பாபு இராஜேந்திர பிரசாத்/காந்தியிசம்; சோசலிசம் ராஜன்பாபு விளக்கம்!
ராஜன்பாபு விளக்கம்!
பதவி, பட்டம், புகழ், பகட்டு, படாடோபம் இவற்றை எல்லாம் தேடி அலைந்தவர் அல்லர் ராஜேந்திர பிரசாத் காந்தி! பெருமான் என்ன சொல்கிறாரோ, அதைச் சேவையாகச் செய்வதே தனது கடமை என்பதே அவரின் லட்சிய நோக்கமாகும்.
பீகார் காந்தி ராஜன் பாபு என்று மக்களால் பரவலாகப் பேசப்பட்ட அவரின் நாட்டுப் பற்றைத் தேச சேவையை இந்திய மக்கள் கவனித்துக் கொண்டேதான் இருந்தார்கள். எடுத்துக்காட்டுக்கு ஒன்று கூறுவதானால், பீகார் மாநிலத்தில் பூகம்பம் புயலாட்டமிட்டபோது, ராஜேந்திர பிரசாத்தின் பெருமை வானளாவ உலகறிய ஒளிர்ந்தது.
இராஜன் பாபுவின் தன்னலம் கருதாத உயர்ந்த பணியையும் செயற்கரிய செயலையும் பாராட்டிக் கெளரவிக்க இந்திய நாடும், அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகா சபையும் விரும்பியது.
1930-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1931, 1932, 1933 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் மகா சபை அமைதியாகக் கூட முடியவில்லை. தில்லியிலும், கல்கத்தாவிலும் நடந்த சிறப்புக் காங்கிரஸ் நடவடிக்கைகள் அமைதியாக நடக்க வழி இல்லை.
பம்பாயில் காங்கிரஸ் மகா சபை 1934 ஆம் ஆண்டு கூடுவதாக இருந்தது. ராஜன் பாபு தான் அந்த சபைக்குத் தலைமையேற்கத் தகுதியுள்ளவர் என்று காங்கிரசார் எல்லோருமே முடிவு செய்தார்கள். அந்தக் காலத்தில், தேச சேவைக்குக் கிடைத்த பெரிய பதவி எது தெரியுமா?
காங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை ஏற்பது ஒன்றே பெரிய கெளரவம் என்றும் மக்கள் நம்பினார்கள். ஆனால், இந்தப் பதவியை ஏற்பதால் வரும் நஷ்டங்களும் உண்டு. ஊர்ப் பெரியவர்கள், மூத்த கட்சியினரின் கோஷ்டிகள், எல்லாவற்றுக்கும் மேலாக அரசினரின் பகைகள். இந்த முப்பெரும் விரோதங்கள் அவ்வளவு சுலபமாகவோ, விரைவாகவோ முடிவனவும் அல்ல.
ஆனால், இந்திய மக்களுக்கு, பீகார் மக்களுக்கு ராஜன் பாபுவிடம் உள்ள மதிப்பையும், செல்வாக்கையும் உலகுக்கு உணர்த்திட அவருக்கு காங்கிரஸார், கட்சியின் தலைமைப் பொறுப்பை மனமார வழங்கினார்கள்.
தலைவர் பொறுப்பை ஏற்றிட்ட ராஜேந்திர பிரசாத்துக்கு பம்பாய் நகர மக்கள் மட்டுமன்று, குமரி முதல் இமயம் வரையுள்ள காங்கிரஸ்காரர்கள் அமோக வரவேற்பை அளித்தார்கள். ராஜன் பாபுவின் தலைமை உரை காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்களை வரையறுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. தலைவரின் அந்த முழக்கத்தின் சில பகுதிகளைக் கவனிப்போம்;
பீகாரில் நிலநடுக்கம் விதியின் விளைவாகவே நடந்தது. அதைத் தொடர்ந்து பீகாரில் பெரும் வெள்ளம் வந்தது. இந்தப் பரந்த நாட்டிலுள்ள எல்லாரும் பொருளுதவி செய்ததோடு கண்ணீரும் வடித்தனர். உழைக்கவும் முன் வந்தனர். அந்த மாகாணத்தின் மீது உங்களுக்குள்ள அன்பு காரணமாகவே இன்று எனக்கு இந்த தலைவர் பதவியை நீங்கள் அளித்துள்ளீர்கள்.
நாடு, கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பல தியாகங்களைச் செய்தது. துன்பமும் பெற்றது. ஆயிரக்கணக்கான இளங்காளையர்கள், மாணவர்கள், உழைப்பாளிகள், தொழிலாளிகள் ஆகியோர் தடியடிபட்டார்கள். துப்பாக்கித் தர்பாருக்கு ஆளாயினர். அபராதமும் விதிக்கப்பட்டார்கள். பலர் தம் உடல், பொருள், ஆவியை இழந்தார்கள். சிறைக்கும் சென்றார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒடுங்கிவிடவில்லை...
அவசரச் சட்டங்கள் நிரந்தரச் சட்டங்களாயின. நீதிமன்றங்களுக்கு வேலை தராமல், அதிகார வர்க்கமே அளவில்லாத அதிகாரத்தை ஏற்றது. பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டடன. சாதாரணச் செயல்கள் குற்றங்கள் ஆயின.
பயங்கர இயக்கத்தை நாம் அடியோடு வெறுக்கிறோம். அதனால், நாட்டின் முன்னேற்றம் தடைப்படுகிறது. கேடுகள் அதிகமாகின்றன. ஆனால் பயங்கர இயக்கத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அடக்குமுறைகளால் நல்வழிப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.
“சுயராஜ்யம் அடைய நீதியும் அமைதியும் நிறைந்த வழியை மேற்கொள்வதே நம் கோட்பாடு. நீதியும் அமைதியும் நிறைந்த வழி என்றால் என்ன? சத்தியமும் அகிம்சையும் அமைந்த வழியே அது. வேறு வழியை நாம் மேற்கொண்டிருந்தால், நம் போராட்டத்தை உலகம் கவனித்திராது. இன்னும் கொடிய மிருகத்தனத்துக்கும் தீமைகளுக்கும் நாம் ஆளாகி இருப்போம்.”
“நம்மிடம் தவறுக்கள் இருக்கலாம். ஆயினும், நாம் மிக விரைவுடன் முன்னேறியுள்ளோம். பதினைந்து ஆண்டுகளில் சாதித்தவற்றை இப்போது பொறுமைக் குறைவினால் கெடுத்துவிடக் கூடாது. என் நண்பர்களான சோசலிஸ்டுகளுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு உற்சாகம் தரக்கூடிய கொள்கை ஒன்றை வகுத்தால்தான். ஒருவரே ஏகபோகம் கொள்வது அகலும் என்று அவர்கள் கருதுகிறார்கள் சத்தியத்தையும்அகிம்சையையும்விட உயர்ந்த கொள்கை ஒன்று உண்டா? ஒருவரே ஏக போகம் பெறும் வாய்ப்புகளை ஒழிக்க வேண்டும் என்று நாடு தீர்மானித்துள்ளது.
பாவத்தை நீக்க நாம் போராடுகிறோம். வன்முறையைப் பயன்படுத்துவதால் நமக்கே இரு பங்கு தீமை உண்டாகும். பாவிகளை மெல்லத்தான் திருத்த முடியும் என்று தோன்றலாம். என்றாலும், சத்தியப் பாதையே சீரிய பாதையாகும். பிற்கால வரலாற்றில் சிறப்புப் பெறும் வழியும் ஆகும்.
ஏராளமான பணிகள் உள்ளன. போனது போக; இனி நடக்க வேண்டியதை நன்கு கவனிப்போம். மிகவும் பிரம்மாண்டமான வேலைத் திட்டம் வேண்டும் என்பதில்லை. மிகச் சிறிய பணியை ஏற்றாலும் அதனை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். நமக்குள்ள பொறுப்பு ஏராளம். நம்மை ஆளுவோர். தம் அதிகாரத்தைக் கைவிட விரும்பவில்லை. சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க அவர்கள் இன்னும் வலுவாக முயல்வார்கள்...
பரிபூர்ண சுயராஜ்யமே சுதந்திரப் போரின் முடிவாகும். அந்நியர் ஆட்சி தொலைவது மட்டும் சுயராஜ்யம் அன்று. மக்களில் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரைச் சுரண்டுவதும் ஒழிய வேண்டும். அதுதான் முழுமையான சுயராஜ்யம்...
முழுமையான சுயராஜ்யம் என்னும் போது யாருக்கும், எந்நாட்டவருக்கும் தீமை நினைத்தில் கிடையாது. நம்மைச்சுரண்டிப் பிழைப்போருக்கும் கேடு விழைவதில்லை. அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட சுயராஜ்யத்தில் அனைவரிடத்திலும் நல்லெண்ணம் கொள்வதே நம் நோக்கம்.
...துன்பம் கண்டு தளர வேண்டாம்; நேர் வழியை விட்டு அகல வேண்டாம். நம் கொள்கைக்கேற்ப நாம் ஒழுகுவோமாக! உறுதி குன்றாமல் உழைப்போமாக. சத்தியாக்கிரகத்தில் தோல்வி என்பதே கிடையாது. சத்தியாக்கிரகம் என்றால் வெற்றி என்பதே பொருள்.
இராஜன் பாபு காந்தியத் தத்துவத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை இச்சொற்பொழிவு விளக்குகின்றது.