பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/தளபதி திடுக்கிட்டான்

34. தளபதி திடுக்கிட்டான்

இடையாற்றுமங்கலத்து நிலவறையிலிருந்து ஆயுதங்களை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டதாகச் செய்தி தெரிவிப்பதற்கு அரண்மனைக்கு வந்த அம் பலவன் வேளானை நிதானமாகத் தங்கச் செய்து மறுநாள் காலைவரை நிறுத்தி வைத்து விவரமாகச் சொல்லும்படி கேட்டார் மகாமண்டலேசுவரர். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆழமாகச் சிந்திப்பவருக்கே உரிய இயல்பான நிதானம் அவருக்கு வந்துவிடும்.

“அப்பா! மற்றவர்கள் அரைக்கால் நாழிகையில் உண்டு முடித்துவிடக்கூடிய ஒர் உணவுப் பொருளை, நீங்கள் சாப்பிட்டால் அரை நாழிகை உட்கார்ந்து நிதானமாக மென்று தின்கிறீர்களே?” என்று அவருக்கு உணவு பரிமாறும் போதெல்லாம் அவரது செல்வக் குமாரி குழல்வாய்மொழி அவரைக் கேட்பாள். அவர் அப்போது தம் புதல்வியை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே ஒருவிதமாகச் சிரித்தவாறு மறுமொழி கூறுவார்:

“குழல்வாய்மொழி! உணவை மட்டுமல்ல; காதிலும், கண்ணிலும், மனத்திலும் படுகிற விஷயங்களைக்கூட இப்படி மென்று தின்று உண்டால்தான் சீரணமாகிறது எனக்கு. அறிவும் சிந்தனையும் உள்ளவர்களுக்கு இந்த நிதானம் ஒரு பலவீனம்தான், அம்மா! ஆனால் எங்களுடைய ஒரே பலமும் இந்த நிதானத்தில்தான் அடங்கியிருக்கிறது.”

அடுத்தடுத்துத் தொடர்ந்து இடையாற்றுமங்கலத்தில் கொள்ளையும், திருட்டும் நடப்பது பரபரப்பூட்டக் கூடிய தொரு செய்தியானாலும் அவர் பரபரப்படைகிற மாதிரி வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

“வேளான்! பதற்றப்படாதே, நடந்ததையெல்லாம் ஆர அமரச் சிந்தித்து நிதானமாக எனக்குச் சொல்” என்று அவனைக் கேட்டார் அவர்.

“சுவாமி ஆயுதங்களைக் கடத்திக்கொண்டு போக வந்தவர்கள் யார், அவர்கள் எப்போது தீவின் எல்லைக்குள் பிரவேசித்தார்கள் என்ற விவரங்களெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆயுதங்களையெல்லாம் படகில் ஏற்றிப் பறளியாற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது தற்செயலாகக் கரைப் பக்கம் வந்த யவனக் காவல் வீரர்கள் பார்த்துவிட்டனர். உடனே அவர்கள் ஓடிவந்து தோணித்துறைக்கு அருகில் குடிசையில் படுத்துக் கொண்டிருந்த என்னை எழுப்பி, ஆற்றில் போகும் படகு யாருடையதென்று விசாரித்தார்கள். நான் எனக்குத் தெரியாது என்றேன். உடனே எல்லோருமாக ஓடிப் போய்ப் பார்த்தோம். நிலவறை, விருந்து மாளிகை எல்லாம் திறந்து கிடந்தன. அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்து பார்த்தோம். என்ன நடந்திருக்க வேண்டுமென்று எங்களுக்குப் புரிந்துவிட்டது. விரைவாக இரண்டு படகுகளில் ஏறிக்கொண்டு சென்று, அந்தப் படகு நடு ஆற்றைக் கடப்பதற்குள் அதை வளைத்துக் கொண்டோம். படகில் ஆயுதங்களை ஏற்றிக் கனம் உண்டாக்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் வேகமாகச் செலுத்தித் தப்பிக்கொண்டு போகமுடியவில்லை. அந்தத் திருட்டுப் படகில் இரண்டே ஆட்கள் தான் இருப்பது போல் தெரிந்தது. நாங்கள் அருகில் நெருங்கிப் பிடிப்பதற்குள் ஆயுதங்களோடு படகை ஆற்றில் கவிழ்த்துவிட்டுத் தாங்களும் குதித்து நீந்தித் தப்பி விட்டார்கள் அந்த ஆட்கள்:

