பாரதிதாசன் கதைப் பாடல்கள்/நல்லமுத்துக் கதை


6 நல்லமுத்துக் கதை

காட்சி - 1

திருமண முயற்சி

(விரசலூர் வெள்ளைய்யப்பன் மனைவியாகிய
மண்ணாங்கட்டியிடம் கூறுகிறான்:)

ன்னைத் தானே! என்னசெய் கின்றாய்?
இங்குவா இதைக்கேள்! இப்படி உட்கார்!
பைய னுக்கு மணத்தைப் பண்ணிக்
கண்ணால் பார்க்கக் கருதினேன். உன்றன்
எண்ணம் எப்படி? ஏனெனில் பையனுக்
காண்டோ இருபது ஆகிவிட்டது.
பாண்டியன் தானோ, பழைய சோழனோ,
சேரனே இப்படித் தெருவில் வந்தானோ!
என்று பலரும் எண்ணுகின்றனர்.
அத்தனை அழகும் அத்தனை வாட்டமும்
உடையவன், திருமணம் முடிக்கா விட்டால்
நடையோ பிசகி விடவும் கூடும்.
நாட்டின் நிலையோ நன்றாயில்லை.
சாதி என்பதும் சாத்திரம் என்பதும்
தள்ளடா என்று சாற்றவும் தொடங்கினார்.
பார்ப்பனர் நடத்தும் பழமண முறையைப்
பழிக்கவும் தொடங்கினர் பழிகா ரர்கள்.
இளைஞரை, அவர்கள் இவ்வாறு கெடுப்பதே
வளமையாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் எவளோ ஒருத்தியைப்

பையன் ஏறிட்டுப் பார்த்தால் போதும்;
வெடுக்கென மணத்தை முடித்திடு வார்கள்.
என்ன? நான் சொல்வதெப்படி? ஏன்? உம்?

மனைவியாகிய மண்ணாங்கட்டி :

இன்றுதான் பிறந்ததோ இந்த உறுதி?
பையனுக்குப் பத்து வயசு
தொடங்கியதிலிருந்து சொல்லி வந்தேன்;
காது கேட்டதா? கருத்தில் பட்டதா?
ஐயரை உடனே அழைக்க வேண்டும்.
பையனின் குறிப்பைப் பார்க்க வேண்டும்.
கிழக்குத் திசையில் இருக்கின்றாள் பெண்?
சொத்துள்ளவளா? தோதான் இடமா?
மங்கை சிவப்பா?-மாஞ்செவலையா?
என்றுபெண் பார்க்க இங்கிருந்துநாம்
புறப்படவேண்டும்? புரிய வேண்டுமே.

வெள்ளையப்பன் :

புரோகிதன் நல்லநாள் பொறுக்குவான், அவனை
இராகுகா லத்திலா இங்க ழைப்பது?
ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்போம்.
நடத்ததை, இனிமேல் நடக்கப் போவதை,
நடந்துகொண்டிருப்பதை நன்றாய்ச் சொல்வான்.
இடையில் குறுக்கிடும் தடைகள் சொல்வான்.
எல்லாம் சொல்வான். ஏற்படு கின்ற
பொல்லாங் கெல்லாம் போக்கவும் முடியும்.
ஒருபொழுதுக்கான அரிசி வாங்க
அரை ரூபாயையும் அவனுண்டு பண்ண
முடியுமா? நம்மால் முடிந்த வரைக்கும்
ஏற்பாடு செய்துகொண்டிட்டு வருவோம்.

காட்சி - 2

(மாப்பிள்ளையின் சாதகம் பார்த்தல்)

(சொறிபிடித்த சொக்குப் புரோகிதனிடம்
வீட்டுக்கார வெள்ளையப்பன் சொல்லுகிறான்:)

இதுதான் ஐயரே என்மகன் சாதகம்:
திருமணம் விரைவில் செய்ய வேண்டும்.
எப்போது முடியும்? எங்கே மணமகள்?
மணமகட்குரிய வாய்ப்பெலாம் எப்படி?
அயலா? உறவா? அணிமையா? சேய்மையா?
பொறுமையாய்ப் பார்த்துப் புகல வேண்டும்.

(மண்ணாங்கட்டி புரோகிதனிடம் கூறுகிறாள் :)

காலையில் வருவதாய்க் கழறி னிரே,
மாலையில் வந்தீர் என்ன காரணம்?

