பாண்டியன் நெடுஞ்செழியன்/மதுரைக் காஞ்சி

8. மதுரைக் காஞ்சி

துரையில் உள்ள அரசனுக்கு நிலையாமையைப் புலப்படுத்திய காஞ்சித் திணைப் பாட்டாதலின் அதற்கு மதுரைக் காஞ்சி என்ற பெயர் அமைந்தது. அது மதுரையையும் வருணித்துக் காஞ்சித் திணைப் பொருளாகிய நிலையாமையையும் அறிவுறுத்துகிறது.

நெடுஞ்செழியனுடைய முன்னோர்கள் தம்முடைய நாட்டை நல்ல முறையில் ஆண்டு வந்தார்கள். அதனால் காற்று நன்றாக வீசியது. நட்சத்திரங்கள் காலத்துக்கு ஏற்ற கதியிலே நடந்தன. கதிரவனும் திங்களும் தங்களால் ஒரு குறையும் நேராமல் ஒளி வழங்கினர். மேகம் உரிய காலத்தில் பெய்தது. திசைகளெல்லாம் தழைத்தன. ஒன்று ஆயிரமாக விளைநிலங்கள் விளைந்து மல்கின. மரங்கள் நன்றாகப் பயன் தந்தன. பசியும் பிணியும் இல்லாமல் மக்கள் அழகுடன் விளங்கினர். எவ்வளவு பேர் எத்தனை காலம் உண்டாலும் குறையாத வளம் நாட்டில் நிரம்பியது. எக்காலத்திலும் மெய்யையே கூறும் அமைச்சர்கள் அரசர்களுக்குத் துணையாக இருந்தனர். இப்படி இங்கே வெள்ளமெனும் பெரிய எண்ணிக்கை அமைந்த ஆண்டுகளாகக் கிருதயுக வாழ்வே நிலைபெற்றிருந்தது.

“அப்படி உலகத்தை ஆண்ட மன்னர்களின் வழி வந்தவனே!” என்று முதற் பகுதியில் மருதனார் அரசனை விளிக்கிறார்.

நல்லுாழி அடிப்படரப்
பல்வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக![1]

என்று பாராட்டுகிறார்.

“போர்க்களத்தில் இறந்தவர்களின் உடம்புகளைப் பேய்கள் விருந்தாக உண்ணும்படி களவேள்வி செய்தவனே, பொதிய மலையை உடையவனே, சேரனும் சோழனுமாகிய இரு பெருவேந்தருடன் வேளிர்சாயப் பொருது அவரைத் தலையாலங்கானத்தில் வென்றவனே, வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனே!” என்று புகழ்கிறார்.

பிறகு, பல நாடுகளின்மேல் படையெடுத்து வேற்றரசர்களுடைய மதிலே முற்றுகையிட்டு உட்சென்று அம்மன்னர்களைப் பொருது வென்று, அவர்களைத் தன் ஏவல் கேட்கும்படி செய்து கொற்றவர்தம் கோனாக விளங்குவதை எடுத்துரைக்கிறார்.

கப்பல்களில் பண்டங்கள் இறங்கியேறும் கடல் துறையையுடைய சாலியூர் என்னும் ஊரைக் கைக்கொண்டான் பாண்டியன். குட்ட நாட்டில் உள்ள மன்னரை வென்றான். முதுவெள்ளிலை என்னும் ஊரிலிருந்த குறுநில மன்னரை அடிப்படுத்தினான். தலையாலங்கானத்தில் ஏழு பகைவர்களைத் தோல்வியுறச் செய்து அவர்கள் முரசை வெளவினான். இந்த வெற்றிகளையும் விரித்துரைக்கிறார் புலவர்.

“நீ நண்பர்களின் குடியை உயரச் செய்வாய். பகைத்தவர் அரசைக் கைக்கொள்வாய். புகழையும் முத்தையும் முத்துக் குளிப்பவரையும் அருகில் சிறிய ஊர்களையும் உடைய கொற்கைக்குத் தலைவனே, தெற்கிலுள்ள பரதவர்களைப் பொருத சிங்கம் போன்றவனே, பிறருக்குக் கிடைப்பதற்கரிய பொருள்களை எளிதிலே கைக்கொண்டு அவற்றை உனக்கென்று பாதுகாத்து வைத்துக்கொள்ளாமல் பிறருக்குக் கொடுப்பவன் நீ. நம்முடைய இராசதானி நகரத்திலே சுகமாக இருக்கலாம் என்று எண்ணாமல், பகைவரைப் பொரும் பொருட்டு மலைகளையும் காடுகளையும் கடந்து அவர்களுடைய உள் நாட்டிலே புகுந்து அரண்களைக் கைப்பற்றிப் பல காலம் அங்கங்கே தங்கிச் சிறப்புடன் போரில் வெற்றி கொள்ளும் அரசனே, பகைவர் நாட்டிற் சென்று அவர்களுடைய காவற் காடுகளை அழித்து வயல்களை எரியூட்டி, நாடென்னும் பெயர் மாறிக் காடு என்னும் பெயர் உண்டாகவும், பசுமாடுகள் தங்கின இடங்களில் காட்டு விலங்குகள் உறையவும், ஊராக இருந்த இடங்கள் பாழாகவும், மங்கையர் கூத்தாடி மகிழ்ந்த இடங்கள் பேயாடும் இடங்களாகவும், அங்குள்ள குடிமக்கள் பசியால் வருந்தி உறவினர்களைச் சென்று அடையவும், பெரிய மாளிகைகளில் இருந்த குதிர்கள் இப்போது சரிந்து போக அதில் கோட்டான் இருந்து கதறவும், செங்கழுநீர் பூத்துப் பொலிந்த பொய்கைகளில் கோரை வளர்ந்து மண்டவும், எருதுகள் உழுத வயல்களில் காட்டுப் பன்றிகள் ஓடித் திரியவம் அந் நாடுகள் பாழாகிவிட்டன. யானைகளுடனும் படைகளுடனும் முருகன் போருக்குப் புறப்பட்டது போலப் பகைவரிடம் சென்று, வானத்தில் ஆரவாரம் எழ, மழைபோல அம்புகளைத் தூவி, குதிரைகள் புழுதி எழுப்பச் சங்கு முழங்கக் கொம்பு ஒலிக்க, அப் பகைவரை வென்று கொன்று அவர் நாடுகளை அழித்து மதில்களைக் கைக்கொண்டு அவருக்குத் துணையாக வந்தவரையும் வலியழித்து வீரம் காட்டுதலின், நின் பகைவர்கள் நின் ஏவலைக் கேட்டு நடக்கிறார்கள். மற்ற, மண்டலங்களையும் நின்னுடையனவாகக் கொண்டு அரசியல் பிழையாமல் அறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அடிவழியே தவறாமல் ஒழுகி, வளர்பிறைபோல நின் கொற்றம் மேலும் மேலும் சிறப்பதாகுக! தேய்மதியைப்போல நின் பகைவர் ஆக்கங்கள் தேய்வனவாகுக!” என்று பாண்டியனை வாழ்த்துகிறார்.