“வேளான் அவர்கள் யாராயிருக்க முடியுமென்று உனக்குத் தோன்றுகிறது? வந்து போனவர்களை இன்னா ரென்று கண்டு கொள்வதற்கு ஏற்ற அடையாளங்கள் எவற்றையாவது அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்களா?” இப்படிக் கேட்டுக் கொண்டே வேளானுடைய முகத்தை உற்றுப் பார்த்தார் மகாமண்டலேசுவரர்.

“சுவாமி! ஆயுதங்களைத் திருடிக்கொண்டு போக வந்தவர்கள் மிகவும் சாமர்த்தியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தங்களை இனம் தெரிந்து கொள்ளுவதற்கேற்ற எந்த அடையாளங்களையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை. வந்தவர்களில் யாரோ ஒருவர் இடுப்புக்கச்சையாக அணிந்த வெண்பட்டுத் துணி ஒன்று மட்டும் நீரிலும், சேற்றிலும் நனைந்து விருந்து மாளிகைப் பின்புறமுள்ள பறளியாற்றுப் படித்துறையில் கிடைத்தது. அதை அடையாளமாக வைத்துக்கொண்டு எதையும் கண்டுபிடிக்க முடியுமென்று தோன்றவில்லை.”

மகாமண்டலேசுவரர் மெல்லச் சிரித்தார். “வேளான் ! அந்த வெண்பட்டுத் துணியை இப்போது இங்கே கொண்டு வந்திருக்கிறாயா?” என்று அவர் கேட்டவுடன் வேளான் தன் அங்கியில் மறைத்து வைத்துக்கொண்டிருந்த அந்த வெண்பட்டுத் துணியை எடுத்து அடக்கவொடுக்கமாக அளித்தான். அவர் அதை விரித்துப் பார்க்க முயன்றார். ஆற்று நீரோடு செம்மண் சேறும் படிந்து உலர்ந்து போயிருந்ததால் அதில் ஒன்றுமே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. -

“சிறிது நேரம் நீ இங்கேயே காத்துக் கொண்டிரு” என்று வேளானிடம் கூறிவிட்டு, அந்தப் பட்டுத்துணியுடன் உள்ளே சென்றார் அவர். வேளான் வியப்பும் பயமும் போட்டியிடும் மன உணர்ச்சியோடு அங்கேயே காத்திருந்தான்.

அரை நாழிகைக்குப் பின் மகாமண்டேலசுவரர் மறுபடியும் சிரித்துக்கொண்டே அவன் முன் தோன்றினார்.

‘வேளான் ! யார், எவருடைய துண்டுதலால் ஆயுதங்களைத் திருடுவதற்கு வந்தார்கள் என்ற விவரம் எனக்குத் தெரிந்துவிட்டது. இதில் கவலைப்படுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமே இல்லை. நீ உடனே இடையாற்று மங்கலத்துக்குத் திரும்பிப்போய் நான் சொல்கிறபடி செய். பறளியாற்றில் எந்த இடத்தில் படகு கவிழ்க்கப்பட்டதோ, அங்கே ஆட்களை மூழ்கச் செய்து ஆயுதங்களைக் கிடைத்த வரையில் வெளியே எடுத்துவிடவேண்டும். ஆற்றின்

வேகத்தினால் இழுத்துக் கொண்டுபோகிற அளவுக்கு இப்போது வெள்ளம் கடுமையாக இராது. ஆகவே கவிழ்ந்து மூழ்கிய ஆயுதங்களைப் பெரும்பாலும் குறைவின்றி எடுத்து விடலாம். அவ்வாறு எடுத்த ஆயுதங்களையும், இப்போது நான் உன்னிடம் எழுதிக்கொடுக்கப்போகும் ஒலையையும் கொண்டுபோய் நேரே கோட்டாற்றுப் படைத்தளத்தில் இருக்கும் தளபதி வல்லாளதேவனிடம் சேர்த்துவிட வேண்டும்.”

