பாண்டியன் நெடுஞ்செழியன்/நெடுநல் வாடை
புரட்டாசி தாண்டி ஐப்பசி வந்துவிட்டது. இது கூதிர்ப்பருவம்; அடைமழை பெய்யும் காலம்; வாடைக் காற்று வீசி நடுக்கியெடுக்கும் பருவம். இதை நக்கீரர் தம்முடைய பாட்டில் முதலில் வருணித்தார். நீண்ட வாடை; ஆனால் பாசறையிலிருந்த அரசன் வெற்றி பெறும் நல்ல வாடையாதலால் அந்தக் கால நிகழ்ச்சியைப் பாடிய இதற்கு நெடுநல்வாடை என்னும் பெயரை வைத்தார். அவர் காட்டும் காட்சிகளை நாம் பார்க்கலாம்.
எப்போதும் மழை தூறிக்கொண்டே இருக்கிறது. அந்த மழையைக் கண்டு ஆயர்களுக்கு வெறுப்பு உண்டாகிறது. ஆடுமாடுகள் மழையில் நனைவதால், மேய்ச்சல் நிலத்தில் மனம் போனபடி போய் மேய முடியாது. எங்கே பார்த்தாலும் வெள்ளம். எப்படி மேய்கிறது? ஆகையால் தண்ணீர் தங்காத மேட்டு நிலமாகப் பார்த்து அங்கே அவற்றை ஓட்டிச் செல்கிறார்கள். வழக்கமாக மேய்க்கும் இடம் அன்றாதலால் அவர்களுக்கு வருத்தந்தான். என்ன செய்வது?
அங்கே வளர்ந்திருக்கும் காந்தள் மலர்கள் மழையால் இதழ் கலங்கிக் காட்சியளிக்கின்றன. உருவமே சிதைந்து போயிற்று, அவர்கள் உள்ளத்தைப் போல. ஒரே குளிர், வெடவெடக்கிறது. பத்துப் பேர், இருபது பேர்களாகக் கூடிக்கொண்டு பெரிய நெருப்பை மூட்டிக் குளிர் காய்கிறார்கள். தம் கைகளை நெருப்பிலே காய்ச்சிக் கன்னத்திலே தடவிக் கொள்கிறார்கள். ஆனாலும் பற்கள் தாளம் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆடுமாடுகள் எப்படி இந்த நிலையில் மேயப்போகும்? மேய்ச்சலையே மறந்துவிட்டன. குரங்குகள் காலைக் கையாலே கட்டியபடி மரத்தின் மூலையில் குந்திக்கொண்டிருக்கின்றன. மரத்திலே வாழும் பறவைகள் வாடைக் காற்று வீசுவதைத் தாங்காமல் அப்படி அப்படியே தரையில் விழுகின்றன. கன்று தாய்ப்பசுவிடம் போய் ஊட்டப் புகுந்தால் அது உதைக்கிறது.
இப்படி மனிதரும் விலங்கும் பறவையும் குளிரால் நடுங்கும் கூதிர்க்காலம் இது. மலையே உள்ளூறக் குளிர்ச்சி பெற்று நிற்கிறது.
முசுண்டைக் கொடி பூக்கும் காலம் இதுதான். அதில் வெள்ளை வெளேரென்று பூ மலர்ந்திருக்கிறது. அதனோடு அங்கங்கே உள்ள புதர்களில் பீர்க்கங்கொடி ஓடிக்கிடக்கிறது. அதில் பொன்னைப் போன்ற மலர் மலர்கிறது.
நீரோட்டத்தால் சில இடங்களில் சேறும் சில இடங்களில் ஈரமணலுமாக இருக்கின்றன. மழை நீர் ஓடும் இடங்களில் கயல் மீன்கள் அந்த நீரோட்டத்துக்கு எதிரே வருகின்றன. அருகே மணலில் இருந்தபடியே கொக்குகளும் நாரைகளும் அந்த மீன்களைக் கொத்துகின்றன.
கார்ப் பருவத்தில் நன்றாக மழை பெய்தது; இப்போது தூறல் வீசுகிறது.
