பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/'யாரோ ஓர் இளைஞன்'
15. ‘யாரோ ஒர் இளைஞன்’
தன் தந்தையினிடமிருந்து நாராயணன் சேந்தன் கொண்டு வந்த அந்தரங்கத் திருமுகத்தைப்படித்த மறுநாள் காலையிலே குழல்வாய்மொழி திருமுகத்தில் கண்ட கட்டளையை நிறைவேற்றுவதற்குப் புறப்பட்டுவிட்டாள். நாராயணன் சேந்தன் அவளோடு துணையாகச் சென்றான். தாங்கள் புறப்பட்டுச் செல்லும் செய்தி இடையாற்றுமங்கலம் மாளிகையை விட்டு வெளியே பரவிவிடாமல் எச்சரிக்கையும், ஏற்பாடும் செய்து விட்டுத்தான் புறப்பட்டிருந்தார்கள் அவர்கள். ‘மகாமண்டலேசுவரருடைய ஏற்பாட்டின்படி தாங்கள் இருவரும் குமார பாண்டியனைத் தேடிக்கொண்டு செல்வது எவருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்று கருதியதனால்தான் அவர்கள் அதில் அவ்வளவு கண்டிப்பாக இருக்கும்படி நேர்ந்தது.
விழிஞம் துறைமுகத்துக்குப் போய் அங்கிருந்து தனியாக ஒரு கப்பல் ஏற்பாடு செய்துகொண்ட பின் பயணத்தை மேலே தொடர வேண்டுமென்பது அவர்கள் திட்டம்.
நாராயணன் சேந்தன் வைகறையில் சற்று முன்னதாகவே இடையாற்றுமங்கலத்திலிருந்து குதிரையில் புறப்பட்டு விழிஞத்துக்குப் போய்விட்டான். அவன் சென்ற பின்பு குழல்மொழி சிவிகை மூலமாகப் பயணம் செய்தாள். இடையாற்றுமங்கலத்துக்கும் விழிஞத்துக்கும் இடையில் பரந்து கிடந்த தொலைவைக் கடந்து வழிப்பயணம் செய்வதில்தான் எவ்வளவு இன்பம். கடல் அருகில் இருந்ததனால் சுகமான காற்று வீசியது. ஒவியன் அளவு பார்த்து, அழகு பார்த்து, இடப் பொருத்தம் பார்த்து, அள்ளிச் சிதறிய வர்ணங்களைப் போல் அவள் பயணம் செய்த அந்த நெடுவழியில் பல நிறங்களில், பல விதங்களில், பல அடிப்படைகளில், உயிர் வாழ்க்கை என்ற பேரியக்கம் பரவிக் கிடந்தது. பசுமை நிறம் போர்த்த காடுகளும், கூட்டம் கூட்டமாகப் பசுக்களை மேய்க்கும் ஆயர்களும் சூழ்ந்த முல்லை நிலம், குன்றமும் அருவியும், தினைப்புனமும், வேடர்களும் நிறைந்த குறிஞ்சி நிலம், நிலம் என்னும் நல்லாள் நெடும் பசுமை சூல்கொண்டு தோன்றும் வயல் வெளிகளும், தாமரைப் பொய்கைகளும், சிற்றுார்களும் செறிந்த மாறாத நிலம் தாழம்புதரும் மீனவர் குடியிருக்கும் பரதவர் பாக்கமும் மலிந்த நெய்தல் நிலம். இத்தகைய நானிலங்களின் அழகையும், நானாவிதமான வாழ்க்கை முறைகளையும் சிவிகையின் இருபுறமும் பார்த்துக் கொண்டே போனாள் குழல்வாய்மொழி. மண்ணில் உள்ள மேடு பள்ளங்களைப் போல் மனித வாழ்க்கையிலுள்ள மேடுபள்ளங்களையும் அவள் பார்த்தாள். குறிஞ்சி நில வாழ்வின் செழிப்பு மருத நிலத்தில் இல்லை. மருத நில வாழ்வின் வளம் முல்லை நிலத்தில் இல்லை. முல்லை நில வாழ்வின் ஊட்டம் நெய்தல் நிலத்தில் இல்லை! ஆனால் மொத்தமாக வாழ்க்கை என்ற ஒன்று எல்லா இடத்திலும் ஒடிக்கொண்டிருந்தது. நிற்காமல் ஒடிக்கொண்டும் ஓடாமல் நின்றுகொண்டும் நிலத்துக்கேற்ப வளத்துக்கேற்ப, இன்ப துன்பங்களின் மிகுதிக்கேற்ப, உயிரியக்கம் புடை பெயர்ந்துகொண்டிருந்தது.