நெடுஞ்செழியன் தேவலோகத்தையும் அமுத பானத்தையும் பெறுவதாக இருப்பினும் பொய்யை மேற்கொள்ளாமல் மெய்யையே கடைப்பிடிக்கிறவன். உலகத்தில் யார் எதிர்த்தாலும், தேவரே எதிரிகளாக வந்தாலும் பகைவர்களுக்கு அஞ்சமாட்டான். புதையலாக உள்ள பெரு நிதி கிடைத்தாலும் பழியை விரும்ப மாட்டான். பிறருக்கு நிதிகளைக் கொடுக்கும் நெஞ்சம் உடையவன்; புகழையே விரும்புபவன்.

இந்த இயல்புகளை எடுத்துக் கூறிய புலவர், “அத்தகைய சிறப்பியல்புகளை உடையவனே, நின் முன்னால் இருக்கும் இந்த விரிவான போகப் பொருள்களுக்கும் நினக்கும் என்ன தொடர்பு? பெரிய கருத்து ஒன்றைச் சொல்லப்போகிறேன். அதைக் கேட்பாயாக, நின் துன்பம் கெடுவதாகுக! நின் புகழ் கெடாமல் நிலைபெறுவதாகுக!” என்று வாழ்த்திவிட்டுக் காஞ்சித் திணையின் பொருளாகிய நிலையாமையைச் சொல்ல வருகிறார்.

“தம்முடைய நகரங்களிலே இருந்து, கூத்தாடும் மகளிருக்கு வளைகளையும், பாணர்களுக்கு யானைகளையும் வழங்கி, தம்முடைய நண்பர்களுக்குப் பல பொருள்களைக் கொடுத்து, காலையிலே எழுப்பும் சூதர்களுக்குத் தேரையும் குதிரைகளையும் வழங்கி, படைத் தலைவர்களுடன் இனிய குடிவகையை உண்டு, தம்மைப் பணிந்தோர் தேசங்கள் தம் ஏவலைக் கேட்டு நடக்க, பணியாதார் தேசங்களைப் பணியச் செய்து திறை கொள்வதற்காக அவர் நாட்டுக்குச் சென்று வென்ற மன்னர்கள் முன்பு பலர் இருந்தார்கள். கடல் மணலைக் காட்டிலும் பலர் பகைவரை வென்று உலகத்தை ஆண்டு பயனின்றி மாண்டார்கள்” என்று கூறும் வாயிலாக, மறுமைக்குரிய நெறியைக் கருதாமல் போரில் வெற்றி பெறுவதை மாத்திரம் எண்ணி வாழ்ந்த வாழ்க்கை வீண் என்று புலப்படுத்துகிறார்.

பிறகுதான் பாண்டி நாட்டின் வளப்பமும் மதுரை மாநகரின் சிறப்பும் வருகின்றன.

முதலில் பாண்டி நாட்டைப் பார்ப்போம். அங்கே மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலமும், வறண்டு போன பாலை நிலமும், காடும் காட்டைச் சார்ந்த இடமுமாகிய முல்லை நிலமும், வயலும் அதைச் சார்ந்ததுமாகிய மருதமும், கடலும் அதைச் சார்ந்த பகுதியுமாகிய நெய்தலும் ஆகிய ஐவகை நிலங்களும் உள்ளன. அதனாற் பாண்டியனுக்குப் பஞ்சவன். என்ற பெயர் உண்டாயிற்று. மாங்குடி மருதனார் பாண்டி நாட்டில் உள்ள ஐந்து திணைக்குமுரிய நிலங்களை வருணிக்கிறார்.


  1. கன்றாகிய யுகம் நமக்கு அடிப்பட்டு கடக்க, ‘வெள்ளமென்னும் எண்ணைப் பெற்ற காலமெல்லாம் அரசாண்ட தன்மையை மேலாக யாவரும் எடுத்துச் சொல்லும்படியாக, உலகத்தையாண்ட சிறந்த மன்னர்களின் வழி வந்தவனே!