(சொறிபிடித்த சொக்கு சொல்லுகிறான் :)

தெரியா மல்என் பெரிய பெண்ணைத்
திருட்டுப் பயலுக்குத் திருமணம் செய்தேன்;
வட்டிக் கடையில் வயிர நகையைப்
பெட்டி யோடு தட்டிக் கொண்டதால்
சிறைக்குப் போனான். செத்தும் தொலைந்தான்.
கட்டியதாலியைக் கழற்றி எறிந்து
மொட்டைத் தலையுடன் மூதேவி போலப்
பெரியவள் பிறந்தகம் வரநேர்ந்து விட்டது.
சின்னப் பெண்ணைப் பின்னத் தூரில்
கப்பல் கப்பலாய்க் கருவாடேற்றும்
வாசனுக்கு மணம்செய் வித்தேன்.
மணம் முடிந்த மறுநாள் தெரிந்தது

வாசன் கருவாட்டு வாணிகன் அல்லன்
வாணிகன் கூலியாள் வாசன் என்பது!
ஒருநாள் வாசன் பெருங்குடிவெறியால்
நாயைக் கடித்தான். நாயும் கடித்தது.
நஞ்சேறியதால் நாய்போல் குரைத்தே
அஞ்சாறு நாளாய் அல்லல் பட்டே
இரண்டு நாளின்முன் இறந்து போனான்.
ஓலை வந்தது காலையில் கையில்-
கேட்டா லுஞ்சரி விட்டா லுஞ்சரி-
இரண்டனாக் காசும் இல்லை மெய்யாய்!
இந்நேர மட்டும் ஏதோதோ நான்
தில்லு முல்லுகள் செய்து பார்த்தேன்.
யாரும் சிறிதும் ஏமாற வில்லை.
உங்களிடத்தில் ஓடிவந்தேன்.
சாதகம் பார்த்துச் சரியாய்ச் சொல்வேன்;
முன்நடந்தவைகளை முதலில் சொல்வேன்;
ஐயா இதுஓர் ஆணின் சாதகம்.

வெள்ளையப்பன் :

ஆமாம் அடடா ஆமாம் மெய்தான்்!

புரோகிதன் :

ஆண்டோ இருப தாயிற்றுப் பிள்ளைக்கு
ளபையனோ நல்ல பையன். அறிஞன்.
ஈன்றதாய் தந்தை இருக்கின் றார்கள்.
உங்களுக் கிவனோ ஒரே பையன்தான்.
பையன் தந்தை பலசரக்கு விற்பவர்
தாய்க்கோ ஒருகால் சரியாய் இராது.

மண்ணாங்கட்டி:

அத்தனையும் சரி. அத்தனையும் சரி.
எப்போது திருமணம் ஏற்படக் கூடும்?

புரோகிதன் :

இந்தவைகாசி எட்டுத் தேதிக்கு
முந்தியே திருமணம் முடிந்திடவேண்டும்.

மண்ணாங்கட்டி :

அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா?

புரோகிதன் :

நடுவில் ஒரேஒரு தடையிருப்பதால்
ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி.

வெள்ளையப்பன் :

அப்படிச்சொல்லுக அதுதானே சரி.

மண்ணாங்கட்டி :

மணப்பெண் என்ன பணக்காரி தானா?

புரோகிதன் :

மணப்பெண் கொழுத்த பணக்கா ரன்மகள்.
பெற்றவர்கட்கும் உற்றபெண் ஒருத்திதான்.
மண முடிந்தபின் மறுமா தத்தில்
ஈன்றவர் இருவரும் இறந்துபோ வார்கள்.
பெண்ணின் சொத்து பிள்ளைக்கு வந்திடும்.

மண்ணாங்கட்டி :

எந்தத் திசையில் இருக்கின் றாள்பெண்?

புரோகிதன் :

வடகிழக்கில் மணப்பெண் கிடைப்பாள்.
தொலைவில் அல்ல தொண்ணூறு கல்லில்.

மண்ணாங்கட்டி :

அப்படியானால் அரசலூர் தானா?

புரோகிதன் :

இருக்கலாம் இருக்கலாம் ஏன் இருக்காது?

வெள்ளையப்பன் :

எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நானே?

மண்ணாங்கட்டி :

எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நாங்கள்?

வெள்ளையப்பன் :

யான் மட்டும்போகவா? இருவரும்போகவா?

புரோகிதன் :

நாளைக் காலையில் நாலு மணிக்கு
நீவிர் மட்டும்போவது நேர்மை:
நாழிகை ஆயிற்று நான்போக வேண்டும்.



மண்ணாங்கட்டி :

இன்னும் ஒன்றே ஒன்று சொல்லுவீர்.
என்ன என்றால்-வேறொன்று மில்லை.
எனக்குக் குழந்தை இன்னம் பிறக்குமா?

வெள்ளையப்பன் :

உக்கும் இனிமேல் உனக்கா பிள்ளை?

புரோகிதன் :

இனிமேல் பிள்ளை இல்லை இல்லை.

மண்ணாங்கட்டி :

இந்தா நாலணா எழுந்துபோம் ஐயரே!