“அப்படியே செய்துவிடுகிறேன். சுவாமி!” “செய்வது பெரிதில்லை, வேளான்! நான் சொல்கிறபடி கவனமாக நடந்து கொள்ளவேண்டும். என் ஒலையையும் ஆயுதங்களையும் தளபதியிடம் கொடுத்தபின் அங்கே ஒரு நொடிப்போதுகூட அநாவசியமாக நீ தாமதிக்கக் கூடாது. தளபதி உன்னிடம் தூண்டித் துளைத்து ஏதாவது கேட்க முயன்றாலும் நீ அவற்றுக்கு மறுமொழி கூறாமல் உடனே நழுவி வந்துவிட வேண்டும்.”

வேளான் பயபக்தி நிறைந்த முகத்தில் மிரண்ட பார்வையோடு, ஆகட்டும் என்பதற்கு அறிகுறியாக மகா மண்டலேசுவரருக்கு முன் தலையசைத்தான்.

‘சரி, அப்படியானால் நீ இப்போதே புறப்பட வேண்டியதுதான்” என்று அவர் விடைகொடுத்த பின்பும் அவன் தயங்கி நின்றான். எதையோ அவரிடம் கேட்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளேயே எண்ணப் போராட்டத்துடன் அவன் தயங்கி நிற்பதாகத் தோன்றியது. “வேளான்! ஏன் தயங்கி நிற்கிறாய்? மனத்தில் பட்டதைக் கேள்!”

“சுவாமீ! அந்தப் பட்டுத் துணியிலிருந்து ஏதாவது அடையாளம் புரிந்ததா?” என்று மென்று விழுங்கும் வார்த்தைகளோடு பயந்துகொண்டே கேட்டான் அவன்.

“அடையாளமெல்லாம் நன்றாகத்தான் புரிந்திருக்கிறது. ஆனால் அதை நீ இப்போது தெரிந்துகொள்ள வேண்டு மென்கிற அவசியமில்லை” என்று புன்னகையோடு பதில் கூறினார் மகாமண்டலேசுவரர். வேளான் மறுபேச்சுப் பேச வாயின்றித் தளபதிக்காக அவர் எழுதிக்கொடுத்த ஒலையை நா. பார்த்தசாரதி 54?

வாங்கிக் கொண்டு சென்றான். அம்பலவன் வேளானை இடையாற்றுமங்கலத்துக்கு அனுப்பிய பின்பு வண்ணமகள் புவனமோகினியைத் தம்முடைய இருப்பிடத்துக்கு வரவழைத்தார் அவர்.

புவனமோகினி வந்து வணங்கினாள்: ‘பெண்ணே : உன்னிடம் ஒரு செய்தி விசாரித்துத் தெரிந்து கொள் வதற்காகக் கூப்பிட்டேன். ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் இங்கே அரண்மனையில்தான் இருக்கிறானா? உனக்குத் தெரிந்திருக்குமே?” என்று அவர் அந்தப் பெண்ணிடம் கேட்டார். ஆபத்துதவிகள் தலைவனின் பெயரை அவருடைய வாயிலிருந்து கேள்விப்பட்ட உடனே அந்தப் பெண்ணின் முகத்தில் பயத்தின் உணர்ச்சியலைகள் குமிழியிட்டுப் பரவுவது போன்றதொரு சாயல் பரவியது.

“பயப்படாமல் சொல், அம்மா!” மீண்டும் அவளைத் து.ாண்டினார் அவர்.

“சுவாமி! சென்ற சில நாட்களாக அந்த முரட்டு மனிதரை அரண்மனை எல்லையிலேயே நான் காணவில்லை. ஆனால் மறுபடியும் இன்று காலையில் இங்கு பார்த்தேன்.” என்று மருண்ட பார்வையோடு முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்துக் கொண்டே மெல்ல அவருக்குப் பதில் சொன்னாள் வண்ணமகள். . -

“இவ்வளவுதான் உன்னிடமிருந்து எனக்குத் தெரியவேண்டும். இனிமேல் நீ போகலாம்.”

