பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/கடல்

கடல்

தம்பி, தம்பி கடலைப் பார்!
துள்ளிக் குதிக்கும் அழகைப் பார்!

வெள்ளைக் குதிரை போலவே
விழுந்து புரளும் அழகைப் பார்!

நீலப் பாயின் மேலேறி
நீட்டிப் படுக்கும் அலையைப் பார்!

கோலக் கடலின் மடிமீதில்
குதித்து விழுகும் அலையைப் பார்!

நீர்க்குள் புரண்டே களைத்துப் போய்
நிலத்தைத் தாவும் அலையைப் பார்!

கரையின் மடியில் புரள்வதைப் பார்!
கடலுள் மீண்டும் உருள்வதைப் பார்!

தம்பி, தம்பி கடலைப் பார்!
துள்ளிக் குதிக்கும் அழகைப் பார்!