கொண்டு போய் வாத்தியார் மணி ஐயர் எதிரில் நின்றபோது, “மீசை இல்லையேடா” என்று சிரித்தார்.
எங்கள் ஊரில் விசுவவாதன் என்ற பெயரில் இன்னொரு பையன் இருந்தான் என்னைக் காட்டிலும் ஒரு வயது சிறியவன். நான் பாரதியார் மாதிரி வேஷம் போட்டதிலிருந்து வாத்தியார் மணி ஐயர் என்னை பாரதி விசுவநாதன் என்றும், அவனைச் சின்ன விசுவநாதன் என்றும் அழைக்கத் தொடங்கினார்.
கிராமப் புறங்களில் நில அடமான பாங்குகள் ரொம்பவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலம் அது. கூட்டுறவு சொஸைட்டி என்ற பெயரில் அவை ஏழைகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்து உதவி வந்தன. அதன் தலைமை அலுவலகம் வேலூரில் இருந்தது. என்னுடைய கிராமமான மாம்பாக்கத்தில் அதன் கிளை ஒன்று இருந்தது. என் தந்தைதான் அதற்குப் பொறுப்பாளர். அவருக்கு மாதச் சம்பளம் ஏழு ரூபாய்.
கடன் வாங்கியவர்கள் திருப்பித் தரும் தொகையை அவ்வப்போது வேலூர் தலைமை பாங்குக்கு அனுப்பி விடுவார். பணம் நூற்றுக்கணக்கில் இருக்கும் ஆதலால் மணியார்டராக அனுப்பாமல் இன்ஷூரன்ஸ் கவரில் வைத்துத் தைத்து அந்தத் தையல் முடிச்சின் மீது அரக்கு ஸீல் வைத்து அனுப்புவார். அரக்கை நெருப்பில் காட்டி இளக வைப்பதும், அந்த இளகிய மெழுகைக் கவர் மீது அகலமாய் குங்குமப் பொட்டு போல் வைத்து அவற்றின் மீது ஸீலைப் பதிய வைப்பதும் எனக்குப் பிடித்தமான வேலை.
எங்கள் ஊரில் தபாலாபீஸ் கிடையாது. ஆகையால் மாம்பாக்கத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள வாழைப் பந்தல் போஸ்ட் ஆபீஸுக்குப் போய் போஸ்ட் மாஸ்டரிடம் அந்த ஸீல் வைத்த கவரைத் தந்து ரசீது பெற்று வர வேண்டும். வாரம் ஒரு முறை வாழைப்பந்தலுக்குப் போய் வர நாலணா கூலியாகக் கிடைக்கும். அந்த வேலையை நான்தான் செய்து வந்தேன்.
வாழைப் பந்தல் போக வேண்டிய நாட்களில் காலையில் எழுந்து, உலர்ந்த கிச்சிலிக்காய் ஊறுகாயுடன் பழையது. சாப்பிட்டு விட்டு அந்தக் கோட்டை எடுத்து மாட்டிக் கொள்வேன். அப்பா இன்ஷூரன்ஸ் கவரைக் கோட்டின் உள் பாக்கெட்டில் வைத்து கோட்டின் மீது ஒரு கயிற்றால் என் உடம்போடு சேர்த்துப் பந்தோபஸ்தாகக் கட்டி விடுவார்.
கூலியாகக் கிடைக்கும் அந்த நலணாவில் எப்போதாவது காலணா அரையணா நானகவே அப்பாவுக்குச் சொல்லாமல் செலவு செய்துவிட்டு அப்பாவிடம் திட்டும் குட்டும் வாங்கிக் கொண்ட நாட்களும் உண்டு. வாழைப்பந்தல் போய் வருவது என்றால் எனக்கு வாழைப்பழம் சாப்பிடுகிற மாதிரி. காரணம், அந்தக் காலத்தில் என்னைக் கவர்ந்த டோக்கியா கின்ஸா வாழைப்பந்தல் கடைவீதிதான்!
சில ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கை திசை மாறி, நான் எழுத்தாளனாக வளர்ந்து பத்திரிகை ஆசிரியனாகவும் ஆகிவிட்டேன். கால வெள்ளத்தின் சுழல்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து, எதிர்நீச்சல் போட்டு சிலிர்த்து நிற்கின்ற என் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றில் மறக்க முடியாதவை மறந்து போனவை எல்லாம் உண்டு. ஆனாலும் இளம் வயதில் காலணாவுக்கு கலர் பத்தாஸ் (சர்க்கரை மிட்டாய்) வாங்கிச் சாப்பிட்டது போன்ற அற்ப நிகழ்ச்சிகள் மட்டும் மறக்கவே இல்லை.
சில மாதங்களுக்கு முன், “சாவி இதழ் வைத்திருந்தால் ரூபாய் 500 பரிசு” என்று ஒரு திட்டத்தை அறிவித்து வாரம் ஒரு ஊருக்குப் போய்ப் பரிசுத் தொகையைக் கொடுத்து வந்த போது, வேலூருக்கு ஒருமுறை போயிருந்தேன். அங்கே ஒரு வீட்டில் தையல் வேலை செய்யும் ஏழைப் பெண்மணி ஒருத்திக்குப் பரிசு கிடைத்தது. நான் வந்திருக்கும் செய்தி லேசாக அக்கம் பக்கம் பரவ அந்த வீட்டில் ஒரு சின்னக் கூட்டம் சேர்ந்து விட்டது. அந்தக் கூட்டத்தில் தொண்டுக் கிழவர் ஒருவர் ஓரமாய் நின்று என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பரிசுத் தொகை கொடுத்து முடிந்ததும் அவர் என்னருகே வந்தார்.
“என்னை அடையாளம் தெரிகிறதாப்பா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
“இல்லையே ... தாங்கள் யாரென்று சொன்னால் தெரிந்து கொள்வேன்” என்று நான் இழுத்தேன்.
“நான்தான் வாழைப்பந்தல் போஸ்ட் மாஸ்டர். சின்ன வயசில் நீ வந்து இன்ஷூர் செய்து விட்டுப் போவாயே. ஞாபகம் இருக்கிறதா? அந்த விசுவநாதன்தானே நீ இப்போது பேரும் புகழுமாய் இருப்பது அறிந்து எனக்குச் சந்தோஷமாய் இருக்கிறது. நீ ஒரு புகழ் பெற்ற எழுத்தாளனாக இருப்பது நம் ஜில்லாவுக்கே பெருமை! நான் இந்தத் தெருவில்தான் எதிர்வீட்டில் குடியிருக்கிறேன். நீ வந்திருப்பதாகச் சொன்னார்கள். உன்னைப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எண்ணிக் கொண்டிருந்தேன் இப்போது பார்த்துப் பேசி விட்டேன், ரொம்ப சந்தோஷம்!” என்றார்.
அந்தப் போஸ்ட் மாஸ்டரின் அன்பும், அவர் கண்கள் பாச உணர்வின் மிகுதியால் பனித்திருந்ததும் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.