பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்

வர்ணாஸ்ரமம்


I

"பாகனே! தேரை விரைவாகச் செலுத்து.

"நற்றிறம் வாய்ந்த பாகனே! தேர் விரைந்து செல்வதாக!"

"விரைந்து செல்லவேண்டும். அங்குதான்! அறியாயோ நீ? கேள்!"

"பைங்கிளியே! மழலை பல பேசவல்லாய் எனினும், நான் கேட்டுக் களித்திட ஒரே ஒரு சொல் கூறு; வேறு வேண்டிலேன். அவர் இன்று வருவார் என்றுரை. நம்மைப் பிரிந்து சென்றவர், இன்று வருவார் எனும் இன்சொல்லை, கிளியே, நீ கூறு' என்று தன் முன்கையில் அமர்ந்துள்ள தத்தையினைக் கேட்கும், என் கிளிமொழியாளின் இல்லத்திற்குச் சென்றாக வேண்டும், விரைவாக! நொந்த மனத்துடன் வெண்மதிநுதல் சுருங்க, கிள்ளையுடன் பேசும் சொல்லினை வீட்டார் கேட்டிடுவரோ; என்று பயந்து, நாணி உரையாடுவாள் அந்நங்கை, தன் அங்கையில் கிளி ஏந்தி! அவள் துயர் துடைக்க, நாணம் நீக்க நான் செல்ல வேண்டும். நற்றிறம் படைத்த பாகனே! செலுத்துக தேரினை விரைந்து!! சிவந்த மாலையை யணிந்தது போன்ற கழுத்தினையுடைய, அந்தப் பச்சைக் கிளி, பலப்பல பேசவல்லதுதான். எனினும் ஒரே ஒரு சொல் நீ உரைப்பாய், 'இன்று வரல் உரைமோ' என்று மட்டுமே கேட்கிறாள், என் மனத்தைக் கோயில் கொண்டாள்! என் செய்வாள் ஏந்திழை? இல்லத்துள்ளோர் அறிந்திடுவாரோ என்ற அச்சம்; அஞ்சுகத்தினிடம் அதிகம் பேச நேரமில்லை. நினைப்போ என் மாட்டுளது. அந்த நேரிழையாளின் மனை செல்ல; விரைவாகத் தேரை நீ செலுத்து! உனக்குத்தான் திறமை உண்டே! பாகா! செலுத்து! அந்த மனையின் கண்ணே, அக மகிழ்வுடன் அன்னங்கள் விளையாடுகின்றன; பெடையும் ஆணும், பெருமிதத்தோடு ஆடுகின்றன. தூய்மையான சிறகு, அந்த அன்னங்கட்கு, வெண்மை, அழகான வெண்மை நிறச் சிறகுகள். பெரிய தோள்களையும் மெல்லிய விரல்களையும் உடைய, ஆடை ஒலிப்பவள், நீர்த்துறையிலே, ஆடையிலே தோய்ந்துள்ள கஞ்சிப் பசையினை அலசிவிடுவது கண்டுள்ளாயன்றோ! அதுபோன்ற நிறம், அன்னங்களின் சிறகுக்கு!! அவை ஆணோடு பெண் அளவளாவி, அகமகிழ்கின்றன! காதல் இன்பத்தை அவை நுகரக்கண்டு, என் அன்னம் பச்சைக்கிளியுடன் பேசுகிறாள். பாகனே! செலுத்துக தேரை விரைவில்! என் நெஞ்சமோ நோகிறது! காதலின் மேம்பாட்டை, காதலின் பெருங் குணத்தை நான் கண்டேன் ஈண்டு. என் இச்சைக்கிளியாளைப் பச்சைக் கிளியுடன் பேசி ஏங்கிட விட்டுப் பாவியேன், பரிதவித்தேன். தெளிந்த நீர் தழுவிச் செல்லும் மணற்கரையிலே, பெண் மான் படுத்துறங்கக், கனிவுடன் காவல் புரியும் ஆண்மானைக் கண்டேன். அதன் பெருந்தன்மையினைக் கண்டு எனது நெஞ்சம் தளர்ந்துளது. அறுகு அருந்தச் செய்து, அருவியோரத்தில் அழகுறத் தூங்கச் செய்து, ஆண்மான், துயிலும் தன் பெண் மானுக்குத் துணைநிற்பது கண்டேன்; துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது; என் துடியிடையாளை நான் தனியே தவிக்கவிட்டேன். அவள் தத்தையைக் கேட்கிறாள், 'இன்று அவர் வருவாரோ, கூறு' என்று. அந்த மனைக்கு விரைந்து சென்று, அவள் துயர் தீர்த்துத், தளர்ந்த என் நெஞ்சம் இன்பம் பெறச் செய்யவேண்டும். வேகமாகத் தேர் செலுத்தும் திறமையுடைய பாகனே! தேரை, விரைந்து செலுத்து!!"

வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குரைத்தது, நான் மேலே தீட்டியிருப்பது. மதுரை மருதன் இளநாகனார் எனும் புலவர் பெருமானின் மணிமொழியினை, கொழித்தெடுத்துக் கோத்தேன், சிறு சொல்லாரம்.

தலைவியைப் பிரித்து, தலைவன் சென்றான். தத்தளித்தாள் தளிர்மேனியாள். தத்தையிடம் பேசித் தவித்துக்கிடந்தாள். சென்றவிடம் சிறப்புப்பெற்று, தேரிலே மீள்கிறான் தலைவன். மானினத்தினிடம் காதற் பாடம் காண்கிறான்; மங்கை நல்லாளை எண்ணி ஏங்குகிறான்; அவள் மனையிலேயும், அன்னங்கள் காதற் களியாட்டத்திலே ஈடுபட்டு உலவுமே என்பதை எண்ணினான், நாணமுடைய நங்கை, நெஞ்சிலேயுளதை வீட்டார் அறியக்கூடாதே என்று எண்ணி அஞ்சிப், பிரிந்துபோன தலைவன்,வருவார்! இன்று வருவார்!! என்ற இன்சொலை எவரேனும் பேசிடக் கேட்டால் புண்ணாறும் என்று கருதிப், பேசிட ஓர் பைங்கிளியை எடுத்துத் தன் அங்கையில் ஏந்தி, பல பேசிச் சல சலப்புண்டாக்கி மனையுளோருக்குத் தன்னைக் கிளி காட்டிக் கொடுத்துவிடுமோ என்று அஞ்சி, 'கிளியே! அவர் இன்று வருவார் என்ற சொல்மட்டுமே உரைத்திடு', என்று கேட்பாள், எனத் தலைவன் எண்ணி, வேகமாகத் தேரைச் செலுத்து, என்று தேர்ப்பாகனுக்குக் கூறுகிறான். அவனை ஊக்குவிக்கக் கருதிப்போலும், நற்றிறம்படைத்த பாகனே' என்றும் அவனைப் புகழ்கிறான். காதற் பாதையைக் கவி இளநாகனார் கன்னித் தமிழிலே, கவிதையாக்கிக் கூறியுள்ளார், அகநானூறு எனும் அருந்தமிழ் நூலிலே!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே, பட்டமளிப்பு விழாவிலே, அண்ணல் சர் சண்முகம் ஆற்றிய, அழகிய, அரிய, சொற்பொழிவினைப் படித்ததும் எனக்கு இந்தச் செந்தமிழ்ச் செய்யுள் நினைவிலே நர்த்தனமாடிற்று.

"பரதா! சர் சண்முகத்தின் வீரவுரை படித்த உனக்கு விரகதாபச்செய்யுள் நினைவிற்கு வருவானேன்! தமிழ்க் கலையின் உயர்வு பற்றி, சேர நாட்டாட்சியினைச் சில ஆண்டுகள் நடாத்திய சண்முகம் செப்பினாரே, இதுபற்றி, ஏடு விரித்து எடுத்தாயோ இன்சுவையை," என்று கேட்பீர்கள். இல்லை தோழர்களே! கன்னித் தமிழின் கருவூலத்தைத் தேடியல்ல, நான் அக்கவிதையைக் கண்டது. என் நெஞ்சத்திரை முன்னே, இரு காட்சிகள் ஒரே சமயத்திலே நின்றன. ஒன்று சர் சண்முகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே, அறிவாளிகள் சுவைக்க, மாணவர் மகிழக் கம்பீரமாக நின்று, சொற்பெருக்காற்றிய காட்சி; மற்றொன்று, தேரிலே தலைவன், அவன் உரைகேட்கும் பாகன், வரவு நோக்கி வாடிடும் தலைவி, எனும் காட்சி; இரண்டும் நின்றன!

"தேறியோருக்குத் தெளிவுரையாற்றும், சர் சண்முகத்தையும், தேரிலே அமர்ந்து பாகனை விரைந்து செலுத்தச் சொன்ன தலைவனையும், ஒருங்கே கண்டது ஏன்?" என்பீர். கண்டேன், இதோ உம்மிடம் விண்டிடுவேன்; காரணம் சரியா, என்பதனை முடிவுசெய்யும் கடமை, எனதன்று, உமதே!

சர் சண்முகம், தென்னாட்டுத்தாகூர், இந்தியாவின் கிளாட்ஸ்டன், என்று புகழ இழிமனமற்ற எவரும் தயங்கார்! அவருடைய அரசியல் அறிவும், தரணியறிந்த தன்மையும், தளராத்திறனும், நிர்வாக நேர்மையும், எவருமறிவர்! திராவிடமணி—மாசு இல்லை! தமிழகத்தின் நிலவு—வளர்பிறை! உன்னதமான ஊற்று, அவருடைய ஆற்றல்! ஆம்! சர் சண்முகம், ஏடெடுப்போரின் மொழிமாலையைச் சூடிட வேண்டிய பருவத்தைக் கடந்து விட்ட காவலர். கொங்கு புகழ் கோமான் மட்டுமல்ல, மங்காப்புகழைத் தமிழ் மாநிலமும், அதை அடுத்த தரணிபலவும் பரப்பி அரச அவையிலும், அறிஞர் சபையிலும், களத்திலும் கொலுமண்டபத்திலும், எங்கும் புகழ்பெற்று விளங்கும் ஆற்றலரசர். ஆயினும், அவரைத் தென்னாட்டுத்தாகூர் என்று கூறேன்! ஏன் கூறல் வேண்டும்? இவர், எந்நாட்டுவீரர், தமிழகத்தின் தளபதி. தாகூருக்கு வங்கத்திலே, பங்கம் விளைவிக்கக் கொடுங்கையில் வஞ்சனை வாளேந்தினார் எவருமில்லை! தாகூரின் நாத நடையினைக் கண்டதும், சங்கை கொண்டோர், வங்கத்திலே இல்லை! அவர்மொழி, வங்க மக்கள் எவரின் விழியிலும் களிப்புத் துளி எழச் செய்ததேயன்றி, காய்ச்சலும் குளறலும், எழச் செய்யவில்லை. வங்கம் தாகூரை, உச்சிமோந்து முத்தமிட்டு, வாரி அணைத்து வாஞ்சனையுடன் கொஞ்சிற்று. இங்கோ? எவ்வளவு எதிர்ப்பு, எத்துணை வஞ்சனை, எவ்விதமான சதிகள்! பழி எத்துணை, பதைப்பு எவ்வளவு! சிங்கமென முழக்கமிட்ட சண்முகத்தைச் சீறிக் கடிக்கச்சென்ற செந்நாய்க் கூட்டமும், பாய்ந்து பிடுங்கச் சென்ற ஓநாய்களும், நகைமுகங்காட்டி பகைச் செயல்புரிந்த நரிக்கூட்டமும், கொஞ்சமா? வங்கம், தாகூரை உயர்த்திடக் கண்டோம் தமிழகத்திலோ, சர் சண்முகத்தைச், சாணக்கியர்களும் குடிலர்களும் சாய்த்திட ஜல்லடம் கட்டியதையும், சரங்கள் பல தொடுத்ததையும் கண்டோம். வங்கத்தின் அணைப்பிலே, கவி தாகூர் வளர்ந்தார்! தமிழகத்திலே தருக்கரின் எதிர்ப்பிலே, தழைத்தது கொங்குநாட்டு வேங்கை! தாகூர், மாசு மருவற்ற வானத்திலே உலவிய முழுமதி; சர் சண்முகம், முகிலைக் கிழித்தெறிந்த முழுமதி! இத்தமிழரைக், கவியுடன் ஒப்பிட நான் ஒப்பேன்!

