பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/33. மஹாசக்தி வாழ்த்து
33. மஹாசக்தி வாழ்த்து
விண்டு ரைக்க அறிய அரியதாய்
விவிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அததனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!நினைக் காளியென் றேத்துவேன்.
நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;
கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே.
பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திளெனச் செல்லுவை,
மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
வெல்க காளி யென தம்மை வெல்கவே.
வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளிருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!
போற்றி!போற்றி!நினதருள் போற்றியே!
சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப் பல்கினை;
தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீக்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை.