பாரதிதாசன்/தமிழ் மறவர்



5

தமிழ் மறவர்

எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும்

ங்ககாலந்தொட்டுத் தமிழ் பலராலும் பலவாறு புகழப்படுகிறது. எல்லையற்ற அடைமொழிகளைப் பெற்றது தமிழ். செந்தமிழ், தண்டமிழ் பைந்தமிழ், பசுந்தமிழ், இன்றமிழ், இளந்தமிழ், முத்தமிழ், மூத்ததமிழ், வண்டமிழ், வான்தமிழ், தேன்தமிழ், தீந்தமிழ், பண்தமிழ், பழந்தமிழ்,திருத்தமிழ், தெய்வத்தமிழ், தெள்ளுதமிழ் என்று பண்டை நாள் தொட்டுப் புலவர்கள் தமிழைப் பல்லாற்றானும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்; தமிழினைத் தம் உயிரினும் மேலாகப் போற்றிப் பாராட்டி வந்துள்ளனர்.

பெயர் தெரியாத ஒரு புலவர் 'தமிழ் விடுதூது' என்ற நூலை எழுதித் தமிழைப் புகழ்ந்து பாராட்டி அதைத் தன் காதலனுக்குத் தூதாக அனுப்பியுள்ளார். ஆனால் தமிழின் சிறப்பு, வளம், இன்றைய நிலை அதை முன்னேற்றும் வழிமுறைகள் இவற்றை ஆய்ந்து முதன்முதலாகக் கவிதை நூலாக எழுதிய பெருமை பாரதிதாசனையே சாரும். அதுதான் தமிழியக்கம்' எனற அரிய நூல்.

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
        முன்னேற்றம் ஒவ்வொன்றும்
            உன்முன்னேற்றம்
கண்டறிவாய் எழுந்திரு நீ!
        இளந்தமிழா கண்விழிப்பாய்!
             இறந்தொழிந்த

பண்டைநலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும் நீ
படைப்பாய்! இந்நாள்
தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!

என்று இளந்தமிழர்களைத் தட்டி எழுப்புகிறார். ஆடவர்கள் மட்டும் தமிழுக்குத் தொண்டு செய்தால் போதாது. அணியிழை மகளிரும் தமிழ்த் தொண்டாற்ற வேண்டுமென்று அறைகூவல் விடுக்கிறார்.

ஒருவானில் பன்னிலவாய்
உயர்தமிழப் பெண்களெலாம்
எழுக! உங்கள்
திருவான செந்தமிழின்
சிறுமையினைத் தீர்ப்பதென
எழுக! நீவிர்
பெருமானம் காப்பதற்கு
வாரீரேல் உங்கள்நுதற்
பிறையே நானும்
மருமலர் வாய்த் தாமரையும்
கனியுதடும் நன்னெஞ்சும்
வாட்டம் எய்தும்

என்று அன்புடன் எச்சரிக்கை விடுகிறார். கடைத்தெருவில் விளம்பரப் பலகைகளில் தமிழ் ஒதுக்கப்படும் நிலை கண்டு

மணக்கவரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை
தணிப்பரிதாம் துன்பமிது!
தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை!

என்று வருந்திக் கண்ணீர் விடுகிறார் பாரதிதாசன் தமிழ் இயற்கையோடியைந்த மொழி என்பதைப் பாரதிதாசன் பறவைகள், விலங்குகள் மொழியோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

காக்கை 'கா' என்றுதனைக்
காப்பாற்றச் சொல்லும்; ஒரு
கருமுகில்தான்
நோக்கியே கடமடா
என்றேதன் கடனுரைக்கும்
நுண்கண் கிள்ளை
வாய்க்கும்வகை 'அக்கா' என்
றழைத்ததனால் வஞ்சத்துப்
பூனை 'ஞாம் ஞாம்' (நாம்)
காக்கின்றோம் எனச் சொல்லக்
கழுதையதை ‘ஏ’ என்று
கடிந்து கூவும்.

