பாண்டிமாதேவி/முதல் பாகம்/ஆலயத்தில் ஆபத்து

2. ஆலயத்தில் ஆபத்து

ஆலயத்து வாசலில் மகாராணி வானவன்மாதேவி யாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்தபோது வேறு இரண்டு புதிய பெண்கள் அங்கே பல்லக்கு மூலமாக வந்து சேர்ந்தனர். இந்தக் கதையின் எதிர்கால நிகழ்ச்சிகளில் எத்தனையோ பல மாறுதல்களை உண்டாக்கப் போகும் அழகும் இளமையும் நிறைந்த அந்தப் பெண்மணிகளை இங்கேயே நேயர்களுக்கு அறிமுகப்படுத்திவிட வேண்டியது அவசியம்தான். தரைப் பிரதேசத்தின் முடிவிடமாகிய அந்தக் கன்னியாகுமரிக் கோவில் முன்றிலில் வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் மூன்று பெரிய சாலைகள் திரிசூலத்தின் நுனியைப் போல வந்து ஒன்று கூடின.

நேர் வடக்கே செல்லும் சாலை புறத்தாய நாட்டுக் கோட்டை வழியே மதுரைக்கும், அதற்கப்பால் உறையூர், காஞ்சி முதலிய வடபால் நாட்டுத் தலை நகரங்களுக்கும் போவதற்குரிய மிக முக்கியமான இராஜபாட்டையாகும்.

கிழக்கே செல்லும் சாலை அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கோட்டாறு முதலிய நாஞ்சில் நாட்டுக் கீழ்ப்பகுதி ஊர்களுக்குப் போவது.

மேற்கே செல்லும் சாலை, சரித்திர ஏடுகளில் இடந்தோறும் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய பெருமையை உடையது. அதுவே காந்தளூர்ச்சாலை, கடற்கரை ஒரமாகவே மேற்கே சென்று தென் மேற்குக் கோடியிலுள்ள விழிளும் என்னும் துறைமுகத்தோடு முடிவடைகிறது அது. தென்பாண்டி நாட்டின் படையெடுப்புக்களுக்கும், வெற்றி தோல்விகளுக்கும் இந்த முப்பெரும் இராஜபாட்டைகள் எவ்வளவுக்கு எவ்வளவு காரணமாக இருந்திருக்கின்றன என்பதைக் கதைப் போக்கில் நேயர்கள் தெரிந்து கொள்வார்கள்.

மகாராணியாரைக் கோவில் வாயிலில் நிறுத்தி விட்டு நடுவே இந்தச் சாலைகளைப் பற்றிக் கூற நேர்ந்தற்குக் காரணம், கதையில் புதிதாகப் பிரவேசிக்கும் பெண்கள் இருவரும் முறையே கீழ்ப்புறத்துச் சாலையிலிருந்தும், மேல்புறத்துச் சாலையிலிருந்தும் பல்லக்குகளில் வந்து இறங்குவது தான்.

கோவிலுக்குள்ளே செல்வதற்கு இருந்த வானவன்மாதேவி, அதங்கோட்டாசிரியர் முதலியவர்கள் இருபுறத்துச் சாலைகளிலிருந்தும், பல்லக்குகள் வருவதைப் பார்த்துவிட்டுச் சற்றுத் தயங்கி நின்றனர்.

சிறிது தொலைவில் அந்தப் பல்லக்குகள் வந்து கொண்டிருக்கும்போதே அவைகளில் வருகிறவர்கள் யாராயிருக்கலாம் என்பதைப்பற்றி அதங்கோட்டாசிரியர் சொல்லிவிட்டார். “மகாராணி! என்னுடைய பெண் அநங்க விலாசினி தங்களைத் தரிசிப்பதற்காகக் காலையிலேயே என்னோடு புறப்பட்டு வருகிறேனென்றாள். நான் காந்தளூர் மணியம்பலத்திலிருந்து பவழக்கனிவாயரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டியிருந்ததனால் அவளை உடன் அழைத்துக்கொண்டு வர முடியாமற் போய்விட்டது. மேற்கிலிருந்து வருகிற பல்லக்கு அவளுடையதாகத்தான் இருக்க வேண்டும். கிழக்கேயிருந்து வருகிற பல்லக்கு வல்லாள தேவனின் தங்கை பகவதியினுடையது. நீங்கள் வருவதற்கு முன் நானும் வல்லாளனும் பேசிக் கொண்டிருந்தபோது, தன் தங்கை உங்களைக் காண வரப்போவதாகச் சொன்னான்” என்று அதங்கோட்டாசிரியர் மகாராணி வானவன் மாதேவியிடம் கூறிய அநுமானம் பிழையில்லாமல் இருந்தது.

