பாஞ்சாலி சபதம்/61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்

5.ஐந்தாவது சபதச் சருக்கம்


61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்


இவ்வுரை கேட்டதுச் சாதனன் -- அண்ணன்
இச்சையை மெச்சி எழுந்தனன். -- இவன்
செவ்வி சிறிது புகலுவோம். -- இவன்
தீமையில் அண்ணனை வென்றவன்; -- கல்வி
எவ்வள வேனுமி லாதவன்; -- கள்ளும்
ஈரக் கறியும் விரும்புவோன்; -- பிற
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார்; -- தன்னைச்
சேர்ந்தவர் பேயென் றொதுங்குவார்; 60

புத்தி விவேகமில் லாதவன்; -- புலி
போல உடல்வலி கொண்டவன்; -- கரை
தத்தி வழியுஞ் செருக்கினால் -- கள்ளின்
சார்பின்றி யேவெறி சான்றவன்; -- அவ
சக்தி வழிபற்றி நின்றவன்; -- சிவ
சக்தி நெறிஉண ராதவன்; -- இன்பம்
நத்தி மறங்கள் இழைப்பவன்; -- என்றும்
நல்லவர் கேண்மை விலக்கினோன்; 61

அண்ண னொருவனை யன்றியே -- புவி
அத்தனைக் குந்தலை யாயினோம் -- என்னும்
எண்ணந் தனதிடைக் கொண்டவன்; -- அண்ணன்
ஏது சொன்னாலும் மறுத்திடான்; -- அருட்
பு{[பாட பேதம்]: ‘ஈரற்கறியும்’}
-- கவிமணி

கண்ணழி வெய்திய பாதகன் -- ‘அந்தக்
காரிகை தன்னை அழைத்துவா’ என்றவ்
வண்ண னுரைத்திடல் கேட்டனன்; -- நல்ல
தாமென் றுறுமி எழுந்தனன். 62

பாண்டவர் தேவி யிருந்ததோர் -- மணிப்
பைங்கதிர் மாளிகை சார்ந்தனன்; -- அங்கு
நீண்ட துயரில் குலைந்துபோய் -- நின்ற
நேரிழை மாதினைக் கண்டனன்; -- அவள்
தீண்டலை யெண்ணி ஒதுங்கினாள்; -- ‘அடி,
செல்வ தெங்கே’யென் றிரைந்திட்டான். -- ‘இவன்
ஆண்டகை யற்ற புலைய’னென்று -- அவள்
அச்ச மிலாதெதிர் நோக்கியே, 63