பாரதியாரின் சிறுகதைகள்/வேதபுரத்தின் இரகஸ்யம்

வேதபுரத்தின் இரகஸ்யம்

இந்த விஷயம் 1909ஆம் வருஷத்தில் நடந்தது; தொண்டை மண்டலத்தில் கடற்கரை யோரத்திலுள்ள வேதபுரம் என்ற துறைமுகப் பட்டினத்தில் நடந்தது. மருதப் பிள்ளை அல்லது மருதப்ப பிள்ளை என்பவர் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவ ரல்லர். வடக்கே சென்னைப் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஜாதியிலே யாதவர்; அதாவது, இடையவர் குலத்தைச் சேர்ந்தவர். சில வருஷங்களுக்கு முன்னே 1904 அல்லது 1905ஆம் வருஷத்திலேதான் அவர் வேதபுரத்தில் வந்து குடியேறினார்.

அவர், அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகள் - இத்தனை பேருமாக வேதபுரத்தில் மாரியம்மன் கோயில் தெருவில், மாஸம் நான்கு ரூபாய் வாடகை கொடுத்து ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தார்கள்.

1909 ஆம் வருஷத்திலே மருதப் பிள்ளைக்கு வயது முப்பத்தாறாயிருந்தது. செவப்பு நிறம்; உறுதியும், பலமும், அழகுமுடைய அங்கங்கள்; மூக்கும், விழியும் மிகவும் அழகாக, மாசு மறு, தழும்பு - ஒன்றுமில்லாமல் பள பள வென்று சந்திரன் மாசின்றி யிருந்தாற் போன்ற முகம்; அதிலே பட்டை நாமம்; கன்னங் கரேலென்று, அம்பட்டன் கத்தியே படாமல், செழிப்புற வளர்ந்து கிடந்த மீசை, தாடிகள்; தலையிலே ஜரிகைக் கரை போட்ட செம்பட்டு லேஞ்சி; டாஸர் பட்டுக்கோட்; அரையிலே கிளாஸ்கோ மல் வேஷ்டி; இத்தனையும் சேர்ந்து மருதப் பிள்ளையின் பொதுத் தோற்றம் மிகவும் வீரமுடையதாகவும் கண்ணுக் கினிதாகவும் விளங்கிற்று.

இவரைத் தெருவிலே பார்த்தால், யாரோ ஜமீன்தாரென்று நினைக்கும்படியாக இருக்கும். ஆனால், இவருடைய வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் மூதேவி "ததிக்கிடத்தோம்” என்று நர்த்தனம் செய்து கொண்டிருப்பாள்.

இவருடைய பெண்டாட்டி கரி நிறமும், அம்மைத் தழும்பு மூஞ்சியும், எண்ணெய் பார்த்தறியாதது போன்ற பரட்டைத் தலையும், தண்ணீர் கண்டறியாதது போன்ற அழுக்குடம்பும், கந்தைச் சேலையும், தன் யதார்த்த வயதுக்கு மேலே முப்பது பிராயம் அதிகமாகத் தோன்றும் மேனிக் கோலமும்; . . , கழுதை வாகனமொன்று தான் குறை; மற்றப்படி இவளை வர்ணிப்பதைக் காட்டிலும், ஸாக்ஷாத் மூதேவியையே வர்ணித்தால், அந்த வர்ணனை இவளுக்கும் பொருந்தும்.

குழந்தைக ளிரண்டும் ஆண். ஒன்றுக்கு ஐந்து வயது; மற்றொன்றுக்கு மூன்று வயது. தாரித்திரியத்தின் சித்திரப் பதுமைகளே இவ்விரண்டு பிள்ளைகள்.

வீட்டில் ஒரு நாற்காலி, மேஜை, ஒரு பெரிய வஸ்த்ரப் பெட்டி - (மருதப் பிள்ளையின் துணிகளடங்கியது); இவருடைய கைப்பெட்டி; - சில ஓட்டைப் பானைகள், இவ்வளவுதான் ஸாமான். பெண்டாட்டிக்குத் துணி யிருந்தா லன்றோ பெட்டி வேண்டும்?

வீட்டை இத்தனை அலங்கோலமாக வைத்திருந்தாலும், மருதப் பிள்ளை ஊரில் வெகு டாம்பீகமாகவே சுற்றிக்கொண்டிருந்தார். இவருக்குச் சென்னப்பட்டணத்தில் சில அச்சுக்கூட வியாபாரிகள் ஸ்நேஹ மென்றும், அவர்களுக்கு உதவியாகத் தாம் வேதபுரத்தில் ஏதோ கார்யங்கள் செய்வதாகவும் சொல்லிக் கொள்வார்.

வேதபுரத்திலுள்ள சில அச்சுக்கூடங்களுக்குச் சென்னையிலிருந்து யந்திரங்கள், எழுத்துக்கள், காயிதங்கள் முதலியன தருவித்துக் கொடுப்பார். ஆனால், இந்த உத்யோகங்களிலிருந்து வரும் பணம் அவருக்கு மூக்குப் பொடிச் செலவுக்குக்கூடக் காணாது. எனவே, வாரக் கணக்காக, மாஸக் கணக்காக, வருஷக் கணக்காக, மேன்மேலும் வாய்த் தந்திரத்தினால் கடன்கள் வாங்கியே ஜீவனம் பண்ணிக் கொண்டு வந்தார்.

வாங்கின கடன் திரும்பக் கொடுக்கும் வழக்கமே அவரிடம் கிடையாதாகையால், அவருக்கு ஒரு முறை கடன் கொடுத்தவன் இரண்டாந்தரம் கொடுக்க மாட்டான். ஆகையால், ஒவ்வொரு தரமும் புதிய புதிய மனிதரைக் கண்டுபிடித்துக் கடன் வாங்க வேண்டும். ஒரே ஊருக்குள் அப்படி ஓயாமல் புது ஆட்கள் கண்டுபிடிப்பது ஸாமான்ய வித்தை யன்று. இந்தியா முழுதிலும் இவ்விதமான ஜீவனம் பண்ணுவோர் ஒவ்வோரூரிலும் மலிந்து கிடக்கிறார்கள். துரதிர்ஷ்ட தேசம்! இது நிற்க.