புவனமோகினி மறுபடியும் அவரை வணங்கிவிட்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றாள். அவள் சென்றபின் சிறிது நேரம் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு அளவாக அடிபெயர்த்து வைத்துக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அவர் மனத்தில் அளவாகத் தெளிவாக வேகமாகச் சிந்தனைகள் ஓடும்போது இப்படி நடந்து கொண்டே திட்டமிடுவது அவரது வழக்கம், சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக அங்கிருந்த காவலன் ஒருவனைக் கைதட்டி அழைத்தார். அவன் அருகில் வந்ததும்

“இதோ பார்! நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக்கொள். இன்னும் கால் நாழிகைக்குள் ஆபத்துதவிகள் தலைவன் இந்த அரண்மனையின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி அழைத்துக் கொண்டு வா, இதை உடனே செய்” என்றார்.

கருங்கல்லின் மேல் வரிசையாக நிறுத்தி நிறுத்தித் தாளகதி பிழையாமல் உளியை அடித்தாற்போல் ஒலித்த அந்த வார்த்தைகளின் கம்பீரத்துக்குத் தலைவணங்கி நடந்தான் அவன். மீண்டும் அளவாக அடியெடுத்து வைத்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அவர் ஆபத்துதவிகள் தலைவனைக் கூட்டிக் கொண்டுவர எவ்வளவு நேரமாகு மென்று அவர் எதிர்பார்த்தாரோ அவ்வளவு நேரம் ஆகவில்லை. அவரால் அனுப்பப்பட்ட காவலன் மிகச் சில விநாடிகளுக்குள்ளேயே மகர நெடுங்குழைக்காதனை அழைத்துக் கொண்டுவந்து அவர் முன் நிறுத்திவிட்டான். வேங்கைப் புலி போல் வாட்ட சாட்டமான தோற்றத்தையுடைய அந்த மாவீரன் துணிவு ஒய்ந்து ஒடுங்கித் தலைதாழ்த்தி நாணத்தோடு அவர் முன் வந்து நின்றான். தம்முன் வருகிற பெண்களையெல்லாம் நாணப் புன்னகைப் பூக்கச் செய்யும் ஆற்றல், அழகும், வீரமும் உள்ள சில ஆண்களுக்கு உண்டு. அதைப் போலவே அறிவும் அறமும் ஒழுக்கமும் உள்ள சில பெரியவர்கள் தமக்கு முன் நிற்கும் ஆண்களைக்கூட ஒடுங்கிப் பெண் தன்மை எய்தச் செய்துவிடுவார்கள். கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு இமையா விழிப்பாவையுடன் நிமிர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் அந்த மனிதருக்கு முன்னால் ஆபத்து உதவிகள் தலைவன் பெண் தன்மை எய்தினாற்போல்தான் நாணி நின்றான்.

காவலனை அங்கிருந்து வெளியேறுமாறு சைகை செய்தார் மகாமண்டலேசுவரர். அவன் வெளியேறினான்.

“குழைக்காதா! இதோ, என் கையிலிருக்கும் இந்தப் பொருளைக் கொஞ்சம் பார்” என்று சொல்லிக்கொண்டே பின்புறம் இருந்த கையை உயர்த்தி அவன் முகத்துக்கு நேர் எதிரே கொண்டு வந்து நீட்டினார் அவர். அவருடைய கையிலிருந்து விரிந்த வெண்பட்டுத் துணியைப் பார்த்தபோது

அவன் முகம் ஏன் அப்படிப் பயந்து வெளிறிப் போகிறது? அழுக்கும் சேறுமாக இருந்த அந்தத் துணி நீரில் நன்றாகக் கழுவப்பட்டிருந்தது. இப்போது ஆபத்துதவிகளின் அடையாளச் சின்னங்கள் அதில் தெளிவாகத் தெரிந்தன. அவருடைய கையில் அந்தத் துணி ஆடி அசைந்து நடுங்கினாற் போல் அவனுடைய உடல் விதிர் விதிர்ப்புற்று நடுங்கியது.

