பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/திரிசூலம் சுழன்றது

23. திரிசூலம் சுழன்றது

சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் தேவதேவனைத் தன் இரு விழிகளால் ஆட்டி வைத்த உமையே சின்னஞ்சிறு கன்னிப் பெண்ணாய் உருக்கொண்டு, கூத்துடை தரித்து வந்து நிற்பதுபோல் வலக்கையில் திரிசூலதாரியாய்க் கம்பீரமாக அரங்கில் காட்சியளித்தாள் தேவர்ாட்டி. அவள் கொடும்பாளூர் அரசவையில் ஆடல் மகளாய்ப் பணி புரியும் ஒரு சாதாரண மானிடப் பெண்தான் என்ற உணர்வு அரங்கில் கூடியிருந்த அரசர்களுக்கு ஏற்படவே இல்லை. இமையா விழிகளால் அரங்கின் மேற் சென்ற பார்வையை மீட்க மனமின்றி வீற்றிருந்தனர். அழகொழுக எழுதிய நிருத்திய உயிரோவியமாய்த் தோன்றிய அவள் கூத்தைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் மனங்களை வென்றுவிட்டாள்.

தேவராட்டியின் தோற்றத்தைப் பற்றி இங்கே சிறிது கூற வேண்டும். மறக்குலத்துப் பெண்கள் அணிந்து கொள்வது போல் முழங்காலுக்கு மேல் கச்சம் வைத்துக் கட்டிய புடவை. பாதங்களுக்கு மேல் இரண்டு பாம்புகள் சுருண்டு கிடப்பது போல் பாடகங்கள் (ஒரு வகைச் சிலம்பு இல்லையோ உண்டோவெனத் திகழ்ந்த இடையில் மேகலை போல் இறுகப் பிணித்த புலித்தோல், கழுத்திலும், தோளிலும் முன் கைகளிலும் பல நிறப் பூமாலைகள் அணிந்திருந்தாள். கூந்தலைத் தலை கீழாக நிறுத்திய சங்கின் தோற்றம்போல் உச்சந்தலையில் தூக்கி அழகாக முடிந்து கொண்டிருந்தாள். அந்தக் கொண்டையைச் சிறிய கொன்றைப் பூச்சரம் ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் திருநீறு பூசிய வெண்மை, வலது கரத்தில் நீளமாக ஒளி மின்னும் கூர்மையான திரிசூலத்தைப் போல இடது கையில் சிறியதாக அழகாக ஓர் உடுக்கு இந்தக் கோலத்தில் ஒரு பக்கமாகத் துவண்டு சிங்காரமாக அவள் நின்ற அபிநய அலங்காரம் பார்க்கும் கண்களிலெல்லாம் தெய்வத்தைப் படரவிட்டது. கொற்றவைக் கூத்துக்குரிய வீராவேசத்தோடு தேவராட்டி தன் ஆடலைத் தொடங்கினாள். பாறைகளுக்கு நடுவேயுள்ள சுனைத் தண்ணிரில் கூழாங்கல்லை வீசி எறிவது போன்ற இன்ப ஒலியை எழுப்பியது உடுக்கு, கால் பாடகத்தின் உள்ளேயிருந்த பரல்கள் (சிறு சிறு மணிகள்) ஒலித்தன. சூலம் ஒளி கக்கிச் சுழன்றது, துள்ளியது.

ஆட்டத்தின் ஒன்பது வகைக் கூத்துக்களில் ஒன்றாகிய ‘வீரட்டானக் கூத்தின் கம்பீரமான துரித கதியில் தெய்வ ஆவேசத்தோடு சுழன்று சுழன்று ஆடினாள் அந்தப் பெண். காளிதேவியாகிய கொற்றவையே அந்தப் பெண்ணின் உடலில், உணர்வுகளில் தன் மயமாகிக் கலந்துவிட்டது போல் ஒரு தத்ரூபம் அவள் ஆடலில் இருந்தது. வீரட்டான அபிநயத்தின் முடிவில் முத்திரை பிடித்துக் காட்டவேண்டிய குனிப்பு என்னும் விகற்பத்தைத் தாண்டி, அற்புதமான உள்ளாளக் கூத்தில் தன்னை மறந்து லயித்துக் கொண்டிருந்தாள் அவள். தெய்வீகம் கலையாக மாறித் திகழ்ந்து கொண்டிருந்தது அவளிடம்.