இங்ஙனம் குடித்தனம் பண்ணிக்கொண்டு வந்த மருதப் பிள்ளைக்கு மேற்படி 1909ஆம் வருஷம், ஜூன் மாஸம் முதல் தேதி யன்று, திடீரென்று நல்ல காலம் பிறந்தது. வேதபுரத்தில் வில்ஸன் துரை என்ற யூரேஷ்யர் ஒருவர் புதிதாகப் பெரிய அச்சுக்கூட மொன்று திறந்தார். அந்த அச்சுக்கூடத்து வேலையாட்களுக்குத் தலைவராக மருதப் பிள்ளை மாஸம் 60 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்குக் கடன் வாங்கும் உபத்திரவம் கொஞ்சம் குறையலாயிற்று. அவருடைய மனைவியும் புதிய மதுரைச் சுங்கடிச் சேலை யுடுத்துப் புது மண் குடங் கொண்டு தண்ணீரெடுத்து வரத் தலைப்பட்டாள்.

இங்ஙனம் இரண்டு மாஸங்கள் கழிந்தன. ஸெப்டம்பர் மாஸம் முதல் தேதி காலை ஊர் முழுதும் பயங்கரமான வதந்தி உலாவிற்று. ஊருக்கு மேற்கே, ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஸமீபத்திலுள்ள 'முஜாபர் கானா' என்ற பிரயாணிகளின் சாவடியிலே மருதப் பிள்ளை கொலையுண்டு கிடப்பதாகச் செய்தி பரவலாயிற்று.

ஜனங்கள் ஆயிரக் கணக்காகத் திரண்டு பிரேதத்தைப் பார்க்கப் போனார்கள். மருதப் பிள்ளை தன் முறைப்படி பாஸர் பட்டுக் கோட், ஜரிகைக்கரை போட்ட செம்பட்டு லேஞ்ஜி, கிளாஸ்கோ மல் வேஷ்டியுடன் கிடக்கிறார். துணி முழுதும் இரத்தத்தில் ஊறி யிருந்தது. பக்கத்தி லெல்லாம் இரத்தம் சிந்திக் கிடந்தது. பார்ப்பதற்கே முடியவில்லை. அத்தனை கொடூரமான காட்சி! தொடையில் இரண்டு வெட்டு; மார்பில் வெட்டு; தோளில் வெட்டு; கழுத்து இலேசாக ஒட்டிக் கொண்டிருந்தது. அத்தனை கோரமான வெட்டு. கழுத்திலே, மண்டையில் இரண்டு மூன்று வெட்டுக்கள்.

பொருளாசையால் அவரைக் கள்வர் வெட்டிக் கொன்றிருக்கலாமென்று நினைக்க ஹேதுவில்லை!

இத்தனை பரம ஏழையைக் கொன்று பொருள் பறிப்ப தெப்படி? விரோதத்தி-னாலேதான் யாரோ அவரைக் கொலை செய்திருக்க வேண்டுமென்று ஜனங்கள் உடனே நிச்சயித்து விட்டார்கள். அப்பால் அவருக்கு யார், யார் விரோதிக ளென்பதைப் பற்றிய ஆராய்ச்சி நடந்தது. ஜனங்கள் இந்த மாதிரி ஸமயங்களில் வெகு ஸுலபமாகக் கட்டுக் கதைகள் கட்டிவிடுவார்கள். இலேசான துப்புத் தெரிந்தால் போதும்; அதற்குக் கால், கை, கொம்பு வைத்துக் கதை கட்டுவதில் பாமர ஜனங்களைப் போன்ற திறமை யுடையோர் என்போலே கதை கட்டுவதையே தொழிலாக உடைய ஆசிரியர்-களிடையேகூட அகப்படுவது துர்லபம்.

ஆனால், இந்த ஸந்தர்ப்பத்தில் அங்ஙனம் கதை கட்டுதல் பொது ஜனங்களுக்குக்கூட மிகவும் சிரமமாய் விட்டது. ஏனென்றால், மருதப் பிள்ளைக்கு விரோதிகள் இன்னாரென்பது யாருக்குத் தெரியாது. அவருக்கு விரோதிகளே கிடையாதென்று ஊரார் நினைத்திருந்தார்கள். வாங்கின கடன் அதாவது 5 ரூபாய்; 10 ரூபாய்; 1 ரூபாய்; 2 ரூபாய் திரும்பக் கொடுப்பதில்லை யென்ற ஒரு துர்க்குணத்தைத் தவிர மருதப் பிள்ளையிடம் வேறு துர்க்குணமே கிடையாது.

எல்லாரிடமும் குளிர்ந்த முகத்துடனும், புன்சிரிப்புடனும் இனிய வசனங்கள் பேசுவதும் கூழைக் கும்பிடு போடுவதும் வழக்கமாகக் கொண்ட மருதப் பிள்ளையிடம் யாருக்கும் நல்லெண்ணமுண்டே யன்றி விரோதம் ஏற்பட நியாயமில்லை .

சில்லரைக் கடன்காரருக்கு இவர் உயிரோடிருந்தால் தாங்கள் கொடுத்த சொற்பத் தொகைகள் திரும்பக் கிடைக்கலாமென்று நம்பவேனும் வழியுண்டு. ஆதலால், அவர் மேற்படி சில்லரைக் கடன்காரர்களால் கொலை யுண்டிருப்பாரென்று நினைக்க ஹேதுவில்லை. தவிரவும், சில்லரைக் கடன்களுக்காக ஒருவனைக் கடன்காரர் கொலை செய்யும் வழக்கம் எங்கேனுமுண்டா? எனவே, ஜனங்கள் கொலையாளி விஷயமாக இலேசில்கூடத் துப்புக் கண்டுபிடிக்க வழி யில்லாமல் திகைப் பெய்தி நின்றார்கள்.

போலீஸ் கூட்டம் கூடிவிட்டது. பெரிய துரை, நடுத்துரை, சின்னத் துரை, மாஜிஸ்ட்ரேட் முதல் சேவகர் வரை, சுமார் இருபது முப்பது நகரக் காவலர் வந்து சூழ்ந்து நின்றார்கள். ஜனங்கள் பிரேதத்தை நெருங்கி வந்து விடாமல் தடுப்பதே போலீஸாருடைய முக்ய வேலையாக இருந்தது. அங்கு பலரிடம் போலீஸ் அதிகாரிகள் ஏதேதோ விசாரணை செய்து பார்த்தார்கள். ஒன்றும் துலங்கவில்லை .

