பாண்டிய மன்னர்/பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி

கடவுள் துணை

பாண்டிய மன்னர்



(முதற் பகுதி)


தமிழ்த் தெய்வ வணக்கம்

அறமுதனான் கமையவுணர்த் தருட்பணியைப் பூண்டருளும்
திறமொருமூன் றுடையதமிழ்த் தேவிதிரு வடியிணையிற்
புறமகமாம் பொருளினலம் பொருந்துறுமா றுரிமையுடன்
மறமகலு மனவாக்கால் வழிபட்டு வணங்கிடுவாம்.

1. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

I

திரவன் குண திசைச் சிகரம் வந்து அடைந்தான். உலக முழுவதும் பொன்மயமான ஒளி பரவியது. இரவு முழுவதும் உலகைக் கைக்கொண்டிருந்த இருட்படலம் ஞானாசாரியனது அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாகிய ஆஸ்திகன் ஒருவனது மனத்து அகவிருள் ஒழிவதுபோல ஒழிந்தது, தம் தலைவன் வருகையைக் கண்டு மகிழும் பெண்டிர் முகம்போலப் பொய்கைகளிலே தாமரைகள் மலர்ந்தன. மாந்தர் அனைவரும் தத்தம் நிலைமைக்கேற்ற முயற்சித் துறைகளில் ஊக்கம் உடையாராய் வேண்டுவன செய்யத் தொடங்கலாயினர். பாண்டிய நாட்டுத் தலைநகராகிய மதுரைமா நகரில், சிவாலயம், விஷ்ணு ஆலயம் முதலிய இடங்களில் காலையியங்களின் முழக்கம் எழுந்தது. அன்பர் எண்ணிறந்தார், பாண்டியர்தம் பொய்யாக் குலக்கொடியாகிய வையைமா நதியில் நீராடித் திருநீறு தரித்துச் சிவத்தியான பரராய் இறைவனை வணங்கி வாழ்த்தி மகிழ்ந்தனர்.

பாண்டிய மன்னர் அரண்மனையில் அறிவரும் முனிவரும் புலவரும் அமைச்சரும் பிறரும் கூடி, அன்று அரசற்கு முடி சூட்டுத் திருவிழா நிறைவேற்றும் கருத்தோடு நிறைந்திருந்தனர். முதுகுடுமி என்ற இளவரசன், சூரிய உதயத்தின் முன்பே உரிய பெரியார் உதவி பெற்றுப் பட்டாபிஷேகச் சடங்கிற்குரிய சமயத்தை எதிர்பார்த்து, முகமலர்ச்சியோடும் திருநீறும் கண்டிகையும் விளங்கும் திருக்கோலத்தோடும் அரசச்செல்வம் அடையும் நிலைபெற்றும் வணக்கம் மிகவும் வாய்க்கப் பெற்றவனாய் விளங்கினான். புரோகிதரும் பிற அந்தணரும் தமக்கென அமைந்த ஆதனங்களில் வீற்றிருந்தனர். அமைச்சர் தலைவர், ஆண்டிலும் அனுபவத்திலும் அரசியலறிவிலும் முதிர்ந்த பெரியா ராகையால், அவரது ஆணைப்படியே உரிய வைதிகச் சடங்குகள் நிறைவேறின. புண்ணிய தீர்த்தங்கள் பலவும், தென்கடல் நீரும், கங்கை நீரும், காவிரி நீரும், வைகை நீரும், தாமிரபர்ணி நீரும் கொணர்ந்து, புரோகிதரும் பிறரும் அரசனாதற்குரிய முதுகுடுமியை மனமார வாழ்த்தி, அபிடேகம் செய்வித்தனர். அமைச்சரும் சேனாபதியரும் பிற தலைவரும் அபிடேகம் செய்தனர். மந்திர உச்சாரணம் செய்து வைக்கப்பெற்றிருந்த பொற்குட நன்னீரை அந்தணத் தலைவர் பாண்டிய சிம்மாசனாதிபதி முதுகுடுமிக்கு அபிஷேகம் செய்தனர். பிறகு எங்கும் மங்கள வாழ்த்தும் வாத்திய முழக்கமும் உண்டாக, அரசன், உரிய சின்னங்களைத் தரித்துக்கொண்டு, சிங்காதனத் தமர்ந்தான். அவன் தலையின் மீது அன்பு பெருக முடி கவித்து, அமலன் அருள் பொழிக வென வாழ்த்தி, ஐம்பெருங்குழுவினர் அருகே நின்றனர். வணங்கற்குரியாரெல்லாம் தத்தமக்குரிய முறையிலே வந்து வணங்கினர். சிற்றரசுகளும் குறுநில மன்னரும் பிறரும் திறையளந்தனர். சேர சோழரும், வடவரசரும், அயலரசர் பிறரும் வந்து, தத்தமக்கேற்ற வண்ணம் வணங்கியும் வாழ்த்தியும் அரச மரியாதைகள் செய்து சென்றனர். முதுகுடுமி என்ற பாண்டிய மன்னன், முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பட்டப் பெயர் ஏற்றுக்கொண்டு, அரசுரிமை மேற்கொண்டான். அங்கு வந்திருந்த காரி கிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலிய புலவர்கள், அவனது வருங்காலப் பெருமையை அறிந்தார் போல, அவனை மனமார வாயார வாழ்த்தினார்கள். பேரிளம்பெண்டிர் பலர் குழுமிப் பல்லாண்டு பாடி ஆரத்தி எடுத்தனர்.

பட்டாபிஷேகம் செய்துகொண்ட பாண்டிய குல திலகனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, அன்று அங்குக் குழுமியிருந்த பெரியோர்களைப் பார்த்துப் பின் வருமாறு பேசினன்:

“அமைச்சர்களே, அறிஞர்களே, புலவர் பெருமக்களே, குடிமக்களே, குலமக்களே, தவப்பெருஞ் செல்வர்களே, தாய்மார்களே, அன்பின் செல்வத்தில் தலைநின்ற உங்களது உதவியால் இப்பொழுது என் முன்னோர் காலம் முதல் அநேகஆயிர ஆண்டுகளாக வழி வழி வந்த இவ்வரசுரிமையை ஏற்றுக்கொண்டு, என்னால் இயல்வன செய்ய முன்வந்துளேன். அறிவாற்றல்களாற் சிறியேனாகிய யான், அறிவரும் அமைச்சரும் ஆன்றமைந்தவருமாகிய உங்கள் அபிப்பிராயங்களுக் கிணங்க நடந்து, பண்டைய தமிழ் நாடாகிய இந்நாட்டுக்கு நலம் புரிய முயல்வேனாக, முடி சூட்டுத் திருநாளாகிய இன்று நம் நாட்டுக் குடி மக்களுக்கு நான் செய்தற்குரிய சிறந்த நன்மைகள் சில உள: நமது தாய் மொழியாகிய தமிழ் மொழியைப் பயில்விக்கும் கணக்காயர்க்கும், அவர்தம் ஆதரவில் நடைபெற்றுவரும் கலாசாலைகளுக்கும் உதவுமாறு நம் நாட்டுப் பொன்னாணயத்திலே ஆறாயிரம் நன்கொடை தருகின்றேன்; வைத்தியசாலைகள் வளம்படும் பொருட்டுப் பதினாயிரம் பொன் தருகிறேன்; புலவர் பலர் கூடி அரும்பொருள்களை ஆராய்ந்து நூல்களும் உரைகளும் செய்து, உலக உபகாரம் இயற்றலாம்படி அமைந்துள்ள சங்கத்துக்குப் பதினாயிரம் பொன் வருமான முள்ள இரண்டு கிராமங்களை அளிக்கின்றேன்; நம் நாட்டில் வாழ்வாரெல்லாம், தமர் பிறர் என்ற வேறுபாடின்றி, ஒற்றுமையாய் வாழவேண்டு மென்பதே எனது நோக்கமாம். அயல் நாட்டவர் சிலர் வியாபாரத்தின் பொருட்டு இந்நாட்டுக்கு வருகின்றனர். கடல் கடந்து பிற நாடுகளிலும் நம்மவர் வியாபாரம் செய்யப்போய், அங்குள்ள சிறிய தீபாந்தரங்களில் நிலைத்து வாழ்வது முண்டென அறிகின்றேன். 'அயல் நாடுகளுக்கு நாம் போய்ப் புகுந்து அந்நாட்டவர்க்கு உரிய உரிமைகளை நமக்கும் உரிமையாக்கிக்கொண்டு வாழவேண்டும் என்ற எண்ணம் நம் நாட்டு மக்களுக்கு உண்டாவது போல, நம் நாட்டில் வந்து வாழும் அயல்நாட்டவர்க்கும் நம் நாட்டில் அவ்வுரிமைகளைப் பெற வேண்டுமென்ற எண்ணம் உண்டாதல் இயல்பே. ஆதலால், அவ்வாறு இங்கு வந்து வாழ்வோர்க்கு நாம் உறவின் முறையார் போலப் பழகி, வேண்டும் உதவிகள் செய்யவேண்டு மென்பதே, இந்நாட்டவர் அனைவரும் கடைப் 'பிடித்தற்குரிய அறநெறியாம். எத்தகையார்க்கும் நீதி ஒன்றே. உரிமைகள் ஒரு நிகரனவே. அறிவின் உயர்வும் கல்வியின் சிறப்பும் எக்குடியிலிருப்பினும் மதிக்கப்படும். ஆயினும், நம் முன்னோர் பின் பற்றி வந்த அறநூல் நெறிகட்கிணங்க நாமும் நடக்க வேண்டுவது முறையாதலால், படைப்பு முறையில் எங்கும் காணப்படும். உயர்வு தாழ்வுகள் போல அறிவு ஒழுக்கம் பழக்கம் முதலியவை காரணமாகப் பண்டே, யமைந்த குல வொழுக்கங்களுக்கு மாறுபாடாக எவரும் செல்லலாகாது. அவரவர்க்கேற்ற கர்மானுஷ்டானங்களை முறை பிறழாது இயற்றி வரல் வேண்டும். தருமத்தையே அடிப்படையாய்க் கொண்ட நம் அரசியல், எல்லா இனத்தாரும் அவரவர்க்குரிய தரும நெறியில் நின்றாலன்றிச் சீர்ப்பாடு அடையாது. எங்கும் நலம் பொங்குமாறு இனியதும் சிறந்ததும் ஆகிய அற நெறியிலே அனைவரும் வாழ்வோமாக.

அரசன் இவ்வாறு பேசி முடிந்ததும், புலவருள் நரைத்து முதிர்ந்த பெரியார் ஒருவர் எழுந்து, பின் வருமாறு வாழ்த்துக் கூறினர்:

‘அருந்தமி ழணங்கின் திருந்து திருப்பணி
உரிமையிற் பூண்ட பெருமையிற் சிறந்த
பாண்டியர் தொல்குடி பண்ணிய புண்ணியப்
பயனாத் தோன்றிய பாண்டிய மன்னவ,
விதுமரபு விளக்கும் முதுகுடுமிப் பெருவழுதி
அறநெறி புரிந்து மறநெறி கடிந்து

நல்லோர் போற்றும் நலத்தகை பொருந்திக்
கேள்வியிற் கிளர்ந்து வேள்விகள் இயற்றி
விண்ணவர் மண்ணவர் மிகுமகிழ் வெய்த
அரிய குணங்கட் காகர மாகி
நுதல்விழி நாட்டத் திறையோன் அருளால்
வாழி வாழி மலர்மகள்
ஊழிக் காலம் உரனொடு பொருந்தவே.'

புலவரும் அமைச்சரும் அறிவுடையார் பிறரும் இவ்வாழ்த்தின் பொருணயத்தை ஆய்ந்து மகிழ்ந்தனர். அறிவிற் சிறந்த அரசர் தலைவனும் இப்பாடல் பாடிய புலவர்க்கு நூறு பொன் பரிசில் அளித்துப் பொன்னாடை யொன்று போர்த்து, வேறு பல சிறப்புக்களும் செய்தான்; பிறகு அங்குக் கூடிய பலர்க்கும் அவரவர்க்கு ஏற்ற வண்ணம் சிறப்புக்கள் செய்தான். அதன் பின்னர் ஐம்பெருங்குழுவினர் புடை வர, அரசன் அரண்மனையிற் புகுந்து, அவர்களோடு சிறிது நேரம் மந்திராலோசனை செய்தான். மகுடாபிஷேகத்தின் பொருட்டுக் கூடிய மாந்தர் அனைவரும், மங்களப் பொருள்கள் பல பெற்றுக்கொண்டு, தத்தம் மனைக்குத் திரும்பினர்.