“இம்மாதிரிச் சின்னங்களோடு கூடிய வெண்பட்டுத் துணியை ஆபத்துதவிகள் தம் இடுப்புக் கச்சையில் அணிவது

வழக்கமல்லவா?”

“ஆம் சுவாமி! வழக்கம்தான்.” அவனுடைய பதிலைக் கேட்டு அவர் சிரித்தார். சிரித்துக் கொண்டே “கொஞ்ச நாட்களாகவே ஆபத்துதவிகளுக் கெல்லாம் ஞாபக மறதி அதிமாகிவிட்டது போலிருக்கிறது. இடுப்பில் அணிந்து கொள்வதற்குப் பதிலாக எங்கெங்கோ நினைத்த இடங்களிலெல்லாம் இந்தத் துணியைப் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்” என்று குத்தலாகச் சொன்னார். அவருடைய குத்தல் அவனுக்குப் புரிந்தது. முன்பு ஒருமுறை அந்தத் துணியைத் தவற விட்டு விட்டு அகப்பட்டுக் கொண்டதுபோல், இரண்டாவதாக மீண்டும் இடையாற்று மங்கலத்தில் தவற விட்டு விட்டு அவர் கையில் அகப்பட நேரும்படி இடங்கொடுத்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டு நின்றான் அவன். அவ்வளவு விரைவாக அது கண்டுபிடிக்கப்பட்டு அவருடைய இடத்தைத் தேடி எப்படி வந்துசேர்ந்ததென்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை. திகைப்போடு வெட்கி விழித்துக்கொண்டு நின்றான் அவன். “பரவாயில்லை! உனக்கு உரிமையான பொருள் என் கையில் கிடைத்தால் உடனே உன்னைக் கூப்பிட்டு அதை உன்னிடம் ஒப்படைக்க வேண்டியது என் கடமையல்லவா? அதனால்தான் உன்னை வரவழைத்தேன். வேறொன்று மில்லை. இந்தா இதைக் கொண்டு போ. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்!"-ஒன்றுமே நடக்காததுபோல் எதையுமே தெரிந்து கொள்ளாமல் சர்வசாதாரணமாக அவனைக் கூப்பிட்டு அதைக் கொடுத்து எச்சரித்து

அனுப்புபவர் போல்தான் பேசினார்.அவர். அந்தச் சூழ்நிலையில் அப்படியொன்றும் தெரியாததுபோல் நடந்து கொள்வதுதான் நல்லதென்று அவருக்குப் பட்டது. அரசியல் வாழ்வில் ஒன்றும் தெரியாதவன் எல்லாம் தெரிந்ததுபோல் நடித்தால் ஈரம் புலராத பச்சை மண்குடத்தில் வைத்த தண்ணிர்போல் பலவீனங்கள் விரைவில் வெளிப்பட்டுத் தோற்றுவிடுவான். எல்லாம் தெரிந்தவன் ஒன்றும் தெரியாததுபோல் நடித்தால் இறுதிவரை வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு விடுவான். இந்தத் தத்துவத்தில் மகாமண்டலேசுவரருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. எண்ணங்களையும் அனுபவங்களையும் நான்கு மடங்கு தற்பெருமையோடு கலந்து காண்பவர்களிடமெல்லாம் அளந்து கொண்டு திரியும் சாமானிய மனித ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவர்.

ஆபத்துதவிகள் தலைவன் கையில் அவர் அந்தப் பட்டுத் துணியைக் கொடுத்தபோது ஒன்றுமே தெரியாதவர்போல் சிரித்துக்கொண்டு கொடுத்தார். ஆனால் அவனோ அதிர்ச்சியடைந்து கூனிக் குறுகி நடுங்கி அதை வாங்கிக் கொண்டு விடைபெற்றுச் சென்றான். பகைவர்களிடமும் அநாகரிகமாகப் பகைத்துக்கொள்ளும் பழக்கம் அவருக்கு இல்லை. யார் யாரெல்லாம் பொறாமையால் தமக்கே குழிபறித்துக் கொண்டிருப்பதாக அவர் உணர்கிறாரோ, அவர்களிடம்கூட நாகரிகமாக நடந்துகொள்ளும் பண்பை அறிவு அவருக்குக் கற்பித்திருந்தது. பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் ஒப்புரவு மொழி மாறா ஒலையோடு வந்ததை அறிந்தபோதுகூட நாகரிகமாகவே நடந்து கொண்டார் அவர். தன் கழுத்தை அறுக்க வாளை ஓங்கி வருபவனிடம்கூட “போர் இலக்கணப்படி வாளை ஓங்க வேண்டிய முறை இது” என்று முறையைச் சொல்லிக் கொடுத்துவிட்டு அதன்பின் எதிர்ப்பதற்குத் தயாராகும் அறிவின் நாகரிகம் அது! வாளின் கூர்மைக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக ஆற்றல் அந்த நாகரிகத்துக்கு உண்டு! -