சோழகோப்பரகேசரி தன்னை மறந்து, தன் நினைவை இழந்து பார்த்துக்கொண்டிருந்தான். கண்டன் அமுதன், அரசூருடையான், பரதுாருடையான் எல்லோரும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இலயித்திருந்தார்கள். ஆனால், கூத்து அரங்குக்கு ஏற்பாடு செய்த கொடும்பாளுர் மன்னனின் கண்கள் மட்டும் ஒன்றிலும் ஊன்றிப் பார்க்காமல், நாற்புறமும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. கனற் கோளங்களைப் போன்ற அவனுடைய பெரிய கண்கள் அரங்கின் மேலும், தன்னோடு

உடன் வீற்றிருந்த சோழன் முதலியவர்கள் மேலும் அரங்கின் வெளிப்புறத்து நுழைவாயில் மேலும் மாறி மாறி நிலைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. இயற்கையிலேயே அவனுக்கு அப்ப்டி ஒரு சுபாவம். குட்டி போட்ட பூனை மாதிரிச் சாதாரணமான காரியங்களுக்காகக்கூடப் பதறி அலை பாய்கின்ற மனம் அவனுக்கு கலைகளை அநுபவிக்க ஆழ்ந்து ஈடுபட்டுத் தோயும் மனம் வேண்டும். அலைபாயும் மனமுள்ளவர்களால் எந்தக் கலையிலும் இந்த மாதிரி ஈடுபட்டு இலயிக்க முடியாது. கொடும்பாளுரானிடம் அந்த ஈடுபாடு இல்லை என்பதை அவன் கண்களே விளக்கின. குணாதியாகவே இப்படி எதிலும் ஆழ்ந்து ஈடுபட முடியாதவர்கள் முன்கோபக்காரர்களாகவும், ஆத்திரமும் உணர்ச்சிவெறியும் உடையவர்களாகவும் இருப்பார்கள். தேவராட்டியின் ஆடல் சுவையுநுபவத்தின் உயர்ந்த எல்லையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அருளாவேசமுற்றுத் தானே கொற்றவை என்ற முனைப்பால் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தாள். அவள் மட்டுமா ஆடிச் சுழன்றாள்! அவள் ஆடும்போது கொண்டையாக முடித்திருந்த சடாமகுடத்தின் கொன்றை மலர்க்கொத்தும், பிறைச்சந்திரனைப் போல் தங்கத்தில் செய்து புனைந்திருந்த அணியும், செவிகளின் நாக குண்டலங்களும் எல்லாம் ஆடிச் சுழன்றன. -

பார்த்துக் கொண்டேயிருந்த சோழனுக்குக் கண்களில் நீர் பனித்துவிட்டது, உள்ளம் நெக்குருகி உடல் சிலிர்த்தது. மகாமன்னனான கோப்பரகேசரி பராந்தக சோழன் எத்தனையோ அற்புதமான ஆடல்களை உறையூரிலும், காவிரிப்பூம்பட்டினத்திலும் கண்டிருக்கிறான். நாட்டியக் கலையில் தலைக்கோல் பட்டமும் (அக்காலத்தில் நாட்டியக் கலையில் சிறந்த ஆடல் மகளிர்க்கு அரசனால் அளிக்கப்படும் விருதுப்பெயர் பொற்பூவும், பொன் மோதிரமும் பெற்ற பெரிய பெரிய ஆடல் மகளிரின் ஆடல்களையெல்லாம் அவன் கண்டிருக்கிறான். அவையெல்லாம் அவன் உணர்வுக்குக் கிளர்ச்சி மட்டுமே ஊட்டின. அவைகளில் இல்லாதஅவைகளிலும் மேம்பட்ட ஏதோ ஒன்று இந்தத் தேவராட்டியின் ஆடலில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தேவராட்டியின் ஆடற் கலையில் வெயில் படாத நீரின் குளிர்ச்சி போல்

