பாண்டிமாதேவி/முதல் பாகம்/நாராயணன் சேந்தன்
8. நாராயணன் சேந்தன்
குதிரை பாய்ந்தோடுவதற்காக முன் கால்களைத் தூக்கிய வேகத்தில் வழியை மறிக்க வந்த மூவரில் ஒருவன் அடிபட்டுத் தடுமாறிக் கீழே உருண்டான். நல்ல வேளையாக மற்ற இரண்டு பேர்களும் ஒதுங்கி நின்றுகொண்டு வழியை விட்டு விட்டார்கள். இல்லையானால் அவர்களுக்கும் மற்றவனுக்கு நேர்ந்த கதிதான் நேர்ந்திருக்கும். சேந்தன் குதிரையைச் செலுத்துவதில் சில சூட்சுமங்கள் வைத்திருப்பான். இம்மாதிரி அபாயகரமான சந்தர்ப்பங்களில் குதிரையை வாயுவேகமாகப் பறக்கச் செய்யும் தந்திரம் அவனுக்கா தெரியாது?
தான் அவ்வாறு விரைவாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு ஓடிவந்த போது அந்த மூன்று சிவப்புத் தலைப்பாகை அணிந்த வீரர்களும் பின்னால் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்களா, இல்லையா என்பதைக்கூட நாராயணன் சேந்தன் திரும்பிக் கவனிக்கவில்லை. அங்கே குதிரையை முடுக்கின முடுக்கில் புறத்தாய நாட்டுக் கோட்டையின் தென்மேற்கு மூலையிலுள்ள ஏரியின் கரையில் போய்த்தான் நிறுத்தினான்.
பிரதான வாசல் வழியாகக் கோட்டைக்குள் நுழைந்து சென்றால் தன் வரவைப் பலரும் தெரிந்து கொள்ளும்படி ஆகிவிடும் என்று அவன் பயந்தான். ஏரிக்கரையில் குதிரையை நிறுத்திவிட்டுக் கோட்டைக்குள் எப்படி நுழைவதென்று இங்கே நின்று சிந்தித்தான். அவன் மனத்தில் குழப்பமும், அதிர்ச்சியும் மாறிமாறித் தோன்றின. கன்னியாகுமரியிலிருந்து தப்பிய அந்த வீரர்கள் சுசீந்திரம் பாதிரித் தோட்டத்துக் கிளை வழியில் எப்படி வந்து சேர்ந்தார்கள்? எப்போது வந்து சேர்ந்தார்கள் ? அவர்கள் தன் குதிரையை ஏன் மறிக்கவேண்டும்? சிந்திக்கச் சிந்திக்க மனம் தான் குழம்பிற்றே தவிர வேறொன்றும் விளங்கவில்லை.
அங்கே அந்த இரவின் தனிமையில் நின்று மனம் குழம்பிக் கொண்டிருப்பதைவிட உடனே கோட்டைக்குள்ளே செல்ல முயன்றால் பயனளிக்கும் என்று அவன் நினைத்தான். சுற்று முற்றும் கோட்டை மதிலைப் பார்த்தபோது அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. தென்மேற்குப் புறத்திலிருந்த ஏரியிலிருந்து கோட்டைக்குள்ளே இருக்கும் நந்தவனத்துக்கு உபயோகப்படுவதற்காக ஒரு சிறிய தண்ணிர்க் கால்வாய் பிரிந்து போயிற்று. கனத்த மதிற் சுவரில் அரைவட்ட அளவில் அந்தக் கால்வாய்த் தண்ணிர் உள்ளே நுழைந்து போவதற்காக ஒரு சிறிய வாய்க்கால் வழி உண்டாக்கியிருந்தார்கள்.
தன்னைப் போன்ற குட்டை மனிதன் நுழைவதற்கே உயரமும், அகலமும் போதாது போல் தோன்றிய அந்தக் கால்வாய் வழியில் நீரோட்டத்தின் வேகத்தையும் சமாளித்துக் கொண்டு எப்படி உள்ளே நுழைவதென்று மலைத்தான் அவன். அப்போது மிக அருகில் ஆட்கள் ஓடி வரும் காலடி யோசை கேட்டது. அவன் மனத்தில் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன. ஒருவேளை பாதிரித் தோட்டத்துக் கிளை வழியில் தன்னிடம் வம்பு செய்த அந்த முரடர்களாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே திரும்பிப் பார்த்தான்.
அவனுடைய சந்தேகம் சரியாகவே இருந்தது. கிளை வழிச் சாலை ஏரிக்கரையை அடையும் திருப்பத்தில் நிலா ஒளியில் அவர்கள் வெகு வேகமாக ஒடி. வந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். அவர்களுடைய சிவப்புத் தலைப்பாகைகள் நன்றாக அடையாளம் தெரிந்தன.
நாராயணன் சேந்தனுக்கு யோசிக்க நேரமில்லை. குபிரென்று கால்வாயில் குதித்தான். மார்பளவுத் தண்ணிர் திமு திமுவென்று உட்புறம் பாய்ந்து கொண்டிருந்தது. உள்ளே நந்தவனம் இருந்த பகுதி வெளிப்புறத்தைவிடச் சிறிது பள்ளமாக இருக்கவேண்டும். இல்லையானால் வெள்ளம் இழுத்துக் கொண்டு போவதுபோல் அப்படி ஆளை இழுத்துப் பறிக்குமா ? நிமிர்ந்தால் தலைமேலே மதிற்.சுவரின் அடிப்பாகத்தில் இடித்தது. இரண்டு விலாப்புறமும் பக்கச் சுவர்களில் உரசின. பருத்த தேகத்தை உடைய அவனுக்கு மூச்சுத் திணறியது, விழிகள் பிதுங்கின. ஐயோ, மறுபுறம் போய்க் கரையேறுவதற்குள் மூச்சுத் திணறிச் செத்துப் போய்விடுவேன் போலிருக்கிறதே, இந்தப் பாழாய்ப்போன கால்வாய் வழியாக உள்ளே போக வேண்டுமென்ற ஆசை எனக்கு ஏன்தான் உண்டாயிற்றோ? இடைவழியிலேயே இந்த இருண்ட கால்வாய்க்குள் நம்முடைய உடல் செருகிச் சிக்கிக் கொண்டாலும் ஏனென்று கேட்டார் இல்லையே?’ என்று தனக்குள் எண்ணித் துணுக்குற்றான் அவன். வேகமாக உள்நோக்கிப் பாயும் நீரோட்டம் ஓர் இடத்திலும் பாதங்களை ஊன்றி நிற்க விடாமல் அவனை இழுத்துத் தள்ளிக் கொண்டு போயிற்று.
நாராயணன் சேந்தன் மதிலின் உட்புறம் நந்தவனத்தில் வந்து கரையேறிய அதே சமயத்தில் வெளிப்புறம் கால்வாய் தொடங்குமிடத்தில் திடும்திடு மென்று தண்ணீரில் ஆட்கள் குதிக்கின்ற ஓசை உட்புறமிருந்த அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தன்னைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் தான் குதித்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் உடனே நந்தவனத்திலிருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான், அது ஒரு மகிழ மரம். அதில் அவன் உட்கார்ந்து கொண்டிருந்த கிளை அரண்மனை நிலாமுற்றத்தைத் தொடுவதுபோல் நெருக்கமாகப் படர்ந்திருந்தது. அந்தக் கிளையில் அமர்ந்து கால்வாயை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் வழியே தன்னைப் பின்தொடர்ந்து குதித்து வந்த மனிதர்களின் வரவை எதிர்பார்த்து, அந்தத் திசை நோக்கி இமையாமல் காத்திருந்தன அவன் விழிகள். அந்த நடு இரவில் நிலா முற்றத்தில் பாட்டொலியும், நடன ஒலியும் கேட்பதை அவன் செவிகள் கூர்ந்து கவனித்தன. மேலே நிலா முற்றத்தில் மகாராணியாரும், வேறு சிலரும் அமர்ந்து கொண்டு ஆடல் பாடலை அநுபவிக்கிறார்கள் என்பதை அங்கிருந்து வந்த குரல்களால் அவன் தெரிந்து கொண்டான்.
மதிலோரமாகக் கால்வாயிலிருந்து உட்புறம் பிரவே சிக்கும் வழியில் நிழல்போல் உருவங்கள் ஆடின. நீர்ப் பரப்பில் காலடி பெயர்த்து வைக்கும் ஓசை கேட்டது. தான் மகிழ மரக் கிளையில் உட்கார்ந்திருப்பது உள்ளே வரும் அவர்களுக்குத் தெரிந்துவிடாத வண்ணம் கிளைகளின் அடர்த்தியில் தன்னை மறைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன். சிவப்புத் தலைப்பாகைகள் கால்வாய்த் துவாரத்தின் வழியே நிலா ஒளியில் நன்றாகத் தெரிந்தன. துணிவு மிகுந்தவனும், ஆபத்துக்களைச் சாதாரண விளையாட்டாக வரவேற்கும் இயல்புடையவனுமாகிய நாராயணன் சேந்தனுடைய மனத்தில் ஒரு விநாடி இனம் புரியாத பயத்தின் சாயை படிந்தது. அவர்கள் எதற்காகத் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தன்னால் ஆன மட்டிலும் சிந்தித்து முடிவுசெய்ய முயன்றான் அவன், ஆனால் அது அவனால் முடியவில்லை.