கண்டனங்கள் எழுதி அலுத்த கரங்களும், கேலிப்படங்கள் வரைந்து அலுத்த பேனாமுனைகளும், சபித்துச்சலித்துப்போன திருவாய்களும், கனல்கக்கிக் கருகிப்போன விழிகளும், சுருக்குக்கயிறு வீசிச்சோர்ந்துபோன வலைவீசிகளும், படுகுழிவெட்டி ஆயாசமடைந்த அரசியல் வெட்டியான்களும் இன்று, சர் சண்முகம் அறிஞர் உலகிலே அரசு ஓச்சக்கண்டு, அயர்கின்றனர். ஒருகாலத்திலோ! ஏ, அப்பா! எவ்வளவு கேலி கிண்டல், என்னென்ன வசவுகள்! இவ்வளவுக்குமிடையே பூத்தமலர், அதனை, வளமிகுந்த வங்கத்திலே வாஞ்சனை எனும்நீர் பெய்து வளர்த்த தாகூரெனும் தமிழர்; பண்டைத்தமிழரை, தமிழ்வீரரை, நினைவூட்டும் தமிழர். வேறு உவமைகள் ஏன்?

அவன் அன்று ஆற்றிய அறிவுரை, அகநானூற்று கவியை, எனக்கு நினைப்பூட்டுவானேன், என்று மீண்டும் கேட்பீர். நான் கூறுமுன்னர், நீவிர் சற்று எண்ணிப்பாருமின்.

இந்தத் திங்கள், பல்வேறு இடங்களிலே பட்டமளிப்பு விழாச்சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளன. டாக்டர் ஜெயகர், பேராசிரியர் ஜா, பண்டித குன்சுரு முதலிய அறிஞர் பலர், வடநாட்டிலே, பட்டமளிப்பு விழாச் சொற்பெருக்காற்றினார்கள். படிப்பிலும் பாராளுந் திறனிலும், மேலானவர்களான இம்மேதாவிகள், தேசிய சர்க்காரின் அவசியத்தைப் பற்றியே பெரிதும் வலியுறுத்திப் பேசினர். தேசீயம், ஏன் இங்கு சரியான முறையிலே கமழவில்லை என்ற ஆராய்ச்சியிலேயோ அவர்கள் புகவில்லை. ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பது எளிது; கண்டிக்கவேண்டிய அளவு கசப்பு வளர்ந்துவிட்டதை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் கண்டனத்தோடு நின்றுவிடாமல், நோய் போக எம்மருந்து உட்கொள்வதென்றுரைக்கும் நேர்மையும் நெஞ்சழுத்தமும், அந்தப் படிப்பாளிகட்கு இல்லையோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது. சர் சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சாடினார், சர்ச்சிலுக்குச் சூடெழ, அமெரிக்காவுக்கு அழுகை கிளம்பக் கூடிய விதத்திலே! "தன்மானம் உண்டு எனக்கு! எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலே நமக்கிருக்கும் அந்தஸ்துக் குறித்து மகிழ முடியாது. நான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் புகழ்பாட முடியாது. எந்த ஆப்பிரிக்க மண்ணிலே என் இனத்தவரின் இரத்தம், போரிலே சிந்தப்படுகிறதோ, அதே ஆப்பிரிக்காவிலேயே அவர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டும், பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்துக்கு லாலி பாட மனம்வருமோ! மனம் முறிந்துவிட்டது அன்பர்களே!" என்று சர் சண்முகம் கூறியிருப்பது கேட்டு, அறிவும் தன்மானமும் உள்ள எவர்தான், 'சபாஷ்!' என்று கூறார்? ஆனால், இந்தப் பகுதி எனக்குப் புளகாங்கித மூட்டவில்லை. ஏனெனில், கண்ணியத்துடனும் காரணத்துடனும், கம்பீரமாகச் சர் சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போக்கைக் கண்டித்தார். ஆனால், இதனினும் கடுமையாகவும், நரகல் நாடையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போக்கைக் கண்டிக்கத் தேசியத் திருக்கூட்டத்திலே பலருண்டு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சின்னாபின்னமாக்குவேன் என்று சினந்து சூள் உரைத்தோரையும், அதன் பிடரியைப் பிடித்துக் குலுக்குவேன் என்று முழக்கமிட்டோரையும் நாடு கண்டிருக்கிறது. எனக்குத் தெரிய, ஒரு தேசீயப் பிரசங்கியார் (இன்று அவர் இந்து மகாசபை வீரராக வேடமெடுத்துள்ளார்) ஒருமுறை பிரிட்டனைக் கண்டித்துப் பேசுகையிலே கூறினார், "மகாஜனங்களே! பிரிட்டனிலே என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்? வெறும் சுண்ணாம்பும், நிலக்கரியும்! நிலக்கரிக்காகச் சுரங்கங்கள் தோண்டித் தோண்டி, பிரிட்டன் பாழாகிவிட்டது. முப்பதுகோடி இந்தியரும் (அன்றைய ஜனத்தொகை 30 கோடி) சேர்ந்து மூச்சு விட்டால், பிரிட்டன் ஆடிக்காற்றிலே சிக்கிய இலவம் பஞ்செனப் பறந்துபோகும்." இந்த உரைகேட்ட வீரர் குழாம் கைதட்டி ஆரவாரித்ததும், எனக்குத் தெரியும். ஆகவே நான், சர் சண்முகம் அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கண்டித்துப் பேசியதை மாபெரும் வீரம் என்று கூறவில்லை. 1920லே அம்மொழி வீரமாக இருந்திருக்கலாம். இன்றோ! அம்மொழி பழங்கஞ்சி. வீட்டுக்கு வீடு, கலயத்திலே அது உளது! இந்நாட்டுச் சொற்பொழிவாளரின் அரிச்சுவடியே அதுவாக இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியல்ல எனக்கு ஆனந்த மூட்டியது.

நாட்டுவிடுதலை பற்றிப் பேசிடாத தலைவர் இல்லை. ஆனால், அந்த விடுதலை கிட்டாததன் காரணம் என்ன என்று உசாவிடுவோர் வெகு சிலரே. உண்மை தெரிந்தபின், அதனைத் தைரியமாகக் கூறிடுவோர் அதனினும் மிகச்சிலரே. உரைத்ததோடு அமையாமல், உறுதியுடன் நின்று பணிபுரிவோர் அதனினும் மிகமிகச் சிலரே. அன்னிய நாட்டினரை மிரட்டவோ, மயக்கவோ, இங்கு ஆட்கள் அனேகர். ஆனால் இங்கு விடுதலைக்கு விரோதிகளாக உள்ளவர்களை "சற்றே விலகு" என்று கூறும் ஆண்மையாளர் மிகக் குறைவு.

சர் சண்முகத்தின் பேருரையிலே, ஆண்மை ததும்புகிறது; அதனைக் கண்டே நான் களிப்படைகிறேன்.

"நம்மை ஆளும் அயல்நாட்டாரின் வாக்குறுதிகளினாலோ, நல்ல எண்ணத்தினாலோ, நாட்டு விடுதலை கிடைத்துவிடுமா? கிடைத்து விடாது?!"

என்று கூறுகிறார் சர் சண்முகம். சுதந்திரம் சீமையிலே தயாரிக்கப்படும் சரக்கல்ல, சன்மானமாகப்பெற! அது, நாட்டு மக்களின் நாடி முறுக்கினால் விளையக்கூடிய நிலை. அதனை இங்கேயே தான் பயிரிடமுடியும். ஆனால், அந்த வயலிலே, கள்ளி படர்ந்திருக்கிறது. அதனைக் களையா முன்னம், பயிர் இல்லை, பண்பு இல்லை. இதனை சர் சண்முகம் அஞ்சா நெஞ்சுடன் அறைவது கேண்மின்.

"இந்நாட்டிலே, அதிர்ப்தியும் துவேஷமும் அதிகரித்துளது. இது வருந்தத்தக்கது. ஆனால், இதற்குக் காரணம் என்ன? இங்கு ஒரு கூட்டம், தனது நோக்கமும் கலையுமே பிரதானமென்று கூறி, மற்ற மக்கள் மீது அவைகளைத் திணித்தது. அதன் பலனாகவே கேடு பல தோன்றின. தேசீயத்தின் பெயரால் அக்கூட்டம், மற்றவர்களை அடக்கித் தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்த முயற்சிக்கிறது."
இந்தப் பொன்பொழியை ஆராய்ந்து பாருங்கள். இந்த உபகண்டத்தின் வரலாறுகளிலே புதைந்து கிடக்கும் உண்மைகளை உணருங்கள். அந்த ஒரு கூட்டத்தின் செருக்கு எவ்வளவு! அது அழித்த அரசுகள் எத்தனை? அதன் வயப்பட்டு அழிந்த வீரர்கள் எவ்வளவு! இறுமாப்புடன், அக்கூட்டம், தனது "தாசராக" மற்றவரை மாற்றிய கொடுமையை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் அறிஞர் சண்முகத்தின் அறவுரையின் அழகு புலனாகும். இதோ வெளிப்படையாகவே வீரர் சண்முகம் விளம்புகிறார் கேளுங்கள்.
"இந்தியாவிலே வர்ணாசிரமம் ஏற்பட்டதனால், ஆளும் ஜாதி தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு ஏகபோக உரிமையாக அந்த அதிகாரத்தை அனுபவித்து வருகிறது. இந்த வகுப்பு, தனது ஏக போக உரிமையையும் பேராசையையும் எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரமாகக் கைவிடுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு துரிதமாக இந்தியாவுக்குச் சுதந்தரமும் ஜனநாயகமும் ஏற்படும்."