புரோகிதன் :

ஆயினும் இந்த ஆவணிக்குப் பின்
பெண்குழந்தை பிறக்கும் உறுதி;
போதாது நாலணா, போட்டுக் கொடுங்கள்.

மண்ணாங்கட்டி :

சரி,இந் தாரும் ஒருரூ பாய்தான்!

காட்சி - 3

புதிய தொடர்பு

(அரசலூர் அம்மாக்கண்ணுவிடம்
விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான் :)

நிறைய உண்டேன் நீங்கள் இட்டதைக்
கறிவகை மிகவும் கணக்காய் இருந்தன.
அரசலூர் வந்ததை அறிவிக்கின்றேன் :
இரிசன் மகளை என்மக னுக்குக்
கேட்க வந்தேன்; கேட்டேன் ஒப்பினான்.
சாப்பிடச் சொன்னான்; சாப்பாடு முடிந்தது;
மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொன்னான்;
சரிதான் என்றேன்! வரும்வழி தன்னில்
உன்னைப் பார்க்க உள்ளம் விரும்பவே
வந்தேன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன்.
பெண்குழந்தை பெறவில்லை நீ
மருந்துபோல் ஒருமகன் வாய்த்திருக்கின்றான்.
அவனுக்கும் திருமணம் ஆக வேண்டும்.
உன்றன் கணவர் உயிருடன் இருந்தால்
திருமணம் மகனுக்குச் செய்திருப்பார்.

(அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள் :)

அவர்இறந் தின்றைக் கைந்தாண் டாயின.
பதினெட்டு வயது பையனுக்கு காயின:
எந்தக் குறையும் எங்களுக் கில்லை.
நன்செயில் நறுக்காய் நாற்பது காணியும்
புன்செயில் பொறுக்காய் ஒன்பது காணியும்
இந்த வீடும் இன்னொரு வீடும்

சந்தைத் தோப்பும் தக்க மாந்தோப்பும்
சொத்தாகத்தான் வைத்துப் போனார்.
என்ன குறைஎனில் சின்ன வயதில்
என்னை விட்டுச் சென்றார்.
பார்ப்பவர் ஏதும் பழுது சொல்லாது
தனியே காலந்தள்ளி வந்தேன்.
இனிமேல் என்னமோ! யாரதை அறிவார்?

விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான் :

நடந்தது பற்றி நாவருந் தாதே.
கடந்தது பற்றிக் கண்கலங் காதே.
நான்இன்று மாலை நாலரை மணிக்கெலாம்
விரசலூர் போக வேண்டும்! என்ன?

அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள் :

ஹுஹு நான்.அதை ஒப்ப மாட்டேன்.
இன்றிரவு நன்றாய் இங்குத் தங்கிக்
காலையில், மசால்வடை சுட்டதும், சுடச்சுட
வெண்ணெய் உருக்கும், மிளகாய்ப் பொடியும்
தொட்டும் தோய்த்தும் ஒட்ட உண்டு
சற்று நேரம் கட்டிலில் துயின்றால்,
இரவில்கண்விழித்த இளைப்புத் தீரும்.
திருந்த நடுப்பகல் விருந்து முடித்துப்
போக நினைத்தால் போவது தானே?

விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான் :

அன்பு மிக்க அம்மாக் கண்ணே!
பின்புநான் என்ன பேசமுடியும்?

அப்படியே என்அம்மாக் கண்ணு!
சொற்படிநடப்பேன் சொற்படி நடப்பேன்.

காட்சி - 4

பெண் எப்படி?

விரசலூர் வெள்ளையப்பன்
மனைவி மண்ணாங்கட்டிக்குக் கூறுகிறான்:

நல்ல உயரம் நல்ல கட்டுடல்
நல்ல பண்பு நல்ல சிவப்பே
எல்லாம் பொருத்தம்! எனக்குப் பிடித்தம்!
செல்லாக் காசும் செலவில்லை நமக்கே!
அனைத்தும் அவர்கள் பொறுப்பே ஆகும்.
மணமகள் வீட்டில் மணம்வைத்துள்ளார்.

மண்ணாங்கட்டி :

சாதியில் ஏதும் தாழ்த்தி யில்லை!
சொத்தில் ஏதும் சுருக்கம் இல்லை!
ஏழு பெண்களில் இவள்தான் தலைச்சனோ?
எப்படியாகிலும் இருந்து போகட்டும்.
பெண்கள் ஏழுபேர் பிறந்தனர், ஆணோ
பிறக்க வில்லை, பெரிய குறைதான்.
எப்படியாகிலும் இருந்து போகட்டும்.
எழுபது காணி நஞ்செய் என்றால்
பையனுக்குப் பத்துக் காணி தான்!
எழுப தாயிரம் இருப்புப் பணமா?
பையனுக்குப் பதினாயிரம் வரும்.
எப்படியாகிலும் இருந்து போகட்டும்!