ஒன்று மட்டும் அவனுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. சிவப்புத் தலைப்பாகையோடு கூடிய அந்த மூன்று முரட்டு ஒற்றர்களும் நல்ல எண்ணத்துடனோ அல்லது நல்ல காரியத்தைச் செய்வதற்காகவோ, தென்பாண்டி நாட்டிற்குள் நுழைந்திருக்க முடியாது என்பதுதான் அது. கன்னியாகுமரிக் கடற்கரையில் புன்னைமரச் சோலைக்கருகில் அவர்கள் நீராடிக் கொண்டிருந்தபோது முதல் முதலாகப் பார்த்தவுடனே அவன் மனத்தில் இந்த எண்ணம் உறுதிப்பட்டு விட்டது. பின்னால் கன்னியாகுமரி ஆலயத்தில் நடந்தவை, பாதிரித் தோட்டத்து வழியில் மறிக்க முயன்றது ஆகிய நிகழ்ச்சிகளால் நாராயணன் சேந்தன் அந்த முரட்டுச் சிவப்புத் தலைப்பாகை ஆட்களைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான்.
இப்போது அவர்கள் தன்னைப் பின்பற்றிக் கோட்டைக் குள்ளேயும் நுழைந்துவிட்டதைப் பார்த்த அவனுக்கு உடம்பு புல்லரித்தது.
அவனை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறவர்களைப் போலக் கால்வாய் வழியாக உட்புறம் வந்து கரையேறிய அந்த மூவரும் அவன் ஏறி உட்கார்ந்திருந்த அதே மகிழ மரத்தை நோக்கி நடந்து வந்தனர். நிலா ஒளி தன்னை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என்ற திகில் நாராயணன் சேந்தனுக்கு ஏற்பட்டது. நிலா முற்றத்துச் சுவரின் நிழலும் மகிழ மரத்தின் அடர்த்தியும் அவனுக்கு அபயமளித்தன. மிக அருகில் மரத்தின் அடர்த்தியும் கீழே அம் மூவரும் வந்து நின்றபோது அவனால் அவர்களை நன்றாகப் பார்ப்பதற்கு முடிந்தது. பீமசேனர்களைப் போல் மூவரும் பருத்த ஆகிருதியுடையவர்கள். ஒருவன் முகத்திலும், கை கால்களிலும் சிராய்ந்து இரத்தக் காயங்கள் தென்பட்டன. அந்த ஆள் இன்னாரென்று நாராயணன் சேந்தன் தெரிந்து கொண்டு விட்டான். கன்னியாகுமரியில் தளபதி வல்லாளதேவனை வழியில் மடக்கி எதிர்த்து அவனிடம் நன்றாக அடிபட்டுப் பாறையிடுக்கில் விழுந்து மூர்ச்சை அடைந்தவனே அவன்.
கீழே அவர்கள் வந்து நின்ற நிலையும், சுற்றிலும் ஏதோ தேடுகிறவர்களைப் போல அவர்கள் பார்த்த விதமும் மரக்கிளையில் பதுங்கிக் கொண்டிருந்த நாராயணன் சேந்தன் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கின. மகிழ மரத்துப் பொந்தில் நெருப்புக் கங்கு போன்ற விழிகளோடு உட்கார்ந்து கொண்டிருந்த கோட்டான் ஒன்று குரூரமாகக் கத்தியது. மேற்புறம் நிலா முற்றத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்டிய ஒலியும், இனிய பாடற் குரலும் அந்தக் கோட்டானின் அலறலில் கலந்து விகாரமடைந்தன.
நாராயணன் சேந்தன் பாதங்களை மரக் கொம்பில் அழுத்திக் கிளையைப் பற்றியிருந்த கைகளின் பிடியை இறுக்கினான். அவன் உட்கார்ந்திருந்த கிளை குலுங்கியது. கீழே நின்று கொண்டிருந்தவர்களின் கவனம் ஒரு கணம் அந்தச் சிறிய சலனத்தால் கவரப்பட்டது. அவர்கள் தங்களுக்குள் இரகசியமாக ஏதோ பேசிக்கொள்ளத் தொடங்கவே நாராயணன் சேந்தன் மறைந்திருந்தபடியே அவற்றை உற்றுக் கேட்டான்.
