பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/புகைவண்டி விளையாட்டு



புகைவண்டி விளையாட்டு

புகையில் லாமல் கரியில் லாமல்
போகுது வண்டி குப் குப் குப்!
வகைவகை யான வண்டித் தொடர்கள்
வருமாம் பின்னே குப் குப் குப்!

கடைசிப் பெட்டி சின்னப் பெட்டி!
காலில் சிலம்பின் ஒலிகேட்கும்!
அட - அட - முன்னால் இழுபொறி ஒன்று
அந்தப் பிள்ளை மான் கன்று!

குச்சியில் கட்டிய செங்கொடி காட்டக்
குலுங்கி நின்றது தொடர்வண்டி.
பச்சைக் கொடியைக் காட்டினான் ஒருவன்!
பாம்பாய் நகர்ந்தது புகைவண்டி!

உரத்த குரலில் ஊதல் செய்தான்,
ஓங்கி வளர்ந்த ஒரு பையன்!
மரத்தைச் சுற்றிப் போனது வண்டி;
மணல் வெளி எங்கும் சுற்றிடுமாம்!


இடையில் இடையில் நின்றது வண்டி;
ஏறி இறங்கினர் பல பேர்கள்!
நடைதான்! இரும்புச் சக்கரம் இல்லை!
தண்ட வாளம் நடைபாதை!

கால்கள் வலித்தன; உடல்கள் சோர்ந்தன;
களைத்துப் போனது புகைவண்டி!
வாலைப் போலும் நீண்டிணைந் திருந்த
வண்டிகள் கழன்றன ஒவ்வொன்றாய்!

வெட்ட வெளியில் மாலைப் பொழுதில்
விளையா டுவமே புகைவண்டி!
கொட்டும் மழையில் கொளுத்தும் வெயிலில்
குப் குப் வண்டி செல்லாதே!