பாண்டியன் நெடுஞ்செழியன்/மதுரை மாநகர்

10. மதுரை மாநகர்

துரைக்குப் புறத்தே வையை ஓடுகிறது. அதன் கரைகளில் பூம் பொழில்கள் வளர்கின்றன. அந்தச் சோலைகளினிடையே பெரும் பாணர்கள் வாழ்கிறார்கள். வையையாறு மதுரை மாநகருக்கு ஒரு பக்கத்து அகழியாக விளங்க, மற்றப் பக்கங்களில் ஆழமான அகழிகள் இருக்கின்றன. அகழியைத் தாண்டினால் பல பல கற்படைகளையுடைய பெரிய மதிலைப் பார்க்கிறோம். இந்த அகழியையும் மதிலையும் முற்றுகையிட்டுப் பல அரசர்கள் தோல்வியுற்று ஓடியிருக்கிறார்கள்.

மதில் வாசலில் மிக உயர்ந்த நிலை இருக்கிறது. அந்த நிலையில் தெய்வம் உறைவதாக எண்ணி வழிபடுகிறார்கள். அதிலுள்ள இரட்டைக் கதவுகளில் பலகாலும் நெய்யைத் தடவியதனால் அவை கரிய நிறம் பெற்றிருக்கின்றன. இந்த வாசலில் எப்போதும் மக்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள்.

மதிலின் வாசல் வழியே உள்ளே புகுந்தால் ஆறுகள் கிடந்தாற் போன்ற அகன்ற நெடுந்தெருக்களைக் காண்கிறோம். மிக உயர்ந்த வீடுகளும் அவ்வீடுகளில் தென்றற் காற்றுப் புகுந்து ஒலிக்கும் சாளரங்களும் உள்ளன. வீடுகள் பல்வேறு கட்டுக்களும் அமைப்புக்களும் கொண்டனவாய்த் திகழ்கின்றன.

இப்போது நாம் பார்க்கப் புகுவது நாளங்காடி; காலைக் கடை. இங்கே வெவ்வேறு வகையான மக்கள் தங்கள் தங்கள் மொழியிலே பேசுகிற ஓசை ஒலிக்கிறது. முரசை அடித்து விழாவைச் சிலர் அறிவிக்கிறார்கள். பல வாத்தியங்களை வாசிக்கிறார்கள். இங்கே நாளங்காடி, அல்லங்காடி என்று இரண்டு வகைக் கடைத் தெருக்கள் இருக்கின்றன. சித்திரத்தைக் கண்டாற் போலத் தோன்றும் அமைப்புடையன அவை.

நாளங்காடியிற் பல பல கொடிகள் காட்சி அளிக்கின்றன. கோயில்களில் விழாக்கள் நடக்கின்றன. அதைப் புலப்படுத்தும் கொடிகள் பல. அரசனுடைய ஏவலால் படைத்தலைவர் அவ்வப்போது வேறு மன்னருடைய மதில்களைக் கைப்பற்றுவார்கள். அப்போதெல்லாம் வெற்றிக் கொடிகளை உயர்த்துவார்கள். அவ்வாறு உயர்த்திய கொடிகள் பல அசைகின்றன. போர்க்களத்தே பொருது பெற்ற வெற்றியைக் காட்டும் கொடிகள் பல. கள் விற்கும் இடம் இதுவென்று அடையாளம் காட்டும் கொடியும், கல்விச் சிறப்பினால் அறிஞர் உயர்த்திய கொடியும், தவம் கொடை ஆகிய சிறப்பைப் புலப்படுத்தும் கொடிகளுமாகப் பல பெரிய கொடிகள் அங்கங்கே அருவியைப்போல அசைகின்றன.

மதத்தால் சிறந்த யானைகளும், அன்னச் சேவலைப் போன்ற குதிரைகள் பூட்டிய தேரும், வேகமாக ஓடும் குதிரைகளும், மிடுக்குடைய வீரர்களும் அந்த வீதி வழியே செல்வது உண்டு. அப்போதெல்லாம் அங்கே பூந்தட்டிலே பூவை வைத்து விற்பவர்களும், மாலைகளை விற்பவர்களும், வாசனைச் சுண்ணத்தை விற்பவர்களும், பாக்கு வெற்றிலை சங்குச் சுண்ணாம்பு ஆகியவற்றை விற்பவர்களும் அஞ்சி ஒதுங்கி நிற்கிறார்கள். படைஞர் போன பிறகு அச்சம் நீங்கி அவர்களும் மற்றப் பண்டங்களை விற்றுக்கொண்டு திரிபவர்களும் மலையைப் போன்ற மாடங்களின் நிழலிலே தங்கியிருக்கிறார்கள். அழகிய மங்கையரும் இளைய மைந்தரும் ஒன்றுபட்டு இன்புறுவதற்கு ஏற்ற பண்டங்களையும் பூவையும் நரைத்த கூந்தலையுடைய முதிய பெண்டிர் வீடு வீடாகச் சென்று விற்கிறார்கள். இந்தப் பண்டங்களை அங்கங்கே உள்ள மக்கள் வாங்கிக்கொள்கிறார்கள். அப்படிக் கொள்ளக் கொள்ளக் குறையாமலும், பலரும் புதிய பண்டங்களைக் கொண்டுவரக் கொண்டுவர மிஞ்சிப் போகாமலும் விளங்குகிறது நாளங்காடி. அது மேகம் முகந்து செல்வதாற் குறையாமலும் ஆறுகள் பாய்வதால் மிகாமலும் உள்ள கடலைப் போல அல்லவா தோன்றுகிறது?

எங்கும் மாடங்கள் விளங்கும் கூடல் நகரில் விழாத் தொடங்கி ஏழு நாட்களாகியமையால் இன்று தீர்த்தவாரி நடக்கிறது. அதனால் மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

அந்திவானத்தைப் போன்ற சிவந்த நிறத்தையும் நுட்பமான பூத்தொழிலையும் உடைய கலிங்கத்தை இடையிலே கட்டி உடைவாளைத் தொங்க விட்டுக் கொண்டு தோளிலே தானை புரளக் காலிலே கழல் திகழ மார்பிலே மாலை மணக்கத் தேரின் மேலேறி அருகிலே காலாட்கள் காவல் செய்யச் செல்லும் செல்வர்களின் திருமாளிகைகள் இவை. இவற்றில் சிலம்பு ஒலிக்க வானுறையும் அணங்குகளைப் போன்ற அழகிய மகளிர் தாம் அணிந்த வாசனைப் பொருள்களின் மணம் தெருவெல்லாம் கமழும்படி கொடி கட்டிய நிலா முற்றந்தோறும் தம் அழகிய முகத்தை நீட்டி விழாவைக் கண்டுவிட்டு மறைகிறார்கள்.

மழுவை ஏந்திய சிவபெருமான் முதலிய தெய்வங்களுக்கு அந்திக்காலப் பூசை நடக்கிறது. அப்போது வாத்தியங்கள் முழங்குகின்றன. கணவரும் குழந்தைகளும் உடன் வர மகளிர் பூவையும் தூபப்பொருள்களையும் கொண்டு சென்று வழிபடும் திருக்கோயில்கள் பல இருக்கின்றன. வேதம் ஓதிச் சிறந்த ஒழுக்கத்தோடு நின்று இங்கிருந்தபடியே முத்தியின்பத்தைப் பெறும் நிலையையும் அறநெறி பிழையாத அன்புடை நெஞ்சையும் உடைய துறவியர் வாழும் இடங்கள் பல. முக்காலமும் நன்குணர்ந்த சமணர்கள் வாழும் பள்ளிகள் பல.