விடுதலை வீரர்களே! ஆசிரம அரசியலிலே அர்ச்சகராக உள்ள அருமைத் தோழர்களே! ஆகாத திட்டத்தைச் சுமந்துகொண்டு ஆமை வேகத்திலே செல்லும் அந்தணரின் அடிவருடிகளே! நாட்டை மீட்டிட நானா விதமான முயற்சிகள் செய்தீர், அலுத்தீர், முடக்குவாத நோயால் வாடுகிறீர். இதுகாறும் செய்த பலமுயற்சி, வெற்றி தரக்காணோம். வீணருக்கு அரசியலிலே உறைவிடமும், சுயநலமிகளுக்குச் சமுதாயத்திலே புகலிடமும் தரவே, உமது தொண்டு பயன்பட்டது. இதோ எமது தலைவர் இயம்பிடும் திட்டத்தைப்பற்றி யோசியுங்கள். விடுதலைப் பாதையை அடைத்துக்கொண்டுள்ள மமதையாளர்களை, மட்டந்தட்ட முன்வாருங்கள். பாருங்கள் பிறகு, பரிதிபோல் விடுதலை தோன்றிடக் காண்பீர். சர் சண்முகம் ஏகபோக மிராசு பாத்யதை அனுபவிக்கும் கூட்டத்திற்கு நன்னெறி புகல்கிறார். பேராசையை ஒழிமின்! எல்லாம் எமக்கே எனும் இறுமாப்பை, நீக்குமின்! என்று இதோபதேசம் புரிகிறார். காடியிலே பன்னீர் தெளித்துப் பயனென்ன என்பீர். ஆம்! இதோபதேசத்தோடு நின்றுவிடவில்லை, இளங்கோ மன்றத்திலே இருந்தாண்ட வீரர். தாங்களாகப் பேராசையை விடவில்லையானால், என்ன நேரிடும்? இந்த நிலை இப்படியே, என்றென்றும் நீடித்திருக்கும் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். ஜனநாயக வேகம் இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை ஒழித்துவிடும் என்ற உண்மையை உரைத்திருக்கிறார். ஆம்! இது சரிதங்கண்ட உண்மை. கிரேக்கநாட்டு ஹெலாட்களைப் (Helot) பலகாலம் அடக்கி வைத்திருந்த ஆண்டக் கூட்டம் (Masters) அழிந்து போனது சரிதம்! ரோம்நாட்டு பிளபியன் (Plebian), பெட்ரீஷியன் (Patrician) தகராற்றின் முடிவு என்ன?? ஆதிக்கம் செலுத்திய கூட்டம் அநிழிக்கப்பட்டுவிட்டது. பிரிட்டனிலே காமன்ஸ் (Commons) பிரபுக்கள் (Lords) தகராற்றின் முடிவு என்ன? பிரபுக்கள் பெட்டிப்பாம்பு ஆனதுதானே! ஆண்டவனால் ஆளப் பிறப்பிக்கப்பட்டவன் என்று ஆணவமாகப் பேசி (Divine Right of Kings) கடவுட் புதல்வர்கள் என்ற தத்துவத்தைப் பேசிய, முதலாம் சார்லஸ் மன்னனின் முடியும் முடி தரித்த சிரமும், என்ன ஆயிற்று ரஷிய நாட்டிலே? முதலாளி (பூர்ஷுவா) தொழிலாளி (புரோலோடேரியன்) போர் மூண்டதன் பலன் என்ன? இங்குமட்டும் என்ன? ஆரிய திராவிடப்போர் மூண்டுவிட்டது. சரிதமுணர்ந்தோரின் உள்ளத்திலே, இதன் முடிவு என்னவாக இருக்கும், என்று தெரியும்! குடிலர்கள் கெடுவர்!! சழக்கர் சாய்வர்! இத்தகைய வீர உரையாற்றிய சர் சண்முகத்தைப் பாராட்டுவதோடு நின்றுவிடக்கூடாது. எந்த ஏகபோகமிராசு ஒழிக்கப்படவேண்டும் என்று சர் சண்முகம் கூறினாரோ. எந்த வர்ணாஸ்ரமம் ஒழிய வேண்டும் என்று அவர் கூறினாரோ, அதனை ஒழிக்க மாணவர்கள் முயலவேண்டும். முனைய வேண்டும். இல்லையேல் அவர் மொழி கேட்டு யாது பயன்?

"எல்லாம் சரி, பரதா! நாங்களும் சர் சண்முகத்தின் பேருரை கேட்டுப் பூரித்தோம். ஆதிக்கம் செலுத்தும் இனம் பிரமித்தது. ஆனால் அவருடைய சொற்பொழிவுக்கும், உனக்கு அகநானூற்றுச் செய்யுள் நினைவிற்கு வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியக்காணோமே" என்றே அன்பர்கள் கேட்பர்.

தோழர்களே! சர் சண்முகம் தமது சொற்பொழிவின் இறுதியிலே, (வர்ணாசிரமம் ஒழிய வேண்டும்! ஒரு இன ஆதிக்கம் அழியவேண்டும்! ஏகபோக உரிமை மடியவேண்டும்! பேராசைப் பித்தம் போகவேண்டும்!) என்று முழக்க மிட்டாரே, அந்தப் பகுதி, என் செவிக்கு. 'தேரை விரைவாகச் செலுத்துவாய் பாகனே!' என்று தலைவன் கூறும் செய்யுள் போன்றிருந்தது. சர் சண்முகம், வர்ணாசிரம ஒழிப்புக்காகவே வாழும் கட்சியை விட்டுப்பிரிந்து, வேறுவினையில் ஈடுபட்டு, நெடுநாட்கள் பிரிந்திருந்தார். அவர் பிரிய நேரிட்டதால் திராவிடக் கட்சி தவித்துக் கிடக்கிறது. காவல் மிகுந்த மனையிலே கன்னி நிற்பதுபோல், வினை முற்றிய தலைவன், விரைந்து சென்று தலைவியின் துயர்தீர்த்தல்போல சர் சண்முகம், தன் நெஞ்சமெனும் பாகனுக்குத் தேரை விரைந்து செலுத்து எனக் கூறுமாறு வேண்டுகிறோம். துயிலும் பெண்மானருகே ஆண்மான் நின்று காவல்புரிவதுபோல, ஆரியரிலே தலைவர்கள். ஆரிய இனத்தைத் தமிழ்ப் பண்ணையிலே மேயவிட்டுத் தமிழ் வளம் நீர்பெருகச் செய்து, உல்லாச வாழ்வு எனும் வெண்மணலிலே படுத்துறங்கச் செய்து, காவல்புரிவதை சர் சண்முகம் காணவில்லையா! சங்கராச்சாரி கோலத்திலும் சரி, சர்க்கார் நிர்வாகி எனும் கோலத்திலும் சரியே, ஆரிய இனத்தலைவர்கள் ஆரிய இனத்தின் சுகமொன்றே குறிக்கோளாகக் கொண்டு உழைப்பது, சர் சண்முகத்துக்குத் தெரியாதா? மானினம் காதல் மேம்பாட்டைத் தலைவனுக் குரைப்பது போல இக்காட்சிகள். சர் சண்முகத்துக்குத் திராவிட இனத்திடம் அவர் காட்டவேண்டிய அன்பின் பெருக்கை உணர்த்தவில்லையா! ஆமெனில், தேரை விரைவாகச் செலுத்துக, என்றுரைக்கத்தானே வேண்டும்.

திராவிடமணியை, பண்டைப் பெருமை வாய்ந்த டில்லியில் ஜொலித்திடவும்; சேரநன்னாட்டிலே ஒளிவிடவும், இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான், வேறு எவரெவருக்கோ, "இரவல்" தந்தவண்ணமிருப்பது? திராவிடச் செல்வத்தை ஒமானுக்குப் பலியிட்டோம், அதன் பாழும் பசியடங்க! திராவிடத் திருவிளக்கு (சர் இராமசாமியை) வைசிராய் மாளிகைக்கு ஒளிதர "இரவல்" அளித்துள்ளோம். திராவிடமணி சர் சண்முகம் தேரை விரைவாகச் செலுத்தித் தமது காதலகத்தை நோக்கி வரத் தாமதித்தால், திராவிடத்தைக் கப்பிக்கொண்டுள்ள காரிருள் நீங்கிட வழிகாணோமே என்றே நான் திகைக்கிறேன். எனவே, சர் சண்முகம் எந்த வர்ணாசிரமம் ஒழிந்தால் மட்டுமே. நாடு மீளும் என்று கூறினாரோ, அந்த வர்ணாசிரம ஒழிப்பையே, வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட திராவிடக் கட்சியிலே, இன்றே பங்கு எடுத்துக்கொண்டு பணிபுரிய வேண்டுகிறோம். இன்று அதன் பாரத்தைச் சுமந்து, பெரியார், உடல் தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு, படுத்த வண்ணம், பல எண்ணிச் சிலமட்டுமே வெளியே கூறிச்சோகித்தவண்ணம் இருக்கிறார், வைத்தியர்கள் மருந்தூட்டுகின்றனர். கட்சியோ அவருக்கு நோயூட்டுகிறது. ஓய்வு இல்லை; மனநிம்மதி இல்லை, ஒன்றா இரண்டா அவருக்குள்ள தொல்லை. உண்மையிலேயே, வாலிபமும் வீரமும் அறிவும் ஆற்றலுமிக்க, சர் சண்முகம் போன்றவர்கள், கட்சியிலே பணிபுரியாதிருப்பது கண்டு அவர் மனம் நோகாதா என்று கேட்கிறேன். கிளைகளை ஒடித்தெடுத்துவிட்டால், மரத்திற்திற்குத்தான் என்ன அழகு? ரோஜாவைப் பறித்துக்கொண்டு செடியிலே முள்ளைமட்டும் வைத்திருப்பதுபோலப், பதவியும், சுகவாழ்வும், பலரைப் பறித்துக்கொண்டுபோகச், சுயநலமிகளும் சொல்லம்பரும் ஒரு கட்சியிலே இருந்து பயன் யாது?

சர் சண்முகம், அமெரிக்கா சென்று திரும்பி எவ்வளவு காலமாயிற்று! ஈரோடு மாநாட்டிலே முன்னம், கொச்சித்திவானாக இருந்தகாலை, சர் சண்முகம் வந்திருந்தார். "இன்று நம்மிடை ஓர் விருந்தாள் வந்திருக்கிறார்" என்று பெரியார் உரைத்தார். அதற்குச் சர் சண்முகம் விடுத்த பதிலின்போது, அவர் மனம், முகத்திலே தாண்டவமாடக் கண்டேன்; "வந்திருப்பது விருந்தாளியல்ல, (குடும்பத்து மகன்) வேற்றூர் சென்று வாழுபவன், விழாநாளன்று வீடு வந்திருக்கிறான், குடும்பத்தினருடன் கூடிக்குலவ, களித்து இருக்க, கனிவுடன் பேச"— என்று சர் சண்முகம் கூறினார். அஃதன்றோ தமிழ்ப்பண்பு, அதனை யன்றோ நாம் விரும்புவோம்! ஆனால், அமெரிக்கா சென்று திரும்பிய, பிறகு, இதுவரை(இடையே ஓர் நாள் கன்னிமாரா ஓட்டலிலே பேசினது தவிர) சர் சண்முகம், குடும்பத்தாரைக் கண்டு குசலம் விசாரித்திருக்கக்கூடாதா, கூடிப்பேசிக் குலவிடலாகாவதா, தள்ளாடும்போது கைகொடுத்திருக்கலாகாதா? தன் ஆற்றலெனும் செல்வத்தைத் தந்திருக்கக் கூடாதா? ஏன் அதைச் செய்யத் தவறினார்? பாகப் பிரிவினை ஏற்பட்டு விட்டதா! குடும்பத்தின் உயர்வு தாழ்வு பற்றிக்கருதிடாத உதவா மகனா அவர்! இதுவே, என்னை வாட்டி வதைப்பது. இசைச் செல்வத்தை வளர்த்திடவும், கலைச்செல்வத்தைக் கண்டு களிக்கவும், சர் சண்முகம் ஒயவில்லை. ஆனால் குடும்பத்தையே மறந்தார். எனவே, அவருடைய நெஞ்சமெனும் பாகனுக்கு இனியேனும், தேரை விரைந்து செலுத்து என்று அவர் கூறாரா, என்றோர் ஆவல் என் மனதைப் பிய்த்தது.

