பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/சிதைந்த கனவுகள்
24. சிதைந்த கனவுகள்
அரண்மனைக் கோட்டைக் கதவுகள் எல்லாம் மூடப் பட்டுவிட்டன. வெளிப்புறம் பராந்தகப் பெரு வாயிலுக்கு அப்பால் கலகக் கூட்டம் வெள்ளமெனப் பெருகிக் கொண்டிருந்தது. கலகக்காரர்களின் வெறிக் கூப்பாடுகள் பயங்கரமாக ஒலித்தன. சேந்தனையும், குழல்வாய் மொழியையும் வெளியே அனுப்பாவிட்டால் கதவை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்துவிடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
இத்தகைய பயங்கரமான சூழ்நிலை வெளியே நிலவிக் கொண்டிருக்கும்போதுதான் சேந்தன் தான் கொண்டு வந்திருந்த மகாமண்டலேசுவரரின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்ட ஒலைச் சுருளை விரித்து மகாராணியிடம் கொடுத்தான்.
“இராசசிம்மா! இதைப் படித்துச் சொல்” என்று குமாரபாண்டியனிடம் அதைக் கொடுத்தார் மகாராணி.துக்கம் அடைக்கும் நலிந்த குரலும், நீரரும்பும் கண்களுமாக அவர் அப்போது தோற்றமளித்த நிலை எல்லோருடைய உள்ளங்களையும் உருக்கியது. சேந்தனும் கண்கலங்கிப் போய் வாட்டத்தோடு காட்சியளித்தான்.குழல்வாய்மொழி தலை நிமி ரவே இல்லை. கண்கள் சிவந்து முகம் வீங்கி அழுதழுது சோகம் பதிந்த கோலத்தில் நின்றாள் அவள். மற்றவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியன் எல்லோரும் கேட்கும்படியாக மகாமண்டலேசுவரரின் இறுதித் திருமுக ஒலையை இரைந்து படித்தான்.
“அன்புக்கும், மதிப்புக்கும் உரிய மகாராணி வானவன் மாதேவிக்கு, இடையாற்றுமங்கலம் நம்பி இறுதியாக எழுதும் திருமுகம். தேவி, இந்தத் திருமுக ஒலையை நீங்கள் படிக்குமுன் நான் இவ்வுலக வாழ்வினின்றும் விடைபெற்றுச் சென்றுவிடுவேன். என்னுடைய மரணத்துக்காக நீங்களோ, குமாரபாண்டியரோ சற்றேனும் வருந்தவேண்டியதில்லை. இந்த விநாடிக்குப்பின் இனி ஒருகணம் வாழ்ந்தாலும் நானோ என் அறிவோ எதிலும் வெற்றிபெற முடியாது. தீபத்தில் எண்ணெய் வற்றியதும் திரியும், சுடருமே அழிந்துவிடுகிற மாதிரி நல்வினைப் பயன் நீங்கியதும் எவ்வளவு பெரிய மனிதனாயிருந்தாலும் அறிவும், முயற்சியும் பயன்படாது! அருள் கலக்காத முரட்டு அறிவுக்கு என்றாவது ஒருநாள் இந்தத் தோல்வி ஏற்படத்தான் செய்யும். தளபதி வல்லாளதேவன் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலே என்னென்னவோ செய்து விட்டான். அதைப் போல் இறுதியில் சில சமயம் நானும் அவனைப் புரிந்துகொள்ளாமல் என்னென்னவோ செய்துவிட்டேன். அறிவும் வீரமும் பகைத்துக்கொண்டதால் ஒரு நாட்டுக்கு எவ்வளவு கெடுதல்கள்? எப்போதாவது முடிந்தால் ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் நீங்கள் தளபதிக்குத் தெளிவு செய்துவிடவேண்டும். அவன் தங்கையின் மரணத்துக்கு நான் காரணமில்லை என்பதுதான் நீங்கள் அவனுக்குத் தெளிவு செய்யவேண்டிய மெய். பெரிய காரியங்களை நிறைவேற்ற முடியாமல் இலட்சிய பங்கமும் மானக்கேடும் ஏற்பட்டால் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது நம் தமிழ்க்குலத்து மரபு. நானும் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோயில் குறட்டில் அமர்ந்து வடக்கு நோக்கி இந்த வாழ்வை முடித்துக்கொள்ளத் தீர்மானித்து விட்டேன். சாவு தீர்மானப்படிதான் வரவேண்டுமென்பதில்லையே? என் தீர்மானத்தை முந்திக்கொண்டு வந்தாலும் அதை வரவேற்க நான் தயங்கமாட்டேன்.