வழக்குரைப்பாருடைய அச்சத்தையும் வருத்தத்தையும் ஏக்கத்தையும் போக்கி, விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ந்து, நடு நிலைமையிலே நின்று அறத்தையே சொல்லும் அறங்கூறவையத்தைச் சார்ந்த பெரியோர் வாழும் மாளிகைகள் இவை. அரசனிடத்தில் உள்ள நன்மையையும் தீமையையும் உணர்ந்து, அவற்றை மனத்துள் அடக்கிக்கொண்டு, அன்பும் அறமும் அழியாதபடி பாதுகாத்து, பழியை நீக்கிப் புகழ் நிறைந்த இயல்போடு, தலையில் பாகை கட்டிக் கொண்டு தோன்றும், காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர்கள் வாழும் மாளிகைகள் அவை. இவையாவும் மிகவும் உயரமான மாளிகைகள்.

பலவகையான பண்டங்களும், உணவுவகைகளும், மலையிலே விளைந்தனவும் நிலத்திலே விளைந்தனவும் கடலிலே விளைந்தனவுமாகிய பொருள்களும், முத்தும் பொன்னும் தாம் வாங்கிக்கொண்டு தம் நாட்டுப் பண்டங்களை விற்கும் வணிகர்களும், ஐம்பெருங் குழுவினரில் அமைச்சர் அல்லாத புரோகிதர், சேனாபதிகள், தூதர், ஒற்றர் என்னும் நால் வகையினரும், சங்கு அறுப்பாரும், மணியைத் துளையிடுவாரும், பொன்னணி செய்வாரும், பொன்னை உரைக்கும் பொன் வாணிகரும், ஆட்ைகளை விற்பவரும், செம்பை நிறுத்து வாங்கிக்கொள்பவரும், கச்சுக்களை அமைப்பாரும், பூவையும் தூபப் பொருளையும் விற்பாரும், எந்தப் பொருளையும் அழகாகத் தோன்ற எழுதும் ஒவியர்களும், பிறரும் கூடி நான்கு தெருக்களிலும், நெருங்கி நிற்கிறார்கள். இந்த இடங்களில் எப்போதும் கல்லென்ற ஓசை இருந்துகொண்டே இருக்கிறது.

பலாப்பழமும் மாங்கனியும் வெவ்வேறு வகையான காய்களும் பிற பழங்களும் கீரை வகைகளும் கற்கண்டும் ஊனும் கிழங்கும் கொண்டு ஆக்கிய இனிய உணவுகளைக் கொண்டு வந்து இடுவார் இட, அங்கங்கே அவற்றை நுகர்கிறார்கள் பலர்.

இத்தகைய அல்லங்காடியில் கப்பல் வந்து இறங்கும் துறைமுகத்தைப் போல ஒரே ஆரவாரமாக இருக்கிறது. பல வேறு பறவைகள் ஒருங்கே ஒலித்தது போன்ற ஓசை கேட்கிறது

நாளங்காடியையும் அல்லங்காடியையும் பார்த்து விட்டோம். இனி இம் மாநகர் மக்கள் எவ்வாறு இரவிலே பொழுது போக்குகிறார்கள் என்பதைக் கவனிப்போம்.

கதிரவன் மறைந்தான். நிலாப் புறப்படுகிறது. தம்முடைய கணவன்மார் பிரிவின்றித் தம்முடன் இருக்கப் பெற்ற மகளிர் மாலையும் அணியும் அணிந்து வாசப்புகை ஊட்டிய ஆடை புனைகிறார்கள்; விளக்கு ஏற்றுகிறார்கள். கணவரைப் பிரிந்தோர் வருந்துகிறார்கள். செல்வர்களே நாடிப் பரத்தையர் தம்மை அலங்கரித்துக்கொண்டு செல்கிறார்கள். திருமாலுக்குரிய ஓண விழாவில் நடந்த குத்துச் சண்டை முதலியவற்றில் பெற்ற நெற்றி வடுவையும் கண்ணியையும் உடைய வீரர்கள் தெளிந்த மதுவை உண்டு திரிகிறார்கள். கணவர் உவக்கும்படியாகக் குழந்தையைப் பெற்ற மகளிர் புனிறு தீர்ந்து குளத்தில் நீராட அதுகண்டு முதற் சூலைக் கொண்ட மகளிர் பூசைக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு சென்று கோயிலிலுள்ள தேவராட்டியிடம் கொடுத்து வழிபடுகிறார்கள். பூசாரி முருகனுக்குப் பூசை போடும்போது பலவகை வாத்தியங்கள் முழங்குகின்றன. அங்கே மகளிர் கை கோத்துக்கொண்டு குரவைக் கூத்து ஆடுகிறார்கள்.