II

இலட்சியத்துக்காகவும், அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவி போன்ற கட்சிக்காகவும், சொந்த நலனையும் உயர் பதவியையும் வெறுத்து ஒதுக்கும் வீரமும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் சகிப்புத்தன்மையும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக் கொண்ட கட்சியும் அதனைச் சார்ந்துள்ள மக்களும், முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம். அரண்மனை மாடியிலே அம்சதூளிகா மஞ்சத்திலே அமர்ந்துள்ள அரிவையை அடைய வேண்டி.ஆங்குச் சென்ற ஆணழகன், அகழியின் ஆழத்துக்கோ அதிலே அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சினால், யாங்ஙனம் மங்கையைப் பெறமுடியும்! இலட்சியமெனும் எழிலுடையாளைப் பெற்று இன்புற எண்ணுவோரிற் பலர், அகழிக்கு அஞ்சி, புறத்தே நின்று புகைபடு மனமுடன் போரிட்டுக் கொண்டோ, புலம்பியோ கிடப்பர். ஒரு சிலருக்கே, உழவுக்கேற்ற விளைவு எனும் மொழிவழி நடக்கும் அறிவாற்றலுண்டு. அவர்தமைச் சலிப்பு அண்டாது. சாகசத்துக்கு அவர் பலியாகார். போலியைக் கண்டு ஏமாறார். புல்லரின் புன்மொழி கேட்டுப் புழுங்கார். தாக்கிய வேலினைத் தூக்கி யெறிந்துவிட்டுப், போர்க்குப் புகின் யார்க்கும் இது நேரல் முறையே என்பது தெரிந்து புலியுடன் போரிடுகையிலே, கிலி என்னும் வலி கொளல்கூடாது என்பதறிந்து, உயிர் கெடும்வரை, நெடு வரை போல் நின்று போரிடுவர் வீரர். கட்சிப் பணியும், களத்துப் பணி போன்றே, வீரருக்கு ஏற்றதேயன்றி, விலாவிலே விரக்திப்புழு நடமாடுவோருக்கோ, மனத்திலே சுயநலமெனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறுசெயல் புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தலரிது. கட்சிப் பணிக்கு இத்தகைய கடமையுணர்ந்த காவலர் தேவை. அதிலும், தூங்கிடும் இனத்தைத் தட்டி எழுப்பிடும் பணி, சாமான்யமானதன்று. நான், சர் சண்முகம் அவர்களை இப்பணிபுரிய முன்வரவேண்டு மென்றுதான் அழைக்கிறேன். அரசோச்ச அல்ல! அதற்கு ஆயிரம் ஆட்கள், நான் நீ என்று போட்டியிட்டுக்கொண்டு முன் வருவார் என்பது எனக்குத் தெரியும். பாணரையும் பாடினிகளையும் முன் அனுப்பிப் பரிசும் தந்து, பட்டம் பெற முயலும் பேர்வழிகள் பலருண்டு. மரம் பழுத்தால் வௌவாலை வாவெனக் கூவி அழைப்பானேன்! "போ" வெனத் துரத்தவே, ஆட்கள் வேண்டும். நான், சர் சண்முகத்துக்கு அனுப்பும் அழைப்பு, அரசோச்ச அல்ல— அரசு அமைக்க!! இரண்டுக்கு மிடையே உள்ள வித்தியாசம் பெரிது. நாவாயில் செல்ல அழைப்பதற்கும், நாவாய் கட்டிச் செலுத்துமாறு கூறுவதற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. சர் சண்முகத்தின் ஆற்றல், அரசாள்வதின் மூலமாக விளங்குவது எளிது; ஆனால், அரசு அமைப்பதன் மூலம் அவர் ஆற்றலின் சிகரம் காண்போம்! கரியைக் கொண்டு கரும்பு பறிக்கச் செய்வதா? மலைமரங்களையன்றோ முறித்திடச் செய்யவேண்டும்! வேங்கையை அழைத்து விளாங்கனியை ஒடித்திடச் செய்வதா! சர் சண்முகத்தின் அறிவாற்றலுக்கேற்ற காரியம், அரசாள்வதல்ல, அரசு அமைப்பது! அவர் ஆண்ட கொச்சியிலே, சின்னாட்கள் மிஸ்டர் டிக்சன் எனும் முன்னாள் சேலம் கலெக்டரன்றோ அரசாண்டார்! கொச்சியோ, வேறு எந்த சீமையோ, ஆள்வது, கொங்கு வேங்கையின் வீரதீரத்துக்குச் சரியான வேலை கொடுப்பதாகாது.

மாசிடோனியா (Macedonia) மன்னன் பிலிப், தன் மகனுக்கு, அரணும் அழகும் அமைந்த அரசைத் தந்து சென்றான். மகன், அந்த மண்டல முடி தரித்து மட்டுமே ஆண்டிருப்பின், அவன் புகழ் மங்கியிருக்கும். இங்கும் எங்கும், இன்றும் என்றும், அவன் புகழ் எவரும் படித்து இன்புறுமாறு, அவன் தன் நிலையைச் செய்து கொண்டான்! யாங்ஙனம்? தந்தை தந்த தரணியுடன் அமைந்தானில்லை. "அவன் மகன் இவன்" எனும் சொல் போய், "இவன் தந்தை அவன்" எனும் மொழி தோன்றுமாறு, அவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். அஃது என்னையெனில், பிலிப் தந்த மாசிடோனியோ நாட்டு எல்லையிலே நின்று விடாது, அலெக்சாண்டர், காற்றெனச் சுழன்று களம்பல கண்டு, நாடு பல வென்று, நானிலம் புகழ, இன்றும் வரலாற்றின் மூலம்,வாகையுடன் வாழுகின்றான்.

"பொன் மூட்டையினைக் கழுதையின் முதுகிலே ஏற்றி, அக்கழுதையை அனுப்பினால், அது பிடித்து விடும் ஒரு பட்டினத்தை!" என்றுரைத்தானாம் பிலிப் அதாவது, இலஞ்ச இலாவணம் கொடுத்து எந்த இலங்கையையும் பிடித்துவிடலாம் என்றான்—எங்கும் விபீஷணர் கிடைப்பர் என்ற எண்ணத்தால்! அலெக்சாண்டரோ, பொன்கொண்டு போனானில்லை, போருக்குப் போனான்; புகழொடு திரும்பினாள்; தன் உயிரைப் பணயமாக வைத்து வீர விளையாட்டாடினான், வேந்தர்க்கழகு வேலியாளுதல், வீரர்க்கழகு வேலி கோலுதல் என்ற உரைக்கேற்ப மாசிடோனியாவை மட்டுமே அலெக்சாண்டர் ஆண்டிருப்பின், கிரேக்க நாட்டிலேயோ, அதை ஒட்டிய நாட்டிலேயோ மட்டுமே அவன் பெயரை மாசிடோனிய மன்னருள் ஒருவன் என்ற பட்டியிலே படிப்பர்; உலகு அவனை அறிந்திராது. இன்றோ! உலகு அறியும். உலகில் பலப்பல அழியும், அவன் புகழோ நிலைத்து நிற்கும்! அரசு ஆள்வதற்கும், அரசு அமைப்பதற்கும், வித்தியாசம் என்னை எனில், பிலிப்பின் மகனாக வாழ்வதற்கும் அலெக்சாண்டராகத் திகழ்வதற்கும் உள்ள வித்தியாசமென்பேன்! சர் சண்முகத்தை, நான் அவர் ஆற்றலறிந்தே அரசாள அழைக்காமல், அரசு அமைக்க அழைக்கிறேன். மரத்தில் பழங்குலுங்கும் வேளையிலே மந்தி தாவுமானாலும், கனியுதிரும்! அதுபோலக் கட்சி கனியுறுந்தறுவாயிலே, கடுவனோ மந்தியோ களித்துக் கூத்தாடும், கனி கிடைக்குமெனும் கருத்தினால். ஆனால், தோட்டம் அமைத்துத் துரவு எடுத்து, நீர் பாய்ச்சித் தரு வளர்த்திடும் செயலே முக்கியமானது. சர் சண்முகத்தை நானழைப்பது, தீஞ்சுவை தரும் பதவிப்பலாவைப் பறித்திட அல்ல; அதற்குக் கீச்சிடும் கடுவன்களும், மையலூட்டும் மந்திகளும் என்றுமுண்டு, எங்குமுண்டு. நான், சர் சண்முகத்தை அழைப்பது, திராவிடத் தனி அரசு அமைக்க, வெறும் பதவியில் அமரவல்ல.

சர் சண்முகம் அவர்களைத் தலைவராக்கும் பணியினைத்தான் வேறு சிலர் மேற்கொண்டுள்ளனரே, பயமேன் உனக்கு, என்று கூறுவீர்கள். உண்மையிலேயே வேறு சிலர் வேண்டி அழைக்க வேண்டிய அளவு, சர் சண்முகம், தூரவிலகி நிற்கலாமா, நிற்கிறாரா, நிற்பது ஏன் என்ற கவலை எனக்கு. வினை முற்றிய தலைவன், வீடு திரும்பாது, சோலையிலோ சாவை ஓரத்திலோ, தங்குவானேன்? அவர், தமது அன்புக்கு இருப்பிடமான மனை புக அழைப்பு வேண்டுமா? அதுவா, தமிழ்ப் பண்பு என்று, என்மனம் என்னைக் கேட்கிறது. அதுமட்டுமல்லவே? மகனே, வா! மாசிலாமணியே வா, வா! தலைமகனே வா, வா!—என்று வருக அந்தாதியைப் பலர் பாடப்பாட எனக்குப் பயந்தான் மேலிடுகிறது.

ஊரைக் கலக்கி வைக்கும் ஊத்துக்காட்டு அம்மையே, நாட்டைக் கலக்கி வைக்கும் நல்ல பத்ரகாளியே, வேண்டி அழைக்கிறோமே வேலாத்து அம்மையே," என்று, சிலம்பைச் சுற்றி, உடுக்கை முழக்கி, உள்ளே சென்ற குடிவகை, ஆவி மயமாக வெளியே வருமளவு உரத்த குரலிலே அம்மனை வேண்டிக்கூவும், பூஜாரிகளை நான் கண்டிருக்கிறேன். அதன் பலனாக ஆவேசம் வரும். வந்ததும் ஊத்துக் காட்டாளோ, சோத்துக் குடையாளோ, பூஜாரியையும் பக்தர்களையும் பார்த்து, "ஆடுவெட்டிக் கோழி வெட்டி பூஜை ஏண்டா போடலே, வேண்டிக் கொண்டபடி விருந்து படைக்கவேயில்லை!" என்று கோபத்தைக்கக்கக் கேட்டிருக்கிறேன். அதுபோன்ற பூஜை போடும் முறை, அரசியலிலே, மகா ஆபத்தாயிற்றே என்றன்றோ நான் அஞ்சுகிறேன்.

