பழைய கணக்கு/முதல் சம்பாத்தியம்



முதல் சம்பாத்தியம்

பள்ளிப் படிப்பைப் பாதியில் முடித்துக் கொண்டு, வேலையில்லாமல் வாடிக்கொண்டிருந்த இளம் பிராயத்தில் குடுமி வைத்திருந்தேன். முடிச்சு ரொம்ப கனமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். அந்தக் குடுமி என்னுடைய முன்னேற்றத்துக்குப் பெரிய இடையூறாக இருந்தது. குடுமியை எடுத்துவிட்டு மற்ற சம வயதுத் தோழர்களைப் போல் கிராப்பு வைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ விரும்பினேன். ஆனால் அதற்கு வேண்டிய தைரியமோ, சுதந்திரமோ எனக்கு இருக்கவில்லை. என் அப்பா சம்ஸ்கிருத பண்டிதர். ஆசார சீலர். கிராப்பு வைத்துக் கொள்வதை மன்னிக்க முடியாத குற்றமாய்க் கருதியவர்.

வில்லிவாக்கத்திலிருந்து பெங்களுருக்கு எங்கள் கிரிக்கெட் குழு மேச் ஆடப் போயிற்று. அந்தக் குழுவில் நான்தான் விக்கெட் கீப்பர். குடுமி வைத்திருந்ததால் பெங்களுர் மேச்சில் என்னை ஒதுக்கிவிட்டு, எனக்குப் பதிலாக வேறொரு பையனை அழைத்துச் சென்றார்கள். இதனால் பெங்களுர் போகத் தடையாயிருந்த குடுமி மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

அப்பா எங்காவது, எப்போதாவது வெளியூர் போகிற சமயத்தில். மொட்டையடித்துக் கொண்டு விடுவதென்று உறுதி கொண்டிருந்தேன். ஆனால் அப்பா வெளியூர் போகிற வழியாகவும் இல்லை. இரவும் பகலும் என்னை வாட்டி எடுத்த குடுமி விசாரம் தீர்வதாயுமில்லை.

ஒரு நாள் துணிந்து குடுமியை எடுத்து விடுவதென்று தீர்மானித்தும், அதை நிறைவேற்றுவதற்குரிய பொருளாதார வசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டில் ராமசாமி என்றொரு டாக்டர் இருந்தார். தினமும் அவர் டிஸ்பென்ஸரியில் போய் உட்கார்ந்திருப்பது என் பொழுது போக்கு. என்னிடம் அவருக்கு அன்பும் அக்கறையும் உண்டு. பிரியமாக எப்போதாவது நாலணா, எட்டணா காசு கொடுப்பார். என் குடுமியை அவ்வப்போது பாராட்டி ரொம்ப லட்சணமாக இருப்பதாகக் கூறுவார்.

ஒருநாள் அவர் கொடுத்த எட்டணாவை எடுத்துக் கொண்டு குடுமிக்கு விமோசனம் அளிக்க ஸலூனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன்.

எதிரே பாஸ்கர சாஸ்திரிகள் (அவரை ராமாயன சாஸ்திரிகள் என்று அழைப்பார்கள்) என்பவர் வந்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், “பையா, உன்னத்தான் தேடிக்கொண்டு வருகிறேன்...” என்றார்.

“என்ன விஷயம்?” என்று கேட்டேன்.

“இன்று இரவு பெருமாள் கோவில் மண்டபத்தில் என் ராமாயண உபந்நியாசம் நடக்கிறது. வால்மீகி ராமாயணம் புத்தகம் இருக்கிறது. அந்த சுலோகங்களை நீதான் இன்று படிக்க வேண்டும். நான் அவற்றுக்கு அர்த்தம் சொல்லி உபந்நியாசம் நிகழ்த்துவேன்” என்றார்.

அவருக்கு வாடிக்கையாக சுலோகங்கள் படிக்கும் பண்டிதருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்குப் பதிலாக என்னைப் படிக்கும்படி அழைத்தார்.