இப்படி யிருக்கையிலே ஒரு போலீஸ் சேவகன் ஒரு பறையனைப் பிடித்து அவ்விடத்திற்குக் கொணர்ந்தான். அந்தப் பறையனுடைய வேஷ்டியில் இரத்தக் காயம் (கறை) பட்டிருந்தது. அவன் மேலே சொல்லப்பட்ட அச்சுக்கூடத்தின் அதிபதியாகிய வில்ஸன் துரை வீட்டில் சமையல் வேலை செய்பவன். அவனிடம் போலீஸ் அதிகாரிகள் ஏதெல்லாமோ கேட்டார்கள். அவன் மறுமொழி சொல்லியதினின்றும், அவன் மீது ஸம்சயமேற்பட்டு அவனைச் சிறைச்சாலைக்குக் கொண்டு போய்-விட்டார்கள்.

பிறகு கூட்டங்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கலைந்தன. பிரேதத்தையும் அதிகாரிகள் தூக்கிக் கொண்டுபோய் ஒருநாள் வைத்திருந்து மறுநாள் தகனம் பண்ணிவிட்டார்கள். மறுநாளே வில்ஸன் துரை வீட்டுப் பறையனையும் சிறைச்சாலையிலிருந்து விடுவித்து விட்டார்கள்.

அந்தப் பறையன் முதல்நாள் கோழி யறுத்தபோது கைதவறி இரத்தம் அவனுடைய வேஷ்டியில் பட்டு விட்டதாகவும், ஆதலால், அவன் வேஷ்டியிலே யிருந்த கறை கோழி இரத்தத்தால் நேர்ந்ததே யன்றி, மனுஷ்ய ரத்தத்தால் நேர்ந்ததில்லை யென்றும், அவனுடைய ' பந்துக்களும், துரை வீட்டு வேலையாட்களிலே சிலரும் ஸாக்ஷி சொன்னதினின்றும், அந்தப் பறையன் மீது குற்றமில்லை யென்று தெளிந்து, அவனுக்கு விடுதலை கொடுத்து விட்டார்கள். பிறகு வேறு குற்றவாளி அகப்படவுமில்லை. ஓரிரண்டு மாஸங்களுக்குள் ஜனங்கள் இந்த ஸம்பவ முழுதையும் ஏறக்குறைய மறந்து போய்விட்டார்கள்.

இப்படி யிருக்கையில், 1910ஆம் வருஷம் ஜனவரி மாஸத்தில் வேதபுரத்துக்கு ஒரு புதிய ஸப்-இன்ஸ்பெக்டர் வந்தார். இவர் பெரிய கைக்காரர்; மஹா தந்திரசாலி. இவருடைய பெயர் ராஜகோபாலய்யங்கார், மருதப் பிள்ளையின் கொலை நடந்து நான்கு மாஸங்களாய் விட்டன. எனினும், இவர் வந்தவுடனே மேற்படி கொலையைப் பற்றிய செய்திகள் இவருக்குத் தெரிந்தன. அதன் விஷயமான பழைய பதிவுகளை யெல்லாம் படித்துப் பார்த்தார். 'இந்த மருதப் பிள்ளையைக் கொலை செய்த ஆட்களை நான் கண்டுபிடித்தே தீர்ப்பேன், வாஸுதேவன் துணை' என்று இவர் தம் மனதுக்குள்ளே பிரமாணம் பண்ணிக் கொண்டார். இது நிற்க.

மேலே கூறப்பட்ட அச்சுக்கூடத் தலைவராகிய வில்ஸன் துரைக்கு ஒரு தங்கை யுண்டு. அவள் பெயர் இஸபெல்லா. அவளுக்குச் சுமார் 30 வயதிருக்கும். ஆனால், விவாகமில்லை. போர்த்துகேசீய ஐரோப்பிய னொருவனுக்கும் தமிழ் நாட்டுப் பறைச்சி யொருத்திக்கும் பிறந்த வம்சத்தா ராதலால் மேற்படி வில்ஸன் குடும்பத்தார் தாங்கள் எப்படியேனும் ஐரோப்பியருடன் ஸம்பந்தம் பண்ணிக்கொண்டு ஐரோப்பியராய் விடவேண்டு மென்ற நோக்கத்தோ டிருந்தார்கள்.

வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கல் மூலமாகவும் அந்தக் குடும்பத்தாருக்கு ஏராளமான சொத்து சேர்ந்திருந்தது. பூர்வம் வில்ஸன் துரை ஒருவர்; அவருடைய தம்பி ஜோஸப் வில்ஸன் ஒருவர்; தங்கை இஸபெல்லா ஒருத்தி - இத்தனை பேர்தான் அந்தக் குடும்பத்தி லிருந்தார்கள். பின் ஐரோப்பியப் பட்டாளத்தில் வேலை செய்து பென்ஷன் பெற்று வந்த ரிச்சார்ட்ஸன் என்ற ஒரு கிழவன் மிகவும் ஏழையாய் அந்த ஊரில் வந்து குடியிருந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அந்த ரிச்சார்ட்ஸ ன் பரம் ஏழையானாலும் சுத்தமான ஐரோப்பிய ஸந்ததியிலே பிறந்தவ னென்று தெரிந்தபடியால், வில்ஸன் துரை அவனுடைய மகளை விவாகம் செய்து கொள்ள முயன்றார்.

அந்த மகள் கண்ணுக்கு மிகவும் விகாரமாய்ச் சுருங்கிய மூஞ்சியும், வற்றலுடம்பும் உடையவளாய்த் தன்னை மணம் செய்து கொள்ள யாரு மகப்படாமல் பிதாவுடன் குடியிருந்தாள். அவள் நமது வில்ஸன் துரையைக் காட்டிலும் ஏழு வயது மூத்தவள், எப்படியிருந்த போதிலும் சுத்தமான ஐரோப்பிய குலத்து ஸம்பந்தம் கிடைப்பதையே மோக்ஷ மாகக் கருதித் தவஞ்செய்து கொண்டிருந்த வில்ஸன் துரை அவளை மணம் புரிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிந்தவுடனே அவளும், அவளுடைய பிதாவும் மிக ஸுலபமாக உடன்பட்டு விட்டனர்.