அகன்ற வயல்களில் நெற்கதிர்கள் முற்றித் தலை சாய்ந்து நிற்கின்றன. கமுக மரங்களில் காய் முற்றிக் குலை குலையாகத் தொங்குகின்றன. பூம்பொழிலிலுள்ள மரங்களின் கிளைகளிலிருந்து மழைத்துளிகள் சொட்டிக்கொண்டே இருக்கின்றன.
இனி, சிறிதே நகரத்துக்குள் போவோம். இது அரசனுடைய இராசதானி நகரமாகிய மதுரை. பெரிய பெரிய வீதிகள். மழை நீர் ஓடுகிற இந்தச் சமயத்தில் பார்த்தால் வீதிகளெல்லாம் ஆறுகளைப் போலத் தோன்றுகின்றன. இந்தக் குளிரில் மழைத் தூறலைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அயல் நாட்டு மக்கள் திரிகிறார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு வலிமையான உடம்பு! தழையும் பூவும் சேர்த்துக் கட்டிய மாலையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கள்ளை நிரம்ப உண்டிருக்கிறார்கள். பகற்பொழுது போனாலும் அவர்கள் வீதிகளில் திரிகிறார்கள்.
வீட்டுக்குள்ளே கொஞ்சம் போவோமா? அங்குள்ள மகளிரின் அழகுதான் என்னே! சங்கைக் கடைந்து செய்த அழகிய வளைகளை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். பருத்த தோளும் மெத்தென்ற சாயலும் முத்தைப் போன்ற பல்லும் காதிலே அணிந்த குழையோடு சென்று மோதும் குளிர்ந்த அழகிய கண்னும் படைத்தவர்கள் அவர்கள். எங்கும் மேக மூட்டமும் தூறலுமாக இருக்கும் இப்போது அவர்கள் மாலைப் பொழுதை அறிந்துகொண்டு விளக்கேற்றப் புகுகிறார்கள். எப்படி மாலை வேளை வந்ததென்று அறிந்தார்கள் தெரியுமா? அவர்கள் காலையிலே பிச்சியரும்பைப் பறித்துப் பூந்தட்டிலே வைத்து ஈரத் துணியால் மூடியிருந்தார்கள். இப்போது அரும்புகள் அவ்வளவும் குப்பென்று மலர்ந்திருக்கின்றன. அந்தி மாலை வந்தால் மலரும் மலர் பிச்சி. அம்மலர்களைக் கண்டு அந்தி வந்ததை அறிந்துகொண்டார்கள். இரும்பாற் செய்த விளக்கிலே நெய் தோய்ந்த திரியைக் கொளுத்தி நெல்லையும் மலரையும் தூவித் தெய்வத்தை வணங்கி எங்கே பார்த்தாலும் விளக்கை ஏற்றுகிறார்கள். வளமுடைய அங்காடித் தெரு முழுவதும் விளக்குகள் வரிசை வரிசையாகச் சுடர் விடுகின்றன.
வீட்டிலே வாழும் புறாக்களுக்கு இரவென்றும் பகலென்றும் தெரியவில்லை. ஆண் புறாவும் பெண் புறாவும் வெளியிலே சென்று இரை தேர்ந்து அருந்தி வருவது வழக்கம். இப்போது ஒன்றும் செய்யாமல் வீட்டிலே கொடுங்கையைத் தாங்கும் பலகைகளில் தலைமாறித் தங்கியிருக்கின்றன.
பெரிய வீடுகளில் சந்தனம் அரைப்பதற்காகவே சில வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். வடநாட்டிலிருந்து வந்த சந்தனக் கல்லிலே தென் திசையிலிலுள்ள பொதியிலிலிருந்து வந்த சந்தனக்கட்டையை அரைத்துத் தருவார்கள். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை. சந்தனத்தை யார் பூசிக்கொள்கிறார்கள்? கல்லும் கட்டையும் சும்மா கிடக்கின்றன.