மாப்பிள்ளளை பார்க்க எப்போது வருவார்?

வெள்ளையப்பன் விள்ளுகிறான் :

காலையில் வருவார் கட்டாய மாக.

காட்சி - 5

மாப்பிள்ளை பார்த்தல்

(விரசலூர் வெள்ளையப்பனும் இரிசனும் பேசுகிறார்கள்)

வெள்ளையப்பன் :

வருக வருக இரிசப்ப னாரே!
அமர்க அமர்க அந்தநாற் காலியில்!
குடிப்பீர் குடிப்பீர் கொத்தமல்லி நீர்!
வீட்டில் அனைவரும்மிகநலந் தானே?
பிள்ளைகள் எல்லாம் பெருநலந் தானே?
என்மகன் இந்த எதிர்த்த அறையில்
படித்திருக்கிறான் பார்க்கலாமே.

இரிசன் இயம்புகிறான்:

பையன் முகத்தைப் பார்க்க வேண்டும்.
பிள்ளையாண்டானொடு பேச வேண்டும்.
இங்கே இருங்கள் யான்போய்ப் பார்ப்பேன்.
(நல்லமுத்துவும் இரிசனும் பேசுகின்றார்கள்.)

நல்லமுத்து :

யார் நீர் ஐயா? எங்கு வந்தீர்?
ஊர்பேர் அறியேன் உள்வர லாமா?
அப்பா இல்லையா அவ்விடத்தில்?

இரிசன் :

அப்பா முந்தாநாள் அரசலூர் வந்தார்.

எதற்கு வந்தார்? அதுதெரியாதா?

நல்லமுத்து :

அசரலூர் சென்றார் அப்பா என்றால்
அறியேன், ஏனதை அறிய வேண்டும்?

இரிசன் :

திருமணம் உனக்குச் செய்ய எண்ணினார்;
அதற்காகத்தான் அங்கு வந்தார்.
உன்பெயர் என்ன? உரைப்பாய் தம்பி!

நல்லமுத்து :

என்பெயர் நல்லமுத் தென்றிசைப்பார்.

இரிசன் :

என்ன படிக்கிறாய் இந்நேரத்தில்!

நல்லமுத்து :

காலே அரைக்கால் கம்பராமாயணம்.

இரிசன் :

காலே அரைக்கால் கம்பரா மாயண
நூலும் உண்டோ? நுவலுகதம்பி!

நல்லமுத்து :

சிதம்பர நாதர் திருவரு ளாலே
அரையே அரைக்கால் அழிந்தது போக,
மேலும் மொழிமாற்று வேலைப் பாட்டுடன்
காலே அரைக்கால் கம்பராமாயணம்
அச்சிடப் பட்டதை அறியீ ரோ நீர்?

இரிசன் :

உனக்குத் திருமணம் உடனே நடத்த
என்மகளைத் தான் உன்தந்தை கேட்டார்
பெண்ணை உன்தந்தை பேசினார், பார்த்தார்.
நீயும் ஒருமுறை நேரில் பார்ப்பாய்.

நல்லமுத்து :

அப்பா பார்த்தார் அதுவே போதும்.

இரிசன் :

மணந்து கொள்வார் இணங்க வேண்டுமே?

நல்லமுத்து :

அப்பா இணங்கினார்! அதுவே போதும்!

இரிசன் :

கட்டிக் கொள்பவர் கண்ணுக்குப் பிடித்தமா
என்பது தானே எனக்கு வேண்டும்.

நல்லமுத்து :

பெற்ற தந்தைக்குப் பிடித்ததா, இல்லையா?
பிடித்தம் என்றால், எனக்கும் பிடித்தமே!

இரிசன் :

என்மகள், ஒருமுறை உன்னைப் பார்க்க
நினைப்பதாலே நீவர வேண்டும்.

நல்லமுத்து :

அப்பாவைப் பார்த்தாள் அதுவே போதும்
அப்பா கருத்துக்கு அட்டி உண்டா?

இந்தராமாயணம் இயம்புவ தென்ன?
தந்தை சொல்லைத் தட்டலா காதே
என்று தானே இயம்புகின்றது?

இரிசன் :

மகிழ்ச்சி, தம்பி வருகின் றேன்நான்.

இரிசன் வெள்ளையப்பனிடம் :

நல்ல முத்து மிகவும் மதிப்பவன்.
அடக்க முடையவன் அன்பு மிகுந்தவன்.
பொழுது போயிற்றுப் போய்வருகின்றேன்.

வெள்ளையப்பன் :

போகலாம் நாளைக்குப் பொழுதுபோ யிற்றே?</poem>}}

இரிசன் :

பொறுத்துக் கொள்க, போய்வரு கின்றேன்.

வெள்ளையப்பன் :

போகலாம் நாளைக்குப் பொழுதுபோ யிற்றே?