இங்ஙனம் தமக்கோர் ஐரோப்பிய ஸ்திரீ மனைவியாகக் கிடைத்ததிலிருந்து வில்ஸன் துரை அங்ஙனமே தம்முடைய தங்கைக்கும் தம்பிக்கும் சுத்தமான ஐரோப்பிய ஸம்பந்தம் பண்ண வேண்டுமென்று கருதி, பகீரதப் பிரயத்தனங்கள் செய்துகொண்டு வந்தார். ஹிந்துக்களுக்குள்ளே ஜாதி பேதத்தைப் பற்றிய கஷ்டங்கள் அதிகமென்று பலர் தவறாக நினைக்கிறார்கள்.

ஆனால், ஐரோப்பியருக்கும் நீகிரோவ ஜாதியாருக்கும் ஸம்பந்த மேற்பட்ட அமெரிக்கா முதலிய இடங்களிலும், ஐரோப்பியருக்கும் கீழ் ஜாதி ஹிந்துக்களுக்கும் கலப்பேற்பட்ட - இந்தியாவில் சில பகுதியிலும் மேற்படி கலப்பு ஜாதியார்கள் தமக்குள்ளே மாற்று வித்யாஸங்கள் கவனிப்பதை ஒப்பிடும்போது, ஹிந்துக்கள் பாராட்டும் ஜாதி பேதங்கள் மிகவும் இலேசாகத் தோன்றும்.

சுத்தமான ஐரோப்பியனுக்கும், சுதேச ஸ்த்ரீக்கும் பிறந்தவன் ஒரு ஜாதி; அப்படி ஒரு ஐரோப்பிய ஸ்திரீயை மணம் புரிந்து கொண்டால் அந்த ஸந்ததியார் வேறு ஜாதி; அவனே மீளவும் ஒரு சுதேச ஸ்திரீயை மணம் புரிந்து கொண்டால் அந்த ஸந்ததியார் மற்றொரு ஜாதி; இப்படி இரண்டு மூன்று தலைமுறைகளிலே யேற்படும் பலவிதக் கலப்புக்களில் சுமார் நூறு அல்லது நூற்றைம்பது ஜாதிகள் கிளைத்து விடுகின்றன. இந்த நூற்றைம்பது பிரிவுகளும் ஒன்றுக்கொன்று விரலாலேகூடத் தீண்டுவது கிடையாது. இவை யெல்லாம் தனக்குத் தனக்கு வெவ்வேறான முத்திரைகள் போட்டுக்கொண்டு பிரிந்து வாழ்கின்றன. இது நிற்க.

நம்முடைய வில்ஸன் துரையும் அவருடைய தங்கையும், எத்தனை ஏழையானாலும், எத்தனை குரூபியானாலும், வேறு எவ்விதமான குறைவுக ளுடையோனாயினும், ஒரு சுத்தமான ஐரோப்பியனை மாப்பிள்ளையாக அடைய வேண்டுமென்று செய்த முயற்சிகளுக்குக் கணக்கே யில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் விரயப்படுத்தின பணத்துக்கும் கணக்கில்லை,

ஐரோப்பிய வாலிபன் - சிப்பாயோ, போலீஸ்காரனோ, குமாஸ்தாவோ - எவனாவது விவாக மாகாத நிலையில் வேதபுரத்துக்கு வந்தால் உடனே அவனை வில்ஸன் துரை எப்படியாவது அறிமுகப்படுத்திக் கொண்டு தன் வீட்டில் அவனுக்கு யதேஷ்டமான விருந்துகள் நடத்துவார். அவன் கேட்ட கைக்கெல்லாம் பணங் கொடுத்துதவி செய்வார், கடிகாரம் வாங்கிக் கொடுப்பார், பைசிகிள் வண்டி வாங்கிக் கொடுப்பார்.

ஆனால், இம்முயற்சிக ளெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் விட்டன. யாதொரு பயனுந் தரவில்லை. உள்ளூரில் எத்தனையோ எளிய யூரேஷியப் பிள்ளைகள் வில்ஸன் துரை வீட்டு சொத்துக் காசைப்பட்டு இஸபெல்லாவை மணஞ் செய்துகொள்ள ஆவலோடிருந்தனர். ஆனால், இஸபெல்லா இந்த யூரேஷ்யப் பிள்ளைகளைத் தன். பாத விரலால்கூடத் தீண்டமாட்டே னென்று, சொல்லி விட்டாள்.

எனவே, முப்பது வயதாகித் தன் யெளவனமும் அதற்குரிய சௌந்தர்யங்களும் பெரும்பாலும் நீங்கி விட்ட பின்னரும் நமது இஸபெல்லா விவாகமாகாமல் கன்னிப் பெண்ணாகவே விளங்கினாள்.

இவளுக்கும் நம்முடைய ஸப் இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்காருக்கும் பின்வருமாறு ஸ்நேஹ முண்டாயிற்று. ராஜகோபாலய்யங்கார் விவாகமாய் மனைவியை இழந்தவர். இவருக்கு வயது முப்பத்திரண்டிருக்கும். கிருதா மீசை; ஆறரை அடி உயரம்; ஆஜானுபாஹு; ஸாண்டோ குண்டுகள் பழகுவதிலே ஸாண்டோவைக் காட்டிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்; வீராதி வீரர்; பேய் பிசாசுக்குப் பயப்படமாட்டார்; பாம்பு புலி கரடிகளுக்குப் பயப்படமாட்டார்; கள்வருக்கும் கொலைஞருக்கும் அஞ்ச மாட்டார்; பகைவருக் கஞ்ச மாட்டார்; பொய் சொல்ல மாட்டார்; களவு செய்ய மாட்டார்; லஞ்சம் வாங்க மாட்டார்; மஹா தீரர்; மஹா வீரபுருஷர்; மஹா யோக்யர்; அதி ஸுந்தர புருஷருங்கூட.

அவர் மேற்படி மருதப் பிள்ளையின் கொலை ஸம்பந்தமான விசாரணைக ளடங்கிய பழைய புஸ்தகங்களையும், பதிவுகளையும் சோதனை செய்து பார்த்தவுடனே, அதில் அடிக்கடி வில்ஸன் துரையின் விஷயம் முக்யமாக வந்தபடியால், அந்த வில்ஸன் துரையைப் போய்ப் பார்த்து அவருடைய சமையற்காரப் பறையனையும் கண்டு பேசி வரவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டார்.