இறுதியாகத் தமிழியக்கத்தில் பாரதிதாசன் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார் தமிழ் மக்களை நோக்கி:

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவுயரும்
அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த
ஒருநாடும் தன்மொழியில்
தாழ்ந்தால் வீழும்
தமிழுக்குப் பொருள் கொடுங்கள்
தமிழறிஞர் கழகங்கள்
நிறுவி டுங்கள்
தமிழ்ப்பள்ளி கல்லூரி
தமிழ்ஏடு பலப்பலவும்
நிலைப்பச் செய்வீர்

திருமுருக கிருபானந்த வாரியார் நாடறிந்த சைவர் முருக பக்தர், ஆத்திகப் பெருமகனார். பாரதிதாசன் தன்மான இயக்கத்தைச் சேர்ந்த நாத்திகர் பெரியார் தொண்டர். இட இரு துருவங்களும் ஒருமுறை வேலூரில் நேரில் சந்தித்துக் கொண்டன. அவ்வூர்த் தமிழார்வத்தார் இந்த இரு துருவங்களையும் ஒரே மேடையில் ஏற்றிவிட்டனர். பாரதிதாசன் தலைமையில் கிருபானந்த வாரியார் பேசினார். அவர் பேசும்போது "நான் உங்களுக்கெல்லாம் தமிழை வாரித் தருகிறேன். பாரதிதாசன் என்போன்றார்க்குத் தமிழை வாரித் தருகிறார்" என்று சொல்லிப் பாரதிதாசன் பாடியிருக்கும்

கனியிடை ஏறிய சுளையும்-முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்-தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

என்ற பாடலை இசையோடு பாடி அப்பாட்டில் உள்ள நயங்களையும் எடுத்துச் சிறப்பாக விளக்கினார்.

இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பாரதிதாசன் கூறியது:

"இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், கிருபானந்த வாரியாரே விரும்பிக் கேட்டு என் தலைமையில் வந்து பேசினார். தமிழ் அவருடைய வாயில் கொஞ்சி விளையாடியது. முடிவுரையில் அவருடைய தமிழ்ப் புலமையையும், பேச்சாற்றலையும் நன்கு பாராட்டிப் பேசினேன்.”

குடும்பத்தில் இரவுப் பணிகள் முடிந்து கணவன் மனைவி இருவரும் களைப்பாக உறங்குவது பொதுவான வழக்கம். ஆனால் குடும்பவிளக்கின் தலைவி தங்கம் தன் கணவர் மணவழகரைப் பார்த்து

அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்பதல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதை நாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

என்று சொன்னாள். பொதுவாக இரவு நேரத்தில் கணவனும் மனைவியும் குடும்பச் சிக்கல்கள் பற்றியோ, குழந்தைகளின் நலம்பற்றியோ, வரவு செலவு பற்றியோ, மாடுகன்று பற்றியோ பேசுவது வழக்கம். ஆனால் பாரதிதாசன் எழுதியுள்ள குடும்ப விளக்கின் தலைவி நாட்டுநலன் பற்றிப் பேசுவது வியப்புக் குரியதாக இருக்கிறது.

"நாம் தமிழரென்று சொல்லிக் கொள்கிறோம். தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் தமிழர் நலம் பேண நமதுழைப்பையும் காசையும் செலவு செய்தோமா?" என்று தங்கம் வினா எழுப்புகிறாள்.

அதற்கு அவள் கணவரான மணவழகர், "நம் கடை வரும்படியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தமிழர் நலனுக்கென்றே ஒதுக்கப்படுகிறது. தமிழர் கழகத்தார் நம் கடைப்படியை மிதித்தவுடன் நம் கணக்கர் அத்தொகையை எண்ணி வைத்துவிடுவார். இதை நீ அறியாயோ?" என்று மனைவியைக் கேட்டார்.

"இழந்த பழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்
எல்லோரும் தமிழர்களாய் வாழவேண்டும்!
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருகவேண்டும்"

என்று வாழ்த்திவிட்டுக் குடும்பவிளக்கின் தலைவனும் தலைவியும் கண்ணுறங்கினர். 'நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற பாரதிதாசன் கூற்று மெய்யாகிறது.

தமிழ் வளர்ப்பதை ஒவ்வொரு தமிழனும் தனது கடமையாகக் கொள்ள வேண்டும். புதிய சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்திச் செந்தமிழைச் செழுந்தமிழாய் ஆக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார் பாரதிதாசன்.

எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்

எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்

என்று பாடுகிறார். தமிழும் தமிழரும் எல்லாவித நலன்களும் ஆற்றல்களும் பெற்று உலகமக்களால் பாராட்டப்பெறும் நாள் எந்தநாளோ? என்று ஏக்கத்தோடு பாடுகிறார்.

என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லாரும் கல்வி கற்றுப்
பன்னரும் கலைஞா னத்தால்
பராக்கிர மத்தால் அன்பால்
உன்னத இமமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?

தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ,
ஆரிதைப் பகர்வார் இங்கே?

தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவுரை கூறும் பாரதிதாசன்,

கருத்துற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்
கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால்
தெருத்துாற்றும்; ஊர்துற்றும்; தம்முளமே தம்மேற்
சிரிப்பள்ளித் தூற்றும் நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?

என்று எச்சரிக்கை விடுக்கிறார். பொதுமக்கள் நலம்நாடிப் புதுக் கருத்தை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பொருளுக்காகப் புன்கருத்தைச் சொல்லக்கூடாது என்றும் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அறிவுரை வழங்குகிறார்.

தமிழைப் பாரதிதாசன் பல இடங்களில் வாழ்த்திப் பாடி இருக்கிறார். அவ்வாறு பாடும் போதெல்லாம் தமிழைத் தமிழனின் உயிர் என்று கூறுவதில் அவருக்கு அளவற்ற இன்பம்.

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தாயெனில் நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!

என்ற வரிகளில் 'தமிழ் தாழ்ந்தால் தமிழனும் தாழ்வான்' என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். திருச்சி வானொலியில் பாரதியைப் பற்றிய கவியரங்கில் பாடும்போது

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்

என்று குறிப்பிடுகிறார். இன்பத் தமிழ் என்ற தலைப்பில் பாடும்போது

தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்தத்
தமிழ்இன்பத் தமிழெங்கள்.உயிருக்கு நேர்

என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு தமிழைத் தமிழரின் உயிர் என்று பல இடங்களில் குறிப்பிடுவதோடு, அது எவ்வாறு உயிராக விளங்குகிறது என்பதைக் கழைக்கூத்தாடி ஒருவன் கைவண்ணத்திலும் சுவைபடச் செய்து காட்டுகிறார்.

கழைக்கூத்தாடிகள் செப்பிடு வித்தைகள் செய்து காட்டுவதில் வல்லவர்கள். மாந்தரை மயக்கநிலைக்குக் கொண்டுவந்து அவர்களைப் பேச வைப்பதிலும் வல்லவர்கள். ஒரு கழைக்கூத்தாடி ஓர் எலும்புக் கூட்டைப் படுக்க வைத்திருக்கிறான். அக்கூத்தாடியின் அருகில் மேளம் அடிக்கும் ஒரு சிறுவன்; இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சூழ்ந்திருக்கும் மக்களிடம் பேசி வித்தை காட்டுகிறார்கள்.

என்னடா தம்பி?
ஏண்டா அண்ணா!
இதோ பார்தம்பி எலும்புக்கூடு
சதையும் இல்லே சத்தும் இல்லே
ஆமாம் திடுதிடும் அதற்குப் பேரென்ன?
அதன்பேர் தமிழ்நாடு
சரி சரி திடுதிடும்!

சுற்றிலும் உள்ள மக்கள் கூட்டம் எலும்புக் கூட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, என்ன செய்யப் போகிறான் என்ற வியப்போடு. கழைக்கூத்தாடி மீண்டும் பேசுகிறான். சிறுவனும் அவனைத் தொடர்கிறான்.

இந்த எலும்பே எழுந்திருக்க வைக்கிறேன்;
செய்யி செய்யி பார்ப்போம் திடுதிடும்!
அமிஞ்ச எலும்பே ஆடவைக்கிறேன்;
செஞ்சி காட்டு திடுதிடும் திடுதிடும்!
ஓய்ஞ்ச நாட்டிலே உசுருண்டாக்கிறேன்
ஆக்கிக் காட்டடா அண்ணே திடு திடும்!
அடிமோளத்தை திடுதிடும் திடும்!
இந்த எலும்பை இப்படி வைக்கிறேன்.

கூட்டம் விழித்த கண் வாங்காமல் எலும்புக் கூட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறது. கூத்தாடியின் பேச்சு தொடர்கிறது

எலும்பை வச்சா உசிரா வந்திடும்?
மருந்து செய்யனும் தெரிஞ்சுதா உனக்கு?
சரிசெய் திடுதிடும்!
இதோ பார் மாம்பழம் இதைநான் புழியறேன்
புழி புழி திடுதிடும்!
இது ரஸ்தாளி இதையும் புழியறேன்
புழி திடும் திடுதிடும்!

பலாச்சுளை புழியறேன்
திடு திடும் புழி புழி!

கூட்டம் இந்த வேடிக்கையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. கூத்தாடி தொடர்கிறாள்.