வேகமாகச் செல்லும் சிவிகையில் பட்டு மெத்தைமேல் அமர்ந்துகொண்டு மழை பெய்வதை வேடிக்கை பார்க்கும்
சிறு பிள்ளையின் ஆசையோடு அந்த நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் பரவிக்கிடக்கும் வளமுறைகளையும் வாழ்க்கையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு போனாள் மகாமண்டலேசுவரரின் செல்லப்பெண்.
இடையிடையே எதை நினைத்துக்கொண்டோ பெரு மூச்சு விட்டாள் அவள், நீண்டு பிறழ்ந்து குறுகுறுத்து நெஞ்சின் நளினமெல்லாம் நிழலாடும் அவள் நயனங்களில் பெருமூச்சு விடும்போதெல்லாம் ஏக்கம் படர்ந்து, விழிகள் ஏங்கும் போதெல்லாம் வதனம் வாடியது. வதனம் வாடும் போதெல்லாம் வட்டப் பிறை நெற்றிசுருங்கியது. நெற்றிசுருங்கும் போதெல்லாம் நெற்றிக்குக் கீழே நாசிக்கு மேலே புருவ நுனிகளின் கூடுவாயில் எதிரெதிரே இரண்டு நெளிகோடுகள் இடுங்கித் தோன்றின. நாகலிங்க மலருக்கு மடிப்பு மடிப்பான இதழ்கள் எப்படி அழகோ, அப்படி அவள் நெற்றிக்கு இது ஒரு தனி அழகு.
அவள் நினைத்தாள். நான் மறுபடியும் இந்தச் சாலை வழியே திரும்பும்போது குமார பாண்டியரோடு திரும்புவேனானால்தான் என் உள்ளத்தில் நிறைவு இருக்கும். என்னை அனுப்பிய என் தந்தையின் உள்ளம் பெருமைகொள்ளும். அவரைத் தேடிச்செல்லும் முயற்சியில் நான் வெற்றி பெருவேனா? தெய்வமே ! என்னை ஏமாற்றிவிடாதே. எனக்கு வெற்றியைக் கொடு. என் மனத்துக்குப் பூரிப்பைக் கொடு. நான் யாரைத் தேடிச் செல்கிறேனோ, அவரை நாங்கள் அதிகம் அலைந்து திரிய நேரிடாமல் எங்கள் கண்களுக்கு முன்னால் காட்டிவிடு. கடலைக் கடந்து சென்றதும் என் உள்ளத்தைக் கடந்து செல்லாமல் உறைந்து, பதிந்துபோனவரை ஒளிக்காதே என்று நெஞ்சுருக வேண்டிக்கொண்டாள் குழல்வாய்மொழி, விழிஞத்துக்குப் போய்ச் சேருகிறவரை அவளுக்கு அதே எண்ணம்தான். -
நண்பகலை எட்டிக்கொண்டிருக்கும் அவளுடைய சிவிகை விழிஞத்தை அடைந்தது. முன்பே அங்கு வந்திருந்த சேந்தன் அவளை எதிர்பார்த்துத் தயாராகக்
காத்துக்கொண்டிருந்தான். மேற்றிசைத் தேசங்களிலிருந்து குதிரைகளும், மதுவகைகளும் கொண்டுவந்து இறக்குமதி செய்யும் கப்பல்கள் இரண்டு மூன்று சேர்ந்தாற்போல் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருந்ததனால் அன்றைக்கு அதிகமான கலகலப்பு இருந்தது. கீழ்த்திசை தீவுகளிலிருந்து கற்பூரம் கண்ணாடிப் பொருள் முதலியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்களும் சில அன்றைக்குத் துறையை அடைந்திருந்தன. சுங்க வரி தண்டுவோராகிய அரசாங்கச் சுங்கக் காவலர்கள் வரும் பொருள்களுக்கும், போகும் பொருள்களுக்கும் மகர மீன் முத்திரை குத்தி வரி வாங்கிக்கொண்டிருந்தனர்.
அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை கலகலப்புக்கிடையிலும் நாராயணன் சேந்தனுடைய திருவுருவம் தனியாகத் தெரிந்தது. குழல்வாய்மொழியின் பல்லக்கு வருவதைப் பார்த்துவிட்டு முன்னால் ஓடிவந்து வரவேற்பதற்காகக் கூட்டத்தில் முண்டி இடித்துக்கொண்டு வந்தான் சேந்தன். சுங்க வரி செலுத்தாமல் பொருள்களைக் கள்ளத் தனமாக கடத்திக்கொண்டு போகிறவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மாறு வேடத்தோடு பல காவலர்கள் கூட்டத்துக்கிடையே உலாவிக் கொண்டிருப்பார்கள். அவசரமாக இடித்து முந்திக்கொண்டு விரைந்து வந்த சேந்தன் அத்தகைய சுங்கக் காவலன் ஒருவன் மேல் மோதிக்கொண்டான். அந்தக் காவலன் சேந்தனுடைய இரண்டு கைகளையும் சேர்ந்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு அவனையே உற்றுப் பார்த்தான். மார்புக்குக் கீழ் இடுப்புக்கு மேல் சரிந்து முன்தள்ளிய சேந்தனின் தாழிப் பெரு வயிற்றில் அவனுடைய பார்வை நிலைத்தது. அவனுடைய பார்வையைக் கண்டதும் நாராயணன் சேந்தனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்? சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான் நாராயணன் சேந்தன். நா. பார்த்தசாரதி 40?
“மரியாதையாக வெளியில் எடுத்துவிடு ! சுங்கம் கொடுக்காமல் ஏமாற்றுவதற்காக எந்தப்பொருளை இப்படி இடுப்பில் வைத்து மறைத்து வைத்துக் கட்டிக்கொண்டு போகிறாய்? அவன் மிரட்டினான்.
இரண்டு விலாப்புறமும் வெடித்துவிடும் போல் பெரிதான சிரிப்பை அடக்கிக்கொள்ளச் சிரமமாய் இருந்தது சேந்தனுக்கு. உலகத்திலுள்ள அத்தனை காவல்காரர்களும் தங்கள் கண்முன் நட்மாடுகிற எல்லோரையும் திருடர்கள் என்று சந்தேகப்படுகிறார்கள். அதேபோல் உலகத்திலுள்ள அத்தனை திருடர்களும் தங்களை உற்றுப் பார்க்கிற எல்லோரையும் காவற்காரர்களென்று பயப்படுகிறார்கள் என்று சேந்தன் தன் மனத்தில் நினைத்துக்கொண்டான்.
“உண்மையைச் சொல்லப் போகிறாயா? உதைக் கட்டுமா? காவற்காரனுடைய குரலில் கடுமை ஏறியது. கண்களை உருட்டிக் கோபம் தோன்ற விழித்தான் அவன்.
“ஆகா? என்ன அற்புதமான கேள்வி கேட்டாய் அப்பா நீ? உன் கண் பார்வையின் கூர்மையே கூர்மை, உலகத்தில் இதுவரையில் எந்த மன்னருடைய அரசாட்சியிலும் நான் இடுப்பில் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பொருளுக்குச் சுங்கம் கேட்டதில்லை. இத்ோ நன்றாகப் பார்த்துக்கொள்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே தன் மேல் அங்கியை விலக்கிக் காட்டினான் சேந்தன்.
தொந்திமுன் தள்ளிய அவன் வயிற்றைப் பார்த்து அந்தக் காவலன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“பூ! வயிறுதானா இவ்வளவு பெரிதாக முன்னால் துருத்திக் கொண்டிருக்கிறது? நான் எதையோ ஒளித்துக் கொண்டு போகிறாய் என்றல்லவா நினைத்தேன்?
“நினைப்பாய் அப்பா! நன்றாக நினைப்பாய்! நீ ஏன் நினைக்கமாட்டாய்? சுயநினைவோடுதான் பேசுகிறாயா, அல்லது அதோ கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் யவனத்து மதுத்தாழியைப் பதம் பார்த்துவிட்டுப் பேசுகிறாயா?” - -
பர. கே. 08
காவலன் சிறிது நாணமுற்றுத் தலைகுனிந்து நின்றான். சேந்தன் விலாவிறச் சிரித்தான். அந்தச் சிரிப்பால் காவற்காரன் பொறுமையிழந்தான்.