“இந்தக் கடைசி நேரத்தில் யாரும், எப்போதும், எதிர்பாராத ஒரு காரியத்தை நான் செய்யப்போகிறேன். இத்தனைக் காலமாக என்னிடம் உண்மையாக ஊழியம் செய்த நாராயணன் சேந்தனுக்கு என் மகள் குழல்வாய்மொழியை மணம் முடித்துக் கொடுத்துவிடப் போகிறேன். இதைவிடப் பெரிய நன்றி அவனுக்கு நான் வேறென்ன செய்ய முடியும்?.”
இரைந்த குரலில் படித்துக்கொண்டே வந்த குமார பாண்டியன் படிப்பதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்து சேந்தனையும், குழல்வாய்மொழியையும் மாறிமாறிப் பார்த்தான். அடாடா! அப்போது குமாரபாண்டியனின் முகத்தில்தான் எத்தனை விதமான உணர்ச்சிச் சாயல்கள் சங்கமமாகின்றன. அவனைப்போலவே மற்றவர்களுடைய பார்வையும் சேந்தன் மேலும் குழல்வாய்மொழி மேலும் தான் திரும்பிற்று. சேந்தனும், குழல் வாய்மொழியும் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்ட வர்களைப்போல் தலை நிமிராமலிருந்தார்கள். முகத்தில் உணர்ச்சிகளின் சூறாவளி தோன்றி விழிகள் சிவந்துபோய்க் குழல்வாய்மொழியிடம் எதையோ கேட்டு விடுவதற்குத் துடித்தன. குமார பாண்டியனின் உதடுகள். அவளோ அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அந்தச் சமயத்தில், மேலே படி என்று மகாராணியின் தழுதழுத்த குரல் அவனைத் தூண்டியது. குமாரபாண்டியன் மேலே படிக்கலானான். முதற் பகுதியைப் படித்ததைவிட இப்போது அவன் குரல் நைந்திருந்தது. “எனக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் குழல்வாய்மொழிக்கு இருக்கிற அகந்தையும், ஆணவமும் இந்தப் புதிய உறவு மூலம் அழிந்துவிட வேண்டுமென்பது என் ஆசை. என் பெண்ணையும், சேந்தனையும் துன்பங்களும், பகைகளும் பெருகி வரும் சூழலில் தனியே ஒரு பாதுகாப்புமின்றி விட்டுச் செல்கிறேன். அவர்கள் வாழவேண்டும். நாட்டில் எனக்கிருக்கும் எதிர்ப்பின் பகைமை அவர்களை அழிக்க முயலாமல் உங்களுக்கு அடைக்கலமாக அவர்களை அளிக்கிறேன். எப்படியாவது அவர்களை வாழவிடுங்கள். என்னுடைய அறிவின் பிடிவாதங்கள்ால் இந்த நாட்டுக்கு விளைந்ததுன்பங்களுக்காக என்னை மன்னியுங்கள். குமாரபாண்டியரையும் மன்னிக்கச் சொல்லுங்கள். ‘மகாமண்டலேசுவரர் என்ற மனிதரை ஒரு கெட்ட சொப்பனம் கண்டதுபோல் மறக்க முயலுங்கள்!” - : குமாரபாண்டியன் அதைப் படித்து முடித்தான். மழை பெய்து ஓய்ந்தாற்போன்ற ஒருவகை அமைதி அவர்களிடையே நிலவியது. அந்த அமைதிக்கு நேர்மாறாக வெளியே கலகக்காரர்களின் வெறியாட்டம் நடந்து கொண்டிருந்தது. பராந்தகப் பெருவாயிலை இடித்துத் தகர்த்து விட்டு உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