மந்திராலோசனை சபையில், நாட்டினர் நன்மைக் குரிய சில அவசியமான விஷயங்கள் பேசித் தீர்மானிக்கப்பட்டன. அரசன் குடிகள் நன்மையின்பொருட்டுச் செய்யக் கருதிய செயல்களெல்லாம் ஆலோசித்து அங்கீகரிக்கப்பட்டன. தாம் அன்று அங்குச் செய்தற்குரிய வினை நிறைவேறியதறிந்த அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர், மகாசனங்கள், மருத்துவர், நிமித்திகர், பார்ப்பார் என்ற பல வகையாரும் அரசனிடம் விடை பெற்றுத் தத்தம் இடங்கட்கு ஏகினர். அரசன் தனது அந்தரங்க ஸ்தலத்தில் மெய்காவலன் ஒருவனே அருகில் நிற்க, நின்றுகொண்டு, இறைவன் திருவருளை வியந்து, மனமுறத் தெய்வத் தோத்திரங்களைப் பாடி, மனத்தினுள் உருகிக்கொண்டிருந்தான். ஒற்றருட் சிலர், புதுவராய்த் தம்பதவிகளில் அமர்த்தப்பட்டார். ஆதலால், தத்தமக்குரிய அதிகாரப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு, அயல் நாடுகளுக்கும் உள் நாட்டுக்கும் செல்லக் கருதியவராய்த் தனித்தனியே ஒருவரை ஒருவர் அறியாது, அரசனிடம் ஆணை பெற வந்தனர். சில மறைக் குறிகளால் அவர்களை இன்னார் என அறிந்த அரசன், ஒவ்வொருவரும் தனித்தனியே வந்ததற் கேற்ப, அவர்கட்கு ஏற்ற வண்ணம் ஆணைகள் பிறப்பித்து, அதிகாரப் பத்திரமும் இராஜ முத்திரையோடு தந்து, உயிர் போவதாயிருக்கும் காலத்தும் அப்பத்திரங்களைப் பிறர் அறியாவண்ணம் காக்க வேண்டும் என்ற ஆணையும் இட்டு அனுப்பினன். இவ்வாறு அரசியற்குரிய பல வகை வேலைகளையும் ஒருவாறு அன்று தொடங்கி முடித்துவிட்டுச் சிறிது இளைப்பாறினன்.

உரிய காலத்தில் இறைவன் திருவருட் பேற்றை அடையும் கருத்தே பெரிதும் உடையனாயிருந்த காரணத்தால், முதுகுடுமிப் பெருவழுதி, அயல் நாடுகளில் நல்லரசு இல்லாதவற்றை அடக்கவும் ஆளவும் முறையில் நிறுத்தவும் கருதினான். ஒற்றரால் தான் அறிந்த உண்மைகளைக் கொண்டு தன் நாட்டிலும் பிற நாடுகளிலும் தான் செய்தற்குரிய வேலைகளிற் சிறந்ததாக மறம் ஒழித்து அறம் வளர்த்தலையே அவன் எண்ணியிருந்தான். இவ்வாறு எல்லா வித நன்மைகளும் சிறப்பத் தோன்றிய அவன் அரசின் பெருமையைப் பின் வரும் செயல்களால் அறியலாம்.

II

முதுகுடுமிப் பெருவழுதி, பாண்டிய நாட்டு அரசுரிமையை யேற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆயின. பாண்டிய நாடு முழுவதும் அவன் சுற்றிப் பாராத சிற்றூரு மில்லை; பேரூரு மில்லை. நகரங்கள் அவனது தர்ம தனத்தாலும் அரசாங்க ஆதரவாலும், அறநிலை, கலா நிலையம், நூல்நிலையம் முதலியவற்றைப் பெற்றன. கிராமங்களிலும் அறிவுடையார் அநேகர் வாழ்ந்தன ராதலால், அவர்களது பேச்சு எழுத்து என்னும் இரண்டு வழிகளால், அங்குள்ளார் அனைவரும் தெய்வ நம்பிக்கை, இராஜ பக்தி, தேச பக்தி, எதிர் கால வாழ்வில் நாட்டம் முதலிய சிறந்த குணங்கள் உடையவராய் விளங்கினர். வாயில்லாப் பிராணிகளாகிய கன்று காலிகளைத் தெய்வங்களே போலப் போற்றும் எண்ணம் எங்கும் பரவியதால், அவற்றுக்கு அவ்வக்காலங்களில் நேரிடும் சிறிய பிணிகளை ஒழிக்கவும் வருமவற்றை வராமற் போக்கவும் வேண்டும் உதவி செய்துகொண்டு, அரசாங்க அதிகாரம் பெற்ற சில மிருக வைத்தியர்கள் நாடெங்கும் சஞ்சரித்து வந்தார்கள். மும்மாரி பெய்வதும் முப்போகம் விளைவதும் எங்கும் இயற்கையாய் விளங்கின. நீர் நிலைகளுக்கு எங்கெங்கிருந்து நீர் சேர்த்துப் பயிர்களுக்கு உதவச் செய்யலாமோ, அதற்கு ஏற்ற முயற்சிகளை யெல்லாம் அரசன் அனுமதி பெற்ற அதிகாரிகள் செய்ய லானார்கள். நகரங்களைக்காட்டிலும் கிராமங்களிலே திருவின் செல்வியும் கலையின் செல்வியும் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவதைக் காண்பது எளிதாயிற்று நகரங்களில் அவ்வப்பொழுது அவசியங் கருதி அறிவுடைப் பெரியார் பலர் கூடி உலகிற்குப் பொது நன்மைக்குதவும் அரும்பொருள்களை நூல்களாலும் உரைகளாலும் வெளியிட்டு வந்தனர். சங்கத்தார் ஆதரவும் அங்கீகாரமும் பெறாத எவ்வகை நூலும் நாட்டில் வழங்க இயலாமையால், எந்நாட்டுப் புலவரும் இந்நாடடைந்து, தம் செய்யுட்களின் சிறப்பைத் தமிழகத்துக்கு அறிவிப்பாராயினர்.

பாண்டிய நாட்டளவில் தன் ஆட்சி அடங்குவது பொருத்தம் இன்றென எண்ணித் தமிழ் வழங்கும் தென்னாடு முழுவதையும் அரசன் தன் ஆளுகைக்குள்ளடக்க முயன்றனன். சில சிறிய நாடுகளுக்குத் தன் சேனைத்தலைவரைப் பெருஞ்சேனையோடு அனுப்பினன். சென்றவிடமெல்லாம் வெற்றியே பெற்றுத் திரும்பிய சேனா நாயகர்க்கும் படைஞர்க்கும் ஏற்ற வரிசைகள் செய்தனன். வென்ற நாடுகளில் எல்லாம், முன்னிருந்த அரச பரம்பரையாரையே ஆள வைத்து அவர்களைத் தன்கீழ் அடங்கியிருக்கச் செய்தனன், கோல் கோடிய அரசர் இருந்த நாடுகளைக் கைக்கொண்டு, அவ் வரசுரிமைக்குரியார் எவரேனும் இருப்பராயின் அவர் அப்பதவி வகிக்கத் தகுதியுடையராவென வாராய்ந்து, அறிவுடைப் பெரியார் பலரை அமைச்சர்களாயமர்த்தி, அவர்கள் உதவியைக் கொண்டு அறநெறிக்கு மாறுபாடின்றி. அரசாள்கவென அமைத்தனன்; புலவருட் பெரியார் தமிழகத்துள் எந்நாட்டுள் வாழ்வோராயினும் தன்னாட்டுக்கு வருவித்து வாழ வைத்தான்; நாட்டில் பல விடங்களிலுமுள்ள சிவாலயங்களுக்கு அநேக கிராமங்களை மானியமாக விட்டு, அவ்வவ்வாலயங்களில் நித்திய நைமித்திகாதிகள் முறையே நடை பெறுமாறு வேண்டுவன செய்வித்தான். தமிழ் நாடு முழுவதும் தன்னையே அரசன் என்று கொண்டாடவும் தன் ஆணையே செல்லவும் செய்துகொண்டும் அவன் மனம் திருப்தியடையவில்லை. பயிற்சி பெற்ற படைஞர்க்கும் படைத்தலைவர்க்கும் இன்னும் கொஞ்சம் போர் வினை கொடுக்கவேண்டு மென்று விருப்பம் கொண்டும், தமிழ் நாட்டுக்கு வடக்கிலுள்ள பிற நாடுகளையும் அடக்கவேண்டும் என எண்ணம் கொண்டும் மேன்மேலும் சேனைகளைச் சேகரித்துத் திக்விஜயம் செய்யப் புறப்பட்டான். உரிய நாளிலே நல்லோரையிலே பெரியோர் ஆசீர்வாதமும் இறைவன் திருவருளும் பெற்றுத் தமிழ்நாட் டரசுரிமையை வகித்து வரும் பொறுப்பை அமைச்சருட் பெரியார் ஐவர் கையில் வைத்து வலிமிக்க சேனாதிபர் புடை சூழப் புலவர் பலர் உடன் வர, வடநாட்டுப் போர்க்கு உரிய கோலம் கொண்டு எழுந்தான். புலவர் பலர் நெருங்கி நின்று, ‘வேந்தே, வாழிய; வென்று மீளுக,’ என வாழ்த்தி நின்றனர்.

சேனைகளெல்லாம் முன்னே அணி வகுத்துச் சென்றன வழி செல்வோர் படைஞர்க்கு முன் சென்று காடுகளைச் சீர்திருத்தி வழியமைத்தும் நதிகள் முதலியவற்றைக் கடத்தற்குரிய சாதனங்களை அமைத்தும் சென்றனர். செந்தமிழ் நாட்டெல்லையைத் தாண்டி, வெகு விரைவில் கொடுந்தமிழ் நாடடைந்தனர். அங்குள்ள சிறிய குறும்பர்கள் திறைகளோடு வந்து வணங்கினர். சிறு நாடுகளுக்குத் தலைவர்களாயிருந்த அரசர்கள் தங்கள் அமைச்சர்கள் ஆலோசனைப்படி கடல் புரண்டெழுந்து வருவது போல வரும் பாண்டியர் படைக்குமுன் எதிர்த்து நின்று அழிவதைக் காட்டிலும் வணங்குவதால் வாழ்வதே மேலென அறிந்து, “வாழிய வெங்கோ மன்னவர் பெருந்தகை, ஊழி தொ றூழிதொ றுலகங் காக்க,” என்று பாண்டியனை வாழ்த்தி வணங்கினர் சில மாதங்கள் இவ்வாறு பல அரசர்களையும் தன் அடிப்படுத்திக்கொண்டு முன்னேறிச் சென்று கங்கைக்கருகில் உள்ள வடநாடடைந்தனன். மொழி பெயர் தேயத்தாராகிய ஆரியர் பலர் வாழ்ந்த அந்நாட்டை யடைந்த தமிழ் மறவர் தமது பண்டைப் புகழ் சிறக்குமாறு போர் செய்தனர் அரசனும் பின்னின்று ஊக்கியும் முன்னின்று நெறி செலுத்தியும் பெரும்போர் இயற்றினன். வடநாட்டு மன்னர் பலர் ஒன்று சேர்ந்து, “தென்னவன் ஒருவன் தன் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்து நம்மை வெல்வதா! சிங்கத்தை அதன் குகையிலேயே சிதற அடிப்பதா!” என்று கூறிக்கொண்டு, ஒன்று சேர்ந்து போரியற்றினர். எத்துணை மன்னவர் ஒன்று சேரினுமென்! வீரமும் வலியும் மிக்குப் பொலிந்தென்! வடவர் மடங்கினர்; தென்னவர் சிறந்தனர்; வெற்றித் திருவால் விளக்கம் பெற்றனர். இவ்வாறு வென்ற எல்லா மன்னரும் ஏற்ற வண்ணம் திறை யளக்கப்பெற்று அவரவர்க்குரிய நாட்டில் அவரவரை நிலைக்கச் செய்து, நல்லரசின் அமைதிகளை யெல்லாம் அவர்கட்கு நன்கு போதித்து, பாரத பூமியின் வடவெல்லையாகிய இமய வரையை அணுகச் சென்றனன் பாண்டிய மன்னன். வழிகளில் வென்ற மன்னரது உதவிப் படையும் பொருளும் விருதுகளும் பிறவும் பெற்றதால், பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டபோதிருந்ததைக் காட்டிலும் பன்மடங்கதிமாய் விருத்தி யடைந்திருந்த படையோடு இமய மலை அடைந்து, மலைச்சாரலில் சில நாள் தங்கிப் புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசித்து மகிழ்ந்து பாரத பூமி முழுவதையும் தன்னடிப்படுத்திய பெரு மகிழ்ச்சியோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டனன். திரும்புகாலில் வேறு வழியாய் வந்ததால் அங்கிருந்த சில நாடுகளையும் வென்று அடக்கித் தமிழ்க்கொடி பறக்கச் செய்தான். தமிழ்நாட் டெல்லைக்கருகில் நெருங்கி வந்துகொண்டிருக்கும் நிலையிற் சிற்றரசன் ஒருவன், இவன் செயலை நன்கு அறியானாய், அறிவுடையார் சொற்கேளானாய்த் தனது அரணை யடைத்து உள்ளிருந்தனன். அதனைக் கேட்ட பாண்டியன் புன்சிரிப்புக் கொண்டு, பின் வருமாறு விளம்பரங்கள் எழுதுவித்து, பறவைகளாலும் பிற உதவிகளாலும் அந்நாட்டிற் பரப்புவித்தான் :

“பசுக்களும், பசுப் போன்ற நல்லோராகிய அந்தணரும், பெண்டிரும், பிணியாளர்களும், பிதிர்களுக்குக் கர்மம் செய்தற்குரிய ஆண் மக்களைப் பெறாதவர்களும், தக்க காவ லிடங்களை நாடிச் சேர்க. நாங்கள் விரைவிலே அம்பு விடப் போகின்றோம்.”