தெய்வீகப் பண்பு விரவியிருந்தது. நீரைச் சுடவைத்துக் குளிர்ச்சியை நீக்கிச் செயற்கையாகச் சூடாக்குவது போல் பாட்டு, கூத்து, புலமை, ஒவ்வொரு துறையையும் அறிவின் வெம்மையால் சூடேற்றி அவைகளிலிருந்தும் தெய்வீகப் பண்பை நீக்கிவிடும்போது அவை சாதாரணமாகி விடுகின்றன. அரங்கில் ஆடிக்கொண்டிருந்த அந்தத் தேவராட்டியின் முகத்தைப் பார்க்கும்போதே மலையரையன் மகளாகத் தோன்றிய உமையின் கன்னித் தவக்கோலம்தான் நினைவுக்கு வந்தது. எப்போதும் ஏதோ பெரிய இலட்சியங்களுக்காகக் கனவு கண்டு கொண்டிருப்பதுபோல் இடுங்கிய கண்கள், நீளமுகம், கன்னிப் பருவத்துப் பேதைமையின் அழகு நிழலாடும் நெற்றி, வடிந்த நாசி, வளர்ந்த புருவங்கள், கரந்து நிற்கும் சிரிப்பு, கனிந்து சரிந்த

リf@エリ。

தேவராட்டி சந்நத நிலையில் அருளுற்று ஏதேதோ பிதற்றினாள். தங்களுடைய கூட்டணியைப் பற்றியும், தென் திசைப் படையெடுப்பைப் பற்றியும் அதில் வெற்றி ஏற்படுமா தோல்வி ஏற்படுமா என்பதைப் பற்றியும் தேவராட்டியிடம் குறி கேட்டு நிமித்தம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று சோழன் எண்ணியிருந்தான். தனக்குப் பழக்கமில்லாத காரணத்தால் கொடும்பாளுர் மன்னனை விட்டே அவைகளைத் தேவராட்டியிடம் கேட்கச் செய்யலாமென்று மனத்துக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தன் பக்கத்தில் கொடும்பாளுரான் வீற்றிருந்த ஆசனத்தைப் பார்த்த சோழன் ஏமாற்றமடைந்தான். -

அங்கே கொடும்பாளுரானைக் காணவில்லை. அவன் வீற்றிருந்த இருக்கை காலியாயிருந்தது. மற்ற மூவரையும் பார்த்தான். அவர்கள் இந்த உலகத்தையே மறந்து, தேவராட்டியின் கூத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அவ்வளவு அற்புதமான கூத்தை இரசிக்காமல் நடுவில் எழுந்திருந்து கொடும்பாளுரான் எங்கே போயிருப்பான் என்ற கேள்வியும், சந்தேகமும் சோழன் மனத்தில் உண்டாயின. சோழனுடைய கண்கள் கொடும்பாளூரானைத் தேடிச் சுழன்றன. அவனைக் காணோம். கூத்தரங்கின் வாயிற்புறம் போய் அங்கு யாராவது

ஆட்களிருந்தால் அவர்களை அனுப்பிக் கொடும்பாளுரானை அழைத்துக்கொண்டு வரச் செய்யலாமென்ற நோக்கத்தோடு சோழன் மெல்ல எழுந்தான்.

ஆனால், அந்தக் கணமே அவன் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. கொடும்பாளுரானே மிக வேகமாக வாயிற்புறத்திலிருந்து கூத்தரங்கத்துக்குள் வந்து கொண்டிருந்தான். அவன் முகச்சாயலும் நடையின் வேகமும் பரபரப்பையும், அவசரத்தையும் காட்டின. வெளியே செல்வதற்காக எழுந்திருந்த சோழன் மறுபடியும் இடத்திலேயே உட்கார்ந்து கொண்டான். வேகமாக உள்ளே பிரவேசித்த கொடும்பாளுர் மன்னன் சோழன் காதருகே போய்க் குனிந்து மெதுவாகப் பேசினான்; “அரசே! தென்பாண்டி நாட்டின் பலவீனத்தை மிகைப்படுத்தக்கூடிய வேறொரு செய்தி சற்று முன்புதான் என் காதுக்கு எட்டியது.” . .