மகாமண்டலேசுவரரின் ஒலையைப் படித்து முடித்தபின் சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றார் மகாராணி. குழல்வாய்மொழியின் உள்ளம் எப்படி அந்த மணத்துக்கு உட்பட்டதென்று புரியாமல் மனங் குமுறி நின்றான் குமாரபாண்டியன். “இராசசிம்மா! வீரமும் வெற்றியும் அரியணையேறி ஆளும் திருவும் இன்னும் உனக்குக் கிடைக்கிற காலம் வரவில்லை போலிருக்கிறது! மகாமண்டலேசுவரரோ போய்விட்டார். அவருடைய இந்த ஒலையைப் படித்தபின் என் நம்பிக்கைகளே அழிந்துவிட்டனபோல் துயரமாயிருக்கிறது எனக்கு தளபதி ஆகாதவனாகிவிட்டான். கூற்றத்தலைவர்களும் ஆகாதவர்களாகிவிட்டார்கள். இனி யாரை நம்பி, எதை நம்பி நாம் வெற்றியை நினைக்க முடியும்? எனக்கு ஒரு வழியும் தோன்றிவில்லை அப்பா! போ, உன்னால் முடியுமானால் இன்னும் சிறிது நேரத்துக்கு இந்த அரண்மனையைக் கலகக்காரர் கையில் சிக்கவிடாமல் காப்பாற்று. அதற்குள் நான் மகாமண்டலேசுவரரின் பெண்ணையும், அவள் கணவன் சேந்தனையும் இங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போய்விடுகிறேன்” என்று குமாரபாண்டியனை நோக்கி வேண்டிக்கொண்டார் மகாராணி.
“அம்மா! இப்படி ஒரேயடியாக நம்பிக்கையிழந்து பேசினால் என்ன செய்ய முடியும்? நாம் இருவரும் தளபதியையும், கூற்றத் தலைவர்களையும் சந்தித்துப் பேசிச் சமாதானப்படுத்தலாம்” என்றான் இராசசிம்மன்.
‘மகனே! இந்த நாட்டின் வெற்றியைப் பற்றிக் கவலைப்பட்டால் என்னிடம் அடைக்கலம் அளிக்கப்பட்ட இவர்களை யார் காப்பாற்றுவது? இவர்களுக்கு அழிவு வராமல் வாழவைக்கவேண்டுமென்பது மகாமண்டலேசு வரருடைய கடைசி ஆசை. அதை நான் முதலில் நிறைவேற்றியாக வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்றியபின் நாட்டைக் காப்பாற்ற வருகிறேன். நீ போய் நான் கூறியபடி வாயிற்புறத்துக் காவலை உறுதியாக்கு நிற்காதே. உடனே செல்!”- மகாராணியின் குரலில் பரபரப்பு நிறைந்திருந்தது. கடைசியாக ஒருமுறை குழல்வாய்மொழியைப் பார்த்துவிட்டு நடந்தான் இராசசிம்மன். அவன் காவலை கெட்டிப் படுத்துவதற்காக பராந்தகப் பெருவாயிலுக்குச் சென்றதும், சேந்தனையும், குழல்வாய்மொழியையும் தழுவி அழைத்துக்கொண்டு தமது அந்தரங்க அறைக்குச் சென்றார் மகாராணி புவனமோகினியைக் கூப்பிட்டு, “புவன மோகினி ! இந்த அரண்மனைக் கருவூலத்திலுள்ள விலை மதிப் பற்ற உயர்ந்த ஆடையணிகலன்களையெல்லாம் தேர்ந்தெடுத்து இந்தப் பெண்ணை அலங்கரித்து வா” என்று சொல்லிக் குழல்வாய்மொழியை அவளுடன் ஆவலோடு அனுப்பினார்.
சேந்தன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அவனையும் பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்து மணக்கோலம் பூண்டுவரச் செய்தார். பவழக்கனிவாயர், ஆசிரியர், விலாசினி எல்லோரையும் சூழ இருக்கச் செய்து குழல்வாய்மொழியையும் சேந்தனையும் மாலை மாற்றிக் கொள்ளுமாறு மணக்கோலம் கண்டு மகிழ்ந்தார். எல்லோருமாகச் சேர்ந்து மணமக்களுக்கு மங்கல வாழ்த்துக் கூறினார்கள். அந்தச் சமயத்தில் இராசசிம்மன் வேகமாகவும், பரபரப்பாகவும் அங்கே ஓடி வந்தான். அவன் முகத்தில் பயமும், குழப்பமும் தென்பட்டன.
“அம்மா! பராந்தகப் பெருவாயில் தகர்ந்து விட்டது. கலகக்காரர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள். இப்போதிருக்கிற வெறியையும், ஆவேசத்தையும் பார்த்தால் அவர்களைச் சமாதானப்படுத்த முடியாது போலிருக்கிறது. “மகாமண்டலேசுவரரின் மகளையும் ஒற்றனையும் கொன்று பழிவாங்குவோம்” என்று கூச்சலிட்டுக் கொண்டு கொலை வெறியோடு ஓடி வருகிறார்கள். ஒரு விநாடிகூட இனிமேல் இங்கே தாமதிப்பதற்கில்லை. எப்படியாவது இவர்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கலவரம் மிகுந்த குரலில் பதற்றத்தோடு கூறினான் குமாரபாண்டியன். குழல்வாய்மொழியை மணக்கோலத்தில் கண்டபோது அந்தக் குழம்பிய சூழ்நிலையிலும் ஏதோ சில மெல்லிய உணர்ச்சிகள் அவன் உள்ளத்தைக் கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவன் தன் மனத்தையும் கண்களையும் அடக்கிக் கொண்டான். ஏக்கத்தைப் பெருமூச்சாக வெளித் தள்ளினான். எங்கோ வெறித்து நோக்கியவாறு நின்ற மகாராணி, அவனைப் பார்த்துக் கூறினார்:
“இராசசிம்மா! எல்லோரும் வெளியேறிவிடலாம். உனக்கும் எனக்கும் இந்த அரண்மனையில் ஒரு வேலையும் இல்லை. உன்னுடைய எண்ணங்களும், என்னுடைய ஆசைகளும் நிறைவேறும் காலம் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. பாண்டியப் பேரரசின் பெருமையும், புகழும் பரவுவதற்குரிய நிலை உன் தந்தையின் காலத்துக்குப் பின் இல்லையோ என்னவோ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். கவலைப்பட்டுப் பயனில்லை. நீ போய் அந்தப்புரத்துக்குள் நுழையும் பிரதான வாயில்களை அடைத்து விட ஏற்பாடு செய். போர்க்காலங்களில் அரண்மனைப் பெண்கள் தப்பி வெளியேறுவதற்கான நந்தவனத்து நீராழி மண்டபத்துக்கருகிலிருந்து ஒரு சுரங்க வழி போகிறது. நீயும் வா! நாமெல்லோரும் அந்த வழியாக வெளியேறி விடலாம். சுசீந்திரத்துக்கு அருகிலுள்ள பாதிரித் தோட்டத்தில் கொண்டுபோய்விடும் அந்த வழி. அங்கிருந்து பவழக்கனிவாயர் முதலியவர்களோடு சேந்தனையும் குழல்வாய்மொழியையும் பாதுகாப்பாக முன்சிறைக்கு அனுப்பி வைத்துவிடலாம். அறக்கோட்டத்தில் போய்த் தங்கிக்கொண்டால் பின்பு அவர்கள் பாடு கவலையில்லை” என்று மகாராணி கூறியபோது சேந்தன் குறுக்கிட்டான்: “தேவி! எங்கள் இருவருக்காகவும் தாங்கள் துன்பப்படக் கூடாது. நாங்கள் முன்சிறையில் என் தமையனோடு போய்த் தங்கிவிட்டால் பின்பு எங்களுக்கு ஒரு குறையும் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கலகக்காரர்களின் பகைமையும், பழிவாங்கும் வெறியும் உள்ளவரை நாங்களும் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம்” என்று நாராயணன் சேந்தன் பணிவுடனும் குழைவுடனும் மேற்கண்டவாறு பேசினான்.
“எப்படியோ நன்றாக வாழவேண்டும் நீங்கள். அது மகாமண்டலேசுவரரின் கடைசி ஆசை. அதைக் காப்பாற்றுவதற்கும், நிறைவேற்றுவதற்கும் நான் கடமைப்பட்டவள். வாருங்கள். நாம் இங்கிருந்து வெளியேறிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. புவனமோகினி! நீ அந்தத் தீபத்தை எடுத்துக்கொள். சுரங்கப் பாதைக்குள் இருட்டு அதிகமாக இருக்கும்” என்று கூறிக்கொண்டே முன்னால் நடந்தார் மகாராணி. குமாரபாண்டியன் அந்தப்புரத்துக் கதவை அடைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய முகத்தைக் காண்பவர்களுக்கு உலகத்திலுள்ள நிராசையெல்லாம் அங்கே வந்து குடி கொண்டுவிட்டது போல் தோன்றியது. போர்க்களத்தில் சக்கசேனாபதியிடம் வாக்களித்துவிட்டு இரவோடு இரவாகக் கிளம்பியபோது அவன் மனத்தில் உருவாகி எழுந்து ஓங்கி நின்ற நம்பிக்கை மாளிகை இப்போது தரைமட்டமாகிவிட்டதைப் போல் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. மகாமண்டேலசுவரரின் மரணம், குழல்வாய்மொழியின் வினோதமான திருமணம், கலகக் கூட்டத்தின் பழிவாங்கும் வெறி, மகாராணியின் அவநம்பிக்கை, எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நினைக்கும்போது தன்னுடைய இனிய கனவுகளில் பெரும் பகுதி அழிக்கப்பட்டு விட்டதுபோல் உணர்ந்தான் அவன். அன்றொருநாள் மழையும், புயலும் வீசிய இரவில் ஈழநாட்டுக் காட்டில் பாழ்மண்டபத்து இருளில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப்பற்றிச் சிந்தித்ததை மறுபடியும் நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன்.
அவர்கள் எல்லோரும் நந்தவனத்துக்குப் போய்ச் சுரங்கப்பாதை ஆரம்பிக்கிற இடத்தை அடைந்தனர். விதியைப் பின் தொடரும் பேதை மனிதனைப் போல் குமாரபாண்டியனும் அவர்களைப் பின்பற்றி அங்கே சென்றான். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே துக்கம் வடியும் குரலில் “செல்வா! உன் முன்னோர் மன்னாதிமன்னராக வாழ்ந்து சிறந்த இந்த அரண்மனையை இறுதியாக ஒருமுறை பார்த்துக்கொள். இனி இந்த மாபெரும் அரண்மனை இருப்பதும், இல்லாததும் உனக்குக் கிடைப்பதும், கிடைக்காததும் விதியின் ஆணையைப் பொறுத்தது” என்றார் மகாராணி, இராசசிம்மன் நிமிர்ந்து பார்த்தான். கதவுகள் உடையும், சுவர்கள் இடிபடும் ஒலியுமாக அந்த அரச மாளிகை முடிவின் எல்லையில் இருந்தது. எல்லாரும் சுரங்க வழிக்குள் இறங்கிவிட்டனர். புவனமோகினி தீபத்தோடு முன்னால் சென்றாள். கடைசியாகக்
குமாரபாண்டியனும் அதற்குள் இறங்கி மறைந்தான். ஊழ்வினையே சுரங்கமாகி வழிநடத்திச் செல்கிற மாதிரி ஒரு பொய்த் தோற்றம் உண்டாயிற்று.
எல்லோரும் சுரங்க வழியில் நடந்து செல்லும்போது ஓரிடத்தில் சேந்தன் விரைவாக நடந்து முன்சென்று விட்டதால் குழல்வாய்மொழி சற்றுப் பின்தங்கிச் சென்றாள். தளர்ந்து துவண்டு மென்னடையில் மெதுவாகச் சென்று அவளை நெருங்கினான் குமாரபாண்டியன். கொதிக்கும் மனத்துடன் ஏதோ ஒரு கேள்வியை அவளிடம் கேட்டுவிடத் துடித்தான் அவன். ஆனால் குழல்வாய்மொழி அவனை அருகில் நெருங்கவேவிடவில்லை. அவன் விரைந்து வருவது கண்டு தான் முந்திக்கொண்டு சென்றுவிட்டாள். அப்படி அவள் நடையை வேகப்படுத்திக்கொண்டு முந்தினபோது அவளுடைய கூந்தலிலிருந்து இரண்டு மல்லிகைப் பூக்கள் உதிர்ந்தன. அவளை நெருங்கி ஏதோ கேள்வி கேட்கும் துடிப்புடனே வந்த குமாரபாண்டியனின் காலடியில் அந்த மல்லிகைப்பூக்கள் மிதிபட்டதும் அப்படியே தயங்கி நின்றுவிட்டான். காலில் மிதிபட்ட பூக்களையும் முன்னால் விரைந்து சென்று சேந்தனை ஒட்டி நடக்கும் குழல்வாய்மொழியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே சிறிது நேரம் நின்றான் அவன். அவனுடைய மனத்துக்குள் ஏதோ ஒரு மெல்லிய உணர்வும் அப்படி மிதிபட்டுவிட்டது போலிருந்தது. மிதிபட்ட பூக்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மேலே நடந்தான் குமாரபாண்டியன். சுரங்கப் பாதை முடிந்து வெளியேறுகிற வரையில் யாரோடும் யாரும் பேசிக்கொள்ளவில்லை. -
சுசீந்திரம் பாதிரித் தோட்டம் வந்தது. மகாராணி குழல்வாய்மொழியையும், சேந்தனையும் கையைப் பற்றிப் பவழக்கனிவாயரிடம் ஒப்படைத்தார். “பவழக்கனிவாயரே! அதங்கோட்டாசிரியரே ! இவர்களை முன் சிறை அறக்கோட்டத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நாட்டை யார் அரசாண்டாலும் உங்களுக்கும் காந்தளுர் அதனால்தான் மகாமண்டலேசுவரர் அவமானப்பட நேர்ந்ததைக் கண்டு அவன் உள்ளம் அவ்வளவு அதிகமாகக் குமுறியது. குமார பாண்டியனும் அதைக் கண்டு
மனம் கொதித்தானென்றாலும், அந்தக் கொதிப்பு எவ்வளவு வேகமாக உண்டாயிற்றோ, அவ்வளவு வேகமாகத் தணிந்து மறந்து மறைக்கப்பட்டுவிட்டது. அவன் மனத்தில் அதற்குக் காரணம் நினைப்பதற்கும் குமுறிக் கொதிப்பதற்கும் வேறு நிகழ்ச்சிகளும் இருந்தன. னியம்பலத்துக்கும் என்றும் அழிவில்லை. நீங்கள் உள்ளவரை சேந்தனும், குழல்வாய்மொழியும் வாழ்வதைக் கண்டு வாழ்ந்து மகிழுங்கள்!” என்று மகாராணி கூறியபோது “தேவி! தாங்களும் காந்தளூர் மணியம்பலத்தில் வந்து எங்களுடனே இருந்து விடலாமே!” என்றார் பவழக்கனிவாயர். - - “நான் இருக்கவேண்டிய இடத்தை நானே முடிவு செய்துகொண்டு விட்டேன். நீங்கள் போய் வாருங்கள்” என்று கண்டிப்பாகச் சொன்னார் மகாராணி. யாரும் மறுத்துப் பேச முடிவில்லை. மகாராணியையும், குமார பாண்டியனையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு எல்லோரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். புவனமோகினி ஒருத்தி மட்டும் மகாராணியாரோடு இருந்துகொண்டாள். -