இவ்விளம்பரச் செய்தியை அறிந்த குடிகள் தக்கவாறு ஒதுங்கினர். பிறகு பெரும்போர் நிகழ்ந்தது. பாண்டியன் வெற்றிவீரனாய் விளங்கினன். அவ்வரசனும் தன் அறியாமைக்கு வெட்கி வணங்கினன். அருளின் திறத்தை அறிந்த முதுகுடுமிப் பெருவழுதி அவனையும் அன்போடு ஆண்டனன். இவ்வாறு போர் நிறைவேற்றிப் பாண்டியன் தன் நாடு நோக்கித் திரும்பினன். குடி மக்கள் மகிழ்ச்சியின் மிகுதியால், பல நாளாகப் பிரிந்திருந்த மன்னவர் பெருந்தகையை மந்திரியோடு வந்து வரவேற்றனர். அவ் வமயத்தில் அமைச்சர் தலைவர், குடிகளின் சார்பாக அரசற்கு வரவேற்புபசாரம் கூறினர். அரசனுடன் கூடவே சென்று அவன் செய்த போர்களை யெல்லாம் கண்டு மகிழ்ந்த நெட்டிமையார் என்ற புலவர், பின்வரும் கருத்தமைய ஒரு பாடல் பாடினர்:

“பசுக்களும், பசுப்போன்ற இயல்புள்ள பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியாளர்களும், அன்போடும் சிரத்தையோடும் பிதிர் லோகவாசிகட்கு உரிய கருமங்களை இயற்றும் ஆண் மக்களைப் பெறாதவர்களும் விரைவிலே எம் அம்புகளை ஏவப்போகிறோம் தத்தமக்கேற்ற காவலிடங்களிலே போய்ச் சேர்க, என்று தர்ம மார்க்கத்தைச் சொல்லும் கொள்கையையுடைய வீரத்தாற் சிறந்து அரசுவாவின்மீது அமர்ந்து, வெண்கொற்றக்குடை கவிக்கப்பெற்று, மீனக்கொடிகள் ஆகாய வீதியில் நிழல் பரப்ப வருகின்ற எம் மன்னவன் வாழ்க; குடுமி என்ற பேராசன் வாழ்க. செந்நிறமுடைய பசும்பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய கடற்றெய்வத்திற்குரிய விழாவை நடத்திய நெடியோன் என்ற வழுதியர் பிரானால் அமைக்கப்பட்ட நன்னீர் நிறைந்த பஃறுளியாற்றில் உள்ள மணலினும் மிக்க எண்ணுள்ள ஆண்டுகள் வாழ்க.”

அச்செய்யுள் வருமாறு :

“ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.”[1]

இச்செய்யுளைக் கேட்ட அரசன் மேலும் மனம் பூரித்து, ஆரிய நாட்டிலிருந்து தான் கொணர்ந்த அரும் பொருள்களிற் சிலவற்றை அப்புலவர் பெருமானுக்குப் பரிசிலாக அளித்தனன்; அங்கிருந்த வேறு பல புலவர்க்கு யானைப் பரிசிலும், பாணர்க்குப் பொற்பூ நல்குதல் முதலிய சிறப்புக்களும் செய்தனன். அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்த நெட்டிமையார், அரசனைப் பழிப்பதுபோலப் புகழ்ந்து, பின்வருமாறு பாடினர்:

“பாணர் தாமரை மலையவும் புலவர்
பூங்தல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி?
இன்னா வாகப் பிறர்மண் கொண்(டு)

இனிய செய்திநின் னார்வலர் முகத்தே.”[2]

இச்செய்யுளைக் கேட்ட அரசன் மனம் பூரித்து, அப்புலவர்க்குச் சிறந்த தொருகளிறும் தேரும் நல்கி யுபசரித்தனன். அவரும் மேலும் மேலும் வாழ்த்தி மகிழ்ந்தனர். அரசன் பரிவாரங்கள் புடை சூழ அரண்மனை யடைந்தான் ; மங்கள கோஷங்களோடு அகம் புகுந்தான். தமிழ் மக்கள் எங்கும் சஞ்சரிக்க வேண்டுவன செய்தமைக்காக அவன் மன மகிழ்ந்து அரண்மனையில் தன் அந்தரங்க அறையிற் சிறிது இளைப்பாறலாயினன்.

III

ரசர் பெருமானாகிய பாண்டியன், பாரத பூமி முழுவதையும் தன் ஆளுகைக்குள்ளடக்கி, குமரி முதல் வடவிமயம்வரை ஒரு மொழி வைத்து உலகாண்டு வரும் நாளையில், பாணரும், கூத்தரும், விறலியரும், வயிரியரும், புலவரும், பிறரும் அவனிடம் பல திசைகளிலுமிருந்து வந்து தத்தமக்குரிய வரிசைகள் பெற்றுச் செல்வாராயினர். அவன் போரில் வென்ற நாடுகளையும் புலவர்க்கும் பிறர்க்கும் மனம் பூரிக்கக் கொடுத்தனன். நாடு அனைத்தையும் அடக்கி யாண்டும், கொடுக்கத்தக்கார்க்கு ஏற்ற வண்ணம் கொடுத்தும், இன்னும் தன் பிறப்பின் நோக்கம் நிறைவேற ஏதோ வொன்று குறையாய் நிற்பதாக அவனுக்குத் தோன்றியது: “அரசராவார் செய்தற்குரிய வினைகள் யான் செய்த இவையேயோ? இன்னும் வேறு யாவேனும் உளவோ? நாட்டிலே அமைதியை நாட்டினன்; கல்வியை வளர்த்தனன்; செல்வ நிலையைச் செழிக்கச் செய்துளேன்; அறிஞரை ஆயிரக் கணக்கில் நம், நகர் அடைவித்துளேன்; வேளாண்மையும் கைத்தொழிலும் என் இரு கண் மணியேபோலப் போற்றி வேண்டுவன செய்துளேன்; பகைவரும் கள்வரும் வன விலங்குகளும் நாட்டு மக்க ளுக்கு ஊறு செய்யும் வலிமை பெறா வண்ணம் அடக்கிவிட்டேன். யானும் என்னைச் சார்ந்தாரும் என் கீழ் அதிகாரம் வகிப்போரும் எவர்க்கும் எவ்வகைத் தீங்கும் இயற்றாது அற நெறி கடைப்பிடித்து அரசியற் குதவ வேண்டுவன செய்துளேன். அமைச்சரும் அறிவரும், புலவரும், படைஞரும், படைத்தலைவரும், பிறரும் செய்யும் உதவியால் எண்ணிய எண்ணமெல்லாம் நன்கு நிறைவேறியுள. இனி யான் செய்தற்குரியவை யாவை யுள என்பதே என் சிந்தையில் நிறைவதாம்,” என எண்ணினான்

இவ்வாறு அரசர் தலைவன் சில நாட்களாக எண்ணமிடுவதை அவன் முகக் குறிப்பால் அறிந்த புரோகிதர் தலைவர் அவனை அடைந்து, முக மலர்ச்சியோடு பின் வருமாறு கூறினர் :

‘அரசரேறே, சந்திர வமிச சூடாமணியே, நாடுகள் பல நம் நாட்டுக் கடங்கவும், மொழிகள் பலவும் நம் மொழிக் கடங்கவும், அரசுகள் பிற நம் அரசுக் கடங்கவும் செய்து, கீர்த்தியும் பிரதாபமும் சிறப்பப் பெற்றனை. நின் முன்னோர்கள் சென்ற நெறியில் நீயும் சென்று, அறம் பொருள் இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருளும் பெற்றாய். இனி அடைய முயலவேண்டுவதாயிருப்பது நான்காவது உறுதிப்பொருளே. அதனை அடையும் பொருட்டுச் சொல்லப்படும் பல வகைத் துறைகளும் நம் நாட்டில் அறிவுடையார் பலரால் நன்கு விளக்கப்பட்டுள. முக்கியமாக இறைவன் திருவருள் வசத்ததாகிய வேதத்திலே விதிக்கப்பட்ட மார்க்கங்கள் மூன்று. அவை கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், ஞானமார்க்கம் என்பன. கர்மமார்க்கத்தில் காம்ய கர்மம், நிஷ்காம்ய கர்மம் என்ற இரண்டு முறையிலும் பயின்று தேர்ந்து மனம் விடுதலைபெற்ற பிறகே ஞான மார்க்கத்தில் நுழையலாம். பக்தி மார்க்கம், இரண்டு வழிகளிலும் கலந்து அநேக ஜன்மங்களால் முயன்று பயனை அடைய உதவுவதாம். கர்ம மார்க்கம் மிகவும் கடினமானது. ஞானமார்க்கம் கர்ம வொழிவின் பிறகே வருவதாதலால், முன்னது முற்றிய பிறகே பின்னது வருதற்கு இடமுண்டு. கர்மங்கள், சத்கர்மங்கள் துஷ்கர்மங்கள் என இரு வகையாம். துஷ்கர்மங்களை யொழிக்கவே சத்கர்மங்களைப்பயில்கின்றோம். வேதத்திலே விதிக்கப்பட்ட குல முறை யறத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் நம் நாட்டு மக்கள் கர்ம முறையில் மிகவும் ஈடுபட்டவர்களாயுள்ளார்கள். ‘மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ் வழி’ என்பராதலால், அரசாங்கத்தை வகித்த காலத்தில் உன்னால் தெரிவிக்கப் பெற்ற உன் மனப்பான்மைக்குப் பொருந்திய தர்ம நிலையில் குடி மக்கள் வாழ்கின்றனர் நீயும் அசேர் தருமத்தை வேண்டுமளவு முறை கடவாது செய்துளை. அரசர் செய்தற்குரிய சிறந்த கர்மங்கள் வேறு சில உள. பல நாடுகளையும் நீ அடக்கி யாண்டு அரசர் பலரையும் அடிப்படுத்தியிருக்கின்றாயாகையால், ‘இராஜ சூயம்’ என்றதோர் யாகமும், அசுவமேதம் என்றதோர் யாகமும் செய்து, இந்நாள் வரை மண்ணில மக்களைத் திருப்திப் படுத்தியதுபோல விண்ணவரை மகிழ்வுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றாய். ஓதல், பொருதல், உலகு புரத்தல், படை பயிறல், ஈதல், வேட்டல் என்ற அரசர்க்குரிய அறுவகைத் தொழிலில் இந்நாள் வரை வேட்டல் ஒழிந்த ஐந்தே உன்னால் இயற்றப்பட்டு வந்துள. வேட்டல் என்ற தொழில் ஒன்றே விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் உள்ள தொடர்பை வளர்ப்பதாம். அவ்வருந்தொழிலையும் இயற்றி, அறுதொழிலும் இயற்றிய அரசனாக உன்னை ஆக்கிக் கொள்வதே உனக்குப் புகழும் பெருமையுமாம். சில நாட்களாக ஏதோ மனக் கவலை யுடையாய் என எண்ணத்தக்கவாறு தோன்றியதால், ஒரு குறையும் இல்லாத உனக்கு வந்த குறை யென்னவென்று நாங்கள் ஆராயலாயினோம். இனி ஏதோவொன்று இயற்றி நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் உன் உள்ளத்திலிருப்பதாகத் தோன்றுவதால் இவ்வுலக வாழ்வில் வேண்டிய வாழ்வெல்லாம் பெற்றுள்ள உனக்கு மேலுலக வாழ்வில் நாட்டம் உண்டாய் இருப்பது பொருத்தமே. அரசருள் உலகு மதிக்கத்தக்க புகழ் படைத்த நினக்கு. இராஜ சூயமும் அசுவமேதமுமே இயற்றவுரிய வேள்விகளாம். அவற்றை முறைப்படி நிறைவேற்றி வைக்க அறிந்த பெரியார் பலரை அயல் நாடுகளிலிருந்தும் நம் நாட்டின் உட்பகுதிகளிலிருந்தும் வரவழைத்து வேண்டுமாறு செய்யலாம்.”

புரோகிதர் தலைவர் பேசிய பேச்சுக்களைக் கேட்ட முதுகுடுமிப் பெருவழுதி அகமிக மகிழ்ந்து, “அந்தணர் தலைவரே, நீர் கூறியது பொருத்தமே. சில நாட்களாக என் மனத்தில் ஒரு கவலை யிருந்ததுண்மையே. என் முன்னோர் பொருட்டும் என் நாட்டின் க்ஷேமத்தின் பொருட்டும், வேதங்களில் விதித்த வண்ணம் இனி நான் செயற்குரிய யாகங்கள் எவையேனும் உளவோவென நான் எண்ணியதுண்டு. தேவரைத்திருப்தி செய்விப்பது அரசர் கடமைகளுட் சிறந்ததென்பதை யான் அறிவேன். நீவிர் கூறியது போல இராசசூயமும் அசுவமேத மும் இயற்ற முயல்வேன். அவ்வேள்விகள் இயற்று விக்கும் நெறி அறிந்தாரை இன்னாரென அறிந்துள்ள உம்மைக் கொண்டே நன்கு நடத்திக் கொள்வேன்,” என்று கூறினன்.