ஆனால், புத்திமானாகையால், இந்தக் கொலை ஸம்பந்தமான விசாரணைக்குத் தாம் வந்ததாகத் தெரிவித்துக் கொண்டால், அதினின்றும் வில்ஸன் துரை மேற்படி கொலையில் தாம் எவ்விதத்திலும் ஸம்பந்தப்படாதவராக இருந்தபோதிலும், அவருக்குத் தம்மிடம் விரயம் ஏற்படுதல் திண்ணமென்று நிச்சயித்து ஆரம்பத்திலேயே அந்தக் கொலைப் பேச்சை யெடுக்காமல், வேறேதேனும் முகாந்தரத்தை வைத்துக்கொண்டு போய் அவரை ஸந்தித்து, அப்பால் ஸம்பாஷணைக்கிடையே, வெறுமே யதிர்ச்சையாக நேர்ந்தமாதிரியாக இந்த மருதப் பிள்ளை விஷயத்தை யெடுத்து அப்போது வில்ஸன் துரை சொல்லும் வார்த்தைகளிலிருந்து அவருடைய மன இயல்பை அறிந்துகொள்ள வேண்டுமென்று ராஜகோபாலய்யங்கார் தீர்மானித்தார்.

அன்று ஸாயங்காலம் ஐந்து மணியானவுடன் பைஸிகிள் போட்டுக்கொண்டு, வில்ஸன் துரை வீட்டு வாயிலிலே போலீஸ் உடுப்புடன் இறங்கி, அங்கிருந்த வாயில் காப்போனிடம் "உள்ளே துரை இருக்கிறாரா?” என்று கேட்டார்.

"இரிக்காங்கோ" என்று வாயில் காப்போன் சொன்னான். அவன் சென்னப்பட்டணத்து மஹமதியன். 'இருக்கிறார்கள்' என்பதை "இரிக்காங்கோ" என்று சிதைத்துச் சொன்னான். “என்ன செய்கிறார்?” என்று அய்யங்கார் கேட்டார்.

"ஹும்மா இரிக்காங்கோ. பேபர் படிக்கிறாங்கோ" என்று வாயில் காப்போன் சொன்னான்.

“சரி; அப்படியானால் இந்தச் சீட்டை அவரிடம் கொண்டு கொடு” என்று சொல்லித் தமது பெயரும் உத்தியோகமும் குறிக்கப்பட்டிருந்த சீட்டை நீட்டினார்.

அய்யங்காருக்கு ஸலாம் போட்டு அந்தச் சீட்டை வாங்கிக்கொண்டு வாயில் காப்போன் உள்ளே சென்று வில்ஸன் துரையிடம் சீட்டைக் கொடுத்தான்.

அவர் “வரச் சொல்லு" என்று கட்டளை யிட்டார். ஸப் இன்ஸ்பெக்டர் உள்ளே போய் நாற்காலியில் இருந்து க்ஷேம் விசாரணைகள் செய்து முடிந்தவுடனே வில்ஸன் துரை ஸப் இன்ஸ்பெக்டரை நோக்கித் “தாங்கள் இங்கு வந்ததன் நோக்கமென்ன” என்று கேட்டார்.

"ஊரெல்லாம் தொழிலாளிகளின் சச்சரவு மிகுதிப்பட்டு வருகிறதென்று கேள்வி யுற்றேன். அச்சுக் கூடத் தொழிலாளிகளே விசேஷமாக முதலாளிகளை அல்லற்படுத்துவதாகவும் அறிந்தேன். இது விஷயமான விசாரணைகள் செய்யும்படி எனக்கு மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். நான் தங்கள் மூலமாக இதன் விவரங்க ளேதேனும் எழுதிக்கொண்டு போகலாமென்று வந்தேன். தங்களைப்போல் முக்கியமான வியாபாரிகளின் எண்ணங்களைத் தெரிந்தெழுதும்படி எனக்கு அதிகாரிகள் உத்தரவு கொடுத்திருக்கிறார்கள்; ஏதேனும் தகவல்கள் கொடுக்க செளகர்யப்பட்டால் அங்ஙனமே தயவு செய்ய வேண்டும்" என்று ராஜகோபாலய்யங்கார் மிக வினயத்தோடு சொன்னார்.

ராஜகோபாலய்யங்கார் இங்கிலீஷ் பாஷை பேசுவதிலே மஹா ஸமர்த்தர். அவர் இங்கிலீஷ் பாஷையில் எண்ணிறந்த புஸ்தகங்களும், மதிப்பிறந்த காவியங்களும் படித்துத் தேர்ந்தவர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அத்தனையும் அவருக்குக் கரதல பாடம். பைரனுடைய பாட்டுக்களைப் பாராமல் சொல்லுவார். ஷெல்லி பாட்டுக்கள் குட்டியுரு. எனவே, அந்த பாஷையில் அவருக்குச் சிறந்த வாக்குண்டாய் விட்டது. இவர் பேசிய நேர்த்தியையும், மேனியழகையுங் கண்டு பூரித்து வில்ஸன் துரை, “நீங்கள்தானா இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர்?” என்று கேட்டார்.

"ஆம்" என்றார் அய்யங்கார்.

வில்ஸன் துரை பெரிய வாயாடி. வந்தவர்களிடம் தொளைத்துத் தொளைத்து மாரிக் காலத்து மழை போல் இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பதும் அல்லது கேள்விகள் பல ஓயாமல் கேட்டுக் கொண்டிருப்பதும் அவருடைய வழக்கம். அதிலும் கவர்ன்மெண்டாருக்குத் தம்முடைய அபிப்ராயங்களை மதிப்புடையனவாகத் தெரிந்தனுப்ப வந்திருக்கும் அய்யங்காரிடம் அவருக்கு அதிகமாக மன மிளகி நாவு பொழியலாயிற்று. "உங்களுக்கு வயதென்ன?” என்று துரை கேட்டார். “முப்பத் திரண்டு வருஷம் மூன்று மாஸம்" என்றார் அய்யங்கார்.

“பெண்டாட்டி இருக்கிறாளா?” என்று துரை கேட்டார்.

“இல்லை ” என்றார் அய்யங்கார்.