இரிசன் :

பொறுத்துக் கொள்க, போய்வரு கின்றேன்.

காட்சி - 6

அம்மாக்கண்ணுக்கு ஆளானான்
(அம்மாக்கண்ணும் வெள்ளையப்பனும்)

வெள்ளையப்பன் :

உன்றன் நினைவால் ஓடி வந்தேன்
இரண்டு நாள்முன் இரிசன் வந்து

மாப்பிள்ளை பார்த்தான் மகிழ்ச்சி கொண்டான்.
திருமணத்தின் தேதி குறிக்க
வருவதுபோலவந்தேன் இங்கே.
மண்ணாங் கட்டியும் வருவேன் என்றாள்.
தட்டிக் கழித்துநான் தனியே வந்தேன்.

அம்மாக்கண்ணு :

இன்று நீங்கள் இங்கு வராவிடில்
என்றன் உயிரே ஏன் இருக்கும்.
பிரிந்து சென்றீர்! பிசைந்த சோற்றைக்
கையால் அள்ளினால் வாயோ கசக்கும்;
பச்சைத் தண்ணி பருகி அறியேன்.
 ஏக்கம் இருக்கையில் தூக்கமா வரும்?
பூனை உருட்டும் பானையை அவ்வொலி
நீங்கள் வரும்ஒலி என்று நினைப்பேன்.
தெருநாய் குரைக்கும் வருகின் றாரோ
என்று நினைப்பேன் ஏமாந்து போவேன்.
கழுதை கத்தும், கனைத்தீர் என்று
எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன்.
உம்மைஎப் போதும் உள்ளத்தில் வைத்தால்
அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள்!
சட்டியும் நீங்கள்! பானையும் நீங்கள்!
வீடும் நீங்கள்! மாடும் நீங்கள்!
திகைப்ப டைந்து தெருவிற் போனால்
மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள்!
கழுதை நீங்கள் குதிரை நீங்கள்!
எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும்.
இனிமேல் நொடியும் என்னை விட்டுப்
பிரிந்தால் என்னுயிர் பிரிந்து போகும்.

வெள்ளையப்பன் சொல்லுகிறான் :

அழாதே, தரையில் அம்மாக் கண்ணு
விழாதே, உன்னை விட்டுப் பிரியேன்;
துடைகண்ணிரைப், புடவையும் நனைந்ததே!
பயித்தியக் காரி பச்சையாய்ச் சொல்வேன்.
என்னுயிர் இந்தா! பிடி உன்னதுதான்!

அம்மாக்கண்ணு :

இரிசன் மகளையும் என்மக னுக்கே
பேசி முடிப்பீர்; பின்பு நீங்களும்
இங்கே யேதான் தங்கினால் என்ன?
என்மகன் உங்கள் பொன்மகன் அல்லனோ?
இங்குள தெல்லாம் உங்கள் சொத்தே.
மண்ணாங் கட்டிதான் மனைவியோ? இங்குள
பொன்னாங் கட்டிபோயொழிந்தாளோ?

வெள்ளையப்பன் :

உறுதி உறுதி உன்மக னுக்கே
இரிசன் மகளை ஏற்பாடு செய்வேன்.
என்மகன் பெரியதோர் இளிச்சவாயன்;
மண்ணாங் கட்டி மண்ணாங் கட்டிதான்!
பெண்ணா அவள்? ஓர்பேய் மூதேவி!
இரு போய் அந்த இரிசனைக் கண்டு
பேசி விட்டுப் பின்வருகின்றேன்.

காட்சி-7
வெள்ளையப்பன் மாறுபாடு

வெள்ளையப்பன் :

இரிசனார் வீட்டில் இருக்கின் றாரா?

இரிசப்பன் :

உள்ளே வருவீர் வெள்ளை யப்பரே!
எப்போது வந்தீர்? இப்போது தானா?
மனைவியார் உம்முடன் வந்திட வில்லையா?
நல்ல முத்து நலமா? அமர்க.

வெள்ளையப்பன் :

மனைவி வயிற்று வலியோ டிருந்தாள்;
பையன் நிலையைப் பகர வந்தேன்:
திருமணம் வேண்டாம் என்று செப்பினான்.

இரிசப்பன் :

வெளியிற் சொன்னால் வெட்கக் கேடு
வெள்ளையப்பரே வெந்தது நெஞ்சம்.
பேச்சை நம்பி ஏச்சுப் பெற்றேன்.
திருமணம் விரைவில் செய்ய எண்ணி
எல்லாம் செய்தேன். எவர்க்கும் சொன்னேன்.
என்னை ஊரார் என்ன நினைப்பார்!
எப்படி வெளியில் இனிமேற் செல்வேன்?
மணம்வேண் டாமென மறுத்த தெதற்கு?
அடங்கி நடப்பவன் அல்லவா உன்மகன்?
நல்ல முத்தா சொல்லைத் தட்டுவான்?
சொல்வதுதானே நல்லமுத்துக்கு.

