பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கடற் காய்ச்சல்
25. கடற் காய்ச்சல்
சக்கசேனாபதி பதறிப்போனார். நடுக்கடலில் குமார பாண்டியனுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. சிலருடைய உடல் இயல்புக்குத் தொடர்ந்தாற் போல் கடலில் பயணம் செய்வது ஒத்துக் கொள்ளாது. இராசசிம்மனுக்குக் கடற்காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் இருந்ததை முன் கூட்டியே அவர் உணர்ந்து
கொண்டார். சுருண்டு சுருண்டு படுத்துக் கொள்வதையும், சோர்வடைந்து தென்படுவதையும் கொண்டே கடற்காய்ச்சல் வரலாமென்று அநுமானித்திருந்தார். ஆனால் அது இவ்வளவு கடுமையான நிலைக்கு வந்துவிடுமென்று அவர் நினைக்கவில்லை.
அன்று மாலை நேரத்துக்குள் காய்ச்சல் மிகுதியாகி விட்டது. குமார பாண்டியன் தன் நினைவின்றிக் கிடந்தான். ஏற்கெனவே அவனுக்கு ஒற்றை நாடியான உடல், காய்ச்சலின் கொடுமையால் அந்த உடல் அல்லித்தண்டாகத் துவண்டு போய்விட்டது. வெறும் காய்ச்சலோடு மட்டும் இருந்தால் பரவாயில்லை. மன உளைச்சலும் சேர்ந்து கொண்டது. தன் செயலைப் பற்றித் தாய் என்ன நினைப்பாள் ? மகாமண்டலேசுவரர் என்ன நினைப்பார்: அன்பை எல்லாம் அள்ளிச் சொரிந்து ஒட்டிக்கொண்டு பழகிய மகாமண்டலேசுவரரின் அருமைப்பெண் குழல்வாய்மொழி என்ன எண்ணுவாள்?’ என்று இத்தகைய கவலைகள் வேறு குமார பாண்டியன் மனத்தைக் கலக்கியிருந்தன. அவன் கப்பல் தளத்தில் படுத்துக்கொண்டு தன்னை மறந்து உறங்கியபோது ஒரு கனவு கண்டிருந்தானே, அந்தக் கனவும் அவன் உள்ளத்தைக் குழப்பிக்கொண்டிருந்தது.
காய்ச்சல், சோர்வு, கலக்கம், குழப்பம் எல்லாவற்றுக்கும் நடுவில் அவன் நெஞ்சுக்கு ஆறுதலான நினைவு ஒன்றும் கோடையின் வெப்பத்தினிடையே சிலுசிலுக்கும் தென்றலைப் போல் ஊடுருவிக் கொண்டிருந்தது அந்த நினைவு. அது தான் மதிவதனி என்ற இனிய கனவு! பழுத்த மாங்காயில் காம்போரத்துச் செங்கனிகளின் செழுமை போல் கன்னங் குழியச் சிரிக்கும் மதிவதனியின் கன்னிச்சிரிப்பு மூடினாலும் திறந்தாலும் அவன் இமைகளுக்குள்ளேயே நிறைந்து நின்றது. பூவுக்குள் மர்மமாக மறைந்து நிற்கும் நறுமணம் போல அந்தப் பெண்ணின் சிரிப்புக்குள் ஏதோ ஒன்று மறைந்திருந்து தன்னைக் கவர்வதை அவன் உணர்ந்தான். காய்ச்சலின் வெப்பம் அவன் உடலெங்கும் கனன்றது. மதிவதனியைப் பற்றிய நினைவோ அவன் உள்ளமெங்கும் குளிர்வித்தது. சக்கசேனாபதி
அவன் தலைப்பக்கத்தில் கன்னத்தில் ஊன்றிய கையுடன் அமர்ந்திருந்தார்.