துரை கேட்டார்: "இன்னும் விவாகமே நடக்கவில்லையா?” என, “ஒரு மனைவி கட்டி, அவள் இறந்து போய் இரண்டு வருஷங்களாயின. பிறகு இரண்டாந்தாரம் கட்டவில்லை” என்றார் ஐயங்கார்.

"ஏன்? முதல் தாரத்துக்குக் குழந்தைகள் அதிகமோ?" என்றார் துரை.

“இறந்த மனைவிக்குக் குழந்தை யில்லை” என்றார் அய்யங்கார்,

"தொழிலாளிகளின் விஷயம் பிறகு பேசிக் கொள்வோம். நடைப் பக்கத்துக்குப் போய்க் கொஞ்சம் பிஸ்கோட், டீ சாப்பிடலாமா?” என்று துரை அழைத்தார்.

ஐயங்கார் சாப்பிட உடன்பட்டார். தங்கையாகிய இஸபெல்லாவைக் கூப்பிட்டுத் தம் மிருவருக்கும் “டிபன்” தயார் பண்ணச் சொன்னார். அவள் சிறிது நேரம் கழித்து மீண்டு வந்து, மேஜை மேலே பழம், பலகாரம், டீ தயார் செய்து வைத்தாய் விட்டதென்று சொன்னாள்.

இதனிடையே அய்யங்கார் வில்ஸனை நோக்கி "எனக்கு மேற்படி தொழிலாளிகளுள் சச்சரவு ஸம்பந்தமான விவரங்களைத் தாங்கள் மிகவும் விரைவாகக் கோர்வைப் படுத்தித் தெரிவிக்க எத்தனை தினங்களுக்குள்ளே முடியும்? ஏனென்றால், கவர்ன்மெண்டார் என்னிடம் மிகவும் அவஸரமான அறிக்கையை எதிர்பார்க்கிறார்-களென்று தோன்றுகிறது" என்று ராஜகோபாலய்யங்கார் கேட்டார்.

“ஓ, நாளைக் காலை பத்து மணிக்குள் எழுதி ஒரு வேலையாள் மூலமாக உங்கள் கச்சேரிக் கனுப்பி விடுகிறேன்" என்று வில்ஸன் துரை வாக்களித்தார்.

ஐயங்காரும், வில்ஸன் துரையும், இஸபெல்லாவும் உட்கார்ந்து சிற்றுண்டி புசித்தனர். சமையற்காரப் பறையன் பறிமாறிக் கொண்டிருந்தான்.

"இந்த ஐயங்காரைப் பார்த்தால் மருதப் பிள்ளை முகச் சாயை கொஞ்சம் தென்படுகிறது” என்று இஸபெல்லா சொன்னாள்.

"உளறாதே! அவனுடைய மூஞ்சி, சூனியக்காரனுடைய மூஞ்சியைப் போலிருக்கும். இவரைப் பார்த்தால் ராஜாவைப் போல் இருக்கிறார். இவரோடு அவனை ஒப்பிடுகிறாயே?" என்றார் வில்ஸன் துரை.

சமையற்காரனைப் பார்த்து, இஸபெல்லா, "ஏனடா ஜான்? இந்த ஸப்-இன்ஸ்பெக்டர் ஸாமி முகமும் அந்த மருதப் பிள்ளையின் முகமும் இலேசாக ஒருவிதச் சாய லொற்றுமை உடையன அல்லவா?" என்று வினவினாள்.

"எனக்குத் தெரியாது; மிஸ்ஸம்மா! நான் அந்த மருதப் பிள்ளை யென்ற மனிதனைப் பார்த்ததே கிடையாது" என்றான் சமையற்காரன்.

இதனுடன் அந்த ஸம்பாஷணையை நிறுத்தி விட்டார்கள்.

இதற்கிடையே மேற்படி மருதப் பிள்ளையின் பேச்சு நடக்கையிலே எவரெவர் என்ன குரலில் பேசினார்கள், எவரெவருடைய முகப்பார்வை என்னென்ன நிலைமையி லிருந்தது என்ற செய்தியை யெல்லாம் கவனித்து வந்த ராஜகோபாலய்யங்கார் - போடகிராப் - நிழற் படம் - பிடிக்கும் கருவிபோலே தமது சித்தத்தை நிறுத்திக் கொண்டு அவர்களுடைய சொற் கிரியைகளையும் தோற்றங்களையும் அப்படியே தமக்குள் சித்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.

இவர் அந்த ஸம்பாஷணையை இத்தனை கவனத்துடன் கவனித்தா ரென்பதை இஸபெல்லா உணர்ந்து கொண்டாள். பிறகு வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சிற்றுண்டி முடிவு பெற்றது.

ஐயங்கார் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டார், அவர் வெளியே போன வுடன், சமையற்காரனும் போய்விட்ட பின்பு, வில்ஸன் துரை.

"உனக்கு அந்த இடைப் பயல் மேலிருந்த மோஹம் இன்னும் தீரவில்லையோ?" என்று இஸபெல்லாவை நோக்கிக் கேட்டார்.

"என்னை வையாதே, உன் நாக்கு அழுகிப் போகப் போகிறது” என்றாள் இஸபெல்லா.

“அப்படியானால், இன்று மாலை அவனைப் பற்றிய வார்த்தையை நீ யேன் எடுத்தாய்? அவன் பெயரை ஏன் உச்சரித்தாய்?” என்று துரை கேட்டார்.

"மருதப் பிள்ளை என்ற பெயர் சொன்னால் தோஷமா? அவனுடைய மூஞ்சியும் அந்த ஸப் இன்ஸ்பெக்டர் மூஞ்சியும் ஒரே சாய லுடையன போலே தோன்றிற்று. அதற்காகக் கேட்டேன். கேட்டதில் என்ன குற்றம்? கேட்டது குற்றமென் றுனக்குத் தோன்றி, அதனால் நீ என்னை மிருகத்தனமாக இழித்துப் பேசக் கூடுமென்பதை இப்போ தறிந்தேன். இனிமேல், அவனுடைய பெயரை உச்சரிக்கமாட்டேன். நீ கஷ்டப்படாதே, போ" என்றாள் இஸபெல்லா.

"வந்தவர் போலீஸ் இன்ஸ்பெக்ட ரென்பதை மறந்தாயோ?" என்று வில்ஸன் துரை கேட்டார்.

