பாண்டிமாதேவி/முதல் பாகம்/சேந்தன் செய்த சூழ்ச்சி

21. சேந்தன் செய்த சூழ்ச்சி

பறளியாற்று வெள்ளம் காரணமாகச் சுற்று வழியில் அரண்மனைக்குப் புறப்பட்டிருந்த சேந்தனும், தளபதியும் திருநந்திக் கரையை அடையும்போது ஏறக்குறைய நடுப்பகல் ஆகிவிட்டது. வல்லாளதேவனின் உடல்தான் குதிரைமேல் திருநந்திக் கரைச் சாலையில் சென்று கொண்டிருந்ததே யொழிய உள்ளம் முழுதும் அரண்மனையில் நடந்துகொண்டிருக்கும் கூற்றத் தலைவர் கூட்டத்தில் லயித்திருந்தது.

‘அடாடா! இந்தப் பாழாய்போன பறளியாற்று வெள்ளம் நம்முடைய திட்டத்தையே மாற்றிவிட்டதே? இன்னுமா அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்தைத் தொடங்காமல் இருக்கப் போகிறார்கள்? நேர்வழியாகப் புறப்பட்டுப் போயிருந்தால் இதற்குள் நாமும் ஒழுங்காக அரண்மனைக்குப் போய்க் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம். நாம் போகவில்லை என்பதற்காகக் கூட்டம் நின்று விடவா போகிறது? நமக்குத்தான் பல விதத்தில் நஷ்டம் ! இப்போதுள்ள தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலையில் மாறுதலைச் செய்வதற்கான முக்கியமான பல செய்திகளைக் கூட்டத்தில் விவாதித்திருப்பார்கள். போய்க் கலந்து கொண்டிருந்தால் கூற்றத் தலைவர்களும், மகாமண்டலேசுவரரும் எந்த நோக்கத்தில் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டருக்கலாம். ஊம்! நினைத்துப் பயன் என்ன? கூட்டம் முடிவதற்குள் அங்கு எப்படிப் போக முடியும்!

இத்தகைய நினைவுகளோடு குதிரையில் சென்று கொண்டிருந்த வல்லாளதேவன் அடிக்கெர்ருதரம் பெருமூச்சு விட்டான். பக்கத்தில் குதிரையை மெதுவாகச் செலுத்தியவாறே வந்துகொண்டிருந்த நாராயணன் சேந்தன் தளபதியின் முக மாறுதல்களையும் பிற செயல்களையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டு வந்தான். அக்காலத்தில் திருநந்திக் கரையும், அதைச் சூழ அமைந்திருந்த இடங்களும் பூதப்பாண்டி முதலிய சிற்றுார்களும் சமணர்களும் அவர்களுடைய திருமடங்களும், தவப்பள்ளிகளும் நிறைந்துள்ள பிரதேசமாக இருந்தன. காலஞ்சென்ற பேரரசர் பராந்தக பாண்டியர் சைவ சமயத்தைப் போற்றி வளர்த்தாலும் ஏனைய சமயங்கள் வளரவும் உறுதுணை புரிந்தார். தமது அரசாட்சிக் காலத்தில் திருநந்திக் கரையிலுள்ள சமணப் பெரும்பள்ளிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக அவர் அளித்த பள்ளிச் சந்தங்கள் பல. சமணர்கள் சீராக வாழ்ந்த காலத்தில் திருநந்திக் கரை மலைப் பகுதிகளில் அற்புதமான குகைக் கோவில்களைக் குடைந்தார்கள். சமண மதம் இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு சிறப்போடில்லை யானாலும் அதன் பெருமைக்குரிய அடையாளங்கள் அங்கங்கே தென்படத்தான் செய்தன.