புரோகிதர் தலைவர் உடனே அரசனிடம் விடை பெற்று, அரண்மனையின் புறத்தே வந்து, அமைச்சரது மாளிகை யடைந்து, அமைச்சர் தலைவரிடம் அரசன் கருத்தைத் தெரிவித்தார். அவரும் சில நாளாக அவ்வுண்மையை ஒருவாறு அறிந்திருந்தாராகையால், அம் முயற்சி நிறைவேறுதற்கு வேண்டுவன செய்யத்தொடங்கினர். அமைச்சரும் புரோகிதரும் ஆலோசனை செய்து நாடெங்கும் வேள்வி செய்விக்கும் திறம் வாய்ந்த வேதியர்க்கு நிருபம் போக்கினர். சில தினங்களில் மதுரை நகரில் அறிவுடை யந்தணர் பலர் கூடினர். அரசனும் நிமித்திகரைக் கொண்டு நல்ல நாள் ஒன்று தீர்மானித்து, யாக சாலை அமைக்கத் தொடங்கினன். பல யாக சாலைகளும் அரசன் மனத்துக்குப் பொருந்த அமைந்த பிறகு நன் முகூர்த்தத்திலே அவற்றுட் சிறந்ததோர் யாகசாலையில், முதன் முதலில் அசுவமேதம் செய்யத் தொடங்கினன்.

உயர்ந்த இலக்கணங்கள் பலவும் அமைந்த குதிரை யொன்றை முகப் பட்டம் கட்டுவித்துப் பூப்பிரதக்ஷிணம் செய்ய அனுப்பினன். அப்பரியைப் பின் பற்றி அநேக வீரர் சென்றனர். பாரத பூமி முழுவதையும் சுற்றிச் சென்ற விடமெல்லாம் சிறப்புச் செய்யப்பெற்று அது திரும்பி வந்தது. யாக சாலையில் அந்தணர் கூட்டத்தோடு இருந்த அரசன் வேதமந்திரங்களைத் திருப்திகரமாக உரிய முறையிலே ஓதி, அக்குதிரையைக் கொண்டு முதன்மையான அந்த அசுவமேத யாகத்தை நிறைவேற்றினன். அது முடிந்ததும் சிவகங்கையாகிய வையை என்றபுண்ணிய நதியில் நீராடித் தக்கார் பலர்க்கும் பல வகைத் தானங்களும் தந்தனன். புலவர்க்கெல்லாம் அவரவர் தகுதிக்கேற்பப் பரிசில் பல வழங்கினன்.

பின்னர்ச் சில தினங்கள் சென்றதும் இராச சூய யாகம் ஒன்று நிறைவேற்ற முயன்றனன். அநேக அரசரையும் வென்று வந்திருந்தானாகையால், அவரனை வரும் அளந்திருந்த திறைகளைக் கொண்டு, வேதமுணர்ந்த அந்தணர் பலர் உதவியால், தான் அமைத்த பல யாக சாலைகளிலே இராச சூய யாகத்துக்கமைந்த இலக்கணம் அமைந்த ஒன்றில் இறைவன் திருவருளால் அவ்யாகத்தையும் இயற்றினன். அங்கும் புலவர்க்கும் பிறர்க்கும் அந்தணர்க்கும் அவரவர்க் கேற்ற வண்ணம் தருமமும் தானமும் வழங்கினன். அருகில் இருந்த புலவர் எல்லாம் இவ்வருஞ்செயல்களைக் கண்டு, அவனை வாயார மனமாரப் புகழ்ந்து வாழ்த்தினர். அரசரனை வரும் தன்னை வணங்க அவர்கட்கெல்லாம் தலைவன் என்ற பதத்தையும் பெற்றனன்.

இரண்டு யாகங்களை இவ்வாறு நன்கு நிறைவேற்றியதால் மனத் திருப்தி யடைந்த முதுகுடுமிப் பெரு வழுதி மேன்மேலும் அசுவமேத யாகங்கள் செய்யலாயினன். நிருமித்த பல யாக சாலைகளிலும் அசுவ மேதங்கள் நிறைவேறின. அந்தணரும் முனிவரும் அறிவரும் பிறரும் அவை நடைபெற வேண்டுமளவு உதவி செய்தனர். இச்சிறப்பை யெல்லாம் அருகிலிருந்தே அறிந்த அரசர் பலர், புலவர் பலர், பெரியோர் பலர் ஒருங்குதிரண்டு ஒருநாள் அரசனையணுகி அவனை மனமார வாயார வாழ்த்தினர். புலவருள் வயோதிகர் ஒருவர் எழுந்து, “இன்று முதல் எம் மன்னர் பெருமான், பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெரு. வழுதி என்று பெயர் பெறுக,” என்று எவரும் அறியக் கூறினர்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற அத்தமிழ் மன்னன் இக வாழ்வும், பர வாழ்வும், சிறப்பும் பெற்று இவ்வாறு வாழ்வதை அறிந்த புலவர் பலர் அவனருகடைந்து அவனைப் புகழ்வாராயினர். நெட்டிமையார் என்ற பெரும்புலவர், பின்வரும் கருத்தமைந்த பெரும்பாடல் ஒன்று பாடினர்:

“விரைவாகச் செல்கின்ற தேர்கள் குழித்த தெருவின் கண்ணே, வெள்வாய்க் கழுதைகளை ஏரிற் பூட்டி யுழுது பகைவர்களது அகன்ற இடமுள்ள, அரண்களைப் பாழ்படுத் தினை. நின் பகை நாட்டில் புள்ளினம் ஒலிக்கும் விளை வயல்களில் வெண்ணிறமான் தலையாட்டம் அணிந்த செருக்குமிக்க குதிரைகளின் கவிந்த குளம்புகள் பதியத் தேர் செலுத்தினை. அசையும் இயல்பும் பெரிய கழுத்தும் பரந்த அடியும் கோபமுள்ள பார்வையும் விளங்கிய கொம்பும் உடைய களிற்றை அப்பகைவரது காவல்மிக்க குளங்களிலே படிவித்தனை. அத் தன்மையுள்ள சினமும் அதற்கேற்ற செய்கையும் உடையாய். ஆகையால், ஒளிமிக்க இரும்பாற் செய்த ஆணியும் பட்டமும் அறைந்த கேடகத்துடனே பிரகாச மிக்க நெடுவேல் ஏந்திப் பகைவரது ஒளி மிக்க படைக்கலங்களைத் தாங்கி முன்னே விரைந்து செல்லும் உனது முன்னணியின் வலிமையைக் கெடுத்தல் வேண்டித் தம் ஆசை தூண்ட முன்வந்த பகைஞர்கள், அவ்வாசை பின் ஒழிய வசை பெற்று வாழ்ந்தோராயினர் பலரோ? குற்றமற்ற நல்ல தரும நூலிலும், நால்வேதத்திலும் சொல்லப்பட்ட அடைதற்கு அருமையான புகழ் மிக்க சமிதையும் பொரியும் கொண்டு நெய் மிக்க புகை மேல் எழும்பப் பலவகையாகிய சிறப்பு மிக்க யாகங்களை முடிக்கத் தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச் சாலைகள் பலவோ? இவற்றுள் யாவையோ பல? பெரும, புகல்வாயாக.”

செய்யுள்

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்

பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறுமருப்பிற் களிறவர
காப்புடைய கயம்படியினை
அன்ன சீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி யொன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவல் நால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வாருற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு

நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே.”[3]

புலவர் பெருமான் இவ்வாறு மனமுறப் புகழ்ந்து பாடிய பாடலை யேற்றுக்கொண்ட பாண்டியன் பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, அவர்க்குத் தக்கவாறு சிறப்புக்கள் செய்தனன். போர்க்களத்திலும் அவன் பெருமையைக்கண்டுணர்ந்த நெடும்பல்லியத்தனார் அவன் போர்ச் சிறப்பைப் புகழ்ந்தனர். நெட்டிமையார் அவன் யாகம் செய்த பெருமையைப் புகழ்ந்து மேலே காட்டிய பெரும்பாடலை இயற்றியது மற்றப் புலவரையும் அவனை மேலும் மேலும் புகழத் தூண்டியது. தானம் பெற்ற அந்தணர் எல்லாம் மனமுற வாழ்த்திச் சென்றனர். தேவரும் ஆவுதியால் மகிழ்ந்து புஷ்ப வருஷம் பொழிந்தது போல நாடெங்கும் மழை பொழிவித்தனர்.

பாண்டிய நாடெங்கும் தெய்வ மணம் கமழ்ந்தது. அரசருள் எல்லா வகை நற்குணங்களும் வாய்க்கப் பெற்ற அரசரைப் பெறுவது ஒரு நாட்டினர்க்கு முன்னைப் புண்ணியப் பயனன்றோ? அப்பயனைப் பெற்ற பாண்டிய நாட்டார் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை யுண்டோ? பஃறுளியாறு பாய்ந்த தென்கோடளவும் தன் நாட்டெல்லையைப் பரப்பிய பாண்டியன் பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி புரவலர் பணியவும் புலவர் புகழவும் தமிழெனும் மடந்தை தலை சிறந்தோங்கவும் நால்வகை வருணத்தாரும் தத்தம் நிலை வழுவாது காத்தலால் அறநிலை யறமும், நிரை மீட்டல் பகைவெல்லல் கடன் கழியாதாரைத் தண்டித்தல் என்ற முறை யால் மற நிலை யறமும், தத்தம் நிலைக்கேற்ப நாட்டவர் பெறும் பொருளை வளர்த்தலால் அற நிலைப்பொருளும், பகைவர் பொருள் திறைப்பொருள் தண்டப்பொருள் சூதர் பொருள் என்ற நால்வகைப் பொருட்பேற்றால் மற நிலைப் பொருளும், குலமும் ஒழுக்கமும் குணமும் பருவமும் ஒத்த பெண்டிரை மணந்து நாட்டவரை வாழச் செய்ததால் அறநிலை யின்பமும், இராக்கதமண மாதியவற்றை அனுமதித்ததால் மறநிலை யின்பமும் என்ற அறுவகை அரசியலும் நாட்டகத்தில் ஓங்கி விளங்கவும் செய்து வாழ்ந்து வந்தான்.

IV

“எம்மதத்தவரும் எந்நாட்டவரும் எந்நிலையினரும் இந்நாட்டில் அமைதியோடு வாழ்வெய்துக,” என்று அரசர் பெருமான் சாசனத்தில் தெரிவித்த வண்ணம் பாரதபூமி முழுவதும் நாஸ்திகராயினும், ஆஸ்திகராயினும், கர்ம யோகியராயினும், ஞான யோகியராயினும், தமிழராயினும், பிற மொழியாளராயினும் ஒருவர்க்கொருவர் மன வேறுபாடின்றி வாழ்ந்து வந்தனர். பாண்டியன் பல யாகங்கள் செய்ததால் மகிழ்வுற்ற தேவர் தலைவன், நாடெங்கும் அறம் வளருமாறு மழை பொழிவித்தான். புண்ணிய பூமி கர்ம பூமியென்று புகழப்பெறும் பாரத பூமியிலே வைதிகர் அவைதிகராகிய பல வகை மதத்தவரும் தத்தம் மதங்களைத் தமது வாக்கு வளத்தால் நாடெங்கும் பரப்பி வந்தனர். முத்தமிழ்ப் புலவரும் குமரி முதல் இமயம் வரையில் தம் அரும்பொருளை எத்தகையோரும் வாரிக்கொள்ள ஈந்து வந்தனர். நாடெங்கும் அமைதி பெருகியுள்ள காலத்திலே தான் நூலாராய்ச்சி செய்யவும் மத வாதம் செய்ய வும் இடமுண்டாகும்

பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேத விதிகளைப் பூரணமாய் நம்பிய அரசனாயினும், வேதத்திற்குப் புறம்பாகவுள்ள மதத்தினைக் கைக்கொண்டவர்களை வெறுத்தானல்லன்; வைதிகச் சார்புள்ள மதங்களிலும்தான் நம்பிய ஒன்றே சிறந்தது என்ற கருத்துக் கொண்டவனுமல்லன். ‘மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி,’ என்பராதலால், குடிகள் மத வாதங்கள் காரணமாக மனமாறுபாடு கொள்ளவில்லை. இவ்வாறு இருக்கும் நாட்களிலே, மதுரை நகரிலேயிருந்த பெரியதொரு மண்டபமாகிய பட்டி மண்டபத்தில், ஒரு நாள் எல்லா மதவாதியரும் கூடித் தத்தம் மதத்தைப்பற்றி விவகரிக்கலாயினர். பெரியதொரு திருவிழா நடப்பதுபோலப் பல்லாயிர மக்கள் அம்மண்டபத்திற் கூடினார்கள். அரசனும் பிரசன்னமாயிருந்தான். அறிவரும் அறிஞரும் புலவரும் துறவிகளும் ஆகிய பலர் அங்கு வந்து, தத்தமக்கு ஏற்ற ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் பல வகை வாத்தியங்களும் முழங்கின. பிறகு நிச்சப்தம் குடி கொண்டது. எல்லோரும் அரசன் முகத்தையே பார்ப்பாராயினர். அவன் பின்வருமாறு பேசினன் :