தெருக்களில் கதை பேசுவார் பலர்; பாட்டுப் பாடுவார் பலர்; கூத்தாடுவார் பலர். இப்படிப் பலபல வகையான கம்பலைகள் மலிந்துள்ளன. இந்த வகையில் முதற் சாமம் கழிகிறது.

இரண்டாம் சாமம் வந்துவிட்டது. சங்குகளின் ஓசை அடங்குகிறது. வியாபாரம் செய்கிறவர்கள் கடைகளை அடைக்கிறார்கள். மகளிர் துயில்கிறார்கள். வெல்லப் பாகினாலே உண்டாக்கின அடையையும் பருப்பும் தேங்காயும் உள்ளே வைத்த மோதகத்தையும் அப்பத்தையும் விற்பவர்கள் அப்படி அப்படியே தூங்குகிறார்கள். கூத்தாடுகிறவர்களும் கூத்த நிறுத்தித் துயில் கொள்கிறார்கள். கடல் அலை யடங்கினது போல யாவரும் ஓசையடங்கித் துயில்கிறார்கள்.

இப்போது நள்ளிரவு. சரியாக இரவு பதினைந்து நாழிகை. காலிலே செருப்பும் இடையிலே கச்சும் நூலேணியும் கையில் உளியும் வாளும் கொண்டு, வரும் கள்வரைத் தேர்ந்து, தூங்காத கண்னோடு காவலர்கள் திரிகிறார்கள். அவர்களுக்குத் திருட்டு நூலும் தெரியும்; காவல் நூலும் தெரியும். மழை மிகுதியாகப் பெய்தாலும் அவர்கள் வில்லும் அம்பும் கைக்கொண்டு தளர்ச்சியில்லாமல் உலாவுவார்கள்.

மூன்றாம் சாமத்தில் தெய்வங்கள் உலாவுவதாகச் சொல்வார்கள். நள்ளிரவும் மூன்றாம் சாமமுங் கழிகின்றன. நான்காம் சாமம் வந்துவிட்டது.

கட்டவிழ்கின்ற மலர்களையுடைய பொய்கையில் தாதை உண்ணும் தும்பிகள் முரன்றார்போல மறை ஓதும் அந்தணர்கள் வேதத்தைப் பாடுகிறார்கள். யாழில் வல்லவர்கள் காலைக்குரிய மருதப் பண்ணை வாசிக்கிறார்கள். குத்துக்கோற்காரர்கள் யானைக்குக் கவளம் கொடுக்கிறார்கள். குதிரைகள் புல்லைக் குதட்டுகின்றன. பல பண்டங்களை விற்கும் கடைகளை ஏவலர் மெழுகுகிறார்கள். இனிய குடிவகை விற்கும் கடையில் இப்போதே வியாபாரம் தொடங்கிவிட்டது. இல்வாழ் மகளிர் எழுந்து, சிலம்பொலிக்கக் கதவுகளைத் திறக்கிறார்கள். திறக்கும் ஓசை கேட்கிறது. நின்று ஏத்தும் சூதர்கள் வாழ்த்து இசைக்கிறார்கள். இருந்து ஏத்துவார் புகழ் பாடுகிறார்கள். வேதாளிகர் நாழிகை இவ்வளவு ஆயிற்றென்று அறிவிக்கிறார்கள். பள்ளி யெழுச்சி முரசு முழங்குகிறது.

