பாசமுள்ள நாய்க்குட்டி/பொன்வண்டு வறுவல்
ஒரு பொன் வண்டு, காட்டுப் பாதையில் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டு இருந்தது. அதன் இசை இளங்காற்றில் கலந்து எங்கும் இன்ப ஒலியைப் பரப்பிக் கொண்டிருந்தது.
அவ்வழியாக ஒரு முள்ளம்பன்றி வந்தது. அது நீண்ட நேரமாகப் பட்டினி.
நெடு நேரமாகத் தேடியும் அதற்கு உணவு கிடைக்கவில்லை. பூச்சிகள், வண்டுகள் தாம் அதற்கு உணவு. பொன் வண்டின் இனிய இசையைக் கேட்ட முள்ளம் பன்றி, பாட்டு வந்த திசையை நோக்கி நடந்தது.
முள்ளம் பன்றி வருவதைப் பாராமல் பொன்வண்டு உச்சமான குரலில் பாடிக் கொண்டிருந்தது. அருகில் வந்த முள்ளம் பன்றி சடக்கென்று பொன் வண்டைப் பிடித்துக் கொண்டது. “அப்பாடா! கடைசியாக நல்ல உணவு கிடைத்தது. பசிக்கவலை விட்டது!” என்று முள்ளம் பன்றி கூறியது.
“என்ன சொல்லுகிறாய்? சரியாகக் கேட்கவில்லையே!” என்று அதன் காலில் சிக்கிக் கொண்ட பொன்வண்டு கேட்டது.
“நன்றாகப் பாடுகிறாய்! ஆனால் தொடர்ந்து உன் பாட்டைக் கேட்க இந்தக் காட்டுக்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இன்னும் சிறிது நேரத்தில் நீ என் வயிற்றுக்குள் போகப் போகிறாய்!” என்றது முள்ளம் பன்றி.
முட்டாள் தனமாக இந்த முள்ளம்பன்றியிடம் சிக்கிக் கொண்டோமே என்று வருந்தியது பொன்வண்டு. அதன் மூளையில் ஒரு புது வழி தோன்றியது.
“முள்ளம் பன்றியே, என் இசையைப் பாராட்டியதற்கு நன்றி. அதற்காக நான் உனக்கு ஓர் உதவி செய்ய விரும்புகிறேன்” என்றது பொன் வண்டு.“ஆ|ஆ|ஆ! என் காலில் சிக்கிக் கொண்டிருக்கும் நீ, இன்னும் ஒரு நொடியில் என் பசியைத் தீர்க்கப் போகும் நீ, எனக்கு உதவி செய்கிறாயா? வேடிக்கைதான்!" என்று பெரிதாகச் சிரித்தது முள்ளம் பன்றி.
“சும்மா சிரிக்காதே! நான் சொல்லுவதைக் கேள்! நீ என் இசையைப் பாராட்டினாய். உன் கையில் அகப்பட்ட நான் எப்படியும் சாகப் போகிறேன். என் சாவு சாதாரணச் சாவாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். என் இசையைப் பாராட்டிய உனக்கு நான் சுவையான உணவாகிச் சாக விரும்புகிறேன். நீ இவ்வளவு நாளும் பூச்சிகளைப் பிடித்து அப்படியே கடித்துத் தின்றிருக்கிறாய்! அதில் சுவையுமில்லை; இன்பமும் இல்லை. மனிதர்கள் எதையும் வறுத்துத்தான் சாப்பிடுவார்கள். அதுபோல் நீயும் என்னை வறுத்துச் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றது பொன் வண்டு.
“அசட்டுப் பொன்வண்டே! நான் எப்படி உன்னை வறுத்துச் சாப்பிட முடியும்? எவனாவது மனிதனிடம் சென்று உன்னை வறுத்துத்தரச் சொன்னால் அவன் என்னையே வறுத்து விடுவான்” என்றது முள்ளம் பன்றி.
“முள்ளம் பன்றியே! அதோ ஒரு குடிசை தெரிகிறது பார்த்தாயா! அது விறகு வெட்டியின் குடிசை. விறகு வெட்டி இப்போது மரம் வெட்டப் போயிருக்கிறான். அவன் குடிசைக்குச் செல். அங்கே அடுப்பில் இரும்புச் சட்டி இருக்கிறது. அதில் என்னைப் போட்டு வறுத்துச் சாப்பிடு! நான் உனக்குச் சுவையான உணவாகும் மகிழ்ச்சியோடு சாகிறேன். ஒரு முறை வறுத்துச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், பிறகு நீ எதையும் அப்படித்தான் சாப்பிட ஆசைப் படுவாய்!” என்றது பொன் வண்டு.
முள்ளம் பன்றிக்கும் சுவையான சாப்பாடு சாப்பிட ஆசை உண்டாகியது. பொன் வண்டை ஒரு காலில் இடுக்கிப் பிடித்தபடியே விறகுவெட்டியின் குடிசைக்குச் சென்றது குடிசைக் கதவை இடித்துத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றது. அடுப்பின் அருகில் இரும்புச் சட்டி இருந்தது. அதை எடுத்து அடுப்பின் மேல் வைத்தது. அந்த இரும்புச் சட்டியில் பொன்வண்டைப் போட்டது.
“இனி என்ன செய்ய வேண்டும்?" என்று முள்ளம் பன்றி கேட்டது. அதோ விறகு அடுக்கி வைத்திருக்கிறான். இரண்டு விறகை எடுத்து அடுப்பில் வை. பக்கத்தில் உள்ள அலமாரியில் தீப்பெட்டி இருக்கிறது. அதில் ஒரு குச்சி எடுத்து உரசு. விறகு எரிந்ததும் இரும்புச்சட்டி சுடும், நான் வறுபடுவேன்.
“சிறிது உப்பை எடுத்து என்மேல் தூவி விட்டுத் தின்று பார்! அந்தச் சுவையை நீ மறக்கவே முடியாது” என்றது பொன் வண்டு.
முள்ளம் பன்றி அது சொன்னபடி செய்தது. இரண்டு விறகுகளை எடுத்து அடுப்பில் செருகியது. தீப்பெட்டியை எடுத்து வந்தது. குச்சியை உரசியவுடன் நெருப்பு வந்தது. அதை விறகில் வைத்தது. விறகு தீப்பிடித்து எரிந்தது. சட்டி சுட்டு விட்டதா? என்று தொட்டுப் பார்த்தது. பொன்வண்டு
வறுபட்டு விட்டதா? என்று சட்டியைப் பார்த்தது. அங்கே பொன்வண்டைக் காணவில்லை.
“முள்ளம் பன்றியே! உனக்கு நன்றி. எனக்கு விடுதலை கொடுத்ததற்காக நன்றி நன்றி” என்று கூறிக் கொண்டே திறந்திருந்த கதவு வழியாகப் பறந்து சென்று கொண்டிருந்தது பொன் வண்டு.
ஏமாந்து நின்று கொண்டிருந்த முள்ளம் பன்றி, விறகு வெட்டி குடிசை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து ஒடித் தப்பித்துக் கொண்டது.