வெள்ளையப்பன் :

நூறு தடவை கூறிப் பார்த்தேன்;
வேண்டாம் மனமென விளம்பி விட்டான்.
மனம்புண்பட்டு வந்தே னிங்கே.
அம்மாக் கண்ணுவின் அழகு மகனுக்குத்

தங்கள் பெண்ணைத் தருவது நல்லது.
வைத்த நாளில் மணத்தை முடிக்கலாம்.
என்னசொல் கின்றீர் இரிசப்ப னாரே?

இரிசப்பன் :

அம்மாக் கண்ணை அறிவேன் நானும்
வெள்ளையப்பரே வீண்பேச் செதற்கு?
நீவிர் விரைவாய் நீட்டுவீர் நடையை.

காட்சி - 8

வலையில் சிக்கினார் கணவர்

(இரிசப்பன் மண்ணாங்கட்டியிடம் வந்து கூறுகிறான் :)

நல்ல முத்து நல்ல பிள்ளை.
நீங்களும் மிகவும் நேர்மை யுடையவர்.
வெள்ளையப்பர் மிகவும் தீயவர்.
அரச லூரில் அம்மாக் கண்ணின்
வலையிற் சிக்கி வாழுகின்றார்;
அங்கேயே அவர் தங்கி விட்டார்.
இன்னும் இங்கே ஏன் வரவில்லை?
மான மிழந்து வாழுகின்றார்.
அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு
நான்என் பெண்ணை நல்க வேண்டுமாம்!
மணம் வேண்டாமென மறுத்தா னாம்மகன்!
நேரில் உம்மிடம் நிகழ்த்த வந்தேன்இதை.
உங்கள் கருத்தை உரைக்க வேண்டும்.

மண்ணாங்கட்டி :

கெடுத்தாளாளன் குடித்தனத்தை?
விருந்து வைத்து மருந்தும் வைத்தாள்;

சோற்றைப் போட்டு மாற்றினாள் மனத்தை!
ஏமாந்தாரா என்றன் கணவர்?
போய்ப் புகுந்தாராபுலியின் வாயில்?
எங்கள் பிள்ளை உங்கள் பெண்ணை
வேண்டா மென்று விளம்ப வில்லையே!
அவள் மகனுக்கே அவளைக் கட்ட
இப்படிஎல்லாம் இயம்பினார் போலும்!
மாதம் ஒன்றாகியும் வரவில்லை அவர்.
மகனை இங்கே வரவழைக் கின்றேன்.
சொல்லிப் பார்ப்போம்; சொன்னாற் கேட்பான்.
(நல்லமுத்துவிடம் மண்ணாங்கட்டியும் இரிசனும்
சொல்லுகிறார்கள்.)

மண்ணாங்கட்டி :

ஒருமாதமாக உன்றன் தந்தையார்
அரச லூரில் அம்மாக் கண்ணிடம்
விளையாடு கின்றார். வீட்டை மறந்தார்.
அவர்தாம் அப்படி ஆனார். உன்றன்
திருமணம் பற்றிய சேதி எப்படி?
இரிசனார் பெண்ணை ஏற்பாடு செய்தோம்;
உடனே மணத்தை முடிக்க வேண்டும்.

நல்லமுத்து :

அப்பா இல்லை. அது முடியாது.
விவாக முகூர்த்த விளம்ப ரத்தில்
அப்பா கையெழுத்தமைய வேண்டும்.
பாத பூசை பண்ணிக் கொள்ள
அப்பா இல்லை! எப்படிமுடியும்?
திருமண வேளையில் தெருவில் நின்று
வருபவர் தம்மை வரவேற் பதற்கும்

அப்பா இல்லை! எப்படிமுடியும்?
புரோகிதர் தம்மைப் போய ழைக்க
அப்பா இல்லை! எப்படிமுடியும்?
அரசாணிக்கால்நட, அம்மி போட,
நலங்கு வைக்க, நாலு பேரை
அழைக்க, நல்லநாள் அமைக்க, அம்மன்
பூசை போடப்பொங்கல் வைக்க
அப்பா இல்லை! எப்படி முடியும்?

இரிசப்பன் :

அப்பன் இல்லையே அதற்கென்ன செய்வது?

நல்லமுத்து :

சோற்றை உண்டு சும்மா இருப்பது!

மண்ணாங்கட்டி :

அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு
மகளைக் கட்டிவைக்கச் சொல்லிக்
கெஞ்சினா ராமே அவரை
இரக்கம் இருந்ததா இனிய தந்தைக்கே?