“பெரியோர்களே, இன்றே நன்னாள், நன்றே இந்நாள்! என் முன்னோர்கள் இப்பட்டி மண்டபத்தை நிருமித்த நோக்கமே இதுவாம். இந்நாட்டில் இக்காலத்தில் வழங்கும் மதங்கள் பலவாம். ஒவ்வொன்றையும் பற்றி வாழ்வோர் தொகையும் மிகுதியாம். எல்லா மதங்களுக்கும் அடி நடு முடிவு என்ற மூன்றும் ஒன்றே. இடையிலே தோன்றி விரிந்த கிளைகளே வேறுபாடுடையன என அறிஞர் கூறுவர். இங்கு நிறைந்திருக்கும் பல வகை மதத்தினரும் தத்தம் கொள்கைகளின் சாராமிசங்களைத் தெரிவிப்பாராகில், எல்லாவற்றிற்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்ந்துணர்தல் எளிதாகும். இவருள் நாஸ்திகரும் சிலர் இருக்கலாம்; ஆஸ்திகர் பலர் இருக்கலாம். எவரேயாயினும், தத்தம் கருத்தைச் சிறிதும் அச்சமும் கூச்சமுமின்றி வெளியிட்டுரைக்க வேண்டுகின்றேன். எல்லார் கொள்கைகளையும் கேட்டு அறிந்து இன்புற அறிவுடையார் பலரும் பொது மக்கள் எண்ணிறந்தாரும் இங்கே கூடியிருக்கின்றனர். அவரவர் பற்றியுள்ள கொள்கைகளில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை யறியவும், அந்நியர் கொள்கைகளின் உட்கருத்துக்களையும் ஒற்றுமைகளையும் அறியவும் இத்தகைய பட்டி மண்டபப் பிரசங்கங்களே சிறந்த வழிகளாம்; அரசர் பற்றிய மதமென்று கருதி எமது மதத்தைப்பற்றிப் பாராட்டவும், நாம் தழுவாமையால் மற்றவற்றை உண்மை யாராய்ந்து கண்டிக்காமல் இழித்துரைக்கவும் எவரும் முற்படலாகாது. உண்மையாராய்ச்சி யொன்றே நோக்கமாக எவரும் வாதம் செய்யலாம்.

“காய்தல் உவத்தல் அகற்றி மொருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்ற குணம்தோன்ற தாதம் உவப்பதன்கண்

தற்றழம் தோன்றக் கெடும்.”

என்று புலவர் பெருமக்கள் கூறிய உண்மை இங்குள்ள அறிஞர் பலரும் அறிந்ததே. இனி வாதங்கள் தொடங்கலாம்.”

சங்கங்கள் சிறிது நேரம் முழங்கின. வேறு பல இயங்களும் இயம்பின. பிறகு பலவகை மதவாதியரும் தத்தம் கொள்கைகளை விரித்துரைக்கலாயினர். வேதத்திற்குப் புறம்பாகவுள்ள சார்வாகரும் சமணரும் பௌத்தரும் முதற்கண் தம் கருத்தை வெளியிட்டனர். பிறகு மற்றவர் தம் கொள்கைகளை விளக்கி யுரைத்தனர்.

இனி மத வாதம் நிகழ்ந்தவாறு சுருக்கி யுரைக்கப்படும்:

சார்வாகர்:-“கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; பஞ்சேந்திரியங்களால் உணரும் உணர்ச்சியன்றி வேறொன்றிருப்பதாய் எண்ணுவது அறிவின்மையே. பிரத்தியக்ஷம் ஒன்றே பிரமாணம். இல்லாத ஒன்றைப்பற்றி ஊகிப்பதும் பிறர் சொல்லைக் கேட்டு நம்புவதும் குற்றமே. தெய்வம் என்பது உள்ள பொருளாய் இருந்தால், நம் கண்ணுக்குத் தோன்ற வேண்டும். எவரோ உண்முகப் பார்வையாற் கண்டார் என்று கூறுவதெல்லாம் மயக்கம், எல்லா இந்திரியங்களும் நன்கு இயங்கும் போது காணப்படாத பொருளை அவை அடங்கிய போது காண்பது என்று கூறுவது மலடி மகன் ஆகாயப் பூவைக் கொய்து முயற் கொம்பிலே சூட்டிய வண்ணமே யாம். வேறோர் உலகம் உண்டு என்பதும், இங்குள்ள இன்ப துன்பங்களின் பயனும் காரணமும் அவ்வுலகத்தில் அறியப்படும் என்று கூறுவதும் பிரத்தியக்ஷ சித்தமல்ல. இவ்வுலகில் உள்ள இன்பங்களை ஐந்து இந்திரியங்களாலும் வேண்டுமட்டும் அனுபவிப்பதே உயர் வாழ்வு. அவ்வாறு இன்புறாது வருந்திக் கழி வதே இழிவாழ்வு. இவற்றின் வேறாக வாழ்வு தாழ்வுகள் இங்கும் எங்கும் இல்லை. பிறந்தவன் வாழ்வும் தாழ்வும் அவன் இறப்போடு ஒழிந்தன. அதற்குமேல் ஒன்றும் இல்லை.”

சமணர்:–“வாலறிவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன், அறவாழி யந்தணன், எண் குணத்தான் என்ற சிறப்புப் பெயர்களைத் தனக்கு உரிமையாய்க் கொண்டவனும், எல்லாக் கர்மங்களையும் வேருடன் களைந்தவனுமாகிய ஜிநேந்திரனைத் தெய்வமாய்க் கொண்டதும், நவ பதார்த்தங்களைக் கொண்டதும் எங்கள் கொள்கையாம். ஸம்ஸாரம் என்ற கொடிய நோயை ஒழித்து, மோக்ஷம் என்ற ஆனந்தத்தைப் பெற முயல்வதே ஜீவனது கடமை. அதற்கு வழி, தூய காட்சி, தூய அறிவு, தூய ஒழுக்கம் என்ற மும்மணிகளே, இம்மூன் றில் ஒன்றும் தனித்து நின்று பயன் தரவல்லதன்று. இம்மூன்றும் ஒன்று சேர்ந்தே உயர்ந்த பயனை அளிக்க வல்லவையாம். நோயாளிக்குத் தன் பிணிக்கு மருந்துண்டு என்ற நம்பிக்கையும், மருந்தின் தன்மையைப்பற்றிய அறிவும், மருந்தை உட்கொண்டு பத்தியம் அனுசரிக்கும் ஒழுக்கமும் இருந்தாலன்றி அவன் நோய் நீங்கிச் சுகம் பெறுதலாகிய பயனை யடையான். ஆகையால், இந்த மும்மணிகளையும் மோக்ஷ மார்க்கம் எனக் கொண்ட எங்கள் மதம் கேவலம் பக்தி, ஞானம், ஒழுக்கம் என்ற மூன்றில் ஒவ்வொன்றே வழியாம் என்று கொண்ட பிற கொள்கைகளைக்காட்டிலும் சிறந்ததாம்.”

பௌத்தர்:–“புத்ததேவர் எங்கள் மத ஸ்தாபகர். இவர் ஜீவகாருண்யமே ஸ்வரூபமாயுள்ளவர். பல்வகைப் பிறவிகளிலும் பிறந்து, அவ்வப்பிறவிகளில் ஜீவர்களுக்கு உள்ள சுக துக்கங்களை அளந்து அறிந்தவர்; தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; அருளறம் பூண்டவர்; அறக்கதிர் ஆழி திறப்பட வுருட்டிக் காமனை வென்ற வாமர். துக்கங்களை ஒழித்து நிர்வாணம் பெறுதலே எங்கள் முக்கியக் கொள்கை. புத்த சரித்திரமும் பௌத்த தர்மமும் பௌத்த சங்கமும் எங்களுக்கு மும்மணிகளாம். புத்தரையும் புத்த தர்மத்தையும் சங்கத்தையும் தியானம் செய்வதே முக்கிய மந்திரமாம். நிர்வாணம் அடைய வேண்டின், துக்கம், துக்கோத்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற நான்கையும் அறிய வேண்டும். பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்ற பன்னிரண்டு சார்பையும் அறிய வேண்டும். பிறப்புக்குக் காரணம் அவாவும் பற்றும் ஆகையால், அவற்றை யொழிக்கத் துறவு பூண்டலும் பல பிறவிகள் பிறந்து கருமக் கட்டறுத்தலும் துறவுள்ளத்தால் மெய்யுணர்வு பெற்று நிர்வாணம் எய்து தலும் எங்கள் நோக்கங்களாம்.”

வைதிக மார்க்கப் பிரமாண வாதி:– எமக்கு உரிய பிரமாணங்கள் பத்தாம்: வேறு விதமும் கூறுவர்: அவை பிரத்தியக்ஷம், அனுமானம், உவமானம், ஆகமம், அருத்தர்பத்தி, ஸ்வபாவலிங்கம், ஐதிஹ்யம், அபாவம், பாரிசேஷம், சம்பவம் என்ற பத்தாம். பிரத்தியக்ஷம் ஐம்புலவறிவால் உணர்ந்த இன்ப துன்பங்கள் அடையுநிலை; அனுமானம், பொது எச்சம் முதல் என மூவகைப்படும். பொதுவென்பது, காட்டில் யானைப் பிளிற்றொலி கேட்டு யானையுண்டு என அறிதல். எச்சம் என்பது, வெள்ளம் வருவதைக் காண்பதால் மழையுண்டு என அறிதல். முதல் என்பது, கருக்கொண்ட மேகத்தைக் கண்டு இது மழைபெய்யும் என்பது. இவ்வாறு கண்டவொன்ரைக் கொண்டு காணாப்பொருளின் உண்மையை ஊகித்துணர்வது அனுமானமாம். உவமானமாவது, ஒன்று போல ஒன்று இருப்பதால் உணர்தல். ஆகமப் பிரமாணம், ஆப்த வாக்கியமாகிய வேத சாஸ்திரங்களிற் கூறப்பட்டிருப்பவற்றை நம்புதல், அர்த்தாபத்தி, கங்கையின்கண் இடைச்சேரி என்றாற் கங்கைக் கரைக்கண் இடைச்சேரி என்று உணர்தல். ஸ்வபாவலிங்கம் என்பது யானையின் மேலிருப்பவன், ‘ஒன்று தா,’ என்றால், தோட்டியைத் தந்து உதவுதல் போல உள்ள இயல்பாம். ஐதிஹ்யம் என்பது, உலகத்தார் பேச்சு. ‘இம்மரத்திலே ஒரு பேய் உண்டு,’ என்று உலகினர் கூற, பலர் அஃது உண்டெனத் தெளிதல் போலாம். அபாவம் என்பது, ஒரு பொருள் இல்லை யென்று உணர்தல். பாரி சேஷம் எனப்பட்ட மீட்சி யென்பது, “இராமன் வென்றான் என்றால், இராவணன் தோற்றான் என்று அறிதல் போல்வது. சம்பவம் என்பது, இரும்புக் கம்பியின் சலனத்தால் காந்தம் அடையப்படும் என உணர்தல் போல்வது. இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் என்பதும் இதுவே. இனிப் பிரமாணாபாசங்கள் எட்டு உள. அவை சுட்டுணர்வு, திரியவுணர்தல், ஐயம், தேராது தெளிதல், கண்டுணராமை, இல்வழக்கு, உணர்ந்ததை யுணர்தல், நினைப்பு என்பன. சுட்டுணர்வு என்பது, எல்லாப் பொருளையும் உள்ள வளவில் அறிதல். திரிபுணர்ச்சி என்பது, இப்பியை வெள்ளி யென்று உணர்தல் போல்வது. ஐயம் என்பது, ‘தறியோ! மகனோ!’ என்று நிச்சயமற்ற உணர்ச்சி பெறுதல். தேராது தெளிதல் என்பது, வெட்ட வெளியில் தறியை மகன் என்றெண்ணல். கண்டுணராமை என்பது, புலி முதலியவை வந்தும் அறியாதிருப்பது போல்வது. இல் வழக்கு என்பது, முயற்கோடு என்று ஒரு பொருள் இல்லையாயினும், சொல்லளவால் உணர்தல். உணர்ந்ததை யுணர்தல் என்பது, பனிக்குத் தீச்சேர்ப்பது மருந்தாம் என்று எண்ணல் போல்வது. நினைப்பு என்பது, காரணம் அறியாமலே நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று பிறர் கூறக் கேட்டு அறிதல் போல்வது லோகாயதர், பௌத்தர், சாங்கியர், நையாயிகர், வைசேடிகர், மீமாஞ்சகர் என்போர் கொண்ட பிரமாணங்கள் பிரத்தியக்ஷம், அனுமானம், சாப்தம், உபமானம், அர்த்தாபத்தி, அபாவம், இவையே லோகாயதர் பிரத்தியக்ஷம் ஒன்றே கொள்வர். பௌத்தர் பிரத்தியக்ஷமும், அனுமானமும்; சாங்கியர் பிரத்தியக்ஷம், அனுமானம், சாப்தம் என்ற மூன்றும், நையாயிகர் உபமானத்தொடு நான்கும்; வைசேஷிகர் அர்த்தாபத்தியோடு ஐந்தும்; மீமாஞ்சகர் அபாவத்தோடு ஆறும் கொள்வர்.”