மேலும், கட்சிப்பணி புரியத் தலைமைப் பதவி தேவையா என்பது, ஆழ்ந்து பதில் கூறவேண்டிய கேள்வி என்பதை அறிஞர் சண்முகம் அறிவார். பெரியார் கட்சித் தலைவராக இருக்கையிலே, அவர் பக்கம் நின்று சர் சண்முகம் பணியாற்றவும், தமிழகம் அதைக் காணவும், ஒருகாலம் பிறக்கக்கூடாதா! "இதோ எனது குடும்பமுதியோர்' என்று பெரியாரைச் சர் சண்முகம் சுட்டிக்காட்டவும், "நான் வயதேறியவன், இதோ என் இளமையின் உருவம்" என்று பெரியார், சர் சண்முகத்தைச் சுட்டிக்காட்டவும் ஆலுக்கு விழுதுவிட்டது என்று ஆரியர் இது கண்டு அஞ்சவுமான நிலைமை, ஏற்படக்கூடாதா! பெரியாரின் தவறுகள்—பெரியாரின் குறைபாடுகள்—அவர் செய்யும் பிடிவாதம்—அவருடைய ஆற்றல் குறைவு—என்ற இன்னோரன்ன கூறி, பெரியாரைக் கண்டித்துவிட்டு, அவராலேயே கட்சி நசிந்துவிட்டது என்று பொய்யுரைத்துவிட்டு, ஆகவே சர் சண்முகம் வரவேண்டும், என்று அழைக்கும் தோழர்கள், உண்மையிலேயே சர் சண்முகம், தலைவராகவேண்டுமென்று விரும்பி இதைச் செய்கிறார்களா என்பதே என் சந்தேகம். நாதியற்று, நடுத்தெருவிலே கிடத்தப்பட்ட அகதியைப் பெரியார், இன்று கூரை வீட்டிலே குடியிருக்கச் செய்திருக்கிறார்; இனி மாடிவீடு கட்ட, சர் சண்முகம் வரட்டும், வர வேண்டும், வருவது முறையுங்கூட. அதைக் கூறாது, ஏழடுக்கு மாளிகையைப் பெரியார் குட்டிச் சுவராக்கி விட்டதாகவும், மண்மேட்டிலே மாளிகை அமைக்கச் சர் சண்முகம் வரவேண்டுமென்றும் கூறுவது அழகா, நீதியா, மனச்சாட்சிக்குச் சரியா என்று கேட்கிறேன். உண்மையிலே, சர் சண்முகம் வேறுவேறு இடங்கட்கு "இரவல்" அளிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கும் எனக்கும், தமிழர் யாவருக்கும் சொந்தமான மனை, அரசியல் மார்க்கட்டிலே, காங்கிரஸ் மார்வாடியிடம் சிக்கி, ஏலம் கூறப்பட்டபோது, மனையை மீட்டவர் யார்? இதனை மற்றவர் கூறுவதை விட, சர் சண்முகம் கூறவேண்டும். சண்முகமாலை பாடப் பெரியாரை வசைபாடவேண்டுமா! சண்முக வரவு பெரியாரின் துறவாக முடியவேண்டுமா! இருவரும் இருக்குமளவு, கட்சியிலே இடமில்லையா! தேரை விரைவாகச் செலுத்திச் சர் சண்முகம் தமது மனைபுகவேண்டுகிறேன். ஆயிரக்கணக்கிலே தொண்டர்கள் அவரை ஆரவாரத்தோடு வரவேற்பர்! சிலம்பொலியும் பூஜையும் வேண்டாத நேரே, நொந்துக்கிடக்கும் முதியவர் அருகே சென்று, "பெரியாரே! அஞ்சற்க! வினைமுற்றி நான் வீடு திரும்பிவிட்டேன். இனி உமது பணி குறைய, நான் உதவி புரிவேன். என் ஆற்றல் இனி நமது மனைக்குப் பயன்படும்" என்று கூறவேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாருக்கு அவர் அளித்த அறவுரையின், அடுத்த அதிகாரம், இதுவாக இருக்க வேண்டுமென்பது என் அவா! அது ஈடேறுமா?

சர் சண்முகம் கட்சித் தலைவராகவேண்டும். என்ற பிரச்னையைக் கிளப்பும் வேலையுடன் வேலையாகப், பெரியாரைக் கண்டித்தும் சிலர் இருப்பது, உண்மையில் எனக்குப் பிடிக்கவில்லை. சர் சண்முகத்துக்கும் அது பிடிக்காது என்றே நான் கருதுகிறேன். பெரியாரின் பெருந்தொண்டு, வரப்பும் வாய்க்காலும் அமைந்த கட்சிக்குமட்டுமல்ல, தமிழகத்துக்கே பெரிதும் பயன்பட்டதென்பதை மறுத்துப் பேசுவோர், நாளை சர் சண்முகத்தைச் சாடாமலா இருப்பர்! தமிழரின் தன்மானத்துக்கே வித்தூன்றிய தலைவரின் வயோதிகப்பருவம், வாகை சூட்டி, வாழ்த்தும், 'பக்தர்கள்' நிரம்பியதாக இருப்பது முறை! அஃது இல்லையே, என்ற குறையோடு மட்டுமன்றி, அவருக்கு வசைமாலைதொடுத்துச் சூட்டிடல் முறையாகுமா, என்று கேட்கிறேன்.

உலகிலே பலபல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசிய நாவலரையும் நானறிவேன். நெருப்பாறு தாண்டும் வீரரும் எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கும், பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்யாசத்தை உணர வேண்டுகிறேன். அவர்கள் படித்த, பக்குவ மனம் படைத்த கூட்டத்திலே பேசினர். அவர்களுக்கு எழுதினர். பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக் கிடையே, என்பதை அறிய வேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லவர்களும், வெறும் சாமியாடிகளைக் கண்டித்துப் பேசவும் சக்தியற்றுக் கிடந்தகாலை, பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி நச்சு மரங்களை வேரோடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதை உணரவேண்டும். உணர்ந்திடின், கட்சித் தலைமையை ஏற்கச் சர் சண்முகம் வரவேண்டும் என்று எழுதுவதுடன், பெரியாரையும் சேர்த்துக் கண்டிக்கும் செயலை எவரும் புரியார். சர் சண்முகம், கட்சியின் நடுநாயகமாகத் திகழ்வதற்குப் பிறரின் தூண்டுதல் தேவையா! அதிலும் தூற்றல் முதலடியாகவும் தூண்டுதல் கடையடியாகவும் கொண்ட கவிதை காதுக்கும் கருத்துக்கும் கேடுண்டாக்கும், கட்சியிலே கல கலப்பையும், அதன் மீட்சிப் பாதைக்கு வழி அடைப்பையும் உண்டாக்கும் என்பது என் அபிப்பிராயம். அதனை நான் வெளியிட்டதற்குக் காரணம், பெரியாருக்கு வக்காலத்துப் பெறவேண்டுமென்பது அல்ல. அவர் எவ்வளவோ எக்ஸ்—பார்ட்டித் தீர்ப்புகளைக் கண்டு கடகடவெனச் சிரித்துவிட்டு, மடமடவென நடப்பவர். சர் சண்முகம் போன்றாரின் பணி, கட்சிக்கும், கட்சியின் மூலம் தமிழருக்கும் பயன்பட வேண்டுமே என்ற கவலையினாலேயே, இதனை எழுதினேன்.

இன்றுமுதல் வேண்டுமானால் சர் சண்முகம், கட்சிப்பணி புரியத் தொடங்கட்டும், ஆயிரக்கணக்கிலே வாலிபர்கள் அவருடைய அணிவகுப்பிலே நிற்பர், அதைக் காணலாம். கட்சியின் பொருட்டுக் கொள்கைக்காகத், திராவிடத் தனி அரசு அமைக்கத் தியாகமும் வீரமும் உடனிற்கச் சர் சண்முகம், போர்க்கோலம் பூண்டால், எத்தனையோ வாலிபர்கள், தங்கள் வாழ்க்கையினைத் திரணமாகக் கருதித், தீயிலே குதிக்கவுந்தயாராவர். ஓராண்டு கட்சித் தொடர்பு, ஈராண்டு கட்சி நிழல், மூன்றாண்டு கட்சி முறுவல் பெற்றோரும், இன்னமும் எனக்கொரு பதவியில்லையா, பட்டம்கிட்டவில்லையா, என்று கேட்டிடுவது என்போன்றவர் உள்ளத்தை என்ன பாடுபடுத்துகிறது, என்பதை விவரிக்கத் தேவையில்லை. இத்தகையோர் மத்தியிலே இருந்துழலும் ஒரு சில உண்மைத் தொண்டர்கள், உள்ளம் ஒடிந்து போவதும், விழலுக்கு நீர்வார்த்துக் கெடுவானேன் என்று எண்ணுவதும் சகஜந்தானே! இந்நிலையை நீடிக்கவிடுவது, திராவிடத்தைக் கெடுப்பதாகும் என்று எச்சரிக்கிறேன், விசனத்தோடு. கட்சித் தலைவர் மாறவேண்டுமென்பதற்காகப் பெரியாரைக் கண்டித்து எழுதுவது முறையாகாது என்பதையும், கட்சிக்குப் பணிபுரிய, தலைமைப் பதவி இன்றியமையாததல்ல வென்பதையும், தியாக உணர்ச்சியுடன் தொண்டாற்றும் திறன் உள்ள தலைவர் வேண்டுமென்பதையும், இன்று நமக்கு வேண்டிய தலைவர் அரசாள அல்ல, அரசு அமைக்க, என்பதையும் எடுத்தெழுதினேன். இவ்வளவும், வர்ணாசிரமம் ஒழிக! என்ற பரணியைப் பல்கலைக்கழகத்திலே, அன்று சர் சண்முகம் பாடினதன் விளைவே. எனக்கு எவ்வண்ணம் இப்பரணி, எழுச்சியை ஊட்டிற்றோ, அதேபோலே, இந்து, மித்திரன், முதலிய ஏடுகட்கு எரிச்சலையூட்டிற்று. பாசி படர்ந்த மனத்தினிடம் நான் பரிசுத்தத்தை எதிர்பார்க்க வில்லை. எனவே அப்பத்திரிகைகளின் போக்கு எனக்கு வியப்பூட்டவில்லை. அவை கக்கிய கண்டனம், காசநோயாளியின் இருமல்போல, அவைகளின் நோய்க்குள்ள குறிகளேயன்றி வேறல்ல; எனவே பரிதாபமன்றிச் சீற்றமெழவில்லை, அவற்றிடம். ஆனால் அவைகளிலே ஒன்றான மித்ரன், கண்டனத்தினூடே கோத்திருந்த ஒரு கருத்து, என்னைச் சற்றுச் சிந்திக்கச் செய்தது, தோழர்களே! சற்றுச் சோகத்தையும் தந்தது.

சர் சண்முகம், வகுப்புத் துவேஷம் வளர்க்கிறார், என்றுரைத்தது மித்ரன். இது, பழய பஞ்சாங்கத்திலே ஒரு பகுதி! அதுகண்டு நான் ஆச்சரியப்படவுமில்லை ஆயாசப்படவுமில்லை. "நாசமாய்ப் போனவன், மணி பன்னிரண்டாகியும் தூங்கக் காணோமே" என்று கைநொடிப்புடன் கூறுவாள் கள்ளி. காமவேதனையாலும், அதனைத் தீர்த்திடும் கள்ளப் புருடனாலும் பீடிக்கப்பட்ட கள்ளிக்குக் கணவன் விழித்திருப்பது கூடக் குற்றமெனத் தோன்றலாம். விபசாரியின் இந்த விசாரத்தைக் கண்டு, "அபசாரம் அபசாரம்" என்று கூறும் பேர்வழி, ஆண்மையற்றவனாகத் தானே இருக்க முடியும்! வில்லுக்கு ஒரு அம்பு, பல்லுக்கு ஒரு எலும்பு, அதுபோல் பாதிராத்திரி வேளையிலே பக்கத்துக்கோர் ஆள், தேடும் பாதகியின் மொழியைத் துச்சமெனத் தள்ளிடுதல்போல, நான் ஆரிய ஏடுகளின், கண்டன மொழிகளைத் துச்சமாகவே கருதுகிறேன். ஆனால் மித்ரன் ஒன்று எழுதிற்று, என் உள்ளம் கொஞ்சம் வேதனையடைந்தது. சர் சண்முகம் வர்ணாசிரமக் கோட்டையைத் தகர்க்கவேண்டுமென்று கூறுகிறார். அவர் நமது பழய நூற்களின் அருமை பெருமைகளை இப்போது தான் கொஞ்சங் கொஞ்சம் தெரிந்துகொண்டதாகக் கூறுகிறார். இனி, அவைகள் முழுதும் உய்த்து உணர்ந்துவிட்டால் வர்ணாஸ்ரமக் கோட்டையைத் தகர்க்கும் எண்ணத்தையே, அவர் கைவிட்டு விடுவார்!—என்று மித்ரன் எழுதிற்று.

