பழைய கணக்கு/“பொய் சொல்லாதே!”



“பொய் சொல்லாதே!”

நான் பத்திரிகை உலகிலிருந்து விடுபட்டு, இடையில் ஓராண்டு காலம் குஸ்திச் சண்டையில் ஈடுபட்டிருந்தேன். நானே குஸ்தி போடுவதில்லை. போடுபவர்களைக் கூட்டி வைத்துப் போட்டி நடத்தும் வேலையைத்தான் செய்து வந்தேன். அப்போதெல்லாம் மல்யுத்தம் என்று சொன்னலே உடனடியாக ஞாபகத்துக்கு வரும் பெயர்கள் கிங்காங்—தாராசிங்தான். இருவரும் எந்த மேடையில் மோதிக் கொண்டாலும் அங்கே ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடி விடுவார்கள்.

கோயம்புத்தூரில் இந்த குஸ்தி நடக்கும்போது தமிழில் நேர்முக வர்ணனை செய்வது என் வேலை. அப்போதெல்லாம் நடு நடுவே ஏதேனும் ஜோக் அடித்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பேன்.

ஒருநாள், கிங்காங் கம்பீரமாக மேடை மீது ஏறி வந்தபோது “இதோ வருகிறது பாருங்கள் மாமிச பர்வதம்! நானுாறு பவுண்டு எடை” என்று நான் கமெண்ட் அடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள். அதைக் கேட்டதும் கிங்காங்கிற்குக் கோபம் வந்துவிட்டது. உடனே மேடையின் ஓரத்துக்கு வந்து கயிற்றின் மீது சாய்ந்து அங்கே ஓரத்தில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து, “பொய் சொல்லாதே; நான் நானூறு பவுண்ட் அல்ல” என்று சத்தம் போட்டார். பிறகு சில வினாடிகள் சஸ்பென்ஸ் கொடுத்து, "“நான் 396 பவுண்டுதான். நீ அதைத் திருத்திச் சொல்” என்று என்னை மிரட்டினார். அதாவது தன் எடையை அவ்வளவு கரெக்டாகச் சொல்ல வேண்டுமாம். உண்மையில் அவர் எடை 396 பவுண்ட்தான் என்பது கூடச் சந்தேகம்தான்!

ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே தாரா சிங்கிற்குத்தான் அதிகம். அவர் நம் நாட்டவர் என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. கிங்காங்குக்குச் சரிநிகர் சமானமாய் சமர் செய்யத் தக்க மல்யுத்த வீரராக விளங்கியவர் அவர் ஒருவர்தான். தாரா சிங் இல்லாமல் கிங்காங் வேறு யாருடன் சண்டை போட்டாலும் அந்த நிகழ்ச்சி அவ்வளவாக எடுபடுவதில்லை.

கோவையில் மல்யுத்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போதெல்லாம் லலிதா பத்மினி சகோதரிகள் தவறாமல் வந்து விடுவார்கள். எனது வர்ணனையை ரசித்து மகிழ்ந்து கை தட்டுவார்கள். நான் ஜோக் சொல்லிவிட்டு அவர்களைப் பார்ப்பேன். அவர்களில் யாராவது ஒருவர் சிரித்தாலும்கூட எனக்குக் குஷி பிறந்து விடும். உடனே மேலும் மேலும் ஜோக் அடிப்பேன்!

போட்டியின் நடுவில் கிங்காங் அவ்வப்போது ‘ஃபௌல் கேம்’ ஆடுவதுண்டு. அது அவரது வழக்கம். ரசிகர்களுக்குக் கோபம் வந்தால் கையில் கிடைத்ததை எடுத்து கிங்காங் மீது வீசித் தங்கள் எதிர்ப்பையும் கோபத்தையும் தெரிவிப்பார்கள்.

ஒரு நாள் கிங்காங் அப்படித்தான் தாரா சிங்கின் தலை மயிரைப் பிடித்து இழுக்கவே, ரசிகர்கள் கூச்சலிட்டுக் கையில் கிடைத்ததை எடுத்து மேடைமீது வீசினார்கள். அந்த அளவுக்குக் கோபத்தைத் தூண்டி விட்டார். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த பத்திரிகை நிருபர்களில் நவ இந்தியா நிருபர் ராமசாமியும் ஒருவர். ஒல்லியான உடல்வாகு. அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் போனார். கிங்காங் தவறாக ஆடியதும் அவர் தம்மை மறந்து தம் காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து கிங்காங் மீது குறி பார்த்து வீசினார், ஆனால் அது கிங்காங் மீது விழாமல் சற்றுத் தள்ளிப் போய் விழுந்தது. இவ்வளவு கலாட்டாக்களுக்கும் இடையே கிங்காங் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

ஒரு வழியாக அமளி அடங்கிப் போட்டி நடைபெற்று முடிந்ததும் அனைவரும் கலந்து செல்ல ஆரம்பித்தார்கள். நிருபர் ராமசாமி மட்டும் தன்னிடம் மிஞ்சியுள்ள ஒரு செருப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சற்றுநேரம் விழித்துவிட்டுச் செருப்பு இல்லாமலே வெறுங்காலுடன் வெளியே நடந்து போனார்.

அதைக் கவனித்துக் கொண்டிருந்த கிங்காங் தமது கர்ஜனைக் குரலில் அவரை அருகில் அழைத்தார். கிங்காங்கின் அதிகாரக் குரல் கேட்டதும் ராமசாமிக்கு சப்தநாடியும் அடங்கிப் போய் விட்டது. “நியூஸ் எடுக்க வந்த இடத்தில் நாமே நியூஸாகப் போகிறோம்” என்று நடுங்கியபடியே கிங்காங் அருகே சென்றார்.

“ஒரு செருப்பை என் மீது வீசி விட்டு இன்னொரு செருப்பை உபயோகிக்க முடியாமல் இங்கேயே விட்டுச் செல்கிறாயே, ஏன்? பயமா? இந்தா, உன்னுடைய செருப்பு. போட்டுக் கொண்டு போ...இது ஒரு விளையாட்டுதான். ஸ்போர்ட்ஸ்! இதிலெல்லாம் உணர்ச்சி வசப்படக் கூடாது” என்று சொல்லிச் செருப்பை அவரிடம் கொடுத்து அனுப்பினார் கிங்காங்.