அதற்கு இஸபெல்லா, "அது எனக்கு நன்றாகத் தெரியும். அவன் வாயிலில் வந்திறங்கும்போதே, என் பக்கத்திலிருந்த தையற்காரனிடம் இந்தப் போலீஸ் உத்யோகஸ்தர் யாரென்று விசாரித்தேன், 'இவர்தான் இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர் என்றும், இவருடைய பெயர் ராஜகோபாலய்யங்கா ரென்றும், இவர் ரஹஸ்யப் போலீஸ் தந்திரங்களிலே மிகவும் கீர்த்தி பெற்று ராஜாங்கத்தாரிடம் பல மெடல்கள் வாங்கி யிருப்பதாகவும் தையற்காரன் சொன்னான்" என்றாள்.

"அப்படித் தெரிந்திருந்துமா, அவனிருக்கும்போது அந்தப் பாழ்த்த படுபாவியின் நாமத்தை உச்சரித்தாய்? அடி, போ, மூடமே!" என்று சொல்லி வில்ஸன் துரை பெரு மூச்செறிந்தார்.

அப்போது, அந்த வார்த்தை கேட்டு, இஸபெல்லா, “நீ மூடனா, நான் மூடையா என்பது பின்னிட்டுத் தெரியும். இந்த ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்கார் மேற்படி மருதப் பிள்ளை கொலை விஷயமாக நம்மிடமிருந்து ஏதேனும் துப்புக்கள் தெரிந்துகொண்டு போகவேண்டு மென்ற நோக்கத்துடனேயே நம்முடைய வீட்டுக்கு வந்தார். அந்த மர்மத்தை அறிந்தே நான் பேசினேன். பேசும்போது அவருடைய முகக் குறிப்பிருந்த நிலைமையை உத்தேசிக்கு மிடத்தே இவர் நம்மீது பரிபூர்ண ஸந்தேஹ முடையவராகவே தெரிந்தது. நான் சொல்லுகிறேன், கேட்கிறாயா? இந்த அய்யங்கார் இங்கு வந்த வுடனேயே இவர் மேற்படி மருதப் பிள்ளையின் கொலையைப்பற்றி (ஊர் ஜனங்கள்) அவரிடம் அவசியம் பேசி யிருப்பார்கள். அவர் மேற்படி கொலையின் ஸம்பந்தமாக வுள்ள பழைய காயிதங்களையும் பார்வை யிட்டிருப்பார். அதினின்றும் தாம் ரஹஸ்ய ஆராய்ச்சிகளில் கீர்த்திபெற்றிருக்கும் ஸம்ஸ்காரத்தால் இந்த அதிமர்மமான கொலையின் உளவைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நிச்சயத்துடன் முதலாவது நம்மீதேற்பட்ட ஸம்சயத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாமென்று இங்கு வந்தார். அண்ணா, இந்தச் சலசலப்புக் கெல்லாம் நீ ஏன் ஓயாமல் பயப்படுகிறாய்? நாம் குற்றவாளிக ளல்லோ மென்பதை நாம் அறிவோம். தெய்வம் அறியும், நமக்கேது பயம்? நம்மைத் தெய்வம் காப்பாற்றும்" என்றாள். இது கேட்டு வில்ஸன் துரை சொல்லுகிறார்; "நீ கேவலம் பெண் பிள்ளை யாதலால் இங்ஙனம் பிதற்றுகிறாய்? முதலாவது விஷயம் கடவுளும் கிடையாது, கிடவுளும் கிடையாது. அதெல்லாம் பழங்காலத்துப் புரளி. இந்த உலகம் இயற்கையால் உண்டானது. இதை அறிவுடைய ஆத்மா ஒன்று யோசனை செய்து படைத்ததென்று தீர்மானிக்க ஒரு லவலேசம் - துண்டு, துணுக்கு, அணுகூட ருஜு கிடையாது” என்றார்.

இந்தப் பேச்சை இடையே நிறுத்தி இஸபெல்லா “நாம் தான் மருதப் பிள்ளையைக் கொன்றோ மென்பதற்கு ருஜு இருக்கிறதா? இப்போது அதைக் குறித்துப் பேசுவோம். நான் பெண் பிள்ளை; எனக்குப் புத்தி கிடையாது, விவகாரம், ஞானம் சிறிதேனும் கிடையாது. மூடத்தனமாகக் கடவுளை நம்புகிறேன். ஆனால், யதார்த்தத்திலே கடவுளும் கிடையாது; கிடவுளும் கிடையாது. அந்த விஷயம் உனக்கு நன்றாக ருஜுக்களுடன் நிச்சயப்பட்டிருக்கிறது,

நீ ஆண் பிள்ளை ; படித்தவன், மேதாவி, விவகார ஞானத்திலே சிறந்தவன், இதெல்லாம் வாஸ்தவந்தான். எனினும் இப்போது விவகாரத்திலிருப்பது மருதப் பிள்ளையின் கொலையைப் பற்றிய விஷயமே யாதலாலும் கடவுளின் கொலையைப் பற்றிய விஷயமில்லை யாதலாலும், நாம் கடவுளை நிந்திப்பதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, மருதப் பிள்ளையின் விஷயத்தைக் குறித்துப் பேசுதல் அதிகப் பொருத்தமுடைய தாகுமென்று அபிப்ராயப்படுகிறேன்" என்றாள்.

வில்ஸன் துரை மீட்டும் சொன்னார்: “நீ பெண் பிள்ளை ஆதலால் உனக்கு லெளகீக ஞானம் குறைவு. ஆதலால், நாம் ஒரு கொலை உண்மையிலே செய்திருந்தா லொழிய அதற்குரிய தண்டனையைக் குறித்து நாம் அஞ்ச வேண்டுவதில்லை யென்று நினைக்கிறாய். உலகத்திலே ஒருவன் மீது தகுந்த ஸாக்ஷிகளுடன் பொய்க் குற்றம் ஜோடிப்பது எத்தனை ஸுலப் மென்பதை நீ அறியவில்லை, கோயில் பாதிரியார் உனக்கு இந்த விஷயம் கற்றுக்கொடுக்கவில்லை. நாம் கொல்லவில்லை யென்பது வாஸ்தவந்தான். இருந்தாலும் இது நமக்கு மிகவும் பயந் தரக்கூடிய விஷயம்" என்றார்.