எருதுகள் ஒன்றோடு ஒன்று மாறி மாறி ஒலி யெழுப்புகின்றன. கோழி கூவுகிறது. கரிச்சான் குருவியும் அன்னமும் கரைகின்றன. மயில்கள் அகவுகின்றன. பிடியோடு நிற்கும் களிறுகள் பிளிறுகின்றன. கூட்டிலே உறையும் கரடிகளும் புலிகளும் முழங்குகின்றன.

இரவிலே தம் கணவரோடு ஊடிய மகளிர் முத்து மாலையைக் கழற்றி எறிந்திருக்கிறார்கள்; மணல் முற்றத்தில் அந்த முத்துக்களோடு பாக்கும் வாடிய பூவும் ஆபரணங்களும் இறைந்து கிடக்கின்றன. அவற்றை ஏவலர் பெருக்குகிறார்கள்.

இத்தகைய காட்சிகளை நாலாவது சாமமாகிய விடியற்காலத்தில் காணுகிறோம்.

இப்படிச் சிறந்து ஓங்கி நிற்கும் மதுரையிலே அரசனுடைய வெற்றிச் சிறப்பால் பலவகைப் பண்டங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. பெருந் தோளையுடைய மழவரை ஓட்டியதால் அவர் விட்டுப்போன யானைகளும், பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்த புரவிகளும், பகைவரூரைச் சுட்டு அங்கிருந்து கொண்டு வந்த ஆநிரைகளும், வேற்று நாட்டு மதிலை இடித்துக் கொணர்ந்த மதிற் கதவுகளும், பணிந்து போன மன்னர்கள் திறையாகக் கொண்டு வந்து கொடுத்த கலன்களும் பிறவும் கடலிலே கங்கையாற்று வெள்ளம் சென்று சேர்ந்நாற்போல இந் நகரிலே வந்து சேர்ந்திருக்கின்றன.

இவ்வாறு வளம் பெற்ற மதுரையின் அமைப்பையும் அங்கு வாழ்வார் செயல்களையும் விரித்துக் கூறி விட்டு நெடுஞ்செழியனை வாழ்த்துகிறார் புலவர்.

இரவிலே மாதேவியோடு துயின்று விடியலில் எழுந்து ஆடையணி புனைந்து தெய்வத்தை, வழிபடுவர் அரசர். அப்பால் திருவோலக்கத்திலிருந்து, பல்வேறு வீரச் செயல்களைச் செய்த படைத் தலைவர்களையும், வீரர்களையும் அரசியற்கருமம் செய்பவர்களையும், புலவர்களையும், பாணரையும், விறலியரையும், கூத்தரையும் அழைத்து வரச் செய்வர். பின்பு அவரவர்களுக்கு வேண்டிய வரிசைகளை வழங்குவது மன்னர் இயல்பு. “அவ்வாறே செய்து முதுகுடுமிப் பெருவழுதியைப்போலக் கேள்வித் துறை போகிய ஆசாரியர்களோடு கலந்து நட்பாடியும் பெரியோர்களின் உபதேசங்களைக் கேட்டும் வீட்டு நெறிக்குரிய பெரும் பொருளைக் கற்றும் புகழ் பெற்றுச் சுற்றத்தாரோடு இனிது விளங்கி நீடூழி வாழ வேண்டும்” என்று. வாழ்த்தி மதுரைக் காஞ்சியை முடிக்கிறார் மரங்குடி மருதனார்.

மகிழ்ந்தினிது உறைமதி பெரும,
வரைந்து நீ பெற்ற நல்லூழி யையே[1]

என்று முடிகிறது பாட்டு.

இந்த அழகிய பாட்டும் நக்கீரர் பாடிய நெடுநல்வாடையும் பத்துப் பாட்டு என்ற சங்கத் தொகை நூலில் சேர்க்கப் பெற்றுள்ளன.


  1. பெருமானே, நினக்கென்று வரையறுக்கப் பெற்று நீ கொண்ட நல்ல வாழ்நாள் முழுதும் மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக!