பாரதிதாசன்- தனிப்பாடல்கள்

பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை உலகில் தனக்கென ஓர் அழியாஇடம் பெற்றவர். பகுத்தறிவுக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்; மூடப்பழக்கவழக்கங்களை முற்றிலும் எதிர்த்தவர்; தமிழரின் விடுதலைக்காகப் போராடியவர். தமிழின்மேல் ஆராக்காதல் கொண்டவர். இவர் இயற்கை, தமிழ், பொதுவுடைமை, தொழிலாளர், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்விடுதலை போன்று பலதலைப்புக்களில் மிகச்சிறந்த படைப்புக்களைப்டைத்துள்ளார்.

இப்பகுதியில் பல்வேறுதலைப்புக்களில் அவர்பாடிய தனிப்பாடல்களைக் காணலாம்.

உலகப்பொதுமறையாம் திருக்குறள் எனப்படும் முப்பால் நூல் பற்றிய அவர்பாடல்கள்:


வள்ளுவர் வழங்கிய முத்துக்கள் தொகு

தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்

அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும் உணர்வாகும் வண்ணம்

கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு

வள்ளுவனைப் பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே! (01)


வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்

பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்

செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்

இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! (02)


தொன்னூற் படியில்லை திராவிடர் தூய கலையொழுக்கம்

பின்னூற் படியிற் பெறும்படி இல்லை, பிழைபடியா

அந்நூற் படிதிரு வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து

முந்நூற்று முப்பதும் முத்தாக மூன்று படியளந்தே! (03)


கன்னல் இதுஎனக் காட்டியே மக்கள் கடித்துணுமோர்

இன்னல் தராது பருகுக சாறென ஈவதுபோல்

பின்னல் அகற்றிப் பிழைதீர் நெறிஇது பேணி(ர்)என்றே

பன்னல் உடையது வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே! (04)


வித்திப் பிழைக்கும் உழவனும் வேந்தனும் நாடனைத்தும்

ஒத்துப் பிழைக்க வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்

எத்துப் பழுத்தவர் ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்

அத்திப் பழமன்று தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே! (05)


பாரதிதாசன் பாடிய 'வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்' எனும்பாடல் முடிந்தது.
இத்தலைப்பில் அமைந்த பாடல்கள் எண்ணிக்கை: 05 (ஐந்துமட்டும்)
இப்பாடல்களின் மொத்த அடிகள்: 20 (இருபது மட்டும்)

வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்