பாஞ்சாலி சபதம்/43. சூது மீட்டும் தொடங்குதல்

43. சூது மீட்டும் தொடங்குதல்

வேறு

காயு ருட்ட லானார் -- சூதுக்
களிதொடங்க லானார்
மாய முள்ள சகுனி -- பின்னும்
வார்த்தை சொல்லுகின்றான்: --
‘நீஅழித்த தெல்லாம் -- பின்னும்
நின்னிடத்து மீளும்.
ஓய்வடைந்திடாதே, -- தருமா!
ஊக்க மெய்து’ கென்றான். 14

கோயிற் பூசை செய்வோர் -- சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் -- வீட்டை
வைத்திழத்தல் போலும்,
ஆயிரங்க ளான -- நீதி
யவைஉ ணர்ந்த தருமண்
தேயம் வைத்திழந்தான்; -- சிச்சீ!
சிறியர் செய்கை செய்தான். 15

‘நாட்டு மாந்த ரெல்லாம் -- தம்போல்
நரர்களென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென்’ -- றுலகை
அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் -- பலதாங்
காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி -- மனிதர்
நன்கு செய்ய வில்லை. 16

ஓரஞ் செய்திடாமே, -- தருமத்
துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே, -- பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளு முறைமை -- உலகில்
ஓர்புறத்து மில்லை.
சார மற்ற வார்த்தை! -- மேலே
சரிதை சொல்லு கின்றோம். 17