நா. பார்த்தசாரதி 545

மகாமண்டலேசுவரரிடம் விடைபெற்றுக் கொண்டு இடையாற்றுமங்கலம் திரும்பிய படகோட்டி அம்பலவன் வேளான் உடனே பறளியாற்றில் மூழ்கிய ஆயுதங்களை வெளியேற்ற ஏற்பாடு செய்தான். அவைகளை முறையாக வெளியேற்றி ஒழுங்குபடுத்த இரண்டு நாட்கள் ஆயின. அவனுக்கு. மறுநாளே ஆயுதங்களையும், மகாமண்டலேசுவரர் தளபதிக்கென்று கொடுத்து அனுப்பிய ஒலையையும் கோட்டாற்றுப் படைத் தளத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டான் அவன். அவருடைய கட்டளைப்படியே தளபதியிடம் அதிகம் பேசாமல் ஆயுதங்களை அளித்த கையோடு ஒலையையும் அளித்து விட்டுத் திரும்பினான் அம்பலவன்வேளான்.

‘குழைக்காதன் கடத்திக்கொண்டுவர முயன்று முடியாமற் போய்ப் பறளியாற்றில் கவிழ்க்கப்பட்ட ஆயுதங்களை மகாமண்டலேசுவரரே சிரத்தையாக எடுத்துத் தனக்கு அனுப்பிய நோக்கமென்ன?- என்று புரியாமல் பயமும் திகைப்பும் கொண்டு, அவர் தனக்குக் கொடுத்தனுப்பியிருந்த ஒலையைப் பிரித்தான் தளபதி.

‘அன்புள்ள தளபதி வல்லாளதேவனுக்கு, இடையாற்றுமங்கலம் நம்பி எழுதும் திருமுகம். இடையாற்று மங்கலம் நிலவறையிலிருந்த ஆயுதங்களை இரகசியமாகக் கடத்திக்கொண்டு போவதற்காகக் குழைக்காதன் மூலம் நீ இவ்வளவு பெரிய காரியங்கள் செய்திருக்க வேண்டாம். உனக்கு அவற்றில் விருப்பம் இருப்பதாக எனக்கு ஒரு வார்த்தை தெரிவித்திருந்தால் நானே மூட்டைகட்டி உனக்கு அனுப்பியிருப்பேன். என்னுடைய பலம் கேவலம் அந்த வாள்களின் துணிகளில் அடங்கியிருப்பதாக நீ

கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்கு என்பதை

இப்போதாவது உணர்ந்துகொள். வாளும், வேலும் எதிரிகளைத் தேடிச் சென்று தம் துனியால் குத்த வேண்டும். ஆனால், தளபதி அறிவின் நுனியில் எதிரிகள் தாமாகவே வந்து தங்களைக் குத்திக்கொண்டு மாய்கிறார்கள். இதை உனக்கு இப்போது கூறிவைக்கிறேன். கொள்ளைக் கூட்டத்தார்

ur. Gg. 35 செய்துவதுபோல் இப்படி ஒரு காரியத்தைத் தென்பாண்டி நாட்டுத் தளபதி செய்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து.”

திருமுகத்தைப் படித்தவுடன் தளபதி திடுக்கிட்டான். அதிலிருந்த வார்த்தைகளெல்லாம் தேள்களாக மாறி அவனை ஒரே சமயத்தில் கொட்டுவது போலிருந்தது.