பாரதிதாசன்/தேசியக் கவி

3

தேசியக் கவி

கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல்
கழுறுகிறேன் அதைக் கேளே-நீவிர்
கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத்
தூளே தூளே தூளே!

பாரதிதாசன் என்ற பெயரைக் கேட்டவுடன் அவர் ஒரு கருப்புச் சட்டைக்காரர், நாத்திகர், பெரியாரின் கொள்கைவாதி என்ற எண்ணம் தான் எல்லாருடைய உள்ளத்திலும் தோன்றும். இளமையில் அவர் ஒரு முருக பக்தர் என்பதோ, அவர் குடும்பம் சைவ சமயத்தின்பால் பற்றுக் கொண்டது என்பதோ, அவர் ஒரு தீவிர தேசியவாதியாகவும் காந்தியவாதியாகவும் திகழ்ந்தார் என்பதோ தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாது.

பாரதியாரின் தொடர்பு பாரதிதாசனை வெகுவாகப் பாதித்தது. பாரதியின் தேசியக் கருத்துக்களும், சாதிமறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகிய தீவிரமான கொள்கைகளும் இவரைப் பெரிதும் ஆட்கொண்டன. பாரதி விட்டுச் சென்ற பணிகளைப் பாரதிதாசன் தொடர்ந்து செய்தார் என்பதுதான் உண்மை. இச்செய்திகள் யாவும் இவர் எழுதியுள்ள நூல்கள் மூலமாகவும், இவரைப் பற்றிப் பிறர் எழுதியுள்ள நூல்கள் மூலமாகவும், புதுவையிலிருந்து வெளியான தேச சேவகன், பூரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம், போன்ற ஏடுகள் மூலமாகவும் அறியக் கிடக்கின்றன.

இளமையில், மாடசாமி போன்ற தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த பாரதிதாசன், காந்தியவாதியாக மாறி 1920 ஆம் ஆண்டு சத்தியாக்கிரக இயக்கத்திலும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பாரதத்தை தெய்வீகத் திருநாடு' என்றும், 'நாலுவேதத்தின் தாய்', 'ஆறு சமயத்தின் தாய்' என்றும் போற்றுகின்றார்.

காலப் பெருங்கடலில் நாளும்
கரைந்த தோற்றமெலாம்
பாலப் பருவமுதல் - எங்கள்
பாரதத் தாய் அறிவாள்
நாலு திசை முழுதும் - கொள்கை
நாற்பதி னாயிரத்தார்
ஆலின் கிளையவைகள் - என்னில்
ஆக்கும் மரம் இவள்தான்

என இந்திய இனத்தின் கிளைகளைத் தாங்கும் அடிமரமாக உருவகப் படுத்தியுள்ளார் பாரதத்தாயை.

உச்சி மலையடி உன்னழகு - தன்னில்
ஓடுஞ் சிறுத்தை மனத்தெளிவு - கட்டுங்
கச்சை யறுத்து வருங்குதிரை - தன்
கருத்தினில் வந்து கலப்பவளே - அடி

தாவிடுவாய் உள்ளத் தாமரை மேல்வந்து
தாக்குது பாருன்றன் காதற்கனல் - எங்கள்
ஆவியுடல் பொருள் அத்தனையும் - உன்றன்
ஆசை நெருப்பில் துரும்புகளாம் - அடி

என்று பாடிச் சுதந்திரக் காதலியோடு தோய்வதில் பேரார்வம் காட்டுகிறார்.

சுதந்திரம் பெற்றவர் எவ்வெவ ரேனும்
அன்னவர் தேவர்க ளாவார் - அஃது
அற்றவர் யாவரும் வாடும் புழுக்கள்

என்று சுதந்திரம் பெற்ற மக்களின் பெருமையையும், சுதந்திரம் அற்றவர் இழிநிலைமையையும் விளக்குகிறார்.

பங்கப் படவிவை பிறரிட மடிமைபொ
ருந்திக் கெடுவதை விடுதலை செய ஒரு
சிங்கத் தினைநிகர் மனவலி அருளுக இதுதேதி!...

அங்கத் தனைபுய வலிபெற விசயனை
முந்தச் செயுமருள் எனதுள மிசையுற வரவேணும்...

விடுதலைப் போருக்குச் சிங்கம் போன்ற மனவலிமையும் அருச்சுனன் போன்ற போர் ஆற்றலும் தனக்குத் தரவேண்டுமென இப்பாடலில் பராசக்தியை வேண்டுகிறார்.

ஆத்திகராக அன்று விளங்கிய, இளைய பாரதிதாசனுக்குக் காந்தியடிகளின் பிறப்பு ஓர் அவதாரமாகப்பட்டது. இறைவன் அனுப்பிய பரிசுத்த ஆவி இயேசுவாக அவதரித்தது போல், இறைவனின் அருட்பேரொளியே காந்தியாக அவதரித்தது என்பதைக்

குறுகிய செயலில் வையம்
குதித்தது கரைக்கு மீள
இறையவன் அருளின் காந்தி
எழுந்தது புவியில் நெஞ்சே!

என்று பாடுகிறார்.

"சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்" என்று, முழுக்கமிட்டவர் திலகர். 'கீதா ரகசியம்' எழுதிய திலகர் 'கிளம்புங்கள் போருக்கு' என்று முழக்கமிட்டதை

ஓதுகின்ற யோகத்தால் பயன்கண்டாலும்
ஒருவர்க்கே பயனன்றிப் பிறருக் கில்லை!
மோதுகின்ற அறியாமை மிகுந்த நாட்டார்
யோகமெனும் மொழியினிலோர்மோகம் கொள்வார்
ஆதலினால் நீ இறத்தல் இல்லை தேகம்
அழிவதொன்றே என்னுமொரு சொல்லை மட்டும்
கீதையிலே இருந்தெடுத்துத் திலகன் காட்டிக்
'கிளம்புங்கள் பணிக்' கென்று முழக்கம் செய்தான்.

என்று திலகர் பெருமான் கட்டளையைப் பாரதிதாசன் பாரதத் திருநாட்டுக்குணர்த்துகிறார்.

பாங்கன் ஒருவன் கிடைத்தான் அரவிந்தர்க்கே
பாரதி ஓர் தமிழ்க் கவிஞன் நாட்டின் அன்பன்
தூங்கியது நாடந்தாள்; இரண்டு பேரும்
சொல்லாலே உணர்வுதந்தார்; ஏடும் தந்தார்
வங்காளச் சிங்கமவன் எண்ணம் செய்வான்
வரிப்புலிப் பாரதியதனைத் தமிழாய்ச் செய்வான்

என்று அரவிந்தர், பாரதி ஆகியோரின் அரும்பணிகளைப் பாராட்டிப் பாடுகிறார் பாரதிதாசன்.

வெள்ளையன் கப்ப லாலே
விரிந்தஇந் நாட்டின் செல்வம்
கொள்ளைகொண்டோடல் கண்டு
கொதிப்புற்ற சிதம்ப ரன்பேர்
பிள்ளைதான் பேரூக் கத்தால்
பிழைக்கவந் தடிமை கொண்ட
நொள்ளையர் மாயச் செய்தான்
நோன்மைசேர் கப்பல் விட்டான்.

என்று தேசபக்தர் வ.உ.சி யின் தொண்டைப் பாராட்டுகிறார் பாரதிதாசன்.

பாரதியின் நண்பரும் தீவிர தேசபக்தருமான மாடசாமியை ஒற்றர் பிடியிலிருந்து காப்பாற்றத் தாம் மேற்கொண்ட ஆபத்தான முயற்சியை

நாடுதொழும் ஊழியரை
நான் காக்க ஓர்வீட்டு
மாடியினின்றே குதித்து
மான்போலும் ஓடினேன்.

என்று குடும்பவிளக்கில் ஒரு முதியோர் கூற்றாகக் கூறுகிறார். மேலும் மாடசாமியைக் கப்பலில் ஏற்றிச் சைகோனுக்கு அனுப்ப நடுக்கடலில், தாம் பட்ட துன்பத்தையும் பாடுகிறார். பாரதியார் இட்ட பணியை முடிக்கச் சென்னைக்குச் சென்று ஒரு செட்டியார் கடையில் அமர்ந்திருந்தபோது அங்கு நேர்ந்த தாக்குதலையும், அதைத் தாம் சமாளித்த விதத்தையும் குடும்ப விளக்கில் குறிப்பாகச் சுட்டுகிறார். கல்கத்தாவில் 1920ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்புக் காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் உருப்பெற்றது. ஆங்கில அரசு வழங்கிய பட்டங்களையும், மரியாதைக்குரிய பதவிகளையும் துறப்பது, கல்விக் கூடங்களையும், நீதிமன்றங்களையும், சட்டமன்றங் களையும் புறக்கணிப்பது, அயல்நாட்டுத் துணிகளை அணியாமல் ஒதுக்குவது போன்ற திட்டங்களின் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம் செயற்பட்டது.

ஒத்துழையாமை இயக்கம் மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தது. மக்கள் தமது ஆற்றல் எத்தகையது என்பதை முதன் முதலாக உணர்ந்தனர். ஒத்துழையாமை இயக்கத்தைப் பாராட்டிப் பாரதிதாசன், 'சுதந்திரன்' என்ற ஏட்டில் எழுச்சிமிக்க கவிதைகள் எழுதினார்.

அடிமை உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்த பாரதத்தைத் தட்டி எழுப்பு வதற்கும், நாடு விடுதலை அடைவதற்கும் பதினெட்டுக் கூறுகள் கொண்ட நிர்மாணத் திட்டம் ஒன்றைக் காந்தியடிகள் மக்கள் முன் வைத்தார். அதன் கொள்கைகள் வகுப்பு ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர், கிராமக் கைத் தொழில் வளர்ச்சி, துப்புரவு, அடிப்படைக் கல்வி, முதியோர் கல்வி, பெண்ணுரிமை, உடல்நலம், தாய்மொழிக்கல்வி, பொருளியற் சமன்மை, தொழிலாளர் மாணவர் பழங்குடி நலன், தொழுநோய்த் தடுப்பு என்பன ஆகும்.

தேசிய இயக்கத்துக்கு துணை புரியும் நோக்கில் பாரதிதாசன் இயற்றி அச்சான நூல்கள் மூன்று.அவை-

சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்
தொண்டர் படைப் பாட்டு
கதர் இராட்டினப் பாட்டு

என்பன.

சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் பாரதியின் அரையுருவப் படமும்,கருத்து விளக்கப் படங்களும் கொண்டு, நாலனா விலையில் வெளியிடப்பட்டது. நல்ல வர்ண மெட்டுக்களில் தேசிய கீதங்கள், தேசிய விடுகவிகள், தேசியத் தாலாட்டுகள், தேசிய விளையாட்டுப் பாடல்கள், சிட்டுக்குருவிப் பாட்டு, நிலாப்பாட்டு, நாய்ப்பாட்டு, தேசியக் கப்பல், தேசியக் கல்யாணப் பாடல்கள் என்பவை அத்தொகுப்பில் அடங்கும்.

விடுகவி வடிவில் சிறுவர் படித்து மகிழும் வண்ணம் பாரதிதாசன் எழுதிய கவிதைகள் புதிர்த் தன்மையோடு அமைந்துள்ளன.

கங்கைநதி தலையிலுண்டு சிவனார் அல்ல
காலடியில் குமரியுண்டு ராமன் அல்ல
சங்கையற்ற வயதுண்டு கிழவி யல்ல
சாத்திரத்தின் ஊற்றனையாள் கலைமாதல்ல
எங்குலத்தைப் பெற்றதுண்டு பிரமன் அல்ல
ஏற்றுண்ணும் எண்ணமில்லை இறுமாப் பல்ல மங்கையென்று பாடிடுவார் புலவ ரெல்லாம்
மற்றிதனை இன்னதென எழுதுவீரே!

இவ்விடுகவிக்கு விடை 'பாரதநாடு', அதன் பெருமைகள் இவ்வெண்சீர் விருத்தத்தில் வரிசைப் படுத்துப் படுகின்றன.