நல்லமுத்து :

என்னருந் தந்தை இயம்பிய படியே
இவரின் மகளை அவன்மணக் கட்டும்.
“தெருவில் என்ன பெரிய கூச்சல்”
போய்வருகின்றேன் பொறுப்பீர் என்னை!

(நல்லமுத்து போனபின், இரிசனும், மண்ணாங்கட்டியும்
பேசுகின்றார்கள்.)

மண்ணாங்கட்டி :

தன்மானம் இல்லாத் தடிப்பயல் என்மகன்,
உணர்ச்சி இல்லா ஊமை என்மகன்.
அடிமை எண்ணம் உடையவன் என்மகன்.
தனக்குப் பார்த்த தையலை, அப்பன்
அயலான் மணக்கச் செயலும் செய்தால்
துடிக்க வேண்டுமே தடிக்கழுதை மனம்!
இல்லவே இல்லை! என்ன செய்யலாம்
சாப்பி டுங்கள்! சற்று நேரத்தில்
வருவான் பையன் ஒருமுறைக் கிருமுறை
சொல்லிப் பார்ப்போம்; துன்பம் வேண்டாம்.

காட்சி - 9

தமிழ் உணர்ச்சி

(இரிசப்பனும் மண்ணாங்கட்டியும் பேசியிருக்கிறார்கள்)

இரிசப்பன் :

எங்கே போனான் உங்கள் பிள்ளை?

மண்ணாங்கட்டி :

கூச்சல் கேட்டதாய்க் கூறிப் போனான்.

இரிசப்பன் :

என்ன கூச்சல்? எங்கே கேட்டது?

மண்ணாங்கட்டி :

கேட்டது மெய்தான், கிழக்குப் பாங்கில்
வாழ்க தமிழே வீழ்க இந்தி என்று.

இரிசப்பன்

எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை

அந்த இடத்தை அடைந்த தென்ன?

மண்ணாங்கட்டி :

என்ன இழவோ யார்கண்டார்கள்?

(தமிழ்ப் புலவர் அமுதனார் வந்து இரிசனிடத்திலும்,
மண்ணாங்கட்டியிடத்திலும் சொல்லுகிறார்.)

அமுதனார் :

உங்கள் பிள்ளையா நல்லமுத் தென்பவன்?

மண்ணாங்கட்டி :

ஆம்ஆம் ஐயா! அன்னவன் எங்கே?

அமுதனார்:

யானதைச் சொல்லவே இங்கு வந்தேன்.
இந்த அரசினர் செந்தமிழ் ஒழித்துத்
தீய இந்தியைத் திணிக்கின் றார்கள்.
தமிழ்அழிந் திட்டால் தமிழர் அழிவார்.
நம்தமிழ் காப்பது நம்கடன் அன்றோ?
போருக்குத் திராவிடர் புறப்பட் டார்கள்.
திராவிடர் கழகம் சேர்ந்துதான் உங்கள்
நல்ல முத்தும் நல்லதுதானே!

இரிசப்பன் :

எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை இந்தக் கிளர்ச்சியில் என்ன செய்வான்?

மண்ணாங்கட்டி :

திருமணம் செய்யச் சேயிழை ஒருத்தியை
அமைத் திருந்தார் அவனின் தந்தையார்!

பாரடா நீபோய்ப்பாவை தன்னை
என்றால், அதையும் ஏற்க வில்லை.
தரும்படி சொன்னார் தந்தை என்றால்,
அப்பா மனப்படி ஆகுக என்றான்.
இப்படிப் பட்டவன் என்ன செய்வான்?
அப்பா அயலவள் அகத்தில் நுழைந்தார்.
இப்பக்கத்தில் இனிவாரார் ஆதலால்
திருமணத்தை நீ செய்துகொள் என்றால்,
ஓலை விடுக்கவும், ஊரைக் கூட்டவும்,
சாலும் கரகம் தனியே வாங்கவும்.
பாத பூசைபண்ணிக் கொள்ளவும்
அப்பா வேண்டும்என்று ஒப்பனை வைக்கிறான்.

அமுதனார் :

மடமையில் மூழ்கி மடிகின்றான் அவன்.
தன்மானத்தைச் சாகடிக் கின்றான்,
மரக்கட்டைபோல் வாழ்ந்து வந்தான்.
இந்த நிலைக்கெலாம் ஈன்றவர் காரணர்.
ஆயினும் தமிழ்ப்பற்றவனிடம் இருந்தது.
திராவிடர் கழகம் சேர்ந்து விட்டான்.
இனிமேல் அவனோர் தனியொரு மறவன்!
அரசினர் சிறையில் அடைத்தார் அவனை!

இரிசப்பன் :

என்ன? என்ன? எப்போது விடுவார்?

மண்ணாங்கட்டி :

இருந்தும் பயனிலான் இருக்கட்டும் சிறையில்.