சர் சண்முகம், கலையின் உயர்வுபற்றி, தமிழ்க் காப்பியங்களின் அருமை பெருமை பற்றிப் பேசினாரல்லவா! அதை மித்ரன், தனக்குச் சாதகமாக உபயோகிக்கிறது. வர்ணாசிரமத்தை ஒழிக்கவேண்டுமென்ற எண்ணம் ஒரு நோய், தமிழ்க்கலையுணர்வு, அதனை நீக்கிடும் ஒரு மருந்து; மருந்து போன்ற அந்தக் கலையுணர்வினைச் சர் சண்முகம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு வருகிறார். இன்னும் மருந்தினைச் சற்று அதிகமாகப் பருகினால், நோயேபோய் விடும், என்ற தொனியிலே மித்திரன், தனது தம்பூரை மீட்டுகிறது. இது வெறும் நாரதகானமாக இருக்கக்கூடும், வர்ணாசிரமம் நோயா, வர்ணாசிரமத்தை ஒழித்தாகவேண்டும் என்ற விருப்பம் நோயா, எது நோய், என்பது வேறு விஷயம். கலை, மருந்தாவிருந்தா, என்பது வேறு விஷயம். அறிஞர் யாவரும், நாட்டை நலியச் செய்த நோய், வர்ணாசிரமம் என்றே கூறினர். வர்ணாசிரமத்தை மித்திரன், நாட்டை வளமாக்கும் வனிதாசிரமமாகக் கருதலாம், மித்ரபலம் பெருக அது ஏதுவாகக் கூடும்; அதுவும் வேறு விஷயமே. வர்ணாசிரமத்தை ஒழிக்கும் எண்ணம், பழங்காப்பியர் படிப்பினால் பாழ்பட்டுவிடும், என்ற கருத்தை மித்திரன் வெளியிட்டிருக்கிறது; உள்மைத் தகராறுகளை ஒதுக்கிவிட்டால் இது விளங்குகிறது. இதிலே உள்ள சூட்சமம், என்னைச் சோகிக்கச் செய்கிறது. உண்மையிலேயே, கலை உணர்வு பெருகப் பெருக, தமிழர் என்ற இன உணர்வு அருகுமோ, அண்ணல் சண்முகத்துக்கும் இது நேருமோ, என்றே நான் அஞ்சுகிறேன். சர் சண்முகம், இதுபோது, தமிழ்க் காப்பியமெனும் பூங்காவிலே உலவுகிறார் என்பதும், அங்கு பறித்தெடுத்துத் தொடுத்த அழகிய மாலையினை வசந்த வட்டிலிலே வைத்துத் தமிழருக்குத் தருகிறார் என்பதும், கலாரசிகர்களுடன் கூடிக்குலவி, காவியக்கனி ரசமருந்திக்களிக்கிறார் என்பதும் பிறர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். மித்திரனும் அதனை அறிந்து, "சரி! சரி!! அந்த ரசம் இன்னும் கொஞ்சம் உட்கொண்டால், வர்ணாசிரம ஒழிப்பு என்ற பேச்சு ஒழியும்" என்று எழுதுகிறது. இது என்னைச் சிந்தனையிலாழ்த்திற்று. இனி அச்சிந்தனை பற்றிக் கூறுகிறேன். இதுபோது நீவிர் சற்றே உமது சிந்தனையைச் செலவிட வேண்டுகிறேன். மித்திரன் கூறின வாசகத்தின் மர்மம் என்ன?

அழகான அந்திவானம்! ஆற்றோரத்திலே நாரை, கவலையுடன், கண்கள் முழுதும் திறந்துமில்லை. முழுதும் மூடியுமில்லை, கபடம் நிறைந்தவிழி, நாரைக்கு. நின்ற கோலத்திலே, தவங்கிடக்கிறது நாரை; சாதாரண ரிஷிகள் போலத் தனது முக்திகோரியல்ல! ஆற்றிலே துள்ளிக்குதித்து அல்லற்படும் மீன்களுக்கு, முக்தி தர!! எந்த ஆற்றோரத்திலும், பிற நீர் நிலையங்களிலும், நாரை நின்றிடும் இக்காட்சியை எவரும் காணலாம். கல்லெடுத்து வீசிடின், நாரை சென்று விடும். ஆனால் 'கவிதையை வீசி, அந்தக் காட்சி, என்றும் கருத்துள்ளோரின் மனதைவிட்டு அகலாத வண்ணம் ஒருவர் நாரைக்கு "அமரத்துவம்" அளித்துள்ளார். நாரை மீனைக் கொத்தித் தின்பதற்காக, அடக்கமே உருவானதுபோல, அங்குக் காத்திருக்கிறது அதன் தீய எண்ணம் துளியும் வெளியே தெரியாதபடி, நாரை நடிக்கிற நேர்த்தியைக் கவிஞர் காணுகிறார். மீன் தேடிடும் நாரை, ஆற்று நீரிலே இறங்கி அலையக்காணோம், வட்டமிடவுமில்லை, பதைக்கவுமில்லை; வேறு ஏதோ காரியத்துக்காக, அல்லது வெறும் பொழுதுபோக்குக்காக அந்த ஆற்றோரத்தை அடைந்தது போலப் பாவனை புரிகிறது. அந்த நாரையின் நினைப்பு முழுதும், மீனின்மீது! நடிப்போ, சர்வ பரித்தியாகத்துக்கும் தயாராக இருப்பதுபோல்! இதைக் கண்ட கவிஞர், பறவை இனங்களிலே இவ்வளவு கவடம் கற்றதாக நாரை இருப்பதுபோல, மக்களிலே யார்உளர், என்று எண்ணாமலிருப்பாரா? கற்றோர்க்கும் மற்றையோர்க்கும், இதுதானே வித்யாசம்! கற்றோர், காட்சியுடன் கருத்தினைப் பிணைப்பர். மற்றையோர், காண்பர், களிப்பர், மறப்பர்! கவிக்கு, ஆற்றோரத்திலே நாரை நிற்கும் காட்சி, வஞ்சகத்தை மறைக்கும் நடிப்பு, மக்களிலே ஒருசாராரின் மனப்பாங்கையும் நடவடிக்கையையும் நினைவூட்டுகிறது. உவமை கண்டு உளம் களிக்கிறார். இயல்பினால் மட்டுமே உவமையன்று! இடமுங்கூட, ஒன்றாகவே இருக்கும் உவமை அவருக்குத் தோன்றுகிறது. அதே ஆற்றங்கரைகளிலே, செவ்வானம் தோன்றும் வேளையிலே, நாரை போலவே, நினைப்பை நடிப்பால் மறைக்கும் ஒரு கூட்டத்தாரின் குணம் அவருக்கு நினைவிற்கு வருகிறது; ஒரு நேர்த்தியான கவிதையும் பிறக்கிறது, கவிஞரின் உள்ளத்திலிருந்து.

"பொன்மலைசுடர் சேரப்
     புலம்பிய விடனோக்கித்
தன்மலைந்துலகேத்தத்
      தகைமதியேர்தரச்
செக்கர்கொள் பொழுதினா
      னொலி நீவியிளநாரை
முக்கோல்கொள் அந்தணர்
      முதுமொழி நினைவார்போ
லெக்கர்மேலிறை கொள்ளு..."

நாரையைக் கண்டதும், பார்ப்பனவரின் நினைவு, கவிக்கு! ஆற்றோரத்திலே, அந்திவானத்திலே, நிற்கும் நாரை, மந்திர உச்சாடனம் செய்வதுபோன்ற பாவனையுடன், நீர்நிலையங்களருகே நித்த நித்தம் அமர்ந்துள்ள, பார்ப்பனரின் உருவம் போன்றிருந்ததாம் கவிக்கு! எந்தக் காலத்துக் கவி? கலித்தொகையாம்!! அந்தக் காவத்திலேயே, ஆரிய இனம், காரியம் பலிக்கக் கவடவேடமிட்டுக் கிடந்தது என்பதற்குச் சான்றுகள் அனேகமுண்டு, இன்றும் அந்த இயல்பு கொஞ்சமும் மாறாதுதானிருக்கிறது. நாரைபோல நின்றிருக்கும் நடிப்புத் திறனை அந்த இனத்தவர் செம்மையாகச் செய்வர்.

கலை எனும் அருவியோரத்திலே, ஆரிய நாரைகள் அமர்ந்துள்ளன; கலையருவிக் காட்சியிலே, தம்மை மறந்திருப்பதாகப் பாவனை! முதுமொழி நினைவார் போல, கலையின்பத்தையே நினைத்தவண்ணம், ஆரிய நாரைகள் அமர்ந்துள்ளன. இரையும் வேண்டாம் இந்த இன்பமே போதும், என்று கூறுவர்! இதிலுள்ள உண்மையின் உயர்வும், நேர்த்தியும், வேறு எதிலே காணமுடியும் என்றுரைப்பர். வேறொன்று வேண்டாப் பராபரங்களாக, கலை வழிபாடன்றிப் பிறிதோர் பெறத்தக்க பேறில்லை என்ற பெருங்குணவான்களாக, யாம் பெற்ற இன்பம் பெறுக இவையகம் என்று உபதேசிக்கும் உத்தமர்களாக, அறிவு பெரிது, அதனினும் பெரிது அறிவின் பயனாக விளையும் ஆனந்தம், அதனினும் பெரிது, அந்த ஆனந்தத்தை அனைவரும் பெற்றிடச் செய்தல் என்று கூறிடும் ஆசிரியர்களாகக் காட்சியளிப்பர். அவர்தம் நெஞ்மோ, ஓர் எரிமலை! விழியோ, எவர் உழைப்பை எங்ஙனம் ஏய்த்துப் பெறுவது என்ற தந்திரத்தைக் கக்கும் குழிகள்! அருவியோரத்து நாரையின் நினைப்புத்துள்ளிக் குதித்திடும் மீனினத்தின் மீது! ஆரிய நாரைகட்கோ, கலையருவியில் குளித்து இன்புற வேண்டிவரும் தமிழரைக்கொத்தித் தின்பதன்றி வேறில்லை. கலையருவியே, இக்காரணத்திற்குத் துணையாக நிற்கிறது. கடிவாளத்திற்கு வாய் திறந்த பிறகு, குதிரையின் கொட்டம் அடக்கப்படுவது ஆச்சரியமாகுமா? மூக்கணாங்கயிற்றுக்குச் சம்மதித்த பிறகு, மூலைவாரினால், சாட்டைதானே பேசும்! அதுபோலத்தான், கலையருவியிலே நீந்தி மகிழத் தொடங்கிவிட்டால், ஆரிய நாரைகளின் கூரிய மூக்கின் வேலையும் தொடங்கும், கலையருவி அங்ஙனமுளது இங்கு. எனவே தான், "சரி, சரி, செட்டியாரே! கலை உணர்வு பெற்று வருகிறீர்களல்லவா! அந்த உணர்வு இன்னும் கொஞ்சம் அதிகரிக்கட்டும், பிறகு ஆரிய திராவிடப் போராட்டத்திலே உமக்கிருக்கும் ஆர்வம், பஞ்சாகப் பறக்கிறது பாரீர்" என்று மித்திரன் கூறுகிறது.