சைவ வாதி:- “சூரியன், சந்திரன், பிராணன், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற எட்டு வகையும் உயிரும் உடம்புமாய் அமைந்திருப்போனும், சாஸ்திரங்களே உருவமாக உடையவனும், உயிர்களைப் படைத்துக் காத்துத் துடைத்து விளையாடும் பரம்பொருளும், தன்னின் வேறாகப் பொருள் ஒன்று இல்லாதவனும் ஆகிய சிவபெருமானே இறைவன். அவனைவணங்குதலாற் பசுக்களாகிய ஜீவர்கள், பாசம் ஒழிந்து, அவன் அருள் வயப்படுவார்கள். அதுவே வீடு வீடாமே.”

பிரமவாதி:- ‘உலகமெல்லாம் தேவன் இட்ட முட்டை. அவனே தலைவன்.’ வைணவவாதி:— ‘உலகமெல்லாம் நாராயணன் காவலுள் அடங்குவது.’

வேத வாதி:— ‘கற்பகம், கை; சந்தசு, கால்; சோதிடம், கண்; நிருத்தம், செவி; சிக்ஷை, மூக்கு; வியாகரணம், முகம்; இத்தகைய உருவம் உடைய அநாதியாய வேதமே தெய்வம்.’

சாங்கிய வாதி:—“யாகாதிகளைச் செய்வது ஸம்ஸார துக்கத்தை யொழிக்கக் காரணம் ஆகாது. துக்கம் நீங்கிச் சுகம் பெறும் வழி தத்துவ ஞானம் ஒன்றே. தத்துவங்கள் இருபத்தைந்து. மூலதத்வம் பிரகிருதி. பிரகிருதி நித்தியம், அதன்கண் முக்குணங்களும் ஒரு நிகராய் இருக்கும். பிரகிருதி ஒருவர் படைப்பன்று; அசேதனமாம், மற்றத் தத்துவங்கள் இதிலிருந்தே பிறந்தன, அவையும் அசேதனமே, இவையன்றி நித்தியமாகவும் சேதனமாகவும் செயலற்றதாகவும் உள்ள புருஷன் என்ற ஒரு தத்துவம் உண்டு. புருஷதத்துவம் எண்ணற்றது. எல்லாச் செயல்களும் பிரகிருதி சம்பந்தம் உடையவையேயன்றிப் புருஷ சம்பந்தம் உடையவையல்ல. கேவலம் சேதனமயமாய் உள்ளது ஆத்துமா. சுக துக்கங்களில் அதற்குச் சம்பந்தம் இல்லையாயினும், இருப்பது போலத் தோன்றுகிறது. இவ்வாறு சேதன ஸ்வரூபியான புருஷன், அசேதனப் பிரகிருதியைப் பற்றிக்கொண்டு, கர்ம பந்தத்தில் உழலும் நிலையிலிருந்து விலகுவதே மோக்ஷம். பிரகிருதியும் புருஷனும் ஈஸ்வர சிருஷ்டியல்ல வாகையால், பிரகிருதியி லிருந்து தோன்றிய உலகமும் உயிர்களும் ஈஸ்வர சிருஷ்டி யல்லவென்பதே சித்தாந்தம். ஈஸ்வரன் என்ற ஒன்று இருக்க இடமில்லை.”

யோகி:—“யோகம் எட்டு அங்கங்களை யுடையது. அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியா ஹாரம், தாரணை, தியானம், சமாதி என்பன. இவற்றை முறையறிந்து பயில்வதால், எட்டு வித விபூதிகளும் பலிக்கும். அவற்றால் மயங்காமல் மேல் நோக்கிச் சென்றால், ஸர்வ ஸங்க விமுக்தனாகி ஆத்ம ஸ்வாதந்தர்யம் கிடைக்கும். அதுவே மோக்ஷம்.”

நையாயிகர்:– ‘தர்க்க முறைகளைக் கொண்டு உண்மை யுணர்வதால் பல பொருள்களையுடைய உலகமும் ஜீவர்களும் படைக்கப்பட்டனவாகத் தோன்றும் என்றும், படைப்புக்குரிய கர்த்தா ஈஸ்வரன் என்றும், பரமாணுத் தொகுதியிலிருந்து உலகை அமைத்தலும் கர்மம் காரணமாக ஜீவர்களுக்குச் சரீரம் அளித்தலும் அவன் செயலாம் என்றும், சரீரமும் உலகமும் மூல பரமாணுக்கள் ஆகச் சிதறிவிடுதல் அழிவு என்றும், இவை தோன்றி மறையக் காரணமாய் உள்ள அணுக்களும் ஜீவ ராசிகளும் நித்தியமாம் என்றும் நாம் உணர்ந்திருக்கின்றோம்.’

வைசேடிகர்:-‘திரவியம், குணம், கர்மம், சாமான்யம், விசேஷம், சமவாயம் எனப் பதார்த்தங்கள் ஆறு, திரவியம் என்பன, குணமும் தொழிலும் உடையனவாய் எவ்வகைப் பொருளுக்கும் காரணமாய் உள்ள ஒன்பதாம். மண், நீர், தீ, வளி, ஆகாயம், திசை, காலம், ஆன்மா, மனம் என்பன அவை. இவற்றுள் மண் ஐந்து புலனுமுடையது. மற்றவை ஒவ்வொன்று குறைவாக உடையன. பொருளின் குணங்கள் பல வகையாம். பொருளும் குணமும் கருமத்தைச் செய்தற்கு உரிமையுடையன. பொருளின் பொதுத்தன்மை சாதலும வாழ்தலுமாம். பொருள் அணுக்களின் கூட்டம். அது குணியாம். மற்றவை எமக்கும் கையாயிகர்க்கும் பொதுவே.’

பூத வாதியர்:–“ஆத்திப் பூவும் கருப்புக் கட்டியும் கலந்து மேலும் கூட்டற்குரியவற்றைக் கூட்டினால், மதுவின் மதசக்தி தோன்றுவது போல, ஐந்து பூதங்களின் சேர்க்கையால் அறிவு உதிக்கும். பூதங்கள் பிரிந்தால், அறிவும் ஒழியும் உயிரற்ற உணர்வில்லாத பூதமும் உயிருள்ள உணர்வுள்ள பூதமும் அவ்வப்பூதங்களின் வழியிலே பிறந்து வளர்ந்து பிரிந்து அழியும். இதுவே உண்மை. இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறவியிலேயே காணல் உண்டு. மறுமை ஒன்று உண்டாய் வினைப் பயன் துய்த்தல் என்பது பொய்யே.”

மீமாஞ்சகர்:- “நித்தியம், அபௌருஷேயம் எனப்பட்ட வேதங்களை ஓதித் தர்மம் யாதென ஆராய்ந்தறிலே நமது முதற் கடமை. தர்மம் என்பது வேதத்தில் சொல்லப்பட்ட யாகாதிகளைச் செய்தலே. விரும்பப்பெறும் பலனுக்கேற்றவாறு கர்மத்தைச் செய்ய வேண்டும். தர்ம முறைப்படி, கர்மம் செய்தால், அபூர்வம் என்ற அதீந்திரிய சக்தி ஒன்று பிறக்கும். இதனுதவியால் ஜீவனுக்கு இஷ்டப் பிராப்தி ஆகும். அந்தமாகவும் விவிதமாகவும் வெவ்வேறாகவும் நித்தியமாகவும் உள்ள ஜீவ ராசிகளுக்குத் தர்மமே கர்த்தவ்யமாம். ஒவ்வொரு ஜீவனும் ஈஸ்வரானுக்கிரகம் எதிர் பாராமலே கர்மப்பயனாகக் கதி வேறுபட்டு மோக்ஷ சாம்ராஜ்யம் அடையலாம்.”

வேதாந்தி:–“நித்தியப் பொருள் ஒன்றே. அஃது ஆத்துமா என்பது. நீ நான் என்ற வேற்றுமை யுணர்ச்சியும், பரமாத்துமா ஜீவாத்துமா என்ற வேற்றுமை யுணர்ச்சியும் அஞ்ஞானத்தால் ஆவன. ஞானம் உதயமானதும், ஒன்றே உண்டு என்பதும், அஃது ஆத்துமாதான் என்பதும் விளங்கும். பிரம்மம் என்பதும் அதனை அறிபவன் அறிவு என்பதும் வெவ்வேறெனக் கொள்வது மயக்கமாம். ஒரு பொருளே சத்து, சித்து, ஆனந்தமாய் விளங்குவது. அது குணங்களற்றது; குண சம்பந்தத்தால் மயங்கிய நிலையில் ஜீவ ஸ்திதியில் உள்ள நம்மால் அறியப்படாதது. மாயை ஒழிந்து ஆத்தும ஸ்திதி யடையும்போது உண்மை விளங்கும். தோன்றும் பொருள்களைப்பற்றி உண்மை யாராய்ந்தால் அன்றி இந்நிலை கிட்டுவது எளிதன்று பரிசுத்தாத்துமாவாகிய பிரம்ம வஸ்து, மாயா சம்பந்தப்பட்டு இயற்கைக் குணம் மாறும்போது ஈஸ்வானாவன். ஈஸ்வரனே சிருஷ்டி கர்த்தா. இது சகுணப் பிரம்மம் சரீரங்களில் அகப்பட்டிருக்கும் ஆத்துமா, தன் சுய நிலை மறந்து மயங்கிய வாழ்வினின்று நீங்கி உண்மை யுணர்ந்து, ‘நானே பிரம்மம்’ என்று உணர்வதே மோக்ஷம். ஈஸ்வர ஸ்தோத்திரம் செய்தலும், யாகாதிகள் செய்தலும், வியாவஹாரிக தசையில் பொருத்தமே; பாரமார்த்திக தசையிற் பொருந்துவனவல்ல. சகுணப் பிரம்மமாகிய ஈஸ்வரனும் கற்பிதனே யாகையால், அழி வுடையவனே. ஆகையால், ஆனந்த மயமாகிய அத்விதீய பிரம்மத்தை அறிந்து, அது தானேயாக இருக்கும் நிலை அடைய முயல்வதே இம்மதத்தின் முக்கிய நோக்கம். இதுவே மோக்ஷ மார்க்கம்.”

அறிஞர்களாகிய பலவகை மதவாதியர்களும், இவ்வாறு தத்தம் கொள்கைகளை விளங்கவுரைத்த உண்மைப் பொருளுரைகளை அமைதியோடும் முக மலர்ச்சியோடும் கேட்டுக்கொண்டிருந்த பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆனந்த மேலீட்டால் தனது ஆதனத்தினின்று எழுந்து நின்று, அறிஞர்க் கெல்லாம் உபசாரம் செய்வித்துப் பின் வருமாறு பேசினன்:

“அன்பர்களே, அறிஞர்களே, பல வகை மதங்களிற் பற்றுக் கொண்ட புண்ணிய சீலர்களே, நீவிர் பேசிய பொருளுரைகளால் யான் அறிந்துகொண்ட உண்மைகள் பலவாம். பிரத்தியக்ஷம் ஒன்றையே பிரமாணமாய்க் கொண்ட சிலரை யொழிய, மற்றவர் எல்லாம் நாட்டுக்கு நன்மைவிளைப்போரே. பிரத்தியக்ஷப் பிரமாணம் கொண்டவர்களும் நாட்டுச் சட்டங்கட்கு உட்பட்டுத் தரும நெறி பிறழாது நடக்கும்வரையில் நமக்கு அவர்கள் மேற் பகை கொள்ள உரிமையில்லை. ஆயினும், அவர்களே மேலும் மேலும் உண்மையை ஆராயக்கூடிய அறிவாளர்களாகையால், இந்நிலையிலேயே நிற்பார்கள் என நான் நினைக்கவில்லை. பொது வகையில் மனிதன் தன்னிலும் உயர்ந்ததொரு பொருளைத் தேடி அறிய முயல வேண்டுவதேன்? தன்னையும். தன்னைச் சுற்றியுள்ள உலகங்களையும் உயிர்களையும் அவன் பார்த்ததும், காரணப்பொருளாக ஒன்று இருக்க வேண்டும் என அறிவால் ஆராய்ந்தறிய நேர்ந்தது. அவரவர் அறிவின் அளவுக்கேற்ப ஆராய்ச்சியும் உண்மையுணர்ச்சியும் தோன்றலாயின. அதனால், மதங்கள் பலவாயின. உலகில் வாழும் நிலையில் தருமம் அதருமம் என்ற நெறியை உணர்ந்து, நன்னெறியிற் செல்லும் பொருட்டுத் தூண்டுவது ஒவ்வொரு மதத்துக்கும் முக்கிய நோக்கமாம். இந்நோக்கம் நிறைவேறுமாயின், நாஸ்திக மதமும் நாம் விரோதிக்கத் தக்கதன்று, எவரெவர் கொள்கை எவ்வெந்நிலையில் இருந்தாலும், ஒரு பெரிய நாட்டின் குடிகள் என்ற நிலையிலும் மக்கட்டொகுதியில் ஒரு பெரும்பகுப்பினர் என்ற நிலையிலும் நாம் அனைவரும் ஒரே எண்ணம் உடையவர்களாய் நல்வாழ்வுபெற நாட வேண்டுவதே நம் கடமையாம்.”

