பாஞ்சாலி சபதம்/39. பராசக்தி வணக்கம்

பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம்


39. பராசக்தி வணக்கம்

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
  றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
  றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
  கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
  இருங்கலைப் புலவனாக் குதியே. 1

சரசுவதி வணக்கம்

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
  இயல்நூலார்இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
  வானூலார்இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
  பொருட்கெல்லாம்இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
  எனதுள்ளம் இயங்கொ ணாதோ? 2