குமார பாண்டியனையும் அவன் கொண்டுவரும் பாண்டிய மரபின் அரசுரிமைச் சின்னங்களையும் பத்திரமாக ஒரு குறைவுமின்றி ஈழ நாட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பு அவருடையதுதானே? அவர் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்பட முடியும்? இலங்கைப் பேரரசன் காசிபனின் உயிர் நண்பனான இராசசிம்மனைக் கடற் காய்ச்சலோடு அழைத்துக் கொண்டு போய் அவன் முன் நிறுத்தினால் அவனுடைய கோபம் முழுவதும் சக்கசேனாபதியின் மேல் தான் திரும்பும். * - -
காசிபனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடாமல், கப்பல் ஈழமண்டலக் கரையை அடையுமுன்பே குமார பாண்டியனுக்குச் சுகம் ஏற்பட்டு அவன் பழைய உற்சாகத்தைப் பெறவேண்டுமென்று எல்லாத் தெய்வங்களையும் மனத்துக்குள் வேண்டிக்கொண்டிருந்தார் சக்கசேனாபதி. இளவரசன் இராசசிம்மனின் உடலுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கப்பலைக்கூட வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செலுத்த வேண்டுமென்று மாலுமியைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்திருந்தார். கடற் காய்ச்சலை விரைவாகத் தணிப்பதற்குப் போதுமான மருந்துகள் கப்பலிலேயே இருந்த போதும் அவருக்குக் கவலை என்னவோ ஏற்படத்தான் செய்தது. எல்லோருக்குமே கப்பலில் அந்த ஒரே கவலைதான் இருந்தது. கப்பலைச் செலுத்தும் மாலுமி, கப்பலின் பொறுப்பாளனான கலபதி, சாதாரண ஊழியர்கள் எல்லோரும் குமார பாண்டியனுக்குச் சீச்கிரமாக உடல்நலம் ஏற்படவேண்டுமே என்ற நினைவிலேயே இருந்தனர். இன்னும் இரண்டொரு நாள் பயணத்தில் கப்பல் இலங்கைக் கரையை அடைந்துவிடும். கப்பலின் வேகத்துக்கும், வேகமின்மைக்கும் ஏற்பக் கூடக் குறைய ஆகலாம். . - -
நீண்ட பகல் நேரம் முழுதும் இராசசிம்மன் அன்றைக்குக் கண் விழிக்கவேயில்லை, உணவும் உட்கொள்ளவில்லை. தூக்கத்தில் அவன் என்னென்னவோ பிதற்றினான். மாலையில்
பொழுது மங்கும் நேரத்திற்கு அவன் கண் விழித்தான். தாமரையின் சிவப்பான உட்புறத்து அகவிதழைப் போல் அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. ஈரக்கசிவும், கலக்கமும் கூடத் தென்பட்டன.
“இளவரசே! காய்ச்சல் உடம்போடு நீங்கள் இப்படிப் பசியையும் சேர்த்துத் தாங்கிக் கொண்டிருப்பது நல்லதில்லை. ஏதாவது கொஞ்சம் உணவு உட்கொள்ளுங்கள்” என்று சக்க சேனாபதி கெஞ்சினார். - ‘நான் என்ன செய்யட்டும் ? எனக்கு உணவு வேண்டியிருக்கவில்லை. வாயெல்லாம் சுவைப் புலன் மரத்துப்போய்க் கசந்து வழிகிறது. என்னை வற்புறுத்தாதீர்கள்” என்று குமார பாண்டியனிடமிருந்து பதில் வந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டே தளத்தில் விரித்திருந்த விரிப்பில் தள்ளாடி எழுந்து உட்கார்ந்தான். அவனுக்கு இருந்த தளர்ச்சியைக் கண்டு பதறிக் கீழே சாய்ந்துவிடாமல் சக்கசேனாபதி முதுகுப்பக்கமாகத் தாங்கிக் கொண்டார். நோயுற்றுத் தளர்ந்திருக்கும் அந்த நிலையிலும் இராசசிம்மனின் முக மண்டலத்தில் யாரையும் ஒரு நொடியில் கவர்ந்து தன்வயமாக்கிக் கொள்ளும் அந்த அழகுக் குறுகுறுப்பு மட்டும் குன்றவேயில்லை. சக்கசேனாபதியின் பருத்த தோளில் சாய்ந்து கொண்டு பெருமூச்சுவிட்டான் அவன்.