ஆசையோடு மலர் மாலைகளைப் புனைந்துகொள்ளும் மகளிர் இப்போது சில பூக்களை மாத்திரம் செருகிக் கொள்ள எண்ணுகிறார்கள். கூந்தல் ஈரம் போக வேண்டுமல்லவா? அதற்காக அகிலையும் கண்ட சர்க்கரையையும் நெருப்பிலிட்டுப் புகைத்துக் கூந்தலை ஆற்றுகிறார்கள்.
நுட்பமான வேலைப்பாட்டுடன் செய்த் விசிறிகள் உறையிலே கிடந்தபடியே முளைகளில் தொங்குகின்றன. அவற்றைத் தேடுவார் இல்லாமையால் அவற்றைச் சுற்றிச் சிலந்தி கூடு கட்டியிருக்கிறது.
வீடுகளில் மேலே சாளரங்கள் இருக்கின்றன. தென்றற் காற்று வீசுவதற்கு வாய்ப்பாக உள்ளவை அவை. இப்போது அவற்றின் இரட்டைக் கதவுகளையும் சாத்தித் தாழிட்டிருக்கிறார்கள். தண்ணீரை அருந்துவாரே இல்லை. நெருப்பு முட்டிகளில் தழலைப் போட்டு நீரைக் காய்ச்சி உண்ணுகிறார்கள். நீராகவா இருக்கிறது அது? நெருப்பைப்போலக் கொதிக்கிறது. கிழவரும் குமரரும் அந்த நெருப்பை அருந்துகிறார்கள்! ஆடுகிற மகளிர் பாட்டுக்குச் சுருதி சேர்க்க யாழை எடுக்கிறார்கள். குளிரால் அது சுருதி மாறியிருக்கிறது. அதைத் தம் மார்புச் சூட்டிலே தடவிச் சுருதி சேர்க்கிறார்கள்.
தம்முடைய கணவரைப் பிரிந்திருக்கும் மகளிர் எல்லாம் வருத்தமுற்றிருக்கிறார்கள். கூதிர்க்காலம் இந்தச் செயல்களுக்கெல்லாம் காரணமாக வந்து நிற்கிறது.
இனிமேல் அரண்மனைக்குப் போகலாம். அதைப் பார்த்துவிட்டு, அந்தப்புரத்தில் நெடுஞ்செழியனுடைய மனைவி அவன் பிரிவினால் வருந்தும் நிலையைப் பார்க்க வேண்டும் அல்லவா? நக்கீரர் நம்மை அழைத்துச் சென்று ஒவ்வொன்றாகக் காட்டுகிறார். இப்போது அரண்மனைக்கு வருகிறோம்.
அரசனுக்கு ஏற்றபடி வகுத்த திருமாளிகை அது. நல்ல காலத்தில் தக்க முகூர்த்தத்தில் நூலைக் கட்டி அளவு பார்த்துத் தொடங்கிக் கட்டியிருக்கிறார்கள். அரண்மனையில் எத்தனையோ கட்டிடங்கள் இருக்கின்றன. அவற்றைச் சுற்றிச் சூழ ஒரு நெடிய மதிலை எழுப்பியிருக்கிறார்கள். மதில் வாசல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது! பெரிய நிலை; இரட்டைக் கதவுகள்; இரும்புப் பட்டமும் ஆணிகளும் கொண்டு கதவைச் சமைத்திருக்கிறார்கள். நிலைக்கு மேலே வளைந்த வளைவு இருக்கிறது; அதைக் கற்கவி என்று சொல்வார்கள். அதில் நடுவே திருமகள் வீற்றிருக்க, இரு மருங்கும் இரண்டு யானைகள் தம் கைகளில் செங்கழு நீர்ப் பூவை ஏந்திக்கொண்டு நிற்கின்றன. இந்த வளைவின் கீழே உறுதியான நிலை இருக்கிறது. அந்த நிலையில் தெய்வம் இருப்பதாக எண்ணி நெய்யும், அரைத்த வெள்ளைக் கடுகும் அப்பியிருக்கிறார்கள். தெய்வத்துக்கு அவ்வாறு அப்பி வழிபடுவது அந்தக் காலத்து வழக்கம்.