“ஏன் ஐயா! சும்மா விழுந்து விழுந்து சிரிக்கிறாய்? ஆனாலும் மனிதன் உன்னைப்போல் இப்படிப் பருமனாக இருக்கக்கூடாது. உனக்கு ஒரு விஷயம் எச்சரிக்கை செய்து வைக்கிறேன். கேட்டுக்கொண்டு பேசாமல் போய்ச் சேர். குதிரை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக யவன வணிகர்கள் சேர நாட்டு யானைக்குட்டிகளை ஏற்றுமதி செய்துகொண்டு போகவேண்டுமென்று நெடு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘யானைக்குட்டி பருமனாகக் குட்டையாக இருக்கும் என்பதைத் தவிர அவர்களுக்கு அதைப்பற்றி வேறு விவரம் தெரியாது. நீ எங்கேயாவது தப்பித் தவறி யவனக் கப்பல்களுக்குப் பக்கமாகப் போய் நின்று தொலைக்காதே. யானைக்குட்டி பார்க்காத யவனர்கள் ‘இதுதான் யானைக்குட்டி என்று உன் முதுகில் மகரமுத்திரை குத்தச் சொல்லிக் கப்பலில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய்விடப் போகிறார்கள் என்று சுடச் சுடச் சேந்தனைப் பதிலுக்குக் கேலி செய்து தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டான் அந்தக் காவலன். -
இந்தச் சமயத்தில் பல்லக்கிலிருந்து இறங்கிய குழல்வாய்மொழி சேந்தனைக் கைதட்டிக் கூப்பிடவே, நாராயணன் சேந்தன் அந்தக் காவலனோடு வம்பளப்பதை நிறுத்திக் கொண்டு விரைந்து நடந்தான்.
“அம்மணி! வாருங்கள், நேரமாக்கி விட்டீர்களே? நான் அப்போதிருந்து. உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். சிவிகையை இன்னும் விரைவாகக் கொண்டு வரச்சொல்லி ஆட்களை விரைவு. படுத்தி வந்திருக்கலாம் நீங்கள்” என்று குழல்வாய்மொழியின் அருகில் சென்று சேந்தன் அடக்க ஒடுக்கமாகக் கூறினான்.
“சுமப்பவர்களும் மனிதர்கள்தானே ? அவர்களை அடித்தா துரத்த முடியும்?. சரி! நீங்கள் முன்னால் வந்து.
கப்பலுக்கு ஏற்பாடு செய்துவிட்டீர்களோ இல்லையோ?” என்று அவள் கேட்டாள். - - -
“ஓ! அந்த ஏற்பாடெல்லாம் வந்தவுடனேயே முடித்து விட்டேன். அதோ கப்பல் தயாராக நிற்கிறது. நாம் புறப்பட வேண்டியதுதான்” என்றான் சேந்தன். . . . . . “
சிவிகையையும், அதைத் தூக்கிக்கொண்டு வந்தவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டுக் கப்பல் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார்கள் சேந்தனும், குழல்வாய்மொழியும். சிறிதானாலும் உயர்ந்த வசதிகள் நிறைந்த அழகான கப்பல் அது. தாங்கள் போகிற காரியத்தின் இரகசியத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தக் கப்பூலைத் தனியாகத் தங்களுக்கென்று மட்டும் ஏற்பாடு செய்திருந்தான் சேந்தன். குழல்வாய்மொழியையும், அவனையும் தவிர மாலுமியும், இரண்டொரு கப்பல் ஊழியர்கள் மட்டுமே அதில் இருந்தனர். -
கப்பல் புறப்படுவதற்கு முன் சேந்தனும் குழல்வாய்மொழியும் கரையில் நின்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிரிப்பு மலர்ந்த முகத்தோடு கவர்ச்சி நிறைந்த உடையணிந்து கொண்டிருந்த ஓர் இளைஞன் அவர்களுக்கு அருகில் வந்தான். பெண்மைச் சாயல் கொண்ட அந்த இளைஞனின் நீண்ட முகம் பார்க்கிற எவரையும் ஒரு கணம் மயக்காமல் போகாது. ஆடவர் பெண்மையை அவாவும் தோற்றம் அது. பெண்ணுக்கு இருக்கவேண்டிய ஒளிவு மறைவு உட்பொருளுள்ள சிரிப்பும் இதழ்களின் சிவப்பும், அந்த வாலிபனுக்கு இருப்பதைச் சேந்தன் வியப்போடு பார்த்தான். - - -
“ஐயா! இந்தக் கப்பலில் உங்களோடு பிரயாணம் செய்ய என்னையும் அனுமதிப்பீர்களா?” ...