அரசர் பெருமான் பேசி முடிந்ததும், அரசவைப் புலவர் தலைவர் எழுந்து நின்று, பின்வருமாறு பாடினர் :

ஒன்றோ பலவோ வுளதோ விலதோ
எனவே யெவரும் எய்யாப் பொருளின்

உண்மை நிலையினை யுய்த்துணர் கருத்தாற்

பெரியார் பலர்பலர் பொருளுரை செவிக்கொளப்
பட்டிமண் டபத்துப் பாங்குற வடைந்தருள்
பல்யாக சாலைப் பாண்டிய மன்னன்
முதுகுடுமிப் பெருவழுதி முறைசேயூஉப் புரக்கும்
பழந்தமிழ் நாடும் பாரத தேயமும்
அறமும் அன்பும் அருளும் மெய்ம்மையும்
நாற்பெருஞ் செல்வமா நயமுறப் பெற்று
நல்லோர் உறையுளாய் நாடா வளத்தவாய்

வாழிய வாழிய வாழிய வூழியே.
இதனுடன் அன்று பட்டி மண்டபத்தில் நிகழ்ந்த மதவாத சபை நிறைவேறியது. அரசரும் பிறரும் தத்தமக்குரிய வாகனங்களில் இவர்ந்து தத்தம் இருக்கைகள் எய்தினர்.

V

புலவராற் பாடப்படுவது அரசர்க்குப் பெருமையாகும். இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளக்கும் இயல்பு வாய்ந்த நல்லிசைப் புலவர் வாக்கால் ஒரு செய்யுளேனும் பெறுவது, தமிழ மன்னர்க்கும் வள்ளலர்க்கும் மிகவும் உவப்புக்குரியதாயிருந்தது. ஆயிரக் கணக்கான புலவரை ஆதரித்துத் தமிழணங்கின் திருக்கோயிலாகிய தமிழ்ச்சங்கத்தைப் பரிபாலித்த பாண்டியமன்னர் பரம்பரையிலே பிறந்த பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வியல்பு வாய்க்கப்பெறாதிருப்பானோ? முன்னே இரண்டொருமுறை நெட்டிமையாரும் நெடும்பல்லியத்தனாரும் பாடியருளிய பாடல்களை அவன் விருப்போடு சூடி, அவர்களை அன்போடு உபசரித்த செய்தியைக் கேட்டோம். வேறு பல புலவரும் இவ்வாறு எண்ணிறந்த பாடல்களைப் பாடிக்கொண்டு வந்து, அவனைக்கண்டு பரிசில் பெற்றுச் சென்றனர்.

இவ்வாறு இம்மன்னர்பிரான் புலவர்க்குப் புரவலனாக இருப்பதைப் பற்றிக் காரிகிழார் என்ற வேளாளப் புலவர் ஒருவர் செவியுற்றார். அவர் செவ்விய இனிய சிறிய சொற்களால் அரும்பொருள்களை அமைத்துக் கவி செய்வதிற் சிறந்த அனுபவம் உடையவர்; உண்மையை உள்ளவாறுரைக்கும் உறுதி படைத்தவர்; வாழ்விலும் தாழ்விலும் மாறாத மன மாண்பினர்; நாடெங்கும் சஞ்சரித்து, நல்லோர் பலர் கூட்டுறவுபெற்று, நற்குணங்கட்கெல்லாம் நிலைக் களமாய் இருந்தவர்; புலமையின் சிறப்பை உலகறியச் செய்யும் வறுமையும் தம் உரிமையாய்ப் பூண்டவர்; இறைவன் திருவருள் வயத்தால் இன்ப துன்பங்கள் எய்துவனவென்று எண்ணி எவர்க் கும் தெய்வத்திறத்தை அறிவிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்; வேதங்களையும் வேத வொழுக்கத்தையும் அதனைப் பின்பற்றி யிருப்போரையும் பெரிதும் புகழ்ந்து போற்றும் இயல்பினர். இத்தகைய பெரியார், ஒருவரையேனும் வறிதே புகழும் தன்மை யின்மையால், புகழ்தற்குரிய குணங்கள் வாய்ந்தவனாகிய பல்யாகசலை முதுகுடுமிப் பெருவழுதியை அடைந்தார்.

புலவருட் பெரியாராகிய காரிகிழார் வருகையைச் செவியுற்ற அரசர்பிரான் அரண்மனையின் ஒரு பகுதியாகிய புலவர் அவைக்களம் அடைந்து, தகுந்த ஆதனத்தில் அமர்ந்து, அங்கு முன்னே வந்தமர்ந்து நூலாராய்ச்சி செய்துகொண்டிருந்த அறிஞர் பலராலும் வாழ்த்தப் பெற்றான். இந்நிலையில் புரவலனும் பிற புலவரும் புலக்களத்தில் அமர்ந்திருக்கும்போது உரியவரால் வழி காட்டப்பெற்றுக் காரிகிழார் அங்கு வந்தார். அரசன் அவர்க்கு நல்வரவு கூறித் தனக்கு அருகிலிருந்ததோர் ஆதனத்தை அளித்தனன். ஆங்கிருந்த பிற புலவர்களும் அவரை முக மலர்ச்சியோடு வரவேற்றனர்.

பாண்டியன் முகலர்ச்சியோடு அவரை நோக்கி, “பெரியீர், தமிழ்ச்செல்வத்தை எம் போன்றார்க்கு உதவும் பெருந்தகைமை வாய்ந்த வள்ளலராகிய நும் போன்றாரைக் காணக் கிடைப்பதே எமது பாக்கியம். நுமது வரவு நல்வரவாகுக. செல்வத்துட் செல்வமாகிய செவிச் செல்வத்தை நும்போன்ற பெரியாரிடமன்றி வேறு எங்குப் பெறலாகும்? தமிழணங்கின் தவப்பேறே, வரந்தர வந்த செல்வமே போல வந்த நுமக்கு என்ன உபசாரம் கூற வல்லோம்?” என்றான்.

காரி கிழார் வணக்க வொடுக்கமாகத் தம் ஆதனத்தருகில் எழுந்து நின்று கொண்டு, இரு கரங்கூப்பி அர சனைவணங்கி, “மன்னர் ஏறே, செந்தமிழ்ப்புலவர் செஞ்சொலமுதுக்குச் செவியினை நல்கிய செழியர் பிரானே, பொதியப்பொருப்பின் புகழொடுபொருந்திய புண்ணியர் குடியிற் பூத்த புரவல, இரவலராகிய எம் போல்வார்க்குப் புரவலன் எனவும் தமிழணங்கின் திருத்தளியை அமைத்தோர் வழித்தோன்றல் எனவும் வேள்விகள் பல செய்து விண்ணவரையும் மண்ணவரையும் மகிழ். வித்தவன் எனவும் பிறராற் கேள்வியுற்று நேரிற் கண்டு இன்புறலாமென அணுகினேம். தழிழ்ப் பணி பூண்ட பெரியார் பலர் பிறந்த குடியிற் பிறந்துளோம் என்றதொரு பெருமை எமதாம். அத்தகையார் பலரை ஆதரித்தார் வழி வந்த பெருமை உனதாம். ஆகையால், இறைவன் திருவருள் கூட்டி வைக்க இங்கடைந்தோம். நாட்டின் நலத்தின்பொருட்டும் உலக வாழ்வின் உயர்ச்சியின் பொருட்டும் அறம் வளர்ந்து மறம் தள ரும்பொருட்டும் நினது செங்கோல் செழிப்பதாக,” என்று கூறி, ஆதனத்தமர்ந்தார்.

பாண்டியன் புலவரை நோக்கி, “பெரியீர், நுமது வாழ்த்துரை இறைவனருளால் இந்நாட்டுக்கு நன்மை பெருக அமைவதால், அஃது எந்நாட்டுக்கும் நன்மை விளைக்கும் எனக் கொள்கின்றேன். நும்மைப்போன்ற சான்றோர் வாக்காற் செய்யுள் பெறுவது எம் குடிக்குப் பெருமை யன்றோ? வாழ்த்துரை செய்யுளாயமையுமாயின், உலகம் உள்ளவளவும் அழியாதன்றோ ? நல்லோர்கள் வாக்கால் வாழ்த்தப் பெறுவது நாட்டுக்கும். உலகத்துக்கும் நன்றே யன்றோ ?" என்று கூறினன்.

VI

காரி கிழார் மறு முறை யெழுந்து, வாழ்த்துதற்கேற்ற வண்ணமாய் இரு கரங்களையும் அமைத்துக் கொண்டு, பின்வரும் செய்யுளைப் பாடினார் :


“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ(து) உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேல(து)
ஆனிலை யுலகத் தானு மானா(து)
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல வொருதிறம்
பற்றல் இலியரோ நிற்றிறஞ் சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்(து)
அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே

இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த

நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் தனித்த வாண்முகத் தெதிரே
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்

மன்னிய பெருமநீ நிலமிசை யானே.[4]

செய்யுளைப் பாடி வரும்போது அவைக் களத்திலிருந்த புலவர் அனைவரும் அதன் கண் உள்ள சொற்பொருளமைதியில் ஈடுபட்டு, ஆனந்தித்திருந்தனர். அரசனும் அது தன் புகழாய் அமைந்திருப்பினும் புலவரது புகழையும் விளக்குவதாகையால், மகிழ்ச்சியோடு கேட்டு அவரை நோக்கி, “புலவரேறே, அருங்கருத்துக்கள் பலவற்றை எளிய சிறிய இனிய சொற்களில் அமைக்கும் திறம் வாய்ந்த நும்மைப்போன்ற பெரியோர்களே நம் நாட்டுக்குப் பெருங்கொடையாளர். நும் வாக்கில் இருந்து பிறந்த அமுதமொழிகளே இனி வருங்காலத்தில் தமிழ் நாட்டின் பண்டைப் புதையற் பொருளாய் வழங்கவுரியனவாம். எம்முடைய சிற்றறிவில் நீவிர் அமைத்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் விளங்கா மையால், அவை விளங்குமாறு சிறிதளவு எடுத்துரைக்க வேண்டுகின்றேன். செய்யுள் செய்தவரே பொருளும் உரைத்தல் சிறப்பன்றோ?” என்றான்.

புலவர் பெருமான் எழுந்து நின்று, பின் வருமாறு பிரசங்கித்தனர்:

“அரசர் தலைவ, யாம் இச்செய்யுளிற் பண்டைப் பழங்குடியாகிய நினது குடிப்பெருமையையும், நினது புகழையும் விளக்கும் கருத்தால் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நால்வகை உறுதிப் பொருள்களையும் அமைத்திருக்கின்றேம். அது வருமாறு:

நினது புகழும் பிரதாபமும், வடதிசையில் இமய மலைக்கு வடக்கிலும், தெற்கிலே குமரிக்குத் தெற்கும், மேற்கிலே மேல் கடலின் மேல்பாலும், கிழக்கிலே சகரர் தொட்ட கடவின் கீழ்பாலும், கீழே சுவர்க்க மத்திய பாதாளம் என்ற மூன்று உலகங்களில் நிலவுலகத்தின் கீழும், மேலே கோலோ கத்தின் மேலும் பரவியுளது என்றமைக்கப்பட்டுளது. இஃது எவ்வாறெனில், பாரததேயம் முழுவதும் வென்று ஒரு குடைக்கீழ் ஆளும் சக்கரவர்த்தியாகையால், உனது புகழ் உன் நாட்டினுள் அடங்காமல் அயலவர் நாட்டிலும் பரவவேண்டுவது முறையே யெனவும்; யாகாதிகள் செய்து தேவர்களைத் திருப்திப்படுத்தி யிருப்பதால், மேலுலகங்களிற் பரவியுள தெனவும்; கடற்கப்பால் உள்ள அயல் நாடுகளிலும் தமிழ் நாட்டு மரக்கலங்கள் சென்று உனது புகழையே நாட்டுவதால், கடற்கப்பாற் பரவியதெனவும்; இமயமலையின் வடவெல்லையில் கயற்பொறி பொறித்து அதற்கு வடபால் உள்ள நாட்டவரும் எச்சமயத்தில் நம்மை எதிர்த்துப் போர் செய்து அடக்க வருவனோ என்று எண்ணித் திகிற்படுமாறு செய்து வந்துளாயாகையால், இமயத்துக்கு வடபாலும் பரவியுள நினது கீர்த்தியும் பிரதாபமும் எனக் கூறினோம்.