இந்த உயர்ந்த வாசல் வழியே யானைகள் போகும். வெறும் யானைகள் மட்டும் அல்ல. தம் மேலே கொடியை உயர்த்திய யானைகள் அந்தக் கொடியைத் தாழ்த்தவேண்டிய அவசியம் இல்லாமலே புகும்படி உயரமாக அமைத்திருக்கிறார்கள், இந்த வாசலை. வாசலுக்கு மேலே கோபுரம். அது குன்று போலே விளங்க, குன்றைக் குடைந்தது போலத் தோன்றுகிறது வாசல்.
வாசலைக் கடந்து உள்ளே சென்றால் பரந்த வெளி இருக்கிறது. அந்த முற்றத்தில் கவரிமான்களும் அன்னப் பறவைகளும் ஓடியாடித் திரிகின்றன. இந்த அரண்மனையில் திருமகள் விலாசம் எப்போதும் குறையாமல் இருந்துகொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் குதிரை கட்டும் இடம் இருக்கிறது. அங்கே குதிரைகள் தங்க மனமில்லாமல் வாய் வழியே புல்லைக் குதட்டிக்கொண்டு நிற்கின்றன. நிலா முற்றத்திலிருந்து மழைநீர் அருவியைப் போல விழுகிறது. மகர வாயைப்போல் உள்ள துவாரத்தின் வழியே நீர் வந்து விழுகிறது. ஒரு பக்கத்தில் மயில்கள் ஆரவாரிக்கின்றன. அவற்றின் குரல் ஊதுகொம்பின் ஓசையைப் போலக் கேட்கிறது. இந்த ஒலிகள் மலையிலே சிலையோடுவது போல இங்கே எதிரொலி செய்கின்றன.
இந்த அரண்மனையின் பின்னே தான் அந்தப்புரம் இருக்கிறது. பாண்டியனத் தவிர வேறு ஆடவர் யாரும் அதில் நுழைய முடியாது. ஆண் வேலைக்காரர்கள் கூட நுழைய உரிமை இல்லை. அதற்குள் அங்கங்கே பாவை கையில் ஏந்தி நிற்கும் கோலத்தில் அமைந்த விளக்குகள் எரிகின்றன. நிறைய நெய்யும் பெரிய திரியும் இட்டிருக்கிறார்கள். இந்த விளக்குகள் யவன தேசத்திலிருந்து யவனர் கொண்டு வந்தவை; அழகான வேலைப்பாடு உடையவை.
அந்தப்புரமும் பெரியதுதான். அது குன்றுபோல இருக்கிறது. வானவில்லைப்போல அங்கங்கே பல நிறமுள்ள கொடிகளைக் கட்டியிருக்கிறார்கள். சுவர்களில் பூசிய சுண்ணம் வெள்ளியைப்போலப் பளப்ளக்கிறது. தூண்கள் நீல மணியினால் அமைந்தவைபோல நிற்கின்றன. சுவர்களோ செம்பினால் வார்த்துப் பண்ணியவை போல உறுதியாக உள்ளன.
சுவர்களில் மலர்கள் பூத்த கொடியின் உருவத்தை வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்கள். இதுதான் மாதேவி இருக்கும் இடம்; பள்ளியறை. கட்டிலின் மேல் அவள் படுத்திருக்கிறாள்.