“ஏண்டா செம்பியன், இதென்ன வேடிக்கை! இதுவரை ஆடாமல் அசையாமல் இருந்த மரக்கிளை ஏன் இப்படித் திடீரென்று குலுங்குகிறது ?”-மூவரில் ஒருவன் மற்றொருவனைப் பார்த்து இப்படிக் கேட்கவும், மற்ற இருவரும் குறும்புத்தனமாகச் சிரித்தனர்.
“முத்தரையா! மேலே நிலா முற்றத்தில் தான் மகாராணியார் இருக்கிறார் போலிருக்கிறது! இதோ இந்த ஒலிகளைக் கவனித்தாயா?” என்று, முதலில் கேட்டவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமலே, வேறொரு கேள்வியை எழுப்பினான் இன்னொருவன்.
“இரும்பொறை! அப்படியானால் நம்முடைய முயற்சியை இங்கே தொடர்ந்து செய்தால் என்ன? நமக்கு முன்னால் குதிரையில் வந்த அந்தக் குட்டைத் தடியன்கூட இங்கே தான் எங்கேயாவது இருப்பான். கன்னியாகுமரிக் கோவிலில் நிறைவேறாத நமது எண்ணம் இங்கே நிறைவேறினாலும் நிறைவேறலாம். இந்த மகிழ மரத்துக் கிளை வழியாகவே நாம் நிலா முற்றத்தில் ஏறிக் குதிக்கமுடியுமென்று தோன்றுகிறது."இப்படி அதுவரை பேசாமல் நின்றிருந்த மூன்றாமவன் கூறியபோது மரக்கிளையில் பதுங்கியவாறே இவற்றை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனின் உடல் வெட வெடவென்று ஆடி நடுங்கியது. குட்டைத் தடியன் என்று கீழே நின்று பேசியவன் குறிப்பிட்டது தன்னைத்தான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது.
அந்தச் சிவப்புத் தலைப்பாகை ஒற்றர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட பேச்சிலிருந்து அவர்கள் மூவருடைய பெயரையும் கூட அவன் ஒருவாறு தெரிந்து கொண்டான். செம்பியன், முத்தரையன், இரும்பொறை-கீழே நிற்கும் அவர்களுடைய இந்தப் பெயர்கள் பாண்டி நாட்டுப் பெயர்களாகவே தோன்றவில்லை. அவர்களுடைய பேச்சின் உட்கருத்தை உணர்ந்தபோது, ‘இரண்டாவது முறையாக வானவன்மாதேவியின் உயிரைக் குறி வைத்துக் கொண்டு’ அவர்கள் வந்திருப்பதை அறிந்தான் சேந்தன்.
கோட்டான் இன்னொரு முறை அதி பயங்கரமாக அலறியது. கீழே நின்று கொண்டிருந்தவர்களில் முத்தரையன்’ என்று அழைக்கப்பட்டவன் ஒரு கூரிய குத்துவாளைத் தன் இடுப்பிலிருந்து வெளியே எடுத்து நிலா ஒளியில் தூக்கிப் பிடித்தான். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நுனி நாக்குப்போல் அது பளிர் என்று மின்னிப் பளபளத்தது.
மறுகணம் கையில் அந்த வாளைப் பிடித்துக்கொண்டே அவன் மகிழ மரத்தில் தாவி ஏறத் தொடங்கியபோது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனுக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது. அப்படியே நிலா முற்றத்தில் குதித்துத் தப்பி ஓடிவிடலாமா என்று நினைத்தான் அவன். வரிசையாகக் கீழே நின்றிருந்த மூவருமே ஒருவர் பின் ஒருவராக மரத்தில் ஏறுவதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைந்தான். அவர்கள் மேலே ஏறி வந்துவிட்டால் கிளையில் பதுங்கிக் கொண்டிருக்கும் தன்னைக் கண்டு கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அந்த மரத்தில் ஒரே கிளை மட்டும் தான் நிலா முற்றத்தின் மேல் தளம் வரை நெருங்கி வளர்ந்திருந்தது. அதுதான் நாராயணன் சேந்தன் உட்கார்ந்திருந்த கிளை. ஏறிக்கொண்டிருந்த மூவரும் மேலே ஏறி வந்தவுடன் அதே கிளையில் காலை வைத்தபோது நாராயணன் சேந்தன் திடுக்கிட்டான். முன்னை விட அதிகப் பரபரப்படைந்தான்.