"ஒரே ஒரு செங்கல் பெயர்த்துவிட்டால் போதும்!" என்று கருக்கலிலே நின்று கன்னமிடும் கள்ளன் கூறுவான்.

"கண் சிவந்துவிட்டது. கைகால் துடிக்கிறது, பேச்சும் படபடக்கிறது. இன்னும் ஒரேஒரு கிளாஸ் குடித்துவிட்டால் போதும், ஆசாமி கீழேசாய்வான். பிறகு அகப்பட்டதைச் சுருட்டலாம்" என்று, மதுவை ஊற்றி மடியைத் தடவும் தடியர் கூறுவர்.

"இப்போதுதான் என்னிடம் அவருக்குப் பிரேமை அதிகரிக்கிறது. இது இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் போதும், பிறகு நான் சொன்னபடி ஆடுவார்; சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்தாகவேண்டும் என்று கட்டளையிட்டாலும் தட்டாமல் செய்வார்" என்று கண்வெட்டால் கருத்தைவெட்டிய காமக்கள்ளி தன்னிடம் சிக்கிய சீமானைக் குறித்துக் கூறுவாள்.

"முகத்திலே இன்னும் ஒரே ஒரு குத்து விழுந்தால் போதும், ஆசாமி கீழே விழுவான், தங்கத்தோடாவும் வெற்றிமாலையும் நமக்குத்தான்" என்று கூறுவான், குத்துச்சண்டைப் பந்தயத்திலே ஈடுபட்டவன்.

"இன்னும் சில நாட்களில் ஆசாமி சிவலோகப் பிராப்தியடைவான், பிறகு நானே சீமான், நமதே வாழ்வு" என்று லோபியின் வாரீசு கூறுகிறான்.

இந்த "ரகங்களிலே" எதை நீங்கள், மித்ரன் வாசகத்திற்கு உவமையாகக் கொள்வீர்களோ, எனக்குத் தெரியாது தோழர்களே! எனக்கென்னமோ, இவ்வளவும் இன்னும் பலவும் தோன்றின, மித்திரன், சர் சண்முகம், பண்டைக் காப்பியங்களை மேலும் நன்றாகப் படிப்பாரானால் வர்ணாசிரமக் கோட்டையைத் தகர்க்க வேண்டுமென்ற நினைப்பையே விட்டுவிடுவார், என்று எழுதி இருந்ததைப் படித்ததும். சூட்சுமமின்றிச் சுதேசமித்திரன் எழுதாதே, வீணுக்கு வார்த்தையை வீசிடாதே, இந்த வாசகத்திற்கு விசேஷார்த்தமின்றி, மித்திரனில் இடம்பெறாதே, என்று எண்ணியே ஏங்கினேன். சென்ற கிழமையே உம்மிடம் இயம்பினேன்; இக்கிழமை, அதுகுறித்துச் சிந்தித்தேன்; செக்கர்கொள்வானமும், சிந்துபாடும் சிற்றாறும், நின்றிடும், நாரையும், நினைவிலே நின்றன!

"வர்ணாசிரமம்" என்ற தலைப்பிலே, கலைப்படிப்பு, ஆரியக்குழியிலே, தமிழரைத் தள்ளக் கூடியதாக இருக்கிறது என்று எழுதுகிறாயே, சர்சண்முகம், தமிழ்க் கலையிலே ஆர்வங்கொண்டிருப்பதால், நல்லது விளையுமேயன்றி நாசமா நேரிடும், விளக்கு, என்று அன்பரொருவர் கேட்கிறார். பழைய காப்பியங்களைப் படிக்கப் படிக்க, ஆரிய திராவிடப் போராட்ட உணர்ச்சி ஒழியும் என்பது, ஆரியருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆகவேதான், தற்காலப் புத்தறிவுப் பிரச்னைகளைப் பற்றிப் பேசும்போது அவைகளை எழுதும்போதுங்கூடப், பழைய ஏடுகளுடன் இணைத்துக் காட்டுகின்றன. இரு கருத்துகள் அவர்கட்கு, இரண்டும் இடையூறு உண்டாக்குவனவே! ஒன்று இன்றைய உலகிலே புதிதாக ஒரு அறிவும் இல்லை, பழமையிலேயேயாவும் உள, என்று பேசுவதன்மூலம், புத்துலக உணர்வு வராமல் தடுப்பது. மற்றொன்று, அத்தகைய பழமை உணர்வின்படி நிற்பின், வர்ணாசிரமம் நிலைக்கும் என்பது. இவ்விரண்டும், நாட்டுமக்களை நலியவைத்து, "முகத்துதித்தோரை" முடிசூடா மன்னராக்கும் முறைக்குப் பயன்படுகின்றன. எனவேதான், நான் கலையருவியிலே கவலையுடன் ஆரியநாரை அமர்ந்திருக்கிறது, அதைக் கவனத்தில் வையுங்கள் என்று கூறினேன்.

எந்தச் சந்தர்ப்பத்தையும் நழுவவிடாதே! எதையும் உனக்குச் சாதகமானதாக்கிக் கொள்ளத்தவறாதே! என்பவை, ஆரியரின் இலட்சியம், இரண்டாயிரம் ஆண்டுகளாகவே! இதன்படியேதான், கலையையும் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் புகுத்தும் கருவியாக்கினார்கள். உணவு கண்முன் ஊசலாடுகிறது என்ற உவகையுடன் துள்ளிக் குதிக்கும் மீனுக்குத் தூண்டிலே தூக்கு மரமகிறது! அதுபோலக் கலையழகு காண்போம் என்று எண்ணிப்,

பழமைமுன் கூத்தாடும் தமிழர், ஆரிய ஆதிக்கத்திலே சிக்கிவிடுகின்றனர். ஒரு சிறு சம்பவம், புத்துலகப் பற்றுக்கொண்ட ஒரு திருவாளரின் திருமனையிலே நடைபெற்றது, கற்பனையல்ல; ஆனால் கண்ணியமான முறைக்காகவேண்டி, பேருக்கு முகமூடியிட்டிருக்கிறேன், உமது மன்னிப்பை எதிர்பார்த்து.

"வாருங்கோ! நேற்றுமாலை நெடும்நேரம் வரை காணோம், எங்கே போயிருந்தீர்கள்?" என்று கேட்டார் புத்துலகப் பற்றுடையார். பழமையாளர் சொன்னார் "பரதநாட்டியம் காணச்சென்றேன். பரமானந்தம் கொண்டேன். பாத்திரம் முதல் தரமானது, அபிநயம் அபாரம், கீதம், லலிதமாக இருந்தது" என்று. புத்துலகப் பிரியருக்கு நடனங்காண ஆவல் பிறந்தது, கலைக்காகத்தான்! கண்டார். "கண்டவுடன் எந்தன் உள்ளம் கொள்ளைகொண்ட கள்வா' என்ற பாட்டுக்கு அபிநயம் அழகுற நடந்தது. அம்மையும் கலைக்காகத்தான் அதனை நடத்தினார். இருவரும் தங்களை அறியாமல் கட்டிலறை நோக்கி நடந்தனர், அது வேறு விஷயம். பிறகு, நர்த்தனத்தத்து வந்தான் நடராஜர், என்று புத்துலகப்பிரியருக்குப் பழமையாளர் புகன்றார். விக்ரகம் வாங்கப்பட்டது, அந்தத் தூக்கி நின்றாடும் காட்சியிலே, கூத்தின் விளக்கங்காணத்தான், வேறு எதற்குமல்ல; காலையிலே காண்பார், கலையழகை எண்ணுவார், கூத்தனின் சிலை மூலம். பிறகு பழமையாளர், "விக்ரகத்தை வீணாகப் பாழாக்குகிறீர். நீராட்டாது விட்டீரேல், அது பாசி ஏறிப் பாழ்படுமே" என்றுரைத்தார். ஆமென்றார், புத்துலகர். அபிஷேகம் என்ற முறையிலே அல்ல, விக்ரகத்தைத் தூய்மையாக வைத்திருப்பது என்ற முறைக்காக, நீராட்டி வரலானார்.

"பளபளப்பான சிலைக்கு ஒரு பட்டுத் துண்டும் கட்டிப்பாருங்கள், அதன் அழகே அலாதிதான்" என்றார் திருவாளர் பழமை. மிஸ்டர் புதுமை, "இது ஒரு பிரமாதமா, கொண்டு வா, கொள்ளேகாலம் பட்டு வேஷ்டி" என்றார். "வீட்டிலே, பறிப்பாருமின்றி மலரும் மலர், உமது அறையிலே மணமூட்டட்டும். அதைப்பறித்து மாலை தொடுத்துக் கூத்தன் சிலையிலே போட்டுவிடுங்கள்" என்றார், பழமை. அதுவும் நடந்தது. "உங்களுக்கிருக்கும் வேலையிலே, காலையிலே இந்தக் காரியங்களையெல்லாம் எப்படிச் செய்து கொண்டிருக்க முடியும், யாராவது ஒரு ஐயனை வேலைக்கு வைத்து விடுங்கள்" என்று பழமை யோசனை கூறினார். ஐயரும் வந்து சேர்ந்தார். அவர் தமது வேலையைச் சரியாகச் செய்கிறாரா என்று பார்க்கக் காலையிலே மிஸ்டர் புதுமை செல்லலானார். ஐயர், விபூதிமடலை நீட்டினார். இரண்டொரு வாரங்களிலே "குனித்த புருவம்" எனும் தோத்திரம் பாடவும், கூத்தனை எட்ட நின்று கும்பிடவும், குடும்பக்கோயில் குருக்கள் தரும் குங்கும விபூதியைப் பயபக்தியுடன் வாங்கவும், மிஸ்டர் புதுமை பழகிவிட்டார். திருவாளர் பழமை "தீர்த்துக் கட்டிவிட்டோம் ஒரு தீப்பொறியை" என்று தமது குறிப்புப் புத்தகத்திலே பொறித்துக் கொண்டார்.

இதுபோலக் கலையிலே தொடங்கி ஆரியவலையிலே வீழும்வரை பலர் சென்று விடுவதைக் கண்டதாலேயே நான், "கலையின் பேரால் ஆரியர் நடத்தும் சூது இது, எச்சரிக்கை" என்றுரைக்கிறேன்.

