பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)

62. நவராத்திரிப் பாட்டு

(மாதா பராசக்தி)

பரா சக்தி
(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே

வாணி

வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி,புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்.
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள்,ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

பார்வதி

மலையிலே தான்பிறந்தாள்,சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள்,நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.