பவழபஸ்பம்/முன்னுரை
முன்னுரை
சர் சண்முகம் அவர்கள் இதுபோது வகித்து வரும் 'பதவி'யினின்றும் விலக இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அந்தச் செய்தியுடன், பலர் தமது 'ஆசை'யையும் இணைத்துப் பார்க்கிறார்கள். அதாவது பதவியை விட்டுவிட்டு சர் சண்முகம், தமிழருக்குத் தலைமை தாங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல். அவ்வித ஆவல் கொண்டவர்களில் நானும் ஒருவன்.
முன்னமோர் முறை இதுபோன்ற சமயம் இருந்தது. அவர் கொச்சி அரச சேவையினின்றும் விலகியபோது. இன்றுபோல் அன்றும் எனக்கு ஆவலிருந்தது. அதனைச் சில கட்டுரைகளாக்கி 'திராவிடநாடு' இதழில் வெளியிட்டேன். பலர் என் நோக்கம், சர் சண்முகத்தைக் குறை கூறுவது என்று எண்ணினர். சிலரால் மட்டுமே, என் உண்மை நோக்கம், அவரைத் தமிழருக்குப் பணி புரிய அழைக்கும் ஆவல் என்று உணர முடிந்தது.
அந்தக் கட்டுரைகளை, திருச்சி 'திராவிடப்பண்ணை', அன்று இருந்தது போலவே உள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் தொகுத்து வெளியிட முன் வந்தனர். என் மகிழ்ச்சியும் நன்றியும் அவர்கட்கு.
அன்பர்கட்கு ஒரு வார்த்தை. வர்ணாஸ்ரமம் என்ற மிகப் பெரிய கேட்டினைக் களைந்தாக வேண்டிய பெரிய, பாரமான, ஆபத்தளிக்கக் கூடிய, பொறுப்பு நமக்கு இன்று இருக்கிறது. வர்ணாஸ்ரமத்தின் கோர விளைவுகளை நாம் நன்கு புரிந்துகொள்ளும்படி, நமது தலைவர் பெரியார், நமக்குப் பேருதவி செய்துள்ளார். அவருடன் துணை நின்று, வர்ணாஸ்ரமத்தைத் தாக்கித் தகர்க்க வீரர்கள் தேவை. சர் சண்முகத்தை, இத்தகு வீரப்படைக்குத் தலைமை தாங்கி நடாத்திச் செல்லுமாறு நான்—உங்கள் சார்பில்—அனுப்பும் அன்பழைப்புதான் இது. பல காலமாக அவரை, எங்கெங்கோ 'இரவல்' கொடுத்தோம். இனியும், நமக்கும் அவருக்கும் அந்நிலையேதானா! தமிழகம் தன் வீரப்புதல்வனை, உரிமையுடன் கூவி அழைக்கிறது, "மகனே! மாநிலமெங்கும் உரிமைப் போர் நடக்கிறது.நானோ அரசியல், பொருளியல், சமுதாய மத இயல் சகலவற்றிலும் அடிமைப்பட்டுத் தவிக்கிறேன். நீயோ, யாராருக்கோ சென்று 'சேவை' செய்கிறாய். வீடு திரும்பி வா! பெற்றவளைப் பார்! அவளுக்குற்ற துயர் நீக்கு!" என்று கூறுகிறது. இந் நூலின் கருத்து இதுவே.
15—6—1947
சி. என். அண்ணாதுரை