“மிகவும் நல்லது! தென்பாண்டி நாட்டில் தமிழறிவு பரப்பும் உங்கள் மகளையும், வீரப் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் தளபதியின் சகோதரியையும் காணும் பேறு எனக்குக் கிடைத்ததே! அது என்னுடைய பாக்கியம்” என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி வானவன்மாதேவி!

கோவிலுக்கெதிரே கூப்பிடு துாரத்தில் இரண்டு சாலைகளும் ஒன்று கூடுமிடத்தில் பல்லக்குகள் இறக்கி வைக்கப்பட்டன. இரண்டு பெண்களும் கீழே இறங்கி மகாராணிக்கு மரியாதை செய்யும் பாவனையில் அடக்க ஒடுக்கமாக நடந்து வந்தனர். அவர்களில் வலதுபுறமாக நடந்து வருகிறாளே, செந்தாழை மடல் போன்ற நிறமும், சிரிப்பைச் சிறை பிடித்து வைத்திருக்கும் செவ்வாயுமாக அவள்தான் அதங்கோட்டாசிரியரின் மகள் அநங்கவிலாசினி. கொடி துவள்வது போல ஒற்றை நாடியான உடல்; ஒரு முறை பார்த்தால் எவ்வளவு மறதியுள்ளவர்களுக்கும் நன்றாக மனத்தில் பதிந்து விடக்கூடிய எழில் பொலியும் வட்ட மதி முகம், அஞ்சனம் தீட்டிய கரு நெடுங்கண்கள், இப்படித்தான் நடக்கவேண்டுமென்று மாதிரிக்கு நடந்து காட்டுவது போல், மானின் குழைவும் அன்னத்தின் மென்மையும் கலந்த ஒருவகை நடையில் அவள் மெல்ல நடந்து வந்தாள். காலடி பெயர்த்து வைக்கும் போதெல்லாம், இந்தப் பட்டுப் பாதத்தின் மேல் தொட்டுத் தழுவும் உரிமை எனக்கு இருக்கிறது என்று தன் பெருமையை வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வது போலச் சிலம்பு ஒலித்தது. கூந்தலைக் கொண்டையாக உயர்த்தி முடிந்து அதில் பெயர் பெற்ற நாஞ்சில் நாட்டு முல்லைப் பூக்களின் சரத்தைப் பிறைச் சந்திர வடிவில் சூடிக்கொண்டிருந்தாள். செம்பொன்னில் வார்த்தெடுத்த உயிர்ச்சிலை ஒன்று நடந்து வருவது போல் அதங்கோட்டாசிரியரின் மகள் வந்து கொண்டிருந்தாள் என்றால் போதும்; அதற்கு மேல் விவரிக்கத் தேவையில்லை.

இனி அவளுக்கு இடதுபுறம் மாநிறமும் சற்றே உயர்ந்து வாளித்த தோற்றமுமாக நடந்து வரும் தென்பாண்டித் தளபதி யின் தங்கை பகவதியைக் காணலாம். அதங்கோட்டாசிரியரின் மகளை ப் புனிதமான பாரிஜாதப்பூவின் அழகுக்கு ஒப்பிட்டால், தளபதியின் தங்கையை, மோந்து பார்க்குமளவில் மனத்தை மயக்கிப் போதையூட்டும் குடை மல்லிகைப் பூவுக்குத்தான் ஒப்பிட வேண்டும்.

