பாஞ்சாலி சபதம்/22. தருமபுத்திரன் தீர்மாணம்

22. தருமபுத்திரன் தீர்மானம்

தருமனும் இவ்வள வில்-உளத்
தளர்ச்சியை நீக்கியர் உறுதி கொண்டே
பருமங்கொள் குரலின னாய்-மொழி
பகைத்திட லின்றிஇங் கிவைஉரைப் பான்;
'மருமங்கள் எவைசெயினும்-மதி
மருண்டவர் விருந்தறஞ் சிதைத்திடினும்,
கருமமொன் றேஉள தாம்-நங்கள்
கடன்;அதை நெறிப்படி புரிந்திடு வோம். 130

'தந்தையும் வரப்பணிந் தான்;-சிறு
தந்தையும் தூதுவந் ததைஉரைத் தான்,
சிந்தை யன்றினி இல்லை'-எது
சேரினும் நலமெனத் தெளிந்து விட்டேன்,
முந்தையச் சிலைரா மன்-செய்த
முடிவினை நம்மவர் மறப்பது வோ?
நொந்தது செயமாட் டோம்;-பழ
நூலினுக் கிணங்கிய நெறிசெல் வோம். 131

'ஐம்பெருங் குரவோர் தாம்,-தரும்
ஆணையைக் கடப்பதும் அறநெறி யோ?
வெம்பெரு மத யானை-பரி
வியன்தேர் ஆளுடன் இருதினத் தில்
பைம்பொழில் அத்திநகர்-செலும்
பயணத்திற் குரியன புரிந்திடு வாய்,
மொய்ம்புடை விறல் வீமா!'-என
மொழிந்தனன் அறநெறி முழுதுணர்ந்தான். 132