“மகனே! மேகத்தால் மறைக்கப்படும் சந்திரனைப்போல் இன்னும் சிறிது காலம் பாண்டி நாடு பகைவர் ஆட்சியில்தான் இருக்க நேரவேண்டும் போலிருக்கிறது. என்னைப் பிறந்த வீட்டில் - சேர நாட்டு வஞ்சிமாநகரத்தில் கொண்டுபோய்விட ஏற்பாடு செய். இந்தப் பெண் புவனமோகினி என்னோடு துணை வருவாள். எங்கு போய் என்ன செய்வாயோ? மறுபடியும் நீ ஆளாகி இந்த நாட்டை வென்று ஆள்வதற்கு வந்தால் அப்போது நான் உயிரோடு இருந்தால் நாம் மீண்டும் சந்திப்போம்” என்று மகாராணி கூறியபோது குமாரபாண்டியன் உணர்ச்சி வசப்பட்டுச் சிறு பிள்ளைபோல் அழுது விட்டான். வஞ்சிமாநகர் புறப்படுமுன் தென்பாண்டி நாட்டுக் கோவில்களுக்கெல்லாம் கடைசியாக ஒருமுறை சென்று தரிசனம் செய்ய வேண்டுமென்று மகாராணி ஆசைப்பட்டார். அந்த ஆசையை நிறைவேற்ற இரண்டு நாட்கள் செலவழித்தான் குமாரபாண்டியன். மூன்றாம் நாள் காலை ஒரு பல்லக்கும் சுமப்பதற்கு ஆட்களும் தேடி மகாராணியையும், புவனமோகினியையும் ஏற்றி அனுப்பினான். அப்போது அவன், “அம்மா! வஞ்சிமாநகரத்துக்கு இங்கிருந்து அதிக நாட்கள் பயணம் செய்யவேண்டும். கவனமாகப் போய்ச் சேருங்கள். நான் போர்க்களத்துக்குப் போய் போரைக் கவனிக்கிறேன். நல்வினை இருந்தால் மறுபடியும் சந்திப்போம்!” என்று மனங் கலங்கிக் கூறினான்.
“இராசசிம்மா! உனக்கு என் பயணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம்டவஞ்சிமாநகரப் பயணத்தைவிட நீண்ட வாழ்க்கைப் பயணத்தை நான் கண்டாயிற்று. இனிப்பயமில்லை. போய் வா! வெற்றியானால் வென்று வா. தோல்வியானால் எங்கேயாவது போய் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்” என்று அவன் மனக்கலக்கத்தைத் தேற்றி வாழ்த்திவிட்டு நிம்மதியாக வஞ்சிமாநகரத்துக்குப் புறப்பட்டார் மகாராணி. தாயைத் தன்னிடமிருந்து பிரிக்கும் அந்தப் பல்லக்குப் போவதையே பார்த்துக்கொண்டு நின்ற குமாரபாண்டியன் அதன் தோற்றம் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் கண்ணில் துளிர்த்த நீர் முத்துக்களைத் துடைத்துக்கொண்டு திரும்பினான். நான்கு புறமும் விழிகள் பார்க்கமுடிந்த அளவு சுற்றிலும் பார்த்தான். மேலே வானத்தை அண்ணாந்து நோக்கினான். அந்தத் தென் பாண்டி நாடு, அதன் வளம், அதன் அழகு, அதன் செல்வங்கள், அதன் தெய்வத் திருக்கோவில்கள் எல்லாம் சூனியமாய்ப் பாழ் வெளியாய், ஒன்றுமற்ற பழம் பொய்களாகத் திடீரென்று மாறிவிட்டனபோலிருந்தது. தன் பெருமையையும், புகழையும் இளவரசன் என்ற பதவியையும் மறந்து எவனோ ஒரு பேதை இளைஞன் போல் நடந்தான் அவன்.