‘அடேடே குரல்கூட இனிமை சொட்டுகிறது. இந்தப்பயல் மட்டும் பெண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் உலகத்திலுள்ள அத்தனை அரசகுமாரர்களும் இவளை யார் மணந்து கொள்வதென்ற போட்டியில் அடித்துக்கொண்டு
கிடப்பார்கள் என்று மனத்துக்குள் எண்ணியவனாய், “தம்பி, இந்தக் கப்பலில் வேறு யாரையும் ஏற்றிக்கொள்வதற்கில்லை. நீ போய் வேறு கப்பல்களைப் பார்” என்று பதில் சொன்னான் சேந்தன். அந்த இளைஞன் சேந்தன் கூறியதைக் கேட்டுக் கொண்ட பின்னும் அங்கிருந்து போகாமல் நின்றான்.
“சகோதரி! நீங்களாவது மனம் இரங்குங்கள். நான் பயந்த சுபாவம் உள்ளவன். உங்களைப்போல் துணையோடு பயணம் செய்தால் எனக்கும் நல்லது” என்று குழல்வாய் மொழிக்கு அருகில் போய் நின்றுகொண்டு கெஞ்சினான். பெண்மையின் எழிலும் ஆண்மையின் மிடுக்கும் ஒன்றுபட்டுத் தோன்றிய அந்த விடலைப் பிள்ளையை நிமிர்ந்து நன்றாகப் பார்த்தாள் குழல்வாய்மொழி. அவள் கண்களைக் கூச வைத்தன அவன் பார்த்த பார்வையும், சிரித்த சிரிப்பும். சினத்தோடு முகத்தைச் சுளித்துப் பார்வையைக் கடுமையாக்கினாள் குழல்வாய்மொழி. அதன் பின்பே இளைஞன் சிரிப்பதை நிறுத்தினான். - “தம்பி! நீ பயந்த சுபாவம் உள்ளவன் என்கிறாய்! ஆனால் இடையில் பெரிதாக உறையிட்ட வாள் தொங்குகிறது. பொய்யும் புரட்டும் பேசுவதற்குக் கொஞ்சம் வயதான பின்னர் கிளம்பியிருக்கலாமே நீ! உன் முகத்தைப் பார்த்தால் பால் வடிகிறது. பேச்சைப் பார்த்தால் சூது இருக்கிறதே! மீசைகூட இன்னும் அரும்பவில்லை, அதற்குள் இதெல்லாம் எங்கேயப்பா கற்றுக்கொண்டாய் நீ?” என்று சேந்தன் கடுமையான குரலில் இரைந்தான்.
“ஐயோ! கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் பார்த்தால் நல்லவர் மாதிரித் தெரிந்தது, உதவி செய்வீர்க ளென்று நம்பிக் கேட்டேன்.” -
“போ! போ! அதெல்லாம் முடியாது. இந்தக் கப்பலில் இடம் கிடையாது.”
“மனத்தில் இடமிருந்தால் கப்பலில் இடம் இருக்கும். கொஞ்சம் தயவு செய்யுங்கள்."