பழைய காப்பியங்களைப் படித்துக் கலையுணர்வு பெறுவது, இன எழுச்சியைச் சாகடிக்கும் நச்சு, என்ற மித்திரன் வாசகம், ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தென்பது என் கருத்து. ஒருவரை மற்றொருவர் அடிமைகொள்ள, வசியப்படுத்த, வீழ்த்த, வகை பல உண்டு. முறை பல உண்டு. வீரர் வேல்கொண்டு போரிடுவர், தமது ஆற்றலையே, ஆதிக்க அளவு கோலாகக் கொண்டு, வீரமற்று வஞ்சக உள்ளங் கொண்டோர், மறைந்திருந்து தாக்குவர், மாற்றானை மாய்த்திட எம்முறையும் ஏற்றதே என்று கூறுவர். மராமரங்களுக்குப் பின்புற மிருந்து வாலியைக் கொன்றதால் காரியத்தைச் சாதிக்கும் கயவரும் உண்டு! எதிர்ப்போனின், உடன்பிறந்தாரையோ, ஏவலரையோ, விலைக்குப்பெற்று, விபீஷணாழ்ஸ்திரத்தால் வீரனை வீழ்த்தும் வகையுமுண்டு. மாயமொழி பேசியும் மாற்றானை மாய்ப்பதுண்டு! எதிரியின் ஏமாளித்தனத்தைத் தெரிந்து அவனைச் சாய்ப்பவருமுண்டு. உலகம் பலவிதம். கரியைப் பிடித்திழுத்துக் கரகர வெனச் சுழற்றி அடிக்கும் வீரனானாலும், கனகவல்லிகளின் கடைக்கண் பார்வையாலோ, புன்சிரிப்பெனும் பாணத்தாலோ, அதரமெனும் அஸ்திரத்தாலோ, அடியற்ற நெடும் பனையாவதுமுண்டு. தேவர்கள் யாவரையும தீர்த்துக்கட்டும் மாவலி பெற்ற அசுரர்கட்கு, அமிர்தம் தந்திடின். அமரர் உலகு அசுர உலகாகுமென்றெண்ணி அரி, அழகி உருக்கொண்டு ஆடிப்பாடி அசுரரை ஏய்த்த சூது, ஆண்டவன் லீலையாகப் போற்றப்படும் இந்நாட்டிலே, வேறுபலர், மோகினிரூபம் வீரரை வீழ்த்தும் வேல் என்று கொண்டதிலே ஆச்சரியப்படுவதற்கில்லை. "சர்வ வல்லமையுள்ளவரே, சாகசத்தைச் சக்கரமாகக் கொண்டே அசுரரை சம்ஹரித்தார் என்றால், சாதாரணமக்கள், அம்முறையைக் கையாளாமல் இருப்பரோ! இங்ஙனம், ஒருவரை ஒருவர் வீழ்த்தப் பல்வேறு வகையும், பல்வேறு கருவியும் இருத்தல் போலவே, ஒரு இனத்தை மற்றோர் இனம் அடக்கக் கையாளும் முறையும் பலவகைப்படும். தீப்பந்தமும் திடீர்த்தாக்குதலும் ஒரு முறையாக அமைந்திருக்கிறது! படையில் கலகமூட்டுவதும் பாசறை கெடுத்தலும், சிலசமயம் கையாளப்பட்டன. அடுத்துக் கெடுப்பதும், அணைத்து அழைப்பதும் சில சமயம் நடந்ததுண்டு. உலகிலே இதுபோல், இனப்போரின்போது, ஒவ்வோர் விதமான முறையைக் கையாண்டிருக்கிறார்கள். ஆரிய இனம் எப்படை கொண்டும் திராவிடரை வீழ்த்தவில்லை; அப்புற்படையினருக்குப் போரிடும் ஆற்றலே இருந்ததில்லை. திராவிட இனம், ஆரிய தாசராக மாறிட ஆரியர் கையாண்ட முடை, கலையருவியிலே திராவிடரைத் தள்ளியதுதான்! எமது கலையழகைக்காணீர், என்று கூறித் திராவிட இனத்தை மயக்கி, வீரரைக் கோழைகளாக்கி வீழ்த்தினர். அன்று வீழ்த்தியது மட்டுமல்ல, இன்றும், இனி என்றுங்கூட அந்தக் கலை எனும் அங்குசத்தால் திராவிடமெனும் மதகரியை அடக்கலாம், என்ற மனப்பான்மையுடனேயே ஆரிய இனம் இருக்கிறது. அதிலே ஓரளவு உண்மையும் இருக்கிறது.

மாயா உலகைத் துறக்க எண்ணினார் ஓர் மலையாண்டி காவி அணிந்தார், காடேகினார் கடும் பசி வந்துற்றபோதன்றி கண்திறவார். கடுந்தவம் செய்து வந்தார். ஓர் மாலை, முல்லை மலர்ந்திருக்கக் கண்டார், நறுமணத்தைப் பெற்றார், நன்று நன்றென நவின்றார். இரவு இறைவனின் திருவருளை வேண்டினார், உறங்கினார் காலையிலே, முல்லை கண்ட பக்கம் சென்றார், மலரைக் காணோம்! மகேஸ்வரனைச் சிலவிநாடி மறந்தார். முல்லையைப் பறித்தது யாரோ, என்ற சிந்தனையில் ஈடுபட்டார். அருகே, காலடிக்குறி கண்டார், சற்றுங் கோபங்கொண்டார். மாலைவேளையில் கைப்பிடியாகக் கள்ளனைப் பிடிப்போமென்று கருத்துட் கொண்டார்; காயமே இது பொய்யடா என்றார்; கண் மூடினார் கனிமரத்தடியிலே. மாலையில் சென்றார் முல்லைப் புதருக்கு. முழுமதியன்ன முகவதி, முல்லைச் சிரிப்புடன் நின்றிடக் கண்டார், முல்லையைப் பறித்தபடி! "பேசா மலரைப் பறிக்கும் பேசும் மலரே!" என்று அழைத்தார். வணங்கினாள் வனிதை, வந்தவழி சென்றாள்; விழியை அப்பக்கமிருந்து வாங்கிட விரக்தி மார்க்க வித்தகருக்கு நெடுநேரமாயிற்று. மறுதினம் மாலை, மங்கை வருமுன்னம், மலரைப் பறித்தார். வந்ததும், வாஞ்சனையுடன் அவளிடம் தந்தார். தருகையிலே, கரத்தோடு கரம் சேரக்கருத்தோடு கருத்து மோதிக் கொண்டது. மறுதினம், காலை முதல் காடு முழுதும் சுற்றி வகைவகையான புஷ்பங்களைப் பறித்தார் துறவி; மாலை நேரத்திலே, முல்லைப் புதருக்கு ஓடோடி வந்தார், முல்லையைக் கொய்தார்; ஏன் இன்னும் அந்த இரஞ்சித சுந்தரி வரவில்லை என்று தன் நெஞ்சைக் கேட்டார். மங்கை வந்ததும், "இதோ மல்லிகை, இது முல்லை, செண்பகக்கொத்து, ரோஜா, இதோ செந்தாமரையும் உண்டு காண்" என்று, மலர்க் குவியலைக் காட்டினார். "மகானே! இந்த மங்கையின் பொருட்டு இவ்வளவு சிரமமா?" என்று கேட்டாள் மங்கை. அன்று அந்த மது உண்டதால் புதிய உற்சாகம் பெற்ற நீறுபூசி, நீற்றையும் நிகண்டையும், நித்ய பூஜையையும் நிஷ்டையையும் துறந்தார்; மலர் பறித்திடவும் மாலை தொடுத்திடவும், மங்கையைக் கண்டிடவும் மலர் தந்திடவும் அவருக்கு, நேரமும் நினைப்பும் இருந்தது. இந்த 'சக்தி' பூஜையின் பலனாக, அவர் சன்யாக ஆசிரமத்திலிருந்து கிரஹஸ்தாசிரமம் புகுந்து மாயா உலக பந்தம் வேண்டேன் என்ற மனனதைத் துறந்து மனையறம் படித்து, அந்த ஊரிலேயே முதல்தரலான புஷ்பம் விற்பவரானார், என்றோர் கதை உண்டு. கலை இங்குள்ள நிலையிலே, அதிலே இலயிப்பவர் கதியும், மலையாண்டி மனையாண்டியானது போலத்தான் முடிகிறது, என்று நான் எண்ணுகிறேன். கலா ரசிகராகத் தொடங்கும் வாழ்க்கை கனபாடியின் தோழராக்கி, பக்தராக்கி; ஆரிய அடிமையாக்கி விடுகிறது. அந்த விதத்திலே கலை அமைந்திருக்கிறது. சங்க நூற்களிலேயுங்கூட சந்து கண்ட இடங்களிலே வந்து நுழைந்து கொண்டது ஆரியும். கடைச்சங்கத்திற்குப் பிறகோ எனில், ஆரியக் கருத்தேஉட்பொருளாகவும், கலையே கவசமாகவும் அமைந்த நூற்கள் பெருகிவிட்டன. சங்க நூற்களிலே, யானை அலறக் கேட்டு அஞ்சிய தலைமகளை அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமகனைக் காண்கிறோம்; பிறகோ, அண்ணனை ஆனையாக்கியனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம்புரியும் வேலன் கதை வீடுதோறும் புகுந்தது காண்கிறோம். சங்க நூற் சித்திரம் சிலருக்கே தெரியும்; புராணக் குப்பையோ, தெரியாதார் மிகமிகச் சிலரே.

சங்க நூற்களிலே, மந்திக்குப் கனி பறித்தீயும் காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்த்தெடுக்கும் சர்வ பண்டிதனாம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர் நூலை அறிந்தோர் சொற்பம்; புராணப்புளுகைப் போற்றிடுவாரோ, பெருந்தொகையினர். ஆண்மான் பெண்மானுக்குத் துணை நிற்கும் அழகிய காதலறத்தைக் காட்சியாக்கிய கவிதை படித்த தமிழனுக்கு, மாரீசனின் மாய மான் கதை கலையாக்கப்பட்டு விட்டது? முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம், பாலை, எனும் நிலப்பண்பு தெரிந்து இன்புற்ற இயல்பு முன்பு! பிறகோ, நாலுவர்ணமெனும் நச்சுப் பொய்மைகயில் நெளியும் நிலைமை!! கலையின் பேரால், ஆரியக் கற்பனைகள், தமிழரின் கருத்திலே தூவப்பட்டு விட்டன. இதனை நன்கறிந்தே சுதேசமித்திரன், "கலையுணர்வுப்பெறப் பண்டைய காப்பியங்களைப் படித்திடட்டும் சர் சண்முகம், அதன்மூலமாகவே அவரை முறியறிக்க முடியும்" என்று கருதுகிறது. முடியுடை வேந்தரையும் வீரரையும் வீழ்த்திய முறை அதுவன்றோ, சர் சண்முகம் மட்டும் என்ன, தப்பவா போகிறார், என்று மித்திரன் கருதுகிறது. நறுமலர்க் கூடையிலே நச்சரவு இருந்திடின், மலர்தேடும் கையிலே விஷப் பல்லன்றோ தீண்டும்! பழைய காப்பியத்திலே பிரேமை அதிகரித்தால், திராவிடப்பண்பு பாழ்பட வழி இருக்கிறது என்பதறிந்தே, சுதேசமித்திரன் அந்தச் சொல்லை வீசியிருக்கிறது. உண்மையிலேயே, சர் சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே, ஆரிய அலை மோதுகிறது, சனாதனமெனும் சுறா மீன்கள் உலவுகின்றன, வர்ணாசிரமம் எனும் வாயகன்ற திமிங்கிலமுளது, என்று எச்சரிக்கை செய்யாவிடின், எனக்கு அவர்பால், உள்ள அன்பினை மறந்தவனாவேன். கலையுலகிலே, அவர் உலவுவது, ஆரியபுரிக்கு அவரை அழைத்துச் செல்லாதிருக்கவேண்டும். கலையார்வத்திலே ஈடுபட்டு, ஆரியராவது திராவிடராவது, என்று கூறிடும் முத்துரங்கமாகவோ, இகலோகத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்பட்டுக் கிடப்பானேன் பரலோகத்தைப் பற்றியன்றோ சிந்தனை செயல்வேண்டும் என்று கூறிடும் முத்துரங்கமாகவோ, இகலோகத்தைப் பற்றி இவ்வளவு கவலைப் பட்டுக் கிடப்பானேன் பரலோகத்தைப் பற்றியன்றோ சிந்தனை செயல்வேண்டும் என்று கூறிடும் பாராயண பக்தராகவோ, மாறிடாதிருக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்&oldid=1646134" இலிருந்து மீள்விக்கப்பட்டது