அமுதனார்:

எப்போது வருவான் என்பதறியோம்.

துப்பிலா அரசினர் சொல்வதே தீர்ப்பு.
நான்கூறுகின்றேன். நல்ல முத்துவின்
திருமணம் விரைவில் சிறப்படைக.

காட்சி - 10

திருமணம் என் விருப்பம்

(இரிசப்பன் வீட்டில், வெள்ளையப்பன் பேசுகிறான்.)

வெள்ளையப்பன் :

அம்மாக் கண்தன் சொத்தெலாம் அளிப்பாள்.
உம்மகள் தன்னை அம்மாக் கண்ணின்
மகனுக்கு கேதிருமணம்செய் விப்பீர்
என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்!

இரிசப்பன் :

அம்மாக் கண்ணின் அடியை நத்தி
வீணில் வாழும் வெள்ளையப்பரே,
உமது சொல்லில் உயர்வேயில்லை.
எமது கொள்கை இப்படி யில்லை.
நல்லமுத்துக்கே நம்பெண் உரியவள்,
பொல்லாப் பேச்சைப் புகல வேண்டாம்.

(அதே சமயத்தில் நல்லமுத்து வந்து இரிசனிடம்
இயம்புகின்றான்.)

நல்லமுத்து :

உம்மகள் என்னை உயிரென்று மதித்தாள்
திருமணம் எனக்கே செய்துவைத்திடுக!

(வெள்ளையப்பன் தன் மகனான நல்லமுத்தை நோக்கிக்
கூறுகின்றான்.)

என்விருப்பத்தை, எதிர்க்கவும் துணிந்தாய்.
உன்விருப் பத்தால் என்ன முடியும்?
இன்று தொட்டுநீவாயிலின் வழியும்
காலெடுத்து வைக்க வேண்டாம்.
என்றன் சொத்தில் இம்மியும் அடையாய்.
நான்சொன் னபடி நடந்து கொண்டால்,
திருமணம் பிறகு செய்து வைப்பேன்.
அம்மாக் கண்ணின் அழகு மகனே
இந்நாள் இந்த எழில் மடந்தையை
மணந்துகொள்ளட்டும், மறுக்க வேண்டாம்.

நல்லமுத்து:

திருமணம் எனது விருப்ப மாகும்.
ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் கலத்தல்
திருமணம் என்க. இரிசனார் மகளும்
என்னை உயிரென எண்ணி விட்டாள்.
நானும் என்னை நங்கைக் களித்தேன்.
உம்வீட்டு வாயிலை ஒருநாளும் மிதியேன்.
உம்பொருள் எனக்கேன்? ஒன்றும் வேண்டேன்.
நானும்என் துணைவியும் நான்கு தெருக்கள்
ஏனமும் கையுமாய், எம்நிலை கூறி
ஒருசாண் வயிற்றை ஓம்புதல் அரிதோ!
ஆட்சித் தொட்டியில் அறியாமை நீர்பெய்து
சூழ்ச்சி இந்திஇட்டுத் துடுக்குத் துடுப்பால்
துழவிப் பழந்தமிழ் அன்னாய் முழுகென
அழுக்குறு நெஞ்சத் தமைச்சர் சொன்னார்.
இழுக்குறும் இந்நிலை இடரவேண்டி
நானும்என் துணவிையும் நாளும் முயல்வதில்
சிறைப்படல், காதல் தேனருந்துவதாம்!

இறப்புறல் எங்கள் இன்பத்தி னெல்லையாம்.

(வெள்ளையப்பனை நோக்கி இரிசன் சொல்லுகிறான்.)

வெள்ளையப்பரே வெளியில் போவீர்
என்மகள் உம்மகன் இருவரும் நாளைக்குக்
காதல் திருமணம் காண்பார். நீவிரோ
அம்மாக் கண்ணொடும் அழகு மகனொடும்
இம்மாநிலத்தில் இன்புற்றிருங்கள்.

(நல்லமுத்து தன் திருமணத்தின்பின், துணைவியுடன்
இந்தி எதிர்ப்பு மறியலுக்குப் புறப்படுகின்றான்.)

நல்லமுத்து :

வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
இந்தி ஒழிக. இந்தி ஒழிக!

(சென்று கொண்டிருக்கையில், நல்லமுத்தின் தாய்
அவர்களைத் தொடர்கிறாள்.)

மண்ணாங்கட்டி :

இன்பத் தமிழுக்கின்னல் விளைக்கையில்
கன்னலோ என்னுயிர்? கணவனும் வேண்டேன்.
உற்றார் வேண்டேன்; உடைமை வேண்டேன்.
இந்தி வீழ்க! இந்தி வீழ்க!
திராவிடநாடு வாழிய!
அருமைச் செந்தமிழ் வாழிய நன்றே!

1948