பாலைப் பருகினால் கழுத்து வழியே பால் தொண்டைக்குள் இறங்குவது தெரியும் என்று சொல்லும்படியான அவ்வளவு சிவப்புடையவள் விலாசினி; பகவதியோ மாநிறந்தான்; ஆனால் விலாசினியின் அழகிலும் இல்லாத ஒரு வகை மிடுக்கும், கம்பீரமும் பகவதியின் கட்டமைந்த தோற்றத்தில் பொருந்தியிருந்தன. நிமிர்ந்த நடை! நேரான பார்வை; கணிரென்ற பேச்சு; கலீரென்ற சிரிப்பு; இளமைப் பருவத்தின் துடிதுடிப்பு ஒவ்வோர் அணுவிலும் நிறைந்து பொங்கிப் பூரித்து நிற்கும் அமுத கலசத்தைப்போன்ற உடல்; கோடு கீறினாற் போன்ற புருவங்களின் கீழே கூரிய விழிகள், நீண்ட நாசி, அலட்சியப் பார்வையுமான சேல் மீன்களென ஆண்மையின் நெஞ்சாழத்தைக் கிழித்துப் பார்க்கும் கூரிய விழிகள்; நீண்ட நாசி, அலட்சிய பாவமான ஒருவித நெளிவு திகழும் வாயிதழ்கள். பெண் யானை நடந்துவருவது போன்ற நடை.

“சந்தேகமே இல்லை. இவள் ஒரு வீர புருஷனின் தங்கை தான்” என்று பார்த்தவுடனே சொல்லி விடலாம்.

பகவதியும் விலாசினியும், மேகமும் மின்னலும் அருகருகே நடந்து சென்றது போல் சென்று, கோவில் வாசலில் மகாராணியை வணங்கினார்கள்.

“குழந்தைகளே! வாருங்கள் ! உங்கள் பல்லக்குகள் வருவதைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போகாமல் நிற்கிறோம். உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நீங்கள் இருவரும் வருகிற செய்தியை அதங்கோட்டாசிரியர் சொன்னார். வாருங்கள்; கோவிலுக்குள் சென்று தரிசனத்தை முடித்துக்கொண்டு வருவோம்” என்று சொல்லி, அந்த இரு பெண்களையும் தன் இருபுறமும் அணைத்தாற் போலக் கைகளால் தழுவிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார் மகாராணி.

“ஆசிரியரே! வல்லாள தேவனை ஏன் இன்னும் காணவில்லை; அந்தப் பாறையில் நின்றுகொண்டு இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறானோ?” என்று ஆலயத்துக்குள் நுழையும் போது பவழக்கனிவாயர் அதங்கோட்டாசிரியரின் காது அருகே மெல்லக் கேட்டார்.

“வராமல் எங்கே போகப் போகிறான்? அவனுடைய தங்கை வேறு வந்திருக்கிறாள். ஏதாவது முக்கியமான காரியம் இருக்கும்! விரைவில் வந்து விடுவான். நீங்கள் வாருங்கள்; நாம் உள்ளே போகலாம்” என்று ஆசிரியர் அவருக்குச் சமாதானம் கூறினார்.

கடற்கரையோரக் கோவிலாகையினால் மிகவும் தணிவாகக் கட்டப்பட்டிருந்தது. மதிற் சுவர்களில் பலகணிகள் அமையப் பெறவில்லை. உள்ளே வெளிச்சம் வருவதற்காக மேற்புறத்து விதானச் சுவரில் வட்ட வட்டமாக இடைவெளிகள் விடப்பட்டிருந்தன.

காற்று நுழைவதற்கு வசதிகளே இல்லாமலிருந்தும் கடலை ஒட்டி இருந்ததனால் குளிர்ச்சியாக இருந்தது. மகாராணியாரின் விஜயத்தை முன்னிட்டுக் கோவிலுக்குள் விசேஷ தீபாலங்காரங்கள் செய்திருந்த போதிலும் மூலை முடுக்குகளில் தேங்கி நின்ற பயங்கர இருளைச் சின்னஞ் சிறு தீபங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கல்பகோடி காலமாக மூன்று மகா சமுத்திரங்களும் ஒன்று சேரும் அந்த இடத்தில் கன்னித் தவம் இயற்றிக் கொண்டிருக்கும் குமரித் தாயின் தரிசனம் வானவன் மாதேவியின் மனத்தில் நிர்மலமானதொரு சாந்தியை உண்டாக்கியது. கார்ப்பக்கிருகத்தில் குமரித் தேவியின் நெற்றியிலிருந்து மின்னல் கீற்றுப் போல் வைர வைடூரியங்களில் இழைத்த திலகம் ஒளி வீசி மின்னியது.

“அரசி! நான் தமிழ் நிலத்தின் எல்லையைக் காக்கும் தமிழ்த்தேவி. நீ தமிழகத்தையே ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னாதிமன்னனான ஒருவனை மணந்த பாண்டிமாதேவி, அஞ்சாதே! என் அருள் உனக்கு உண்டு” என்று திருநுதலின் புருவங்களுக்கிடையே அருளொளி வீசும் திலகச் சுடர் சொல்லாமல் சொல்லுகிறதோ?

“தேவி! இந்தச் சந்நிதிக்கு நேரே கடல் தெரியும்படியாக மதிற் சுவரில் ஒரு துவாரம் இருந்ததாம். அன்னையின் திலகச் சுடரொளி கண்டு கவரப்பட்ட எத்தனையோ மரக் கலங்களும், கப்பல்களும் போக வேண்டிய துறை இதுதானோ என மயங்கி வந்து பாதைகளில் மோதிச் சிதைந்ததுண்டாம். இப்போது அந்தத் துவாரத்தை மூடிவிட்டார்கள்” என்று கூறினார் பவழக்கனிவாயர்.

பக்திப்பரவசம் நிறைந்த முகபாவத்தோடு சந்நிதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மகாராணி பவழக்கனிவாயர் கூறியதைக் கேட்டுத் தலையசைத்தார். தன் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளம் பெண்களைப் பார்த்து ஒருமுறை புன்முறுவல் பூத்தார். பகவதியும் விலாசினியும் பதிலுக்கு மரியாதையாகப் புன்னகை செய்தார்கள்.

அர்ச்சகர் எல்லோருக்கும் குங்குமம், சந்தனம் ஆகிய பிரசாதங்களைக் கொண்டு வந்து அளித்தார். குங்குமம் முதலியவற்றை அர்ச்சகர் கொண்டு வந்தபோது மகாராணி கைகூப்பி வணங்கிவிட்டுத் திருநீற்றை மட்டும் எடுத்து அணிந்துகொண்டார்.

“இந்தக் குழந்தைகளுக்கு நிறையக் குங்குமமும் சந்தனமும் கொடுங்கள். இவர்கள்தான் பூவும் குங்குமமுமாகச் சந்தனமும் மஞ்சளும் பூசிப் பெருவாழ்வு வாழ வேண்டியவர்கள். எங்களையெல்லாம்விடக் கன்னியாகுமரியம்மன் மேல் இவர்களுக்குத்தான் உரிமை அதிகம். அவளைப் போலவே இவர்களும் கன்னிகைகள். ஆனால் என்றைக்குமே அப்படி இருந்து விடமாட்டார்கள்!” என்று மகாராணி சிரித்துக் கொண்டே கூறியபோது எல்லோரும் சிரித்தார்கள். தாழ்வான குறுகிய அந்த முன் மண்டபத்தில் ஏககாலத்தில் அத்தனை சிரிப்பொலிகளும் எதிரொலித்தன. கேலிக்கு ஆளான பகவதியும் விலாசினியும் கன்னஞ் சிவக்க முறுவலித்தவாறு தலை குனிந்தார்கள். குனிந்த தலை நிமிராமலே குங்குமமும், சந்தனமும் எடுத்துக் கொண்டார்கள்.

“குழந்தைகளே! வாருங்கள். கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியிருக்கும் இந்தப் பிரகாரத்தை வலம் வரலாம்” என்று அவர்கள் இருவரையும் இரண்டு கைகளிலும் பற்றிக் கொண்டு பிரகாரத்துக்குள் நுழைந்தார் மகாராணி.

இருண்டு குறுகலாயிருந்த அந்தச் சிறிய பிரகாரத்தில் ஒளி மங்கிய அகல் விளக்குள் எரிந்து கொண்டிருந்தன. மகாராணியாரும் பெண்கள் இருவரும் தவிர மற்றவர்கள் எல்லோரும் மண்டபத்திலே நின்று விட்டார்கள். குறுகலான வழியில் எல்லோரும் ஒரே சமயத்தில் நுழைந்தால் இடையூறாக இருக்குமென்று எண்ணி அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் முதலியவர்கள் கூட வெளியே நின்று கொண்டனர்.

விலாசினியிடமும், பகவதியிடமும் ஏதேதோ சிரித்துப் பேசிக்கொண்டே பிரகாரத்தில் நடந்தார் மகாராணி. பிரகாரத்தின் மேற்புறச் சுவரில் மூன்று பாகத்துக்கு ஒரு துவாரமாக வட்டத் துவாரங்கள் இருந்தன.

அந்த வட்ட இடைவெளிகளின் மூலம் நீலவானத்தின் சின்னஞ்சிறு நட்சத்திரப் பூக்கள் பெளர்ணமி நிலா.ஒளியில் அழகாகத் தோன்றின.

மகாராணியின் கையைப் பிடித்துக்கொண்டே நடந்த பகவதி மேலே பராக்குப் பார்த்தவாறே சென்றாள். விலாசினி தரையைப் பார்த்துக் கொண்டே குனிந்து சென்றாள். அவர்கள் இருவருக்கும் நடுவே தியானத்தினால் குவிந்த கண்ணிமைகளுடனே பரவசத்தோடு மெல்ல நடந்து கொண்டிருந்தார் மகாராணி வானவன் மாதேவி.

பிரகாரத்தின் கிழக்கு மூலையும் வடக்கு மூலையும் சந்திக்கிற திருப்பத்தை நெருங்கியபோது மேலே பார்த்துக் கொண்டே வந்த பகவதி வீல் என்று பயங்கரமாக அலறினாள் : முன்னால் நடந்து கொண்டிருந்த மகாராணியாரையும் விலாசினியையும் குபிரென்று பாய்ந்து நாலைந்தடி பின்னுக்கு இழுத்துக் கீழே தள்ளினாள் அவள். தள்ளிய வேகத்தில் அவர்களைப் போலவே தானும் நிலை குலைந்து கல் தளத்தில் விழுந்தாள். “என்ன? ஏன் இப்படிச் செய்தாய்?” என்று மகாராணியும், விலாசின்ரியும் இரைந்த குரலில் கத்தினார்கள். ஆனால் அவர்களுக்குப் பகவதி பதில் சொல்வதற்கு முன்பே அதன் காரணம் கண் காணத் தெரிந்து விட்டது.

பிரகாரத் திருப்பத்தின் மேற்புறத்துத் துவாரத்தில் கூர்மையான பெரிய வேல் நுனி ஒன்றும் அதைப் பிடித்துக் கொண்டிருக்கும் வலிமை வாய்ந்த முரட்டுக் கையும் தெரிந்தன. மறுகணம் படீர் என்ற ஓசையோடு அந்த வேல் கல்தளத்தில் விழுந்து முனை மழுங்கியது.

அவர்கள் தொடர்ந்து சென்றிருந்தால் மூவரில் நடு நாயமாக நடந்த மகாராணியாரின் மேல் பாய்ந்திருக்க வேண்டிய வேல் அது. வேல் கல்தளத்தில் விழுந்த ஒசை அடங்குவதற்குள் மேலே விதானத்தில் யாரோ ஆள் ஒடும் ஒசை திடுதிடுவென்று கேட்டது.

அதற்குள் பகவதியின் அலறலையும் கல்லில் வேல் விழுந்ததனால் உண்டான ஓசையையும் கேட்டு முன் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அதங்கோட்டாசிரியர் முதலியவர்களும் மற்ற வீரர்களும் பதறியடித்துக்கொண்டு பிரகாரத்துக்குள் வேகமாக ஓடிவந்தனர்!

“என்ன? என்ன? இங்கே என்ன நடந்தது? ஏது இந்த வேல் ?” என்ற கேள்விக் குரல்கள் கிளம்பின.

“மேலே இருந்து யாரோ துவாரத்தின் வழியாக வேல் எறிந்துவிட்டு ஒடுகிறான். மதில் வழியாக மேலே ஏறிப் பிடியுங்கள், ஒடுங்கள்!” என்று வீரர்களை நோக்கிக் கூச்சலிட்டாள் பகவதி.