‘பேசாமல் போகிறாயா? கப்பல் ஊழியனைக் கூப்பிட்டுப் பூசைக்காப்பு முதுகில் போடச் சொல்லட்டுமா ?” சேந்தனின் ஆத்திரத்தைக் கண்டு அந்த இளைஞன் கன்னங் கனியச் சிரித்தான். குழல்வாய்மொழி தன் மனத்தை எவ்வளவுதான் அடக்கிக் கட்டுப்படுத்திப் பார்த்தாலும் அவள் விழிகள் அவளையும் மீறி அந்தச் சிரிப்பை ஆவலோடு ஒரக் கண்ணால் காண விரைந்தன. பொல்லென்று பூத்து மறையும் முல்லைப்பூ வரிசைபோல் அப்படி ஒர் அழகிய சிரிப்பு அது. சிரித்துக் கொண்டே அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான் அந்த இளைஞன். அவன் சிறிது தள்ளிச் சென்ற பின்பு சேந்தன் குழல்வாய்மொழியைப் பார்த்து, “அம்மணி! இந்த மாதிரி விடலைப் பயல்களை நம்பவே கூடாது. சிரிப்பையும் பேச்சையும், முகமலர்ச்சியையுமே முதலாக வைத்துக் கொண்டு வஞ்சகம், ஏமாற்று ஆகிய பண்டங்களை விற்பனை செய்யும் அறவிலை வணிகர்கள் இப்போது உலகத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். கவனமாக இருக்க வேண்டும். புலியையும் சிங்கத்தையும் பார்த்துப் பயந்து கொண்டிருந்தது போய் இப்போது மனிதர்களைப் பார்த்தே மனிதர்கள் பயப்படவேண்டியிருக்கிறது. புலிக்கும், சிங்கத்துக்கும், கெட்டவற்றைத் திட்டமிட்டுக்கொண்டு செய்வதற்கு மனம் என்ற ஒன்று இல்லை. மனிதர்களுக்கு அது இருக்கிறது” என்று பெரிய அற நூலாசிரியனைப் போல் பேசினான் சேந்தன். - - - “கீழே நின்று கொண்டிருந்தால் மறுபடியும் அந்த இளைஞன் வந்து ஏதாவது கேட்டுக் கெஞ்சுவான். அல்லது வல்வழக்குப் பேசி வம்பு செய்வான். வாருங்கள்! கப்பலில் போய் இருந்து கொண்டு பேசலாம்” என்று சேந்தனைக் கூப்பிட்டுக் கொண்டு கப்பலுக்குள் ஏறிச் சென்றாள் குழல்வாய்மொழி.
கப்பலுக்குள் சென்றபின் அவர்கள் பேச்சு, குமார பாண்டியனை எந்தெந்தத் தீவுகளில் தேடுவது? எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்பது பற்றி நிகழ்ந்தது. சிறிது
நாழிகைக்குப் பின் கப்பல் மாலுமி வந்து, புறப்படலாமா? என்று கேட்டபோது அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். நங்கூரக் கயிற்றை அவிழ்த்துவிட்டதும் கப்பல் மெல்ல நகர்ந்தது. கப்பலுக்கும் கரைக்கும் நடுவே கடலின் பரப்பு அதிகமாகி விரிந்துகொண்டே வந்தது.
“வாருங்கள்! கீழ்த்தளத்தில் நீங்கள் தங்கிக் கொள்வதற்கென்று ஓர் அறையை எல்லா வசதிகளோடும் தனியே ஒழித்து வைக்கச் செய்திருக்கிறேன். அதை உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்று குழல்வாய்மொழியைக் கீழ்த்தளத்துக்கு அழைத்துச் சென்றான் நாராயணன் சேந்தன். எந்தக் கப்பலிலும் இருக்கமுடியாத அளவு அலங்கரிக்கப் பட்டு அரசகுமாரிக்கு ஒப்பான ஓர் இளம்பெண் தங்குவதற்குரிய சகல வசதிகளுடனும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டே அந்த அறையின் கதவைத் திறந்தான் நாராயணன் சேந்தன்.
கதவைத் திறந்ததும் கலகலவென்று சிரிப்பொலியுடன் அந்த அறைக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்த போது சேந்தனும் குழல்வாய்மொழியும் பேயறைபட்டவர்களைப் போல் முகம் வெளிறிப் போய்த் திகைத்து நின்றார்கள். “நானாகவே இந்தக் கப்பலில் இடம் தேடி எடுத்துக்கொண்டதற்காக என்னை மன்னிக்கவேண்டும். நான் என்ன செய்வேன்? நேர்வழி மூடியிருந்தது. குறுக்கு வழியை நானே திறந்துகொண்டேன்!” பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டவன் போலச் சிரித்துக்கொண்டே கூறினான் அந்த எழில் வாலிபன்.