இதைக் கேட்டவுடன் இஸபெல்லா, “எனக்கு வேலை யிருக்கிறது. நான் போகிறேன். எதற்கும் நான் பயப்படுவதாக உத்தேசம் கிடையாது” என்று சொல்லிப் போய்விட்டாள்.

ஊரில் தொழிலாளர் சச்சரவு அதிகப்பட்டது. பிரமாண்டமான, மஹாமேருகிரியின் உச்சிக்கு மேலே யுள்ள ஒரு கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர் நேரே வில்ஸன் துரையைக் கண்டு பேசி அந்தச் சச்சரவு சம்பந்தமான வாக்குமூலம் வாங்கிக்கொண்டு போனார்.

இந்த மஹிமை வில்ஸன் துரைக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால அய்யங்காரே விசேஷ காரண பூதராக இருந்தார். அதினின்றும் அய்யங்காருக்கும் வில்ஸன் துரைக்கும் ஸ்நேகம் அதிகப்பட்டது.

அய்யங்கார் மாலைதோறும் வில்ஸன் துரையின் வீட்டுக்கு வருவதை ஒரு விரதம்போலே நடத்திவந்தார். இதினின்றும் அய்யங்காருக்கும் துரையினுடைய தங்கை இஸபெல்லாவுக்கும் அடிக்கடி ஸந்தித்துப் பழக இடமுண்டாயிற்று. அந்த வழக்கம் சில வாரங்களில் ஸ்நேகமாக மாறிற்று. அந்த ஸ்நேகம் சில மாஸங்களில் காதலாகப் பரிணமித்தது.

வில்ஸன் துரையிடம் விவாகத்தைக் குறித்து ஸம்மதம் கேட்டார்கள். அவர் கூடாதென்று சொல்லிவிட்டார். அதினின்றும் இஸபெல்லா தன் தமயனுடைய வீட்டை விட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்கருகே ஸப் இன்ஸ்பெக்டர் வாஸம் செய்துகொண்டிருந்த பங்களாவுக்கு வந்து விட்டாள். அங்கு ஸர்க்கார் பதிவுச் சட்டப்படிக்கும், கிறிஸ்தவ மாதாகோயில் சடங்குகளின் படிக்கும் ஸப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலய்யங்காருக்கும் இஸபெல்லாவுக்கும் விவாகம் நடந்தேறிற்று.

இஸபெல்லாவினுடைய இளமையும் வனப்பும் சற்றே மங்கத் தொடங்கின பிராயத்தி லிருந்தாளென்று மேலே குறிப்பிட்டிருக்கிறோம். இந்த விவாகம் நடந்த ஸந்தோஷத்திலே அவள் இளமையிலிருந்த அழகையும் கவர்ச்சியையும் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான புதிய வனப்பையும் கவர்ச்சியையும் பெற்றுத் தேறிவிட்டாள்.

பின்னிட்டு வில்ஸன் துரையும் ஸமாதானத்துக்கு வந்துவிட்டார். "ஒரு கேடுகெட்ட வெள்ளைக்காரனுக்கு என் தங்கையை மணம் புரிவதைக் காட்டிலும் சுத்தமான பிராமணனுக்குக் கொடுத்தது, எனக்கு நூறுமடங்கு மேன்மையாயிற்று. ஸர்க்கார் உத்தியோகஸ்தர் ஐரோப்பிய மேலதிகாரிகளுக்குக் கண்மணிபோலே இருக்கிறார். மாப்பிள்ளையின் அழகுக்கே கொடுக்கலாமே ஆயிரத்தெட்டு ராஜகுமாரத்திகளை" என்று வில்ஸன் துரையே தம்முடைய ஸ்நேகிதர்களிடம் சொல்லத் தொடங்கி விட்டார்.

ஒரு நாள் மாலை இஸபெல்லாவும் அவளுடைய கணவனாகிய ராஜகோபாலய்-யங்காரும் தனியிடத்திருந்து ஸம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் அய்யங்கார் தன் காதலியை நோக்கி, “இஸபெல்லா, என் காதலி, மருதப் பிள்ளையை யார் கொன்றார்கள்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"அவருடைய மனைவி கொன்றாள்” என்றாள் இஸபெல்லா.

"ஏன்"? என்று அய்யங்கார் கேட்டார், "அவளை மற்றொருவனுக்குப் பெண்டிருக்கும்படி, வற்புறுத்தினார். அதற்காகக் கொன்றாள்" என்றாள் இஸபெல்லா.

“பறையன் மீதிருந்த கோழி ரத்தக் கறையின் செய்தி என்ன?" என்று அய்யங்கார் கேட்டார்.

“அது கோழி ரத்தந்தான்! கொலை நடந்தபோது மருதப் பிள்ளையும் அவனுடைய மனைவியைச் சில இடங்களில் காயப்படுத்தி விட்டான். அவன்தான் முதலாவது குத்தினான். எனவே, அவள் குற்றுயிரோடிருந்தாள். அவள்மீது ஸம்சயந் தோன்றாமல் மாற்றும் பொருட்டு நான் அவளைப் பத்திரமாக மறைத்து வைத்து முதல் ஸம்சயத்தை வீணுக்காவது பறையன் மேலே திருப்பி விட்டுப் பின் அவளை வேறுபாயங்களால் மீட்டுக் கொள்ளலா மென்று கருதி நான் தான் அவனுடைய துணியில் கோழி யிரத்தம் பூசுவித்தேன்” என்றாள் இஸபெல்லா.

அப்பால் மேற்படி மருதப் பிள்ளையின் கொலை சம்பந்தமான பதிவுகளை அய்யங்கார் மீட்டும் கட்டி வைத்து விட்டார். அந்த விவகாரத்தை மறந்து போய்விட்டார்.


படிப்பவர்களுக்குச் சில செய்திகள் இக் கதை கதாரத்னாகரம் மாதப் பத்திரிகையில் 1920 ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் பிரசுரமானது. இதன் பின்னர், நூலாக்கம் பெற்ற கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதியில் இடம்பெற்றது. பாரதி எழுதிய கதைகளில் இது ஒரு வித்தியாசமான கதை. சூழ்நிலை ஒரு மனிதனை எந்த மாதிரி மாற்றி விடுகின்றது என்பதே கதையின் முக்கியக் கருத்தாக அமைந்துள்ளது.