“ஈழ நாட்டுக் கரையை அணுகுவதற்கு முன் உங்களுக்கு உடல் தேறவில்லையானால் காசிய மன்னருக்கு நான் காரணம் சொல்லி மீளமுடியாது. நான் சரியாகக் கவனித்து. அழைத்துக்கொண்டு வராததனால்தான் உங்களுக்குக் காய்ச்சல் வந்திருக்க வேண்டுமென்று என்னைக் கோபித்துக் கொள்ளத் தொடங்கிவிடுவார்” என்று சக்கசேனாபதி கூறியதற்கு இராசசிம்மன் உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது நேரம் நிதானமாக எதையோ சிந்தித்துவிட்டுப் பதில் சொல்லுகிறவனைப்போல், “சக்கசேனாபதி உடற் காய்ச்சலை விட இப்போது மனக் காய்ச்சல்தான் அதிகமாகிவிட்டது என்று தழுதழுக்கும் குரலில் சொன்னான். அந்தச் சொற்களைச் சொல்லும்போது உணர்ச்சிக் குமுறலின் வேதனையால்
வார்த்தைகள் தடைப்பட்டு வந்தன. நெஞ்சு பலமாக விம்மித் தணிந்தது. சக்கசேனாபதி அதைக் கண்டு பயந்தார். அவனது நெஞ்சை மெதுவாகத் தடவி விட்டுக்கொண்டவாறே, “இளவரசே காய்ச்சல் உள்ளபோது இப்படி உணர்ச்சிவசப்பட்டுப் பேசவோ, நினைக்கவோ கூடாது. எதைப்பற்றியும் மனத்தைக் கவலைப்படவிடாமல் நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
“என்னால் அப்படி நிம்மதியாக இருக்க முடியவில்லையே? சக்கசேனாபதி முள்ளில் புரண்டுகொண்டு பஞ்சணையாக நினைத்துக் கொள்வதற்கு நான் யோகியாக இருந்தால் அல்லவா முடியும்? ஆசையும் பாசமும் ஆட்டிவைக்க ஆடும் சாதாரண மனிதன் தானே நானும் ? நான் செய்துவிட்டனவாக என்னாலேயே உணரப்படும் என் தவறுகள் நிழல்போல் என்னைச் சாடுகின்றனவே? இராசசிம்மன் மனவேதனையோடு இப்படிச் சொல்லியபோது அவனுக்கு என்ன பதில் சொல்லுவதென்று சக்கசேனாபதிக்கு விளங்கவில்லை.
அவர்கள் இருவருக்கும் இடையே சில விநாடிகள் மெளனம் நிலவியது. இருந்தாற்போலிருந்து இராசசிம்மன் திடீரென்று குமுறி அழ ஆரம்பித்து விட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் அவர். அவனை வேதனைக் குள்ளாக்கியிருக்கும் எண்ணம் என்னவென்று சக்கசேனாபதியினால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. உடலில் நோய் வேதனை அதிகமாகும்போது சில மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அசட்டுத்தனமாக வாய்விட்டு அழுது கொள்வதுண்டு, ‘குமார பாண்டியனுடைய அழுகையும் அந்த வகையைச் சேர்ந்ததுதானோ” என்று எண்ணி வருந்தினார்.
“இளவரசர் இப்படி வரவரச் சிறு குழந்தையாக மாறிக் கொண்டு வந்தால் நான் எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? எதற்காக, எதை நினைத்துக் கொண்டு இப்போது நீங்கள் அழுகிறீர்கள்? அவன் முகத்தருகே நெருங்கிக் குனிந்து விசாரித்தார் அவர். .
“இத்தனை நாட்களாக இடையாற்றுமங்கலம் மாளிகையில் போய் யாருக்கும் தெரியாமல் திருடனைப்போல்
ஒளிந்திருந்தேனே! என் அன்னையைப் போய்ப் பார்க்கவேண்டுமென்று என் பாழாய்ப்போன மனத்துக்குத் தோன்றவே இல்லையே? சக்கசேனாபதி பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று என் தாய் அடிக்கடி ஒரு பழமொழியைச் சொல்லுவாள். அதற்கேற்றாற் போலவே, நானும் நடந்து கொண்டிருக்கிறேன். στoor செயல்களையெல்லாம் தெரிந்து கொண்டால் என் தாயின் மனம் என்ன பாடுபடும்? என்னால் யாருக்கு என்ன பயன்? எல்லோருக்குமே கெட்ட பிள்ளையாக நடந்து கொண்டு விட்டேன். இதையெல்லாம் நினைத்தால் எனக்கே அழுகை அழுகையாக வருகிறது. மகாமண்டலேசுவரர் என்னைப் பற்றி எவ்வளவோ நம்பிக்கையும் நல்ல எண்ணமும் வைத்துக்கொண்டு இடையாற்று மலங்கலத்தில் கொண்டுபோய்த் தங்கச் செய்திருந்தார். நான் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து ஏமாற்றி அரசுரிமைப் பொருள்களைக் கவர்ந்துகொண்டு வந்துவிட்டேனே!” என்று சக்கசேனாபதியிடம் அழுதுகொண்டே சொல்லிப் புலம்பினான் அவன். என்ன கூறி எந்த விதத்தில் அவனைச் சமாதானப் படுத்துவதென்றே அவருக்குத் தெரியவில்லை.