அதிக உயரத்தில் ஆகாய வாணி
அவளுர்க்கும் நம்மூர்க்கும் வைத்ததோர் ஏணி
மதிப்புக் கடங்குமோ அவ்வேணி உயரம்
மனிதர்சிலர் ஏறப்பார்த் தடைந்தனர் துயரம்
குதித்துக் குதிக்திறங் கிடுவர் சில பெண்கள்
குளிரில் இறங்குகையில் பாடிடுவர் பண்கள்
இதற்கு விடைசொல்லக் கூடுமா? என்னால்
ஏற்ற பரிசளிக்க லாகும் இது சொன்னால்

இதன் விடை விண்ணை இடிக்கும் இமயமலை.

சுதந்திரமாக வானில் வட்டமிட்டுத் திரியும் சிட்டுக் குருவியைப் பார்த்து, இந்திய மக்களும் அதைப்போல் சுதந்திரமாய் வாழ வழி கேட்கிறார்.

உன்னை கேட்பேன் ஒருசேதி
உரிமைப் பெண்ணின் நன்மகளே
தின்னத் தீனி தந்திடுவேன்
தெரிவிக்காமல் ஓடாதே
உன்னைப் போலே இன்பத்தில்
ஊறும் வகைதான் என்னேடி?

கழுத்துப்பட்டை தாங்கி வடுப்பட்டுத் திரியும் சீமான் வீட்டு வெள்ளை நாயைப் பார்த்துத் தெருவில் சுதந்திரமாகத் திரியும் கறுப்புநாய் கேலி செய்வது போல ஒரு பாடல்:

அடிமை யாய்நீ இருப்பதேன்?
கதிதான் கெடநீ நடப்பதா?
கட்டுப் பட்டுக் கிடப்பதா?
சதிராய் உன்னிடம் அண்டேனே
சதையில் ரத்தம் சுண்டேனே!

மணமக்களுக்குத் தேசியக் கல்யாண வாழ்த்துப் பாடல்:

வாழ்க தம்பதிகள் வாழ்கநற் கற்றமே
வாழ்க நற்பாரத சோதரர் முற்றுமே!
வாழ்க நற்பாரத தேசமும் புவியும்
வாழ்க எவ்வுயிரும் நனி வாழ்க!

ஆண்பிள்ளை தாலாட்டு:

வேளைக்கு வேளை விறல் வளரும் பாரதனே!
அமுதம் உனக்குப் பாரதத்தாய் அன்பெல்லாம்
இன்பம் உனக்குப் பாரதப்போர் ஏற்பதிலே.
வெல்வம்என்று நீதான் விழிதுயில்வாய் பாரதனே.

பெண் குழந்தை தாலாட்டு:

மொய்த்திருக்கும் உன்சமூகம் முப்பத்து முக்கோடி
வங்கத்து வீரருன்றன் வாழ்க்கையிலே சம்பந்தி
தேசத்துருக்கரெலாம் தேவியுன்றன் அண்ணன்மார்
மீசைத் தெலுங்கர்களும் வில்லர்களும் மைத்துனர்கள்
அமிழ்தக் கவிகள் அம்புவிக்குச் சொல்லிவைத்த
தமிழ்நாட்டு வீரரெலாம் சண்பகமே, சொந்தத்தார்.
நாட்டுக்கு நூலிழைக்கும் நங்கையருன் அக்கையர்கள்
வீட்டில் துணிநெய்யும் வீரருன்றன் அம்மான்கள்
கன்னியா குமரிமுதல் கங்கை இமயம்வரைக்கும்
உன்னிரத்தம் சேர்ந்த உடம்புடையார் பாரதத்தார்....

'தொண்டர் படைப்பாட்டு' என்னும் நூல் மூன்றணா விலையில் கருத்து விளக்கப் படங்களோடு "தாய்நாடு, தொண்டரின் எழுச்சி, தொண்டரைக் கூட்டுதல், வீரன் தோள், வீரத் தமிழர், மிதவாதியை எழுப்பல்" என்ற பலவகைப் பாடல்களைக் கொண்டது. இந்நூல் இப்போது கிடைப்பதில்லை. அதில் ஒரு பகுதி:

சேர்வீர் தொண்டர்படைக் கெல்லோரும்-அரைநொடியில்
பாரீர் நமக்குவந்த கேடு-பொறுக்கவில்லை
வாரீர் இதனை அடியோடு-கல்ல எம்மோடு
இன்பம் பொலிந்த திருநாட்டை-நவமணிகள்
ஈன்றோர் குவித்துவைத்த வீட்டை-மறவர் குலம்
என்றும் மலிந்திருக்கும்-இணையுலகில்
இல்லாவிதம் கிடைத்த தேட்டைப் பிறர் தளைந்த
வன்மை விலங்ககலப் பூட்டை-உடைத்துக் காட்டச்
(சேர்வீர்)

கண்ணன் வழிப்பிறந்த சாதி-நமக்கருந்த
கஞ்சியற்று வயிற்றிற் பாதி-பிணிவகைகள்
நண்ணி வருத்துவதுமீதி-அடிமையென
நம்மைப்பிடித்திட்ட வியாதி-தொலைந்ததென்று
விண்ணும் அதிர்சங்கையூதிப்-பராக்கென்றோதி
(சேர்வீர்)

பாரதிதாசன் 'கதர் இராட்டினப் பாட்டு' என்ற நூலை வெளியிட்ட தோடு கதர்த் துணியையும் தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றார் என்ற சேதி குறிப்பிடத் தக்கது. கதர்ப்பாட்டு உணர்ச்சி பூர்வமாக எழுதப் பட்டுள்ளது.

அன்னியர் நூலைத் தொடோம் என்ற சேதி
அறைந்திடடா புவிமுற்றும்-எங்கள்
அறுபதுகோடி தடக்கைள் ராட்டினம் சுற்றும் சுற்றும் சுற்றும்

இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல்
இராட்டினம் சுற்றென்று சொல்லும்-எங்கள்
ஏதமில் காந்தி யடிகள் அறச்செயல் வெல்லும் வெல்லும்
வெல்லும்

கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல்
கழறுகிறேன் அதைக் கேளே-நீவிர்
கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத் துளே துளே துளே!

காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களுள் குறிப்பிடத்தக்கது தேசியக் கல்வித் திட்டம். "ஆங்கிலக்கல்வியால் படித்த மக்களுக்கும் பாமர மக்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். பாமர மக்களின் உள்ளம் வளர வழியின்றிச் சிறைப்பட்டே இருக்கும். அதனால் சுயராஜ்ஜியத்தை நிர்ணயிப்பதில் பாமர மக்கள் எந்தப் பங்கும் வகிக்க முடியாது" என்று மிகுமக்கள் நலனுக்கெதிரான ஆங்கில மோகத்தைக் காந்தியடிகள் சுட்டுகிறார். இக்கருத்தை வலியுறுத்த வந்த பாரதிதாசன்

செந்தமிழாற் கம்பன் சிறந்தானா நேற்றிங்கு
வந்தவரின் ஆங்கிலத்தால் இன்பம் வளர்த்தானா?
அருச்சுனன்போல் கண்ணன்போல் ஆக நினைத்தால்
மருளுட்டும் ஆங்கிலத்தை மாய்ப்பீர் உம் சிந்தையிலே
வந்தவர்.பால் நீங்களெல்லாம் வாங்கியுண்ணக் கற்றீர்கள்
நொந்த உமது குலம் ஈடேற நோக்கீரோ?

என்று பாடுகிறார்.

உணவு, உடை, மருத்துவம் ஆகியவற்றிலும் வெள்ளையரைப் பின்பற்றி வந்த இழிநிலையை, ஒத்துழையாமை இயக்கம் வன்மை யாகக் கண்டித்தது. பாரதிதாசனும் இப்பண்பாட்டுச் சீரழிவை 'நீசநாகரிகம்' ஸ்வதர்மம் முதலிய பாடல்களில் கண்டிக்கிறார்.

வெள்ளைத்துரை உடைபோலுடுப்பீர்மயிர்
வெட்டிக் கொள்வோம் தமிழ் துப்பிச் செல்வோம் - எனத்
துள்ளுது மற்றொரு நாகரிகம் இதில்
சொக்குதல் பற்பலர் பாரதமே.
செந்தமிழிற்பெயர் இட்டறியாக் கொடு
தேயிலை காப்பியை முப்பொழுதும் உண்டு
வந்தனை செய்யென நாகரிக மொன்று
வல்லமை காட்டுது பாரதமே.

வெள்ளை வயித்தியம் தெய்விகமாம் - அதை
வேண்டி அழைப்பது செய்தவமாம்
உள்ள மகிழ்ந்து குதிக்குதிங்கே - புலை
ஊனர் விரும்பிய நாகரிகம்

என்று கடுமையாகச் சாடுகிறார்.

"பணம் படைத்தவர்கள் பசுக்களைக் காப்பதில் சேவையுணர்ச்சி யோடு ஈடுபட வேண்டும். சுயலாபமும் சுரண்டலும் இதில் கூடாது. பசு பாலனம் எளிதன்று. அந்நிய ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றுவதைவிட இது கடினமானது" என்று பசுக்காப்புப் பற்றிக் காந்தி அடிகள் கூறியுள்ளார். அக்கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்ட பாரதிதாசன், தமிழ் இலக்கண இலக்கியங்களிலிருந்து 'ஆநிரை' பற்றிக் கூறிய கருத்துக்களை ஒரு கட்டுரையிலும் பாடலிலும் விளக்கியுள்ளார்.

மடியினில் பால்சுமந்தே
மாந்தருக் களித்திட வருகின்ற தாய்

என்றும்,

மோரோடு சுளைத் தயிரும் - மணம்
மொகுமொகு மொகுவென நெய்ப் பயனும்
தருகின்ற தாய்

என்றும்,

குவலயம் தனக்கொரு செவிலி

என்றும்,

பசுவைப் பலபடப் பாராட்டுகிறார் பாவேந்தர். நாடெங்கும் பசுச்சாலைகள், புல்வெளிகள், பசுக்குளங்கள் அமைக்க வேண்டு மென்று மக்களைக் கேட்டுக் கொள்கிறார்.

மேல்நாட்டு மதுவுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிதாசன், மதுவிலக்குப் பணியிலும் தம்மை இணைத்துக்கொண்டு பாடிய மூன்று பாடல்கள் இப்போது கிடைத்துள்ளன. குடியர்கள் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு தெளிவு பெற்றுப் பாரத தேவியிடம் கூறுவதாக ஒரு பாடல்:

அம்மா இனிக்குடிக்க மாட்டோம் அதன்தீமை
கைமேல் கனிபோலக் கண்டுவிட்டோம் ஏழைகள்
பொய்ம்மானைப் பின்பற்றி ராமன் புரிந்ததுபோல்
இம்மதுவின் மாயங்கண் டிடறித் தலைகவிழ்ந்தோம்
நஞ்சிருந்த பாண்டத்தை நக்கி வசமிழந்து
நெஞ்சில் உரமிழந்து நிதியிழந்தோம் எந்தாயே!
பஞ்சத்தைத் தேசத்தைப் பாபத்தைப் பெண்டாட்டி
நெஞ்சத்தை எண்ணி விஷப்புனலை நீக்கிவிட்டோம்

என்று பாடி மதுவின் தீமைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். பிள்ளைப் பாட்டாக, மதுவிலக்கு விடுகவி ஒன்றும் பாடுகிறார் கவிஞர்.

ஈக்கள் எறும்புகள் எலிகள் பூனைகள்
எருதுகள் குதிரைகள்

பூக்கள் மரங்கள் செடிகள் கொடிகள்
புளிகள் மிளகாய்கள்

ஊக்கங் கெடவைத்து உங்கள் பணத்தை
ஒழித்துப் பாரதத்தை
ஏக்கங் கொள்ள அறிவை மயக்குவது
இவற்றில் எது சொல்வாய்?

இப்பாடலில் பன்மை விகுதியாகிய 'கள்' அடிதோறும் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். இதில் குறிப்பிட்டவற்றுள் புளிகள் என்பது விடை புளித்த கள்ளைச் சாப்பிட்டால் மயக்கம் கொள்வது போல் மயங்கிப் பின் தெளிவடைந்து விடையைக் கண்டு பிடிக்கிறோம்.

"நாட்டின் செல்வத்தில் பெரும்பகுதி சிலரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கிறது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் உண்ணவும் உடுக்கவும் வகையில்லாது அவதிப்படுகின்றனர். நாட்டில் பொருளாதார சமத்துவம் தேவை. மக்களிடையில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருக்கின்ற வரையில் அகிம்சை முறையில் ஆட்சி நடத்துவது சாத்தியமில்லை" என்றார் காந்தியடிகள். இக்கருத்தை மையமாக வைத்துப் பாரதிதாசன் பாடிய பாடல் குறிப்பிடத்தக்கது.

போய்த்தொடுவோம்.அந்த விண்னை அமுதத்தைப்
பூமிக்கெல்லாம் தருவோம்
தாய்கொடுத் தாளிந்தச்சத்திய வேலென்று
தாரணி ஆண்டிடு வோம்
ஏழைகள் கையிருப் புள்ளவர் என்னும்
இரட்டையைக் கொன்றிடுவோம்
கூழுக்கொருவன் அழும்படி ஆண்டிடும்
கோலை முறித்திடுவோம்.

"இந்நாட்டுச் சேரிகளில் அரிஜனங்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கொடுமைக்கு ஒப்பானது உலகில் வேறெங்கும் இல்லை. தீண்டாமை இந்து மதத்துக்கு ஏற்பட்ட சாபம்" என்று காந்தியடிகள் கூறியுள்ளார்.

"இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில் நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ”

என்று கேள்விக்கணை எழுப்புகிறார் பாரதிதாசன்.

தீண்டாமை என்னுமொரு பேய்-இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம்-எனில்
ஈண்டுப்பிற நாட்டில் இருப்போர்-செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்-

என்று தீண்டாமையின் இழிவையும் சுட்டிக்காட்டுகிறார். 'ஆலய உரிமை' என்னும் பாடலில் தாழ்த்தப்பட்டோருக்கு நுழைவுரிமை மறுக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்து

தாழ்த்தப் பட்டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் அவர்
வாழ்த்தி அழைக்கும் சுதந்தரம் தன்னை
மறித்திடும் நாச மக்கள்
முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரே சமூகம் என
ஒப்புந் தலைவர்கள் கோவிலில் மட்டும்
ஒப்பாவிடில் என்ன சுகம்?

என்று பாடுகிறார் பாரதிதாசன்.

பெண்ணுரிமை பற்றிப் பாரதிதாசன் பாடியுள்ள அளவு வேறு யாரும் பாடவில்லை. கைம்மை மணத்தை ஆதரித்துத் தமிழில் துணிச்சலாகக் கவிதை பாடியவர் பாரதிதாசன். 1923ஆம் ஆண்டில் வெற்றி நெருக்கம் என்ற தலைப்பில் தேச சேவகன் இதழில் ஒரு கும்மிப்பாடல் பாடியுள்ளார்.

வேட்கை இருக்குதடி இந்த நேரத்தில்
வெற்றி இருக்குதுபார் எதிரே
நாட்டில் விடுதலை என்பதோர் நற்பதம்
நம்மை நெருங்குது மாதர்களே!

மேட்டு நரிகட்கும் மேய்ந்திடும் கூகைக்கும்
மேனி நடுங்கிடப் போவதில்லை
பூட்டிய வண்டி யவிழ்ப்பதில்லை உயிர்
போகுமட்டும் விடப் போவதில்லை

என்று பெண்டிர் எழுச்சிக்குக் கட்டியம் கூறியுள்ளார். பாரதிதாசன் இளமையில் நூற்றுக்கு நூறு காந்தியவாதி.


"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதிதாசன்/தேசியக்_கவி&oldid=1509724" இலிருந்து மீள்விக்கப்பட்டது