“அப்படி என்ன செய்தி அது?” சோழனும் மெதுவான குரலிலேயே கேட்டான். “சில நாட்களுக்கு முன்னால், இடையாற்றுமங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையில் பாதுகாக்கப்பட்டு வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற் சிம்மாசனமும் திடீரென்று காணாமற்போய் விட்டனவாம்.”

“யார் வந்து கூறினார்கள் இந்தச் செய்தியை?” “தெற்கேயிருந்து நம் ஒற்றவர்களில் ஒருவன் வந்து கூறினான். நீங்களெல்லாம் கூத்தில் ஈடுபட்டிருந்தபோது இடையில் நான் கொஞ்சம் வெளியே எழுந்து சென்றேன். அதே நேரத்துக்கு அந்த ஒற்றனும் வந்து சேர்ந்ததனால், அவனை அங்கேயே நிறுத்திச் செய்தியை விசாரித்துக் கேட்டுக் கொண்டு வந்தேன்.”

“ஒருவேளை இந்தச் செய்தி இப்படியும் இருக்கலாமல்லவா? நம்மைப் போன்ற வடதிசையரசர்கள் தெற்கே படையெடுத்துத் தென்பாண்டி நாட்டை வென்றுவிட்டால் இடையாற்று மங்கலத்தில் போய் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் தேடி எடுத்துக்கொண்டு விடுவோமோ என்பதற்காக இப்படி ஒரு பொய்ச் செய்தியை மகாமண்டலேசுவரர் பரப்பியிருப்பார்”

“இருக்காது, அரசே! வந்திருக்கும் ஒற்றன் கூறுவதைப் பார்த்தால் உண்மையாகவே அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போயிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.”

“எப்படியிருந்தாலும் நாம் படையெடுப்புக்கு ஏற்பாடு செய்யத்தான் போகிறோம். நமக்கு ஏன் இந்தக் கவலை?” சோழனும் கொடும்பாளுரானும் மேற்கண்டவாறு மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்த போதும் தேவராட்டியின் கொற்றவைக்கூத்து நடந்துகொண்டுதான் இருந்தது. அவள் வலக்கையில் திரிசூலத்தின் சுழற்சியும், இடக்கையில் உடுக்கின் ஒலியும் குன்றவில்லை, குறையவில்லை.

சோழனும் கொடும்பாளுரானும் வீற்றிருந்த இடத்தின் பின்புறத்துச் சுவரில் அவர்கள் தலைக்குமேல் மானின் கண்களைப்போல் துவாரங்கள் அமைந்த பலகணி ஒன்று இருந்தது.

அருளுற்று ஆடிக்கொண்டேயிருந்த தேவராட்டி திடீரென்று இருந்தாற்போலிருந்தது அந்த மான்விழிப் பல கணியைச் சுட்டிக்காட்டி வீல் என்று அலறிக் கூச்சலிட்டாள். அந்தப் பலகணியை நோக்கித் தன் திரிசூலத்தை ஓங்கிச் சுழற்றினாள் பற்களைக் கடித்தாள். கால்களை உதைத்தாள். திரிசூலத்தைக் குறி பார்த்துச் சுழற்றி, அந்தப் பலகணியை நோக்கி எறிந்தாள். எல்லோரும் அவளுடைய கோபத்தின் காரணம் விளங்காமல் எழுந்திருந்து அந்தப் பலகணியைப் பார்த்தபோது, அதன் நடுத்துவாரத்திலிருந்து ஒளி மின்னும் இரு கண்கள் வேகமாகப் பின்னுக்கு நகர்ந்தன.