தேனும் சேக்கறேன், பாலும் சேக்கறேன்
எளநீர் வழுக்கை இட்டுக் கொழைக்கிறேன்
இடித்த திணைமா இட்டுப் பிசையறேன்
பொடித்த பருப்பும் போட்டுக் கலக்கறேன்
எல்லாத்தையுமே இளஞ்சூடாக்கி,
பல்லாய் நிறையப் பக்குவப் படுத்தினேன்


ஆஹா ஆஹா அண்ணே அண்ணே!
இந்த மருந்துக் கென்னா பேரு?


உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும்
தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ், இதுதான்!
இந்த மருந்தே எலும்புக் கூட்டில்
தடவுறேன் தம்பி அடி மேளத்தை!

கூட்டத்தில் இருந்த எல்லாரும் ஆவலோடு எலும்புக் கூட்டையே உற்றுப்பார்க்கின்றனர்.


திடு திடும் திடு திடும் திடு திடும் திடு திடும்
சிரித்தது பாரடா செந்தமிழ்க்கூடு


எலும்புக்கூடாயிருந்த தமிழ்நாடு தமிழ் என்னும் மருந்து அதன்மேல் தடவப் பெற்றவுடன் உயிர்பெற்றுவிடுகிறது.

இப்பாடல் பாரதிதாசன் செய்து காட்டிய தமிழ்வித்தை!

தமிழ் மக்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தவர்கள். தமிழர்களின் அகத்துறை இலக்கணம் மிக உயர்வானது. அகத்தில் அமைந்துள்ள திணையும் துறையும் மிக நுட்பமானவை. இயற்கையும், இயற்கையோடியைந்த தமிழர் வாழ்க்கையும் வியப்பிற்குரியவை. அறத்தைச் செய்து, பொருளைத் தேடி, இன்பத்தை நுகர்ந்து வாழ்வதே பேரின்பமாக அவர்கள் கருதினர். காதலைப் பொருத்தவரையில் களவியல், கற்பியல் என்று வாழ்ந்த வாழ்க்கை உன்னத இலக்கியங்களுக்கு வழிகோலியது.

சிற்றின்பம், பேரின்பம் பற்றி இலக்கியத்தில் பலரும் பல விதமாகக் கூறியுள்ளனர். பாரதிதாசனும் 'எதிர்பாராத முத்தம்' என்ற தம் சிறு காப்பியத்தில், தலைவி பூங்கோதை வாயிலாகப் பேரின்பத்தைப் பற்றி ஒரு கருத்தை வெளியிடுகிறார்.

காப்பியத் தலைவியான பூங்கோதை தன் காதலனான பொன்முடியைக் களவில் சந்தித்தபோது

அத்தான் என்ஆவி உங்கள்
அடைக்கலம்! நீர்மறந்தால்
செத்தேன், இஃதுண்மை! இந்தச்
செகத்தினில் உம்மை அல்லால்
சத்தான பொருளைக் காணேன்!
சாத்திரம் கூறுகின்ற
பத்தான திசை பரந்த
பரம்பொருள் உயர்வென் கின்றார்.

அப்பொருள் உயிர்க்கு லத்தின்
பேரின்பம் ஆவ தென்று
செப்புவார் பெரியார் யாரும்
தினந்தோறும் கேட்கின்றோமே!
அப்பெரியோர்களெல்லாம்
வெட்கமாய் இருக்கு தத்தான்
கைப்பிடித் தணைக்கும் முத்தம்
ஒன்றேனும் காணார் போலும்!

என்று வெட்கத்தோடு கூறுகிறாள். பெண்ணின்பத்தைச் சுவைத்த யாரும் வேறு எதையும் பேரின்பமென்று கூறமாட்டார்கள் என்பது பூங்கோதை கருத்து.

இவ்வாறு பெண்ணின்பத்தைப் புகழ்ந்து பாராட்டிய பாரதி தாசனுக்கு அந்த இன்பமும் தெவிட்டிப் போய் விடுகிறது. எப்போது? தமிழின்பத்தில் ஈடுபடும்போது அதனால்தான்

எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் - எங்கள்
இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்
மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள்
மாத்தமிழுக் கீடில்லை என்றுரைப்போம்

என்று தமிழின்பத்துக்குச் சிறப்புக் கொடுத்துப் பாடுகிறார்.



"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதிதாசன்/தமிழ்_மறவர்&oldid=1509732" இலிருந்து மீள்விக்கப்பட்டது