“இவ்வாறு, புகழ் பரவிய மன்னனாயிருப்பினும், இனியும் சிறப்புப் பெறுமாறு வாழ்தற்குரிய நன்னெறியைக் கடைப்பிடிக்கவெனப் பின் வரும் கருத்துக்களை அமைத்துளோம். நியாய பரிபாலன விஷயத்தில் துலைக் கோலின் முள்ளைப் போல ஒருபாற் கோடாது நடுவு நிலை கொள்க. அவ்வாறு கொள்வதாற் சிறப்புறுக எனவும் யமதருமனைப் போல நடுநிலை கடை பிடிக்கவெனவும் பொருள் செய்யுமாறு முதற்கண் அமைந்தது. அரிய அரண்கள் பலவற்றை அடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள அரும்பொருள்களை வறியோர்க்கு வழங்குக, புலவர்க்குப் பரிசிலாக அளிக்கவெனவும்; நினது குடை வேறெங்கும் பணிவில்லதாய் ஓங்கி யுயருமாயினும், முனிவரையும் சிவாலயங்களையும் வலம் வரும்போது பணிகவெனவும்; எவர்க்கும் வணங்காத நினது முடி நான்மறை ஓதிய அந்தணர் ஆசியோடு ஏந்திய கையின் எதிரே வணங்குக எனவும்; நினது மாலை வாடாத பெருமைத்தாயினும், பகைவர் நாடுசுடு புகையில் வாழுகவெனவும்; பகைவர்முன் அடங்காத கோபத்தையுடையாய் ஆயினும், நினது சினம் பெண்டிர் பிணக்கின் முன் மாறுகவெனவும்; பல வகை வெற்றிச் சிறப்பையும் கொண்ட வள்ளன்மை சிறந்த பாண்டிய மன்ன, நீ சூரிய சந்திரர்போல உலகில் வாழ்கவெனவும் வாழ்த்துக் கூறினேம்.

“ஒருபாற் கோடாத நடுவு நிலைமையைப் பற்றுவதாலே அரசர்க்கு எல்லா வாழ்வும் பெருகும்; படை, தடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறும் வளரும். அயல் நாடுகளை வெல்வதால் அடையும் பொருளைப் பரிசிலர்க்கு வழங்கும் முறையிலும் உரிய உபசாரங்களோடும் ஆதரவோடும் வழங்க வேண்டும். வரிசை தவறினாற் பெரிதும் வறுமையுடையாராயினும் பரிசில் பெறார். பரிசில் வாழ்நராகிய புலவர் புகழ்வது அரசர் வழி வழிச் சிறக்க வுதவும் சிறந்த வுதவியாம். ஆதலாலும், வரிசையறிதல் அரிது, ஈதல் எளிது என்பர் ஆதலாலும், வரிசைக்கு ஏற்ப ஈகை கடமையாக் கொள்க எனப்பட்டது. நினது குடை பாரததேயம் முழுவதும் நிழல் செய்வதாய் வடவரும் பிறரும் வணங்கத் தக்கதாய் ஓங்கி யுயர்ந்ததாய் இருப்பினும் என்ன வுயர்வு வரினும் பணிதற்குரியாரைப் பணிதலும் அரசர் கடமையாம் ஆதலால், சிவாலயப் பிரதக்ஷிண சமயத்திலும், முனிவரை வணங்கும் காலையிலும் பணிகவெனவமைத்தது,

‘எல்லார்க்கும் நன்றம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.’[5]

என்ற உண்மையைக் கருதியே யாகும், எந்நாட்டிவரும் தம் அரசன் பிறர்க்கு வணங்கா முடியனாய் இருப்பதே பெருமையெனக் கருதுவாராயினும், அவன் முடியும் வணங்கற்குரிய இடம் உளது என அவன் அறியற்பாலனாகையால், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அறவோராகிய அந்தணர் ஏந்து கையெதிரில் அவரது வாழ்த்துப் பெறுமாறு இறைஞ்சுக வென்று கூறப்பட்டது. வேத விதிபற்றி நாட்டவர் நடக்கவென ஆணை பிறப்பித்ததோடு வைதிக முறையால் அநேக யாகங்களையும் நிறைவேற்றிய மன்னனாகிய நின்னை நான் மறை முனிவரை வணங்கி வாழ்வு பெறுகவென்று கூறியது பொருத்தமேயன்றோ ? நின் தலை மாலை நாண்மலர் மாலையாய் வாடா மாலையாய் இருக்கவெனப் பிறர் வாழ்த்துவாராயினும், புலவர் பலர்க்கும் ஈந்துவக்குமாறு வேண்டிய பொருளைப் பெறக்கருதி அயல் நாடுகளோடு நீ போர் செய்கையில் முறையறியா தாரைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் பொருட்டுத் தீயார் வாழும் இடங்களில் தீயிட வேண்டி நேரிடுமாதலால், அவ்வாறு எழும் புகையால் கண்ணி வாடுக என அமைக்கப்பட்டது. இவ்வாறு அறமும் மறமும் புரிந்து பொருள் பெறும் நினக்கு இன்பவாழ்வும் நன்கமைகவெனப் பெண்டிர்பிணக்கின் முன் சினம் மாறுகவென அமைக்கப்பட்டது. ‘வென்றி யெல்லாம் வென்று அகத்தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி,’ என்று விளித்து, அகம்புற வெற்றி இரண்டும் அமைத்துக்குண மாண்பும் புகழப்பட்டது. நீடுவாழ்கவென வாழ்த்தும் கருத்தால் சூரிய சந்திரர் உள்ள காலம் எல்லாம் உலகமுள்ள காலம் எல்லாம் உயிர்கள் உள்ள காலம் எல்லாம் அறமும் அருளும நெறியும் உள்ளகாலம் எல்லாம் வாழ்கவென வாழ்த்தியாவாறாம். இவற்றில் நான்மறை முனிவர் ஏந்து கையெதிரே இறைஞ்சுக வென்பதால் அறமும், நாடு சுடு கமழ் புகையால் வாடுக நின் கண்ணியென்பதாற் பொருளும், மங்கையர் துனித்த வாண்முகத்தெதிரே செலியர் நின் வெகுளி யென்பதால் இன்பமும், முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்குப் பணியியர் என்பதால் வீடும் கூறப்பட்டன.

“அரசரேறே, இவ்வாறு நாற்பொருள்களையும் விளங்க வைக்கும் இச்செய்யுளையும் நின் புகழோடு இணைத்து மார்பகத் தில் அணிந்து கொண்டு எமை ஆதரிக்க வேண்டுகிறேம்.”

காரி கிழாரது பிரசங்காமுதத்தைச் செவி வாயாக உள்ளம் களனாகப் பருகிய புரவலனும் பிற புலவர்களும் ஆனந்த மேலீட்டால் சிறிது பொழுது பரவசப்பட்டு மௌனமாயிருந்தனர். பிறகு அரசவைப் புலவர் தலைவர் எழுந்து நின்று, “மன்னர் பிரானே, புலவருட் புலவரே, இவ்வருங்கருத்துக்களை யமைத்துச் சின்மென் மொழியாற் செய்யுள் செய்து அரசர்க்கு அறிவுரை அறவுரை வாழ்த்துரை கூறிய இவரே புலவர்! இவர் வாய்ப்பிறந்த இம்மொழி யமுதமே செய்யுள்! இவரது இயல்பை அளந்தறிந்து பரிசில் தரவல்ல பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனே புரவலன், வேறு யாம் கூற என்னவுளது ? உம்பருலக வாழ்வும் இவ்வின்ப வாழ்விற் சிறந்ததாகாது என்பது அறிவுடையோர் கொள்கையன்றோ? இன்றே தமிழ்த் தெய்வத்தின் பெருந்திருநாள் என்னலாம், என்று கூறி ஆதனத் தமர்ந்தார்.

அரசன் அவர்க்கு முக மலர்ச்சியால் உபசாரம் செய்த பிறகு காரி கிழாரை பார்த்து, “புலவர் தலைவரே, நுமது செய்யுளையே சிறந்த தென்கோ! அதற்கு நீவிர் உரைத்த உரையையே சிறந்ததெனப் பாராட்டு கோ! நாட்டின் நன்மையின் பொருட்டு நும் போன்ற பெரியோர்கள் வாழ்த்துரை கூறுவது சிறப்பேயன்றோ? இச்செய்யுள் எனக்கு வேண்டுமளவு அறவுரை கூறுவ தாய் அமைந்திருப்பது கண்டு ஆனந்திக்கின்றேன். நும்மனைய பெரியார் துணிந்து இவ்வாறு அறிவுரை புகன்றிலரென்றால், அரசென்னாம்? அரசன் என்னாவன்? குடி மக்கள் வாழ்வு என்ன ஆகும்?” என்றான்.

காரி கிழார் மறு முறையும் எழுந்து, “அரசே, இச்செய்யுள் நின்னை வாழ்த்தவே எழுந்ததாயினும், நின் நிழலின் கீழ் வாழும் குடி மக்களையும் வாழ்த்துவதாம் அரசன் உயிரும் குடிகள் உடலும் ஆக அமைவராகையால் உயிரை வாழ்த்துவது உடலுக்கும் அமைவதன்றோ? உயிராகிய அரசன் அற நெறி கடைப்பிடித்துப் பொருள் வளஞ் சிறந்து இன்ப வாழ்வு பெற்று வீட்டின்பம் பெற வுரியனாகுக வென்று வாழ்த்துவதால், உடலாகிய மக்களும் அவ்வாழ்வு பெறுகவென வாழ்த்தியதேயாம் அன்றோ? அரசனிடம் அறமில்லை யென்றால், நாட்டில் நிலைக்குமா? அவ்வாறே பிற வுறுதிப் பொருள்களும் அவனை அடிப்படையாய்க் கொண்டன்றோ உலகிற்கு வருவன? ஆகையால், இச்செய்யுள் தமிழ் நாடெங்கும்,-ஏன் ?-- இப்பாரத பூமியெங்கும் நின் குடையின்கீழ் வாழும் குடிகள் அனைவரையும் வாழ்த்தியதாம். அரச வாழ்த்தே அவன் ஆளுகைக் குட்பட்ட மக்களுக்கும் வாழ்த்தாம் என்பதே அறிவுடையார் கொள்கையாம், என்று கூறினர்.

இவ்வுரையைக் கேட்ட புலவ ரவைக்களத்தார் அனைவரும் பேரானந்தம் எய்தினர். 'பெரியோர் வாக்கிலன்றிப் பெரும்பொருள் வெளிப்படுமோ?' என்று அனைவரும் ஒரு முகமாய்க் கூறினர். அரசனும் மனமகிழ்ச்சியோடும் முக மலர்ச்சியோடும் நுழைநூற் பட்டால் நெய்து பொன்னூலால் அழகிய பூத்தொழில் செய்யப் பெற்றதொரு பெருமதிப்புள்ள பட்டாடையைக் காரி கிழார்க்குப் போர்த்து, பொற்கலத்திலே ஆயிரம் பொற்காசுகளை வைத்து, “பெரியீர், நும் செய்யுள் அமைவின் சிறப்பை யான் இவ்வளவேயாக மதித்தேன் என்று எண்ணாது, நுமது அருளுரையே அறிவுரை யாக்கொண்டு யான் வாழக் கருதியுள்ளதைத் தெரிவிக்கும் முகத்தால் நுமக்குக் கொடுக்கும் கையுறையாக இதனை யேற்றுக்கொள்ள வேண்டுகின்றேன்," என்று கூறிக் கொடுத்தான். புலவர் அதனை முகமலர்ச்சியோடு பெற்றுக்கொண்டு வந்தனம் கூறினர்.

பிறகு அரசன் அங்கு வந்திருந்த புலவர்க்கெல்லாம் உபசார மொழிகள் கூறிப்புலவர் புடைசூழவெளியேறி ஆத்தான மண்டபம் அடைந்து, அமைச்சரோடு வீற்றிருந்து, அரசியல் வினையைக் கவனிக்கலாயினன். அன்று முதல் காரி கிழார் பாண்டிய நாட்டுப் புலவராகவே வாழ்ந்து, உரிய காலங்களில் அரிய செய்யுட்களைச் செய்து, உலகை வாழ்வித்து வந்தனர்.

இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்த பிற்பாடு அரசன் தன் நாட்டின் அரசியற் பொறையைத் தலை மகனிடம் தந்து, வனஞ் சென்று தவமியற்றிச் சிவபிரான் திருவருட் பெருமையைச் சிந்தித்து வந்தித்திருந்து, எவரும் எளிதிற் பெறாப் பேறாகிய பேரின்ப நெறியைக் குறுகினான்.

  1. புறநானூறு - செய்யுள், 9.
  2. புறநானூறு - செய்யுள், 12.
  3. புறநானூறு - செய்யுள், 15.
  4. புறநானூறு - செய்யுள், 6
  5. திருக்குறள் - செய்யுள், 125.