சமணர் திருமடங்களும், பெருந்தவப் பள்ளிகளும் நிறைந்த ஒரு பகுதியில் தளபதியும் சேந்தனும் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றனர். அழுக்கடைந்த ஆடையும் மயிற்பீலி தாங்கிய கையுமாகச் சமணத் துறவிமார்கள் வீதியில் அங்கும் இங்குமாகப் போய் வந்து கொண்டிருந்தனர்.

“சேந்தா! தண்ணிர் வேட்கை அதிகமாக இருக்கிறது. இங்கே பருகுவதற்கு நீர் கிடைக்குமா?” என்று ஒரு சமணப் பள்ளியைச் சுட்டிக்காட்டிச் சேந்தனிடம் கேட்டான் தளபதி.

“கிடைக்கும்! இறங்கி உள்ளே போய்க் கேளுங்கள். அது வரை நான் குதிரையைப் பார்த்துக்கொண்டு இங்கே இருக்கிறேன்” என்றான் நாராயணன் சேந்தன். தளபதி குதிரையிலிருந்து இறங்கிச் சமணப்பள்ளியினுள் நுழைந்தான். அங்கே உட்புறம் உட்கார்ந்து ஏதோ பழைய சுவடியைப் படித்துக்கொண்டிருந்த வயது முதிர்ந்ததுறவி ஒருவர் அவனைப் புன்முறுவல் செய்து வரவேற்றார். அவனுடைய தோற்றத்தையும், உடைகளையும் பார்த்தவுடனேயே அவன் பெரிய பதவியிலுள்ளவனாக இருக்கவேண்டுமென்பதை அந்தச் சமணத் துறவி தெரிந்து கொண்டார்.

“வாருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அன்புடனே விசாரித்தார் அவர்.

“சுவாமி ! தாகம் அதிகமாயிருக்கிறது. பருகுவதற்குக் கொஞ்சம் தண்ணிர் வேண்டும்” என்றான் வல்லாளதேவன். துறவி எழுந்து சென்று அவனுக்குத் தண்ணிர் கொண்டு வந்து கொடுத்தார். அவன் வேண்டிய மட்டும் பருகித் தாகத்தைத் தணித்துக் கொண்டான். ‘வெகு தூரம் பிரயாணம் செய்து அலுப்படைந்தவர் போல் தென்படுகிறீர்கள். இப்படிச் சிறிது படுத்திருந்து பிரயாணக் களைப்புத்தீர ஒய்வு எடுத்துக் கொள்ளுங்களேன்” என்று பரிவாக உபசரித்தார் அந்தத் துறவி.

“இல்லை. நான் அவசரமாகப் புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் செல்லவேண்டும். தங்க நேரமில்லை” என்று அவன் கூறவும் வியப்புடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த துறவி, “அடாடா ! இவ்வளவு துரம் வீணாக அலைந்திருக்கிறீர்களே அரண்மனைக்குச் செல்லப் பறளியாற்றின் கரையை ஒட்டினாற் போலக் குறுக்குச் சாலை ஒன்று செல்கிறதே. அதன் வழியாகப் போயிருந்தால் இதற்குள் அரண்மனை போய்ச் சேர்ந்திருக்கலாமே. அதை விட்டுவிட்டு இவ்வளவு தொலைவு அலைந்திருக்கிறீர்களே?” என்றார்.

“சுவாe! அந்த வழி எனக்கும் தெரியும்! ஆனால் பறளியாற்றில் வெள்ளம் வந்து நேற்று இரவே அந்தக் குறுக்கு வழியெல்லாம் உடைப்பெடுத்து மூழ்கி விட்டதாமே? அதனால்தான் சுற்று வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நானும் என் நண்பனும் இப்படி வந்தோம்."

“அப்படியா! அந்த வழியை வெள்ளம் உடைத்துக் கொண்டு போய் விட்டதென்று உங்களுக்கு யார் அப்படிச் சொன்னார்கள்?” என்று ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.

“ஏன்? என்னுடன் பிரயாணம் செய்யும் ஒரு நண்பன் தான் சொன்னான்.”

“நான் இன்று காலையில்தானே அதே பாதையாக இங்கு வந்து சேர்ந்தேன் பறளியாற்றில் வெள்ளம் போவது உண்மைதான். ஆனால் பாதை உடைப்பெடுத்து மூழ்கி விட்டதாக உங்கள் நண்பன் சொல்லியிருந்தால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க வேண்டும்.”

து.ாய்மை திகழும் அந்தத் துறவியின் முகத்தைப் பார்த்த போது அவர் கூறுவது பொய்யாக இருக்களது என்று தோன்றியது அவனுக்கு திடீரென்று தளபதியின் சந்தேகம் கோபம், எல்லாம் நாராயணன் சேந்தன்மேல் திரும்பின. அவன் எதற்காகவோ, தன்னிடம் பொய் சொல்லித் தன்னைச் சுற்றி வளைத்து இழுத்தடிப்பதாகத் தோன்றியது. “சுவாமீ! ஒரு வேளை நீங்கள் வரும்போது ஆற்றில் வெள்ளம் குறைவாக இருந்திருக்கலாம். அதன் பின்பு அதிகமாகிச் சாலைகளை மூழ்கச் செய்திருக்கலாம் அல்லவா?’ என்று தன் சந்தேகத்தை உறுதி செய்துகொள்வதற்காக மறுபடியும் கேட்டான் தளபதி, அவர் கலகலவென்று சிரித்தார். “ஐயா! நீங்கள் சிந்தனை உணர்வே இன்றிக் கேள்வி கேட்கின்றீர்கள். நான் இங்கு வந்து சில நாழிகைப்போதுக்கு மேல் ஆகியிருக்காது. பறளியாறு மிகவும் பள்ளமான இடத்தில் ஓடுகிறது. அரண்மனைக்குச் செல்லும் சாலையோ கரைமேல் மலைச்சிகரம் போல் மேடான இடத்தில் போகிறது. என்னதான் வெள்ளம் வரட்டுமே, இந்தச் சில நாழிகை நேரத்தில் சாலைகளெல்லாம் அழிந்து மூழ்கியிருக்க முடியுமென்பதை என்னால் நம்பமுடியவில்லை.”

நிதானமாகச் சிந்தித்தபோது அவர் கூறுவது நியாயமாகவே பட்டது. அவனுக்கு. தன் உணர்ச்சிகளையோ, கோபதாபங்களையோ அங்கே அந்தத் துறவிக்குமுன் வெளிக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவன். “சரி! நான் வருகிறேன் சுவாமீ! இவ்வளவு தொலைவு அலைந்தது அலைந்தாயிற்று. இனி எந்த வழியாகப் போனால் என்ன?” என்று அவரிடம் வணங்கி விடைபெற்றுக் கொண்டான்.

‘இந்த ஊர் எல்லை கடக்கிறவரை நாராயணன் சேந்தனிடம் எதுவும் கேட்கக்கூடாது. எல்லை கடந்தவுடன் அந்தத் திருட்டுக் குள்ளநரியைக் குதிரையிலிருந்து கீழே பிடித்துத் தள்ளி இரண்டு கன்னங்களிலும் பூசைக்காப்புக் கொடுத்து, ஏனடா நாயே! என்னைப் பொய் சொல்லியா ஏமாற்றினாய்? என்று கேட்கவேண்டும்! இவ்வாறு மனக் கொதிப்புடன் எண்ணிக் கொண்டே திருநந்திக்கரைச் சமணப் பெரும் பள்ளியிலிருந்து வெளிவந்தான் தளபதி வல்லாளதேவன். படிகளில் இறங்கித் தெருவைப் பார்த்ததும் அவனுக்குப் பகீரென்றது. அங்கே நாராயணன் சேந்தன் இல்லை. நிறுத்திவிட்டுப் போயிருந்த தளபதியின் குதிரையும் இல்லை. வல்லாளதேவன் திகைத்தான். ஒரு விநாடி அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. நெற்றி சுருங்கியது. புருவங்கள் வளைந்தன, விழிகள் சிவந்தன! தோள்கள் விம்மிப் புடைத்தெழுந்தன. வார்த்தைகளில் அடக்கி விவரிக்க முடியாத ஆத்திரம் அவனுள் குமுறியது. சேந்தன் தன்னை வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்துக்காகத் திட்டமிட்டு முட்டாளாக்கிவிட்டது போல் இருந்தது அவனுக்கு. தான் அன்றையக் கூட்டத்தில் கலந்து கொள்ள அரண்மனைக்கு உரிய நேரத்தில் போய்விடாமல் தடுத்து அலைக்கழிக்கவே சேந்தன் தொடக்கத்திலிருந்து சூழ்ச்சி புரிந்து வந்திருக்கிறான் என்பதும் அவனுக்கு ஒருவாறு புரிந்தது. அப்போது மட்டும் தப்பித் தவறி நாராயணன் சேந்தன் அவனுக்கு முன்னால் அகப்பட்டிருந்தால் பழிபாவம் வந்தாலும் பரவாயில்லை என்று கொலை செய்வதற்குக் கூடத் துணிந்திருப்பான் அவன்.

சேந்தன் எந்தப் பக்கமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போனான்? எப்போது போனான்? என்று அக்கம் பக்கத்தில் யாரிடமாவது விசாரிக்கலாமென்று எண்ணி யவனாய்ச் சுற்றும் முற்றும் பார்த்தான் தளபதி.

சமணப் பள்ளியின் வாயிற்புறத்து மேடையில் இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருத்தி பூ விற்றுக்கொண்டிருந்தாள். அவள் கையில் பூக்கூடை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கையிலே பூமாலை ஒன்றை வைத்துக் கொண்டிருந்தாள். கூடையில் ஆம்பல், தாமரை, மல்லிகை, முல்லை, சண்பகம், கோங்கு, வேங்கை முதலிய பல நிறங்களையும், பலவகையையும் சேர்ந்த புது மலர்கள் குவிந்திருந்தன. தான் தண்ணிர் குடிப்பதற்காகச் சமணப் பள்ளிக்குள் நுழைந்தபோதும் அந்தப் பெண் அங்கே உட்கார்ந்திருந்ததாக நினைவிருந்தது வல்லாளதேவனுக்கு அவளைக் கேட்டால் சேந்தன் எங்கே போனான் என்ற விவரம் தெரியலாம் என்று நினைத்தான்.

அந்தப் பூக்காரப் பெண் நல்ல அழகியாகக் காட்சியளித்தாள். அந்த நிலையில் மலர்க் குவியல் களுக்கிடையே அவளை எவனாவது ஒரு கவிஞன் பார்த்திருந்தால், “மலர்களுக்கிடையே-சாதாரணமான வெறும் மலர்களுக்கு இடையே-இளமையும், மோகமும், செறிந்த புதிய பெருமலர் ஒன்று பூத்துப் பொலிவுடன் வீற்றிருக்கிறது” என்ற கருத்து அமையும்படி ஒரு கவிதையே இயற்றியிருப்பான். செந்தாழை நிறமும், செங்குமுத இதழும், கருமேகக்கூந்தலுமாகப் பூப்போன்ற கையில் இருவாட்சி பூப்போன்ற விரல்களைக் கொண்டு பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். சண்பக மொட்டுக்களைப் போன்ற அவளுடைய விரல்களில் ஒளிந்து கொண்டிருந்த திறமை உதிரிப் பூக்களை ஊழ்வினையை வரிசைப்படுத்தும் பரம்பொருள் நியதி போல் வரிசைப்படுத்தி வேகமாகவும் நளினத்துடனும் தொடுத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் தன்னுடைய சொந்தக் கவலைகளையும் மறந்து அந்த விரல்களின் நளினத்தை விரல்களுக்குரியவளின் வனப்பை அனுபவித்து நோக்கினான் தளபதி, பின்பு தன் நினைவு வரப் பெற்றவனாய் மெல்ல நடந்து அவள் அருகில் சென்று, “பெண்னே! சிறிது நேரத்துக்குமுன் இந்த மடத்து வாசலில் இரண்டு குதிரைகளும் ஒரு குட்டை மனிதனும் இருந்தார்களே! அவன் குதிரைகளைச் செலுத்திக்கொண்டு எந்தப் பக்கமாகப் போனானென்று உனக்குத் தெரியுமா?” என்று தன்னுடைய குரலில் கணிவையும், இனிமையையும் வரவழைத்துக் கொண்டு விசாரித்தான்.

கீழே குனிந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒருவித உணர்ச்சியும் தென்படவில்லை. உதடுகள் அசைந்து கோணின. பதில் சொல்லவில்லை.

“உன்னைத்தான் அம்மா கேட்கிறேன். பதில் சொல்லேன்” என்று சிறிது உரத்த குரலில் இரைந்தான் தளபதி. அப்போதும் அவள் வாயிலிருந்து பதில் வரவில்லை. “ஐயா உங்களுக்கு என்ன வேண்டும் அந்தப் பெண்ணுக்குப் பேச வராது. அவள் பிறவிச் செவிடு-பிறவி ஊமை: பின்னாலிருந்து குரல் வந்தது.

தளபதி திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண்ணின் தந்தைபோல் தோன்றிய வயதான கிழவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். கேள்விப்பட்ட உண்மையில் ஏற்பட்ட அதிர்ச்சி, தான் கேட்க வேண்டிய கேள்வியைக்கூட மறந்து போகச் செய்து விட்டது. அவளா ஊமை அமுதக்குடம் போல் பருவத்தின் அழகு மெருகு செய்திருக்கும் அந்தப் பொற்சித்திரப் பாவையா ஊமை?

தளபதி பரிதாபத்தோடு அவளைப் பார்த்தான். படைப்புக் கடவுள் பொல்லாதவன், மிகமிகப் பொல்லாதவன்! என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.

“என்ன ஐயா? பூ ஏதாவது வேண்டுமா? வேண்டுமானால் சொல்லுங்கள். தரச் சொல்கிறேன்” என்று அந்தக் கிழவன் தொணதொணத்தான்.

“ஒன்றும் வேண்டாம்! இங்கே வாசலில் என் நண்பன் ஒருவன் குதிரைகளோடு நின்று கொண்டிருந்தான், நான் மடத்துக்குள் சென்று திரும்புவதற்குள் திடீரென்று எங்கோ போய்விட்டான். அவன் எந்தப் பக்கமாகப் போனான் என்று எனக்குத் தெரிய வேண்டும்.

“எனக்குத் தெரியாது! நான் பார்க்கவேயில்லை, ஐயா!" என்று கையை விரித்துவிட்டான் கிழவன். இங்கே இவர்களிடம் விசாரித்துப் பயன் இல்லை என்று எண்ணிக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தான் தளபதி.

போகும்போது கடைசி முறையாக அந்தப் பூக்காரப் பெண்ணை அவன் கண்கள் ஏக்கத்தோடு பார்க்கத் தவறவில்லை. தன்னை ஏமாற்றிய சேந்தன், அவனுடைய சூழ்ச்சிகள் வேறு எத்தனையோ முக்கியமான சிந்தனைகள்-எதுவும் அப்போது தளபதியின் உள்ளத்தில் மேலெழுந்து நிற்கவில்லை. கால்டோன - போக்கில் நடந்து கொண்டே, பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத அழகை வைத்து விடும் படைப்பின் முரண்பாட்டைச் சிந்தித்துக் கொண்டே சாலையில் நடந்தான். எங்கே போகிறோம் என்ற நினைவே இல்லை அவனுக்கு.