அது வட்டமான தந்தக் கட்டில்; நாற்பது ஆண்டுகள் முதிர்ந்த யானையின் தந்தத்தைச் செதுக்கி நுட்பமான பூ வேலைகளைச் செய்தமைத்தது; நன்றாகக் கடைந்து அமைத்த திரண்ட குடங்களையும், உள்ளிப் பூண்டுபோல விட்டு விட்டுப் புடைத்த கால்களையும் உடையது. சுற்றிலும் முத்து மாலைகளைத் தொங்க விட்டுத் திரை கட்டி நடுநடுவே சாளரம் விட்டிருக்கிறார்கள். கட்டிலின்மேல் மெல்லிய மயிர்களுக்கு நிற மூட்டிப் பரப்பி, சிங்கம் வேட்டையாடுவது போன்ற சித்திரத்தை நடுவிலே அமைத்து, சுற்றிலும் முல்லை, முதலிய பல நிறமுள்ள பூவை வரிசையாக இட்டிருக்கிறார்கள். இதற்கு மேலே மெல்லிய படுக்கையை விரித்து அன்னத்தின் அடிவயிற்றுத் தூவிகளாற் செய்த அணைகளை வைத்திருக்கிறார்கள். அதற்குமேல் கஞ்சியிட்டு நன்றாக வெளுத்த மடியை விரித்திருக்கிறார்கள். அதன்மேல் பாண்டிமா தேவி படுத்திருக்கிறாள்.
ஆரம் அணியும் மார்பில் இப்போது வெறும் தாலி மட்டும் புரள்கிறது. நாயகனைப் பிரிந்தபோது அலங்காரங்கள் எதற்கு? மயிரைக் கோதிக்கொள்ளாமையால் அது நெற்றியிலே கிடந்து புரள்கிறது. காதில் குழை இல்லை; வெறும் தக்கையை அணிந்திருக்கிறாள். பொன் வளையல்களை அணிந்திருந்த கைதான்; அதில் இப்போது மங்கலத்தின் அடையாளமாகிய சங்குவளை மாத்திரம் இருக்கிறது; திருமணத்திலே கட்டிய காப்பு நாண் இருக்கிறது. விரலில் ஒரு முடக்கு மோதிரம் மாத்திரம் காட்சியளிக்கிறது. பூ வேலை செய்த உயர்ந்த துகிலை அணியும் இடையிலே மாசு ஏறிய நூல் புடைவையைக் கட்டிக்கொண்டிருக்கிறாள். வர்ணம் தீற்றாமல் வெறும் கோடுகள் மாத்திரம் வரையப்பெற்ற சித்திரத்தைப் போலத் தோன்றுகிறாள் பாண்டிமாதேவி.
அழகிய மகளிர் அவள் காலை வருடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பிட்டு அலங்காரம் செய்வது வழக்கம். இப்போது ஓர் அலங்காரமும் இல்லை.
அருகில் கூந்தலில் நரை விரவிய முதிய செவிலிமார்கள் அவளுக்குப் பொழுது போவதற்காகப் பலவிதமான கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நடுநடுவே, “உன் நாயகர் இதோ விரைவில் வந்து விடுவார்” என்று ஆறுதல் சொல்லுகிறார்கள். அதைக் கேட்டும் அவளுக்கு மன அமைதி உண்டாகவில்லை. இன்னும் கலங்கியபடியே இருக்கிறாள்.
கட்டிலில், கால்களை நட்டு மெழுகுச் சீலையில் சித்திரம் எழுதின மேற்கட்டியை மேலே கட்டியிருக்கிறார்கள். அதில் இராசிகளை எழுதியிருக்கிறார்கள். சந்திரனும் உரோகிணியும் சேர்ந்திருக்கும் ஓவியமும் இருக்கிறது. அதைப் பார்த்து மாதேவி, ‘நாம் நம் காதலருடன் இவ்வாறு பிரிவின்றி ஒன்றுபட்டு இருக்கவில்லையே!’ என்ற நினைப்பினால் வருந்தித் தன் கண்ணில் அரும்பிய நீரைக் கைவிரலால் வழித்துத் தெறிக்கிறாள்.
இவ்வாறு பிரிவுத் துன்பம் தாங்காமல் தனிமையிலே வருந்திக் கிடக்கிறாள் பாண்டியன் மனைவி.
அவள் இவ்வாறு இருக்கப் பாண்டியன் எப்படி இருக்கிறான்?
இது பாண்டியன் பாசறை. அங்கங்கே கூடாரத்தில் படை வீரர்கள் தங்கியிருக்கிறார்கள். போர்க் களத்தில் பெரிய யானைகளைத் தொலைத்து வீரங்காட்டி முகத்திலும் மார்பிலும் பட்ட விழுப்புண்களோடே அவ் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புண்ணைக் கண்டு நல்ல வார்த்தை சொல்லிவரப் பாண்டியன் தன் கூடாரத்திலிருந்து புறப்பட்டுவருகிறான். வாடைக் காற்றுச் சில்லென்று வீசுகிறது. அங்கே உள்ள வட்ட விளக்கின் சுடர் தெற்குப் பக்கமாகச் சாய்ந்து எரிகிறது. படைத் தலைவன் கையிலே வேலை ஏந்திக் கொண்டு முன்னே செல்கிறான். அந்த வேலில் வேப்ப மாலை கட்டியிருக்கிறது. பாண்டியனது அடையாள மாலை அல்லவா அது? முன் செல்லும் சேனாபதி புண் பட்ட வீரர்களை அரசனுக்கு ஒவ்வொருவராகக் காட்டிக் கொண்டே செல்கிறான்.
வழியிலே சேணத்தைக் கலைக்காத குதிரைகள் நிற்கின்றன. மழைத் துளி மேலே விழுவதனால் அவை உடம்பைச் சிலிர்த்து அந்தத் துளிகளே உதறுகின்றன. இரு மருங்கும் கூடாரம் அமைந்த அந்த வீதி வழியே செல்கிறான் அரசன். அவன் இடத் தோளிலே போட்டிருக்கும் மெல்லிய துகில் நழுவுகிறது. அதை அப்படியே இடக் கையால் இடுக்கிக்கொள்கிறான். அருகிலே வலிமையையுடைய கட்டிளங்காளை ஒருவன் வாளைத் தோளிலே மாட்டியபடி நிற்கிறான். அவனுடைய பின் கழுத்தின் மேலே வலக்கையை வைத்துக்கொண்டு நடக்கிறான் அரசன். தவ்வென்று மழைத் துளி வீச, அதற்கு மறைப்பாக ஒருவன் குடை பிடிக்கிறான். முத்துமாலை தொங்கும் கொற்றக் குடை அது. இப்படி, புண்பட்ட வீரர்களைக் கண்டு முகமலர்ச்சியோடு விசாரிப்பதற்காக நடுஇரவிலும் தூங்காமல் சில வீரர்களோடு சுற்றி வருகிறான் பாண்டியன்.
“இவளுடைய பிரிவுத் துன்பம் தீரும்படியாக, அவன் பாசறையை அமைத்துக் கொண்டு இவ்வாறு திரிவதற்குக் காரணமான போர்த் தொழில் அவனுக்கு வெற்றியை உண்டாக்கி முடிவதாகுக!” என்று வேண்டிக்கொள்கிறாள் துர்க்கையைப் பரவும் பெண்.
மிகவும் அழகான ஓவியத்தைப் பாட்டிலே அமைத்துக் காட்டிவிட்டார் நக்கீரர். கூதிர்க்கால வருணனையும், அரண்மனையின் அமைப்பும், பள்ளிக் கட்டிலின் பாங்கும், பிரிவால் வாடும் பாண்டிமாதேவியின் உருவமும், பாசறையில் உள்ள பாண்டியன் செயலும் கண்முன்னே தோன்றும்படியாகக் கோலம் செய்தார்.
அதைக் கேட்டு அரசன் தான் போர்த் தொழிலிலே ஈடுபட்டு வாழ்வைப் போக்குவதால் தன் மாதேவிக்குப் பிரிவுத் துன்பம் உண்டாகும் என்பதை உணர்ந்து போர் செய்வதைக் குறைத்துக் கொள்வான் என்று எண்ணினார் நக்கீரர்.
பாட்டின் சுவையைப் புலவர்கள் பாராட்டினார்கள். அரசன் அவையில் அது அரங்கேறியது. அரசனும் அதன் சுவையை நுகர்ந்து இன்புற்றான். கவிதையைச் சுவைக்கும் அளவிலே மகிழ்ந்த அவன் நக்கீரர் கருத்தை முழுவதும் உணர்ந்து நடப்பவனாகத் தோன்றவில்லை.