எனக்கு சுலோகங்கள் படிக்கும் அளவுக்குப் புலமையோ ஆற்றலோ கிடையாது. சம்ஸ்கிருதம் சுமாராகத்தான் படிக்கத் தெரியும். அவர் எண்ணுகிற அளவுக்கு வேகமாகவும் அட்சர சுத்தமாகவும் படிக்க முடியுமா என்பது சந்தேகம். நான் தயங்கினேன்

“பயப்படாதே; புத்தகம் தருகிறேன். மத்தியானமே சுலோகங்களை ஒருமுறை படித்து வைத்துக் கொள். ராத்திரி தடங்கலில்லாமல் சுலபமாகப் படித்து விடலாம்” என்று தைரியம் கூறினார்.

“சரி” என்று ஒப்புக் கொண்டு விட்டேன், இந்த நேரம் பார்த்துத் தலையை மொட்டை அடித்துக் கொண்டால் விகாரமாயிருக்கும். ராமாயணம் படிக்கிற போது குடுமியோடு படித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே, முடியெடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

ராத்திரி ராமாயணம் படிக்கப் போகிறோம் என்ற பெருமிதத்தில் அன்றெல்லாம் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தேன்.

வேலை வெட்டி இல்லாமல், வெறும் உதவாக்கரையாய், தண்டச் சோற்றுக் கடனாய் ஊர் திரிந்து கொண்டிருக்கிறேன் என்று என் தாயார் அடிக்கடி என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

அம்மாவிடம் நாளைக்கு நாலுபேர் பெருமையாகச் சொல்வார்கள், “உங்க பிள்ளை ராத்திரி ராமாயணம் படிச்சாரு, ரொம்ப நன்றாயிருந்தது” என்று. அதைக் கேட்டு அம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருக்கும்! ஆகையால் ராமாயணம் படிக்கப் போகிற செய்தியை இப்போதே அம்மாவிடம் சொல்லி அந்த ஆச்சரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது. அதை ஒரு சஸ்பென்ஸாக வைத்திருக்க வேண்டும் என்று பேசாமலிருந்து விட்டேன்.

மாலை ஏழு மணிக்குக் குளித்து விபூதிப் பட்டையுடன் சிவப்பழமாகப் பெருமாள் கோவில் மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன். குத்து விளக்கு அருகில் உட்கார்ந்து சிக்குப் பலகை வைத்துக் கொண்டு ராமாயண சுலோகங்களைச் செவ்வனே படித்து முடித்தேன். இடை இடையே சுலோகங்களை வேகமாகப் படிக்க முடியாதபோது ராகத்தை நீட்டி ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டேன். ராமாயணம் கேட்க வந்தவர்கள் என்னைப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள். எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. குடுமி மீது இருந்த கோபம் கூடக் கொஞ்சம் குறைந்தது!

உபந்நியாசம் முடிந்ததும் தட்டில் வெற்றில பாக்கும், தேங்காய் மூடியும் ஒரு ரூபாய் சன்மானமும் வைத்துக் கொடுத்தார்கள்.

அந்தத் தேங்காய் மூடியை அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து விஷயத்தைச் சொன்னபோது அம்மா பூரித்துப் போனாள். “ஏதாவது பணம் கொடுத்தார்களா?”

“ஒரு ரூபாய் கொடுத்தார்கள். நாளை நான் டவுனுக்குப் போகவேண்டும். செலவு இருக்கிறது” என்று சொல்லி விட்டேன். மறுநாள் அம்மா தேங்காயைத் துவையல் செய்திருந்தாள்.

தினமும் அம்மா கையால் சாதம் போட்டாலும் அன்று சமையல் எனக்கு ரொம்ப ருசியாக இருந்தது. காரணம் நான் முதன் முதல் சம்பாதித்த தேங்காய் மூடியில் செய்த சமையல் அல்லவா அது?