“இல்லாததையெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு அழாதீர்கள். சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி நடத்திக்கொண்டு போகின்றனவோ, அப்படித்தானே நாம் நடக்க முடியும்? உங்கள்மேல் என்ன தவறு இருக்கிறது? மகாமண்டலேசுவரர் உங்களை அவ்வளவு கட்டுக்காவலில் இரகசியமாக வைக்காவிட்டால் நீங்கள் உங்கள் அன்னையைச் சந்தித்திருக்க முடியுமா. போரும், பகைவர் பயமும் உள்ள இந்தச் சூழலில் அரசுரிமைச் சின்னங்கள் இடையாற்று மங்கலத்தில் இருப்பதைவிட இலங்கையில் இருப்பதே நல்லது” என்று ஒருவிதமாக ஆறுதல் சொன்னார்.
“என்னை அங்கே கூட்டிக்கொண்டுபோய் அவற்றைக் காண்பியுங்கள்” என்று கப்பலில் அரசுரிமைப் பொருள்கள் வைத்திருந்த அறையைச் சுட்டிக் காட்டிப் பிடிவாதம் பிடித்தான் அவன.
மெல்ல எழுந்திருக்கச் செய்து நடத்திக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தார். குழந்தை ஆச்சரியத்தோடு பார்ப்பதுபோல் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்த்தான் இராசசிம்மன். அந்த அறையிலிருந்து வெளிவந்ததும், “என்னை உடனே மேல் தளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனால்தான் ஆயிற்று!” என்று முரண்டு பிடித்தான். அந்தத் திறந்த வெளிக் காற்று காய்ச்சல் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்று அவர் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். அவன் கேட்கவில்லை, மேல் தளத்தில் கூட்டிக்கொண்டுபோய் நிறுத்தினார். மேலே மால்ைநேரத்து வானின் செம்பொன்னிறச் செம்முகில்கள் ஆகாயவெளியைத் தகத்தகாயம் செய்து கோலமிட்டிருந்தன. வானின் பிறைச்சந்திரனை எட்டிப் பிடித்துவிடுவதுபோல் அலைக் கைகளை மேல் எழுப்பியது நீலக் கடல், இராசசிம்மன் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு விழிகளை இமைக்காமல், கடலையும், வானவெளியையும், நாற்புறத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். அந்த வானில் கடலில், அலைகளில், மேகங்களில், பிறைச்சந்திரனில் அவன் எதைக் கண்டானோ? “சக்கசேனாபதி கீழே போய் அந்த வலம்புரிச் சங்கை எடுத்து வாருங்கள்” என்றான். அவர் கீழே சென்றார். திரும்பிய பக்கமெல்லாம் செம்பவழத் தீவில் சந்தித்த அந்த அழகியின் முகமே தெரிவதுபோலிருந்தது இராசசிம்மனுக்கு. அந்த அற்புதமான இயற்கையின் சூழல் அவனை என்னவோ செய்தது. அவனுடைய நாவின் நுனியின் சில சொற்கள் துடித்தன. அவன் உள்ளம் ஏதோ ஒன்றை உணர்ந்து எதையோ அழகாக வெளியிடக் கிளர்ந்து, அடுத்தவிநாடி அவன் பாடத் தொடங்கினான். அலை ஓசையை இடையிட்டு அவன் இனிய குரல் ஒலித்தது. அந்த இனிமையில் மதிவதனியின் ...நினைவு அவனுள் சுழன்றது. -
“மின்னலின் ஒளியெடுத்து முகில்தனில்
குழல் தொடுத்துப் பொன்னில் நிறம்படைத்துப்
பிறையினில் நுதல் மடுத்துப்
புன்னகை முல்லையாகிப்
புருவங்கள் விற்களாகிக்
கன்னலின் சுவை குயிற்றிக்
கருவிளைக் கண்களாக்கி
மென்நடை பரதமாகி
மெல்லிதழ் பவழமாகிப்
பன்னெடுங் காலமென்னும்
படைப்பினுக் கழகுகாட்டிக்
கன்னிமை யென்னுமோர்
கற்பகம் பழுத்ததம்மா”
சங்கோடு வந்து நின்ற சக்கசேனாபதி அந்த இன்னிசை வெள்ளத்தில் சொக்கி நின்றார். “உங்களுக்கு இவ்வளவு நன்றாகப் பாடவருமா?” என்ற அவர் கேள்விக்குப் பதில் கூறாமலே அவரிடமிருந்து சங்கை வாங்கிக் கொண்டான் அவன்.