கடைசி நம்பிக்கையாக, அவர்கள் தன்னை நெருங்காமல் இருப்பதற்காக ஒரு தந்திரம் செய்து பார்த்தான் அவன். இரண்டு கைவிரல்களையும் வாயருகே குவித்து மயிர் சிலிர்க்க வைக்கும் பயங்கரக் கூச்சல் ஒன்றை உண்டாக்கினான். தன்னுடைய அந்தக் கூச்சலைக் கேட்டுப் பயந்தாவது அவர்கள் மரத்திலிருந்து கீழே இறங்கி, ‘பேயோ பிசாசோ’ என்று நினைத்துக் கொண்டு திரும்பிப் போய் விடட்டும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால், நடந்ததோ முற்றிலும் எதிர்பாராத வேறொரு நிகழ்ச்சி.
அந்தக் கூப்பாட்டினால் அதிர்ச்சியடைந்த மூன்று ஒற்றர்களும் கிளை துணிக்கு வேகமாக ஒடி வந்து நிற்கவே சுமை அதிகமாகி, நாராயணன் சேந்தன் உட்கார்ந்து கொண்டிருந்த அந்தக் கிளை ‘மடமட’ வென்று முறிந்தது.
தான் நின்று கொண்டிருந்த கிளைக்கு மேலே வேறொரு கிளையில் தாவியதால், நாராயணன் சேந்தன் முறிந்து விழுந்த கிளையோடு கிழே விழாமல் பிழைத்தான். ஆனால் மற்றவர்கள் கிளை முறிந்து கீழே விழுவதற்குள் தாங்களாகவே குதித்து விட்டனர்.
அரண்மனை நந்தவனத்தில் கூப்பாடும், குழப்பமும், மரம் முறிந்து விழும் ஓசையும் கேட்டுக் கோட்டைக்குள்ளேயிருந்த வீரர்கள் தீவட்டியும் கையுமாக ஓடிவரவே, புதிதாகப் புகுந்திருந்த ஒற்றர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர்; மறுபடியும் கால்வாயில் இறங்கி மதிலுக்கு வெளியே போகாவிட்டால் அகப்பட்டுக்கொள்ள நேரிடுமென்று அவர்களுக்குத் தெரியாதா, என்ன? மரத்தில் திரிசங்குவைப் போலத் தொங்கிக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனுக்குத் தான் தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாக ஆகிவிட்டது! அவனால் கிழேயும் குதிக்க முடியவில்லை, மேலேயும் பிடித்துக் கொள்வதற்குச் சரியான ஆதாரமில்லை. அவன் அந்தக் கோட்டைக்கோ அரண்மனைக்கோ அந்நியனில்லை, மகாமண்டலேசுவரருக்கு அந்தரங்க மனிதன். ஆனால் அப்போதுள்ள சூழ்நிலையில் அவன் அகப்பட்டுக் கொண்டால் பலவிதமான கேள்விகள் எழுவதற்கு இடம் ஏற்பட்டுவிடும் அல்லவா?
‘எப்படி வந்தான் ? எதற்காக வந்தான்? நந்தவனத்துக்குள் யாருமறியாமல் நுழைந்து மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்பது போன்ற கேள்விகள் பிறந்தால் அந்த நிலையில் அவற்றுக்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும் பதில் சொன்னால் இடையாற்று மங்கலம் நம்பியையே காட்டிக் கொடுப்பது போல் ஆகும்.
‘உண்மையில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியவர்கள் யாரோ அவர்களே தப்பி ஓடிவிட்டார்கள். நான் எதற்காக அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? வந்த சுவடு தெரியாமல் இங்கிருந்து போய் விடுவதுதான் நல்லது!’ என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்ட நாராயணன் சேந்தன், கிளையில் தொங்கிக்கொண்டே நுனிவரை வந்து, அப்படியே நிலா முற்றத்துத் தளத்தில் இறங்கினான்.
அவனுடைய நல்ல காலமாக நிலா முற்றத்தில் அப்போது வேறு யாரும் இல்லை. நந்தவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மகாராணி வானவன் மாதேவியார் உள்பட யாவரும் பரபரப்படைந்து கீழே சென்றிருந்தனர்.
‘இந்த மரம் முறிந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று, இல்லையானால் அந்தப் பாவிகள் இரண்டாவது முறையாக மகாராணியாரின் மேல் குறி வைத்திருப்பார்கள் என்று எண்ணித் திருப்திப்பட்டான் சேந்தன். வெகுநேரம் கழித்துக் கோட்டையில் சந்தடிகளெல்லாம் அடங்கியபின் வந்த வழியே வெளியேறி இடையாற்றுமங்கலத்துக்குப் புறப்பட்டான் அவன்.